Book Reviewநூல் அறிமுகம்

நூல் அறிமுகம்: என் சிவப்புப் பால்பாய்ண்ட் பேனா – பெ. அந்தோணிராஜ்

 

நூலாசிரியர் பேராசிரியராக பணியாற்றியவர். அறிவொளி இயக்கத்தில் பணியாற்றியவர், சிறந்த கல்வியாளர். கல்வி சம்பந்தமான நூல்களை வெளியிட்டுள்ளார்.

ஒரு ஜென் குருவிடம், நிரம்பப் படித்த ஒருவர் சென்று, குருவே நான் உங்களிடம் சீடனாக சேரவந்துள்ளேன், அனுமதி கொடுங்கள் என்கிறார். ஜென் குருவே எதுவும் பேசாமல் டீ கோப்பையை எடுத்து எதிரிலுள்ள ஒரு கப்பில் ஊற்ற தொடங்கினர். கப் நிறைந்து வழிய ஆரம்பித்தது, வந்தவர் பதறிப்போனார் குருவே டீ வழிந்து வீணாகிறது, நிறுத்துங்கள் என்கிறார், நிறுத்திய குரு, வந்தவரை நோக்கி, அய்யா நிரம்பிய கப்பில் எப்படி டீ ஊற்றுவது வீணாகுமோ அதுமாதிரிதான் நான் உங்களுக்கு கற்றுக்கொடுப்பது என்றார். வந்தவர் புரியாமல் நின்றார். மேலும் குரு கூறினார், “உங்களுக்கு எல்லாம் தெரியும் என்கிற எண்ணம் மனதில் உள்ளது, கற்றுக்கொள்வதற்கு தேவை காலி கப்புகளே. ஏனெனில் அதில்தான் ஊற்றப்படும் டீ நிற்கும் என்றார்.
அதுதான் கற்றலுக்கான அடிப்படை என்கிறார் மாடசாமி.

” ஆசிரியரை ‘பயந்த சர்வாதிகாரி ‘என்று சொல்வதுண்டு. சுற்றிலும் உள்ள எதைப் பார்த்தாலும் பயந்து அரளுவார். வகுப்பறைக்குள் நுழைந்ததும் ஒரு சர்வாதிகாரி போலக் கட்டிக்கொள்ளப் பார்ப்பார். பயந்த குடிமக்களை விரும்பும் ஒரு பயந்த சர்வாதிகாரி. ” விடைத்தாளில் உள்ள பிழைகளை வசித்துக் காட்டுவேன். இது நேர்மை குறைவான பழக்கம் என்று அப்போது நான் உணர்ந்திருக்கவில்லை என்று பாவமன்னிப்பு கோருகிறார்.  70களின் தொடக்கத்தில் மாணவர்களின் மீது அதிகாரம் செலுத்துவதற்காக என் பாக்கெட்டில் ஏறிய சிவப்பு நிற பேனா 80களின் தொடக்கத்தில் அதிகாரமற்று அன்பு செலுத்தும் பேனாவாக மாறிப்போனது, அதிகாரமற்று இருப்பதை போன்ற மகிழ்ச்சி வேறு எதில் இருக்கிறது.

என் சிவப்புப் பால்பாயிண்ட் பேனா | Read ...

தேர்வில் தோற்று தற்கொலை மரணங்களை எத்தனையோ மாணவர்களை பார்த்துள்ளோம், ஆனால் அதற்கு முன்பாகவே வகுப்பறைகளில் ஆசிரியர்களாலும், வீட்டில் பெற்றோர்களாலும் மரணத்தை ருசிக்கின்றனர் !!ஏய் செவிடு, ஏய் குள்ளா, ஏய் கருவாயா என்று ஒவ்வொரு முறையும் அவர்களை காயப்படுத்தி மரணத்தின் ருசியை அறியவைக்க நாம் முயல்கிறோம்.  தினசரி பார்க்கிற மனிதர்கள், பார்க்கிற காட்சிகள், பழக்கப்பட்ட பேச்சுக்கள் நம் சாரத்தை உறிஞ்சிக்கொண்டு இருக்கிறது. திடீரென்று கேட்கும் ஒரு குரல் இழந்த பரவசத்தை மீட்டுத்தருகிறது. துறை சார் வல்லுநர்கள் வகுப்பறைகள் உற்சாகமாகின்றன. உயிர் பெறுகின்றன.

குழந்தைகளை மலர வச்சு கல்வி தரணும். பள்ளிக்கூடங்கள் உலகத்தின் மிகப்பெரிய நிறுவனம். மாணவர்களின் அசல் முகத்தைத் திட்டமிட்டுக் கரைக்கிற இடம். வடிவமைக்கப்படாமல் தப்பித்தது எதுவோ, அதுவே உன் ஜீவன் மிக்க சாராம்சம் என்று சிந்தனையாளர்கள் சொல்வதுண்டு. பள்ளிகளில் வடிவமைத்தல், மதிப்பிடுதல், வடிகட்டுதல் எனப் பல வடிவங்களில் இருக்கின்றன நுட்பமான அதிகாரங்கள்.

