Book Reviewநூல் அறிமுகம்

நூல் அறிமுகம்: அழிவும் அல்லலும் – பாவண்ணன்

Spread the love

 

11.03.2011 அன்று ஜப்பானில் ஃபுக்குஷிமா நகரில் ஒரே சமயத்தில் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும் ஏற்பட்டன. அதைத் தொடர்ந்து கடற்கரை ஓரமாக மின்சார உற்பத்திக்காக அமைக்கப்பட்டிருந்த நான்கு அணு மின்உலைகள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின.

78 நில அதிர்வுகளோடு தொடங்கிய முதல் நிலநடுக்கம் மறுநாள் 148 நில அதிர்வுகளாக உயர்ந்தது. ஒவ்வொரு நாளும் நிலம் நடுங்கிக்கொண்டே இருந்தது. நிலம் அதிராத நாள் வருவதற்கு ஜூன் 8 வரை அந்த நகரம் காத்திருக்கவேண்டி இருந்தது.

மார்ச் 11 நிலநடுக்கத்தில் தகர்ந்து விழுந்த ஆயிரக்கணக்கான வீடுகளில் எழுத்தாளர் மிக்காயேல் ஃபெரியேவின் வீடும் ஒன்று. மார்ச் 15அன்று பாரீஸில் தொடங்கவிருந்த புத்தகக்கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக பயணச்சீட்டு வாங்கிவைத்திருந்தார் அவர். நிலநடுக்கத்தின் காரணமாகவும் கதிர்வீச்சின் காரணமாகவும் மக்கள் கூட்டம்கூட்டமாக நகரைவிட்டு வெளியேறிக்கொண்டிருந்தனர். கண்காட்சிக்குச் செல்லவிருந்த பயணத்தை ரத்து செய்துவிட்டு, தன் துணைவியாருடன் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று தகவல்களைத் திரட்டித் தொகுக்கத் தொடங்கினார் ஃபெரியே. ஃபுக்குஷிமோ மட்டுமன்றி, பாதிக்கப்பட்ட எல்லா நகரங்களுக்கும் சென்று ஒவ்வொன்றையும் நேரில் பார்த்தார். பல மாத அலைச்சல்களுக்குப் பிறகு, ஊர் திரும்பி பார்த்த காட்சிகளையும் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து திரட்டிய தகவல்களையும் தொகுத்து ஓர் ஆவணத்தை உருவாக்கினார்.  அனுபவக்குறிப்புகளால் ஆன அந்த ஆவணமே ’ஃபுக்குஷிமா – ஒரு பேரழிவின் கதை’ என்னும் நூல்.

11.03.2011 அன்று நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அணு உலைகள் ஓவ்வொன்றாக தானாகவே செயலிழக்கத் தொடங்கின. அதைத் தொடர்ந்து மின்சார உற்பத்தி நின்றது. மின்சாரம் நின்றதும் நெருக்கடி கால டீசல் ஜெனரேட்டர்கள் தாமாகவே இயங்கத் தொடங்கின. அதன் விளைவாக குளிரூட்டும் எண்ணெய் தானாகவே அணு உலைகளுக்குள் பாய்ந்துசெல்லத் தொடங்கின. அணுப்பிளவு நிற்கும்போது உருவாகும் அதிக வெப்பநிலையைக் குளிர்விப்பதற்காக இந்த எண்ணெய் பாய்ச்சப்படுவது வழக்கம். பதினான்கு மீட்டர் அளவுக்கு உயர்ந்தெழுந்த கடலலைகள் அணு உலைக்கூட சுற்றுச்சுவரைக் கடந்துசென்று உலைகளைத் தாக்கின. கடல்நீர் நிரம்பியதால் மூன்று உலைகள் செயலிழந்து அடுத்தடுத்து உருகி வெடித்தன. ஹைட்ரஜன் வாயு அதிக அளவில் செறிவூட்டம் அடைந்த நிலையில் அவை வெடித்துச் சிதறின.

Chernobyl: Was Fukushima nuclear disaster WORSE than 1986 disaster ...

