Article

கொரோனா தடுப்பில் கோட்டை விட்ட அரசுகள் – டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்

Spread the love

இன்று உலகையே அச்சுறுத்தும் கொடிய பெருந்தொற்று நோயாக, ‘கோவிட் 19’ விஸ்வரூபம் எடுத்துள்ளது. `கோவிட் 19’  என்ற கொடிய நோயை ‘கொரோனா’ என சாமானிய மக்கள்  அழைக்கின்றனர்.

       இந்த  கோவிட் 19 ஐ, சார்ஸ் கொரோனா வைரஸ் 2  (SARS-CoV-2) என்ற வைரஸ் கிருமி உருவாக்குகிறது.சார்ஸ் கோவி -2 என்ற, கொரோனா வைரஸ் ,இப்பொழுது கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. காட்டுத் தீயைப் போல் உலகம் முழுவதும் பரவிவருகிறது.

உலகம் முழுவதும் 210  நாடுகளில் 90 லட்சம் மக்களை இது பாதித்துள்ளது.இது வரையில் 46 லட்சம் பேருக்கு மேல் இறந்துள்ளனர். வளர்ந்த நாடுகளான அமெரிக்கா ,இத்தாலி, இங்கிலாந்து,பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு கோவிட் 19 ஒரு சவாலாக அமைந்தது.

எப்படி தோன்றியது?

சீன நாட்டின் மத்தியப் பகுதியில் உள்ளது ஹூபெய் மாநிலம். அதன் தலைநகர் வூஹான். அந்நகரின் மக்கள் தொகை  1 கோடியே 10 லட்சம். அந்நகரில் தான் முதன் முதல் இந்தப் புது வகை மானுட எதிரி , கொரோனா பரவி இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டு 2019 டிசம்பரில்  இது கண்டறியப்பட்டது. சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி கொரோனா பரவி இருப்பதை உலக நல நிறுவனத்திற்கு சீனா தெரிவித்தது.

எங்கிருந்து தோன்றியது?

இந்த சார்ஸ் கொரோனா வைரஸ் -2 ஐ த் தவிர மேலும் சில கொரோனா குடும்பத்தைச்சேர்ந்த வைரஸ்கள் மனிதர்களுக்கு நோய்களை பரப்புகின்றன.  2002 ஆம் ஆண்டில் ,சீனாவில் பரவிய `சார்ஸ்’ நோயும், 2012 ல் சவுதி அரேபியாவில் பரவிய “மெர்ஸ்’’ என்ற நோயும், கொரோனா வைரஸ்களால் ஏற்பட்டவைதான். மனிதர்களில் நோயை ஏற்படுத்தும் 7 வகை கொரோனா வைரஸ்களில் சார்ஸ் கோவி 2 வும் ஒன்று. 

இந்த கொரோனா வைரஸ்கள் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டவை. வௌவால் என்ற பாலூட்டியில் ஏராளமான வைரஸ்கள் உள்ளன. அவ்வைரஸ்களால் வௌவால்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால், அவற்றிலிருந்து மற்ற விலங்கினங்களுக்கும், மனிதர்களுக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இந்த வைரஸ்கள் பரவி நோய்களை உருவாக்குகின்றன.அந்த வகையில் தான், இந்த கோவிட் 19 ஐ உருவாக்கும் வைரஸும் மனிதர்களுக்குப் பரவியதாக கருதப்படுகிறது.

எறும்புண்ணியிலிருந்து பரவியதா?

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதற்கு அந்த நாட்டு மக்களின் உணவுப் பழக்கமும் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. சீன மக்கள் அனைத்து வகையான இறைச்சி உணவுகளையும் விரும்பி சாப்பிடுகின்றனர். பல்லி முதல் பாம்பு வரை எதையும் அவர்கள் விட்டுவைப்பதில்லை.

வூஹான் பகுதி வௌவால்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்ட வௌவால்களை பாம்புகள் விழுங்கியுள்ளன. அந்த பாம்புகளை மனிதர்கள் உணவாக உட்கொண்டதால் வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சீன மருத்துவர்கள் கருதினர். 

