Book Reviewநூல் அறிமுகம்

நூல் அறிமுகம்: “டிஜிட்டல் இந்துக்கள்” எனும் புதிய சாதிய இந்துத்துவ பாசிச மக்கள்திரள் – ஜமாலன்

‘சாதியும். முதலாளித்துவமும் இணையும் இந்தியச் சூழலில், மாற்று அரசியலின் வளர்ச்சிக்கான பெரிய இடையூறு தலித் மற்றும் இடதுசாரி இயக்கங்களுக்கு இடையே அதிகரித்துவரும் விரிசல்தான். இந்த விரிசலுக்கு காரணம் சாதி மற்றும் வர்க்கத்தின் பிளவுநிலைப் புரிதலில் (dichotomy) உள்ளது. இது இந்த இரண்டும் குறித்து இரண்டு பிரிவினரிடமும் இருக்கும் தவறான புரிதல்களைப் பிரதிபலிக்கிறது’- ஆனந்த் டெல்டும்டே (பக்.17)

‘எனது கருத்தின்படி, இந்நாட்டின் தொழிலாளிகள் இரண்டு எதிரிகளை சந்திக்க வேண்டியுள்ளது. அவை பிராமணியமும், முதலாளித்துவமும். பிராமணியம் என்பதில் நான் ஒரு சமூகமாக பிராமணர்களிடம் உள்ள அதிகாரம், சலுகை, நலன் ஆகியவற்றைக் குறிக்கவில்லை. நான் அச்சொல்லை அந்த அர்த்தத்தில் பயன்படுத்தவில்லை. பிராமணியம் என்பது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை மறுப்பதைக் குறிப்பதாகும். இந்த வகையில் பிராமணர்கள்தான் அதை ஆரம்பித்தவர்கள் என்றாலும்கூட, அது பிராமணர்களிடம் மட்டுமின்றி, எல்லா வகுப்பினரிடமும் பரவலாகக் காணப்படுகிறது’ – அம்பேத்கர் (பக்.141)

Image result for டிஜிட்டல் இந்துக்கள்” என்னும் பெரிய சாதி இந்துத்துவ பாசிச மக்கள்திரள்

பொதுவாழ்வும், குடியாண்மை சமூகமும் பாசிசமயமாகிவரும் தற்போதைய இந்திய சூழலில், இந்தியாவின் தனித்தன்மையான சமூக அமைப்பும், உலக அரசியலில் உருவாகிவரும் நவதாராளமயமும் இணைந்து எப்படி இந்துத்துவ பாசிசமயமாகி வருகிறது என்பதை புரிந்து கொள்வதற்கான ஒரு அரசியல் கட்டுரைத் தொகுப்பே ஆனந்த் டெல்டும்டே எழுதியுள்ள ‘சாதியின் குடியரசு’ என்ற நூல். ‘நவீன தாராளமய இந்துத்துவா காலத்தில் சமத்துவம் பற்றி சிந்தித்தல்’ என்ற துணைத் தலைப்புடன் வெளிவந்துள்ளது.

தமிழில் ச. சுப்பாராவ் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார். சுனில் கில்லானி அவர்களின் முன்னுரையுடனும், இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் குரலாக என். குணசேகரன் என்பவரின் விமர்சன பின்னுரையுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்துத்துவா, நவதாராளவாதத்துடன் இணைந்து இந்தியர்களை ‘டிஜிட்டல் இந்துக்கள்’ என்ற புதிய மக்கள்திரளாக மாற்றுகிறது என்ற எச்சரிக்கையுடன் துவங்குகிறது சுனில் கில்லானியின் முன்னுரை. இடஒதுக்கீடு உருவாக்கிய சாதக, பாதக அம்சங்களை பேசும் இம்முன்னுரையில், டெல்டும்டே அம்பேத்கரின் சமத்துவம் என்ற கோட்பாட்டை மையப்படுத்தி பேசுவதில் உள்ள முக்கியத்துவத்தை முன்வைக்கிறார். ‘ஆனந்த் டெல்டும்டேயின் தெளிவான வாதங்கள் யாருக்கும் வசதியாக இருக்காது. ஆனால், நாம் அனைவரும் அவற்றை அவசியம் படிக்க வேண்டும். சிந்திக்க வேண்டும். ஏனெனில் அவை நம்மை கடுமையாக சிந்திக்க நிர்ப்பந்திப்பவை.’ (பக். 13) என்ற எச்சரிக்கையையும் விடுக்கிறார். சாதி மற்றும் வர்க்கம், அம்பேத்கர் மற்றும் மார்க்ஸ் இடையிலான உரையாடலே நூலின் பிரதான பேசுபொருளாக உள்ளது. இது ஒரு பொதுசட்டகம் மட்டுமே. ஆனால், இந்நூல் தற்கால அரசியலை அதன் நுண்தளங்களை புரிந்துகொள்வதற்கான ஒரு முக்கியமான விவாதப் புள்ளிகளை முன்வைத்துச் செல்கிறது.

