Book Review

நூல் அறிமுகம்: தேசப் பிரிவினைக்கு காரணம் யார் : முஸ்லீம் மதவாதமா? இந்து மதவாதமா? – தேனி சுந்தர் 

Spread the love

 

“இந்து அல்லது முஸ்லீம் அல்லது பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் எதுவாக இருந்தாலும் அவை என்ன செய்தன? இந்துக்கள் அல்லது முஸ்லீம்களில் சாதாரண மக்கள் கிராமங்களின் புழுதியிலும் அல்லது நகரத்தின் சேரிகளிலும் துன்பத்தில் உழன்று கொண்டிருக்க ஒரு சிலரை மட்டும் கொழுக்க வைத்தன என்பது தான் சாம்ராஜ்யங்களின் வரலாறு..”- அல்லா பக்ஸ் 

“இந்துக்களும் முஸ்லீம்களும் இருவேறு மத தத்துவத்தை உடையவர்கள். சமூக பழக்கவழக்கங்களும் அவர்களின் இலக்கியங்களும் வேறுபட்டவை. அவர்களுக்குள் திருமணம் செய்து கொள்வதும் சேர்ந்து உண்பதும் கிடையாது. அவர்கள் இருவேறு நாகரிகங்களைச் சேர்ந்தவர்கள். இவை ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. இந்துக்களும் முஸ்லீம்களும் வரலாற்றின் வெவ்வேறு மூலக் கருத்துகளிலிருந்து தமது உத்வேகத்தைப் பெறுகின்றனர். அவர்களின் இதிகாசங்கள் வேறுபட்டவை. அவர்களின் களநாயகர்கள் வேறுபட்டவர்கள். ஒரு சமூகத்தின் களநாயகன் மறு சமூகத்தின் எதிரியாக உள்ளார். அவர்களின் வெற்றியும் தோல்வியும் முரண்பட்டவை. இத்தகைய இரண்டு முரண்பட்ட தேசங்களை ஒரே அரசின் கீழ் இணைக்க முயல்வது மேலும் மேலும் அதிருப்திக்கு தான் வழிவகுக்கும்..” (1940)

“முஸ்லீம் இந்தியாவின் பின்பலமாக இருப்பது மகத்தான திருமறை நூலான குர் ஆன் ஆகும். இந்த வழியில் நாம் மேலும் முன்னேறும் பொழுது ஒரே கடவுள், ஒரே திருமறை, ஒரே தூதர், ஒரே தேசம் என்பதை வலுப்படுத்த முடியும் எனும் நம்பிக்கை எனக்கு உள்ளது..” (1943) – முகமது அலி ஜின்னாவின் உரைகளில் இருந்து..

இத்தகைய வாதங்களும் இஸ்லாம் ஆபத்தில் உள்ளது என்கிற பிரச்சாரமும் பெரும்பான்மை முஸ்லீம் மக்களை ஈர்ப்பது இயல்பு. அவர்கள் முஸ்லீம் லீக்கின் பின்னால் அணிதிரண்டார்கள்.. போராடினார்கள். இறுதியில் தங்கள் பிடிவாதத்தினால் பாகிஸ்தான் என்கிற தனிநாட்டைப் பெற்றுவிட்டார்கள். முஸ்லீம்கள் இந்தியாவைத் துண்டாடி விட்டார்கள் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள்.

ஆனால், பிரிவினைவாதக் கருத்துகளுக்கு விதைபோட்டு, நீருற்றி வளர்த்தவர்கள் இந்துத்வா வாதிகள் என்பதற்கான ஆதாரங்கள் முன்வைக்கப்படுகின்றன.

Rajnarayan Basu – Wikipedia

ராஜ் நாராயண் பாசு (1826-99), நபா கோபால் மித்ரா  (1840-94) – இவர்கள் இந்துத்துவ தேசியத்தின் பிதாமகர்கள் என்று கருதப்படுபவர்கள். இவர்கள் தங்கள் காலத்தில் இந்துக்கள் ஆரிய தேசத்தை இந்தியாவில் உருவாக்க முடியும் என்று பிரச்சாரம் செய்தவர்கள். இவர்கள் உருவாக்கிய அமைப்புதான் பின்னாளில் அகில இந்திய இந்துமகா சபையாக மாறுகின்றது..

