Article

காந்தியும் தொற்றுநோயும் – தாமஸ் வெபர் மற்றும் டென்னிஸ் டால்டன் (எக்கானமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி) | தமிழில்:தா.சந்திரகுரு

1918-19ஆம் ஆண்டில் இந்தியாவில் ஸ்பானிஷ் காய்ச்சலால் இறந்தவர்களின் எண்ணிக்கை மிகப் பெரிய அளவிலானது என்றாலும், அந்த நேரத்தில் பிரிட்டிஷ் அதிகாரிகள், இந்திய தேசியவாதிகள் அல்லது அதற்குப் பின்னர் வந்த இந்திய அரசியல் வரலாற்றாசிரியர்களின் கவனத்தை அந்த நோய் அவ்வளவாக ஈர்க்கவில்லை. உடல்நலம் தொடர்பான அறிக்கைகளை வெளியிடுபவராகவும், நோயுற்றவர்களைப் பராமரிப்பவராகவும் இருந்து வந்த மோகன்தாஸ் காந்தியின் நிலையும் அதைப் போலவே இருந்தது. தன்னைச் சுற்றிலும் நடந்து கொண்டிருந்த அந்த நோய் மற்றும் அது ஏற்படுத்திய மரணங்கள் குறித்த எதிர்வினை மீது ஆர்வம் இல்லாதவராகவே அவர் இருந்தார். அவர் ஏன் அவ்வாறு தன்னைச் சுற்றி நடந்தவை குறித்த உணர்ச்சியற்றவராக இருந்தார் என்பதற்கான சில தடயங்களை அவருடைய கடிதங்களும், உரைகளும் இந்த நேரத்தில் நமக்குத் தருகின்றன.

பொதுவாக ஸ்பானிஷ் காய்ச்சல் என்று குறிப்பிடப்படுகின்ற 1918-19ஆம் ஆண்டின் இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய் உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கில் இறப்புகளை ஏற்படுத்தியிருந்தது. மிகமோசமாகப் பாதிப்புக்குள்ளாகி இருந்த இந்தியாவில் 2 கோடிக்கும் மேலானோர் அப்போது இறந்திருக்கலாம் (பாரி 2004: 365). பிரிட்டிஷ் இந்தியப் பிரிவினை காலத்தில் நடந்த படுகொலைகளில், ஏறக்குறைய ஐந்து லட்சம் மக்கள் இறந்து போனது குறித்து மிகவிரிவாக எழுதப்பட்டிருக்கின்ற நிலையில், அந்த தொற்றுநோய் துணைக்கண்டத்தில் ஏற்படுத்திய மிகப்பெரிய தாக்கம் வரலாற்றாசிரியர்களிடமிருந்து ஒப்பீட்டளவில் மிகக்குறைந்த அளவிலான கவனத்தையே பெற்றது (அர்னால்ட் 2019). அந்த நேரத்தில் மகாத்மா என்று அடையாளம் காணப்பட்டிருந்த, முக்கியமான அரசியல் மற்றும் சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த மோகன்தாஸ் காந்தி, அந்த தொற்றுநோயைப் பற்றி போகிற போக்கில் மட்டுமே குறிப்பிடுகிறார். அலட்சியம் என்று அதனை தெற்காசிய அறிஞரான டேவிட் அர்னால்ட் குறிப்பிடுகிறார். கோவிட்-19 தொற்றுநோயின் பிடியில் தற்போது நாம் சிக்கியிருக்கின்ற நிலையில், அந்தக் காலகட்டத்தில் நடந்தவை குறித்த சில ஆய்வுகள் நமக்குத் தேவைப்படுகின்றன. காந்தியைப் பற்றி நாம் அறிந்திருப்பவற்றின் மூலம் நாம் அவரிடமிருந்து எதிர்பார்ப்பவற்றிற்கு நேர்மாறாக அந்த நோய் குறித்து காந்தி ஏன் அத்தகைய அலட்சியத்தைக் காட்டினார்?

C:\Users\Chandraguru\Pictures\Harilal_Mohandas_Gandhi_in_1910.jpg

காந்தியும் இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோயும் 

நிச்சயமாக அந்த தொற்றுநோயைப் பற்றி நன்கு அறிந்தவராகவே காந்தி இருந்தார். தனது மனைவியையும் ஒரு குழந்தையையும் அந்தக் காய்ச்சலால் இழந்து விட்டிருந்த தனது மூத்த மகனுக்கு, 1918ஆம் ஆண்டு நவம்பர் 23 அன்று எழுதிய கடிதத்தில் காந்தி பின்வருமாறு குறிப்பிட்டு எழுதியதாக அர்னால்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.

உன்னுடைய குடும்பம் இன்ஃப்ளூயன்சாவால் பாதிக்கப்பட்டதையும், மரணம்கூட நேர்ந்து இருப்பதையும் அறிந்த ஒரு கணம் எனக்கு வருத்தமாக இருந்தது. ஆனால் இதுபோன்ற செய்திகள் எல்லா இடங்களிலிருந்தும் வருகின்றன. அதனால் இப்போது என் மனம் பாதிக்கப்படவில்லை. (ஹரிலால்காந்திக்கு எழுதிய கடிதம் 1918  நவம்பர் 23; ஹரிலால்காந்திக்கு எழுதிய கடிதம் 1919 ஜனவரி 20)1

அதற்கடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தனது நெருங்கிய நண்பரான ரெவரண்ட் சார்லஸ் ஃப்ரீயர் ஆண்ட்ரூஸுக்கு அவர் இவ்வாறு எழுதினார்:

என் அன்புள்ள சார்லி, இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளீர்கள். இடைவிடாமல் அலைந்து திரிந்த போதிலும், நீங்கள் நன்றாக இருப்பது எனக்கு ஆச்சரியம் தருவதாக இருக்கிறது. ஆனால், எந்த எதிர்ப்பும் இல்லாமல் வழிகாட்டலைச் செய்வதற்கு தன்னை அனுமதிக்கும்போது, தன்னுடைய கருவியாக தான் பயன்படுத்த விரும்புபவர்களைக் கடவுள் பாதுகாக்கிறார் என்றே நான் நினைக்கிறேன். எனவே, நான் உங்களுக்காக எந்த கவலையும் கொள்ளவில்லை. (சி எஃப் ஆண்ட்ரூஸுக்கு எழுதிய கடிதம் 1919 ஜனவரி 10)

வெகு சீக்கிரமே, தனக்கு அறிமுகமான வழக்கறிஞர் ஒருவருக்கு அந்த தொற்றுநோயைக் குறிப்பிட்டு எழுதிய கடிதத்தில், மூன்று மாதங்களுக்கு முன்னர் தனது மகனுக்கு எழுதியதையே எதிரொலிக்கின்ற வகையில் காந்தி எழுதுகிறார்:

தங்களுக்கு நெருக்கமானவர்களை இழக்காத குடும்பம் என்று இந்தியாவில் எதுவுமில்லை. அதுபோன்ற இரக்கமற்ற செய்தி எங்கிருந்தாவது வழக்கமாக வரும்போது ஒருவரின் உணர்வுகள் உணர்வற்று மழுங்கி விடுகிறது (ஓ.எஸ்.காட் என்பவருக்கு எழுதிய கடிதம் 1919 பிப்ரவரி 16)

C:\Users\Chandraguru\Pictures\mahadev-desai-mahatmas-shadow.jpg

மகாதேவ் தேசாயுடன்

அகமதாபாத்தில் ஆற்றின் குறுக்கே சபர்மதி என்ற இடத்தில் இருந்த அவரது ஆசிரமத்தில் இருந்தவர்கள் ‘இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோயின் போது சுற்றியுள்ள கிராம மக்களுக்கு மருந்துகளை விநியோகிப்பதற்கு  உதவினார்கள்’ என்று சுட்டிக்காட்டியிருந்தார் (எம்.கே. காந்தி 1919; கான் 2018: 521– 29)2 அவரது செயலாளரான மகாதேவ் தேசாய் 1918 அக்டோபர் 11 அன்று தனது டைரி பதிவில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

ஆசிரமத்தில் அதிக அளவில் காய்ச்சல் இருந்தது. சங்கர்லால் பாரிக் மிகவும் அதிகமாகப்  பாதிக்கப்பட்டுள்ளார். தான் பலவீனமாக இருந்த போதிலும், கங்காபெஹன் குடும்பத்தில் ஏற்பட்ட நோயை அறிந்தவுடன்… பாபு தானே கடிதம் எழுதினார் (1968: 259)

தனது இணையை இழந்திருந்த அந்த நண்பருக்கு எழுதிய கடிதத்தில் காந்தி இவ்வாறு சுட்டிக் காட்டியிருந்தார்:

சேவை வழியை ஏற்றுக் கொண்டவர்களின் உடல்கள் எஃகு போல வலுவாக இருக்க வேண்டும். நமது முன்னோர்கள் தங்கள் உடலை உறுதிப்படுத்திக் கொண்ட காலம் ஒன்று இருந்தது. இன்று நாம் பரிதாபகரமாக பலவீனமாகி, சுற்றுப்புறத்தில் உள்ள எண்ணற்ற விஷக்கிருமிகளுக்கு அடிபணிந்து கிடக்கிறோம். நாம் வீழ்ச்சியடைந்திருக்கும் நிலை இருந்தபோதிலும், இதிலிருந்து தப்பிப்பதற்கான ஒரே வழியை நீங்கள் சுய கட்டுப்பாடு, சீராக்கிக் கொள்ளுதல் என்று எப்படி வேண்டுமென்றாலும் அழைத்துக் கொள்ளலாம். இரண்டு விஷயங்களைச் செய்தால், உடலுக்கு மிகக்குறைந்த ஆபத்தே ஏற்படும் என்பது மருத்துவர்களின் கருத்து. அவர்கள் சொல்வது சரிதான். நோயிலிருந்து தான் மீண்டுவிட்டதாக உணர்ந்த பிறகும், திரவம் மற்றும் செரிப்பதற்கு எளிதான உணவை மட்டுமே ஒருவர் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் படுக்கையில் தொடர்ந்து ஓய்வெடுக்க வேண்டும். இரண்டாவது அல்லது மூன்றாவது நாளில் காய்ச்சல் குறைவதால் ஏமாந்து போகின்ற நோயாளிகள் பலரும், தங்கள் வேலையை மீண்டும் தொடங்கி வழக்கம் போல் சாப்பிட ஆரம்பித்து விடுகிறார்கள். இது நோயின் தாக்குதலை மீண்டும் கொண்டு வருகிறது. அது பெரும்பாலும் உயிருக்கு ஆபத்தானதாக நிரூபிக்கப்படுகிறது. ஆகையால், நீங்கள் அனைவரும் படுக்கையிலேயே இருக்குமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன். (கங்காபெஹன் மஜும்தாருக்கு எழுதிய கடிதம் 1918 அக்டோபர் 11)

