நேர்காணல்

ராகுல் காந்தியுடன் டாக்டர் ரகுராம் ராஜன் உரையாடல் (தமிழில் முனைவர்.தா.சந்திரகுரு)

Spread the loveகோவிட்டுக்குப் பிந்தைய உலகில், இந்த உலகம் அனைத்தையும் மறுபரிசீலனை  செய்ய வேண்டியிருக்கும் என்று பொருளாதார வல்லுனரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநருமான  ரகுராம் ராஜன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியிடம் கூறினார். உலகெங்கிலும் அதிகாரத்தைப் பறிப்பதான உணர்வு இருப்பதாக கூறுகின்ற டாக்டர் ராஜன்,  மக்கள் அதிகாரமற்றிருக்கின்ற உலகில், மையப்படுத்தப்பட்ட சர்வாதிகார மாதிரி சில சமயங்களில் ஈர்ப்பதாக இருக்கும் என்றும், அத்தகைய  அதிகார மையத்தின் மீது  அதிக சுமை சுமத்தப்படும் போது, இறுதியில்  அது சரிந்து  விடுவதை வரலாற்று ரீதியாக கண்டிருக்கிறோம் என்றும் குறிப்பிடுகிறார். .

உரையாடலின் எழுத்தாக்கம்

ராகுல் காந்தி: ஹலோ

ரகுராம் ராஜன்: காலை வணக்கம். எப்படி இருக்கிறீர்கள்

ராகுல் காந்தி: நலம், உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி

ரகுராம் ராஜன்: அப்படியே

ராகுல் காந்தி: இந்த வைரஸால் என்ன நடந்து கொண்டிருக்கிறது, என்ன நடக்கப் போகிறது என்பது  குறித்து,  ஏராளமான கேள்விகள்  மக்களுடைய மனதில் இருக்கின்றன. குறிப்பாக நமது பொருளாதாரம் பற்றிய கேள்விகள். அந்த கேள்விகளுக்கான பதிலை எனக்காகவும், உங்களுடன் உரையாட எண்ணியிருந்த சிலருக்காகவும் பெறுவதற்கும், நீங்கள் என்ன  நினைக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்கும் இது அருமையான வழி  என்று நான் நினைக்கிறேன்.

ரகுராம் ராஜன்: என்னை அழைத்ததற்கு நன்றி. இந்த உரையாடலை ஆரம்பித்து வைத்ததற்கு நன்றி. இந்த காலகட்டத்தில், இந்த விஷயங்கள் குறித்து ஒருவர் தேவையான அளவிற்குத் தகவல்களைப்  பெற்று வைத்திருப்பது முக்கியம்.  முடிந்தவரை  தகவல்கள் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

ராகுல் காந்தி: பொருளாதாரத்தின் மீதான தடையை அகற்றுவதற்காக நாம் எவ்வாறு சிந்திக்க வேண்டும்  என்பது என்னிடமிருக்கின்ற பிரச்சினை ஆகும். அவ்வாறு தடையை நீக்குவதற்கான பொருளாதாரத்தின் மிகமுக்கியமான பகுதிகள்  யாவை,  அதனை எந்த வரிசையில் செய்ய வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

ரகுராம் ராஜன்: இது நல்ல கேள்வி. ஏனென்றால், மருத்துவமனைகள் / மருத்துவ வசதிகள் அதிகமாக தேவைப்படுவதைத்  தடுப்பதற்காக தொற்றுநோய் பரவல் வளைவை வளைக்க முயற்சிப்பதிலிருந்து வெளியேறி, மக்களின்  வாழ்வாதாரங்களை மீளமைப்பது குறித்து இப்போது நாம் சிந்திக்கத் தொடங்க வேண்டும். நீண்ட காலத்திற்கு ஊரடங்கை நீட்டிப்பது மிகவும்  எளிதானது என்றாலும், பொருளாதாரத்தைப் பொறுத்தவரை அதை அவ்வாறு நீட்டித்து வைத்துக் கொள்ள முடியாது.

அது ஒரு தொடர்ச்சியாக இருக்க வேண்டும். முதலில்,  இடைவெளியைப் பராமரிக்கக்கூடிய இடங்களில். பணியிடங்களில் இடைவெளியுடன் இருப்பது மட்டுமல்லாமல், பணியிடங்களுக்குச் சென்று வருவதில் இடைவெளி இருக்க வேண்டும். போக்குவரத்து அமைப்பைப் பொறுத்தவரை, மக்களிடம் தனிப்பட்ட போக்குவரத்து வழிமுறைகள், மிதிவண்டிகள் அல்லது ஸ்கூட்டர்கள் அல்லது கார்கள் அவர்களிடம் இருக்கின்றனவா? அல்லது அவர்கள் பொது போக்குவரத்தைச் சார்ந்து இருக்கின்றார்களா?  பொது போக்குவரத்தில் இடைவெளியை எவ்வாறு நீங்கள் பராமரிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.

கட்டமைப்புகளை உருவாக்குவதிலும், வேலை செய்யும் இடங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதிலும் ஏராளமான வேலைகள் செய்யப்பட வேண்டும். ஒருவேளை விபத்துக்கள் நேர்ந்தால், புதிய நோயாளிகள்  இருந்தால், இரண்டாவது அல்லது மூன்றாவது ஊரடங்கு என்று செல்லாமல் விரைவாக எவ்வாறு தனிமைப்படுத்துவது  என்பதை உறுதி செய்ய வேண்டும். அந்த நிலைமைக்குச் செல்வது பேரழிவையே தரும்.

Shri Rahul Gandhi in conversation with Dr. Raghuram Rajan on ...