உலைகளின் வெப்பத்தைத் தணிப்பதற்காக சாதாரண தீயணைப்புக்கருவிகளின் உதவியோடு உலைகளின் மீது தண்ணீரை அணு உலை ஊழியர்கள் பீய்ச்சியடித்தனர். ஆனால் அம்முயற்சியினால் பெரிய பயனெதுவும் ஏற்படவில்லை. மூன்று உலைகளைத் தொடர்ந்து நான்காவது உலை அணுக்கரு பிளவின் காரணமாக வெடித்துச் சிதறியது. ஏறத்தாழ நாற்பது மீட்டர் விட்டத்தில் 210 மீட்டர் உயரத்துக்கு துகள்கள் பறந்து சென்றன. நாற்பது கிலோமீட்டர் தொலைவு வரைக்கும் அந்த வெடிச்சத்தம் எதிரொலித்தது. அடுத்த நொடியே கதிர்வீச்சு எழுந்து நான்கு திசைகளிலும் பரவியது. உலைகளைச் சுற்றி இருபது கிலோமீட்டர் தொலைவு வரைக்கும் வாழ்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டார்கள். ஜப்பான் அரசர் தொலைக்காட்சியின் தோன்றி மக்களுக்கு ஆறுதல் கூறி பிரச்சினையை எதிர்கொண்டு அரசுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

நிலநடுக்கம் ஜப்பான் தேசத்துக்குப் புதிதல்ல. கி.பி.901 ஆம் ஆண்டில் முடியாட்சியின்போது முதல் நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு மாத காலம் வரைக்கும் அது நீடித்ததாக வரலாற்றுக்குறிப்புகள் காணப்படுகின்றன. அதைத் தொடர்ந்து பல நிலநடுக்கங்கள் பல கட்டங்களில் ஏற்பட்டிருக்கின்றன.. மார்ச் 11 அன்று நிகழ்ந்த நிலநடுக்கம் முன்பு எப்போதுமில்லாத அளவுக்கு கடுமையானதாக இருந்தது.

நிலநடுக்கங்கள், ஆழிப்பேரலைகள் ஆகிய இயற்கை இடர்களின் வருகையை முன்கூட்டியே உணர்வதற்காக வான், கடல், நிலம் என அனைத்து வழிகளிலும் மிகச்சிறந்த கண்காணிப்பு அமைப்புகள் செயல்பட்ட போதும், அவை எதுவும் புக்குஷிமாவில் அன்றைய தினத்தில் பயனளிக்கவில்லை. ஏராளமான சென்சார்களை நிலநடுக்கம் அழித்துவிட்டது. வெள்ளத்தில் சில சேதமடைந்தன. மற்ற ஆய்வுக்கருவிகள் அனைத்தும் செயலிழந்துவிட்டன. அறிவியலைப் புறந்தள்ளிவிட்டு இயற்கை தன் ஊழிக்கூத்தைத் தொடங்கியது.

நிலநடுக்கம் ஏற்பட்டபோது ஜப்பான் பாராளுமன்றம் இயங்கிக்கொண்டிருந்தது. அந்த மாபெரும் கட்டடத்தில் கூரையில் உயரத்தில் தொங்கிய ஸ்படிகக்கொத்துவிளக்கு அசைந்து நடுங்கிய பிறகே நடுக்கத்தை அனைவரும் உணர்ந்தார்கள். மருத்துவமனைகள், முதியோர் இல்லங்களில் இருக்கும் சக்கரநாற்காலிகள் தாமாகவே ஓடத் தொடங்கின. மேசைகள், நாற்காலிகள், மூங்கில் சுவர்கள் அனைத்தும் சரிந்து விழுந்தன.

நிலநடுக்கத்தால் சாலைகள் அனைத்தும் ஒரே நொடியில் தகர்ந்துவிட்டன. எதுவும் பயன்படுத்தும் நிலையில் இல்லை. நகரத்தைவிட்டு வெளியேறும் மக்களுக்கு இது ஒரு பெரிய இடர்ப்பாடாக இருந்தது. மீட்புப்பணியாளர்கள் இன்னும் கூடுதலான இடையூறுகளை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, பாதுகாப்புக்கவசங்கள், தங்குமிடம் என அனைத்தையும் அவரவர்களே சமாளித்துக்கொள்ள வேண்டியிருந்தது. கதிரியக்கத்தைக் கணக்கிடும் கருவிகள் கூட மிகுந்த குறைவான எண்ணிக்கையிலேயே பணியாளர்களுக்கு வழங்கப்பட்டன.

ஃபுக்குஷிமா அணுஉலை வெடிப்பு: 6-ம் ...

