Book Review

நூல் அறிமுகம்: எண்வலிச் சாலை ( வரலாற்றுப் புனைவுகள்) – அண்டனூர் சுரா – ஒரு பார்வை – பொன். குமார்

76views
Spread the love


வரலாறை எழுதுவது ஒரு கலை. புனைவு எழுதுவது ஒரு கலை. வரலாற்றுப் புனைவு எழுதுவது ஒரு  கலை.  சமகால வரலாற்றை பழங்கால வரலாற்றுடன் இணைத்து புனைவாக்குவது ஒரு சிறப்புக் கலை. கதை, கட்டுரை, நாவல் எழுதுவதில் தேர்ந்தவரான எழுத்தாளர் அண்டனூர் சுரா வரலாற்றுப் புனைவுகள் எழுதித் தந்திருக்கும் சிறுகதைத் தொகுப்பு ‘ எண்வலிச் சாலை’.
சேலத்திலிருந்து சென்னைக்கு ஒரு நான்கு வழிச் சாலை உள்ளது.  நான்கு வழிச் சாலையும் முழுமையாக போட்டு முடிக்கமுடியவில்லை. சேலத்திலிருந்து சென்னை எல்லை வரை ( தாம்பரம்) செல்ல மூன்று மணிநேரமாகும் என்றால் சென்னைக்குள் சேருமிடம் சென்று சேர ஒரு மூன்றுமணிநேரமாகும். இந்நிலையில்தான் அரசு சேலத்திலிருந்து சென்னைக்கு ஒரு மாற்றுப் பாதையில் எண்வழிச் சாலை அமைக்கத் திட்டமிட்டது. கூறப்படும் காரணம் விரைவில் சென்னை சென்று சேரலாம். எப்படி சென்றாலும் தாம்பரத்தைத் தாண்ட முடியாது. எண்வழிச் சாலைக்காக மக்களின் வீடுகள் இடிக்க முற்பட்டன. வயல்கள் அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன. மக்களின் வாழ்வாதாரம் பிடுங்கும் நிலை ஏற்பட்டது. மக்களிடமிருந்து எதிர்ப்புகள். பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின. அரசு மீது சாபத்தையும் அள்ளி வீசினர். தற்போது எண்வழிச்சாலை அமைக்கும் முயற்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எழுத்தாளர் அண்டனூர் சுரா எழுதிய ஒரு வரலாற்றுப் புனைவு கதையே ‘ எண்வலிச்சாலை’. இன்னும் ஒன்பது கதைகளுடன் இணைத்து ஒரு சிறுகதைத் தொகுப்பாக தந்துள்ளார்.  மாமன்னர் மார்த்தாண்ட வர்மாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கஜானாவே காலியாகிவிடுகிறது. கஜானாவை நிரப்ப திவான் இருவழிச் சாலையை எட்டுவழிச் சாலையாக மாற்றலாம் என ஆலோசனை வழங்க ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்ற முயற்சியும் நடைபெறுகிறது. இரு வழியை எண் வழியாக மாற்றினால் கஜானா எப்படி நிறையும் என்பதையே கதை விவரிக்கிறது. எண்வழிச் சாலைக்காக வீடுகள் இடிக்கப் படுகின்றன. கடைகள் காலி செய்யப்படுகின்றன. மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். அப்போது மக்கள் எடுத்த முடிவுதான் கஜானாவை நிரப்புகிறது. மக்கள் தங்களிடமிருந்த தாலி உள்பட அனைத்து ஆபரணங்களையும் அறுத்து விட்டெறிய அரண்மனைக்குள் ஒரு மலையாக குவிகிறது. அடுத்த கொண்டாட்டத்திற்கு தயாராகிறது அரண்மனை.  தற்போது அரசு முயற்சிக்கும் எண்வழிச்சாலைக்கு எதிர்ப்பாகவே அண்டனூர் சுராவின் ‘எண்வலிச் சாலை’ என்னும் சிறுகதை வரலாற்றுபுனைவாக எழுதப்பட்டுள்ளது. மக்களின் நிலையை மனதில் கொள்ளாமல் அரசுகள் கஜானா நிரப்புவதையே குறியாகக் கொண்டுள்ளன என குறி வைத்துத் தாக்கியுள்ளார். வழியல்ல வலி என்கிறார்.