தொற்றுநோயின் தீவிரத்தன்மையையும், பல்வேறு நோய்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்திருந்த காந்தியின் நன்கு அறியப்பட்ட வரலாற்றையும் – எடுத்துக்காட்டாக 1904ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தென்னாப்பிரிக்காவில் புபோனிக் பிளேக் வெடித்தபோது அவர் மேற்கொண்ட முயற்சிகள் (எம்.கே. காந்தி 1940: 214–17, 1905a மற்றும் b) மற்றும் 1917 ஜூலையில் அகமதாபாத்தில் பிளேக் பரவல் அபாயத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து அவர் அளித்த தகவல்கள் (எரிக்சன் 1969: 322) – கருத்தில் கொண்டு பார்க்கும் போது, அந்த துயரத்தின் மீது அவர் மிகக்குறைவான கவனத்தைச் செலுத்தியது விந்தையாகவே இருக்கின்றது. நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதங்களில் நோய் குறித்து குறிப்பிட்டிருப்பதைத் தவிர, வேறு எதுவும் அவர் செய்யவில்லை. இதுபோன்ற முந்தைய நோய் பரவல்கள் குறித்து எழுதும் போது, சிறந்த சுகாதார விதிகளைக் கடைபிடித்து இந்த நோயைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை இந்தியர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று காந்தி கேட்டுக் கொண்டிருந்தார். மேலும் தூய்மையை அதிகமாகக் கடைப்பிடிப்பதால், வெள்ளையர்கள் பாதிக்கப்படுவதில்லை என்றும் கூறியிருந்தார். 1918இல் அவர் ஏன் அதுபோன்ற ஆலோசனைகளைப் பகிரங்கமாக வழங்கவில்லை என்ற கேள்வியை எழுப்புவதாகவே அது இருக்கிறது.

C:\Users\Chandraguru\Pictures\152400-gandhifb Champaran.jpg

இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய் இந்தியாவில் 1918ஆம் ஆண்டு மே-ஜூன் காலகட்டத்தில் தொடங்கியது, அது உண்மையில் இரண்டாவது அலையின் போது மிகவும் அதிகரித்து, செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் உச்சத்தில் இருந்தது. படிப்படியாக 1919ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அது குறைந்தது. அந்த நோய் பரவல் மீது அவரது முதன்மையான அக்கறை இருக்காத நிலையில், அந்த நேரத்தில் காந்தி என்ன செய்து கொண்டிருந்தார்? சம்பரானில் உள்ள இண்டிகோ விவசாயிகள், அகமதாபாத்தில் உள்ள மில் தொழிலாளர்கள் மற்றும் கெடாவில் நிலவரி செலுத்துவதற்கு எதிராகப் போராடிய விவசாயிகளுக்கு உதவி செய்யும் வகையில் செய்யப்பட்டு வந்த அவரது பிரச்சாரங்கள் வெற்றி அடைந்தன. அந்த வெற்றிகளைத் தொடர்ந்து, அவரைப் பலவீனப்படுத்தும் வகையில் அடுத்த மூன்று மாதங்களுக்கு அந்த தொற்றுநோய் தொடங்கும் வரையிலும், உலகப் போருக்காக பிரிட்டிஷ் ராணுவத்தில் சேருமாறு இந்தியர்களை ஊக்குவிப்பதற்கான காந்திய வழியில் அல்லாத ராணுவ ஆட்சேர்ப்புப் பணியைத் தீவிரப்படுத்துவதற்காக அவரது பெரும்பாலான நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆகஸ்ட் நடுப்பகுதியில், அவரது அயராத, ஆனாலும் தோல்வியுற்ற பிரச்சாரத்தால் களைத்துப் போன அவர் கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் மனவுளைச்சலால் (ஆப்ராம்ஸ் 2020; ஹுய்சென் 2018)3 பல மாதங்களுக்குப் பாதிக்கப்பட்டார். அது மிக மோசமான நிலையில் உயிருக்கு ஆபத்தானதாக இருந்தது (எம்.கே. காந்தி 1940: 332-34).

C:\Users\Chandraguru\Pictures\Pale Rider Laura Spinney.jpg

அவரது பலவீனத்தை தொற்றுநோயுடன் இணைத்து, அவர் உண்மையில் இன்ஃப்ளூயன்ஸாவால் மிகவும் பாதிக்கப்பட்டதாகக் கூறி சில எழுத்தாளர்கள் காந்தியின் உடல்நிலை குறித்து அதிகமாக எழுத முயன்றனர். எடுத்துக்காட்டாக, பேல் ரைடர்: 1918ஆம் ஆண்டு ஸ்பானிஷ் ஃப்ளூ ஹவ் இட் சேஞ்ச்ட் தி வேர்ல்ட் (Pale Rider: The Spanish Flu of 1918 and How It Changed the World) என்ற நூலின் ஆசிரியரான லாரா ஸ்பின்னி, ‘அது வயிற்றுப்போக்கு அல்ல, ஸ்பானிஷ் காய்ச்சல்’ என்று குறிப்பிடுகிறார். மேலும் அந்தக் காய்ச்சலை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த இயலாமை காரணமாக எழுந்த மக்களின் அவநம்பிக்கை மற்றும் அதிருப்தி காரணமாகவே, சுதந்திர இயக்கத்தின் மறுக்க முடியாத தலைவராக காந்தி ஆனார் (2017: 254, 260) என்று எழுதியுள்ளார். இதுபோன்ற கருத்துக்கள் தொற்றுநோய்களைப் பற்றி அதிகரித்து வருகின்ற கதைகளில் புதிதாக ஏதாவதொன்றைச் சேர்ப்பதில் ஆர்வம் கொண்ட பத்திரிகையாளர்களால் முன்வைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, கல்ஃப் நியூஸ் இணைய பதிப்பின் கருத்து ஆசிரியரான ஷியாம் ஏ கிருஷ்ணா (2020) சமீபத்தில் இவ்வாறு கூறியிருக்கிறார்:

சுதந்திர இந்தியாவை வடிவமைத்ததில் முக்கியமானவராக இருந்த மகாத்மா காந்தி, ஸ்பானிஷ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானவர்களில் ஒருவர். அவர் உயிர் பிழைத்திருக்காவிட்டால், பிரிட்டிஷ் காலனித்துவத் தளையை அகற்றுவதற்கான இந்தியாவின் போராட்டம் மிகவும் மாறுபட்ட பாதையில் சென்றிருக்கும். இந்திய சுதந்திரத்தை வாங்கித் தந்த இயக்கத்திற்கு காந்தி தலைமை தாங்கித் தொடர்ந்தார்.

இந்த கருத்தின் மூலம், அந்த தொற்றுநோய் காந்திக்கு காய்ச்சலை வந்திறங்கச் செய்தது மட்டுமல்லாமல், அவரைத் தலைமை நிலைக்குத் தள்ளி, பேரரசிற்கு எதிராகப் போராடுவதற்கு அவரை அனுமதித்தது என்றே புலப்படுகிறது. தன்னுடைய வாதத்திற்கான ஆதாரமாக, இதுபோன்ற கூற்றுகளுக்கு எந்தவொரு ஆதாரமும் அளித்திராத ஸ்பின்னியையே கிருஷ்ணா மேற்கோள் காட்டுகிறார்.

தொற்றுநோய் காலத்தில், காந்தி வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டிருந்தாரே தவிர, இன்ஃப்ளூயன்ஸாவால் அவர் பாதிக்கப்படவில்லை என்பதற்காக வைக்கப்படுகின்ற ஆதாரங்களை ஏற்றுக்கொள்வதில் அர்னால்ட் திருப்தி அடைகிறார். அந்தக் காய்ச்சலின் அறிகுறிகள் பல மாதங்களுக்கு நீடிக்காது என்கிற போது, காந்தியின் மோசமான உடல்நிலைமை பல மாதங்களுக்கு நீடித்தது. மேலும் காய்ச்சல் இருந்ததைத் தவிர, இன்ஃப்ளூயன்ஸா  காய்ச்சலுக்கான வேறு எந்த பொதுவான அறிகுறிகளையும் (தொண்டைப் புண், இருமல், மூச்சுத்திணறல், தலைவலி, சருமத்தின் கருமை, மூக்கில் ரத்தம் மற்றும் நுரையீரல் பிரச்சனைகள்) காந்தி கொண்டிருக்கவில்லை. இன்ஃப்ளூயன்ஸாவுடன் ஓரிரு நாட்கள் இருந்து இறந்து போவது அல்லது குணமாவது என்பதைக் காட்டிலும் மிகவும் வேறுபட்ட விஷயங்களையே அது குறிக்கிறது.

விடாமுயற்சி கொண்ட பத்திரிக்கையாளராக இருந்த காந்திக்கு, தன்னுடைய உடல்நிலையைப் பற்றி சொல்வதற்கு ஏராளம் இருந்தது. அது உண்மையில் இன்ஃப்ளூயன்ஸாவாக இருந்திருந்தால், அதைப் பற்றி அவர் நிச்சயமாக எழுதியிருப்பார். அர்னால்ட் சுட்டிக்காட்டுவதைப் போன்று,  சுதந்திரப் போராட்டத்தில் தொற்றுநோய்க்கும், காந்தியின் தலைமைக்கும் இடையிலான தொடர்பை ஸ்பின்னி அனுமானித்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கிருஷ்ணா மற்றும் ஸ்பின்னி என்று இருவரும் தாங்கள் எழுதிய விஷயங்களில் தவறாகவே இருக்கிறார்கள்.

காந்தியின் உடல்நலக்கேடு 

அந்த தொற்றுநோய் குறித்து காந்தி ஏன் இத்தகைய வேறுபாட்டைக் காட்டினார் என்ற முக்கியமான  கேள்விக்கு இந்த விளக்கம் பதிலளிப்பதாக இருக்கவில்லை. தன்னைச் சுற்றி நடந்து கொண்டிருப்பவற்றை  அவர் நிச்சயம் தவறவிட்டிருக்க மாட்டார். உண்மையில் அவர் அவ்வாறு தவற விடவும் இல்லை. அடிக்கடி கழிவறைக்குச் செல்வது தொடங்கி, மார்பைன் தேவைப்படுகின்ற மூலத்திற்கான அறுவை சிகிச்சை வரைக்கும் என்று அந்த காலகட்டத்தில் அவரால் எழுதப்பட்ட எழுத்துக்கள் அவருடைய உடல்நிலை குறித்து அதிக விவரங்களைத் தருகின்றன. இதற்கிடையில், இந்தியா முழுவதும் நோய் பரவுகிறது. எண்ணற்ற மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். வயிற்றுப்போக்கு மற்றும் மூலம் குறித்து தருகின்ற  விரிவான விளக்கங்களைத் தவிர, அவர் அப்போது ஆண்ட்ரூஸ் மற்றும் காட் மூலமாக அலி சகோதரர்களுக்கு மிகவும் சுருக்கமான அனுதாபத்தையும், ஹரிலாலின் இழப்புகளுக்கு விவரிக்க முடியாத பதிலையும், கங்காபெஹனுக்கு குறைவான ஆலோசனையையும் மட்டுமே வழங்கியிருக்கிறார்.

