Book Review

நூல் அறிமுகம்: கோயமுத்தூர் மத்திய சிறைக்கு வ.உ.சி. கொண்டுவரப்படுதல் – ரெங்கையா முருகன்

Spread the love

 

பொதுவாக தன் வரலாற்றுச் சரிதத்தில் முக்கியமாக உ.வே.சா. அவர்களின் என் சரித்திரம், திரு.வி.க. அவர்களுடைய வாழ்க்கைக் குறிப்புகள், நாமக்கல் இராமலிங்கம் பிள்ளையின் என் கதை தமிழில் மிகவும் முக்கியமானது என்பார்கள். அந்த வரிசையில் கோவை அ. அய்யாமுத்து எழுதிய எனது நினைவுகள் இந்த பட்டியலில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளலாம்.

ஐரிஸ் பப்ளிகேஷன்ஸ் & விடியல் பதிப்பகம் இணைந்து வெளியிட்ட எனது நினைவுகள் நூலில் 879 பக்க அளவிலான நூலினுக்கு மதிப்புக்குரிய திரு.செந்தலை ந.கவுதமன் அவர்கள் மொத்த புத்தகத்தின் சாற்றை வெண்ணெயை திரட்டி தருவது போல முத்தாய்ப்பாக சிறப்புரையாக அறிமுகப்படுத்தி வரிசைப்படுத்தி தந்துவிடுகிறார்.

அப்படி புத்தகத்தை மேயும் பொழுது கோவை வீதிகளில் விலங்கிடப்பட்டு வ.உ.சி. அவர்களை இழுத்துச் செல்லும் தகவலும் என் கண்ணில் பட்டது. அந்த துயரத்தினை நான் மட்டுமே அறிவதால் என்ன பயன் தமிழ் வாசகர்களும் அறிய வேண்டும் என்பதற்கான பதிவே இது.

கோவை ஆடிசு வீதி அந்தோணியார் பள்ளியில் கோவை அ. அய்யாமுத்து படித்துக் கொண்டிருந்த வேளை. அய்யாமுத்து அப்பள்ளிக்குச் செல்லும் போது வ.உ.சி. அவர்களை கோவை வீதியில் இழுத்துச் செல்லும் காட்சியையும், தான் கண்டதை அவர் கீழ் வருமாறு பதிவு செய்கிறார். அவரது எழுத்திலேயே காண்போம்.

“ நான் அந்தோணியார் பள்ளி மாணவனாயிருக்கும்போது ஒருநாள், நாங்கள் குடியிருந்த ஜெயில் ரோட்டின் வழியே ஓரு கைதியைக் காலிலும், கையிலும் விலங்கும் சங்கிலியும் மாட்டிப் போலீசார் அழைத்து சென்றார்கள்.

சாதாரணமாக ஒரு கைதியை ஒருவர் அல்லது இரண்டு போலீஸ் கான்ஸ்டபிள்கள் அழைத்துச் செல்வதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அன்று ஒரு வெள்ளைக்கார சார்ஜண்டும், போலீஸ் இன்ஸ்பெக்டரும் பத்து ஜவான்களும் அந்தக் கைதியை அழைத்துச் சென்றது ஆச்சரியமாக இருந்தது.

வெள்ளை சார்ஜண்ட் உருவிய வாளுடன் நடந்தார். இன்ஸ்பெக்டரின் இடுப்பில் ரிவால்வர் இருந்தது. மற்ற ஜவான்கள் பையோனட் மாட்டிய ரைபிளுடன் சென்றார்கள்.

இவர்களின் பின்னே ஒரு பெரிய ஜனத்திரளும் வந்தது. நானும் அவர்களுடன் கலந்து ஓடினேன்.
கோவைச் சிறைக்கேட்டுக்குள் அக்கைதி நுழைந்ததும் கேட்டைத் தாழிட்டு சனங்களை விரட்டினார்கள்.

கூட்டத்தில் கசமுசவென்று ஏதேதோ பேசினார்கள். அப் பேச்சிலிருந்து நான் சேகரித்த விவரம் இதுதான்.