புக்குஷிமா நகரத்தில் மட்டுமல்ல, அதைச் சுற்றியிருந்த நோடா, தாரோ, யொகோஸுக்கா, கனாகாவா, தொஹோ, ஷிபாக்கேன், அசாஹி-ஷி, கெசெனுமா, ரிக்கூஸெண்டாகாட்டா போன்ற மாவட்டப்பகுதிகளிலும் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும் தாக்குதல் நிகழ்த்தியிருந்தன. ஆழிப்பேரலையின் தாக்குதல் மணிக்கு 360 கி,மீ. வேகம் கொண்டதாக இருந்தது.  புக்குஷிமாவில் கூடுதலாக அணு உலை விபத்து ஏற்பட்டதால் அந்நகரம் உலக கவனத்தைப் பெற்றுவிட்டது. ஆனால் எல்லா நகரங்களிலும் அழிவு ஒரே அளவிலேயே இருந்தது.

இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர். அவர்களுடைய உடல்கள் கிடைக்காததால் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டு எரியூட்டப்பட்டன. ஏறத்தாழ ஒரு லட்சம் கட்டடங்கள் வெள்ளத்தாலும் தீயாலும் சேதமடைந்தன. பத்துக்கும் மேற்பட்ட சிறிய, பெரிய கிராமங்களையும் 16 நகரங்களையும் ஆழிப்பேரலை அடித்துச் சென்றுவிட்டது. மினாமி சான்றி கூ போன்ற நகரங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. 23 ரயில்நிலையங்கள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. பல நகர்மன்றங்கள், காவல் நிலையங்கள், கட்டுப்பாட்டு மையங்கள் அழிந்தன. கடலோரப்பகுதிகளில் தங்கியிருந்த நகராட்சி ஊழியர்களும் காவல் துறையினரும் மடிந்துபோயினர். சவக்கிடங்குகளில் ஏராளமான உடல்கள் குவிந்துகொண்டே இருந்தன. மின்மயானங்களை  பழுது நீக்கி இயங்கவைக்க கால அவகாசம் தேவைப்பட்டது. இடைப்பட்ட சமயத்தில் வந்து குவிந்த பிணங்களிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. அலைகளால் அடித்து இழுத்துவரப்பட்ட படகுகளும் கார்களும் மோதி உடைந்து கல்லறைகளை நிரப்பியிருந்தன. இதனால் அருகிலிருந்த விவசாய நிலங்களிலேயே தற்காலிகமாக அகழும் எந்திரங்களால் பள்ளமெடுக்கப்பட்டு ஆழத்தில் உடல்கள் புதைக்கப்பட்டன.

கெசெனுமா துறைமுகப்பகுதியில் கண்ட காட்சிகள் தம் மனத்தை மிகவும் பாதித்ததாக தன் ஆவணத்தில் குறிப்பிடுகிறார் ஃபெரியே. ஜப்பானின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்று கெசெனுமா. ஆழிப்பேரலையில் துறைமுகத்தில் நின்றிருந்த எல்லாக் கப்பல்களும் உடைந்து நொறுங்கி தீக்கிரையாகி விட்டன. அந்த இடம் இரு நாட்கள் தொடர்ச்சியாக தீப்பிடித்து எரிந்தது. கடல்முழுதும் நெருப்புக்குழம்பாக காட்சியளித்ததென கெசெனுமாவின் வசித்தவர்கள் சொன்னதாகக் குறிப்பிடுகிறார் ஃபெரியே. அங்கிருந்த இரும்பு உருக்காலைகள், மீன்பிடித் துறைகள் அனைத்துமே அழிந்துவிட்டன. புதிர்விளையாட்டுப் பாகங்களை மாற்றிப் போட்டதுபோல, நிலநடுக்கம் கான்கிரீட் பாகங்களை முறுக்கி திசைமாற்றி வளையவைத்துவிட்டன என்று குறிப்பிடுகிறார் ஃபெரியே. அங்கிருந்த மேம்பாலங்கள் எங்கோ வெகுதொலைவுக்குச் சென்று சரிந்திருந்தன. படகுகள் நிலத்திற்குள் புதைந்திருந்தன. பல படகுகள் கடலுக்குள் வெகுதொலைவு அடித்துச் செல்லப்பட்டிருந்தன.

The True State of the Fukushima Nuclear Power Plant Accident ...