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. அப்போது நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையம் பல்வேறு கட்டமாக விசாரணை நடத்தியது. மக்கள் இச்சம்பவத்திறகு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இச்சம்பவத்தை ஒட்டி அண்டனூர் சுரா எழுதிய ஒரு சிறுகதை ‘ நிறுத்தக்குறி’. நீதிபதி கலெக்டரை விசாரிப்பதாகவே கதை நகர்கிறது. மக்கள் கேட்க வேண்டிய கேள்விகளை எல்லாம் நீதிபதி கேட்கிறார். கலெக்டர் கண்விழி பிதுங்க தடுமாறுகிறார். கதையின் முன்பகுதியில் தூத்துக்குடியில் 2018இல் நடைபெற்ற ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடே நினைவிற்கு வரும். ஆனால் கதை வ. உ. சி. நடத்திய கோரல் பஞ்சாலை தொழிலாளர் போராட்டத்தை வைத்து எழுதியதாக நீதிபதியின் கூற்றாக தெரியவரும். இதுவொரு திருப்பம் எனில் கலெக்டர் விஞ்ச் துறையின் நிர்வாகத் திறனைப் பாராட்டி பிரிட்டிஷ் மகாராணி மேலும் இரண்டு ஆண்டுகள் மாவட்ட கலெக்டராக பணியாற்ற அனுமதி அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி அளித்த தீர்ப்பு மற்றொரு திருப்பம். இன்றைய நிலையும் இவ்வாறே உள்ளது. இக்கதை ‘அமைதி விசாரணை நடந்து கொண்டிருக்கிறது’ என்னும் தலைப்பில் குறி இதழில் 2018இல் வெளியானது.  அப்போது எழுதப்பட்ட கருத்து “சிறுகதை தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை வைத்து எழுதப்பட்டுள்ளது. கதையை வாசிக்கும் போது தற்போதைய துப்பாக்கிச் சூடே மனத்திரையில் ஓடுகிறது. ஆனால் முடிவு வ. உ. சி. நடத்திய போராட்டத்தில் முடிகிறது. தற்போதை சூட்டுக்கு சரியான சூடு வைத்துள்ளார்.  பாராட்டுகள்.”. (முகநூல் பதிவு நாள்
08.11.2018). எழுத்தாளர் அண்டனூர் சுரா மக்களின் மனசாட்சியாக நீதிபதி என்னும் பாத்திரத்தின் மூலம் எழுப்பியுள்ள கேள்விகள் ஒவ்வொன்றும் அரசுக்கு எதிரான கணைகள். ஈட்டிகள்.
‘ பசலி’ இத்தொகுப்பின் மூன்றாம் கதை. புதியதாக தொடங்கப்பட்ட  ஒட்டப்பிடாரம் தாலுக்கா அலுவலத்திற்குட்பட்ட பகுதியில் ஜமாபந்தி நடப்பதற்கு தாசில்தார் பஞ்சமன் இரவு பகலாக உழைக்கிறார். ஜமாபந்தி அன்று ஆங்கிலேயே அரசைச் சார்ந்த கலெக்டர் வந்த பிறகே தாமதமாக வருகிறார் தாசில்தார் பஞ்சமன். கலெக்டர் தான் ஆங்கிலேயன் என்பதால் அவமானப்படுத்துவதாக நினைத்து கோபப்படுகிறார். தான் பஞ்சமன் என்பதாலும் கீழ்ச்சாதிக்காரன் என்பதாலும் இந்த ஊரில் எவரும் குடியிருக்க வீடு தராததால் வெளியூரிலிருந்து வர தாமதமாகி விட்டது என்கிறார். உண்மையறிந்த கலெக்டர் கோபப்பட்டு ஒட்டப்பிடாரத்தில் புதியதாக தொடங்கப்பட்ட தாலுக்கா அலுவலகம் ரத்து செய்யப்பட்டு கோவில்பட்டியில் தொடங்க ஆணையிடுகிறார். ஆனால் பாதிக்கப்பட்ட பஞ்சமனுக்கு எதுவும் செய்யவில்லை. அன்று மட்டுமில்லை இன்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எந்த நியாயமும் கிடைக்காமலே உள்ளது என்பதை உணர்த்தியுள்ளார்.


