இன்றைய புத்தகம்நூல் அறிமுகம்

நவீன முகங்களோடு மரபை மீட்டெடுத்தல்!

Spread the love

எட்வர்ட் செய்த்தும் கீழைத்தேய இயலும் ( 2018 சுஜாதா விருது- கட்டுரை) : நூல் அறிமுகம் 
தேடுதலில் மனித உயிர் தனித்துவம் மிக்கது. நம்பிக்கை சடங்கானது. சடங்கு பண்பாடானது. பண்பாடு சமயம் என்பதைக் கட்டமைக்கிறது. சமயம் பல்வேறு தத்துவங்களை உருவாக்கியது. அதிகார வர்க்கத்தால் வார்த்தெடுக்கப்பட்ட தத்துவங்கள் மறுமலர்ச்சி காலகட்டத்தில் மாற்றுப் பாதையை நோக்கி நகர்கின்றன. அறிவியல் சிந்தனையோடு கூடிய காரண, காரிய எதார்த்தம் மனிதனை வேறு தளத்திற்கு நகர்த்துகிறது.
மனிதன் இடப் பெயர்வு என்பதை இயல்பாகக் கொண்டாடுபவனாக இருக்கிறான். இந்த இடப் பெயர்வு என்பது தன்னையும் தன் நாட்டையும் வலுப்படுத்த கட்டாயத்தைத் திணிக்கிறது. உலகம் முழுவதும் உள்ள மனித இனம் தங்களுக்குள் உறவையோ பகையையோ வளர்த்துக் கொள்ளுதல் என்பது 19ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே சாத்தியமானது. இதற்குள் பல்வேறு மனித சிந்தனையின் பிரிவுகள் ஒளிந்து கிடக்கின்றன.
மனித இனம் முதலில் தோன்றியது எங்கு என்பதைவிட அம்மனித இனத்தின் அறிவுச் செழுமை முதலில் எங்கு தொடங்குகிறது என்பது முக்கியமான ஒன்றாகும். இதில் இரு பெரும் பிரிவுகள் முக்கியமாகின்றன. கிழக்கத்திய நாடுகள், மேற்கத்திய நாடுகள், இவ்விரண்டு நாடுகளின் கொடுக்கல் வாங்கல் சந்தர்ப்பங்கள் பல காலகட்டங்களிலும் பலவாறு நிகழ்ந்துள்ளது.