அந்த தொற்றுநோய் குறித்து ஒருவர் அவரிடம் எதிர்பார்ப்பதைப் போல இல்லாமல், அதிகாரவர்க்கம் மற்றும் உண்மையில் பொதுமக்களைத் தடுக்கின்ற வகையில், மிகக் குறைவாகவே காந்தி பேசியிருக்க வாய்ப்புள்ளது. 1896ஆம் ஆண்டு முதல் நாட்டில் பரவி வந்த புபோனிக் பிளேக், காலரா மற்றும் மிகவும் சமீபத்திய பெரியம்மை நோய் தொற்றுநோய்கள், அவற்றுடன் வந்த ராணுவ ஆட்சேர்ப்பு பிரச்சாரம், உணவுப் பற்றாக்குறை, விலை உயர்வுகள், பஞ்சம் மற்றும் அதிகரித்து வரும் அரசியல் அமைதியின்மையின் விளிம்பிற்கு நாட்டை இட்டுச் சென்ற நிலைமையால், அந்த தொற்றுநோய் மீது வெளிச்சம்படவில்லை (அர்னால்ட் 2019; மாசெலோஸ் 2006: 171) என்பதாக அர்னால்ட் சொல்லும் காரணங்களின் அடிப்படையில் அது தெரிய வருகிறது. எப்படியாயினும், காந்தி பரவி வந்த அந்தப் பேரழிவைப் புறக்கணித்தது, அவரைப் பலவீனப்படுத்தியிருந்த நோயுடன் தொடர்புடையதாகவே இருந்தது. உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் அது அவரைப் பாதிப்பிற்குள்ளாக்கி விட்டது. இது குறித்த ஆய்வுகள் மேலும் தேவைப்படுகின்றன.

C:\Users\Chandraguru\Pictures\sabarmati.jpg

ஆகஸ்ட் 11 அன்று மாலை, தனது ஆசிரமத்தில் நடைபெற்ற மதம் சார்ந்த விழாவின் போது மனம் போன போக்கில் தாராளமாகச் சாப்பிட்ட காந்திக்கு, ஒரு மணி நேரத்திற்குளளாக கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

உடல் முழுவதும் நடுக்கத்துடன், நோன்பை முறித்துக் கொண்ட நான், என்மீது மிகுந்த சிரமத்தை ஏற்றிக் கொண்டேன். என்ன சாப்பிட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் என்னிடம் சுய கட்டுப்பாடு இருக்கவில்லை; நான் [அரிசியிருந்து  தயாரிக்கப்பட்ட] கஞ்சி சாப்பிட்டேன். காய்கறி சூப்பை மட்டுமே நான் குடித்திருந்தால், அந்த வேதனையான விளைவு நிச்சயமாக ஏற்பட்டிருக்காது. இன்று நான் எழுந்திருக்கவோ, நடக்கவோ முடியாமல் மிகவும் பலவீனமாக இருக்கிறேன். கழிவறையை அடைய நான் ஏறக்குறைய ஊர்ந்தே செல்ல வேண்டியிருந்தது. அங்கே எனக்கு ஏற்பட்ட வயிற்று வலியைத் தாங்க முடியாது அலறக்கூடிய உணர்வு என்னிடம் தோன்றியது… அந்த வலி ஐந்தே முக்கால் மணியளவில் குறைந்து விடும் என்று நான் நம்புகிறேன். சாப்பிடுவதில் தவறு செய்த எனக்கு 24 மணி நேரம் கஷ்டப்படுவது என்பது அதிகப்படியான தண்டனை அல்ல. இன்று நான் உண்ணாவிரதம் இருப்பதால், அந்த தண்டனை மிகவும் குறுகியதாகவே இருக்கும். என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம். எப்படியாயினும்  வலியிலிருந்து முற்றிலுமாக நாளைக்கு விடுபட்டு விடுவேன் என்று நான் நம்புகிறேன். உணவில் கவனக்குறைவாக இல்லாவிட்டால், மூன்று அல்லது நான்கு நாட்களில், நான் எனது இயல்பில்  இருப்பேன் (புல்சந்த் ஷாவிற்கு எழுதிய கடிதம், 1918 ஆகஸ்ட் 12)

C:\Users\Chandraguru\Pictures\MK Gandhi ate.jpg

ஆயினும், அவரது நிலைமை சரியாகவில்லை. தன்னுடைய பலவீனம், அவமானம் குறித்து தனக்கிருந்த சித்திரத்தை தனது சுயசரிதையில் அவர் வரைகிறார். அன்று மாலை அவர்,  நாடியாடில் உள்ள கெடா நகரத்திற்குச் செல்வதற்காக ரயிலைப் பிடிக்க வேண்டியிருந்தது. ஸ்டேஷனுக்குச் செல்வதற்கான மிகக் குறுகிய அவரது நடை, தாங்க முடியாத வலியிலே முடிந்தது; ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களுக்கொரு முறை, அவர் கழிவறைக்குச் செல்ல வேண்டியிருந்ததால், நாடியாட் தலைமையகத்தில் எளிதில் பயன்படுத்தக்கூடிய கழிவுத் தொட்டி (1940: 332) அவருக்குத் தேவைப்பட்டது (காந்தி 2018: 694).

சில நாட்களுக்குப் பிறகு, தனது உறவினரான சபர்மதி ஆசிரமத்தின் மேலாளர் மக்கன்லால் காந்திக்கு, மூன்று நாட்களாக ஓரளவிலான உண்ணாவிரதம் இருந்த பிறகு தன்னுடைய வலி குறைந்து வருவதாக மிகுந்த நம்பிக்கையுடன் அவர் எழுதினார் (மக்கன்லால் காந்திக்கு எழுதிய கடிதம் 1918 ஆகஸ்ட் 14). ஆயினும்,  ஆகஸ்ட் 17 அன்று, சூரத்தில் அவரது உடல்நிலை சரியில்லாமல் ஆவதற்கு சற்று முன்னர் அவர் ஆற்றிய உரை குறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவில்  ‘ராணுவ ஆட்சேர்ப்புப் பணிகளை அவரால் இன்னும் செய்ய முடியும்’ என்ற தலைப்பில் வெளியான செய்தியறிக்கை அவருக்கு வாசித்துக் காட்டப்பட்டது (தேசாய் 1968: 226, 232), பத்திரிக்கையாளர் ஒருவருக்கு தொடர்ச்சியாக அவர் கூறி எழுதப்பட்ட கடிதங்களில், தான் குணமடைந்து வருவதாகவும், தன்னுடைய வாழ்க்கையின் மிக மோசமான நோயைக் கடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார் (ராபர்ட் ஹென்டர்சனுக்கு எழுதிய கடிதம் 1918 ஆகஸ்ட் 17); அவரது இளைய மகனுக்கு எழுதிய கடிதத்தில், தன்னுடைய உடல்நிலை முடிந்தவரைக்கும் நன்றாகவே இருந்த போதிலும், தான் மிகவும் கஷ்டப்பட்டதாகவும், படுக்கையில் கிடந்ததாகவும் (தேவதாஸ் காந்திக்கு எழுதியவை) குறிப்பிட்டுள்ளார்; தான் இன்னும் கடுமையான வேதனையில் இருப்பதாக தன்னுடைய நண்பருக்கு (ஜம்னாதாஸ் துவாரகாதாஸுக்கு எழுதிய கடிதம், 1918 ஆகஸ்ட் 17) எழுதினார். தான் எவ்வாறு இருந்தேன் என்பது குறித்து அறிஞரும் பல்கலைக்கழக நிர்வாகியுமான ஆனந்தசங்கர் துருவாவிடம் விளக்கத்தை அளித்தார்.

திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில், தாங்க முடியாத வலியை அனுபவித்தேன். இன்னும் மோசமாக, இன்னும் வலுவான பெயரடையைப் பயன்படுத்திச் சொன்னால். அந்த இரண்டு நாட்களில் நான் கிட்டத்தட்ட நினைவிழந்து போனேன். தொடர்ந்து அலற விரும்பினேன் என்ற போதிலும், மிகுந்த முயற்சியுடன் அந்த வெறியைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். புதன்கிழமை ஒப்பீட்டளவில் நன்றாக இருப்பதாக நான் உணர்ந்தேன். அதன் பின்னர் நாளுக்கு நாள் நான் முன்னேறி வருகிறேன். மிகமோசமாகப் பலவீனமடைந்து போனதால், என்னுடைய இயக்கம் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. இன்னும் சில நாட்களுக்கு நான் படுக்கையிலேயே இருக்க வேண்டியிருக்கும். ஆனால் முடிவில் எல்லாம் சரியாகிவிடும் என்றே நான் நம்புகிறேன் (ஆனந்தசங்கர் துருவாவிற்கு எழுதிய கடிதம், 1918 ஆகஸ்ட் 17; மனசுக்லால் ராவ்ஜிபாய் மேத்தாவிற்கு எழுதிய கடிதம், 1918 ஆகஸ்ட் 17)

அதே நாளில், மகாதேவ் தேசாய் தனது நாட்குறிப்பில், ‘திங்கள் முதல் சனிக்கிழமை வரை பயங்கரமான நோய். கடுமையான வயிற்றுப்போக்கு. சனிக்கிழமை மட்டுமே அவர் கொஞ்சம் நிவாரணம் பெற்றதாகத் தோன்றியது’ (1968: 226) என்று குறிப்பிட்டார்.