Image result for ஆனந்த் டெல்டும்டேஆனந்த் டெல்டும்டே ‘எக்னாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’ என்ற ஆங்கில இதழில் எழுதிய கட்டுரைகள், சாதி, நவீன தாராளமயவாதம், இந்துத்துவம் ஆகியவற்றினைப் பேசுபொருளாகக் கொண்டவற்றை மட்டும் விரித்து எழுதப்பட்டு தொகுக்கப்பட்ட நூல். நூற்றுக்கணக்கான கட்டுரைகளில் பல்வேறு இதழ்களில் ஆங்கிலத்தில் எழுதிவரும் டெல்டும்டே ஒரு பொறியியல் பேராசிரியர். இந்தியாவின் முதன்மையான உயர்சாதிகளின் கல்விக்கூடாரமாகிவிட்ட இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (Indian Institute of Mangement IIM) எம்.பி.ஏ. மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர். பல பெருநிறுவனங்களில் உயர்பதவி வகித்தவர். ஒடுக்கப்பட்ட மக்களின் இயக்கங்களில் பங்குபெறும் சமூகச் செயல்பாட்டாளர். மனித உரிமைப் போராளி. தற்போது கோவாவில் நிர்வாகவியல் பேராசிரியராக பணியாற்றுகிறார். மாணவர் பருவம்முதல் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். தொடர்ந்து உலக, உள்ளுர் அரசியலை உற்று கவனித்து, அவற்றை கோட்பாட்டுரீதியாக உள்வாங்கி எழுதக் கூடியவர். மார்க்சிய முறையியலை கற்று அதனை தனது ஆய்வுமுறையிலாகக் கொண்டும், உலகஅளவிலான பொருளதார மற்றும் சமூகவியல் கோட்பாடுகளை வாசித்து, அவற்றின் அடிப்படையில் இந்திய அரசிலை நுட்பமாக ஆய்வு செய்து அதன் உள்ளார்ந்துள்ள சிக்கல்களை வெளிக்கொண்டு வருபவர். தற்போது வாழும் இந்திய அறிஞர்களில் ஒருவராக திகழ்பவர்.

Image result for குடியுரிமை திருத்த சட்டம்அம்பேத்கர், மார்க்ஸ் ஆகியோரின் சிந்தனைகளை ஏற்று, அதன் கோட்பாட்டு அடிப்படையில் எழுதக்கூடிய டெல்டும்டே, தலித் அரசியல் குறித்தும், அதன் இயக்க பரிமாணங்கள் குறித்தும் இந்த நூலில் விவாதிக்கிறார். இந்தியா ஒரு குடியரசாக நீடிக்க முடியுமா? என்கிற கேள்வி ஒன்றை தற்போதைய இந்துத்துவ அரசு தனது ‘குடியுரிமை திருத்த சட்டம்’ வழியாக எழுப்பியுள்ளது. இந்த சூழலில் இந்திய அரசியலின் வளர்ந்துவரும் புதிய சூழலைப் புரிந்து கொள்வதற்கான ஒரு முயற்சியை இந்நூல் வழங்குகிறது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற குடியரசுதான், ஆனால் அது அம்பேத்கர் முன்னுணர்ந்து தெரிவித்ததைப்போல சாதியின் குடியரசாகவே நீடிக்கிறது. அது உலகையே புதுமையாக்கிய, உலகெங்கிலும் சகோதரத்துவம், சமத்துவம், ஜனநாயகம் கொண்டு வந்த முதலாளிய நவீனத்துவம் உலகமயமாகியபின், தனது சுரண்டலுக்காக இந்தியா போன்ற நாடுகளில் எப்படி சாதியின் குடியரசை தக்கவைத்துக் கொள்கிறது என்பதை இந்நூலின் அனைத்து கட்டுரைகளும் வெவ்வேறு பேசுபொருள்வழி விவரித்துச் செல்கிறது.

மதவாத தேசியத்தை முன்வைத்து வெகுமக்களை திரட்டும் இந்துத்துவ பெரும்பான்மை வாதத்தை முறியடிப்பதற்கான ஒரு உத்தியே அம்பேத்கர் முன்வைத்த சமத்துவம். அந்த சமத்துவத்தை முற்றிலும் நிராகரிக்கும், அடிப்படையில் சமத்துவமற்ற, ஏற்றத்தாழ்வைக்கொண்ட ஒரு மதமாக இந்துமதம் உள்ளதை அம்பேத்கர் தனது பல்வேறு ஆய்வுகளில் வெளிப்படுத்தியுள்ளார். அவரது இறுதி லட்சியம் சமத்துவம். அடிமைகளற்ற சமத்துவம். அந்த சமத்துவத்தை நடைமுறை அரசியலில் கொண்டுவரும் ஒரு தத்துவக் கோட்பாட்டு சிந்தனைமுறையே மார்க்சியம். அம்பேத்கரும் மார்க்சியமும் இணையும் சமத்துவம் என்ற புள்ளியின் வழியாக, அசமத்துவத்தை உருவாக்கும் பிராமணியத்தின் இந்துத்துவ ‘பேஷ்வா ஆட்சி’கனவை வெளிப்படுத்திக் காட்டுகிறது இந்நூல்.

Image result for இந்துத்துவ பாசிசபுதிய தாராளமயவாதம் எப்படி இந்துத்துவ பாசிசத்தை மேன்மேலும் வளர்த்து, இந்திய பொருளியல் சந்தையை ‘கடவுள் சந்தை’ என்கிற பண்பாட்டு சந்தையாக மாற்றியுள்ளது என்பதை ஆராய விரும்புபவர்கள், உண்மையில், இன்றைய இந்துத்துவத்துடன் சாதியம் கொள்ளும் உறவை புரிந்து கொள்ள முயல்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டியநூல். இந்நூலில் டெல்டும்டே மீரா நந்தாவின் ‘கடவுள் சந்தை’ என்ற நூலை குறிப்பிடுகிறார். அந்நூல் ஏற்கனவே பேரா கா. பூரணசந்திரன் அவர்கள் மொழிபெயர்ப்பில் அடையாளம் வெளியீடாக வந்துள்ளது. அந்நூல் கடவுள் எப்படி இந்துத்துவ கருத்தியலால், தாரளமயமாதல் என்கிற முதலாளியத்துடன் கைகோர்த்து சந்தைப்படுத்தப்பட்டார் என்பதை விவரிக்கிறது. இந்நூல் அதன் தொடர்ச்சியாக சமகால அரசியலுக்குள் வைத்து அதை இன்னும் நுட்பமாக விவரிக்கிறது. குறிப்பான பல அரசியல் நிகழ்வுகள் வழி அதனை இன்னும் விரிவாகவும், ஆழமாகவும் தலித்திய நோக்கில் மேலேடுத்துச் செல்கிறது.