சீன மருத்துவர்களின் இக் கருத்தை வலுப்படுத்தும் வகையில் பாம்பு அல்லது வவ்வால் இறைச்சியில் இருந்து மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என்று மெடிக்கல் வைராலஜி என்ற மருத்துவ இதழ் தெரிவித்துள்ளது. வௌவால்களிலிருந்து எறும்புண்ணிகளுக்கும், எறும்புண்ணிகளிடமிருந்து மனிதர்களுக்கும் பரவியிருக்கலாம் என மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது.

வூஹான் நகரில் மிகப்பெரிய இறைச்சி சந்தை உள்ளது. இங்கு மீன்கள், பறவைகள், பாம்புகள், வௌவ்வால்கள்,எறும்புண்ணி போன்றவற்றின் இறைச்சிகள் விற்பனை செய்யப்படுகின்றன. உயிருள்ள விலங்குகளும் இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுகின்றன. 

  வூஹான் சந்தையிலிருந்து வாங்கப்பட்ட பாம்பில் இருந்துதான் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருக்கக்கூடும் என்றும்  சிலர் கருதுகின்றனர். தற்பொழுது, 112 வகையான இறைச்சி விற்பனைக்கு சீன அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க இராணுவ வீரர்களால்தான் இந்த வைரஸ் வூஹானில் பரவியதாக சீனா, அமெரிக்கா மீது குற்றம் சாட்டியுள்ளது.

மனிதர்களால் உருவாக்கப்பட்ட வைரஸா?

சீனாவின் வூஹான் நகரில் வைரஸ் கிருமிகளின் ஆய்வுக் கூடம் உள்ளது. அங்கு சீன விஞ்ஞானிகள் புதிய வகை வைரஸ் கிருமிகளை, உயிரியல் ஆயுதமாக உருவாக்கி வந்ததாகவும், அந்த ஆய்வுக் கூடத்திலிருந்து வெளியேறியதுதான் இந்த வைரஸ் கிருமி என்றும் இஸ்ரேல் ராணுவத்தின் முன்னாள் உளவுத் துறை அதிகாரி டேனி சந்தேகம் எழுப்பினார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் , இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட வைரஸ். வூஹானில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி மையத்திலிருந்துதான் தோன்றியது என குற்றச்சாட்டை வைத்தார். நமது இந்திய அமைச்சர் நிதின் கட்காரி இது போன்ற கருத்தை முன்வைத்தால். இதற்கெல்லாம் அரசியல் ரீதியான உள் நோக்கம் உள்ளது. 

இந்தக் குற்றச்சாட்டுகளை ,உலக விஞ்ஞானிகள் ஏற்க வில்லை. இந்த வைரஸ் இயற்கையாக தோன்றியது என ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.உலக நாடுகளின் விஞ்ஞானிகள் இது இயற்கையாக தோன்றிய வைரஸ் என ஆராய்ந்து உறுதிபட கூறியுள்ளனர்.தவறான பரப்புரைகளுக்கு முடிவு கட்டியுள்ளனர்.

இந்நிலையில், இத்தாலியில் கொரோனா வைரஸ் சென்ற ஆண்டு டிசம்பர் மாதமே பரவியிருக்கலாம் என ஆய்வாளர்கள் தற்பொழுது தெரிவிக்கின்றனர்.இதனால்,இத்தாலியிலிருந்து கொரோனா வைரஸ் தோன்றியிருக்கக் கூடும் என்ற கருத்தும் உருவாகிவருகிறது.

கொரோனா ஒரு  வரலாற்று பார்வை

கடந்த 1960-ம் ஆண்டில் விலங்குகள், பறவைகள், கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. லத்தீன் மொழியிலிருந்து கொரோனா (கிரீடம்) என்று இந்த வைரஸுக்கு பெயர் சூட்டப்பட்டது. அதாவது எலக்ட்ரான் நுண்ணோக்கி மூலம் உற்று நோக்கினால், இந்த வைரஸ் கிரீடம் போல தெரிவதால் இவ்வாறு பெயரிடப்பட்டது. 