அரசுப்பள்ளி ஆசிரியர்களிடம்தான் வகுப்பறை தாண்டிய வாசிப்பு கூடுதலாக உள்ளது. மனந்திறந்த உரையாடலும் அவர்கள் மத்தியில் சாத்தியமாக இருக்கிறது. விவாதத்தின்போது அவர்கள் வாயொடுங்கி நின்றதில்லை. ஆகவே அப்படிப்பட்ட ஆசிரியர்களை நிர்பந்தப்படுத்தாமல் நேசத்தின்வழி நெருங்கினால், அப்போதுதான் மாற்றம் சாத்தியம் என்கிறார்.

புதுப்புதுப் பரிசோதனைகளை மேற்கொள்வோர் உடனடியாக இந்த உலகம் நம்மை அங்கீகரிக்க வேண்டும் என்று ஏங்க வேண்டியதில்லை, சிறு சிறு அவமதிப்பையும், புறக்கணிப்புகளையும் பார்த்து வெடித்துச்சிதறமல், இயல்பாக கடக்கவேண்டும், அப்படி கடந்தவர்களான பாவ்லோ பிரைரே, கீஜுபாய், கோபயாட்சி ஆகியோர்தான் வரலாற்றில் நிற்கின்றனர். ஆசிரியர்கள் கட்டாயம் வாசிக்கவேண்டிய இரண்டு நூல்கள் 1டோட்டோ சான் 2பகல் கனவு.
சலிப்பற்ற வகுப்பறையில் பாடம் கனமற்றுப் போகும், ஒரு குழந்தையும் விடுபட்டு போய் விடாது.

என் சிவப்புப் பால்பாயிண்ட் பேனா | Buy ...

ஒரு பேராசிரியர் நிகழ்வை தொகுத்து வழங்கும்போது அடுத்து வரும் நிகழ்வு என்பதற்கு மாற்றாக அயிட்டம் என்கிறார். அடுத்துவரும் அயிட்டம் பாரதியார் பாடல் என்று கூறும்போது மாணவர்கள் ஒவ்வொரு அயிட்டதிற்கும் சிரிக்கிறார்கள். ஏனெனில் அயிட்டம் என்றால் மாணவர்களின் மொழியில் வேறு. இப்படிபட்ட மொழி இடைவெளியில்லாமல் ஆசிரியர்கள் இருக்கவேண்டும்.

என் ரசனையைவிட, என் மேதாவி புலமையைவிட, என் மாணவர்கள் முக்கியம் என்ற சத்தியம் என் மனத்தருகே வந்தது பணிஓய்விற்கு பிறகுதான் என உண்மையை நேர்மையாக ஒத்துக்கொள்கிறார். அந்த நேர்மைக்கு என் சிரந்தாழ்ந்த வணக்கம். உயர்ந்த மனிதர்.  அவமதிப்புகளை மறந்தால்தான் பகையையும் மறக்கமுடியும் நம் வாழ்க்கையில் அவமதிப்புகளுக்கும் கொஞ்சம் இடம் கொடுக்கலாம் என்ற ஒரு ஆசிரியரை குறிப்பிடுகிறார். மாற்றுச்சிந்தனை.

முடிவாக ஒரு ஜென் கதை. மாரா என்பது ஒரு தீயசக்தியின் தலைமை (ஜப்பானிய நம்பிக்கை )அந்த மாராவும், பரிவாரங்களும் தெருவில் செல்லும் போது, எதிரில் ஒருவர் மலர்ந்த முகத்துடன் வருகிறார், அப்போது மாராவின் உதவியாளன், அய்யா அந்த ஆள் மட்டும் ஏன் அப்படி மலர்ந்த முகத்துடன் வருகிறான் என்று கேட்க, அவன் உண்மையை கண்டுபிடித்து விட்டான் அதனால் அப்படி வருகிறான், சில நாட்களில் அதுவே நம்பிக்கையாகிவிடும் அதனால் ஒன்றுமில்லை என்ற மாரா கூறிவிட்டு, மேலும் உண்மைதான் நமக்கு எதிரி, நம்பிக்கைகளாலும், பிடிவாதங்களாலும் நமக்கு எப்போதும் ஆபத்தில்லை என்கிறான்.நம்பிக்கைகள்தான் மனிதனை அலைக்கழிக்கிறது, மக்களின் நம்பிக்கைகள் எவ்வாறு மாதங்களாக மாறி நம்மை நிறுவனப்படுத்துகிறது என்பது புரிகிறது.

இந்நூல் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் வாசிக்கவேண்டிய ஒன்று. தேடிப்பிடித்தாவது வாசியுங்கள், உங்களின் வகுப்பறைகள் நிச்சயமாக மாற்றம் பெரும்.

நூல் =என் சிவப்புப் பால்பாய்ண்ட் பேனா
ஆசிரியர் =ச. மாடசாமி
பதிப்பு =பாரதி புத்தகாலயம்
விலை =ரூ. 60/

அன்புடன்

பெ. அந்தோணிராஜ்

தேனி.

Leave a Response