நேர்காணல்

தில்லி கலவரம்: ‘குஜராத் மாடல்’ இறக்குமதி செய்யப்படுகிறதா? – அசிஷ் கேட்டான் (தமிழில்: ச.வீரமணி) 

(பிப்ரவரி 2020 பிப்ரவரி 24 அன்று வட கிழக்கு தில்லியில் நடைபெற்ற கலவரத்தின்போது வன்முறைக் கும்பலில் ஒன்று. போட்டோ: Reuters/Danish Siddiqui)

குஜராத் மாநிலத்தில், கோத்ரா ரயில் எரிப்பை அடுத்து நடைபெற்ற கலவரங்களுக்குப் பின்னர், கலவரங்களில் ஈடுபட்ட சங் பரிவாரக் கும்பல்களைச் சேர்ந்தவர்களைப் பாதுகாப்பதற்காக, சிறப்பு அரசு வழக்கறிஞர்களாக ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்களே நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் பல வழக்குகளை குண்டர் கும்பல்களுக்கு ஆதரவாக ‘முடித்து’ வைத்தார்கள்.

அதேபோன்றே, தற்போது பிப்ரவரியில் வட கிழக்கு தில்லியில் முஸ்லீம்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரங்கள் தொடர்பாகவும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர்பாகவும், சிறப்பு அரசு வழக்குரைஞர்களை நியமிப்பதிலும் மத்திய அரசாங்கம் மிகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

2007இல் குஜராத்தில், அங்கே நடைபெற்ற கலவரங்களின் உண்மையை ஆராய்வதற்காக நான் சென்றிருந்தேன். சுமார் ஆறு மாதங்களுக்கும் மேலாக, அங்கே பல கலவரங்களில் ஈடுபட்டவர்களிடமும், கலவரங்களைத் தலைமை தாங்கி நடத்திய சதிகாரர்களிடமும் ஒப்புதல் வாக்குமூலங்களை ரகசியமாகப் பதிவு செய்தேன். அவர்கள் அனைவருமே எப்படி முஸ்லீம்களைக் கொன்றோம், ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் எரித்தோம் என்று விவரித்தார்கள். அப்போது அவர்கள் என்னிடம் கூறிய முக்கியமான அம்சம் என்னவென்றால், காவல்துறையினரின் ஆதரவு இல்லாமல் இந்த அளவிற்கு அதிகமான அளவில் எங்களால் மக்களைக் கொன்றிருக்க முடியாது என்பதேயாகும். இவ்வாறு நான் ரகசியமாகப் பதிவு செய்து 60 மணி நேரம் ஓடிய ஒலிநாடாக்கள் பின்னர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதன் மூலமாகத்தான் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முக்கியமான நபர்களான பாபு பஜ்ரங்கி, மாயா கோட்னானி, சுரேஷ் சர்ரா, பிரகாஷ் ராதோட் போன்றவர்கள் தண்டனை பெறுவதற்குக் காரணமாக அமைந்தது. மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் அவற்றை தடய அறிவியல் மூலம் ஆய்வு செய்து, அவை போலியல்லாத, நிஜமானவை என்று சான்றிதழ்களைப் பெற்றது. உச்சநீதிமன்றம் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து, விசாரணை நீதிமன்றங்களில் வழக்கை விசாரிக்க வைத்தது. நானும் நீதிமன்றங்களில் அரசுத்தரப்பில் சாட்சியாக விசாரிக்கப்பட்டேன். நரோடா பாட்டியா வழக்கில், விசாரணை நீதிமன்றம், நான் ரகசியமாகப் பதிவு செய்து  சமர்ப்பித்திருந்த ஒலிநாடா குறித்து, ‘எவ்விதப் பிசிறுமின்றி கோர்வையாகவும், நம்பக்கூடியதாகவும், ஏற்றுக்கொள்ளக்கூடிய சாட்சியமாகவும் இருப்பதாகக்’ குறிப்பிட்டிருந்தது.