Image result for இடதுசாரி மற்றும் தலித்

‘இடதுசாரி மற்றும் தலித் அமைப்புகளின் இப்போதைய புரிதலுக்கு மாறாக, நான் வர்க்கமும், சாதியும் பின்னிப் பிணைந்தவைகள் என்று பார்க்கிறேன். சாதியை ஒழிக்காமல் இந்தியாவில் புரட்சி வராது. அதே சமயம், ஒரு புரட்சி இல்லாமல் சாதியை ஒழிக்கமுடியாது.'(பக்.16) என்று நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். வர்க்கம், சாதி இரண்டிற்கும் இடையிலான நூற்றாண்டுகளாய் தீர்க்கமுடியாத சிக்கலை இந்நூல் முழுவதும் அவிழ்க்க முயல்கிறார். குறிப்பாக இரண்டும் இன்று புதிய சந்தைப் பொருளாதாரமாக மாறியுள்ள நவீன தாராளமயத்தின் பின்னணியில் வர்க்கமாகவும், பண்பாட்டு தேசியம் என்றபெயரில் முன்னணியில் அது இந்துத்துவ கருத்தியல் சந்தையாக வெளிப்படுவதையும் பேசுகிறது இந்நூல். அம்பேத்கர், மார்க்சுக்கு இடையிலான முரணியங்கியலை சமத்துவமின்மை என்கிற சமூக யதார்த்தத்திலிருந்தும், அதற்கான பொருளியல் அடிப்படையையும், பண்பாட்டு அடிப்படையையும் கொண்டு ஒரு உரையாடலை இந்நூல் முழுவதும் நிகழ்த்தியுள்ளார். மார்க்ஸ் போன்று அம்பேத்கர் ஒரு முழுமையான சமூகமாற்றம் என்பதைவிட, சாத்தியமானதைக் கொண்டு அந்தந்த முரண்களை தீர்க்க முனைவது என்ற பார்வையை முன்வைப்பதைச் சுட்டுகிறார். மார்க்ஸ் அம்பேத்கர் இருவைரையும் இணைப்பது அடிமையற்ற, விடுதலையான, சமத்துவம் கொண்ட சமூகம் என்ற சிந்தனையே என்பதை எடுத்துக்காட்டுகிறார். அதில் உள்ள சிக்கல்கள் குறித்தும், பிரச்சனைகள் குறித்தும் இந்நூலில் எதிர்கொண்டு விவாதிக்கிறார்.

Image result for அம்பேத்கர் மார்க்ஸ்

அம்பேத்கரை மார்க்ஸிற்கு எதிராகவும், மார்க்ஸை அம்பேத்கருக்கு எதிராகவும், மார்க்ஸியத்தைக் கொண்டு அம்பேத்கரை வாசிப்பதும், அம்பேத்கரியத்தைக் கொண்டு மார்கஸை வாசிப்பதும், அடிப்படையில் நிகழும் ஒரு பெரும் பிழை. இரண்டும் சமூக மாற்றம் குறித்து பேசும் இரண்டு பார்வைகள். இரண்டிலும் உள்ள இணைவுப் புள்ளிகள், முரண்கள் ஆகியவற்றை முரணியங்கியல் அடிப்படையில் அணுகும்போது இரண்டும் இணைந்த ஒரு புலத்தைக் கண்டடைய முடியும். அதற்கான முயற்சியாக இரண்டு சிந்தனையாளர்களுக்கு இடையிலான ஆரோக்கியமான ஒரு உரையாடல் தேவை. அந்த உரையாடலை இந்நூல் சாத்தியமாக்க முயல்கிறது.
‘இந்நூலின் 13 அத்தியாயங்கள் இந்தியாவில் சமத்துவமின்மை எவ்வாறு மதத்தோடு ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளது. நம் காலத்தில் பெரும்பான்மைவாதத்தின் மொழியைப் பேச, சாதி மற்றும் அடிப்படைவாதங்கள் எவ்வாறு சந்தையோடு இணைந்துள்ளன என்று ஆய்வு செய்கின்றன.’ என்று டெல்டும்டே கூறுகிறார். இந்நூலின் அடிப்படையான தனது பார்வைத் தெளிவை முன்வைக்கும் இந்த வாக்கியங்களை அவரது ஒவ்வொரு கட்டுரையிலும் தெளிவான தர்க்கத்துடன், விபரக் குறிப்புகளுடன், ஆதாரங்களுடன் விவரித்து செல்கிறார். இந்த 13 கட்டுரைகளும் இட ஒதுக்கீடு துவங்கி ஆம் ஆத்மி கட்சிவரை இந்திய அரசியலின் அடிப்படையான பிரச்சனைகளை ஆய்வு செய்கிறது.

Image result for இட ஒதுக்கீடுமுதல் கட்டுரை ‘இட ஒதுக்கீடு ஒரு பொறியும் பெருநெருப்பும்’. இந்திய அரசியலின் பரிமாணத்தை மாற்றிய இடஒதுக்கீடு குறித்தும் அதன் சாதக பாதகங்களையும் ஆராய்கிறது. இட ஒதுக்கீடு ஏற்படுத்திய தாக்கத்தின் எதிர்விளைவுகள் குறித்து திறந்த மனதுடன் இதில் சில பிரச்சனைகளை முன்வைக்கிறார். அதில் முக்கியமானது இடஒதுக்கீட்டின் எதிர்விளைவுகளாக உருவானதே தலித் மற்றும் ஆதிவாசிகள் மீதான தாக்குதல்கள், நிறுவனமயப்படுத்தப்பட்ட வன்முறைகள் என்கிற அவரது வாதம். குறுகியகால ஆதாயமான இடஒதுக்கீட்டால் தலித்துகள் மிகப்பெரிய விலையைக் கொடுத்துள்ளார்கள். அதில் ஒன்று சாதி ஒழிப்பு என்கிற திட்டம் சமரசம் செய்துகொள்ளப்பட்டது என்பது. ஆனால் மறுபுறம், அது ஒருவகையில் தலித் சமூக முன்னேற்றத்தை அல்லது முன்னேற வேண்டும் என்கிற பிறசாதியிடன் ஆன ஒப்பிடுதலை உருவாக்கியுள்ளது. சமூகபொறியமைவில் இத்தகைய மாற்றங்களே சமூக மாற்றத்திற்கான தன்னிலையை உருவாக்கமுடியும். அதில் பாதகங்கள் சில இருந்தாலும், சமூகப் போக்கில் அது தவிர்க்க முடியாதது. இடஒதுக்கீடு குறித்த இவரது ஆய்வில் உள்ள இந்த முரண் தீர்க்கப்பட வேண்டிய ஒன்றே. தமிழில் இட ஒதுக்கீடு என்ற சொல்லே படிநிலை அதிகாரம் சார்ந்த ஒன்றாக உள்ளது. உண்மையில் அதை வகுப்புவாரி உரிமை என்று சொல்வதே சரியானது.