ராகுல் காந்தி: இதைத்தான் ஏராளமானோர் சொல்கிறார்கள்;  சுழற்சியாக ஊரடங்கிற்குள் நீங்கள் நுழைந்தால், அதாவது திறந்து, மீண்டும் மூட வேண்டிய கட்டாயத்தில் இருந்தால், அது பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பேரழிவையே தரும். ஏனெனில் அது நம்பிக்கையை முற்றிலுமாக அழித்துவிடும். இந்தக் கருத்தில் நீங்கள்  உடன்படுகிறீர்களா?

ரகுராம் ராஜன்: அது சரி என்றே நான் நினைக்கிறேன். இரண்டாவது  ஊரடங்கு வருவதாக எடுத்துக் கொள்ளுங்களேன்.  அதாவது    திறப்பதில்  நீங்கள் முழுமையாக  வெற்றி பெறவில்லை. மீண்டும் திறக்கும் போது, அதற்கடுத்து மூன்றாவது ஊரடங்கிற்கு நீங்கள் செல்வீர்களா என்ற கேள்வியை அது எழுப்புகிறது. அது நம்பகத்தன்மையை குறைக்கவே செய்கிறது.

100% வெற்றியை  நாம் இலக்காக கொண்டிருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அதாவது நோயாளிகள் யாருமில்லை என்ற நிலையை நம்மால் அடைய முடியாது. நாம் செய்ய வேண்டியது மீண்டும் திறப்பதை எவ்வாறு நிர்வகிப்பது என்பதாகும். அதாவது நோயாளிகள் இருந்தால், அவர்களை நாம் தனிமைப்படுத்துவதன் மூலம்.

ராகுல் காந்தி: எந்தெந்த பகுதிகளில் தொற்றுநோய் கடுமையாக இருக்கிறது என்பதை அறிவது அதை நிர்வகிப்பதன்  மையமாக இருக்கின்றது. அதன் மையமாக பரிசோதனை உள்ளது. பரிசோதனைத் திறன் அதிக அளவில் இல்லை என்ற உணர்வு இந்தியாவில் உள்ளது. இந்தியா போன்ற பெரிய நாட்டைப் பொறுத்தவரை,  ஒப்பீட்டளவில் அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகளில் உள்ளதை விட பரிசோதிக்கும் திறன் குறைவாகவே உள்ளது.  இதைப் பற்றி,  குறைந்த அளவிலான பரிசோதனை பற்றி…நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்… ?

ரகுராம் ராஜன்: நல்ல கேள்வி. இப்போதைக்கு அமெரிக்காவை  எடுத்துக் கொள்வோம். அங்கே ஒரு நாளைக்கு 150,000 பரிசோதனைகள் என்று பரிசோதனைகள் அதிகரித்துள்ளன. ஆனால் வல்லுநர்களிடையே, குறிப்பாக தொற்றுநோயியல் வல்லுநர்களிடையே உள்ள ஒருமித்த கருத்து என்னவென்றால்.., திறப்பதைப் பற்றி உண்மையிலேயே  நாம் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். குறைந்தபட்சம்  மும்மடங்காக  பரிசோதனைகள் ஒரு நாளைக்கு சுமார் 500,000 என்ற அளவில் இருக்க வேண்டும். மேலும் சிலர்  இன்னும் அதிக அளவிலான லட்சத்தில் பரிசோதனைகள் நடத்தபப்டுவதைப்  பற்றி பேசுகிறார்கள்.

இந்தியாவின் மக்கள்தொகையைப் பொறுத்தவரை, இதை நாம் நான்கால் பெருக்கிக் கொள்ள வேண்டும். அமெரிக்காவில் இருக்கின்ற அளவை அடைய வேண்டுமானால், ஒரு நாளைக்கு இருபது லட்சம் பரிசோதனைகளைப் பற்றி  நீங்கள் பேச வேண்டும். இப்போது ஒரு நாளைக்கு 25,000 – 30,000 பரிசோதனைகளுக்கு அருகில் கூட நாம் வரவில்லை.

ஆனால் தடை நீக்குவது குறித்து நாம்  புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். ஒருவேளை  பரிசோதனையை  பெரும் அளவில் மேற்கொள்ள வேண்டியிருக்கலாம். பெரிய அளவிலான மாதிரியை  எடுத்து, எடுத்துக்காட்டாக 1000 மாதிரிகள் எடுத்து, அந்த  மாதிரிகளில் வைரஸின் அறிகுறி ஏதேனும் இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும்.  அதில் நோயாளி இருப்பதாகக் கண்டுபிடித்தால், அந்த மாதிரியில் இன்னும் ஆழமாகச் சென்று அந்த நோயாளி யார்  என்பதைச் சரியாகக் கண்டுபிடிக்க வேண்டும். இந்த வழியில் சென்றால், அது நமது பரிசோதனை உள்கட்டமைப்பின் மீது இருக்கின்ற சுமையைக் குறைக்கும். இன்னும் அதிகமாக கண்காணிப்பதை அது உறுதிப்படுத்தும். ஒருவிதத்தில் தீவிரத்தைக் குறைக்க. ஆனால் நாம் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும், ஏனென்றால்  அந்த  வகையான  சோதனை  வருகின்ற வரை நம்மால் காத்திருக்க முடியாது.

ராகுல் காந்தி: வைரஸின் தாக்கம் இன்னும் இருக்கப் போகிறது. சிறிது காலம் கழித்து பொருளாதாரத்தின் மீது தாக்கம்  ஏற்படப் போகிறது.  இப்போதிருந்து ஓரிரு மாதங்களில் எதிர்பாராத எதிர்விளைவுகள் வரவிருக்கின்றன. இப்போது வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கும், 3-4 மாதங்கள் கழித்து வைரஸ் ஏற்படுத்தியிருக்கும் விளைவுகளை  எதிர்த்துப் போராடுவதற்குமான வேறுபாட்டை எவ்வாறு  காண்கிறீர்கள்?