இந்தியா 1947இல் சுதந்தரம் பெற்றது. பாகிஸ்தானும் பெற்றது. இரண்டு நாடுகளுக்கிடையே பிரிவினை ஏற்பட்டது. பஞ்சாபிலுள்ள லாகூரை இந்தியாவிற்கு ஒப்படைப்பதா, பாகிஸ்தானுக்கு ஒப்படைப்பதா என்னும் பிரச்சனை எழுகிறது. கலவரமும் நடக்கிறது. இதை முடிவெடுக்கும் பொறுப்பு ஆங்கிலேயே ஜஸ்டிஸ் சிரில் ரெட் கிளிப்புக்கு ஒப்படைக்கப்பட்டது. அவருக்குள்ளும் ஒரு பெரும் போராட்டம். முடிவில் லாகூரை பாகிஸ்தானிடம் ஒப்படைப்பதாக முடிவெடுக்கிறார். முகலாயர்களின் நந்தவனமாக இருந்துள்ளது. பஞ்சாபியர்களுக்கும் பிருந்தாவனமாக இருந்துள்ளது. ” ஒரு கூட்டை சிதைக்கும் பாவத்தைச் செய்திருக்கிறது பாகிஸ்தான். அதனால் அதன் கூடும் மேலும் சிதையவே செய்யும். அதற்கு ஒதுக்கப்படும் நகரத்தின் எண்ணிக்கையைக் குறைக்க வேணாம். லாகூர் அவர்களிடமே இருந்துவிட்டுப் போகட்டும்” என்று ரெட் கிளிப் எழுதிய குறிப்புதான் கவனத்தை ஈர்க்கிறது. நாட்டுப் பிரிவினையின் போதும் மாநிலங்கள் பிரிவினையின் போதும் இவ்வாறு நடந்ததாக வரலாறு உள்ளது. திருப்பதியும் ஓர் உதாரணம். ” பஞ்சாபிகள் சொந்தம், பந்தம், உடைமை, கற்புகளை இழந்து அகதிகளாக எதிரெதிர் எல்லைக்குள் நுழைந்ததைப் போல..” என்று அண்டனூர் சுரா எழுதிய இறுதி வாக்கியமே பஞ்சாபியர்களின் வலியை உணர்த்துகிறது.  இதன் தலைப்பு ‘ உதிரக் கோடு’. தலைப்பே அதன் சாராம்சத்தை உணர்த்துகிறது.
அழகான, அற்புதமான, கவித்துவமான ஒரு கதை ‘ நின்னைச் சரணடைந்தேன்’. பாரதியிடம் அண்டனூரார் சரணடைந்துள்ளார் என்பதைத் தொகுப்பிலுள்ள பாரதியின் வரிகள் காட்டுகின்றன. பாரதியின் வரிகளையே தொகுப்பு முழுக கையாண்டுள்ளார். கண்ணனை பலவாறாக பார்த்த பாரதி ஒரு பாடலில் மட்டும் கண்ணம்மா என் காதலி என்கிறார். கண்ணம்மாவிற்கும் கவிபாரதிக்கும் நடக்கும் உரையாடல் மூலமே கதையைக் கொண்டுள்ளார். செல்லம்மாளே மனைவி என்றானதால் தான் காதலியாக இருக்க முடியாது என்கிறார் கண்ணம்மாள்.
” கண்ணம்மா… என்னிடம் நீ விளையாட்டுக் காட்டாதே”
” நான் விளையாட்டுக் காட்டவில்லை சுப்பையா.  நாளை முதல் நீ இன்னொருத்தியின் கணவன் என்பதை நினைவு படுத்துகிறேன்.”