முன்பு ஒரு தலித் சாதிக்கட்டுப்பாட்டை மீறினால், அவர் தனிப்பட்ட முறையில் தண்டிக்கப்படுவார். ஆனால், இன்றோ அவரது ஒட்டுமொத்த சமூகத்தின் மீதான தாக்குதலாக அது மாற்றப்பட்டுள்ளது. அவரது ஊரைக் கொழுத்துதல், அந்த சமூகத்தின் பொருளியல் வளத்தை நிர்மூலமாக்குதல் என்பதாக மாறியுள்ளதை குறிப்பிடுகிறார் டெல்டும்டே. அவ்வாறு நடந்த நிகழ்வுகளை 1968 கீழ்வெண்மணி துவங்கி தொடர்ந்து நிகழ்ந்துள்ளதை சுட்டிக்காட்டுகிறார். ஆக தனியுடல் என்பது அச்சமூகத்தின் ஒரு குறியீட்டு உடலாகவும், சாதி ஒவ்வொரு தனியுடலின் சமூகக் குறியீடாக மாற்றப்பட்டிருப்பதும் இந்த நவீன தாராளமயமாக்கல் மற்றும் நவீனத்துவத்தின் கருத்தியல் சார்ந்த விளைவின் வெளிப்பாடு.

குறிப்பாக இடஒதுக்கீட்டின் சிக்கல் அது சமூக சொல்லாடல்புலத்தில் சாதியத்தை ஒரு நியமமாக மாற்றுகிறது என்பது குறித்த இவரது உரையாடல் இன்று இந்துத்துவ சக்திகள், உயர்சாதி, இடைநிலைசாதி, பிராமணர்கள் முன்வைக்கும் வாதத்துடன் இணையானதாக இருப்பதாக தோற்றம் தந்தாலும், அதனுள் உள்ள ஆராயப்படவேண்டிய உண்மையான அக்கறை வெளிப்படுகிறது. இதன்பொருள் இடஒதுக்கீட்டை இவர் மறுக்கவில்லை. அதை ஒரு நிரந்தர தீர்வாக பார்க்க முடியாது என்பதுடன், அது உருவாக்கும் சமூகச் சிக்கல்களை ஆராய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். தலித்துகள் மீதான நிறுவனவயப்படுத்தப்பட்ட வன்முறையை தீமுக்கோணம் என்ற சொல்லால் குறிக்கும் இந்நூல், அதன் முப்பரிமாணங்களை விவரித்துச் செல்கிறது.

Image result for சாதி, வர்க்கம்இரண்டாவது கட்டுரையில் சாதி, வர்க்கம் இடையிலான இயங்கியலை ஆராய்கிறார். அம்பேத்கரின் புகழ்பெற்ற இந்தியாவில் சாதிகள் என்ற ஆய்வில், சாதி என்பது ஒரு மூடுண்ட வர்க்கம் என்கிறார். அம்பேத்கரின் வார்த்தைகளில் சொன்னால் ‘a caste is an Enclosed Class’. இதன்பொருள் சாதி, வர்க்கம் இரண்டிற்கும் இந்திய அளவில் உருவாகியிருக்கும் ஒரு நுண்ணுறவை விளக்க முனைவதே. அதாவது, சாதி என்பது வர்க்கத்தை மூடியிருக்கும் ஒரு உறை. அந்த உறையை நீக்காமல் வர்க்கம் என்பதைத் திரட்டமுடியாது என்பதே அம்பேத்கரிய நிலைப்பாடு. அந்த உறை பிறப்பால் சுற்றப்பட்டுள்ளது. அதை நீக்குதல் என்பது ஒருவகையில் மறுபிறப்பு போன்றதே. இதன் இன்னொரு பொருள், சாதி என்பது மூடுண்ட அமைப்பாகவும், வர்க்கம் என்பது திறந்த அமைப்பாகவும் உள்ளது என்பது. இந்நூலில் இந்த மூடுண்ட, திறந்து அமைப்பு என்ற பொருளில் விரிவான ஆய்வு ஒன்றை நிகழ்த்தியுள்ளார். மாக்ஸ்வெபர் துவங்கி மார்க்ஸ்வரை வர்க்கம் எப்படி ஒரு அடையாளமாகிறது என்பதை ஆராய்கிறார். அரசியல் அதிகாரமும், சமூக அதிகாரமும், பொருளாதார அதிகாரமும் நேரடியான உறவில் இல்லாமல் சிக்கலான உறவில் இருப்பதை விவரிக்கிறார். மார்க்சியர்கள் ஆழமாக வாசிக்க வேண்டிய ஒரு கட்டுரை இது. இந்தியாவில் ஒவ்வொருவரும் ஒரு வர்க்கத்தின் உறுப்பினராகவும், ஒரு சாதியின் அங்கத்தினராகவும் இருக்கிறார்கள். உறுப்பினர் என்பது மாறக்கூடியது. அங்கம் என்பது மாறாதது. வர்க்கம் என்பது ஒரு கனிம உறவு (inorganic relation) என்றால், அங்கம் என்பது ஒரு உயிர்ம உறவு (organic relation). இந்த உறவுச் சிக்கலைப் புரிந்துகொள்ள அம்பேத்கர் தீவிரமான பல ஆய்வுகள் வழியாக சாதியம் குறித்த தனது கருத்தையும், வர்க்கத்துடன் ஆன அதன் உறவையும் விவரித்துள்ளார். இந்நூல் அந்தப் பிரச்சனையை விரிவான உரையாடலுக்கு உட்படுத்துகிறது. இந்திய சமூகமாற்றம் குறித்த சிந்தனையில் ஒவ்வொருவரும் முகங்கொள்ள வேண்டிய ஒரு உயிராதாரமான பிரச்சனை இது. இதிலிருந்தாவது தமிழகத்தில் காத்திரமான உரையாடல்கள் இது குறித்து துவங்கப்பட வேண்டும்.