ரகுராம் ராஜன்: அந்த இரண்டையும்  நீங்கள் இப்போதே செய்ய வேண்டும். என்ன நடக்கப் போகிறது என்பதைப் பார்க்கும் வரையிலும் நீங்கள் காத்திருக்க முடியாது. ஏனென்றால், வைரஸை எதிர்த்துப் போராடும் போது,  ஊரடங்கால் நலிந்து போன நிலையில்  பொருளாதாரம்  இருக்கிறது. மக்களுக்கு உணவளிக்க வேண்டியது அவசியம். நகர்ந்து சென்று கொண்டிருக்கின்ற புலம்பெயர்ந்தவர்களின் நிலைமையைப் பொறுத்தவரை, தங்குமிடம் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. மருத்துவ வசதிகளும் தேவைப்படுகின்றன. இவையனைத்தும் ஒரே நேரத்தில் செய்யப்பட வேண்டியவையாகும்.

சில விஷயங்களுக்கு முன்னுரிமை இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நமது திறன்களும், வளங்களும் குறைந்த அளவிலேயே இருக்கின்றன. நமது நிதி வளங்கள் மேற்கு நாடுகளை விட மிகக் குறைந்த அளவிலேயே இருக்கின்றன. நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், இந்த பொருளாதாரத்தை எவ்வாறு  தன்னம்பிக்கையுடன்  வைத்திருப்பது என்பதைத் தீர்மானிக்க வேண்டும். அப்போதுதான் நாம் மீண்டும் திறக்கும்போது, ​​அது  உடம்பு  சரியில்லாமல் படுக்கையில் இருந்து வெளியேறுவதைப் போன்று இருக்கும். அந்த நேரத்தில்  அது இறந்து போய் விடக் கூடாது.

மிக உடனடியாகச் செய்ய வேண்டியது, மக்களை ஆரோக்கியமாகவும், உயிருடனும் வைத்திருக்க வேண்டும். உணவு மிகவும் முக்கியமானது. பொது விநியோக முறை சென்றடைய முடியாத  இடங்களைப் பொறுத்த வரை,  அமர்த்தியா சென், அபிஜித் பானர்ஜி மற்றும் நானும் தற்காலிக ரேஷன் அட்டைகளைப் பற்றி பேசினோம். இந்த தொற்றுநோயை  இதற்கு முன்னெப்போதுமில்லாத சூழ்நிலையாகவே  நீங்கள் கருத வேண்டும்.

ஒட்டுமொத்த பட்ஜெட் வரம்புகள்  உள்ளன  என்பதை நினைவில் வைத்துக் கொண்டு, தேவையானதைச் சமாளிப்பதற்கு நாம்  விதிமுறைகளை மீற வேண்டும். நம்மிடம் ஏராளமான வளங்கள் மட்டுமே உள்ளன.

Rs 65,000 Cr needed to feed India's poor': Raghuram Rajan to Rahul ...

ராகுல் காந்தி: விவசாயத் துறை மற்றும் தொழிலாளர்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? புலம் பெயர்ந்த தொழிலாளர்கள். அவர்களுக்கான நிதி குறித்து  நாம் எவ்வாறு சிந்திக்க வேண்டும்?

ரகுராம் ராஜன்: நேரடிப் பயன்கள் பரிமாற்றத்தில் (DBT) நாம் மேற்கொண்டிருக்கும் முயற்சிகள், இந்த கட்டத்தில் உணரப்பட வேண்டியவையாக இருக்கின்றன. ஒப்பீட்டளவில் ஏழைகளாக இருக்கின்ற மக்களுக்கு நாம் அனைத்து வழிகளிலும் பணப்பரிமாற்றம் செய்ய வேண்டும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். விதவைகளுக்கான ஓய்வூதியங்கள், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் மூலம் அவர்களை அணுக பல்வேறு வழிகள் நம்மிடம் இருக்கின்றன. வேலை இல்லாதவர்கள், வாழ்வாதாரம் இல்லாதவர்கள் மற்றும் அடுத்த 3-4 மாதங்களுக்கு நிச்சயமற்ற நிலையில் இருக்கின்ற அவர்களை  நாம் கவனித்துக் கொள்ளப் போகிறோம் என்று சொல்ல வேண்டும்.

ஆனால் முன்னுரிமையைப் பொறுத்தவரை, மக்களை உயிருடன் வைத்திருப்பது மற்றும்  அவர்கள் வீதியில் இறங்கி போராடுவதைத் தடுப்பது அல்லது ஊரடங்கின் போது வேலை தேடுவதைத் தவிர்ப்பது  போன்ற நடவடிக்கைகள் இந்த ஊரடங்கின் போது பயனுள்ளவையாக இருக்கும்.

நம்மால் முடிந்தவரை   பொது விநியோக முறை மூலம் பணம்  மற்றும் உணவு  என்று இரண்டையும் அவர்கள் பெறுவதற்கான வழிகளை  நாம் கண்டுபிடிக்க வேண்டும்.

ராகுல் காந்தி: டாக்டர் ராஜன் , ஏழைகளுக்கு  நேரடியாகப்  பணத்தைக் கொடுக்க எவ்வளவு பணம் தேவைப்படும்?

ரகுராம் ராஜன்: தோராயமாக. 65,000 கோடி. நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி 200 லட்சம் கோடியில், அந்த 65,000 கோடி என்பது அவ்வளவு பெரிய தொகை இல்லை. நம்மால் அதைச் செய்ய முடியும். ஏழைகளின் உயிரைக் காப்பாற்ற  வேண்டுமென்றால், அதைக் கட்டாயம் செய்தாக வேண்டும்.

ராகுல் காந்தி: இப்போது இந்தியா ஒரு கடினமான சூழ்நிலையில் உள்ளது என்றாலும், கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு, இந்த தொற்றுநோயால் இந்தியா எந்தவொரு நன்மையையும் பெறுமா? இந்தியாவிற்கு சாதகமான  உலகளாவிய  மாற்றங்கள் ஏதேனும் இருக்குமா? உங்களைப் பொறுத்தவரை, உலகம் எந்த வகையில் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது?  .