” அதற்காக?”
” காதல் வேண்டாம் என்கிறேன்”
ஆனால் பாரதி விட வில்லை. இறுதியில் கண்ணம்மா மறைந்து தெய்வநிலையை அடைந்து விடுவதாக கதை நிறைவடைகிறது. வரலாற்றுப் புனைவு என்றாலும் வரலாற்றுப் பிரச்சனை எதுவுமில்லை. கற்பனை என்றாலும் கருத்தைக் கவர்ந்தது.
குறியீடு அடிப்படையில் எழுதப்பட்ட கதை ‘ நாய்கள் இப்படித்தான் பூனை தேசத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டன’. பூனையின் தேசத்திற்குள் நாய்கள் நுழைகின்றன.  மொழி பிரச்சனை எழுகிறது. பூனைகள் மியாவே தம் மொழி என்றும் சிறந்த மொழி என்றும் ‘மியாவுகின்றன’ . நாய்களோ லொள்ளே தம் மொழி என்றும் அதுவே சிறந்த மொழி என்றும் ‘லொள்ளுகின்றன’.  அண்டனூராரும் மியாவ் மொழியிலும் லொள் மொழியிலும் உரையாடலை நிகழ்த்தியுள்ளார். இறுதியில்  பூர்வீகக் குடிகளான பூனைகள் கோபம் கொண்டு மரத்தின் மேலிருந்து குதித்து மியாவித்து நாய்களை தேசத்திலிருந்து விரட்டியடிக்கின்றன.  பூனைகள் சந்தோசத்தில் மியாவ்கின்றன. ” பூனைகளின் வாழ்க்கை தொன்மையானது. நாய்கள் தோன்றுவதற்கு முன்னரே பூனைகள் பிறந்திருந்தன. பூனையுடன் சேர்ந்து அதன் மொழியும் பிறந்திருந்தது. பூனையின் பரிணாம வளர்ச்சிதான் புலி. புலிக்கு முந்தையது பூனை. ஆனால் புலிக்கும் பிந்தையது நாய்” என்பதன் மூலம்  பூனையை முன்தோன்றி மூத்த குடி என்கிறார். தமிழ் நாட்டில் நுழைந்து தமிழை அடிமையாக்க முயற்சித்த இந்தியை வைத்து எழுதியுள்ளார். நாய்கள் விரட்டியடிக்கப்பட்டதாக கதையை முடித்துள்ளார். ஆனால் இந்தியை விரட்டியடிக்கமுடியவில்லை. இதுவே ஒரு வரலாறு. பூனைகள் வென்ற இடம் பாஞ்சாலங்குறிச்சி என்றும் அதனாலே அவ்விடத்தை பாளையக்காரர் கோட்டை கட்ட வீரபாண்டியன் தேர்ந்தெடுத்தான் என்பதும் ஒரு வரலாற்றுப் புனைவு.
உருஷ்ய ஜாரரசன் இரண்டாம் நிக்கோலஸ் அவர்களின் அரண்மனைக்குள் சென்று  பசிக்காக ஒரு ரொட்டித் துண்டை சாப்பிட்டு விடுகிறான்  புஷ்கின் என்னும் சிறுவன். மன்னருக்கு பெருத்த அவமானம். அரண்மனைக்குள் புகுந்து திருடி இருக்கான் என்றால் இவன் பின்னால் ஒரு பெரும்படையே இருக்கும் என்று பெருத்த சந்தோசத்துடன் புஷ்கினை சங்கிலியால் கட்டி வைத்து விசாரிக்கிறான். பசிக்கு மட்டுமே திருடியதாக புஷ்கின் கூறியும் அரசன் ஏற்காமல் பின்னணியிலுள்ள படையைக் கேட்கிறான். புஷ்கினும் சலிப்படைந்து  தன்னுடன் இருட்டு, ஒரு குதிரை, வில் அம்புகள் சேர்ந்து திருடியதாக கூறுகிறான். வெறுப்படைந்த மன்னன் ஊன்றப்பட்ட இரண்டு கம்பங்கள், அதன் குறுக்கே கட்டப்பட்ட ஒரு சட்டம், அதில் தொங்கும் ஒரு கயிறு ஆகியவைகளை பரிசளிப்பதாக தண்டனை அளிக்கிறான். பசிக்குத் திருடியவனுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்படுவது கொடுமை. உண்மையைச் சொன்னால் மன்னித்து விடும் அரசன் சிறுவன் விசயத்தில் உண்மையைக் கூறியும் தண்டனையே அளித்துள்ளது அவரின் தவறான முடிவாகக் காட்டுகிறது. கதையின் தலைப்பு ‘ பருந்து பசி’. அரசன் என்னும் பருந்து பசிக்கு புஷ்கின் இரையாக்கப்படுகிறான்.