Image result for அம்பேத்கரியம்மூன்றாவது கட்டுரை இயக்கம் சார்ந்த பிரச்சனைகளைப் பேசுகிறது. அம்பேத்கரியம், அம்பேத்கரியர்கள் துவங்கி காவி சக்திகள் வரை இந்த அத்தியாயம் ஆராய்கிறது. குறிப்பாக தலித்துகள் முன்னேற்றம் என்ற போர்வையில் நிகழும், என்ஜிவோ அரசியல், அரசு நலவாழ்வை நவீனதாராளமயக் கொள்கையால் கைவிட்டு, முழுக்க நுகர்வுமயமாகிவரும் சூழல் ஆகியவை இதில் விரிவாக உரையாடப்பட்டுள்ளது. இதில் முக்கியமான ஒன்று திட்டமிட்டு காவி அமைப்புகள் தலித்துகள் சார்ந்த அமைப்புகளை என்ஜிவோ, கிறித்துவ மிஷனரி, மதமாற்றம் என்று திசைதிருப்பிவிட்டு, தங்களது என்ஜிவோ நிதிகளை, தங்களது சங் பரிவார் கிளைகளின் என்ஜிவோ நடவடிக்கைகளை மூடிமறைக்கின்றன.

இதில் குறிப்பிடப்படும் ஒரு சின்ன புள்ளிவிபரம் 2015-16 ஆம் ஆண்டில் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், பதிவு செய்யப்பட்ட 32000 என்ஜிவோ அமைப்புகளின் வழி வந்த நிதி 17,201 கோடி ரூ. சங் பரிவார் இந்துத்துவ அமைப்புகளுடையது. உண்மையில் இந்தியாவின் மிகப்பெரிய என்ஜிவோ அமைப்பு சங்பரிவார் அமைப்புகளுக்கு உதவும் வெளிநாட்டு அமைப்புகளே. தலித்துகள், ஆதிவாசிகள் மத்தியில் பணிபுரியும், எதிர்ப்புணர்வை உருவாக்கும் என்ஜிவோக்களை கட்டுப்படுத்திவிட்டு, இந்துத்துவ என்ஜிவோ அமைப்புகளை வளர்க்கிறார்கள். இக்கட்டுரையில் அம்பேத்கர் வழிபாடு குறித்த விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார். மார்க்ஸ், அம்பேத்கர் பிம்ப வழிபாடு எப்படி அவர்களது சிந்தனைமுறைகளை அரை மதமாக மாற்றி, ஒன்றிற்கு ஒன்று முரண்பட்டவர்களாகக் களத்தில் நிறுத்துகிறது என்ற விமர்சனத்தை பொறுப்புடன் முன்வைக்கிறது இந்நூல்.

Image result for தலித்துகள் மீதான வன்முறைநான்காவது கட்டுரை ‘கேளா ஒலியாக வன்முறை’ என்ற தலைப்பில் தலித்துகள் மீதான வன்முறை குறித்து ஒரு கோட்பாட்டு உளவியல் ஆய்வாக நிகழ்த்தப்பட்டுள்ளது. தலித்துகள் மீதான வன்முறைக்கு அரசும், நவீன தாராளவாத முதலாளியமும், வளர்ந்துவரும் மத்தியதரவர்க்க உளவியலும், பின்காலனிய அரசியல் பொருளாதார சக்திகளின் பின்புலமும் எப்படி காரணங்களாக அமைகின்றன என்பதாக செல்கிறது இவ்வாய்வு. கீழ்வெண்மணி கயர்லாஞ்சி, தர்மபுரி வன்முறை வரை அனைத்து நிகழ்வுகளின் பின்புலங்களை ஆராய்ந்து கோட்பாட்டாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சுட்டிய ‘தீ முக்கோணம்’ என்கிற கருத்தாக்கம் இதில் விவரிக்கப்படுகிறது. தலித்துகள் மீதான வன்முறை என்பது 3 அடிப்படை பண்புகளைக் கொண்டது.

1. தலித்துகள் மீதான வன்மம் – அவர்கள் வளர்வது சமூகத்தை குலைப்பது என்ற சிந்தனை 2. அவர்கள்மீது தாக்குதல் தொடுப்பதற்கான அமைப்புரீதியான, அரசின் பாதுகாப்பு
3. அத்தாக்குதல் என்பது ஒரு குறியீட்டு நிகழ்வாக மாற்றப்பட்டு, மற்ற தாக்குதலுக்கான தூண்டுதலாக அமைவது. இது ஒரு முறைப்படுத்தப்பட்ட வகைமையாக எப்படி நிகழ்த்தப்படுகிறது என்பதை இந்த அத்தியாயம் விவரிக்கிறது.