ஆனாலும் கூட, உச்சநீதிமன்றம் அமைத்திருந்த சிறப்புப் புலனாய்வுக் குழு நான் வெளிக்கொணர்ந்திருந்த உண்மைகளில் சிலவற்றை மட்டும் “அரசுத்தரப்பு சாட்சியமாக” (“prosecutable evidence”) தாக்கல் செய்ய முடியாது என்று முடிவு செய்தது. அந்த ஒலிநாடாக்களில், குஜராத் மாநில அரசாங்கத்தால் அமர்த்தப்பட்டிருந்த முக்கியமான அரசு வழக்குரைஞர்கள், விசுவ இந்து பரிஷத், ஆர்எஸ்எஸ் அல்லது இந்துத்துவா ஆதரவாளர்கள் போன்ற சங் பரிவாரக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் எப்படியெல்லாம் இந்த வழக்குகளை நீர்த்துப்போகச் செய்வதற்கு செயல்பட்டோம் என்று பேசியிருந்ததையெல்லாம் சிறப்புப் புலனாய்வுக் குழு எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டது. அந்த அரசு வழக்குரைஞர்கள், ஒரு  இந்து தீவிரவாதி என்று என்னை நம்பி, என்னிடம், எப்படியெல்லாம் தாங்கள் கலவரங்களில் பாதிக்கப்பட்டு சாட்சிகளாகக் கொண்டுவரப்பட்ட முஸ்லீம்களை அச்சுறுத்தி அவர்களின் வாக்குமூலங்களை வாபஸ் பெற வைத்தோம் என்றும், குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இந்துக்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அல்லது சாட்சிகளுக்கும் இடையே சமரசம் செய்து வைத்தோம் என்றும் கூறியிருந்தார்கள்.

அரவிந்த் பாண்ட்யா, திலீப் திரிவேதி மற்றும் பாரத் பட் ஆகிய மூன்று உயர் அரசு வழக்குரைஞர்களும் தாங்கள் எப்படியெல்லாம் குற்றஞ்சாட்டப் பட்டிருந்தவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டோம் என்று என்னிடம் கூறியவை அனைத்தும் அந்த ஒலிநாடாக்களில் இருந்தன. திலீப் திரிவேதி, அப்போது குஜராத்தின் விசுவ இந்து பரிஷத்தின் பொதுச் செயலாளராக இருந்தவர். அவரைத்தான் குஜராத் மாநில அரசு மெஹ்சானா மாவட்டத்தில் மூத்த அரசு வழக்குரைஞராக நியமனம் செய்தது. இந்த மாவட்டம்தான் கலவரத்தில் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளான மாவட்டமாகும்.  அவர் அளித்திருந்த வாக்குமூலத்தில் காவல் துறையும், அரசுத்தரப்பு வழக்கும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜரான வழக்கறிஞர்களும் எப்படியெல்லாம் கலவரத்தில் ஈடுபட்டவர்களைக் காப்பாற்ற செயல்பட்டோம் என்று கூறியிருந்தார்.

Representative image. Credit: PTI

 “குஜராத்தில் நடைபெற்ற அனைத்து வழக்குகளையும் நான் ஒருங்கிணைத்துக் கவனித்து வந்தேன். விசுவ இந்து பரிஷத்தின் பொதுச் செயலாளராக இருந்ததால், அனைத்து நீதிமன்றங்களில் நடைபெற்ற வழக்குகளிலும் இதனை என்னால் செய்ய முடிந்தது. எனவே அனைத்து வழக்கறிஞர்களுமே அவர்களுடைய கௌரமான சேவைகளை எனக்கு வழங்கினார்கள்., அதனால்தான் அவர்கள் அனைவரும் எனக்கு மிகவும் நெருக்கமாக மாறியிருக்கிறார்கள்,” என்றார் திரிவேதி. இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  “அரசு வழக்குரைஞரையும், குற்றஞ்சாட்டப்பட்ட வர்களுக்காக ஆஜரான வழக்குரைஞர்களையும் ஒருங்கிணைத்தது மட்டுமல்லாமல், மாநிலத்தின் மாநிலக் காவல்துறைத் தலைவர் (DGP), மற்றும் அவருக்குக் கீழ் பணியாற்றிய டிஐஜி (DIG) மற்றும் ஏஜிபி (AGP) போன்றோரையும் ஒருங்கிணைத்திருந்தேன்,” என்றும் திரிவேதி கூறினார்.

திரிவேதியிடம் நான் பதிவு  செய்த சில முக்கியமான பதிவுகள் வருமாறு:

அசிஷ் கேட்டான்: மெஹ்சானாவில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன?

