Article

கிரேப்ஸ் ஆஃப் வ்ராத்தும், இந்தியப் புலம்பெயர் தொழிலாளர்களும் (தமிழில்: கி.ரமேஷ்)

Spread the love

 

கிரேப்ஸ் ஆஃப் வ்ராத்

தமிழில்: கோபத்தின் கனிகள்

அஜாஸ் அஷ்ரஃப், மும்பை

வீடு திரும்பும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நிலையானது 1939 இல் அமெரிக்க விவசாயிகளின் வெளியேற்றத்தை ஒரு கற்பனையான ஜோட் குடும்பம் கிராமப்புற ஓக்லஹாமாவிலிருந்து கலிஃபோர்னியாவுக்கு இடம் பெயர்வதை நாவலாக எழுதியதை நினைவூட்டுவதாக உள்ளது.

இந்தியாவில் ஊரடங்கு திரும்பப் பெறப்பட்ட பிறகு கூட, நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்து தமது ஊர்களுக்குத் திரும்பிய லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களை விளக்குவதாகவே அதன் பிம்பம் நிலைக்கும்.  அவர்களது துன்பம் நாம் வாழும் நீர்க்குமிழியை உடைத்து, நம்மை இவ்வாறு கேட்க வைத்தது: அவர்களாக நாம் இருந்தால் எப்படி இருக்கும்? இதைப் பற்றிய ஒரு யோசனை கிடைக்க வேண்டுமென்றால் ஜான் ஸ்டீன்பெக்கின் த கிரேப்ஸ் ஆஃப் வ்ராத்தைப் படியுங்கள்.

அமெரிக்காவை பெருமந்தம் மிரட்டிய பிறகு 1939இல் வெளியான ஜான் ஸ்டீன்பெக்கின் இந்த நாவல் ஓக்லஹாமாவைச் சேர்ந்த ஒரு ஒப்பந்த விவசாயக் குடும்பமான ஜோட் குடும்பத்தின் கதையை விவரிக்கிறது.  அந்தக் குடும்பம் பயிர் பொய்த்துப் போனதால் நிலத்திலிருந்து வெளியேற்றப்படுகிறது.  இவ்வாறான இழப்பு குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரையும், ஒரு தோல்வியடைந்த பாதிரியாரையும் ஒரு காயலான் கடையிலிருந்து வாங்கி, ஒரு டிரக்காக மாற்றப்பட்ட செடான் காரில் விவசாயக் கூலிகள் தேவை என்று கூறப்படும் கலிஃபோர்னியாவுக்குப் பயணப்படச் செய்கிறது.

Engelskspråklig litteratur og kultur - John Steinbeck: The Grapes ...

இந்தியாவில் தற்போது நடக்கும் நகர்ப்புறத்திலிருந்து கிராமப்புறத்துக்குப் புலம் பெயர்வதற்கு மாறாக இந்நாவல் கிராமத்திலிருந்து கிராமத்துக்குப் புலம் பெயர்வதைச் சொல்கிறது.  1930களில் அமெரிக்காவில் ஏற்பட்ட மாபெரும் புலப்பெயர்வின் காரணங்கள் தற்போது இந்தியாவில் தூண்டப்பட்டிருக்கும் புலப்பெயர்வின் காரணங்களிலிருந்து முற்றிலும் வேறானது என்பது வெளிப்படை.  ஆனால் காலத்திலும், கலாச்சாரத்திலும் வேறுபட்டிருந்தாலும் இரண்டு குழுவினருக்கும் உள்ள நிர்ப்பந்தம் மக்கள் தமது பட்டினியை விரட்டுவதேயாகும். கலிஃபோர்னியாவுக்கு இடம்பெயரும் பெரும் இடப்பெயர்வின் ஒரு பகுதிதான் தமது குடும்பம் என்பதை விரைவில் ஜோடுகள் உணர்கின்றனர்.  ஸ்டீன்பெக் எழுதுகிறார், “மக்கள் உயர்வேகப்பாதையில் எரும்புகளைப் போல் நகர்கின்றனர் . . .” இந்தப் பிம்பம் 2020 இந்தியாவுக்கு மிகவும் பொருந்தும்.

