Friday, May 29, 2020
Book Review

பொம்மை வீடு, கலகக்காரர் ஹென்ரிக் இப்சனின் பெண்ணியம் பேசிய நாடகம்..! – பெ.விஜயகுமார்

234views
Spread the love

 

நவீன நாடகங்களின் நாயகன் என்றழைக்கப்படும் ஹென்ரிக் இப்சன் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பிய நாடக மேடைகளில் கலகக்காரராக வலம்வந்தார். நார்வேயைச் சேர்ந்த இப்சன்( 1828-1906) டேனிஷ் மொழியில் எழுதிய நாடகங்கள் ஏற்படுத்திய தாக்கம் ஐரோப்பா முழுவதும் புயலென வீசியது. சமூகப் பிரச்சனைகளை மட்டுமே தன்னுடைய நாடகங்களின் கருப்பொருளாக எடுத்துக்கொண்டார். அன்றைய அரசியல் கொந்தளிப்புகளையும், நாடுகளுக்கிடையே நடந்த மோதல்களையும், போர்களையும் முற்றிலும் தவிர்த்தார். மர்மக் கொலைகள், திகில் காட்சிகள், இவைகளுக்குப்பின் இறுதியில் மர்மமுடிச்சு அவிழ்ந்து அனைவரும் அமைதியுடன் களைந்திடும் அன்றைய பாணி நாடகங்களிலிருந்தும் விலகி நின்றார். குடும்ப உறவுகளில் ஏற்படும் சலனங்கள், சஞ்சலங்கள், சமரசங்கள் பற்றியே அவரின் நாடகங்கள் மையங்கொண்டிருந்தன. சமூகத்தின் ஒழுக்க விதிகள், அறநெறிக் கோட்பாடுகள், வரையறைகள், சட்டதிட்டங்கள், கட்டுப்பாடுகள் இவற்றில் சிக்கித் தவிக்கும் மனிதர்களின் உளவியல் சார்ந்த பிரச்சனைகளே இப்சனின் பேசு பொருளாயின. ஆண்களும், பெண்களும் சமூகத்தின் தளைகளிலிருந்து விடுபட முடியாமல் தத்தளித்த சிரமங்களையே நாடகங்களாக அரங்கேற்றினார். அதிலும் ‘பொம்மை வீடு’ நாடகத்தில் இப்சன் பெண் விடுதலைக்கு ஆதரவான நிலையை எடுத்தது மிகப் பெரிய அதிர்வலைகளை உருவாக்கியது. பொம்மை வீடு (Doll’s House) போலவே இப்சனின் மற்ற நாடகங்களான Ghosts, The Wild Duck, An Enemy of People, Brand, The Master Builder போன்ற நாடகங்களும் அன்றைய ஐரோப்பிய சமூகங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தின. இப்சன் காட்டிய வழியில் பெர்னார்டு ஷா, ஆஸ்கர் வைல்டு, ஆர்தர் மில்லர், யூஜின் ஒனீல் போன்ற நாடகாசிரியர்கள் நவீன நாடகத்தை முன்னெடுத்துச் சென்றார்கள்.

இப்சனின் நாடகங்கள் பெரும்பாலும் கிளைமாக்ஸை ஒட்டிய கடைசிக் காட்சியிலேயே தொடங்குகின்றன. அதற்கு முந்தைய நிகழ்வுகள் எல்லாம் கதாபாத்திரங்களின் விவரணைகளிலிருந்து பார்வையாளர்கள் தெரிந்து கொள்கிறார்கள். இப்சன் அன்றாடம் நாம் வாழ்வில் காணும் மனிதர்களையே கதாபாத்திரங்களாக மேடையில் படைக்கிறார். வாழ்வின் யதார்த்தங்களிலிருந்து சற்றும் விலகி நிற்காமல் கதை சொல்லும் பாணியைக் கடைப்பிடிக்கிறார். இதுவே அவரது வெற்றியின் ரகசியம். இன்றும் ஷேக்ஸ்பியரின் நாடகங்களுக்கு இணையாக இப்சனின் நாடகங்கள் உலகெங்கும் அரங்கேறுகின்றன. 2006இல் இப்சன் மறைந்த நூற்றாண்டை உலகின் நாடக மேடைகள் அனைத்தும் அவரின் நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டாடின. அந்த ஆண்டில் உலக அளவில் அதிகம் அரங்கேறிய நாடகங்களில் இப்சன் நாடகங்கள் முதல் இடம் பெற்றன. இதுவே  இப்சனின் நாடகங்கள் இன்றும் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளன என்பதற்கான அடையாளம். ‘பொம்மை வீடு’ நாடகம் தமிழ் உட்பட உலகின் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ‘பொம்மை வீடு’ நாடகத்தை கனடாவின் ‘மணல் வீடு’ எனும் தமிழ் அமைப்பு மிகச் சமீபத்தில் (2018இல்) தமிழில் அரங்கேற்றியுள்ளது. இலண்டன் மாநகரிலும் தமிழ்ச் சமூகம் சென்ற ஆண்டு அரங்கேற்றியுள்ளது.