யாரோ சிதம்பரம் பிள்ளையாம். தூத்துக்குடியாம். வந்தே மாதரம் என்று சொன்னாராம். அதற்காக இரட்டை ஆயுள் தண்டனையாம். அவருடன் தண்டிக்கப்பட்ட மற்றொருவர் சுப்ரமணிய சிவாவாம். அவரை அந்தமான் தீவுக்கு அனுப்பி விட்டார்களாம்.

Image may contain: 1 person, hat, beard, eyeglasses and closeup
படம் 2 : வ.உ.சி. கோவை சிறைக்கு இழுத்துச் செல்வதை நேரில் கண்டவர் கோவை அ.அய்யாமுத்து

அன்றிரவு வேறு சில பையன்களுடன் சேர்ந்து வெள்ளை வெளேரென்றிருந்த சுவர்களில் வந்தேமாதரம் என்று அடுப்புக் கரித்துண்டால் கொட்டை கொட்டையாக எழுதினோம்.பள்ளிக்கூடச் சுவர்களில் எழுதினோம். பையன்கள் தெருக்களில் செல்லும் போது வந்தே மாதரம் என்று கத்தினார்கள்”

என்று கோவை அ.அய்யாமுத்து அவர்கள் தனது பள்ளிக்கூடச் சிறுவராக இருந்தபோது வ.உ.சி.யை இழுத்துச் சென்ற காட்சியை பதிவு செய்கிறார்.

சிறைக்குச் சென்றாலே அக்காலக் கட்டத்தில் சமூக புறக்கணிப்புக்கு ஆளாவார்கள். வெள்ளைக்காரர்களை கண்களுக்குள் விரலை விட்டு நோண்டிய ஒரே காரணத்துக்காக அவரை வீதியில் சங்கிலியால் இழுத்துச் சென்று வ.உ.சி.யை அவமானப்படுத்தியுள்ளார்கள்.

இனி வ.உ.சி. அவர்களின் சுயசரிதையில் கோவை சிறைக்கு இழுத்துச் செல்லும் காட்சியை அவரது சொந்த வரிகளால் அகவற்பாவில் எழுதியிருப்பதைப் பார்ப்போம்.