Image result for சுதந்திர வர்த்தகப் போட்டி

சுதந்திர வர்த்தகப் போட்டி என்கிற நவீன தாராளமயவாதத்தின் கொள்கை, கொள்ளை அடிப்பதற்கான சுதந்திரமாக மாற்றப்படுவதும், மேல்நோக்கி நகரும் மத்தியதரவர்க்கத்தை அமெரிக்கமயமாக்குவதற்கும் இந்த கொள்ளைகள் நடத்தப்படுவதை சுட்டிக்காட்டுகிறார். அது எப்படி இந்துத்துவ பாசிச உளவியலாகவும், அதன் வன்மம் தலித் வன்முறைக்கான ஒரு உளவியலை உருவாக்குவதாக இருப்பதையும் நுட்பமாகப் பேசுகிறது. குறிப்பாக மாற்றுமதமான பெளத்தம், இஸ்லாம், கிறித்துவம் மீதான இந்துத்துவர்களின் வெறுப்பு என்பது பிராமணியத்தின் தீண்டாமையின் விளைவே. அதாவது இம்மதத்தினர் தீண்டத்தகாதவர்களாக இருந்து மதம் மாறியவர்கள் என்பதால் அவர்களையும் தலித்துகளோடு தீண்டத்தகாதவர்களாக அவர்கள் எண்ணுவதே காரணம் என்கிற உளவியலை ஓரிடத்தில் சுட்டிக்காட்டுகிறார்.

Image result for நக்சல்கள், மாவோயிஸ்டுகள், தலித், பழங்குடிப் போராளிகள்ஜனநாயகக் குரல்கள் குறிப்பாக நக்சல்கள், மாவோயிஸ்டுகள், தலித், பழங்குடிப் போராளிகள் ஆகியோர் மீதான அரசின் அடக்குமுறை குறித்து பேசும் ஆறாவது கட்டுரை, நவீன தாராளமயம் எப்படி எதிர்ப்புக் குரலை நசுக்குகிறது என்பதை விவரிக்கிறது. அது எதிர்ப்புக் குரலுக்கான, ஜனநாயக போராட்டத்திற்கான, கூட்டங்கள், மாநாடுகளுக்கு அரசு அனுமதிவழங்கும் ராம்லீலா மைதானம் என்பது எப்படி ஒரு ஒதுக்குப்புறத்தில் உலகம் கவனிக்காத இடத்தில் உள்ள ஒரு சுருக்கப்பட்ட வெளி என்பதில் துவங்குகிறது இவ்வாய்வு. அதன்பின் எதிர்ப்புக் குரல்கள் முத்திரை குத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு, காவல்துறையால் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உருவாக்கப்படும் அரசு பயங்கரவாதம் குறித்துப் பேசுகிறது. இந்தியாவில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்த ஒரு ஆய்வாக வெளிப்பட்டுள்ளது. மாவோயிஸ்டுகளைத் தொடர்ந்து, குஜராத் என்கிற இந்துத்துவ வளர்ச்சி சோதனைச்சாலையில் நிகழ்ந்த தலித் வன்முறைகள் குறித்த ஒரு விரிவான ஆய்வு செய்யப்பட்டுள்ளது. உனா வன்முறை துவங்கி குஜராத் குறித்து இந்துத்துவா உருவாக்கிய வளர்ச்சி முகத்திரையை கிழிக்கிறது.

அடுத்து ‘சேரியில் உழல்வோர்களும் லட்சாதிபதிகளும்’ என்ற தலைப்பின்கீழ், தலித் சக்திகள் எப்படி அரசால் உள்வாங்கப்படுகிறது, தலித் பொருளாதார, அரசியல் பலம் ஆகியனபற்றிய ஆய்வினைச் செய்துள்ளார். குறிப்பாக மார்க்ஸ் சொன்ன ரயில்வேதுறை காலனிய இந்தியாவில் உருவாக்கிய மாற்றம் தலித்துகளை எப்படி ஓரளவாவது பொதுத்துறை, அரசியல் அதிகாரம் நோக்கி நகர்த்தியது என்பதையும், நவீன தாராளமய முதலாளியம் அவர்களை எப்படி உள்ளடக்கி பயன்படுத்த முனைந்தது என்பதையும் விவரிக்கும் இப்பகுதி, இந்திய அரசியிலில் ஊழல் குறித்த பகுப்பாய்வை செய்கிறது. இந்த ஊழல்கள் எப்படி ஒரு என்ஜிவோபாணி அரசியலாக கேஜ்ரிவால் போன்றவர்களை உருவாக்கியது என்பதை புரிந்துகொள்ள உதவுக்கூடியதாக உள்ளது.

Image result for ஊழல்

ஊழல் என்ற உலகமயப்படுத்தப்பட்ட அரசியல் கருத்தாக்கமே இன்று இந்துத்துவ பாஜகவை அரியணையில் அமர்த்தியுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. அதிலும் பங்காரு லட்சுமணன் தலித் என்பதால் பாஜக தலைமைப் பதவியில் இருந்து பதவி விலக கட்டாயப்படுத்தப்பட்டார் என்றால், நிதின் கட்கரி போன்ற உயர்சாதியினர் செய்த ஊழல் அம்பலப்பட்டபோது அதே பாஜக அமைதி காத்து அவரைக் காத்தது. இப்படியாக ஊழலிலும் நிலவும் சாதியம் என்பதை அம்பலப்படுத்தும் இக்கட்டுரை, ஊழல் என்பதன் பின்னுள்ள என்ஜிவோ அரசியல் எப்படி பாஜக போன்ற இந்துத்துவ அரசியலை வளர்த்தது என்பதை பேசாமல் விடுகிறது என்பது ஒரு குறையே. மல்லையா, ரவிசங்கர் போன்றவர்கள் ஊழல் செய்து தப்பிக்க, அப்பாவி தலித், இஸ்லாமியர்கள், பழங்குடிகள் மற்றும் மாவோயிஸ்டுகள், சாதாரண லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இங்கே ஊழல் குற்றம் அனைத்துமே சாதி பார்க்கப்பட்டே தீர்ப்பாகிறது.இந்த வருட சென்னை புத்தக கண்காட்சியில், காவி சிந்தனைக்கொண்ட கடைகளின் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகம் என்பதுடன், விஜயபாரதம் புத்தக அரங்கில் எண்ணற்ற அம்பேதகர் படங்களைக்கொண்ட நூல்களைக் காணமுடிந்தது. குறிப்பாக இந்துத்துவ அம்பேத்கர் என்ற ஒரு தனிநூலே இருந்தது. அதன் பின் அட்டையில் அம்பேத்கர் முன்வைத்த இந்துத்துவ ஆதரவான கருத்துக்கள் என்று சில கருத்துக்களை போட்டிருந்தார்கள்.