2002 ல் சீனாவில் “சார்ஸ்’’ நோய்,கொரோனாவால் ஏற்பட்டது. இதன்பின் கடந்த 2012-ம் ஆண்டில் சவுதி அரேபியாவில் “மெர்ஸ்’’ என்ற நோய் கொரோனா வைரஸால் உருவானது.தற்போது கோவிட் 19 ஏற்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட ‘கொரோனா வைரஸ் நோய்’ என்பதால் இதற்கு “கோவிட் -19’’ என பெயரிடப் பட்டுள்ளது.இதை உருவாக்கும் வைரஸான சார்ஸ் கொரோனா வைரஸ் 2 யை ஜனவரி மாதம்  இரண்டாம் வாரத்தில் கண்டறிந்தனர்.

 கொரோனா வைரஸ் குடும்பத்தில் ஏற்கனவே 6 வகையான வைரஸ்கள் உள்ளன. தற்போது சீனாவில் பரவி வரும் இந்த வைரஸுக்கு சார்ஸ் கொரோனா வைரஸ் 2 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வைரஸின் ஜீன்கள், வௌவால்களில் உள்ள கொரோனா வைரஸ் ஜீன்களுக்கு மிக நெருக்கமாக உள்ளன. 

அதிர்ச்சிக்குள்ளான சீனா

இந்த கொரோனா சீனாவில் வேகமாகப் பரவியது. ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.இறப்புகளும் எண்ணிக்கையும் நூற்றுக்கணக்கில் ஏறிக்கொண்டே இருந்தன. இதனால் அதிர்ந்து போனது சீன அரசு.துரிதமாக செயல்பட்டது.

அரசியல் உறுதிப்பாட்டுடன் செயலாற்றியதன் காரணமாக, வூஹான் நகரில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள்  அனைத்தும் மூடப்பட்டன. ரயில் ,பேருந்து போக்குவரத்து நிறுத்தப் பட்டன. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது  என அறிவுறுத்தப்பட்டனர்.  எழுபது நாட்களுக்கு   மேல் வீட்டிற்குள்ளேயே மக்கள் முடங்கினர். சாலைகளில் ஆம்புலன்ஸ் ராணுவ, போலீஸ் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.

பல நகரங்களுக்கும் சீல்

வைரஸ் கட்டுக் கடங்காமல்  பரவியதால் வூஹான் மற்றும் அதைச்  சுற்றியுள்ள 29 நகரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. சீனாவின் இதர பகுதிகளில் இருந்து 30 நகரங்களும் துண்டிக்கப்பட்டன. வூஹான் சீல் வைக்கப்படுவதற்கு முன்பாகவே அந்த நகரை சேர்ந்த சுமார் 50 லட்சம் பேர் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து விட்டனர்.இதன்காரணமாக வூஹானை மையம் கொண்டிருந்த கரோனா வைரஸ்  சீனா முழுவதும் பரவியது. சீனத் தலைநகர் பெய்ஜிங்கிலும் பாதிப்பு ஏற்பட்டது. 

நவீன அறிவியல் தொழில் நுட்பம்

ஆளில்லா குட்டிவிமானங்கள்,செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம்,மனித இயந்திரங்கள்,செல்போன் ஆப்ஸ்கள் போன்ற அனைத்தையும் ஆள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும்,நோய்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்,சிகிச்சை முறைகளை மேற்கொள்ளவும் சீனா பயன்படுத்தியது. 2200 படுக்கைகள் கொண்ட இரண்டு மருத்துவமனைகளை 10 நாட்களுக்குள் கட்டி முடித்தது. அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினிகளை கொண்டு சுத்தப்படுத்தியது. தொற்றை கட்டுப்படுத்தியது.76 நாள் முடக்கத்திற்குப் பிறகு முடக்கம் நீக்கப்பட்டது. சீனாவின் நோய்தடுப்பு நடவடிக்கைகளை கண்டு உலகமே வியந்தது. உலக நல நிறுவனமே ஆச்சரியத்தில் மூழ்கியது.வியந்து பாராட்டியது.