“கோய முத்தூர் கொண்டு போவதாச்
சாயங்காலமே சாற்றிடக் கேட்டதால்
*சிவத்தை வணங்கிச் செப்பியும் வழியில்…………
விரைவினில் திரும்புவேன்; விடாதீர் சுதேசியம்;
தரைமிசை எதுவும் தருவ ததுவே
என்று நான் மொழிந்தேன். எல்லோரும் ஒன்றா
நன்றென மொழிந்தனர். நானவர் நீங்கி
ரயிலடிப் போலீஸ் ஸ்டேஷனை நண்ணினேன்
மெயிலினைப் போலீசார் இடைவிடா துலவினர்
ரயில் வண்டி வரவும் நானதில் ஏறி
அயலில் நின்றாரிடம் அனுப்பி வழி இருந்தேன்
என்னோடு வெள்ளை இன்ஸ்பெக்டர் ஒருவனும்
முன்னர் நான் கண்ட மூன்று கான்ஸ் டபிளும்
இருந்தனர். என்பின் எட்டிய வண்டியில்
பெருந்திரளாக பெருவுடை மாற்றி
எண்ணிலாப் போலீசார் இயம்பி இன் பொடு
கண்ணெலாம் என்பின் காட்டி யிருந்தனர்
புறப்படவும் வண்டி போந்தவன் ஒருவன்
திறப்பட நின்றெற்குச் சில்லறை நல்கினன்
கங்கை கொண்டானைக் கண்டதும் அங்குளர்
தங்கை குவித்தனர், என் கை குவித்தேன்.
மணியாச்சி வந்ததும் வந்தென் நண்பர்
பணியா தென்றனர். “பாரும் நம் சுதேசியக்
கப்பல் என்றும் கதியொடு நடந்திடச்
செப்புவதிதே, செல்கிறேன்” என்றேன்.
வருந்தினர் மிகவும். “வருந்துதல் விட்டுத்
திருந்திய செயல்களே செய்கஎந் நாளும்”
என்று நான் வண்டியில் ஏறினேன். நண்பர்
நன்றெண் மொழிந்தனர் நனைந்த கண்ணுடனே.
மதுரை வந்ததும் வந்தனர் அநேகர்;
மதுரக் கவிகள் வந்திடக் கண்டிலேன்.
என்னுயிர் திரவியம் என்னண்டை வந்துநின்
றென்னயாம் செய்வோம் இனியென் றழுதனன்.
“அழுதாற் பயனென்? ஆவதே ஆகும்.
பழுதுன் காலிற் பட்டதென்?” என்றேன்
நேர்ந்ததைக் கூறினான். நின்றவர் தமக்கு
நேர்ந்ததைக் கூறியான் நெறியினைத் தொடர்ந்தேன்.
திருச்சி ஜங்ஷனில் திருப்தியா உண்டு
அடுத்த போலிஸ் டேஷனில் அமர்ந்த் பின்
வண்டியில் ஏறவும் மாணவர் அனேகர்
அண்டிவந் தென்னுடன் அன்பொடு பேசினர்.
பதிலுரை கூறியான் படுத்து நன் குறங்கிக்
கதியுடன் ஈரோட்டில் கால்சுத்தி செய்து
போதனூரில் புதியன உண்டு
கோதிலாக் கோயமுத்தூர் கூடவும்
அநேகர் ஸ்டேஷனில் அவாவியெனை நின்றனர்.
அநேக போலீஸார் அவணின்று வந்தெனை
வண்டியின் மறுபுறம் வாவென் றிறக்கியோர்
வண்டியில் ஏற்றி வலனொடு சென்றரல்
சிறைக்குட் சேர்த்தனர், செப்புவேன் பின்னர்ச்
சிறைக்குள் நிகழ்ந்தவும் தெரிந்தவும் யாவுமே.
கோயமுத்தூர் சார் மாயும் சிறையுள்
சென்றதும் வந்தனன் டிப்டி ஜெயிலர்.
பாளையங் கோட்டைப் பாழ் சிறை யுடைகளை
வாங்கிக் கொண்டு வழங்கினன் அவன் சிறை
மேலுடை யிரண்டும் , கீழுடை யிரண்டும்,
குல்லா ஒன்றும், கம்பளி யிரண்டும்
உடையினை உடுத்து நடையில் அவனுடன்
மாதக் கைதிகள் வாழும் நான்காம்
*பிளாக்குச் சிறைக்குப் பெருமையோடு சென்றேன்.

என்று அகவற்பாவில் தன் சுயசரிதத்தில் கோயமுத்தூர் சிறைக்குச் செல்வதை பதிவு செய்துள்ளார்.

Image may contain: text
படம் 3: கோவைச் சிறையில் வ.உ.சி. செக்கிழுக்கும் காட்சி

1910 ஆம் ஆண்டு ஜனவரி 8ம் நாள் இந்தியா பத்திரிக்கையில் பாரதியார் பாரத நாட்டின் புண்ணிய ஸ்தலங்கள் என்ற தலைப்பில் பதிவிடப்பட்ட கட்டுரையில் இந்தியாவில் உள்ள தரிசிக்க வேண்டிய பல புண்ணிய தலங்களைக் குறிப்பிட்டு அப்படியே தட்சிண தேசத்தில் “கோயமுத்தூர் சிறைச்சாலையைப் பார்க்கப் போகிறவர்களில் யார்தான் நமது தட்சண தேசாபிமான சிங்கமான ஸ்ரீயுத சிதம்பரம் பிள்ளையைப் பற்றி சிந்தியாமலிருக்க முடியும்? என்று வ.உ.சி.யைச் சிறையிட்ட கோவைச் சிறையைக் குறிப்பிட்டுள்ளார்.

இன்றும் வ.உ.சி. தங்கிய சிறை அறையை சிறைக்குள் அவரது ஞாபகார்த்தமாக அந்த அறையை பாதுகாத்து வருகிறார்கள். கோவை மக்களே அந்தச் சிறைச்சாலை வழியே செல்லும் போது பாரதி குறிப்பிட்டது போல் நம்மைப் பொறுத்தவரை அந்த இடமும் புண்ணிய தலமே என்று யோசிப்பீர்களாக!

நூல்: எனது நினைவுகள் 

ஆசிரியர்: கோவை.எ.அய்யாமுத்து 

வெளியீடு: விடியல் பதிப்பகம் 

Leave a Response

Top Reviews

Video Widget

gallery