How Ibsen’s ‘A Doll’s House’ Helped Invent Feminism a Century Ago …

இப்சன் தன்னுடைய நாடகங்களில் கதாபாத்திரம் ‘தனக்குள் பேசுதல்’,  பார்வையாளர்க்கு மட்டுமாக ’தள்ளிநின்று பேசுதல்” போன்ற உத்திகளைக் கையாளவில்லை. நாடகங்கள் மகிழ்ச்சியான முடிவைக் கொண்டிருக்க வேண்டும் என்ற சம்பிரதாயத்தையும் உடைத்தெறிந்தார். இதனால் இப்சனின் நாடகங்கள் இயல்பாகவும், எளிமையாகவும் இருக்கின்றன. முழுவதும் தூய்மையான, அப்பழுக்கற்ற கதாநாயகர்களையும், முழுவதும் மோசமான வில்லன்களையும் இப்சனின் நாடகங்களில் காணமுடியாது. கதாபாத்திரங்கள் சாதாரண மனிதர்களுக்குரிய பலம் மற்றும் பலவீனங்களுடனேயே நடமாடுகிறார்கள். மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த இரத்தமும், சதையுமான மனிதர்களையே இப்சனின் நாடகங்களில் காண்கிறோம்.

’பொம்மை வீடு’ நாடகம் ஹெல்மர்- நோரா தம்பதிகள் வீட்டு வரவேற்பறையை மட்டுமே களமாகக் கொண்டுள்ளது. காட்சிகள் அனைத்தும் களம் மாறாமல் அவர்கள் வீட்டிற்குள் தொடங்கி அங்கேயே முடிகின்றன. தம்பதிகள் வாழ்வின் மூன்று நாள் நிகழ்வுகளே கதைக்கான காலமாகிறது. அதேபோல் இவர்களின் இல்லற வாழ்வில் ஏற்படும் பிரச்சனை மட்டுமே கருப்பொருளாகியுள்ளது. வேறு துணைக்கதைகளையோ, பிரச்சனைகளையோ தொடாமல் நாடகம் குழப்பங்கள் ஏதுமின்றி தெள்ளிய ஓடையென ஓடுகிறது. இதனால் செவ்வியல் நாடகக் கோட்பாடு வலியுறுத்தும் காலம், இடம், பொருள் குறித்த ஒற்றுமை நாடகத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஹெல்மர் – நோரா தம்பதிகள், அவர்களின் குடும்ப நண்பர் டாக்டர் ரேங்க், நோராவின் பால்ய கால சிநேகிதி கிறிஸ்டின், ஹெல்மருடன் வங்கியில் பணியாற்றும் கரக்ஸ்டடு ஆகியோர் மட்டுமே கதாபாத்திரங்களாகத் தோன்றி மேடையை அலங்கரிக்கிறார்கள். இப்சனின் நாடகங்களில் உரையாடல்கள் வெறுமனே கதையை நகர்த்திச் செல்லுதலுக்கு மட்டுமின்றி கருத்துப் பரிமாற்றம், அல்லது கருத்து மோதலுக்குப் பயன்படுவதைப் பார்க்கிறோம். பெர்னார்டு ஷா இதை இன்னும் வளர்த்தெடுத்து நாடகம் முழுவதையும் கருத்து பரிமாற்றத்திற்கான  தளமாக மாற்றினார். இப்சனின் நாடகங்கள் தொடக்கம், நடுப்பகுதி, முடிவு என்று கட்டுக்கோப்பாக வளர்ந்து செல்கின்றன.