ஆனாலும், தற்பொழுது சிலருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. பெய்ஜிங் நகரிலும் சிலருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களை உடனடியாக தனிமை படுத்தி சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.  வெளிநாட்டிலிருந்து கொரோனா தொற்றுடன் வருவோரையும், தனிமைப் படுத்தி சிகிச்சை வழங்குகிறது ,சீன அரசு. தற்பொழுது ஹூபேய் மாகாணமும்,வூஹான் நகரமும் இயல்புநிலைக்கு திரும்பிவிட்டன

தற்பொழுது சீனா கொரோனா பரவலை தடுத்துள்ளதால்  , பல்வேறு நாடுகளுக்குத் தேவையான முகக்கவசங்கள்,பரிசோதனை கிட்டுகள்,தற்காப்பு கவச உடைகள் ,மருத்துகள் , செயற்கை சுவாசக் கருவிகள்,மருத்துவ உபகரணங்களின் உற்பத்தியை முடுக்கிவிட்டுள்ளது. அவற்றை பல்வேறு நாடுகளுக்கும் அளித்து உதவிவருகிறது. காணொளி  மூலம் பல நாடுகளுக்கும் மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

கொரோனாவின் பரவல் மையங்களாக, இப்பொழுது ஐரோப்பாவும் ,அமெரிக்காவும், பிரேசிலும்,இந்தியாவும் ,ரஷ்யாவும் மாறிவிட்டன. அந்நாடுகளில், மக்கள் கடும் துன்பங்களுக்கு ஆளாகிவருகின்றனர். கொரோனா பாதிப்பும், மரணங்களும் மிக  வேகமாக அதிகரித்து வருகின்றன. 

மருத்துவக் கருவிகள்,தற்காப்புக் கவசங்கள்,செயற்கை சுவாசக் கருவிகள் போன்றவை கடும் தட்டுப்பாடாக உள்ளது.

சீனா, செர்பியா,லைபீரியா,கிரீஸ்,செக் குடியரசு,பிலிப்பைன்ஸ், கம்போடியா ,இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் உதவி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக உலக நல நிறுவனத்திற்கு 20 லட்சம் அமெரிக்க டாலர்களை  சீனா வழங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா

கொரோனா  இந்தியாவிலும் கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. இறப்புகள் அதிகரித்து வருகின்றன.அதுவும் இளம் வயதினரின் இறப்புகள் அதிகரிக்கின்றன. இது மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கி உள்ளது. இந்தியாவில் 4.21 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 14,000 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் ஜூன் 21 வரை , 59377பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.757 பேர் இறந்துள்ளனர்.

கொரோனா பரவலை தடுப்பதிலும்,இறப்புகளை குறைப்பதிலும் மத்திய மாநில அரசுகள் கடும் தோல்வியை அடைந்துள்ளன.இந்த தோல்விகளை மறைக்க பல்வேறு திசை திருப்பும் சாகச நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றன.

கொரோனாவை தடுக்க வேண்டும்.இறப்புகளை குறைக்க வேண்டும். மக்களை காக்க வேண்டும் என்ற உணர்வை விட, ஆட்சியாளர்களின் அரசியல் சுயநலம் மேலோங்கி நின்றதே  இந்நிலைக்குக் காரணம். 

 மத்திய,மாநில அரசுகள் முன் கூட்டியே எச்சரிகை உணர்வோடு இருந்திருக்க வேண்டும்.திட்டமிட்டு செயலாற்றி இருக்க வேண்டும். அவை எல்லாம் என்னவென்று கேள்வி கேட்கும்  நிலையில் இருந்து விட்டனர். ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கால், கும்பகர்ண உறக்கத்தால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

டிரம்பு வருகைக்காக கொரோனா தடுப்பில் கோட்டை விட்ட அரசு

வெளிநாடுகளிலிருந்து வந்த விமானங்களை பிப்ரவரி முதல் வாரத்திலேயே ரத்து செய்திருக்க  வேண்டும்.  வெளிநாடுகளிலிருந்து வந்த அனைத்து பயணிகளையும்  28 நாட்களுக்கு, கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கி இருக்க வேண்டும்.

ஆனால் அதை செய்ய மத்திய மாநில அரசுகள் தவறிவிட்டன.  காரணம், தனிமைப்படுத்தலுக்கான வசதிகளை அவை உருவாக்கவில்லை. அதற்கான செலவுகளை செய்யத் தயாராக இல்லை.

 விமான நிலையங்களிலும்,பரிசோதனைகளைச் செய்யவில்லை. வெறுமனே, காய்ச்சல் இருக்கிறதா?இருமல் இருக்கிறதா?சளி இருக்கிறதா? என்ற கேள்விகள் அடங்கிய படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு போகச் சொல்லிவிட்டனர்.