Image result for ambedkar saffronகுறிப்பாக இந்திய தேசியத்தை ஏற்றுக் கொண்டவர் என்பதாக. அம்பேத்கருக்கு காவி வர்(ரு)ணம் (அது பஞ்சம அ-வருணம்தான் என்பது வேறு) அடித்துள்ளார்களே, அதற்கு மறுப்பு இல்லையே என்கிற ஆதங்கத்தை நீக்கியுள்ளது இத்தொகுப்பில் உள்ள 8-வது கட்டுரை. தற்கால அரசியல் சூழலில் மிகமுக்கியமான கட்டுரை. அம்பேத்கரை காவிமயமாக்குதல்’ என்ற தலைப்பில் காவிகள் அம்பேத்கரை தங்கள் கருத்தியலுக்கு ஏற்ப உருவாக்க வேண்டிய தேவை என்ன என்பது குறித்த விரிவான ஆய்வை தரவுகளுடன் நிறுவியுள்ளார். அதோடு இந்துத்துவ காவிகளின் வரலாற்றையும், அவர்கள் கூறும் இந்து என்ற சொல் அவர்கள் புனித மூலங்கள் என்று ஆர்ப்பரிக்கும் வேதங்களில், புராணங்களில் எவற்றிலுமே இல்லை என்பதையும் சுட்டிக் காட்டியள்ளார். இந்து என்ற சொல்லே அவர்கள் இட்டுக்கட்டிய ஒரு கருத்தியல் என்பதையும், அம்பேத்கர் எப்படி இறுதிவரை தீவிர இந்துமத எதிர்ப்பாளராக இருந்தார் என்பதையும் விவரிக்கிறது இக்கட்டுரை. தலித்துகளை இஸ்லாமியரிடமிருந்து பிரித்து தங்களது வாக்கு வங்கி சக்தியாக எப்படி மாற்றுகிறார்கள், அதில் எப்படி ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

இன்றைய இந்தியாவை காப்பதற்கான பெரும் சக்திகள் தலித், பழங்குடிகள், சிறுபான்மையினர்கள், இந்துத்துவத்தை நிராகரிக்கும் இந்துக்கள் மற்றும் இடதுசாரி ஜனநாயக சக்திகளே. அவர்களே இந்தியாவை அதன் தேசிய உள்ளோட்டத்தை, அதன் மதச்சார்பின்மையை, இறுதிவரை அம்பேத்கர் கண்ட கனவான ஜனநாயக குடியரசை உருவாக்க கூடியவர்கள். ஒரு சமத்துவ, சகோதரத்துவ, ஜனநாயக குடியரசை அமைக்கும் சக்திகளாக வரலாற்றில் இன்று முன்னணி வகிப்பவர்கள். அதனால்தான் இந்துத்துவா இவர்களின் ஒற்றுமையைக் கண்டு அஞ்சுகிறது. அவர்களுக்கு எதிராக கண்மண் தெரியாமல் அரசு பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிடுகிறது.

Image result for modi saffronஇத்தொகுப்பின் மற்ற இரண்டு கட்டுரைகள் 9-ம், 10-ம் மோடி அரசின் கல்வி மற்றும் ஸ்வச் பாரத் கொள்கைகள் குறித்து விவாதிக்கிறது. சாதியற்ற சமூகத்தில் மட்டுமே அனைவருக்குமான கல்வியும், தூய்மையான நல்வாழ்வும் கிட்டும். மேல்சாதி குறிப்பாக பிராமணியமும், முதலாளித்துவமும் இணைந்து நவீன தாராளமய இந்துத்துவ ஆட்சி என்பது எக்காலத்திலும் அதை சாத்தியப்படுத்தாது. பிராமணியம் குலக்கல்வியையும், தீண்டாமையின் விளைவான கீழ்நிலை துப்புரவுப் பணிகளையும் தொடர்ந்து தலித்துகளிடம் நிர்பந்திக்கும். அதோடுகூட அது சனாதன வருண ஆட்சிமுறையைக் கொண்டுவருவதற்கான அனைத்து செயல்திட்டங்களையும் கொண்டது. அதன்தேவை அனைத்து இந்தியர்களும் சனாதன தருமப்படி அதற்கு அடிமையாக சேவகம் புரிய வேண்டும்.

இறுதியாக உள்ள மூன்று கட்டுரைகள் தேர்தல் அரசியலில் ஜனநாயகம் காப்பதற்கான காப்புறுதி நிறுவனங்கள்போல் செயல்படும், பிஎஸ்பி, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் குறித்து ஒரு பகுப்பாய்வை செய்துள்ளார். அக்கட்சிகள் எப்படி சீரழிவை நோக்கி நகர்கின்றன என்பதை விவரிக்கிறது. கான்சிராம், மாயாவதி, ராகுல்காந்தி, கேஜ்ரிவால் குறித்தும், அவர்களது கட்சிகள் குறித்தும் இந்த ஆய்வுகள் மிகவும் சுவாரஸ்யமானவை. தற்கால அரசியலைப் புரிந்து கொள்வதற்கும், என்ன நிகழ்கிறது என்பதை உணர்ந்து கொள்வதற்கும், அக்கட்சிகள் தலித்துகளை எப்படி கையாள்கின்றன என்பதை அறியவும் உதவும் கட்டுரைகள். குறிப்பாக ஆம் ஆத்மி குறித்த ஆய்வு, அது ஒரு மேம்படுத்தப்பட்ட நவீன தாராளமயவாதத்தின் ஒரு அரசியல் பயன்பாட்டு மென்பொருள் என்ற உருவகத்தின் வழி அதன் மத்தியதரவர்க்க, டிஜிட்டல் தன்மை கொண்ட நவ இந்திய இளைஞர்களின் ஈர்ப்பை அம்பலப்படுத்துகிறார். தலித் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வதும், தங்களது உடமைப் பொருளாக கையாள்வதும், அவர்களுக்கு வாழ்வாதாரமான நிலங்களை மறுப்பதும் தொடர்ந்து அவர்கள்மீதான தாக்குதலுக்கு அடிப்படையாக அமைவது சாதியம் என்பதை இந்நூல் பல்வேறு தகவல்களுடன் வெளிப்படுத்துகிறது. நவீன தாராளமயம் எப்படி பல்வேறு பரிமாணங்களில் அரசோடு கைகோர்த்து இந்திய சமூகத்தை ஒரு ஜனநாயக குடியரசாக மாற்றவிடாமல் சாதிகளின் குடியரசாக மாற்றுகிறது என்பதை விவரிக்கிறது இத்தொகுப்பு.