’பொம்மை வீடு’ நாடகத்தின் முதற் காட்சியில் ஹெல்மர்- நோரா தம்பதிகள் அந்நியோன்னியமான தம்பதிகளாக இருப்பதைப் பார்க்கிறோம். ஹெல்மர் ‘என் செல்லப் புறா’, ‘என் குட்டி அணில்’ என்றே நோராவை அன்புடன் அழைக்கிறான். நோரா கிறிஸ்துமஸ் பண்டிகையைச் சிறப்புடன் கொண்டாடிட நிறையப் பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு வருகிறாள். கணவர் ஹெல்மர் சமீபத்தில் வங்கியின் மேனேஜர் பதவியைப் பெற்ற உற்சாகமும் அவள் முகத்தில் தெரிகிறது. அத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடக்கவிருக்கும் நடனத்தில் நோரா ஒரு இத்தாலிய நடனம் ஆட விருப்பதால் அதற்கான சிறப்பு ஆடைகளையும் வாங்கி வருகிறாள். நடனப் போட்டியில் அவள் வென்றிட வேண்டும் என்றும், அதற்கு  ஹெல்மர் முழுவதும் உதவிட வேண்டும் என்கிறாள். ஹெல்மரும் மகிழ்ச்சியுடன் சம்மதிக்கிறான். குழந்தைகள் மூவரையும் பணிப்பெண்ணின் பொறுப்பில் விட்டுவிட்டு வீட்டை அலங்கரிக்கத் தொடங்குகிறாள். அவள் சற்றும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக அவள் பள்ளித் தோழி கிறிஸ்டின் வருகிறாள். பத்தாண்டுகளுக்கும் மேலான இடைவெளியில் சந்திக்கிறார்கள். இருவரும் தங்களின் சோகக் கதைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

A Doll’s House Part 2 | WFUV

கிறிஸ்டின் தாயையும், கணவரையும் இழந்து தனித்து வாழ்வதாகவும், தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் தம்பிகளை வளர்த்திடச் செலவழித்துவிட்டதால் பணமின்றிக் கஷ்டப்படுவதாகவும் புலம்புகிறாள். நோரா பத்தாண்டுகளுக்கு முன் நோயில் விழுந்த தன் கணவரைக் காப்பாற்றிட டாக்டரின் அறிவுரைப்படி இத்தாலிக்குக் கூட்டிச் சென்றதையும், அவர்களிடம் பணம் இல்லாததால் வட்டிக்குக் கடன் வாங்கிச் செலவழித்ததையும், இன்றுவரை தன் கணவருக்குத் தெரியாமல் அந்தக் கடனை அடைத்து வருவதாகவும் சொல்கிறாள். ஹெல்மர் மேனேஜராக இருக்கும் வங்கியில் தனக்கு வேலை கிடைத்திட நோரா உதவிட வேண்டும் என்று கிறிஸ்டின் கேட்டுக்கொள்கிறாள். தன் கணவனுக்கு கிறிஸ்டினை அறிமுகப்படுத்தும் போதே அவளுக்கு வங்கியில் வேலை வாங்கித் தருமாறு கேட்கிறாள். ஹெல்மர் இவ்வுதவியை தன்னால் உடனே செய்திட முடியும் என்கிறார். வங்கியில் மோசடி செய்த கரக்ஸ்டடு என்பவனை வேலையிலிருந்து நீக்கப் போவதாகவும், எனவே அந்த இடத்தில் கிறிஸ்டினை அமர்த்திக்கொள்வதில் சிரமம் இருக்காது என்கிறார். கிறிஸ்டின் தன் தோழி நோராவுக்கு இத்தாலிய மாடலில் வாங்கிய உடைகளை சரிசெய்து கொடுக்கும் வேலையில் ஈடுபட, நோரா தன் குழந்தைகளுடன் விளையாடுகிறாள்.