திரிவேதி: மெஹ்சானா மாவட்டத்தில் மொத்தம் 182 முறையீடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இவற்றில் 78 வழக்குகளில் குற்ற அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. இரு வழக்குகளில் தாமதமாக பதிவு செய்யப்பட்டன. இந்த 80 வழக்குகளில் மூன்றோ நான்கோதான் நிலுவையில் இருக்கின்றன. மற்ற 76 வழக்குகளும் முடிந்துவிட்டது.

அசிஷ் கேட்டான்: இந்துக்களுக்கு ஆதரவாகவா?

திரிவேதி: இரு வழக்குகளில் மட்டும் தண்டனைகள் பெற்றார்கள். மற்ற 74 வழக்குகளிலும் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள். தண்டிக்கப்பட்ட இரு வழக்குகளில், ஒன்றில் மேல்முறையீட்டில், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் விடுதலையைப் பெற்றோம். ஒரேயொரு வழக்கில் தண்டனைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறோம். உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு அனுமதிக்கப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பிணையில் வெளிவந்திருக்கிறார்கள். அந்தத் தண்டனையும் தவறானது. சில மாவட்டங்களில் சிலர் இன்னும் சிறையில் இருந்து வருகிறார்கள். அங்கே மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இந்துக்கள் கைது செய்யப்பட்டார்கள். இவர்களில் 100-150 பேர் இன்னமும் ஜாமீன் பெறவில்லை.

அசிஷ் கேட்டான்: மெஹ்சானா மாவட்டம்தான் கலவரத்தில் கடுமையான பாதிப்புக்கு உள்ளான மாவட்டம், இல்லையா?

திரிவேதி: பீனாசாகர், பீஜாபூர் போன்ற வட்டங்களும் மோசமாக மாறியிருந்தன.

அசிஷ் கேட்டான்: பீஜாபூர்?

திரிவேதி: அங்கே ஒரு கிராமம், சர்தார்பூர் என்றிருக்கிறது. அந்தக் கிராமத்தில் முஸ்லீம்களின் வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. 14 பேர் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்கள். இது ஒரு பெரிய வழக்கு. உச்சநீதிமன்றம் இந்த வழக்கிற்கு தடை விதித்திருக்கிறது. எனினும் நான் இதற்காக ஒன்றும் கவலைப்படவில்லை. ஏனெனில் இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அனைவரும் பிணையில் வெளிவந்துவிட்டார்கள்.

2002 குஜராத் கலவரங்கள் போட்டோ: Reuters/Files

நான் திரிவேதியின் அறையில் உட்கார்ந்திருந்த சமயத்தில், கலவரம் சம்பந்தப்பட்ட வழக்குகளைச் சேர்ந்த இரு இந்துக்கள் அங்கே வந்தார்கள். அவர்கள் தங்கள் வழக்குகளை நடத்த வழக்குரைஞரை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அவரும் ஒருசிலரிடம் பேசி, பொருத்தமான ஒருவரை அவர்களுக்காக அமர்த்திக் கொடுத்தார்.

சபர்கந்தா மாவட்டத்தில், ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்த நரேந்திர பட்டேல் மற்றும் மோகன் பட்டேல் என்பவர்கள் என்னிடம், கலவரங்களில் ஈடுபட்டு குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் இந்துக்களுக்கு சட்ட உதவி அளிப்பதற்காக சங்காலன் என்னும் அமைப்பைத் தாங்கள் ஏற்படுத்தி இருப்பதாகக் கூறினார்கள். விசுவ இந்து பரிஷத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் பலர், குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடினார்கள். அரசு வழக்குரைஞர்களும் அநேகமாக விசுவ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள் அல்லது அதன் ஆதரவாளர்களாக இருந்தார்கள். இவர்களும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை வழக்குகளிலிருந்து விடுவித்திட மறைமுகமாக உதவிகளைச் செய்தார்கள்.

ஆரவல்லி மாவட்டத்தில் நான் அரசு வழக்குரைஞர் பாரத் பட் அவர்களைச் சந்தித்தேன். அவரும் அந்த மாவட்டத்தில் விசுவ இந்து பரிஷத்தின் தலைவராக இருந்தார். அவர், நீதிமன்றத்திற்கு வெளியே குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக சாட்சிகளிடம் பேசி சமரசம் செய்து வழக்கை முடிப்பதற்கு தன்னாலான அனைத்தையும் செய்ததாக என்னிடம் கூறினார்.

