Book Review

நூல் மதிப்புரை: எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க – ஜே. ஷாஜஹான்| பெ. அந்தோணிராஜ்

Spread the love

1960களில் இத்தாலியில் உள்ள பார்ப்பியனா பள்ளியைச்சேர்ந்த எட்டு மாணவர்களால் ஓராண்டில் எழுதி முடிக்கப்பட்ட Letter to A Teacher என்ற ஆங்கில நூலின் அறிமுகம்தான் இந்நூல். இந்நூல் இத்தாலிய ஏழைக்குழந்தைகளின் விமர்சனமோ ஏக்கமோ மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள ஏழை மாணவர்களின் ஏக்கமும்தான்.
இது ஆசிரியருக்காக மட்டும் எழுதப்பட்டதல்ல, பெற்றோருக்காகவும், கல்வியில் அக்கறை கொண்ட ஜனநாயக இயக்கங்களுக்காகவும் எழுதப்பட்டது.

பார்ப்பியனா என்பது ஒரு இருபது வீடுகளைக்கொண்ட ஒரு மலையிடமாகும். அங்கிருந்த தேவாலயத்திற்கு1954 ல் வந்த பாதர் மிலானிதான் இப்பள்ளியின் நிறுவனர். 1967 ல் மிலானி மறைந்தபோது அப்பள்ளியும் மறைந்தது.
இத்தாலியப் பள்ளிகளின் நேரம் நண்பகல் 1.30 உடன் முடிந்து போகும். அதன் பின்னர் வசதியான வீட்டுப்பிள்ளைகள் டியூஷன் போகும். வசதியில்லாதவர்கள் அவரவருக்கு தெரிந்த வேலையை செய்ய வேண்டும். ஏறக்குறைய நம் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குலக்கல்வி போன்றதுதான்.

பாதர் மிலானி பார்பியானாவில் இருந்த பதின்ம வயது மாணவர்கள் ஒரு பத்துப்பேரை ஒன்று சேர்த்து ஒரு பள்ளியை உருவாக்கினார். அவர்கள் அனைவரும் பள்ளியால் கைவிடப்பட்டவர்கள், அல்லதுப்பள்ளிக்குச்செல்லதவர்கள். வாரத்தில் ஏழு நாட்களும் அங்கு வேலைநாள்தான். மாணவர்களே ஆசிரியர்கள். நல்ல முறையில் கற்றல் கற்பித்தல் நடந்தது. இனி கடிதப்பகுதிகளைப் பார்ப்போம்.

**அன்புள்ள மிஸ்,
எங்களின் பெயர் உங்களுக்கு நினைவுக்கு வராது, எங்களுக்கு நினைவிருக்கிறது, நீங்கள்தானே எங்களை பெயிலாக்கி தொழிற்சாலைகளுக்கும், வயல்வெளிகளுக்கும் வேலைக்கு அனுப்பியவர்கள்.

**அரசியலின் எல்லாப் பொறுப்புகளையும், பாராளுமன்றத்தின் அனைத்து இருக்கைகளையும் வசதியானவர்களுக்கு அந்த தொழிலாளர்கள் விட்டுக்கொடுத்திருப்பதை இப்போதுதான் அறிகிறோம்.

**அரசியலமைப்பின் படி எட்டு ஆண்டுகள் கட்டாய படிப்பு உறுதிசெய்யப்பட்டும் துவக்கப்பள்ளிக்கு மேல் படிக்க நாங்கள் வெகுதூரம் பயணப்படவேண்டியதுள்ளது.

**பார்பியானாவில் ஒரு ஆச்சர்யம் மிஸ், அங்கு படிக்க லாயக்கற்றவன் என்று ஒருவர் கூட இல்லை.

**எந்த கல்விப் பின்னணியுமில்லாத, தாமதமாகப் புரிந்துகொள்ளும் ஒரு மாணவன்கூட இங்கு மிகுந்த அக்கறையோடு கவனிக்கப்பட்டான்.

**அந்தப் பின்தங்கிய மாணவருக்கு படத்தில் ஒரு பகுதி புரியும்வரை இங்கே மற்ற மாணவர்களும் அடுத்தப்பகுதிக்குச் செல்லமுடியாது.

**மிஸ், நான் பரப்பியனாவிற்கு சென்ற அடுத்த ஆண்டே ஆசிரியரானேன். உலகவரைபடத்தை உற்றுநோக்கவோ, கணிதத்தில் பின்னங்களை அறிமுகப்படுத்தவோ பெரும் பட்டப்படிப்பு தேவையில்லையென்று நாங்கள் உணர்ந்தோம்.

**கூட்டாகக் கற்பது சிறந்த அரசியல், தனியாக கற்பது சுயநலம் என்று புரிந்துகொண்டோம்.

**எங்கள் பள்ளிக்கு நகரத்தில் இருந்து வந்த மாணவர்கள் உங்களைப்பற்றி, “ஆசிரியர்கள் என்போர் தடைக்கற்கள், ஏமற்றபடவேண்டியவர்கள் “என்ற அபிப்ராயம் கொண்டிருந்தனர்.