கடலோரம், பாதையோர வயல்வெளிகள், குளங்கள் என எங்கு பார்த்தாலும் அலைகளால் அடித்துவரப்பட்ட கார்கள் மோதி உடைந்து செங்குத்தாக செருகிக்கிடந்த காட்சியைக் கண்டதாகக் குறிப்பிடுகிறார் ஃபெரியே. இந்தச் சிதைவுகளை அகற்றுவது கடுமையான உழைப்பைக் கோரும் வேலையாக இருந்தது. புல்டோசர்கள், கிரேன்கள், கன்வேயர் பெல்ட்டுகள், நீரியல் இயக்கச்சக்கரங்கள் என எண்ணற்ற கருவிகளின் துணையோடு அனைத்தும் அகற்றப்பட்டு ஒவ்வொரு நகரும் தூய்மையாக்கப்பட்டது. ஆனால் இடிபாடுகளை அகற்றி எங்கே கொட்டுவது என்பது எல்லோருக்குமே பெரிய பிரச்சினயாக இருந்தது. ஏறத்தாழ ஐந்து கிலோமீட்டர் நீளத்துக்கு ஒரு பெரிய மலையென அவை குவித்துவைக்கப்பட்டிருந்ததாக எழுதுகிறார் ஃபெரியே.

ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மற்றொரு முக்கிய நகரம் ரிக்கூஸெண்டாகாட்டா. வெண்மைநிற தொடர் கடற்கரைகளுக்கும் கறுப்புநிற பைன்மரங்களுக்கும் பெயர்போன இடம். ஏறத்தாழ ஒரு லட்சம் பைன் மரங்கள் அங்கு நின்றிருந்தன.  இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கு நீண்ட காட்டில் மட்டுமே எழுபதாயிரம் மரங்கள் இருந்தன. எல்லாமே கடலிலிருந்து முந்நூறு நானூறு மீட்டர் தொலைவில் இருந்தன.  ஒரே ஒரு மரத்தைத்தவிர மற்ற எல்லா மரங்களையும் வீழ்த்தி கடல் இழுத்துச்சென்றுவிட்டது. பேரலைகளிடமிருந்தும் காற்றிடமிருந்தும் தம்மைக் காத்துக்கொள்வதற்காகவே மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பாக அக்கிராம மக்கள் பைன் மரங்களை நட்டு வனப்பகுதியை உருவாக்கியிருந்தனர். பசிபிக் கடலில் எழுந்த பல சூறாவளிகள் இந்த வனப்பகுதியை மோதியிருக்கின்றன. அவற்றின் தாக்குதல்களிலிருந்து தப்பித்த காட்டை ஆழிப்பேரலை வந்து ஒரு நொடியில் அழித்துவிட்டது.

சவால் மிகுந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட மீட்புப்பணியாளர்கள் சந்தித்த அனுபவங்களைப்பற்றிய குறிப்புகள் மனமுருகவைக்கின்றன. அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட ஒரு சமூகம் இத்தகையோரை என்றென்றும் நினைத்திருக்கும். நகரத்தில் அப்பணியில் ஈடுபட்டிருந்த ஒரு மீட்புப்பணியாளரைத் தேடிச் சந்தித்த ஃபெரியே அவர் சந்தித்த சவால்களையும்  அவருக்கு நேர்ந்த அனுபவங்களையும் தம் ஆவணத்தில் பதிவு செய்துள்ளார்.

The Fukushima nuclear disaster | Pictures | Pics | Express.co.uk

கழிவுகள் அகற்றப்பட்டு பழைய நிலைமைக்கு நகரம் மெல்ல மெல்ல திரும்பியிருந்தாலும் கழிவின் எச்சங்கள் புதிய வடிவில் மண்ணில் நீடித்திருக்கின்றன. கண்முன் நீடித்திருக்கும் அந்த ஆபத்தைப் பார்த்தும் பாராதவர்களாக மனித சமூகம் இயங்கத் தொடங்கிவிட்டது.  எதிர்கால உலகத்தின் வாழ்வும் நலமும் கழிவு மேலாண்மையில்தான் அடங்கியிருக்கின்றன என்று துயர் தோய்ந்த வரிகளில் தன் ஆவணத்தில் குறிப்பிடுகிறார் ஃபெரியே.