பிரெஞ்சு நாட்டின் இராணுவ கேப்டனாக இருந்தவன் கேப்டன் டிரைபஸ். உண்மையிலேயே பிரிட்டிஷ் நாட்டைச் சேரந்தவன். அடிப்படையில் அவன் ஒரு யூதன். உண்மையையறிந்த பிரெஞ்சு அரசு டிரைபஸ்க்கு தண்டனை வழங்க முயற்சிக்கிறது. அவன் யூதன் என்பதால் பொதுமக்களும் கொல்ல வேண்டும் என்கின்றனர். ஒரு பத்திரிகையாளனாகக் கலந்து கொண்ட தியோடர் ஹெர்ஸ் ஒரு யூதன் என்பதால் மிகவும் கலங்குகிறான்.  யூதர்களுக்கு எதிராகவே எல்லா நாடுகளும் இருப்பதைக் கண்டு யூதர்களுக்கு என்று ஒரு நாடு வேண்டும் என பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறான். யூதர்கள் வாழ்ந்ததாக ஒரு நிலம் கிடைக்கிறது. ” முதலில் நாம் நமக்கான தேசத்தை உருவாக்குவோம். அதற்கு முன்னால் அராபியக் கலாச்சாரத்தை வேரோடு களைவோம். ஏனென்றால் நாம் யூதன்..” என்று கதையை முடிக்கிறார் ஆசிரியர். ஒரு நாடு கிடைத்தால் யூதர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று காட்டியுள்ளார். இதன் தலைப்பு ‘ அச்ச ரேகை’.
ஆதிக்க நாடுகளிடமிருந்து க்யூபாவை மீட்டெடுத்தவர் பிடல் காஸ்ட்ரோ.  அவர் பிறப்பு குறித்து எழுதிய  ஒரு வரலாற்றுப் புனைவு ‘ குருதியில் நனைந்த குருளை’. க்யூபா நாட்டுப் போராளியுமான கவிஞருமான ஜோஸ் மார்ட்டியை கரும்பு வளம் நிறைந்த க்யூபாவைக் கைப்பற்ற ஸ்பானிஷ் மற்றும் அமெரிக்கா கை கோர்த்து சுட்டு விடுகின்றனர்.  மார்ட்டியைக் குறித்து க்யூபாவினர் பேசிக் கொள்கின்றனர் இரவுக் காவலர்கள். பக்கத்து குடிசையில் ஒரு பெண் பிரவச வலியில் துடிக்கிறாள். இவள் பண்ணையாரின் மனைவி அல்ல காதலி. குழந்தை பிறந்தால் பண்ணையார் ஏற்றுக் கொள்வாரோ என்று கவலையுறுகிறார். ஸ்பானிஷையும் அமெரிக்காவையும் விரட்ட ஒருவன் பிறந்து வருவான் என்கிறார் பேசுபவர்களில் ஒருவன். அப்போது அப்பெண்ணுக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கிறான். பண்ணையார் இவன் தன் மகன் என்றும் ஜோஸ் மாரட்டியே பிறந்துள்ளான் என்றும் ஃபிடல் காஸ்ட்ரோ என்றும் பெயர் சூட்டுகிறார். பிரசவித்த பெண்ணும் மகிழ்ச்சியடைகிறாள். க்யூபாவும் விடுதலை அடையும் என்னும் நம்பிக்கையும் ஏற்படுகிறது என்பதுடன் புனைவை நிறுத்தியுள்ளார். மாவீரர்கள் குடிசையிலே பிறப்பர் என்பதையும் கூறுகிறது.