பாரத் பட்:  மொடாசாவில், மொத்தம் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 1,400 ஆகும். … இவற்றில் 600 அல்லது சுமார் 550 ஆரம்பத்திலேயே நடைபெற்றவை. மீதம் உள்ளவை மறுபடியும் திறக்கப்பட்டன. … அவ்வாறு அந்த வழக்குகள் மீளவும் திறக்கப்பட்டபோது, அதில் சம்பந்தப்பட்டிருந்தோர் மத்தியில் மீண்டும் சங்கடங்கள் ஏற்பட்டன. உச்சநீதிமன்றம் இப்போது தலையிட்டதால் அவர்கள் பயந்துபோயிருந்தார்கள். கீழமை நீதிமன்றங்களில் பணிபுரிந்த நீதிபதிகளும் போதுமான அளவிற்குத் தைர்யம் இல்லாமல், பயந்துவிட்டார்கள்.

அசிஷ் கேட்டான்: அவர்கள் ஆரம்பத்தில் தைர்யமாக இருந்தார்களா?

பாரத் பட்: ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தார்கள். இப்போதுதான் மேலே உள்ள நீதிமன்றங்கள் பரோடா வழக்கில் மறு விசாரணைக்கு உத்தரவுகள் பிறப்பித்திருக்கின்றன.

அசிஸ் கேட்டான்:    பெஸ்ட் பேக்கரி …

பாரத் பட்: பெஸ்ட் பேக்கரி வழக்கு ஒன்று … அதன்பின்னர் புதிதாக வந்தவர்கள் மனவுறுதி குறைந்துவிட்டது.

அசிஸ் கேட்டான்: ஆனாலும் இப்போதும் மக்களிடம் ஆதரவு இருக்கிறது, இல்லையா? …

பாரத் பட்: நாங்கள் எங்கள் பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். … என்னிடம் வந்த விஷயங்களைப் பொறுத்தவரை நான் முஸ்லீம்களிடம் கடுமையாக நடந்துகொண்டேன். … அவர்கள் தங்கள் வாக்குமூலங்களை மாற்றிக் கொண்டிருந்தார்கள். … கூடுதலாக வாக்குமூலங்கள் அளித்தார்கள். … இவற்றிற்கு சாட்சிய மதிப்பு கிடையாது என்று கூறினேன்.

பாரத் பட், ஓர் இந்து பேர்வழி மீதான வழக்கினை முடித்துக்கொள்வதற்காக, பாதிக்கப்பட்டவர்களுக்குப் பத்து லட்சம் ரூபாய் கொடுப்பதற்குத் தான் வழியேற்படுத்திக் கொடுத்ததாகக் கூறினார். பின்னர் அவர், அதேபோன்று மற்றுமொரு வழக்கிலும் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணம் திரட்டிக் கொடுத்து, அவர்கள் அளித்த வாக்குமூலங்களை வாபஸ் வாங்க வைத்ததாகவும் கூறினார்.

அசிஸ் கேட்டான்: பணம் எப்படித் திரட்டினீர்கள்?

பாரத் பட்: இந்த நபர்கள் அவர்களாகவே கொடுத்தார்கள். …

அசிஸ் கேட்டான்: குற்றஞ் சாட்டப்பட்டவர்களா?