ரகுராம் ராஜன்: இந்த வகையிலான சம்பவங்கள் எந்தவொரு நாட்டிற்கும் சாதகமாக இருக்க முடியாது. நாடுகள் அதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வழிகள் உள்ளன. நம்மால் இப்போது சொல்ல முடியும் என்று நான் நினைப்பது  என்னவென்றால், இதிலிருந்து வெளியேறும் போது உலகப்  பொருளாதாரம் குறித்து அனைத்தையும் நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இந்தியாவிற்கு வாய்ப்பு இருந்தால், அது அந்த உரையாடலை வடிவமைப்பதில் தான் இருக்கிறது. அது இரண்டு பெரிய  போரிடும் கட்சிகளுக்கிடையிலானது அல்ல என்பதால், அந்த உரையாடலில்  ஒரு தலைவராக நம்மால் இருக்க முடியும். உலகப் பொருளாதாரத்தைப் பொறுத்த வரை, இந்தியாவின் குரலைக் கேட்பதற்குப் போதுமான அளவில் அது பெரிய நாடாக இருக்கிறது.

இந்த சூழ்நிலையில்,  தனது தொழில்களுக்கு, அதன் விநியோகச் சங்கிலிகளுக்கான வாய்ப்புகள் இருப்பதை இந்தியாவால் காண முடியும். ஆனால்  மிக முக்கியமாக,  உலகளாவிய  வரிசையில் அதிகமான நாடுகளுக்கு அதிக இடம் இருக்கும் வகையிலான உரையாடலை நாம் முயற்சித்து வடிவமைக்க முடியும். இது ஒற்றை  அல்லது இருமுனை கொண்ட உலகளாவிய ஒழுங்கைக் காட்டிலும் பல துருவ உலகளாவிய ஒழுங்காக இருக்கும்.

ராகுல் காந்தி: அதிகாரங்களை ஓரிடத்தில் குவிக்கின்ற நெருக்கடி இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? அதிகாரம் குவிக்கப்படுவது அதிகமாக இருக்கிறது. உரையாடல்கள்  நிறுத்தப்படுகின்றன.  உரையாடல்கள் நீங்கள் குறிப்பிடுகின்ற இந்த சிக்கல்களைத் தீர்க்க உதவும். ஆனால் சில காரணங்களால் அது நடைபெறாமல் போய் விடுகிறது.

ரகுராம் ராஜன்:  உள்ளூர்த்  தகவல்களை  நடைமுறைக்கு கொண்டு வருவதற்கும், மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும்  அதிகாரப் பரவலாக்கம்  முக்கியமானது  என்று நான் நினைக்கிறேன்.  அதிகாரமிழக்கச் செய்யும்  உணர்வை உலகெங்கிலும் உங்களால் காண முடிகிறது. முடிவுகள்  என்னால்  எடுக்கப்படுவதாக இல்லாமல், வேறு  இடங்களில்  எடுக்கப்படுகின்றன. எனக்கென்று வாக்குரிமை இருக்கிறது. ஆனால் அது தொலைதூர இடத்தில் உள்ள யாரையோ தேர்ந்தெடுக்கிறது. என்னுடைய உள்ளூர் பஞ்சாயத்து, மாநில அரசிடம் அதிகாரம் குறைவாக இருக்கிறது. தங்களால் எதற்கும் குரல் கொடுக்க முடியும் என்பதை உணராததால், அவை வெவ்வேறு சக்திகளுக்கு இரையாகி விடுகின்றன.

ராஜீவ் காந்தி திரும்பக் கொண்டு வந்த பஞ்சாயத்து ராஜ்…,  அதே கேள்வியை நான் இப்போது உங்களிடம் கேட்கிறேன். அது  என்ன விளைவை ஏற்படுத்தியது மற்றும் எவ்வாறு பயனளித்தது?

ராகுல் காந்தி: அது மிகப்பெரிய விளைவை ஏற்படுத்திக் கொடுத்தது, ஆனால் அது பின்வாங்கப்படுகிறது என்று  கூறுவதில் வருத்தமடைகிறேன். ஏராளமான முற்போக்கு இயக்கங்கள் பஞ்சாயத்து ராஜ் மூலம் நடந்தன, இப்போது அந்த அதிகாரத்துவ அடிப்படையிலான கட்டமைப்பிற்கே நாம் திரும்பிச் செல்கிறோம். தென் மாநிலங்களில், அதிகாரம் பரவலாக்கப்பட்டிருப்பதால், அவர்கள்  நன்றாக வேலை செய்திருக்கிறார்கள். வட மாநிலங்களோ அதிகாரத்தைக் குவித்து வருகின்றன. பஞ்சாயத்துகள் மற்றும் அடிமட்ட அமைப்புகளிடமிருந்து அவை அதிகாரத்தைப் பறிக்கின்றன. மக்களிடம் எவ்வளவு நெருக்கமாக முடிவுகள் எடுத்துச் செல்லப்படுகின்றனவோ, அவ்வளவு அதிகமாக சரிபார்க்கும் திறனை அவர்கள் பெறுகிறார்கள். இது ஒரு செய்து பார்க்கப்பட வேண்டிய சோதனை என்றே நான் நினைக்கிறேன்.

உலக அளவில் இது எதனால் ஏற்படுகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? மிகப்பெரிய அளவில் அதிகாரக் குவியலும், உரையாடலை நிறுத்துவதும் எதனால் நடக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அதிகாரக் குவியலுக்கு மையமான முக்கிய காரணம் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா அல்லது பல விஷயங்கள் இதற்கு காரணமாக உள்ளனவா?