இந்து முஸ்லீம் பிரிவினைக் கருத்துகளை விதைப்பதில் முக்கியப்பங்கு வகித்த அமைப்புகளில் ஒன்று ஆரிய சமாஜம். பாய் பரமானந்த், அதன் தலைவர்களில் ஒருவர். இந்து மகா சபை மற்றும் காங்கிரஸ் தலைவராகவும் இருந்தவர். இவர் ஒரு ஆபத்தான கருத்தை முன்வைக்கிறார். அதில் எந்தெந்த பகுதிகள் பிரிக்கப்பட வேண்டும். முசல்மான்களின் ஆட்சிப்பகுதியில் இருந்து இந்துக்கள் வெளியேறுவது, மற்ற பகுதிகளில் இருக்கும் முசல்மான்கள் அவர்களது ஆட்சிப்பகுதிக்குச் சென்றுவிட வேண்டும் என்று  1908-லேயே எழுதியிருக்கிறார்.

அதேபோல, “இங்கிலாந்து எப்படி ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமோ, பிரான்சு எப்படி பிரஞ்சுக்காரர்களுக்குச் சொந்தமோ, ஜெர்மனி எப்படி ஜெர்மானியர்களுக்குச் சொந்தமோ அப்படி இந்தியா இந்துக்களுக்குச் சொந்தம். எனவே இந்துக்களாகிய நாம் ஒன்றுபட்டால் ஆங்கிலேயர்களையும் அவர்களது அடிவருடிகளான முஸ்லீம்களையும் நாம் விரட்ட முடியும்..” (1923) – முன்ஷி, அகில இந்திய இந்து மகாசபைக்கு தலைவராக இருந்தவர்.

“என்னுடைய திட்டத்தின் கீழ் முஸ்லீம்கள் நான்கு பகுதிகளை பெறுவர். பதான்கள் அதிகமாக வாழும் வடமேற்கு எல்லைப்பகுதி, மேற்கு பஞ்சாப், சிந்துப் பகுதி மற்றும் கிழக்கு வங்காளம்.. ஆனால் ஒன்று தெளிவாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். நான் முன்வைப்பது ஒன்றுபட்ட இந்தியா அல்ல.. இதன் பொருள் தெளிவான பிரிவினை. ஒன்று முஸ்லீம் இந்தியாவாகவும் மற்றொன்று முஸ்லீம் அல்லாத (இந்துக்களின்) இந்தியாவாகவும் இருக்கும்..”(1923) – இது மிகப்பிரபலமான விடுதலைப் போராட்ட வீரர், மாபெரும் தலைவர்களில் ஒருவர், பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கப்பட்ட லாலா லஜபதி ராய் அவர்களின் கருத்து..

“இந்தியாவில் இரண்டு முரண்பட்ட தேசங்கள் அருகருகே வாழ்கின்றன. இந்த இரண்டு தேசங்களும் ஒன்றாக கூடி வாழ்கின்ற நாடாக இந்தியா உள்ளது என்றோ அல்லது இரண்டு தேசங்களையும் ஒன்றுபடுத்தி விடமுடியும் என்றோ சில சிற்பிள்ளைத்தனமான அரசியல்வாதிகள் எண்ணுகின்றனர். அது மிகப்பெரிய தவறு ஆகும்..” (1937) – சாவர்க்கர்.

முஸ்லீம்களுக்கு தனி தேசம், தனி கொடியை வழங்குவதை ஆதரிக்கும் சாவர்க்கர் அவர்களுக்கு தனி நாடாக கொடுக்க முடியாது என்கிறார். அதன் பொருள், அவர்கள் இந்துக்களுக்கு கட்டுப்பட்டு அடிமைச் சேவகம் செய்ய வேண்டும் என்பதே ஆகும் என அம்பேத்கர் தெளிவுபடுத்துகிறார்.

Hindutva founders 'borrowed' Nazi, fascist idea of one flag, one ...

“இந்துக்கள் அல்லாதவர்கள் இந்து கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்து மதத்தைப் புகழ்பாட வேண்டும். இந்து இனத்தையும் கலாச்சாரத்தையும் புகழ்பாடுவதைத் தவிர வேறு எந்தச் சிந்தனையும் அவர்களுக்கு இருக்கக் கூடாது..” – கோல்வால்கர்..