தொகுப்பின் இறுதிக்கதையும் பத்தாம் கதையாக இடம் பெற்றுள்ளது ‘ பிரளயக் காலத்தவன்’. ஈழத்தில் போர்ச் சூழலில் எழுதப்பட்டதாக உள்ளது. போர்ச் சூழலில் கவிஞர்களைக் கொன்று வருகின்றனர். துரோ என்னும் கவிஞனை ஆதர்சமாக ஏற்றுக் கொண்ட கவிஞன் சின்னா துரோவையே பாட கவியரங்கம் செல்கிறான். அவன் தாய் ஒரு கெட்ட கனவு கண்டதாக அவனைத் தடுக்கிறாள். ஆனாலும் அவன் செல்கிறான். தடுக்கப்படுகிறான். எந்த துரோவைப்பாடப் போனோனோ அந்த துரோவே சின்னாவைக் கொன்று விடச் சொல்கிறான். சின்னா இறந்தாலும் ஒரு கவிஞராக வாழப்போகிறவன் என்கிறார்.  கவிஞர்களுக்கு மரணமில்லை என்று நிறுவுகிறார் எழுத்தாளர் அண்டனூர் சுரா. கவிஞர்களை நாடு வாழ வைக்காது என்றும் உணரமுடிகிறது.
எழுத்தாளர் அண்டனூர் சுரா ஒரு மக்கள் எழுத்தாளர். மக்கள் பிரச்சனைகளை மையப்படுத்தி எழுதுவதில் முன்னணியில் இருப்பவர். மக்களுக்காக குரல் கொடுப்பதில் மனம் தளராதவர். எண்வலிச் சாலையிலுள்ள பத்து கதைகளுமே வரலாற்றைப் பேசுகிறது. சமகால வரலாற்றை நேரடியாக பேசாமல் அதற்கான ஒரு பழைய வரலாற்றைத் தேர்ந்து பேசியுள்ளார். சமகாலப் பிரச்சனைகள் அவரிடம் ஏற்படுத்திய  பாதிப்பின் வெளிப்பாடாகவே கதைகள் உள்ளன. நடப்புப் பிரச்சனையையும் சரியாக உள்வாங்கியிருக்க வேண்டும் . கடந்த கால வரலாற்றையும் அறிந்திருக்க வேண்டும். இரண்டையும் இணைத்து கதையாக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மூன்று ‘ வேண்டும்’ களையும் இணைக்கும் மையப்புள்ளியாக, முக்கியப்புள்ளியாக அடையாளப்படுகிறார் அண்டனூர் சுரா. வாசிப்பாளருக்கும் இரண்டு வரலாற்றையும் அறியச் செய்துள்ளார். வரலாறுகள் தெரிந்தாலே கதைகள் புரியம். உரையாடல்களும் வாசிப்பிற்கு உத்வேகமாக உள்ளது. வரலாறுகளை வைத்து வரலாற்றுப் புனைவுகளை எழுதிய எழுத்தாளர் அண்டனூர் சுராவும் இலக்கிய வரலாற்றில் இடம் பெறுவார் என உறுதியாக் கூறலாம். வரலாற்றுப் புனைவுகளைத் திட்டமிட்டு எழுதியிருந்தாலும் எதேச்சையாக எழுதி தொகுத்திருந்தாலும் அவசியமான கதைகள். அதிர்வையேற்படுத்தும் கதைகள். வரலாறு படிப்போம். வரலாறு படைப்போம்..
எண்வலிச் சாலை ( வரலாற்றுப் புனைவுகள்) – அண்டனூர் சுரா
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிட்
சென்னை 600050
பொன். குமார் 


Leave a Response