திடீரென்று அறைக்குள் கரக்ஸ்டடு நுழைகிறான். அவனைக் கண்டதும் நோரா பதறுகிறாள். ஹெல்மர் தன்னை வங்கிப் பதவியிலிருந்து நீக்கப் போவதாகவும், எனவே நோரா தலையிட்டு அவனைக் காப்பாற்ற வேண்டும் என்று கேட்கிறான். நோரா இந்தப் பிரச்சனையில் அவளால் தலையிட முடியாது என்று உறுதியுடன் கூறியதும், கரக்ஸ்டடு அவளை மிரட்டுகிறான். அவனிடமிருந்து வாங்கிய கடன் இன்னும் கொடுத்து முடியவில்லை என்பதையும், அதற்காக அவள் கையெழுத்திட்டுக் கொடுத்த பத்திரம் அவனிடம் பத்திரமாக இருப்பதாகவும் கூறி பயமுறுத்துகிறான். ”இந்தக் காலத்து ஆண்கள் எல்லாம் மனைவிகள் பேச்சைத்தானே கேட்கிறார்கள். ஹெல்மருக்கு உன் மீதிருக்கும் மோகத்தைப் பயன்படுத்தி நான் இழந்த பதவியை நீ திரும்ப வாங்கிக்கொடு”, என்று கரக்ஸ்டடு தரக் குறைவாகப் பேசுகிறான். நோரா இந்தப் பிரச்சனையில் தலையிட முடியாது என்று மீண்டும் கூறியதும் அவள் மீது அடுத்த அஸ்திரத்தைப் பிரயோகிக்கிறான். “கடன் பத்திரத்தில் உன் அப்பாவின் கையெழுத்தை அவர் இறந்து மூன்று நாட்கள் கழித்து நீ கள்ளக் கையெழுத்தாகப் போட்டிருக்கிறாய்” என்பதை உன் கணவனுக்குத் தெரியப்படுத்துவேன்”, என்று நோராவை எச்சரிக்கிறான். அன்றைய காலச்சட்டப்படி பெண்களுக்குக் கடன் பத்திரத்தில் கையெழுத்திடும் உரிமை கிடையாது. கணவனுக்குத் தெரியாமல் வாங்கும் கடனுக்கு தன் அப்பாவின் கையெழுத்தை நோரா அவர் இறந்தபின் போட்டுக்கொடுக்கிறாள்.

Stray Dog’s A Doll’s House Brilliantly Breathes New Life into …

இதனை அறிந்த கரக்ஸ்டடு அவளை மிரட்டி பணியவைக்கிறான். ஹெல்மருக்கு இந்த விவரங்களை எல்லாம் எழுதி அவருடைய கடிதப் பெட்டியில் போடுகிறான். நோரா பதற்றத்துடன் தன் தோழி கிறிஸ்டின் உதவியை நாடுகிறாள். கரக்ஸ்டடிம் பேசி எப்படியாவது அவன் மனத்தை மாற்றி அவளுக்கு உதவிட வேண்டும் என்று கெஞ்சுகிறாள். அன்றிரவு நோராவின் நடனம், விருந்து, கொண்டாட்டம் என்று கழிந்ததால் ஹெல்மர் அந்தக் கடிதத்தைப் பார்க்கவில்லை. சரியாகச் சொன்னால், நோரா அவனைக் கடிதத்தைப் படிக்கவிடவில்லை. இதற்குள் கிறிஸ்டின் வெற்றிகரமாகப் பிரச்சனையை முடித்துவிடுகிறாள். கரக்ஸ்டடுக்கு அவள் மீது காதலிருப்பதை அவள் அறிந்திருந்தாள். மனைவி இறந்த பின் கரக்ஸ்டடு தன் குழந்தைகளை வளர்ப்பதற்குக் கஷ்டப்படுவதையும் அவள் அறிவாள். எனவே கரக்ஸ்டடை அவள் திருமணம் செய்துகொள்வதாகச் சொன்னதும் அவன் மகிழ்ச்சி அடைகிறான். அதற்கு நிபந்தனையாக நோராவுக்குத் தொல்லை கொடுப்பதை அவன் நிறுத்த வேண்டும் என்று கிறிஸ்டின் சொல்வதையும் கரக்ஸ்டடு ஏற்றுக்கொள்கிறான். நோராவுக்கு அவள் கையெழுத்திட்ட பத்திரத்தை இணைத்து அவளுக்கொரு மன்னிப்புக் கடிதம் எழுதி அனுப்புகிறான்.

ஆனால் விருந்து முடிந்த மறுநாள் காலையில் ஹெல்மர் கடிதப் பெட்டியில் இருந்த கரக்ஸ்டடு எழுதிய கடிதத்தைப் படித்துவிடுகிறான். வீட்டில் புயல் வீசுகிறது. நோராவை துரோகி என்றும் மோசடிப் பேர்வழி என்றும் திட்டுகிறான். அவர்களின் தாம்பத்யம் இத்துடன் முடிந்துவிட்டது என்றும் அவனால் பொய் பேசுபவளுடன் வாழ முடியாது என்றும் கத்துகிறான். இனிமேல் குழந்தைகளை நோராவின் பராமரிப்பில் விடமுடியாது என்றும், நோரா அவனின் மனைவி என்ற அந்தஸ்தை இழந்துவிட்டாள் என்றும் உறுதியாகக் கூறுகிறான். இந்நேரத்தில் கரக்ஸ்டடு நோராவுக்கு எழுதிய கடிதம் வீடுவந்து சேருகிறது. கடிதத்தை ஹெல்மர் பிடுங்கிக் கொண்டு உரக்கப் படிக்கிறான். கரக்ஸ்டடு கடிதத்தில் தான் செய்த தவறுக்காக வருந்துவதாகவும், கடிதத்துடன் நோரா எழுதிக்கொடுத்த பத்திரத்தைத் திருப்பி அனுப்பியுள்ளதாகவும், எழுதி நோராவிடம் மன்னிப்பும் கேட்டுள்ளான். இதைப் படித்து முடிந்ததும், ஹெல்மர் மனம் மாறிவிடுகிறான். “நோரா நடந்ததையெல்லாம் மறந்துவிடு. உன்னை மன்னித்து நான் ஏற்றுக்கொள்கிறேன்”. என்று சொல்லி பிரச்சனைகள் தீர்ந்துவிட்டதாக நினைக்கிறான். புயலுக்குப் பின்னான அமைதி என்று நினைக்கிறான்.