C:\Users\Chandraguru\Pictures\Naturopathy and Gandhi.jpg

மருந்துகளை மறுத்த காந்தி, இயற்கையால் குணப்படுத்தும் நுட்பங்களைக் கொண்டு தனக்குத்தானே சிகிச்சை அளித்துக் கொண்டார் (சத்தியலட்சுமி 2019:69–71). வலி மிகவும் மோசமாக இருந்தபோது, இவை அனைத்திலிருந்தும் விடுபடுவதற்காக தான் இறந்து போக வேண்டுமென்று அவர் விரும்பினார் (தேவதாஸ் காந்திக்கு எழுதிய கடிதம், 1918 ஆகஸ்ட் 29); ஒரு வாரம் கழித்து தான் இப்போது நன்றாக இருப்பதாகவும், ஆனாலும் இன்னும் சில நாட்களுக்கு படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாது என்றும் அவர் கூறினார் (பி ஜி திலக்கிற்கு எழுதிய கடிதம், 1918 ஆகஸ்ட் 25; ஜம்னாலால் பஜாஜுக்கு எழுதிய கடிதம் 1918 ஆகஸ்ட் 28). செப்டம்பர் மாத இறுதியில், சில நிமிடங்களுக்கு மேல் நடந்து செல்ல முடியாத அளவிற்கு பலவீனமாகவே வராந்தாவில் உலாவினார் (சரோஜினி நாயுடுவிற்கு எழுதிய கடிதம், 1918 செப்டம்பர் 20).

ஆகஸ்ட் 23 அன்று, அவரது நண்பரும் தொழிலதிபருமான அம்பாலால் சாராபாய் காந்தியை நாடியாடில் இருந்து அகமதாபாத்திற்கு அனுப்பி வைத்தார். அங்கே சாராபாய் மாளிகையில் அவர் தங்கியிருந்தார். அங்கே தங்கியிருந்த ஓரிரவில், தனது வாழ்க்கையில் சந்தித்த முதல் நீண்ட நோயின் போது, ​​ தான் மரணத்தின் வாசலில் இருப்பதாக உணர்ந்து அவர் விரக்தியடைந்தார். பல்வந்த்ராய் நரசிங்பிரசாத் கனுகா அழைத்து வரப்பட்டார். காந்தியின் நாடித்துடிப்பு நன்றாக இருப்பதாகவும், அவர் எந்த ஆபத்திலும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். காந்திக்கு ஏற்பட்ட உடல் நலிவு, மிகமோசமான உடல் பலவீனம் காரணமாக ஏற்பட்ட பதட்டமான மனவுளைச்சலின் விளைவாகவே இருந்தது. காந்திக்கு மீண்டும் நம்பிக்கை பிறக்கவில்லை. இரவு முழுக்க தூக்கமின்றியே அவர் கழித்தார் (எம் கே காந்தி 1940: 333-34).

சாராபாயுடன் செப்டம்பர் 7 வரை தங்கியிருந்த அவர், ‘ஒருவேளை நான் இறந்து போனால், என்னுடைய சொந்த வீட்டிலே இருப்பதுதான் நல்லது’ என்று முடிவு செய்தார் (தலால் 1971: 20). எனவே அவருடைய ஆசிரமத்திற்கே அவர் மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டார். தான் இனிமேல் சாராபாயின் இடத்தில் தங்க முடியாது என்று அவர் அறிவித்தார்.

இந்தச் சூழல் வறண்டு, மூச்சுத் திணறலை ஏற்படுத்துவதாகவே நான் காண்கிறேன். ஆசிரமத்தில் செய்வதைப் போல, காலையில் எழுந்தவுடன் ஒருவரின் காதுகளை மகிழ்விக்கும் வகையில், இங்கே கடவுளுக்கான பிரார்த்தனை இல்லை. பாடல்களும், கடவுளின் பெயரும் என் காதுகளுக்கு இசையைப் போன்றவை. கடந்த பல நாட்களாக அதை நான் இழந்திருக்கிறேன். இன்று காலை 4 மணிக்கு நான் எழுந்ததிலிருந்து, ​அந்த ஆர்வம் குறித்த என் அமைதியின்மை அதிகரித்து, கண்ணீர் வழிந்தோடுவதைத் தடுக்க முடியாத அளவிற்கு அதிகரித்தது (தேசாய் 1968: 246).

C:\Users\Chandraguru\Pictures\Gandhi and Prasad.jpg

சம்பரானில் அவரது உதவியாளர்களில் ஒருவராக இருந்த ராஜேந்திர பிரசாத் (இந்திய குடியரசின் முதல் குடியரசுத் தலைவர் ஆனவர்). சாராபாய் இல்லத்திலிருந்து தனது ஆசிரமத்திற்கு திரும்பிய போது இருந்த காந்தியின் மனநிலை குறித்து பின்பு ஒருமுறை நினைவு கூர்ந்தார்.

இப்போது வரை நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? கையில் இருக்கும் பணியை முடிப்பதற்கு முன்பாக, இன்னொன்றை நான் எடுத்துக்கொள்கிறேன். பின்னர் இரண்டாவது பணியை முடிப்பதற்கு முன்பாக மூன்றாவதற்கு கடந்து செல்கிறேன். மிகுந்த நம்பிக்கையுடனும் மிகுந்த உற்சாகத்துடனும் நான் இந்த ஆசிரமத்தை நிறுவினேன். இதைச் சிறந்த ஆசிரமமாக மாற்றவும், இங்கே தங்கியிருப்பவர்களைச் சிறந்த தொழிலாளர்களாக உருவாக்கவும் நான் விரும்பினேன். ஆனால் முறையான தொடக்கத்திற்கு முன்பாகவே, சம்பரானுக்குச் சென்றதால், அதன் நிர்வாகச் சுமையை உங்கள் அனைவரின் தோள்களிலும் நான் வைக்க வேண்டியிருந்தது. ஆசிரமம் முறையாக திறக்கப்பட்ட நாளில் கூட என்னால் இங்கே இருக்க முடியவில்லை…

… உணர்ச்சிப் பெருக்கால் அவர் மூச்சுத் திணறினார். அவருடைய கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது; அவர் ஒரு குழந்தையைப் போல அழ ஆரம்பித்தார். நாங்கள் அசையாது அமர்ந்திருந்தோம். அவரிடம்  என்ன சொல்வது, எப்படி ஆறுதல் கூறுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. இருந்த போதிலும், சிறிது நேரத்திற்குப் பிறகு, அவரே அமைதியானார். மேலும் ‘இந்த கண்ணீர் என் மனதிற்கு ஓரளவு அமைதியைக் கொடுத்திருக்கிறது. கடவுள் விரும்புவது நடக்கும்’ என்று கூறி அவர் அமைதியாகி விட்டார் (பிரசாத் 1961: 79, 80).

மரணத்திற்கு மிக அருகே காந்தி இருந்த வேளையில், இரவும், பகலும் அவருடன் இருந்து வந்த ஆண்ட்ரூஸ், அவரது உடல் நலம் தேறி வந்த நிலையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

அன்றாட சாதாரண வழக்கத்தின் அழுத்தம் குறைந்தது. தனது பொது வேலைகளுக்கு மத்தியில்  இருந்தபோது, மற்ற நேரங்களை விட தன்னுடைய தனிப்பட்ட பண்புகள் குறித்த அவருடைய பேச்சுக்கள் அடிக்கடி நிகழ்ந்தன (1929: 18).

ஆயினும்கூட, தன்னுடைய தனிப்பட்ட குறைபாடுகள் குறித்த உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, காந்தி ’தனது நோயின் ஆரம்பம் – அதிகப்படியான உணவு’ என்ற தனது சொந்த விளக்கத்துடனேயே ஒட்டிக் கொண்டார் (காந்தி மற்றும் காந்தி 1998: 224). ஓரளவிலான உண்ணாவிரதத்தில் இருந்தபோது குறைவான அறிகுறிகள் இருந்த நிலையில், சுவையான உணவை அதிகமாக உண்ணும் ஆர்வத்தாலேயே, தான் நோயின் தண்டனைக்கு தகுதியானவராகி விட்டதாகவே, அந்த நேரத்தில் அவரால் சொல்லப்பட்டு எழுதப்பட்ட தொடர் கடிதங்களின் கருப்பொருள் தொடர்ச்சியாக இருந்தது. பிரபல வேதியியலாளர் பி.சி.ரேக்கு எழுதிய கடிதத்தில், உணவு குறித்து தனக்கிருந்த பிரச்சனைகளை காந்தி விளக்கியிருந்தார்.

என்னுடைய நோய் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். மிகவும் கடுமையான வயிற்றுப்போக்கு என்னைத் தாக்கியிருந்தது. என்னுடைய உடல்நலம் தேறியிருப்பதாகத் தோன்றினாலும், நான் பலவீனத்துடன் முற்றிலும் வலுவிழந்து போய் இருக்கிறேன். படுக்கையிலிருந்து எழுவதோ அல்லது நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கவோ என்னால் முடியாது. உடைந்து போன உடலை எவ்வாறு மீண்டும் உருவாக்குவது என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. பல ஆண்டுகளாகவே பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட பொருட்களை நான் தவிர்த்து வருகிறேன். உடல்நலத்துடன் வாழ்வதற்காக அவ்வாறு இருக்கப் போவதாக சபதம் ஏற்றுக் கொண்டேன். எனவே பால் மற்றும் வெண்ணெய்க்கான மாற்று எனக்குத் தேவை. இதுவரை என்னால் ஆனவரை, நிலக்கடலை, வால்நட் பருப்பு மற்றும் பிற கொட்டைகளை சிறந்த மாற்றீடாக நான் கண்டிருக்கிறேன். ஆனாலும் இவ்வாறு கொட்டைகளிலிருந்து பெறப்படும் கொழுப்புகள் என் மென்மையான வயிற்றைப் பொறுத்தவரையிலும் மிகவும் வலுவானவையாக இருக்கின்றன. நெய் மற்றும் பாலுக்கான சரியான காய்கறி மாற்று எனக்குத் தேவை. தேங்காய் பால் மற்றும் பாதாம் பால் போன்றவற்றை நான் முன்னர் முயற்சித்தேன். அந்த பால்களின் உடலியல் சார்ந்த செயல்பாடு, பசுவின் பாலில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. நெய் அல்லது வெண்ணெய் மற்றும் பாலுக்கான காய்கறி மாற்றீடுகள் குறித்து உங்களுக்கு ஏதாவது தெரியுமா? (பி சி ரேக்கு எழுதிய கடிதம் 1918 ஆகஸ்ட் 27; காந்தி மில்லி போலாக்கிற்கு எழுதிய கடிதம் 1918 ஆகஸ்ட் 31) 4

நண்பருக்கு எழுதிய மற்றொரு கடிதத்தில் அவர் மேலும் கூறியதாவது:

எனது உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பிய ​​சில நாட்களில் எனக்கு காய்ச்சல் ஏற்பட்டது, அது என்னுடைய பலவீனத்தை மேலும் அதிகரித்தது. இப்போது காய்ச்சல் இல்லை. என்னுடைய நோய் குறித்து நான் வெட்கப்படுகிறேன். ஒருபோதும் வயிற்றுப்போக்கு போன்ற நோய் எனக்கு வராது என்றே நான் நினைத்திருந்தேன். வந்ததற்கு நானே காரணம். உடல்நலம் போதுமான அளவு தேறியிருந்தாலும், என்னுடைய தோல் மிகவும் மென்மையாகிப் போயிருந்தது. நடமாட முடியாதவனாக இல்லை என்றாலும், எனது கால் தசைகள் அவை இருக்க வேண்டிய அளவிற்கு உறுதியாக இல்லை. உப்பை இழந்து விடக்கூடாது என்று எனது டாக்டர் நண்பர்கள் எப்போதும் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். பிரான்ஸ் அல்லது மெசபடோமியாவிற்கு செல்ல வேண்டியிருந்தால், தோல் கொஞ்சம் கடினமானதாக இருப்பது நல்லது என்று நினைத்தேன். அந்த யோசனையுடன் நான் உப்பை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தேன். அதனால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் என்பதற்கான எச்சரிக்கையாக நான் அதை எடுத்திருக்க வேண்டும், ஆனால் ஓரளவிற்கு மட்டுமே உண்ணாவிரதத்தை நான் கடைப்பிடித்தேன். அதன் விளைவாக எனக்கு கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இந்த நோயைப் பொறுத்தவரை, உணவு விஷம் போன்றது; இருந்தாலும், நான் தொடர்ந்து சாப்பிட்டேன். சுயகட்டுப்பாடு இல்லாததால், நான் அதற்கான விளைவை எதிர்கொள்ள வேண்டியிருந்தது (ராஞ்சோட்லால் பட்வாரிக்கு எழுதிய கடிதம் 1918 செப்டம்பர் 9; சி எஃப் ஆண்ட்ரூஸுக்கு எழுதிய கடிதம் 1918 ஆகஸ்ட் 29).

ஆகஸ்ட் 29 அன்று இருந்ததைப் போல, அந்த நோய் இருந்த போது அவர் ஒருபோதும் நன்றாக உணரவில்லை (தேசாய் 1968: 239). காந்தியின் ஆரோக்கியம் இப்போது மிகவும் திருப்திகரமாக உள்ளது என்று அவரது செயலாளர் செப்டம்பர் 20 அன்று குறிப்பிட்டார். அவர் பிரார்த்தனை மைதானத்திற்கு நடக்க ஆரம்பித்து விட்டார் (தேசாய் 1968: 251). அவருடைய நிலை எதிர்பார்த்தவாறு தொடர்ந்து முன்னேறவில்லை. இரண்டு வாரங்களுக்குள், உண்மையில் அவரது நோய் திடீரென மேலும் மோசமடைந்தது – அவரது இதயம் பாதிக்கப்பட்டது மற்றும் இதயத் துடிப்பு ஒழுங்கற்று இருந்தது. தன்னுடைய முடிவு நெருங்கிவிட்டதாக  ஆசிரமத்தில் இருந்தவர்களிடம் அவர் தெரிவித்தார் (தலால் 1971: 20). அக்டோபர் 2, காந்தியின் 49ஆவது பிறந்த நாளில், நேற்றிரவு முதல் பாபுவின் ஆரோக்கியத்தில் கடுமையான பின்னடைவு ஏற்பட்டது என்று மகாதேவ் தேசாய் எழுதினார் (1968: 259). ஹரிலாலுக்கு எழுதிய கடிதத்தில், இறந்துவிடப் போவதாக தான் உணர்ந்ததாக காந்தி கூறினார்.

போகப் போகிறேன் என்ற உணர்வே இப்போது என்னிடம் இருக்கிறது. மிகக் குறைவான நேரம் மட்டுமே எனக்கு உள்ளது. உடல் மிகவும் பலவீனமாகிக் கொண்டே இருக்கிறது. என்னால் எதையும் சாப்பிட முடியவில்லை. ஆனால் என் இதயம் நிம்மதியாக இருக்கிறது, அதனால் எனக்கு எதுவும் கஷ்டமாக  இருக்கவில்லை (ஹரிலால்காந்திக்கு எழுதிய கடிதம் 1918 அக்டோபர் 2)

தனது இளைய மகன் தேவதாஸுக்கு அவர் எழுதினார்.

இன்று உனக்கு தந்தி அனுப்பியிருந்தேன். அது உன்னைப் பயமுறுத்தியிருக்கலாம். நீ பயப்படக்கூடாது என்றே நான் விரும்புகிறேன். அந்த அளவிற்கான சமநிலை உனக்கு இருக்கும் என்று நான் எதிர்பார்க்க முடியாது. எனது உடல்நலம் மேம்படுவதற்குப் பதிலாக, தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. எந்த தானியங்களையும் என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. பழத்தை மட்டுமே எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் நலத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது என்பதால் நிச்சயம் நான் இறந்துவிட நேரிடலாம்…. என் உடல் பழைய ஆடையைப் போல மாறிவிட்டது, அதனால் அதை நிராகரிப்பது எனக்கு ஒன்றும் கஷ்டமாக இருக்கப் போவதில்லை. புதிய ஆடையின் சுமையைப் பெறுவதற்கு எனக்கு விருப்பமில்லை. அந்தச் சுமையிலிருந்து விடுபடுவதற்கு நான் தகுதி பெற்றிருப்பதாக நினைக்கவில்லை. ஆனால் நேரம் இன்னும் கடந்து விடவில்லை. அந்தத் தகுதியை ஒரு கணத்தில்கூட என்னால் பெற முடியும். (தேவதாஸ்காந்திக்கு எழுதிய கடிதம் 1918 அக்டோபர் 2)

ஆயினும் அவர் இறந்து விடவில்லை. நவம்பர் 11ஆம் தேதிக்குள் முதலாம் உலகப் போர் முடிந்ததும், வயிற்றுப்போக்குடன் காந்தி கொண்டிருந்த நீண்ட காலப் போராட்டம் முடிவிற்கு வந்தது. அதற்கு சற்று முன்னதாக, முன்னணி அரசியல்வாதியான  சீனிவாச சாஸ்திரிக்கு அவர் கடிதம் எழுதியிருந்தார்.

எனது உடல்நலம் குறித்து என்னால் முடிந்த அளவிற்கு மிகப்பெரிய கவனிப்பை எடுத்துக் கொள்கிறேன் என்று உங்களிடம் நான் உறுதியளிக்கிறேன். அரிதாகவே படுக்கையில் படுக்கின்ற மனிதனுக்கு, மூன்று மாதங்களுக்கும் மேலாக அந்த அனுபவம் இருப்பது ஒன்றும் நகைச்சுவையானதல்ல. என் நோய் இன்னும் நீடித்தால், அதற்கு என்னுடைய அறியாமை அல்லது முட்டாள்தனம் அல்லது இரண்டும் காரணமாக இருக்கும். எந்தவொரு பின்னடைவிற்கும் காரணமாக, மருத்துவ நண்பர்களின் திறமை அல்லது கவனமின்மையை என்னால் கூற முடியாது. என்னுடைய சீரற்ற பழக்கவழக்கங்களின் காரணமாக, அவர்களால் உதவியற்றவர்களாகவே இருக்க முடியும். ஆனாலும் அவர்கள் என்னுடைய ஒரு பகுதியாகி விட்டார்கள். மிகுந்த வேதனையை அனுபவிக்கும் போது, எனக்கு மிகப்பெரிய ஆறுதலையும் மகிழ்ச்சியையும் அவர்கள் தருகிறார்கள் (சீனிவாச சாஸ்திரிக்கு எழுதிய கடிதம் 1918 நவம்பர் 5).

C:\Users\Chandraguru\Pictures\first-world-war.jpg

ராணுவ ஆட்சேர்ப்பு முகவராக காந்தி

பல ஆண்டுகளுக்குப் பிறகு, காந்தி இவ்வாறு நினைவு கூர்ந்தார்

ஆசிரமத்தில் நான் வலியுடன் படுக்கையில் கிடந்த போது, ஜெர்மனி முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்டதாகவும், இனிமேல் ராணுவத்திற்கான  ஆட்சேர்ப்பு நடவடிக்கை தேவைப்படாது என்று கமிஷனர் செய்தி அனுப்பியதாகவும் வல்லபபாய் தகவல் கொண்டு வந்தார். ஆட்சேர்ப்பு பற்றி நான் இனிமேல் கவலைப்பட வேண்டியதில்லை என்ற செய்தி மிகப் பெரிய நிவாரணமாக வந்து சேர்ந்தது (1940: 333).

நிவாரணத்திற்கும் மேலானதாக அது இருந்தது என்று ஆண்ட்ரூஸ் சுட்டிக் காட்டுகிறார். ‘ராணுவ ஆட்சேர்ப்பு பிரச்சாரம் கிட்டத்தட்ட அவருடைய வாழ்க்கையை இழக்கின்ற அளவிற்கு செய்தது’ (ஆண்ட்ரூஸ் 1929: 222). ஜனவரி 20 அன்று, மூலத்திற்காக அவருக்கு பம்பாயில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. குணமடைந்த போது, பேரரசிற்கான முரண்பாடான ஆட்சேர்ப்பு முகவராக இல்லாமல், விரைவிலேயே தனது நாடு தழுவிய சுற்றுப்பயணங்களுக்கு அவர் திரும்பினார்.

அவரிடமிருந்து பலராலும் எதிர்பார்க்கப்பட்டவாறு பதிலளிக்காத வகையில், அந்த கொடிய தொற்றுநோய் குறித்து அவரிடமிருந்த அலட்சியத்திற்கு, பாதிக்கப்பட்ட அவரது உடல் நிலை மட்டுமல்லாது, அவரைச் சுற்றியிருந்த உணர்ச்சி மற்றும் ஆன்மீக இருத்தலியல் நெருக்கடியால் அவருக்கு ஏற்பட்டிருந்த அவதி, அவரை பலவீனப்படுத்திய மனவுளைச்சல் ஆகியவையே காரணமாகத் தெரிகிறது. ராஜேந்திர பிரசாத் குறிப்பிட்டதைப் போல, காந்தியும் தானே சொன்னதைப் போல அவரது நிலைமை வெறுமனே சுவையான உணவின் மீது கொண்ட அதிகப்படியான விருப்பத்தின் விளைவானதாக மட்டுமே இருக்கவில்லை. பலவீனமானவராக மட்டுமல்லாது, வாழ்வதற்கான விருப்பத்தையும் இழந்துவிட்டவராகவே  அவர் தோன்றினார்.