Image result for இந்தியாவின் நவீன தாராளமயவாதம்

‘இந்தியாவின் நவீனதாரளமயவாதம் இந்துத்துவா புத்துயிர்பெற உதவியது’ (பக். 161). இந்த ஒற்றைவரியை விரிவாக பல்வேறு சூழல்கள், அரசியல் நிகழ்வுகள், கட்சிகள், அதிகாரம் என பல பரிமாணங்களில் விவரிக்கிறது இந்நூல். நவீன தாராளமயம் உருவாக்கிய சமூக டார்வீனியம் இந்துத்துவத்துடன் கைகோர்த்து உருவாக்கியிருக்கும் அரசியல் தன்னிலைகளாக இந்திய மக்கள் மாறியுள்ளனர். அதன் ஒரு உருவகமே டிஜிட்டல் இந்துக்கள் என்பது. இந்த டிஜிட்டல் இந்துக்கள் எப்படி தங்களது தானியங்கி அனலாக் (analogue) தன்மையிலிருந்து டிஜிட்டல் தன்மைக்கு கடந்த இருபது ஆண்டுகளாக மாற்றப்பட்டார்கள் என்கிற வரலாற்றை அறிய இந்நூல் உதவுகிறது. இந்தியாவில் அதிகாரம் பெற்றுள்ள இந்துத்துவ பாசிசம் எப்படி நவதாராளவாதத்துடன் தனது கடவுள் சந்தையை விரிவுபடுத்துகிறது என்பதையும், இவர்களது மதக்கருத்தியலுக்குப் பின்னால் இருப்பது தேசப்பற்றோ, இந்துமத வளர்ச்சியோ, இந்திய வளர்ச்சியோ அல்ல. முழுக்க முழுக்க பன்னாட்டு முதலாளிய நலன். அந்த எஜமானர்களின் ஏவல் அரசுகளாக இந்தியாவை சுரண்டிக் கொழிக்கும் இவர்கள் மக்களை மயக்க மார்க்ஸ் கூறிய மதவாத அபினியை அளவிற்கு அதிகமாக மக்களிடம் ஊட்டி வருகிறார்கள் என்பதை உணர்த்தும் ஒரு முக்கியமான அரசியல் தொகுப்பே இந்நூல். தற்கால அரசியலை அறிய விரும்பும் இளைஞர்கள், தலித்துகள், இடதுசாரிகள் மற்றும் தங்களை உணர விரும்பும் பொதுவாசகர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.

இதன் மொழிபெயர்ப்பில் சில குறைகள் உள்ளன என்றாலும், வாசிப்பிற்கு இடைஞ்சல் இல்லை. ஆனாலும் பலபகுதிகளில் விடுபடல்கள், முடிவற்ற பத்திகள், வாக்கிய முறிவுகள் என உள்ளது. அடுத்த பதிப்பில் இவை கவனத்துடன் சரி செய்யப்பட வேண்டும். நவீன அரசியலைப் புரிந்துகொள்ள தமிழில் பயன்படும் கலைச்சொல்லாக்க பயிற்சி முக்கியம். குறிப்பாக பக். 124-ல் மற்றவர்களாக மாற்றியது என்று மொழிபெயர்த்துள்ளார். அது மற்றமை (Other) என்று தமிழில் பயன்படுத்தப்படுகிறது. மற்றவர் என்பதும் மற்றமை என்பதும் வேறுபட்ட அரசியல் கலைச்சொற்கள். நார்சிசம் (Narcism) என்ற சொல் பக் 393-ல் தவறான இடத்தில் அச்சிடப்பட்டுள்ளது. அதேபோல் எழுத்துப் பிழைகளும் உள்ளன. இவைகள் இத்தகைய பெரும்பணியைச் செய்யும்போது தவிர்க்க முடியாதவை. இந்நூலை தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்த தோழர் ச. சுப்பராவ் பாராட்டுக்குரியவர். ஒரு சிறந்த பணியை முழு ஈடுபாட்டுடன் செய்துள்ளார். தனது அரசியல் முரண்பாடுகளை மீறி, ஒரு உரையாடலுக்காக வெளியிட்ட பாரதி புத்தகாலயம் பாராட்டுக்குரியது. இறுதியாக, என்னைப் போன்ற அரசியல் ஆர்வலர்களுக்கும். கோட்பாட்டு வாசிப்பாளர்களுக்கும் இந்நூல் பல சிக்கல்களைப் புரிந்துகொள்ள ஒரு புதிய திறப்பாக அமைந்தது என்பதையும் இங்கு பதியவைக்கத்தான் வேண்டும்.

1 Comment

  1. திறனாய்வாளர் ஜமாலன் வரிகளிலேயே சொன்னால் //தற்கால அரசியலை அறிய விரும்பும் இளைஞர்கள், தலித்துகள், இடதுசாரிகள் மற்றும் தங்களை உணர விரும்பும் பொதுவாசகர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.//

Leave a Response