ரகுராம் ராஜன்: அதற்கு ஒரு காரணம் இருப்பதாகவே  நான்  நினைக்கிறேன். அது உலக சந்தைகள் என்பதாகவே நான் நினைக்கிறேன். சந்தைகள் உலகமயமாக்கப்பட்டால், சந்தை பங்கேற்பாளர்கள் அதாவது  நிறுவனங்கள் அனைத்து இடங்களிலும் ஒரே விதிகள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அனைத்து இடங்களிலும் ஒரே  ஒருங்கிணைப்பு  கட்டமைப்பை அவர்கள் காண விரும்புகிறார்கள். அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியான அரசாங்கம் இருப்பதை விரும்புகிறார்கள்.  ஏனெனில் அது அவர்களுக்கு நம்பிக்கையைத் தருகிறது.

ஒருமைப்படுத்துகின்ற இந்த முயற்சி உள்ளூர் அல்லது தேசிய அரசாங்கங்களிடமிருந்து அதிகாரத்தைப் பறிக்கிறது. கூடுதலாக, என்னால் அதிகாரத்தைப் பிடிக்க முடிந்தால், அது முடியும் என்று அதிகாரத்தைக் குவிப்பதற்கான தூண்டுதலும் இருக்கிறது. எனவே அது ஒரு நிலையான ஆசையாகி விடுகிறது. மாநிலங்களுக்கு நீங்கள் நிதியுதவி  அளிக்கிறீர்கள் என்றால், இங்கே அந்த  நிதியைப் பெறுவதற்கென்று  நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய  விதிகள் இருக்கின்றன. ‘நான்  உங்களுக்கு இந்த நிதியைத் தருவேன். கேள்விகள் எதுவும் கேட்கப்படாது. ஏனென்றால் நீங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள்  என்பது  எனக்குத்  தெரியும்.  உங்களுக்குப்  பொருத்தமானது எது என்பதை  நீங்கள் அவசியம் உணர்ந்திருக்க வேண்டும்’.

Live: Rahul Gandhi's interaction with Dr. Raghuram Rajan on ...

ராகுல் காந்தி: புதிய மாதிரி ஒன்று இருக்கிறது. அது சர்வாதிகார மாதிரி. இது தாராளவாத மாதிரியைக் கேள்விக்குள்ளாக்குகிறது.  இது வேலையைச் செய்து முடிப்பதற்கான  வேறுபட்ட வழியாகும். அது மேலும் மேலும் பல இடங்களில் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது. அது பின்னுக்குத் தள்ளப்படும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

ரகுராம் ராஜன்: எனக்குத் தெரியாது. அதிகாரமற்று இருக்கின்ற உலகில், இவ்வாறான மைய சர்வாதிகார மாதிரியில் இருக்கின்ற வலுவான உருவம், சில நேரங்களில்  அனைவரையும் ஈர்ப்பதாகவே இருக்கும். குறிப்பாக அந்த நபருடன்  தனிப்பட்ட உறவை வளர்த்துக் கொள்ள முடியும் போது. குறிப்பாக  அவர்கள்  மக்களைக் கவனித்துக்கொள்கிறார்கள் என்று  உணரும் போது, அவரை நம்புகிறார்கள்,  . .

‘நான் மக்கள் சக்தி’. எனவே நான் என்ன சொன்னாலும் அது செல்லுபடியாகும் என்ற உணர்வை வளர்த்துக் கொள்வதே, அந்த சர்வாதிகார  நபரிடம் உள்ள சிக்கலாக இருக்கிறது. எனது சட்டங்கள் மட்டுமே செல்லும், அதன் மீது கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது. நிறுவனங்கள் அல்லது பரவலாக்கப்பட்ட  அமைப்புகள் என்று அனைத்துமே  என்னைக் கேட்டே செயல்பட வேண்டும்.

வரலாற்று ரீதியாக என்ன நடந்தது என்றால், அதிகார மையத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் போது, இறுதியில்  அது  சரிந்து  விடுகிறது.

ராகுல் காந்தி: உலகப் பொருளாதார அமைப்பில் ஏதோ தவறு நடந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. அது மிகவும் தெளிவாக  உள்ளது. அது வேலை செய்யவில்லை என்று சொல்வது சரியாக இருக்குமா?

ரகுராம் ராஜன்: ஏராளமானவர்களிடம் இது வேலை செய்யவில்லை என்று சொல்வது நியாயம் என்றே  நான் நினைக்கிறேன். வளர்ந்த நாடுகளில் செல்வம் மற்றும் வருமானத்தில் அதிகரித்து வருகின்ற ஏற்றத்தாழ்வு நிச்சயமாக கவலைக்குரியது. வேலைகளின் ஆபத்தான தன்மை, அதாவது வேலை பாதுகாப்பின்மை கவலைக்குரிய மற்றொரு அம்சமாகும். உங்களுக்கு நாளை வருமானம் ஏதேனும் கிடைக்குமா என்பது தெரியாமல் இருப்பதாக இந்த கிக் வேலைகள் உள்ளன.

இந்த தொற்றுநோய்களின் போது இவர்களில் பலருக்கு எந்தவிதமான உதவியும் கிடைப்பதில்லை என்பதை நாங்கள் கண்டோம். அவர்கள் வருமானம் மற்றும் பாதுகாப்பு  என்று இரண்டையும் இழந்துவிட்டார்கள்.

ஆகையால், வளர்ச்சியைக் குறைக்கின்ற பிரச்சினையும் இன்று நம்மிடையே இருக்கிறது. சந்தைகளை நாம் தவிர்த்து விட முடியாது. நமக்கு வளர்ச்சி  தேவை. போதுமான விநியோகத்திலும் நமக்கு சிக்கல் உள்ளது. வளர்ச்சியின் பலன்களை அதே வழியில் மக்களால் பெற முடிவதில்லை. பலர் வெளியேற்றப்படுகிறார்கள். எனவே இரு தரப்பினர் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும்.