கொரோனா பரவிய தொடக்க கட்டத்தில்  அதிகப் பரிசோதனைகளையும் செய்ய வில்லை. தொற்றாளர்களை கண்டறிய முடியவில்லை.அவர்களின் தொடர்பாளர்களை கண்டறிய முடியவில்லை.அவர்களை தனிமை படுத்த முடியவில்லை. இதனால்,ஒருவரிடமிருந்து மற்றவருக்கு கொரோனா பரவுவதை தடுக்க முடியவில்லை. இவற்றின் காரணமாகவே,தொற்று மிக வேகமாக பரவியது.

மார்ச் மாதம் முதல் வாரத்திலேயே அதிக பரவல் உள்ள மாநிலங்களில் பொதுமுடக்கத்தை நடை முறை படுத்தி இருக்க வேண்டும். நாடு தழுவிய  கடுமையான பொது முடக்கத்தை ஒரே நேரத்தில் செய்ததற்குப் பதிலாக, பாதிக்கப்பட்டப் பகுதிகளில்  முதலில் செய்திருக்க வேண்டும். இவ்வாறு செய்யாததற்குக் காரணம்,அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் வருகை பாதித்துவிடக்கூடாது என்பதுதான்.

வியட்நாமின் சாதனை

பாதுகாப்பு கவசங்கள், முகக்கவசங்கள்,கொரோனா பரிசோதனை கருவிகள் போன்றவற்றை போதிய அளவில் இருப்பில் வைத்திருக்க வேண்டும்.அவற்றை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். 

இவற்றில் தென்கொரியா, சிங்கப்பூர், ஜெர்மனி போன்ற நாடுகள் சுதாரிப்பாக இருந்து செயலாற்றின.  தைவான்,வியட்நாம், வெனிசுவேலா ,வடகொரியா, ஐஸ்லாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பில் மிகவும் எச்சரிக்கையாகவும், உடனடியாகவும் செயல்பட்டன. எனவே அந்நாடுகளில் கொரோனா பரவல் குறைவாக இருக்கிறது. கட்டுப்பாட்டிலும்  இருக்கிறது.வியட்நாமில் கொரோனாவால் ஒருவர் கூட இறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நம் நாட்டில்  தடுப்பு நடவடிக்கைகளில் தொடக்கம் முதலே மெத்தனப்போக்கும், அலட்சியமும் மேலோங்கியது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைப் போல் நமது அரசுகளும் அலட்சியமாக இருந்து விட்டன.நமது நாட்டில் பரவாது.நாம் சமாளித்துவிடலாம் என்ற அதீத நம்பிக்கையுடனும்,அகங்காரத்துடனும் இருந்துவிட்டன. 

அரசியல் சுயநலம்

மத்திய பிரதேசத்தில் ஆட்சி மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ஒத்தி வைக்காமல் மத்திய அரசு இழுத்தடித்தது.இந்தியாவில் கொரோனா பரவவில்லை என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கியது. தமிழக அரசும் அதே உத்தியை கையாண்டது.சட்டமன்றக் கூட்டத்தொடரை ஒத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த போதிலும் ,தமிழகத்தில் கொரோனா பரவவில்லை என தவறான தகவலை கூறிவந்தது. இதனால் கொரோனா தடுப்பில் மிக முக்கியமான காலத்தை விரயம் செய்துவிட்டோம்.

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து ,பாஜக ஆட்சியை கொண்டுவருவதிலேயே மத்திய அரசு முழு கவனத்தையும் செலுத்தியது. இந்த ஆட்சி மாற்றத்திற்கு வசதியாகவே ஊரடங்கு அறிவிப்பதிலும் காலதாமதம் செய்யப்பட்டது. ஆட்சிமாற்றத்திற்குப் பிறகு, நாடாளுமன்றக் கூட்டத்தொடரை அவசர அவசரமாக மத்திய அரசு ஒத்திவைத்தது. இதற்காக காத்திருந்த ,தமிழக அரசும் தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரை தள்ளிவைத்தது.நாடாளுமன்றத்தை ஒத்திவைக்காத பொழுது,தமிழக சட்டமன்றத்தை ஒத்திவைத்தால்,பாஜக வின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமோ என்ற அச்சத்தால்தான், தமிழக சட்டமன்றத்தை ஒத்திவைக்காமல் இழுத்தடித்து வந்தது தமிழக அரசு. எதிர்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்தது.