இத்தகைய சிந்தனைகளால் நாட்டில் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வந்த பதற்றமான சூழ்நிலைகளை ஜின்னா தன்னுடைய அதிகார, பதவி ஆசைக்குப் பயன்படுத்திக் கொண்டார். இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் எந்தவிதத்திலும் ஒத்துப் போகாது என்ற ஜின்னா, தன் மனைவியே ஓர் இந்து என்பது கடைசிவரை நினைவுத்திக் கொள்ள முன்வரவில்லை. எத்தனை மன்னர்கள் ஆண்டாலும், தங்களுக்குள் போரிட்டாலும் இடையிலிருந்த மக்கள் பெரும்பாலான நேரங்களில் தேசமாகத்தான் நின்றார்களே தவிர மதமாகப் பிளவுற்று நிற்கவில்லை என்ற வரலாறு ஏனோ ஜின்னாவுக்கு நினைவுக்கு வரவில்லை.. அக்பர் பிறந்ததே ஒரு இந்து ரஜபுத்திர அரண்மனையில் தான் என்பதையும் ஜஹாங்கீரின் தாய் ஒரு இந்துப் பெண், ஷாஜகானின் தாய், மனைவி இந்துப் பெண்கள் என்பதையெல்லாம் மறந்துவிட்டார். 1857 முதல் இந்தியச் சுதந்திரப் போரில் எத்தனை எத்தனை இந்துக்களும் முஸ்லீம்களும் ஒன்றுபட்டுப் போராடி ஆங்கிலேயரை எதிர்த்தார்கள் என்பதையெல்லாம் ஜின்னா ஏனோ மறந்துவிட்டார். அல்லது மறைத்து விட்டார்.. அத்தகைய பல தகவல்கள் இந்நூலில் பட்டியலிடப்பட்டுள்ளன..

ஜின்னாவின் வார்த்தைகளுக்குப் பலியான முஸ்லீம்கள் அவரின் பின்னால் சென்றார்கள். அவருடைய கருத்து இந்தியாவில் வாழ்ந்த ஒட்டுமொத்த முஸ்லீம்களின் கருத்தையும் பிரதிபலிக்கவில்லை என்பதற்கு உதாரணமாக 1943ல் டெல்லியில் இந்தியப் பிரிவினைக்கு எதிராக பல்வேறு முஸ்லீம் அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற மிகப் பிரமாண்டமான மாநாடு, அதில் பங்கேற்ற தலைவர்களின் அற்புதமான உரைகள், பெரும் வரவேற்பளித்து இலட்சம் பேர் வரை கலந்து கொண்ட மக்கள் என சிறப்பான தகவல்கள் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியும் ஆங்கிலேய அரசும் அதைக் கண்டு கொள்ளவே இல்லை.. அவர்கள் ஏற்கனவே வேறொரு கணக்கு போட்டு இருக்கலாம்..

பிரிவினைக்கு எதிரான நிலைப்பாடு எடுத்த அல்லா பக்ஸ் உள்ளிட்ட பல முஸ்லீம் தலைவர்களைப் படுகொலை செய்வது, தாக்குவது எனப் பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டு இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ்.க்கு எந்த விதத்திலும் சளைக்காத பணிகளை மூஸ்லீம் லீக்கின் துணை அமைப்பான முஸ்லீம் நேசன் கார்ட் என்கிற அமைப்பு குறித்த தகவல்கள் ஆச்சரியமளிக்கின்றன..

பிரிவினைப் பகுதிக்குள் வருகின்ற முக்கியமான பகுதிகளான பலுசிஸ்தான், சிந்து மாகாணப்பகுதிகளில் பெரும்பான்மையினர் பிரிவினைக்கு எதிராகவே இருந்திருக்கின்றனர். அல்லா பக்ஸ் இருக்கும் வரை தங்கள் கருத்து எடுபடாது என்பதாலேயே பிரிவினைக்கு எதிரான அவரை முஸ்லீம் லீக் ஆட்கள் படுகொலை செய்கின்றனர். கடைசி வரை பிரிவினைக்கு எதிராகப் போராடிய கான் அப்துல் காபர் கான் அவரது இறுதிக்காலம் வரை பாகிஸ்தானில் வீட்டுச் சிறையில் தான் இருந்திருக்கிறார்.

தேசப் பிரிவினை, விளைவாய் வன்முறைகள், கலவரங்கள், படுகொலைகள் என அடுத்தடுத்த காட்சிகளை ஆவலுடன் எதிர்பார்த்தது ஆங்கிலேய ஆட்சி.. பல்லாண்டு காலமாக தங்கள் ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்வதற்கு எப்படியெல்லாம் பிரிவினையை ஊட்டி வளர்த்து, அதில் ஆங்கிலேய அரசு குளிர்காய்ந்தது என்பது பல்வேறு கடிதப் போக்குவரத்து குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது.

10 Unknown Facts About India-Pakistan Partition! - Make The World ...

“இன்குலாப் ஜிந்தாபாத், இந்தியாவிற்கு விடுதலை, பாகிஸ்தானிற்கு சாவுமணி..” – 1940ல் பிரிவினைக்கு எதிரான முஸ்லீம் அமைப்புகளின் மாநாட்டு முழக்கங்கள் இவை..