அதனால்தான் பலன்களை விநியோகிப்பதில் கவனம் செலுத்துவதை விடவும், வாய்ப்புகளை விநியோகிப்பதில் கவனம்  செலுத்த வேண்டும் என்பதாக நான் உணர்கிறேன்.ராகுல் காந்தி: உள்கட்டமைப்பு மக்களை இணைக்கிறது, அது வாய்ப்பளிக்கிறது என்று நீங்கள் கூறியது சுவாரஸ்யமானது. பிளவு மற்றும் வெறுப்பு இருந்தால், அது மக்களைத் துண்டிக்கிறது. அதற்கும்  உள்கட்டமைப்பு இருக்கிறது. பிளவின் உள்கட்டமைப்பு மற்றும் வெறுப்பின் உள்கட்டமைப்பு என்று உள்ளது. அது  பெரிய  அளவிற்கு சிக்கலை ஏற்படுத்துகிறது.

ரகுராம் ராஜன்: நிச்சயமாக. சமூக நல்லிணக்கம் என்பது பொது நன்மை. அனைவரும் தங்களை இந்த அமைப்பின் ஒரு பகுதி என்று நம்புவதால், அமைப்பிற்குள் சமமான பகுதி என்பது அவசியம்.  பிரிக்கப்பட்ட வீடாக நாம் இருக்க முடியாது.  குறிப்பாக  நமக்கான சவால்கள்  மிகப் பெரிய அளவில் இருக்கின்ற இந்த காலங்களில்… எனவே நான் இதைச் சொல்ல விரும்புகிறேன் .. நமக்கான அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்தித் தந்த தேசத் தந்தைகள், நமது அரசியலமைப்பை  எழுதியவர்கள் மற்றும் ஆரம்ப காலத்து  நிர்வாகங்கள்… இவை குறித்து நான் இப்போது நேரம் செலவழித்து வருகிறேன்…சில சிக்கல்களை  அலமாரிக்குள் வைத்து மூடி வைதுக் கொள்ள வேண்டும், நீங்கள் அதைத் தொடக்கூடாது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். அந்த சிக்கல்களுக்குள் சிக்கினால், ஒருவருக்கொருவர்  சண்டையிட்டுக் கொள்வதில்  நாம் ஏராளமான நேரம் செலவிட வேண்டியிருக்கும் என்பதால்….

ராகுல் காந்தி: மேலும், ஒரு முன்னோக்குப் பார்வையுடன் போராடுகின்ற போது, வரலாற்றைப் பின்னோக்கிப்  பார்க்க  முனைகிறீர்கள். இந்தியாவிற்கு எவ்வாறு புதிய பார்வை  தேவைப்படுகிறது என்பது பற்றி நீங்கள் கூறியது எனக்குப் பிடித்திருக்கிறது. உங்கள் பார்வையில், அதன் கூறுகள் என்னவாக இருக்கும்? உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். கடந்த 30 ஆண்டுகளில் இருந்து,  எந்த அளவிற்கு  அது வித்தியாசமாக இருக்கப் போகிறது? எந்த ஆதாரங்கள் வித்தியாசமாக  இருக்கும்?

ரகுராம் ராஜன்: ஒருபுறத்தில் திறன்களை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன். திறன்களை உருவாக்குவதற்கான கூறுகள் சிறந்த கல்வி, சிறந்த சுகாதாரம், சிறந்த உள்கட்டமைப்பு. இந்த திறன்களை உருவாக்குவது பற்றி நாம் பேசும்போது நினைவில் கொள்ளுங்கள், நாம் பேசுபவற்றை செயல்படுத்த வேண்டும்.

நமது தொழில்துறை மற்றும் சந்தையின் சூழல் அமைப்புகள் எவ்வாறு இருக்கின்றன என்பதை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். பழைய லைசென்ஸ் பெர்மிட் அரசின் எச்சங்கள் நம்மிடையே இன்னும் இருந்து வருகின்றன. இன்னும் நல்ல தரமான பல புதிய வேலைகளை உருவாக்குவதற்கான முனைப்பு இருக்கும் இடத்திற்கு எவ்வாறு செல்லப் போகிறோம் என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.  அதிக சுதந்திரம், நம்பிக்கை இருந்தாலும், சரிபார்ப்பது அங்கே நல்ல யோசனையாக இருக்கும்.

Rs 65,000 Crores Will Be Needed To Bounce Back': Former RBI Chief ...

ராகுல் காந்தி: ‘சூழல்’அல்லது உணர்வும், நம்பிக்கையும் பொருளாதாரத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பது என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த கோவிட் சிக்கலின் போது நான் கண்டறிந்த விஷயங்களில் ஒன்று, நம்பிக்கை குறித்த பிரச்சினையே. அதுவே உண்மையான பிரச்சினையாக இருக்கிறது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது மக்களுக்குப் புரியவில்லை. எனவே  இந்த அமைப்பிற்குள் பயம்  இருக்கிறது. நீங்கள் வேலையின்மை பற்றி பேசுகிறீர்கள். நம்மிடம் இருந்த பெரிய, அதிக அளவிலான வேலையின்மை, இப்போது மிகப்பெரியதாகப் போகிறது. இப்போதிலிருந்து 2-3 மாதங்களில் இந்த விஷயத்தின்  தாக்கம் தெரிய வருகின்ற போது, வேலையின்மை  அதிகரிப்பு குறித்து  நாம் எவ்வாறு அறிந்து கொள்வது?