மின்னல் வேகத்தில் கொரோனா.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்,“ மின்னல் வேகத்தில் கொரோனா பரவுகிறது’’ என்ற திடுக்கிடும் தகவலை சட்ட மன்றத்தில்  வெளியிட்டார்.அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் , அதே சட்ட சபையில்  தமிழகத்தில் கொரோனா பரவல் இல்லை எனக் கூறியிருந்தார். ஆளும் கட்சி உறுப்பினர்கள் எல்லாம் மேசையை தட்டி ஆராவாரம் செய்தனர். ஆனால், அமைச்சர் தனது நிலையை இரண்டே நாளில்  தலைகீழாக மாற்றிக்கொண்டார்.இதைவிட பெரிய வேடிக்கை வேறு என்ன இருக்க முடியும்?

பிரதமர் நடத்திய கேலிக் கூத்து.

இந்தியாவில் வேறு சில கேலிக்கூத்துகளும் நடைபெற்றன. மார்ச் 22 அன்று மக்கள் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். காலை 7.00 மணிமுதல் இரவு 9.00 மணி வரை வீட்டிலேயே இருக்க வேண்டும் என்ற வேண்டு கோளையும் விடுத்தார். அன்று மாலை 5.00 மணிக்கு மருத்துவக் குழுவினருக்கு நன்றி தெரிவிப்பதற்காக அனைவரும் பால்கனியில் நின்றவாறு, கர ஒலி எழுப்ப வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.  ஆனால், மக்கள் கூட்டம் கூட்டமாகக் கூடினர். பேரணியாக சென்று கரவொலி எழுப்பினர்.இது தனிநபர் இடை வெளிகாத்தல் மற்றும் தனித்திருத்தல் என்ற நோக்கத்தை  பாழாக்கியது. அது மட்டுமல்ல  காலை முதல்  10 மணி நேரம் தனித்திருந்ததின் பலனையும் சிதைத்து விட்டது.

பொதுமுடக்கம் நடைமுறையில் இருந்த காலத்திலேயே, ஏப்ரல் 5 ஆம் தேதி, இரவு 9.00 மணி முதல் 9.09 வரை ,கொரனோவை தோற்கடிக்க, வீடுகளில் விளக்குகளை அணைத்துவிட்டு, மொட்டமாடியில் அகல்விளக்குகளை ஏற்ற வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தார் பிரதமர். ஒளி ஏற்றினால் கொரோனா போய்விடுமா என்ன? இத்தகைய அறிவார்ந்த ஆலோசனையை பிரதமருக்கு யார் வழங்கியது ? இதுவும் ஒரு திசைதிருப்பும் முயற்சிதான்! கொரோனா ஒழிப்பையும் இந்துத்துவ மயமாக்கும் சூழ்ச்சி ஒளி ஏற்றல் நிகழ்வில் அடங்கி இருந்தது.

பொதுமுடக்கத்தை முறையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.

இந்த பொதுமுடக்கத்தை மத்திய மாநில அரசுகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வில்லை .

பொதுமுடக்கம் தொடங்கிய பொழுதே, கொரோனா  தொற்று இருக்கிறதா எனக் கண்டறிவதற்கான பரிசோதனைகளை  அதிகப்படுத்தியிருக்க வேண்டும்.அதைச் செய்ய வில்லை. .காரணம்,அரசிடம் பரிசோதனை செய்வதற்கான கருவிகள் போதிய அளவில் இல்லை.

கொரோனா பாதித்தவர்களை கண்டறிதல்,தனிமைப் படுத்தல்,சிகிச்சை வழங்கல்,அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல்,தனிமைப் படுத்தல் போன்றவற்றில் நமது அரசுகள் போதிய அக்கறை காட்ட வில்லை.கோட்டை விட்டன. கொரோனா பரவிய பகுதிகளில் தடைகளை நடைமுறைப் படுத்துவதில் தீவிரம் காட்டவில்லை. துரிதமான,திட்டமிட்ட செயல்பாடு இல்லை. அது கொரோனா காட்டுத் தீ போல பரவக் காரணமாகிவிட்டது.