 
காலனிய நாடுகளின் அறிவார்ந்த தத்துவக் கோட்பாட்டினூடாக வலுகொண்ட கீழைத்தேயவியல் முக்கிய கோட்பாடாகும். அதன் முன்னோடியாக செயல்பட்ட எட்வர்ட் செய்த்தினூடாக இதனைப் புரிந்து கொள்வதும் தேவைப்படுகிறது.
மேற்கு, கிழக்கு குறித்த தத்துவார்த்த விவாதங்கள் தற்பொழுது விமர்சையாக முன்னெடுக்கப்படுகின்றன. அதேசமயம் அப்படியான சிந்தனை தமிழில் வலுவாகத் தொழிற்பட்டதாகக் கூறமுடியாது. சிலர் அதனை முன்னெடுக்கின்றனர். அந்த வகையில் எச்.பீர். முஹம்மது அவர்களின் ‘‘எட்வர்ட் செய்த்தும் கீழைத்தேய இயலும்’ ’எனும் நூல் கவனிக்கத்தக்கது.
இருபத்தைந்து கட்டுரைகளால் ஆன இந்நூல் சமகால சமய அரசியலை நுட்பமாக கேள்வி கேட்கிறது. கிழக்கு என்பதில் ஆசியா, ஆப்ரிக்கப் பிராந்தியங்களும் மேற்கு என்பதில் ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லத்தீன் அமெரிக்கா ஆகிய பிராந்தியங்களும் அடங்குகின்றன. இப்பிரிவினையின் ஊடாக செயல்படும் உலக மயமாக்கலின் சாத்தியப்பாடுகள் என்பவை அவ்வவற்றின் கலாச்சாரத்தை முன்வைத்து நகர்த்தப்படுகின்றன. இஸ்ரேலில் (ஜெருசலம்) தான் பெற்ற அனுபவத்தை அமெரிக்காவிற்குப் புலம் பெயர்ந்து புடம் போட்ட சிந்தனைவாதி செய்த். எனவேதான் கீழைத் தேய சிந்தனைகளின் உலகளாவிய பரப்பெல்லையை முழுமையாகப் பயணிக்க முடிந்திருக்கிறது அவரால்.
அதிகாரமும் சமயமும் இணைவதால் நிகழும் வன்முறை என்பது பல்வேறு அதிர்வுகளை உருவாக்குவது இயல்பு. அவ்வதிர்வுகளின் ஊடாக நிகழும் இன அழிப்பு, அமுக்கம் என்பன வரலாற்றில் வடுக்களாய் கிடக்கின்றன. குறிப்பாக இஸ்லாம் என்கின்ற சமயத்தின்மீது உலக நாடுகள் ஒருங்கிணைந்து உருவாக்கி வைத்திருக்கிற பிம்பம் என்பது கவனிக்கப்பட வேண்டியது. அதனைத் தோலுரித்துக் காட்டியவர் செய்த். அமெரிக்க அரசியல் ஆய்வாளரான சாமுவேல் ஹாண்டிங்டன் மேற்குறித்த செய்த் விவாதத்தில் முக்கியமானவர்.
முகமதியர்கள் ஆதிக்கம் செலுத்திய காலங்களில் அவர்களின் செயல்பாடுகள் என்பவை முக்கியமானவை. இவை மேற்கிலும் கிழக்கிலும் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தியவை. அதனைத் தத்துவவியல் சிந்தனையோடு முன் எடுத்து செயல்பட்டவர்களில் முக்கியமானவர் எட்வர்ட் செய்த் அதே முகமதியர்களின் பக்கம் அதிகார வர்க்கங்கள் தங்களின் கொடூரங்களைக் கட்டவிழ்த்து விட்டதன் பின்பான நிகழ்வுகள் என்பது வரலாற்றில் இருண்டு கிடக்கிறது.
ஒட்டுமொத்த உலக நாடுகளும் இஸ்லாம் என்கிற ஒன்றை மையப்படுத்தி தங்களின் ஆதிக்கத்தை செலுத்துகிறபொழுது அம்மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுத் தீவிரவாதிகள் என்கிற புள்ளியை அடையாளப்படுத்தி அவை நிகழ்த்தப்படுகின்றன. கிறித்துவம் அதில் தனக்கான வேலைகளை செய்து முடித்து பல காலமாகிவிட்டது. இந்து என்கிற மையத்தை இந்தியா வலுப்படுத்துகிறது.
புவி அரசியல் சார்ந்த அழகியல், பொருளியல், சமூகவியல் மேலும் வரலாறு குறித்த அறிதல்தான் கீழைத் தேயவியல் என்பதாக முன்னெடுத்தார் செய்த். இவற்றில் இருந்து நோக்குகிற பொழுது செய்த் தன்னுடைய சித்தாந்தத்தை குறுகிய வட்டத்திற்குள் அடக்காமல் உலகக் கண் கொண்டே நோக்குகிறார். ஆனால் பாலஸ்தீன், ஈரான், சிரியா போன்ற நாடுகளுக்கு அளிக்கப்பட்ட கொடூரங்கள் கவனிக்கத்தக்கவை.
சமயம்கடந்த உலகமயமாக்கல் என்பது மறைமுகமாக குறைந்தபட்ச மனிதாபிமானத்தை எதிர்நோக்கி வாழ முற்படுகின்ற குறிப்பிட்ட சமயத்தை உலகத்தின் பார்வையில் கெட்டதாக அடையாளப்படுத்தப்படும் போக்கு நீள்கிறது.
இப்படியான இன்றைய உலக அதிகார அரசியலில் எட்வர்ட் செய்த்தின் சிந்தனைகளை கீழைத்தேயம் என்கிற வட்டத்தைத் தாண்டிப் பார்க்க வேண்டிய சூழல் உள்ளது. ‘‘அமெரிக்கக் குடியுரிமை பெற்ற பாலஸ்தீனியராக, பல்கலைக்கழக இலக்கியப் பேராசிரியராக, கீழைத்தேய கோட்பாட்டாளராக, சொந்த நிலத்தின் பேரினவாதத்தால் அகதிகளாக்கப்பட்ட பாலஸ்தீன மக்களின் உரிமைப் போராளியாக தன் அறிவு வாழ்க்கையை அர்ப்பணித்த செய்த்தின் சிந்தனைகளை தமிழ்நாட்டில் உள்ள அறிவாளர்கள் முன்னெடுத்து நடத்த வேண்டும்.
சொந்த மண்ணில் வாழ்வதற்குரிய உரிமையும் சுதந்திரமும் பறிக்கப்படுகிற பொழுது அவர்களின் பண்பாடு சிதைகிறது. சிக்கலுக்குள்ளாகிறது. ஆயுதம் ஏந்திப் போராடுவது என்பதைவிட அறிவை ஏந்தி போராடுவதே மேன்மையானது. காலத்தால் அழியாத வெற்றியைத் தருவது. செய்த்தின் பார்வையில் நின்று பார்க்கிறபொழுது கீழைத் தேயத்தின் பண்பாடு, சமூகவியல், பொருளியல் சார்ந்த காரணிகளை மாற்றி அவரவரின் மரபின் வேரினை அடியோடு பிடுங்கி எறிய எத்தனிக்கும் போக்கை எதிர்கொள்ளும்போது நாம் கடைபிடிக்க வேண்டிய தத்துவவியலை எச்.பீர்முஹம்மது அழகாகக் காட்டி இருக்கிறார் இந்நூலில். அவரின் நவீன கோட்பாடு குறித்த சிந்தனை தொடர்வது தமிழின் நவீன இலக்கிய முகங்கள் விழித்தெழ அடிப்படையாக அமையும்.
-கா.அய்யப்பன்

புத்தகத்தை இங்கு வாங்கலாம்

Originally published in Puthagam Pesuthu Oct-2017

Leave a Response

Top Reviews

Video Widget

gallery