**ஒரு மாணவன் எழுத்தை நல்ல வடிவத்தில் எழுதத்தெரியாவிட்டாலும், இந்த உலகை வாசிக்கத்தெரிந்துள்ளான், தனது கடமை, உறவுகளைப்பேணுதல் போன்றவற்றை தெரிந்துள்ளான், அது போதாதா.

**மிஸ் நீங்கள் அரசியலமைப்பு சொன்ன அனைவரும் சமம் என்பதை மறந்து, உங்களின் இலக்கணத்தையே அதிகம் மதிக்கிறீர்கள்.

**நோயாளிகளைவெளியேற்றிவிட்டு ஆரோக்யமானவர்களை மட்டும் மருத்துவமனையில் சேர்த்துக்கொள்வது போல் உங்களது பள்ளிகள் இருக்கின்றன.

**கற்றுக்கொள்வதின் தன்மை உணர்ந்து கேள்விகள் கேட்கவேண்டும். தொடர்ந்து கடினமான கேள்விகளைக்கேட்டால், அது திட்டமிட்டு சிக்கவைக்கும் சூழ்ச்சி மனோபாவம் மிஸ்.

**ஆங்கிலம் கற்கும் ஒருவன் ஆங்கிலத்தில் கழிப்பிடம் எங்கே உள்ளது என்று கேட்கத்தெரியாத, நடைமுறை அறிவு இன்றி இருக்கிறான் என்றால் தவறு எங்கே நிகழ்கிறது.

**மிஸ், உங்கள் மாணவர்கள் இலக்கு என்பது பெரும் துயரமானதுதான், ஒவ்வொரு நாளும் அவர்கள் மதிப்பெண்ணுக்காக, சான்றிதழுக்காக மட்டும்தான் வேக வேகமாக படிக்கிறார்கள். ஆனால், அந்த வேகத்தில் அவர்கள் கற்கும் விஷயங்களின் சிறந்த, நுட்பமானவற்றை தவறவிட்டு விடுகிறார்கள்.

**மிஸ், விமர்சனத்திற்கு உட்படாதவர்கள் காலத்திற்கு ஏற்ப மாற்றம் பெறுவதில்லை. உங்களின் கட்டாயப்பள்ளிகள் ஆண்டுதோறும் நாலு லட்சம் குழந்தைகளை பெயிலாக்கி வெளியே தள்ளுகின்றன, அவர்கள் பள்ளியை இழக்கவில்லை மாறாக வகுப்பறைத்தோழர்களை இழக்கின்றனர். அவர்களின் வியர்வை வயல்வெளிகளில் ஓடி நமக்கு உணவாகிறது.

**மிஸ், ஒரு ஆசிரியரால் பெயிலாக்கப்பட்ட 28மாணவர்கள் பரப்பியனாவிற்கு வந்தனர் அவர்களில் 26பேர் கணிதத்தில் தேர்ச்சி பெற்றனர், இப்போது அந்த ஆசிரியர் மீது யார் நடவடிக்கை எடுப்பது?

**மிஸ் எங்களது பள்ளியில் அனைவரும் தினசரிகளை படித்து நாட்டின் நிலைமைகளை தெரிந்துள்ளனர், நாட்டைப்பற்றி தெரியாத வெறும் பட்டங்களினால் யாருக்கும் பலனில்லை.

**மிஸ், மாற்றம் தவிர்க்க முடியாதது. பழையவற்றையே நியாயப்படுத்தினால் எந்த முன்னேற்றமும் கல்வியில் ஏற்படப்போவதில்லை.

**மிஸ், மக்களுக்கான புதிய கல்வித்திட்டம் இத்தாலிய பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும்போது நாங்கள் எந்தக்கருத்தும் சொல்லமுடியவில்லை, ஏனெனில் நாங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லையே.

**மிஸ், அதிகாரத்தில் ஏழைகள் பங்கேற்றால்தான் கல்வியும் அவர்களுடையதாகும்.

**எந்த சக்தியாலும் தடுக்கமுடியாத மாற்றங்களை சூழல்கள் உருவாக்கும், அதற்கு எதிராக நின்று உங்கள் ஆன்மாவை, அன்பை கறைபடுத்திக் கொள்ளாதீர்கள் மிஸ் !

இந்தக்கடிதம் கற்பனையல்ல, நிஜம். உலகிலுள்ள அனைத்து ஏழைமாணவர்களின் எண்ணக்குமுறல் இது.
அருமையான புத்தகம், வாய்ப்பிருந்தால் வாசிக்க வேண்டுகிறேன் நண்பர்களே.

நூல் விவரம்:

நூல் – எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க.
தமிழில் – ஜே. ஷாஜஹான்.
பதிப்பு – வாசல்
விலை – ரூ. 50/

 

அன்புடன்

பெ. அந்தோணிராஜ்
தேனி.

Leave a Response

Top Reviews

Video Widget

gallery