ஜோடுகள் குடும்பத்தின் மூத்தவர்களுடைய மரணத்தை அனுபவிக்கிறது.  இது இந்திய புலம்பெயர் தொழிலாளர்கள் உயர்வேகப்பாதையில் நடக்கும் அழுத்தத்தாலோ அல்லது விபத்துக்களிலோ மரணமடைவதை நினைவூட்டுகிறது.  2020 இந்தியாவில், புதியவர்களுடன் புலம்பெயர் தொழிலாளர்கள்  பொதுவாக சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் அதே சமயத்தில், நாவலில் புலம்பெயர் தொழிலாளர்கள் பிணைப்பை ஏற்படுத்துகின்றனர்.  அவர்கள் மிக மோசமாக மிகவும் குறைந்த அளவிலேயே உணவும், பணம் வைத்திருந்தாலும், அதைப் பகிர்ந்து கொள்கின்றனர்.  உயிர்வாழ்வதற்குத் மிகவும் தேவையான விவரங்களை பெருந்தன்மையுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

ஜோடுகள் கலிஃபோர்னியாவில் தாக்குப் பிடிக்க முடியாமல் திரும்பும் ஒரு தந்தையையும், மகனையும் வழியில் சந்திக்கின்றனர். டெக்சாஸ் மாகாணத்தில் பம்பாவுக்கு அவர்கள், தமக்கு அங்கு ஒன்றும் வேலை கிடைக்காது என்று தெரிந்தும் திரும்பிச் செல்கின்றனர்.  பிறகு ஏன் திரும்ப வேண்டும்?  தந்தை பதிலளிக்கிறார்: “ஆனால் எங்களுக்குத் தெரிந்த மக்களுடன் நாங்கள் பட்டினி கிடந்து சாகலாம்.  நம்மை வெறுத்துப் பட்டினி கிடக்க வைக்கும் ஆட்கள் தேவையில்லை.”

The Grapes of Wrath (20th Century Fox, 1940). Half Sheet (22" X ...

இந்தக் கருத்தை இந்தியப் புலம்பெயர் தொழிலாளர்களும் சொல்லியிருக்கலாம்.  அவர்களைக் கொரோனா பற்றுவதாக இருந்தால் அவர்கள் தமது கிராமத்திலேயே சாக விரும்புவதாக அவர்கள் திரும்பத் திரும்பக் கூறினர்.  நாம் புலம்பெயர் தொழிலாளர்களை வெறுக்காமல் இருக்கலாம், ஆனால் நகரத்தின் இதயமற்ற தன்மையை அவர்கள் கூறுவது அதிர்ச்சியடையச் செய்கிறது.  அவர்களைப் போலவே, ஜோட் அம்மாவும் கண்டறிகிறாள்: “நீங்கள் பிரச்சனையிலோ அல்லது காயமடைந்தோ அல்லது தேவையுடனோ இருந்தால் – ஏழை மக்களிடம் போங்கள். அவர்கள்தான் உங்களுக்கு உதவுவார்கள் – அவர்கள் மட்டும்தான்.”

ஜோடுகள் கலிஃபோர்னியாவை அடைகிறார்கள். அங்கு ஓக்லஹாமாவில் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் கண்டது போல் வேலைகள் எதுவும் இல்லை என்பதைக் கண்டறிகிறார்கள்.  அங்கு கூலியைக் கீழிறக்க அதீதமான தொழிலாளர்களைக் கவர்ந்திழுக்கும் நிலப்பிரபுக்களின் தந்திரம் இருக்கிறது.  துன்பத்தில் ஆழ்த்தும் கூலிக்கு எதிராக முணுமுணுப்புகள் எழும்போது போலீஸ் தொழிலாளர்களை துப்பாக்கி முனையில் வேலை செய்ய வைக்கிறது.  அல்லது கம்யூனிஸ்டுகள் என்று ஏசுகிறது.  அல்லது பிரச்சனையை உருவாக்க குண்டர்களை கூலிக்கு வைத்து, அதையே தொழிலாளர்களை நசுக்க காரணமாக்கிக் கொள்கிறது.

”பெரும்பான்மை மக்கள் பட்டினியுடனும், குளிரிலும் வாடும்போது அவர்கள் தமக்கு வேண்டியதை நிர்ப்பந்தமாக எடுத்துக் கொள்வார்கள் . . . ஒடுக்குமுறை ஒடுக்கப்பட்டவர்களை ஒன்றிணைக்கவும், வலுப்படுத்தவும் மட்டுமே செய்யும்” என்று எழுதுகிறார் ஸ்டீன்பெக்.  ஒடுக்கப்பட்டவர்கள் ஆவேசத்தில் பொங்குகிறார்கள். ஏனென்றால் அரசு அசமத்துவமான சமூக முறையைப் பாதுகாக்கும் பெருவிருப்பத்தில், “கலகத்தை அடக்கும் வழியை மட்டுமே தேடுகிறது, ஆனால் கலகத்தின் காரணங்கள்” புரையோடிப் போக விடப்படுகின்றன.