ஃபெரியே விவரித்திருக்கும் குறிப்புகளில் 93 வயதான ஒரு பாட்டியின் தற்கொலை பற்றிய குறிப்பு நம்மை துயரத்தில் ஆழ்த்துகிறது. மினாமி சோமா பகுதியைச் சேர்ந்தவர் அவர். அணு உலை வெடிப்பின் காரணமாக தனிமையில் வாழ்ந்துவந்த அவர் அங்கிருந்து வெளியேறி அருகிலிருந்த தன் மகள் வீட்டில் உடனடியாக தஞ்சமடைந்தார். அங்கு உடல்நலம் குன்றியதால் மருத்துவமனையில் தங்கி மருத்துவம் பார்த்துக்கொண்டார். குணமடைந்து வீட்டுக்குத் திரும்பிய பிறகே தம் ஊரைச் சேர்ந்த அனைவரும் கதிர்வீச்சு காரணமாக வெளியேற்றப்பட்டுவிட்டனர் என்னும் செய்தியை அவர் அறிந்துகொண்டார். அச்செய்தி அவரை திகைப்பிலாழ்த்திவிட்டது. அந்தத் துயரத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். தன் செயலுக்கு விளக்கமளித்து அவர் நான்கு கடிதங்களை எழுதிவைத்திருந்தார். முதல் கடிதம் அவருடைய குடும்பத்தினருக்கு. இரண்டாவது கடிதம் அவருடைய உறவினர்களுக்கு. மூன்றாவது கடிதம் அவருடைய ஊரில் வசிப்பவர்களுக்கு. நான்காவது கடிதம் அவருடைய மூதாதையர்களுக்கு. ஒவ்வொரு கடிதமும் மனத்தை அசைக்கும் வகையில் எழுதப்பட்டிருந்தது. ’அணு உலை காரணமாக தினமும் என் இதயமே வெடித்துவிடும்போல இருக்கிறது, இந்த உளைச்சலைத் தாங்கிக்கொள்ள முடியாமல் இந்த உலகத்தைத் துறந்து கல்லறைக்குச் செல்கிறேன்’ என்று அக்கடிதத்தை முடித்திருந்தார் பாட்டி.

Panuval BookStore on Twitter: "ஃபுக்குஷிமா - ஒரு ...

பாட்டியின் அச்சம் உண்மையானது. அரசு வழங்குகிற பாதுகாப்பு உறுதிமொழிகள் எதுவுமே ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் பயனற்றுப் போய் மக்களின் உயிரையே பலிவாங்கிவிடுகிறது. முன்னேற்ற வளர்ச்சி நடவடிக்கைகள் எதுவாக இருந்தாலும், அது உண்மையிலேயே மானுட வாழ்க்கைக்கு நற்றுணையாக விளங்கவேண்டுமே தவிர, மனிதர்களின் உயிரைப் பறிப்பதாக அமைந்துவிடக் கூடாது. உயிரைவிட முன்னேற்றம் பெரிதா என்ன? தன் உயிரை மாய்த்துக்கொண்ட பாட்டியின் கடிதம் இந்தக் கேள்வியையே ஜப்பான் நாட்டின் முன் வைத்திருக்கிறது. ஃபுக்கிஷிமா அழிவுகளை சுற்றியலைந்து நேரில் கண்டும் பாதிக்கப்பட்டவர்களோடு உரையாடியும் ஆவணப்படுத்தியிருக்கும் ஃபெரியே தன் நூல் வழியாக நம்மிடம் கடத்தியிருக்கும் கேள்வியும் அதுதான். வளர்ச்சியின் பெயரால் புதிய புதிய திட்டங்கள் தொடங்கும்போதும் கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணத்தை அதற்காகச் செலவழிக்கும்போதும் அந்தப் பாட்டியின் கேள்வியை நாமும் ஒருமுறை மானசிகமாக கேட்டுக்கொள்வோம். உயிரைவிட முன்னேற்றம் பெரிதா என்ன?

(ஃபுக்குஷிமா – ஒரு பேரழிவின் கதை. பிரெஞ்சு மொழியில்: மிக்காயேல் ஃபெரியே. தமிழில்: சு.ஆ.வெங்கட சுப்பராய நாயகர். தடாகம் வெளியீடு, திருவான்மியூர், சென்னை. விலை. ரூ.200 )

பாவண்ணன் என்ற ஒர் எழுத்துப் போராளி ...

– எழுத்தாளர் பாவண்ணன் 

Leave a Response

Top Reviews

Video Widget

gallery