“இஸ்லாம் ஆபத்தில் உள்ளது எனும் அச்சத்தை உருவாக்கி அவர்கள் ஒன்றுமறியா முஸ்லீம்களை அணிதிரட்ட முயல்கின்றனர். ஜின்னாவும் அவரது ஆதரவாளர்களும் தான் இந்திய முஸ்லீம்களின் குரல் என்கிற மாயை உடைத்தெறியப்பட வேண்டும்..”

“இந்தியாவில் முஸ்லீம்கள் காலடி வைத்த காலத்திலிருந்து இந்துக்களுடன் சேர்ந்து தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சந்தைகளில், வீடுகளில், இரயில்களில், பேருந்துகளில் இன்னும் பல இடங்களில் இந்துக்களும் முஸ்லீம்களும் சேர்ந்து தான் இருக்கின்றனர். கல்லூரிகளிலும் நீதிமன்றங்களிலும் காவல் நிலையங்களிலும் உணவு விடுதிகளிலும் அவர்கள் சேர்ந்து தான் காணப்படுகின்றனர். இந்துக்களும் முஸ்லீம்களும் சேர்ந்து இல்லாத ஒரு இடமாவது இந்தியாவில் உள்ளதா..?”

“மொமீன் மாநாட்டுக் கட்சி முழு விடுதலையைக் கோருகிறது. மேலும் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களின் அரசியல் ஒற்றுமையை ஆதரிக்கிறது. மதம் அல்லது வேறு எந்த ஒரு காரணத்திற்காகவும் இந்த ஒற்றுமையை எதிர்ப்போர் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும்.. பாகிஸ்தான் பிரிவினை வெறும் கானல் நீர். அது அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும்.. கலவரங்களுக்கும் கொலை மற்றும் கொள்ளைக்கும் அழிவுக்கும் தான் வழிவகுக்கும்..”

“மத அடிப்படை வாதத்தின் தொட்டில்தான் முஸ்லீம் லீக். இதில் தான் வெறுப்பும் சகிப்பற்ற தன்மையும் பிறக்கின்றன. முஸ்லீம் லீக் ஒரு கொலைக்களம். ஒரு சிலரின் சுயநலத்திற்காக ஏழைகள் கொலைசெய்யப்படுகின்றனர். முஸ்லீம் லீக் காலனியாதிக்கத்தினரைப் புகழ்ந்து தள்ளும் கவிதைகளை உற்பத்தி செய்யும் இயந்திரம். முதலாளிகளும் உயர் வர்க்கத்தினரும் தீட்டும் சதிக்குப் பயன்படும் மேடைதான் முஸ்லீம் லீக். சொத்துரிமை படைத்தோரும் வசதியானவர்களும் அடங்கிய பிரிவினரின் ஊதுகுழல்தான் முஸ்லீம் லீக். இந்தியாவை என்றென்றைக்கும் அடிமையாக வைத்திருக்க இந்தப் பிரிவினர் ஒன்றுபட்டுள்ளனர்..”

“இந்து முதலாளிகளின் போட்டியை அகற்றிவிட்டு முஸ்லீம் மக்களை தாங்கள் மட்டுமே முழுமையாக சுரண்டவே பாகிஸ்தான் பிரிவினையை முஸ்லீம் முதலாளிகள் ஆதரிக்கின்றனர்..” ஜின்னா, பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தான் என்கிற எல்லைக்குள் வாழ இருக்கிற முஸ்லீம்களை மட்டுமே மனதில் கொண்டு பேசுகிறார். மற்ற பகுதிகளில் இந்துக்களோடு இரண்டறக் கலந்து வாழ்ந்து கொண்டிருக்கிற, வாழ இருக்கிற முஸ்லீம்களை அவர் கருத்தில் கொள்ளவே இல்லை. துருக்கிய முஸ்லீம்களுடனும் அரேபிய முஸ்லீம்களுடனும் இந்திய முஸ்லீம்கள் எந்தப் பொது அம்சங்களில் ஒன்றுபட முடியும், ஆனால் இந்தியாவில் வாழ்கிற இந்துக்களுடன் பல்வேறு அம்சங்களில் நாம் ஒன்றுபட முடியும் என்றெல்லாம் வாதங்கள் நடைபெற்றுள்ளன.. இவையெல்லாம் பிரிவினைக்கு எதிராக பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் முன்வைத்த கருத்துகள் ஆகும்..