comment - The Grapes of Wrath revisited

அடித்தட்டு வர்க்கத்தினர் ஒன்றிணைந்து தமது உரிமைகளுக்காகப் போராடும் வாய்ப்பை நாவல் எதிர்பார்க்கிறது.  இத்தகைய ஒரு பணிக்காக ஜோட் செல்கிறான்:  ஏழைகளின் விடுதலையானது வர்க்கச் செயல்பாட்டில்தான் இருக்கிறது, பட்டினியை வெல்ல அவர்களது தனிப்பட்ட போராட்டத்தில் இல்லை என்பதை அவர் உணர்கிறான்.  அது இந்த வரிகளில் வெளிப்படுகிறது: “’என்னிடம் கொஞ்சம் உணவு இருக்கிறது’, ‘என்னிடம் ஒன்றுமில்லை’.  இந்தப் பிரச்சனையின் கூட்டு ‘எங்களிடம் கொஞ்சம் உணவு இருக்கிறது’ என்பது வந்தால், ‘விஷயம் அதன் வழியில் செல்கிறது, இயக்கத்துக்கு திசை உள்ளது . . .இதுதான் தொடக்கம் – ‘நான்’ என்பதிலிருந்து ‘நாங்கள்’.”

நாம் இந்த வரிகளை கிராமங்களுக்கு நமது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திரும்பும்போது நினைவு கூர வேண்டும்.  அங்கு அவர்கள் நகரங்களில் பெற்ற மிகக்குறைந்த கூலியைக் கூடப் பெற முடியாது.  அவர்களது முதலாளிகள் அவர்களது கூலியைக் குறைக்க வேலைக்கு இருக்கும் போட்டியை உபயோகிக்க முயல்வார்கள்.  அவர்களை ஸ்டீன்பெக் எச்சரிக்கிறார்: “காரணங்களை விளைவுகளிலிருந்து உங்களால் பிரிக்க முடிந்தால், பெயின், மார்க்ஸ், ஜெஃபர்சன், லெனின் ஆகியோர் விளைவுகள்தான், காரணங்களல்ல என்பதை உணர்ந்தால் நீங்கள் பிழைக்கலாம்.  ஆனால் அதை உங்களால் தெரிந்து கொள்ள முடியாது.  ஏனென்றால் சொந்தக்காரன் என்பதன் தரம் உங்களை நிரந்தரமாக ‘நானாக’ மாற்றி  ‘நாங்கள்’ என்பதிலிருந்து நிரந்தரமாக உங்களைப் பிரித்து விடுகிறது.

வேலைஇழப்பு, சம்பள வெட்டு ஆகியவற்றின் அச்சம் நடுத்தர தொழில்நுட்ப வல்லுனர்களைக் கூட ஆட்டுகிறது.  அவர்களது அச்சம் ஆவேசமாக மாறலாம்.  அது ஸ்டீன்பெர்க்கைப் பொருத்த வரை மக்களுக்கு உயிர்வாழ உதவுகிறது.  அவர் எழுதுகிறார், “பெண்கள் ஆண்களை கவனித்தார்கள், கடைசியில் அவர்கள் நொறுங்கிப் போகிறார்களா என்பதைக் கவனித்தார்கள் . . . நிறைய ஆண்கள் ஒன்ரு சேர்ந்திருந்த இடத்தில், அவர்களது முகங்களிலிருந்து அச்சம் அகன்றது, அந்த இடத்தைக் கோபம் ஆக்கிரமித்தது . . . பெண்கள் அச்சம் விலகிப் பெருமூச்சு விட்டனர்.  ஏனென்றால் எல்லாம் சரியாக இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியும் – அச்சம் கோபமாக மாறும்வரை உடைந்து போவது நடக்காது.” பிரச்சனைக்குரிய நமது காலத்தில், அமெரிக்காவில் நாவலின் காலத்தின் உண்மையைப் போலவே, தீர்வானது ‘நான்’ என்பதை இந்திய மக்களாகிய ‘நாங்கள்’ உடன் இணைப்பதில்தான் உள்ளது.

மூத்த பத்திரிகையாளர்

தமிழில்: கி.ரமேஷ்

1 Comment

  1. அன்பின் வாழ்த்துகள் கி ரமேஷ்…. ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்த சுவடு தெரியாது தமிழில் மூலக் கட்டுரை ஒன்றை வாசித்த அருமையான உள நிறைவு…. கட்டுரையும் காத்திரமான ஒன்று. வாழிய உங்கள் பணி!

    எஸ் வி வேணுகோபாலன்
    9445259691

Leave a Response

Top Reviews

Video Widget

gallery