அதைப் போலவே, பொதுமுடக்கத்தை அறிவிப்பதற்கு முன்பாகவே, திடீரென ரயில்களின் எண்ணிக்கையை குறைத்ததும், பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்ததும் மிகப் பெரும் பாதிப்பை உருவாக்கியது.மக்கள் முட்டிமோதி நெருக்கியடித்துக் கொண்டு  பயணித்தனர்.இது தொற்றை பரவலாக்கியது.

வெளிப்படைத் தன்மை இல்லை

அடுத்து ,தொற்று கட்டுப்படுத்த மிக முக்கியமானது வெளிப்படைத் தன்மைதான் என உலக நல நிறுவனம் (WHO) வலியுறுத்திக் கூறுகிறது. ஆனால், மத்திய மாநில அரசுகள் வெளிப்படைத் தன்மையை கடைபிடிக்க வில்லை. உண்மையான பாதிப்பு விவரங்களையும், இறப்பு விவரங்களையும் வெளியிடாமல் மறைக்கின்றன.தமிழக அரசு 240 க்கும் மேற்பட்ட இறப்புகளை மறைத்துவிட்டது ஊடகங்கள் மூலம் வெளிவந்தது.

இந்தியாவில் கொரோனா சமூக ரீதியான பரவலை எட்டிவிட்டது என பல நிபுணர்களும் கூறிவருகின்றனர். ஆனால் கொரனோ சமூக ரீதியான பரவல்  கட்டத்தை எட்டவில்லை என மத்திய மாநில அரசுள் போட்டிப் போட்டுக் கொண்டு கூறிவருகின்றன. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயல்கின்றன.

நமது தமிழக முதல்வர் எல்லாவற்றிற்கும் மேலாக, ஏப்ரல் 16 ஆம் தேதி அன்று“அடுத்த மூன்று நாட்களில் புதியக் கொரோனா தொற்றாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும்’’ என ஒரே போடாக போட்டார்! அவர் அவ்வாறு சவால் விட்டு  ஒன்றரை மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டது.ஆனால்,கொரோனா தொற்று குறையவில்லை.மின்னல் வேகத்தில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

   வெளிப்படைத் தன்மையற்ற  செயல்பாடு, கொரோனா தடுப்பு  நடவடிக்கைகளுக்கு உதவாது. “அம்மாவின் ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது.தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுத்திருக்கிறது’’ எனத் தமிழக அரசு தம்பட்டம் அடித்துக் கொண்டதே தவிர,கொரோனா தடுப்பில் கோட்டைவிட்டு விட்டது!  தும்பை விட்டு விட்டு, இப்பொழுது வாலையும் பிடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது.

அதிக அளவில் பரிசோதனைகள் செய்யவில்லை

அடுத்து, கொரோனா தடுப்பில் மிக முக்கியமானது அதிக அளவில் பரிசோதனைகளை செய்வதுதான். ’’பரிசோதனை,பரிசோதனை ,பரிசோதனை’’ என்பதை அனைத்து நாடுகளுக்கும் வலியுறுத்தியது, உலக நல நிறுவனம்.

ஆனால், அதிக அளவில் பரிசோதனைகளை நமது அரசுகள், கொரோனா பரவித் தொடங்கிய தொடக்க நிலையில் செய்யவில்லை. கொரோனா தொற்று உள்ளவர்களை தொடக்கக் கட்டத்திலேயே கண்டறிந்து தனிமைப் படுத்தவில்லை.அதன் காரணமாக கொரோனா தொற்று காட்டாற்று வெள்ளம் போல் கட்டுக் கடங்காது பரவுகிறது.

தொடக்கத்திலேயே அதிகப் பரிசோதனைகளை செய்வதில் கேரளம் கவனம் செலுத்தியது.அதனால் ,ஒரு கட்டத்தில் புதிய தொற்றாளர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கியது. 

கேரளாவில், மார்ச் 28 வரையில் 10 லட்சம் பேரில், 189 பேருக்கு செய்யப்பட்டது.ஆனால் அன்றைய நிலைமையில் தமிழகத்தில் அந்த எண்ணிக்கையோ வெறும் 23 தான் . 

அடுத்து, மற்றுமொரு மிகமுக்கியப் பிரச்சினை என்னவென்றால்,மருத்துவப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவசம்,முகக் கவசம், கண்ணாடிகள்,ஹெஷ்மெட் ஷூட் போன்றவை சரியாக வழங்காததாகும்.