ரகுராம் ராஜன்: இந்த எண்கள் உண்மையில் கவலை அளிக்கின்றன. CMIEஐ (இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையம்) நீங்கள் பார்த்தால், கோவிட்டின் விளைவாக  கிட்டத்தட்ட 10 கோடிக்கும் அதிகமான மக்கள்  வேலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். வேலையின்மை மூலமாக 5 கோடிப் பேர், வேலையை விட்டு வெளியேறியதின் மூலம் 6 கோடிப் பேர் என்று இந்த குறிப்பிட்ட கணக்கெடுப்பு  சொல்வதை  உங்களால்  மறுக்க முடியும். ஆனாலும் இது மட்டுமே நம்மிடம் உள்ள  ஒரே தரவு ஆகும். அந்த எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். நாம் கொஞ்சம் கொஞ்சமாக அளவிடப்பட்ட  வழியில் திறக்க வேண்டும். ஆனாலும் முடிந்தவரை  விரைவாக  மக்களுக்கு வேலைகள்  கிடைக்கின்ற வகையில் திறக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு நீண்ட காலத்திற்கு உதவுகின்ற திறன் நம்மிடம் இல்லை. ஒப்பீட்டளவில் ஏழை நாடாக இருப்பதால், மக்கள் கணிசமாக குறைந்த இருப்புக்களுடனே வாழத் தொடங்குகிறார்கள்.

ஒரு கேள்வியை உங்களிடமே திருப்பி கேட்கப் போகிறேன். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் களத்தில் இருக்கின்ற உண்மைகளின் அடிப்படையில் ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை நாம் காண்கிறோம். ஆனால் இந்திய அரசு  வித்தியாசமான யதார்த்தத்தை எதிர்கொண்டுள்ளது. உங்கள் பார்வையில் மேற்கே ஆட்சி செய்வதற்கும், இந்தியாவில் வாழ்வின் யதார்த்தத்தைக் கையாள்வதற்கும் இடையிலான பெரிய வேறுபாடுகள் எவ்வாறு இருக்கின்றன?

ராகுல் காந்தி: அளவு, முதலாவதாக இருக்கிறது. பிரச்சினையின் அளவு, அதன் மையப் பிரச்சினையாக நிதி அளவு இருக்கிறது. சமத்துவமின்மை மற்றும் சமத்துவமின்மையின் தன்மை. சாதி போன்ற விஷயங்களில் இந்திய சமூகம் கட்டமைக்கப்பட்ட விதம் அமெரிக்க சமூகத்தை விட முற்றிலும் மாறுபட்டு இருப்பது  உங்களுக்குத் தெரியும்.

இந்தியாவைத் தடுத்து நிறுத்துகின்ற சில கருத்துக்கள் ஆழமாக உட்பொதிக்கப்பட்டவையாக, பெரும்பாலும் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. எனவே இப்போது இந்தியாவிற்குத் தேவைப்படுகின்ற ஏராளமான, வகையான, சமூக மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மேலும் பெரும்பாலான  பிரச்சினைகள் வெவ்வேறு மாநிலங்களில்  வெவ்வேறாக வேறுபடுகின்றன. தமிழ்நாட்டு அரசியல், தமிழ்நாட்டு கலாச்சாரம், தமிழ்நாட்டு மொழி, தமிழர்கள் சிந்திக்கும் விதம் உத்தரப்பிரதேசத்தில் இருப்பவர்கள் சிந்திக்கின்ற விதத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கிறது; எனவே அவற்றைச் சுற்றிய மாதிரிகளை உருவாக்க வேண்டும்.  இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான தீர்வு  வேலை செய்யாது, வேலை செய்யவும் முடியாது.

நமது அரசாங்கம், அமெரிக்காவை விட முற்றிலும் வேறுபட்டது என்றே நான் கருதுகிறேன். நமது ஆளுமை அமைப்பில், நமது நிர்வாக அமைப்பில், கட்டுப்பாட்டிற்கு என்று ஒரு பகுதி உள்ளது. ஒரு உற்பத்தியாளருக்கு எதிராக  மாவட்ட ஆட்சியாளர் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். சரிதானே? எனவே நமது சிந்தனை எப்போதுமே கட்டுப்பாட்டில் இருப்பதாகும். நான் அவ்வாறு நினைக்கவில்லை, ஆனாலும் மக்கள் சொல்கிறார்கள், இது ஆங்கிலேயர்களிடமிருந்து வந்தது என்று… நான் அது போன்று நினைக்கவில்லை, இது ஆங்கிலேயர்களுக்கு முந்தைய வரலாற்றுக்குரியது என்று  நான் நினைக்கிறேன்.

இந்தியாவைப் பொறுத்தவரை, ஆளுகை பற்றிய சிந்தனை எப்போதும் கட்டுப்படுத்த முயற்சிப்பது பற்றியதாகவே உள்ளது.  அது இப்போது நாம் எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்றாக இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். கோவிட் நோயைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் நீங்கள் சொன்னது போல் அதை  நிர்வகிக்க வேண்டும்.என்னை எரிச்சலூட்டும் விஷயங்களில் ஒன்று சமத்துவமின்மையின் அளவு. கடந்த பல ஆண்டுகளாகவே  இந்தியாவில் இதுதான் நிலைமை. இந்தியாவில் காணும் சமத்துவமின்மையை, அமெரிக்காவில் உங்களால்  பார்க்க முடியாது. இந்த சமத்துவமின்மையை எவ்வாறு குறைப்பது என்பதுதான் நான் எப்போதுமே பார்க்கின்றேன். ஏனென்றால் மிக அதிகமாகி, உயர்மட்ட சமத்துவமின்மையை அடைந்தவுடன், அது வேலை செய்வதை நிறுத்துகிறது. உங்களுக்குத் தெரியும்,  நான் காந்திஜி வழியை  நேசிக்கின்றேன். எல்லைக்கு அருகே சென்று, அதன் பின்புறத்தில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். இது ஒரு அரசியல்வாதியைப் பொறுத்த வரை, மிகவும் சக்தி வாய்ந்த விஷயம், அது குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் அந்த இடத்திலிருந்துதான் ஏராளமான உள்நோக்குகள் வரும் என்று நான் நினைக்கிறேன்.