அவருடைய பிந்தைய செயலாளரின் சகோதரியான சுசீலா நய்யார், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்ற பிறகு, இறுதியில் காந்தியின் மருத்துவராக இருந்தார். அதிகப்படியான உணவு முதன்முதலில் காந்திக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தியிருக்கலாம் என்று அவர் குறிப்பிடுகிறார். ‘உடல் மற்றும் மிகுந்த உணர்ச்சியால் ஏற்பட்ட சிரமம் மற்றும் சோர்வு ஆகியவற்றின் விளைவாக அந்த நோய் உருவாகியிருக்கலாம். அதன் விளைவாக அவருக்கு உடல் பாதிப்பு மற்றும் மனவுளைச்சல் ஏற்பட்டது’ (1993: 234). 1975 மார்ச் மாதத்தில் டெல்லியில் சுசீலா நய்யாருடன் கலந்துரையாடிய போது, தனது சம்பரன் சத்தியாக்கிரகப் பிரச்சாரத்தின்போது காந்தி ஏன் வயிற்றுப்போக்குடன் வரவில்லை என்று ​​டென்னிஸ் டால்டன் அவரிடம் கேட்டார். ‘அரசாங்கத்துடன் ஒத்துழைக்கும் போதுதான் பாபு நோய்வாய்ப்பட்டார். அதை எதிர்க்கும் போது அல்ல’ என்று ​​அவர் பதில் கூறினார்.

பிரிட்டிஷாரின் போர் முயற்சிக்கு விவசாயிகளைச் சேர்க்க முயற்சித்ததன் மூலமாக, அவருடைய ராணுவ ஆட்சேர்ப்பு முயற்சி தார்மீகரீதியாக கேள்விக்குரிய அமைப்பிற்குள் அவரை ஈடுபடுத்தியது. உள்ளூர் விவசாயிகளைப் பாதிக்கின்ற வரிச்சலுகைகள் தொடர்பாக அரசு அதிகாரிகளுக்கு எதிராக வெற்றிகரமாக சவால் விடுத்த பிரபலமான ஹீரோ என்ற அந்தஸ்தை அவர் பெறுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே அது நடந்தது. அவர்கள் இப்போது காந்தியையும், அவரது ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளையும் தவிர்த்து விட்டனர். அவரது தரப்பிலிருந்து கடுமையான முயற்சிகள் இருந்தபோதிலும், நடைமுறையில் அந்த முயற்சிகளுக்கு ஆதரவு இல்லாமல் போனது. தொடர்ந்து அவர் பயணித்து, கெஞ்சிக் கொண்டிருந்தார். அவர் எடுத்துக் கொண்ட உணவு மிகவும் குறைவாக இருந்தது. உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அவருடைய நிலைமை மிகவும் மோசமானது. சோர்ந்து போன அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது மட்டுமல்லாமல், அந்தக் காலகட்டத்தில் ஆன்மீகக் குறைபாடு மற்றும் தார்மீகக் குழப்பத்திற்குள்ளும் அவர் மூழ்கிப் போனார். அந்த நிலையில், வெளிவிஷயங்கள் மீது அவர் கொண்டிருந்த கவனம் மிகவும் குறைந்து போனது.

அவரது மனம் மற்றும் உணர்வு நிலைகள் மிகக் குறைவான நிலையில் ஏன் இருந்தன என்பது குறித்து இன்னும் கொஞ்சம் ஆழமாகக் கண்டுபிடிப்பது இங்கே பயனுள்ளதாக இருக்கும். மனதளவில் இருந்த முரண்பாடு அதன் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் – சமாதானவாதியான ஒருவரால், தார்மீக ரீதியாக போர் முயற்சிகளுக்காக ஆட்சேர்ப்பு செய்ய எவ்வாறு முடியும்? (பிரவுன் 1972: 145-49; டெண்டுல்கர் 1960: 226-34; ஸ்டீகர் 2000: 146-55; எம் கே காந்தி 1940: 327-31).

காந்திய பெண் அறிஞர் ஜூடித் பிரவுன் இவ்வாறு கூறியிருக்கிறார்:

தனக்கு அருகில் இருந்தவர்கள், தன்னுடன் திரண்டவர்கள் மற்றும் தனது மனசாட்சியுடனான போராட்டத்துடன், 1918ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இருந்து உடல்நிலையில் ஏற்பட்ட தீவிர சரிவைத் துரிதப்படுத்திய உடல் சோர்வும் இணைந்து, அவரைப் பொது வாழ்க்கையிலிருந்து கிட்டத்தட்ட அகற்றியே விட்டன.

இவ்வாறு அவர் மீது திணிக்கப்பட்ட கட்டாயப்படுத்தப்பட்ட ஓய்வு,

உண்மை, உண்மையின் ஆற்றல் குறித்து தீவிரமாக காந்தியை ஏங்க வைத்தது. நண்பர்களிடமிருந்து வெளிப்பட்ட அக்கறையிலிருந்தும் அதனை அவர் அனுபவித்தார். அவர் கூறுவதைப் போல, அது மனிதனிடம் கடவுள் செலுத்துகின்ற அன்பு என்று இருந்தது. அதன் விளைவாக, மனிதகுலத்திற்குச் சேவை செய்வதற்கான தேவை அதிகமிருப்பதாக அவர் உணர்ந்தார். மேலும் தனது சேவைக்காக தன்னுடைய வாழ்க்கையை எவ்வாறு புனிதப்படுத்திக் கொள்வது என்பது குறித்து நீண்ட நேரம் அவர் தீர யோசித்தார். (1989: 127).

இந்தக் கட்டத்தில், பேரரசின் நேர்மை குறித்து அவருக்கு இன்னும் நம்பிக்கை இருந்தது – அரையாண்டு கழித்து ஜாலியன்வாலா பாக் படுகொலையைத் தொடர்ந்து அது தகர்ந்தது என்றாலும் – வன்முறைக்காக ஆயுதம் ஏந்தியவர்கள் வன்முறையற்றவர்களாக மாறக்கூடும்; கோழைகளுக்கு எதிர்காலம் இல்லை என்று அவர் நம்பினார். நண்பர் ஒருவருக்கு அவர் எழுதினார்:

‘எனது ஆட்சேர்ப்பு வேலையை நீங்கள் பார்த்துக் கொண்டிருந்திருப்பீர்கள். என்னுடைய அனைத்து செயல்பாடுகளிலும், அதுவே மிகவும் கடினமானது, மிக முக்கியமானது என்று நான் கருதுகிறேன். நான் அதில் வெற்றி பெற்றால், உண்மையான சுயராஜ்யம் உறுதி செய்யப்படும்’ (பிரஞ்சிவன் மேத்தாவிற்கு எழுதிய கடிதம் 1918 ஜூலை 2).

ஆயினும் காந்தி போரில் பங்கேற்பது, அவரது நண்பர்கள் மற்றும் அபிமானிகள் பலருக்கும் புதிராகவே இருந்தது. அந்த நேரத்தில் தனது ஆற்றல்களை அவர் அளவிற்கு மீறிச் செலவழித்தார் என்பது தெளிவாகிறது. ஏறத்தாழ பத்தாண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய செயல்களை விளக்கும் போது, போரில் தன்னைப் பங்கேற்கத் தூண்டியதன் பின்னிருந்த கலவையான நோக்கங்களை அவர் ஒப்புக் கொண்டார்: ‘சேவைகளின் மூலம் அதிகாரத்தைப் பெறுதல் என்ற புரிந்து கொள்வதற்குக் கடினமான வாதம்’ மற்றும் ‘பேரரசின் ஆட்சியாளர்களின் நல்லெண்ணத்தைப் பயன்படுத்தி சுயராஜ்யத்திற்குத் தகுதி பெறுவது’ என்ற முறையில், தன்னுடைய வாழ்வா, சாவா போராட்டத்துடன் அவர் பேரரசிற்குச் சேவை செய்ய வேண்டியிருந்தது. போருக்கு எதிரான தன்னுடைய எதிர்ப்பு இப்போது போலவே அப்போதும் வலுவாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டார். ‘அவற்றைச் செய்வதற்கு எதிரானவர்களாக நாம் இருந்தாலும், இந்த உலகில் நாம் செய்வதற்கான பல விஷயங்கள் இருக்கின்றன என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும்’ என்றும், ‘இன்றிருப்பதைப் போல அகிம்சை கிளர்ச்சியாளராக இருந்திருந்தால், நிச்சயமாக [போர் முயற்சியில்] நான் உதவி செய்திருக்கக் கூடாது’ என்றும் அவர் குறிப்பிட்டார் (எம்.கே. காந்தி 1928).

C:\Users\Chandraguru\Pictures\Hind-Swaraj.jpg

தனது ஆரம்பகாலப் படைப்பான ஹிந்த் ஸ்வராஜ் மற்றும் பின்னர் அதனை அடைவதற்கான வழிமுறைகளைப் பற்றி எழுதியவற்றுடன், அவர் மேற்கொண்ட ஆட்சேர்ப்பு முயற்சிகளுக்கான காரணங்கள் முரண்படுகின்றன அல்லது அவற்றைத் தரம் தாழ்த்துவதாக இருக்கின்றன. இத்தகைய முரண்பாடுகளுடன், அன்னி பெசன்ட், முகம்மது அலி ஜின்னா போன்ற தேசிய தலைவர்களிடமிருந்தும் மற்றும் தன்னுடைய முறையீடுகள் அனைத்தையும் மறுத்த மக்களிடமிருந்தும் அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். ஆகவே, போருக்கான ஒப்புதலை அனுமதித்தது மட்டுமல்லாமல், அதற்காக தீவிரமாக ஆட்சேர்ப்பு செய்ததன் விளைவாக, உணர்வு மற்றும் உடல்ரீதியான முழுமையான பாதிப்பிற்கு தன்னை அவர் இட்டுச் சென்றார் என்று கூறுவது மிகையாகாது.

அவரது முயற்சிகளுக்கு எதிராக சார்லி ஆண்ட்ரூஸ் வலுவான வாதத்தை முன்வைத்தார். காந்தி தன்னையே ஏமாற்றிக் கொண்டிருப்பதாகவும், ‘அகிம்சைக்கான அவரது சேவையை, இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை காயப்படுத்தி விடக்கூடும்’ என்றும் அவர் குறிப்பிட்டார். நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் காந்தி தனது நிலையை சுருக்கமாகக் கூறியிருந்தார். அந்தவொரு காரணத்திற்காக மட்டுமே தன்னுடைய நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அவர் வலியுறுத்தியிருந்தார். அதுதான் அகிம்சை என்று தவறாக நம்பி, தம்மைப் பின்பற்றுபவர்கள் மனிதத்தன்மையற்றவர்களாக இருந்ததாக அவர் அஞ்சினார்.