பிரிவினைக்கு எதிரானவர்களின் குரல்கள் காங்கிரசின் கேளாச் செவிகளில் கடைசி வரை விழவே இல்லை.. தேச ஒற்றுமைக்கான அந்த சக்திகளை காங்கிரஸ் ஊக்கப்படுத்தவில்லை. பாவம் காந்தியாரே தனித்து விடப்பட்டார்.. நேருவும் படேலும் முடிவெடுத்து விட்டனர் என்று அவரால் புலம்பத் தான் முடிந்திருக்கிறது..

பிரிவினை வேண்டாம் என வலியுறுத்திய முஸ்லீம் தலைவர்களை, அமைப்புகளை கடைசி வரை அழைத்துப் பேசவே இல்லை. அவர்களுக்கு தெரிந்த ஒரே அமைப்பு முஸ்லீம் லீக், ஒரே தலைவர் ஜின்னா..

தேசத்தைப் பிரிவினை செய்யாவிட்டால் என்ன விளைவுகள் உருவாகும் என்று இங்கு கூறப்படுகிறதோ அதை விட மோசமான ஆபத்துகள் பிரிவினை செய்தால் ஏற்படும் என்கிற வாதங்களை வைத்து பிரிவினையை மறுத்த 28 பேரின் கருத்துகளைப் புறந்தள்ளி 1947ல் காங்கிரஸ் வெளிப்படையாக பிரிவினைக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியது.

All About Pakistan: Quaid-e-Azam Muhammad Ali Jinnah

சவப்பெட்டிக்கு கடைசி ஆணி அறைவது போல காங்கிரஸ் பிரிவினையை ஏற்றுக் கொண்டது. இதன் மூலம் பிரிவினைக்கு எதிரான அனைத்துக் குரல்களும் மங்கிப்போயின.

பொதுவாக, கோடிக்கணக்கான மக்களின் விருப்பத்தின் விளைவால் உருவானதல்ல இந்திய, பாகிஸ்தான் பிரிவினை. இந்து முதலாளிகள், முஸ்லீம் முதலாளிகளின் விருப்பத்தின் பேரில் உருவானவை. இவர்களின் விருப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, ஆட்சி நிலைக்க தாங்கள் ஊட்டி வளர்த்த மதவேறுபாடுகளை, இருதரப்புக்குமான முரண்பாடுகளின் விபரீதத்தின் விளைவை, அதன் அழிவு சக்தியின் பேராற்றலை சுதந்திரத்தை முன்னிட்டு பிரிவினையின் பெயரால் பரிட்சித்து பார்த்து விட்டது இங்கிலாந்துப் பேரரசு என்று நாம் புரிந்து கொள்ளலாம்..

உலகில் எத்தனையோ நாடுகள் பிளவுபட்டிருக்கின்றன. ஆனால் இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த அளவிற்கு உலகில் வேறெங்கும் கொடுமைகள் நடைபெற்றதாகப் பதிவுகள் இல்லை. இதனை மையப்படுத்தி ஆங்கிலத்தில் ஏராளமான நூல்கள் வெளிவந்திருந்தாலும் தமிழில் அவை போதுமான அளவில் இல்லை என்கிற ஆதங்கத்தின் வெளிப்பாடு தான் இந்நூல்.

பாகிஸ்தான் என்றாலே நமது எண்ணங்கள் உள்ளூரில் நம்மோடு வசிக்கும் முஸ்லீம் நண்பர்களைத் தான் முதலில் கண்முன் கொண்டு வருகிறது இயல்பாக.. விரோத மனப்பாங்கு எங்கு காட்டப்படக் கூடியதாக இருக்கிறது என்றால், அண்ணன் தம்பியாக நம் அண்டை அயலாராக நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லீம் மக்களிடம் தான். அவையெல்லாம் எந்த அளவிற்கு தவறானவை என்பதை இந்நூல் வாசிப்பின் மூலம் நாம் உணர முடியும்.. பிரிவினை குறித்த தெளிவான புரிதல்களை அளிக்கிறது..

கடந்த கால வரலாறுகளை மீளாய்வுக்கு உட்படுத்துகின்ற அதே நேரத்தில் இந்தியாவில் தற்போது இருதலை நச்சுப்பாம்புகளாக  நவீன தாராளமயமும் மத அடிப்படை வாதமும் எழுந்து நிற்கின்றன. இரண்டில் எதற்கு முன்னுரிமை என்பது கேள்வியல்ல.. இரண்டையும் ஒருசேர எதிர்க்க வேண்டும், முறியடிக்க வேண்டும் என எச்சரிக்கவும் செய்கிறது இந்நூல்.

இந்நூலை பாரத் கபீர்தாசன் எழுதியுள்ளார். பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.

— தேனி சுந்தர் 

Leave a Response

Top Reviews

Video Widget

gallery