சமத்துவமின்மையைக் கையாள்வது, எதிர்கொள்வது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கோவிட்டிலும் இது தெரிய வந்திருக்கிறது என்பதை நான் அறிவேன். அதாவது, இந்தியா தனது ஏழை மக்களிடம் எப்படி நடந்துகொள்கிறது என்பது பற்றி. நம் ஏழை மக்களிடம் நாம் நடந்து கொள்ளும் விதம், புலம்பெயர்ந்தோர் மற்றும் மேல்தட்டு வர்க்கத்தினர் நடத்தப்படும் விதம், இரண்டு முற்றிலும் மாறுபட்ட கருத்துக்கள், இரண்டு முற்றிலும் இந்தியா இருக்கிறது. இந்த இரண்டு இந்தியாவையும் எவ்வாறு  ஒன்றாக்குவது?

ரகுராம் ராஜன்: பிரமிட்டின் அடிப்பகுதியில் இருப்பவர்களின் வாழ்க்கையை கொஞ்சம் சிறப்பாக மாற்றுவதற்கு சில வழிகள் உள்ளன. ஆனால் அங்கே இருக்கின்ற அனைவரையும் சென்றடைவது குறித்து நாம் இன்னும் கவனமாகச் சிந்திக்க வேண்டும். அடுத்தடுத்த அரசாங்கங்கள் உணவு, உடல்நலம், கல்வி ஆகியவற்றில் வேலை செய்திருக்கின்றன. அங்கே சிறந்த வேலையை நம்மால் செய்ய முடியும் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் சவால்களைப் பொறுத்தவரை, அனைவரையும் சென்றடைவதற்கும், வாழ்க்கை நிலை உயர்த்தப்படுவதை உறுதி செய்வதற்குமான நிர்வாக சவால் நிச்சயமாக இருக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது. . ஆனால் என்னைப் பொறுத்தவரை, மிகப் பெரிய சவால் கீழ் நடுத்தர வர்க்கத்துக்கும், நடுத்தர வர்க்கத்துக்கும் இடையிலான வரம்பில்தான் இருக்கிறது. அந்த இடத்தில்தான்,  அரசு வேலை மற்றும் அதனுடன் வரும் வசதிகளை மக்கள் சார்ந்திராத வகையில், பெருமளவிலான வேலைகள்,  நல்ல தரமான வேலைகள் நமக்குத் தேவைப்படுகின்றன.

எனவே, நாம் வேலை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன், பொருளாதாரத்தில் மிகப்பெரிய விரிவாக்கம் முற்றிலும் அவசியம் என்று நான் நினைக்கிறேன். கடந்த பல ஆண்டுகளாக,  உண்மையில் பல இளைஞர்கள் தொழிலாளராக நுழைகையில், நமது பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் அதிக அளவிலான சரிவை நாம் கண்டிருக்கிறோம்.

நான் இவ்வாறு கூறுவேன். இருக்கின்ற சாத்தியக்கூறுகளுக்கு இடையில்  நாம் தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை. எந்தவொரு பகுதியும் செழித்து வளர்வதற்கான வாய்ப்பை நாம் உருவாக்க வேண்டும். கடந்த காலத்தில் நாம் தவறுகள் செய்திருந்தால், இதுதான் ஒரே வழி என்று நாம் சொன்ன, மென்பொருள் மற்றும் அவுட்சோர்சிங் சேவைகளில் நாம் பெற்ற மிக வெற்றிகரமான பகுதியைப் பற்றி சிந்தியுங்கள். அது இந்தியாவின் பலமாக இருக்கும் என்று யார் நினைத்திருப்பார்கள்? அது இப்போதுதான் வெளிப்பட்டிருக்கிறது. அரசாங்கம் கவனம் செலுத்தாததாலேயே அது தோன்றியது என்றுகூட சிலர் வாதிடுகின்றனர். நான் அந்த முகாமில் இல்லை, ஆனாலும் எந்தவொரு சாத்தியத்தையும் நாம் அனுமதிக்க வேண்டும். நமது மக்களுக்கான நிறுவனத்தை , அதன் பாதையில் செல்வதற்கு நாம் அனுமதிக்க வேண்டும்.

ராகுல் காந்தி: நல்லது, நன்றி. டாக்டர் ராஜன் நன்றி.

ரகுராம் ராஜன்: மிக்க நன்றி. உங்களுடன் பேசியதில் மகிழ்ச்சி.

ராகுல் காந்தி: பாதுகாப்பாக இருக்கிறீர்களா?

ரகுராம் ராஜன்: நான் பாதுகாப்பாக இருக்கிறேன். அனைத்தும் நல்லபடியாக இருக்கட்டும்.

ராகுல் காந்தி: நன்றி. வருகிறேன்

2020 ஏப்ரல் 30

https://www.youtube.com/watch?v=rFoVUcJ2pq4

1 Comment

  1. வளர்ந்த நாடுகளின் வருமான ஏற்றத்தாழ்வு, உலகமயமாக்கல் உலகெங்கும் விரும்பும் ஒரே மாதிரியான அரசுகள், அதிகாரக் குவியலுக்கு ஏற்படப்போகின்ற முடிவு, நாட்டின் முன்னேற்றத்திற்கு உரையாடலின் அவசியம், ஏழைகளுக்கு நேரடியாகப் பணப்பட்டுவாடா, செழித்து வளர்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குதல்,… இப்படிப்பட்ட சத்தான விசயங்களைத் தொலைக்காட்சிகளில் கேட்டு எத்தனை எத்தனை வருடங்களாகிவிட்ட்து. அதுவும் மிகப்பெரிய ஒரு பொருளாதார அறிஞரிடமிருந்து இந்தியப் பாராளுமன்ற எதிர்கட்சித்தலைவரே உரையாடியது நம்பிக்கையை மேம்படுத்தக்கூடியதாக இருந்தது. மொழிபெயர்ப்பாளருக்கு மிக்க நன்றி.

Leave a Response