‘தாக்குதலுக்கான முழுஅளவிலான திறனைக் கொண்டிருக்க விரும்பிய நாம், பின்னர் மிருகத்தனமான ஆற்றலின் இயலாமையை உணர்ந்து அதிகாரத்திலிருந்து பின்வாங்குகிறோம்’ (எஸ்.கே.ருத்ராவிற்கு எழுதிய கடிதம் 1918 ஜூலை 29).

ஆண்ட்ரூஸுக்கு காந்தி எழுதிய நீண்ட கடிதம், சித்திரவதைக்குள்ளான அவரது மனதை வெளிப்படுத்திக் காட்டுகிறது. ஆண்ட்ரூஸ் எழுதிய கடிதங்களுக்கான ஏற்புடன் அவரது கடிதம் தொடங்குகிறது. பின்னர் தனது உடல்நிலையைப் பற்றி வேதனையுடன் அவர் வெளிப்படுத்துவது, உணர்வு பாதிப்பின் விளிம்பில் உள்ள ஒருவரைக் காட்டுவதாகவே இருக்கிறது. ‘அந்த கடினமான சிந்தனை [ஆட்சேர்ப்பு குறித்த] என் உடல் அமைப்பின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நான் யாருடனும் பேச விரும்பவில்லை. எதையும், என்னுடைய இந்த எண்ணங்களையும்கூட நான் எழுத விரும்பவில்லை’. இந்தியாவின் புகழ்பெற்ற போர்களை, கீதையை (வெறும் உருவகமானது என்று அவர் கூறினார்) எடுத்துக்காட்டி, வன்முறையை வக்கிரமாக நியாயப்படுத்தி தான் ஏன் போரை ஆதரிக்கிறேன் என்பதை அவர் விவரிக்க முயற்சித்திருந்தார் (சி.எஃப் ஆண்ட்ரூஸுக்கு எழுதிய கடிதம் 1918 ​​ஜூலை 6). காந்தியின் ஆட்சேர்ப்பு முயற்சிகள் பற்றிய மற்றொரு குறிப்பில், ஆண்ட்ரூஸ் இவ்வாறு பிரதிபலித்திருந்தார்.

அவரைப் பொறுத்தவரை, அது என்னால் விவரிக்க முடியாததாக இருக்கிறது. ஏனென்றால் உடலின் ஆற்றலை விட தார்மீக ஆற்றலின் மீது அவர் அதிக நம்பிக்கை கொண்டவர். அந்த நேரத்தில் அது என்னை மிகவும் வேதனைப்படுத்தியதாலும், அவரை நேரடியாக உயிருக்கே ஆபத்தான மற்றொரு நோய் தாக்கி முழுமையான உடல் பலவீனத்தை ஏற்படுத்தியதாலும், அந்த முரண்பாட்டை நான் குறிப்பிட்டுள்ளேன். (டேவிட் 1989: 55–56).

தனது தென்னாப்பிரிக்க பழைய நண்பரான புளோரன்ஸ் விண்டர்பாட்டமுக்கு 1918ஆம் ஆண்டு ஜூன் 7 அன்று எழுதிய கடிதத்தில், தான் சோதனைகளைக் கடந்து செல்வதாக அவர் ஒப்புக்கொண்டிருந்தார்.

என் வாழ்வின் கடுமையான சோதனைகளைக் கடந்து சென்று கொண்டிருக்கிறேன்… சண்டையிடுவதற்காகவும், தங்களைப் போலவே அப்பாவிகளாக தாங்கள் அறிந்திருந்தவர்களுக்கு மரணத்தை ஏற்படுத்துவதற்காகவும் மனிதர்களை உருவாக்க விரும்பினேன். இந்த ரத்தக் கடல் வழியாக என் புகலிடத்தைக் கண்டுபிடிப்பேன் என்ற கற்பனை கொண்டவனாக இருந்தேன்… கொலை செய்வதற்கான கோழைத்தனத்துடனான மனிதர்களை நான் காண்கிறேன். அவர்களுக்கு எவ்வாறு கொலை செய்யாதிருப்பதன் நற்பண்புகளை நான் சொல்லித் தருவது? அதனால் கொல்லும் கலையை அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்! இது எல்லாம் மிகமோசமானதாக இருக்கிறது… சில சமயங்களில் ஏமாற்றம் அடைந்திருப்பதாக நான் எனக்குள்ளேயே உணர்வதால், இவையனைத்தையும் தூக்கி வெளியே வீசி எறிந்துவிட்டு, மௌனமாக இருப்பது மற்றும் ஓய்வு பெறுவதன் மூலம் ஆறுதல் அடைய விரும்புகிறேன் (கிரீன் 1993: 14).

முடிவுரை

காந்தியின் உடல்நலம் சரிந்ததற்கான  காரணமாக காந்தியின் பேரனும், வாழ்க்கை வரலாற்றாசிரியருமான ராஜ்மோகன் காந்தி இவ்வாறு குறிப்பிடுகிறார்:

கடுமையான வெப்பம், விவசாயிகளுடன் அவருக்கு ஏற்பட்ட தோல்வி, இவையனைத்திற்கும் மேலாக, தனது வாழ்க்கைக்கான செய்தியாக அவரும், அவருடைய நெருங்கிய கூட்டாளிகளும் உணர்ந்திருந்த அகிம்சைக்கும், அவருடைய ராணுவ ஆட்சேர்ப்பு நடவடிக்கை ஆகியவற்றிற்கு இடையிலான மோதலினால்… உடல், மனம் மற்றும் ஆன்மா அளவில் சோர்ந்து போன அவர் மனக்கலக்கம் அடைந்தார் (ஆர் காந்தி 2006: 215).

அவரது நண்பரும், உயிரியலாளருமான எச் என் பிரெயில்ஸ்போர்ட் காந்தியின் ராணுவ ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் அவரது வாழ்க்கையில் நடந்த மிகவும் குழப்பமான சம்பவங்களில் ஒன்றாகும் என்று கூறுகிறார். மேலும் ‘தான் உணர்ந்ததை விட, போர்க்காலத்தில் தன்னுடைய நடத்தை மீதிருந்த உள்மோதல் மிகவும் ஆழமாக அவரிடம் இருந்திருக்கலாம். ராணுவ ஆட்சேர்ப்பு செய்யும் போது 1914இல் லண்டனிலும், 1918இல் கைராவிலும் [கெடா] என்று இரண்டு முறை  அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது’ (போலாக் மற்றும் பலர் 1949: 124, 125).

தனது 2018ஆம் ஆண்டு ஆய்வறிக்கையில் 1918 காய்ச்சல் தொற்றுநோய் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு வரலாற்றாய்வாளர்களை டேவிட் அர்னால்ட் வலியுறுத்தியபோது, ​​ தன்னுடய அந்த அறிவுரை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கோவிட்-19 பேரழிவிற்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கப் போகிறது என்பதை அறிந்திருக்க மாட்டார். 1918ஆம் ஆண்டின் (மறந்து போன) துன்பத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இருப்பதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன (கோலாட்டா 2020). எதிர்பார்த்ததைவிடக் குறைவாக காந்தி ஸ்பானிஷ் காய்ச்சலுடன் தொடர்பு கொண்டிருந்ததை வைத்து, தனிப்பட்ட முறையில் அவரைப் பற்றி அல்லது தேசியவாத இயக்கத்தில் அவர் தலைமைப் பொறுப்பு பற்றி நம்மால் எதையாவது கற்றுக் கொள்ள முடியுமா?

C:\Users\Chandraguru\Pictures\Gandhi and ehru.jpg

அந்தக் காலகட்டத்தில் தனது பொது சொற்பொழிவிலும், பத்தாண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்ட தனது சுயசரிதையிலும் அந்த தொற்றுநோயைப் பற்றி காந்தி குறிப்பிடாது விட்டுவிட்டார் என்று நமக்கு காட்டப்படுகிறது. ஆயினும், இந்த விஷயத்தில் இந்திய முன்னணி அரசியல் தலைவர்களில் தனக்கு வந்த நோயைக் கையாண்ட காந்தி மட்டுமே அவ்வாறானவராக இருந்திருக்கவில்லை. 1916இல் தனது அரசியல் வாழ்க்கையை ஜவஹர்லால் நேரு தொடங்கினார். போர் முடிவடைந்த பின்னர், சுதந்திரத்தை நோக்கி (1958) என்ற தனது சுயசரிதையிலும், அதற்குப் பின்னர் எழுதிய டிஸ்கவரி ஆஃப் இந்தியா (1967) புத்தகத்திலும் அந்த முக்கியமான காலகட்டத்தை அவர் நினைவு கூர்ந்த போதிலும், 1918ஆம் ஆண்டு தொற்றுநோயைப் பற்றி  குறிப்பிடுவதற்கு அவர் தவறி விட்டார்5 அவ்வாறு விடுபட்டுப் போனது உண்மையில் விசித்திரமாக உள்ளது. அந்தக் காலகட்டத்தை மிகவிரிவாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் விளைவாக இந்தியாவிற்கு ஏற்பட்ட பொருளாதாரம் மற்றும் உளவியல் ரீதியான இழப்பைக் கூறுவதாகவே நேரு முன்வைத்திருந்தார். சமுதாயத்தின் அனைத்து அடுக்குகளிடையேயும் உருவாகியிருந்த இன்னல்களையும், காலனித்துவத்தால் நேரடியாக ஏற்படுத்தப்பட்டிருந்த சிக்கல்கள் மற்றும் தோல்வி மனப்பான்மையையும் அவர் சுட்டிக்காட்டி அவற்றில் உள்ளடக்கியிருந்தார். அதற்குப் பின்னர், இந்த புதிரான கருத்தை அவர் வெளியிட்டிருக்கிறார்.

ஆழமாக அரித்து, நுரையீரலின் திசுக்களை உட்கொண்டு மெதுவாக ஆனால் தவிர்க்க முடியாமல் கொல்லும் நோயைப் போல, இந்தியாவின் உடல், ஆன்மா, நமது கூட்டு  வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் இந்த விவகாரம் பாழ்படுத்தியுள்ளது. காலரா அல்லது புபோனிக் பிளேக் போன்று விரைவான மற்றும் வெளிப்படையான விவகாரமாக அது இருந்தால் நன்றாக இருக்கும் என்று சில நேரங்களில் நாம் நினைத்தோம்; ஆனாலும் அந்த எண்ணம் பொருந்தாத ஒன்றாகவே இருந்தது… பின்னர் காந்தி வந்தார் (1967: 379).