தமிழக அரசின் பொய் மூட்டைகள்

 ‘’தமிழ்நாட்டில் போதிய அளவு பாதுகாப்பு கவசம்  இருப்பில் உள்ளது.வெளிமாநிலங்களுக்கும் வழங்கும் அளவிற்கு இருப்பு உள்ளது’’ என்றெல்லாம் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறையால் பல முறை சொல்லப்பட்டது.ஆனால்,நடைமுறையில் ,எதார்த்தத்தில் பாதுகாப்பு கவசங்களும்,முகக்கவசங்களும், மருத்துவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் வழங்கப்படவில்லை. இன்றும் அந்த நிலை தொடர்கிறது.

இதே நிலை தான் இந்தியா முழுவதும் உள்ளது. இதனால்,மருத்துவர்கள்,மருத்துவப் பணியாளர்கள் ஏராளமானோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிவருகின்றனர்.பலர் பரிதாபமாக இறந்துவருகின்றனர்.

ஆனால், இதை எல்லாம் மறைக்கும் வகையில் நமது இராணுவ விமானங்கள்,மருத்துவப் பணியாளர்கள் மீது ரூ 200 கோடி செலவில் பூ மாரி பொழிந்து தள்ளியது.

கொரோனா தடுப்பில், ஆக்கப்பூர்வமான பணிகளை செய்யாமல்,மக்களை ஏமாற்றும் கண் துடைப்பு நாடகங்களையே மத்திய மாநில அரசுகள் அரங்கேற்றி வருகின்றன. இது கவலை அளிக்கிறது.

அறிவியல் ரீதியான அடிப்படைகளின்றி,பொது முடக்கத்தை மிக வேகமாக தளர்த்தப்பட்டது.அதன் விளைவுகளை இன்று அனுபவிக்கிறோம்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுமுடக்கத்தை  தற்பொழுது தீவிரப்படுத்தியுள்ளது தமிழக அரசு. ஆனால், அதற்கு முன்பாக ஆயிரக்கணக் கானோர், இம்மாவட்டங்களிலிருந்து வெளியேறிவிட்டனர்.அதை அரசு தடுக்கத் தவறிவிட்டது. இதன் மூலம் கொரோனா பிற மாவட்டங்களுக்கும் அதிக அளவில் பரவும் வாய்ப்பை உருவாக்கிவிட்டது. 

கொரோனா தடுப்பில் கோட்டை விட்டவர்கள், இனிமேலும்  ஆட்சியில் நீடிக்கலாமா? என்ற கேள்வி எழுகிறது.

தனது அரசின் இயலாமையை மறைக்க, கொரோனா எப்பொழுது கட்டுப்படும் என்பதற்கு, ஆண்டவனுக்குத்தான் தெரியும் என முதலமைச்சர் கூறிவிட்டார்.

கொரோனாவை கட்டுப்படுத்த அறிவியலால் முடியவில்லை என மாபெரும் கண்டுபிடிப்பை கூறிவிட்டு, யோகாவையும்,ஆயுர்வேதாவையும் முன்னிலை படுத்துகிறார் பிரதமர்.

அவரது கட்சி ஆளும் மாநிலமான குஜராத், பசுமாட்டு சிறுநீர் அடங்கிய பஞ்சகவ்யத்தை ஸ்பெஷல் மருந்தாக கொரோனாவிற்கு பயன்படுத்த போவதாக செய்திகள் வெளியாகின்றன. போலி அறவியல் ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்படுகின்றன. ஹிட்லரின் ஜெர்மனியிலும் இவ்வாறு தான் நடந்தன. கொரோனாவிலிருந்து விடுதலை பெற, இந்த மக்கள் விரோத ஆட்சியாளர்களிடமிருந்து நாட்டை முதலில் விடுவித்தாக வேண்டும்.

1 Comment

  1. புதிதாக சொல்ல என்ன இருக்கிறது
    இந்த மத்திய மாநில ஆட்சிகள் முடிவுக்கு வந்தால்தான் விமோசனம்
    Dr K Muthukumar
    TRICHY

Leave a Response

Top Reviews

Video Widget

gallery