Analysis of Henrik Ibsen's Plays | Literary Theory and Criticism

ஆனால் பாவம்! அவனுக்குத் தெரியாது பூ ஒன்று புயலாக மாறப் போகிறது என்று! நோரா விஸ்வரூபம் எடுக்கிறாள். ஹெல்மரின் அன்பு போலியானது என்பதை உணருகிறாள். உணர்த்துகிறாள். ”மனைவி பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போதுதான் கணவனின் மனநிலை தெரிய வருகிறது. அவனுடைய அன்பு உண்மையானதா; போலியானதா என்று வெளிப்படுகிறது. இதுவரை நீங்கள் என் மீது காட்டிய அன்பெல்லாம் போலியானது என்பதை இந்த நிகழ்வு எனக்கு வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. இந்த வீட்டில் நான் ஒரு பொம்மையாகவே கையாளப்பட்டுள்ளேன். திருமணத்திற்கு முன் என் தந்தையும் என்னை ஒரு பொம்மையாகவே கருதி வளர்த்தார். திருமண வாழ்வில் இந்த வீடும் எனக்கொரு பொம்மை வீடாகவே இருந்துள்ளது. இனியும் நான் இந்த வீட்டில் இருப்பது அர்த்தமற்றது. நான் எனக்கான சுதந்திரத்தைத் தேடிப் போகிறேன். குழந்தைகள் என் பொறுப்பில் இருந்தால் கெட்டுப்போவார்கள் என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள். அவர்கள் உங்கள் பொறுப்பிலேயே இருக்கட்டும் நான் போகிறேன்” என்று சொல்லி கதவை ஓங்கி சாத்திவிட்டு வெளியேறுகிறாள். திரை கீழே விழுகிறது.

’பொம்மை வீடு’ நாடகம் பார்த்துவிட்டு வெளிவரும் அனைவரும் நாடகத்தின் இறுதியில் நோரா எடுக்கும் முடிவை விமர்சித்தபடியே வருவதைக் காணலாம். 1879இல் முதன் முதலாக இந்நாடகம் அரங்கேறியதிலிருந்து இன்று வரை இந்த விவாதம் நடந்த வண்ணமே இருக்கிறது. இப்சன் தன்னை பெண்ணியலாளர் என்றெல்லாம் பிரகடனப்படுத்திக்கொள்ளவில்லை. குடும்பத்தில் ஆணுக்கும், பெண்ணுக்குமான உரிமை சமமானது என்று நம்பினார். இச்சமத்துவம் இருந்தால் மட்டுமே குடும்பம் வெற்றிபெறும் என்றும் கருதினார். இதனையே இந்நாடகத்தின் மூலம் வலியுறுத்த விரும்பினார். ’பொம்மை வீடு’ நாடகத்தின் முடிவை மாற்றி நோரா குழந்தைகளைப் பார்த்து மனம்மாறி வீடு திரும்புவதாகத் திருத்தப்பட்டு அரங்கேற்றியதை இப்சன் ஏற்றுக்கொள்ளவில்லை. நோரா செய்தது சரியா? தவறா? என்ற கேள்வி அன்றும், இன்றும் எழுந்துகொண்டேதான் இருக்கிறது. “எழுத்தாளனின் வேலை கேள்விகளுக்குப் பதில் சொல்வதல்ல; கேள்விகளை எழுப்புவது மட்டுமே” என்கிறார் இப்சன்.

——பெ.விஜயகுமார்.

                      …………………………………………………………………………………..                         

 

Leave a Response

Top Reviews

Video Widget

gallery