1918ஆம் ஆண்டு தொற்றுநோயைப் பற்றி இங்கே குறிப்பிடுவதன் மூலம், அரசாங்கத்தின் மீதான தனது குற்றச்சாட்டுக்களை வலுப்படுத்துவதைத் தவறவிடுவது மட்டுமல்லாமல், அந்தக் காய்ச்சல் தொற்றுநோயால்  நிகழ்ந்தவற்றை நினைவுபடுத்தாமலேயே, அந்த நோய் நிகழ்ந்ததாகக் குறிப்பிட நேரு மறைமுகமாக விரும்புவது புதிராக இருக்கிறது. அவரிடமிருந்த மறதி நோய் முழுமையானதாக இருக்கிறது. நேருவைப் போல 1918ஆம் ஆண்டு தொற்றுநோயை காலனித்துவம் ஏற்படுத்திய தாக்கத்துடன் காந்தி ஒருபோதும் தொடர்புபடுத்தவில்லை என்பது இங்கே கவனிக்க வேண்டிய மற்றொரு முரண்பாடாக உள்ளது.

இது நம்மை எங்கே விட்டுச் செல்கிறது? ஸ்பின்னியின் கூற்றுகளைப் பொருட்படுத்தாமல் பார்த்தால், இன்ஃப்ளூயன்ஸாவால் இல்லாமல், வயிற்றுப்போக்கு, மன அழுத்தம், மனச்சோர்வாலேயே அது ஏற்பட்டிருந்தது. மூலத்திற்கான அறுவை சிகிச்சை, குறிப்பாக அந்த நோய் ஆசிரம உறுப்பினர்களின் மன உறுதியைக் குலைத்து, நெருங்கிய உறவினர்களின் மரணத்திற்கு வழிவகுத்ததால், அவை காந்தியின் மனதை வழக்கமாக முக்கியத்துவம் அளித்து வந்த விஷயங்களிடமிருந்து தள்ளி வைத்து விட்டன. நேரு, இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரசபைகள் மற்றும் அரசாங்கத்தின் வரலாற்றாசிரியர்கள் அனைவரையும் போலவே, காந்தியும் ஏறக்குறைய தன்னைச் சுற்றிப் பரவி வந்த அந்த தொற்றுநோயைப் புறக்கணித்தார். அவ்வாறு செய்வதற்கு கூடுதலான காரணங்கள் அவரிடம் இருந்தன.

குறிப்புகள்

[1] தனது அன்புக்குரியவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோயால் இழந்ததால் ஏற்பட்ட பேரழிவு குறித்த செய்திகளுக்கு காந்தி ஆற்றிய சில எதிர்வினைகள் இதயமற்ற செயலாகத் தோன்றினாலும், பின்னர் தனது மகன் ஹரிலாலுக்கு ஏற்பட்ட சோகத்தை ஒப்புக் கொண்டதுடன், அது தன்னைத் துன்புறுத்தியதாகவும் அவர்  ஏற்றுக் கொண்டார். 1918 ஜூன் 7இல் புளோரன்ஸ் விண்டர்போட்டமுக்கு எழுதிய கடிதத்தைத் தவிர்த்து, காந்தியின் கடிதங்கள் அனைத்தும், அந்தந்த தேதியில் மகாத்மா காந்தியின் சேகரிக்கப்பட்ட படைப்புகளில் அமைந்துள்ளன.

[2] இந்த நோய்க்கு அதிகாரிகள் எதிர்வினையாற்றவில்லை என்றாலும், பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டன.

[3] இந்த சொல் இப்போது பொருள் இழந்து விட்டது. அது அன்றாட வாழ்க்கையில் திருப்திகரமான செயல்பாட்டைத் தடுக்கின்ற உணர்ச்சி மற்றும் உடல்ரீதியான அழுத்தத்தை விவரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது. பொதுவாக கூறப்படும் அறிகுறிகள் காந்தியால் கூறப்பட்ட அறிகுறிகளை ஒத்து இருப்பதாகத் தெரிகிறது.

[4] பசுவை மனதில் கொண்டு அவர் இனி பால் பொருட்களை உட்கொள்வதில்லை என்று சபதம் மேற்கொண்டு, ஆடுகளிடம் இருந்து பால் எடுத்துக் கொள்வது என்று தார்மீக ரீதியாக ஓரளவு திருப்தியற்ற முடிவை எடுப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பாக இந்தக் கடிதங்கள் எழுதப்பட்டன.

[5] ‘சுதந்திரத்தை நோக்கி’ என்ற நூலில், 1916 டிசம்பரில் காந்தியுடனான தனது முதல் சந்திப்பை நேரு பதிவு செய்த பிறகு, 1918ஐப் பற்றி அவர் சுருக்கமாகக் குறிப்பிடுகிறார். அந்த 1918ஆம் ஆண்டு குறித்து டிஸ்கவரி ஆஃப் இந்தியாவில் அவர் எழுதிய உணர்வுப்பூர்வமான கருத்துக்கள் வேறாக இருக்கின்றன. அதில் அவர் ஏகாதிபத்தியத்தின் அழிவாற்றலை விவரிக்கிறார். அதைத் தொடர்ந்து எந்தவொரு இந்தியத் தலைவரையும் விட காந்தியின் செயல்திறன் மிக்க ஆற்றல் குறித்து நேர்த்தியான பகுப்பாய்வை முன்வைக்கிறார். இந்த இரண்டு ஆதாரங்களிலும் 1918 தொற்றுநோய் பற்றி அவர் எதுவுமே குறிப்பிடவில்லை.

மேற்கோள்கள்
Abrams, Allison (2020): “What Is a Nervous Breakdown? The Meaning of the Term and Its Clinical Significance Today,” viewed on 5 May 2020, www.verywellmind.com/what-is-a-nervous-breakdown-4172381.
Andrews, C F (1929): Mahatma Gandhi’s Ideas: Including Selections from His Writings, London: Allen and Unwin.

Arnold, David (2019): “Death and the Modern Empire: The 1918–19 Influenza Epidemic in India,” Transactions of the Royal Historical Society, Vol 29, pp 181–200.

Brown, Judith M (1972): Gandhi’s Rise to Power: Indian Politics 1919–1922, London: Cambridge University Press.

— (1989): Gandhi Prisoner of Hope, New Haven: Yale University Press.

Barry, John N (2004): The Great Influenza: The Story of the Deadliest Pandemic in History, New York: Penguin.

Cohn, Samuel K (2018): Epidemics: Hate and Compassion from the Plague of Athens to AIDS, Oxford: Oxford University Press.

Dalal, C B (1971): Gandhi: 1915–1948: A Detailed Chronology, New Delhi: Gandhi Peace Foundation.

David, Gracie Mcl (ed) (1989): Gandhi and Charlie: As Told through the Letters and Writings of Mohandas K Gandhi and the Rev’d Charles Freer Andrews, Cambridge, MA: Cowley Publications.

Desai, Mahadev H (1968): Day-to-Day with Gandhi [Secretary’s Diary], Vol 1, Rajghat, Varanasi: Sarva Seva Sangh.

Erikson, Erik H (1969): Gandhi’s Truth: On the Origins of Militant Nonviolence, New York: Norton.

Gandhi, Arun and Sunanda Gandhi (1998): The Forgotten Woman: The Untold Story of Kastur Gandhi, Wife of Mahatma Gandhi, Huntsville, A R: Ozark Mountain Publishers.

Gandhi, M K (1905a): “Plague in India,” Indian Opinion, 3 June.

— (1905b): “Measures to Eradicate Plague in India,” Indian Opinion, 7 June.

— (1919): “Letter to the ‘Times of India’,” 20 August.

— (1928): “Still At It,” Young India, 15 March.

— (1958–1994): The Collected Works of Mahatma Gandhi, Publications Division, Government of India, New Delhi, Vols 1–100.

— (1940): An Autobiography or the Story of My Experiments with Truth, Ahmedabad: Navajivan.

— (2018): An Autobiography or the Story of My Experiments with Truth: A Critical Edition, introduced and annotated by Tridip Suhrud, Newhaven: Yale University Press.

Gandhi, Rajmohan (2006): Mohandas: A True Story of a Man, His People and an Empire, New Delhi: Penguin/Viking.

Green, Martin (1993): Gandhi: Voice of a New Age Revolution, New York: Continuum.

Huizen, Jennifer (2018): “What Are the Signs of a Nervous  Breakdown?”  www.medicalnewstoday.com/articles/321018,  viewed on 5 May 2020.

Kolata, Gina (2020): “Pandemics End with a Bang or a Whimper,” New York Times, 11 May.

Krishna, Shyam A (2020): “How the Spanish Flu Changed the Course of Indian History: Gandhi Survived the Pandemic that United Indians against the British,” Gulf News, 15 March, viewed on 30 April 2020,  gulfnews.com/opinion/op-eds/.

Masselos, Jim (2006): The City in Action: Bombay Struggles for Power, New Delhi: Oxford University Press.

Nayar, Sushila (1993): Mahatma Gandhi, Vol V: India Awakened, Ahmedabad: Navajivan.

Nehru, Jawaharlal (1967): Discovery of India, Bombay: Asia Publishers.

— (1958): Toward Freedom, Boston: Beacon Press.

Polak, H S L, H N Brailsford and Lord Pethick-Lawrence (1949): Mahatma Gandhi, London: Odhams Press.

Prasad, Rajendra (1961): At the Feet of Mahatma Gandhi, Westport, Con: Greenwood.

Satyalakshmi, Komarraju (2019): “Mahatma Gandhi and Nature Cure,” Indian Journal of Medical Research, Vol 49, No 7, pp 69–71.

Spinney, Laura (2017): Pale Rider: The Spanish Flu of 1918 and How It Changed the World, London: Jonathan Cape.

Steger, Manfred (2000): Gandhi’s Dilemma: Nonviolent Principles and Nationalist Power, New York: St Martin’s Press.

Tendulkar, D G (1960): Mahatma: Life of Mohandas Karamchand Gandhi, Vol 1, New Delhi: Publications Division, Ministry of Information and Broadcasting, Government of India.

தாமஸ் வெபர்

(t.weber@latrobe.edu.au)

லா ட்ரோப் பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் மற்றும்

மனிதநேய பள்ளியில் கௌரவ உதவியாளர்

டென்னிஸ் டால்டன்

(ddalton@barnard.edu)

கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பர்னார்ட் கல்லூரியில்

அரசியல் அறிவியல் / அரசியல் கோட்பாட்டில் சிறப்பு பேராசிரியர்

https://www.epw.in/journal/2020/25/perspectives/gandhi-and-pandemic.html

Leave a Response