பாரத் பட்: குற்றஞ்சாட்டப்பட்டவர்களும் கொடுத்தார்கள் … அதற்கு முன், மாவட்டத்தில் அனைத்து வழக்குகளையும் நான் கையாண்டுகொண்டிருந்தபோது, குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடமிருந்து பணம் எதையும் பெறவில்லை. குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் கிராமங்களில் கூட்டங்கள் நடத்தும்போது, அங்குள்ள பணக்காரர்களிடம், காஷ்மீரில், பஞ்சாப்பில், ஹர்யானாவில், உத்தரப்பிரதேசத்தில் நீங்கள் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் வைத்திருந்தும் என்ன பயன்? மதராசா இங்கே திறக்கப்பட்டபின்னர் நீங்கள் அனைத்தையும் இழந்துவிட்டீர்கள் என்று கூறினேன். உங்கள் சொந்த சமூகத்தின் நலன்களுக்காகப் பயன்படுத்தாமல் உங்களிடம் பணம் இருந்து என்ன பயன் என்று கேட்டேன். சிலர் 5,000 ரூபாய் கொடுத்தார்கள், சிலர் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள், சிலர் லட்சம் ரூபாய் வரையிலும்கூட கொடுத்தார்கள், இவ்வாறுதான் நாங்கள் 5 முதல் 7 லட்சம் ரூபாய் வரையிலும் வசூலித்தோம். இவ்வாறுதான் அனைத்து வழக்குகளையும் முடிவுக்குக் கொண்டுவந்தோம். கொலைகள் எல்லாம் பட்டப்பகலில் நடந்தவை. கொலை செய்தவன் தன் கையிலிருந்த கத்தியால் கொலைபுரிந்தவனை கண்டம் கண்டமாக வெட்டினான். ஐந்து பேர் இதனைச் செய்தார்கள். இவர்கள் கொன்ற நபர்கள் மிகவும் பண்புடன் நாகரிகமாக வாழ்ந்துவந்தவர்கள். உதாரணத்திற்கு அதில் ஒருவர் மெடிகல் ஸ்டோர் உரிமையாளர். …

அசிஸ் கேட்டான்: மொடாசாவிலா?

பாரத் பட்: இல்லை, பிலோடாவில். இவ்வழக்கை 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவு செய்து நான் முடித்துக் கொடுத்தேன். இதில் 4 லட்சம் ரூபாய் மக்களிடமிருந்து என்னால் வசூலிக்கப்பட்டது.

§

நான் குல்பர்க் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பிரகலாத் ராஜுவிடம் பேசியபோது, அவர், அவர் வழக்கிற்குப் பயந்து ஓடிக்கொண்டிருந்த சமயத்தில், அரசு வழக்குரைஞர், காவல்துறையினரிடம் சரணடைந்துவிடுமாறு அறிவுறுத்தியதாகக் கூறினார்.

அரவிந்த் பாண்ட்யா, அப்போது நானாவதி – ஷா ஆணையத்தில் குஜராத் அரசாங்கத்தின் சார்பில் ஆஜரானவர், என்னிடம் கூறுகையில், ஆணையத்தின் நடவடிக்கைகளை “மேலாண்மை செய்வதற்கு” முயற்சித்துக் கொண்டிருந்ததாகக் கூறினார்.

“இந்த சம்பவம் நடக்கும்போது, இந்துக்கள் நலன்களை அடிப்படையாகக் கொண்ட அரசாங்கம் இருந்தது. எனவே, மக்களும் தயாராக இருந்தார்கள், அரசும் தயாராக இருந்தது. … இது மிகவும் சந்தோஷமான தற்செயலான ஒன்றாகும்,” என்று பாண்டா கூறினார்.

நான் பாண்ட்யாவை இருமுறை சந்தித்தேன். 2007 ஜூன் 6 மற்றும் ஜூன் 8 தேதிகளில் அவரை சந்தித்தேன். அவ்வாறு இருமுறை அவரை சந்தித்த போதும் அவர், “2002இல் ஆட்சியில் பாஜக அல்லாத அரசாங்கம் இருந்திருந்தால் கலவரங்கள் நிச்சயமாக நடந்திருக்காது,” என்று அழுத்தந்திருத்தமாகக் கூறினார். அவர் மேலும், “கோத்ரா படுகொலை சம்பவத்திற்குப்பின் நரேந்திர மோடி மிகவும் நிலைகுலைந்து போயிருந்தார். அகமதாபாத்திற்கு அருகில் இருந்த முஸ்லீம்கள் வசிக்கும் ஜஹாபுராவில் எரிகுண்டுகளை வீசியிருந்திருப்பார், ஆனால் முதல்வராக அவர் இருந்ததால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டார்,” என்று கூறினார்.

பாண்ட்யா, குஜராத்தில் முஸ்லீம்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட தினத்தை “வெற்றி தினமாக” ஒவ்வோராண்டும் கொண்டாட வேண்டும் என்று தான் நம்புவதாகக் கூறினார். அவர் மேலும், முஸ்லீம்களைக் கொல்வதைவிட அவர்களை முடக்குவதே சிறந்தது என்றும் அவர் தெரிவித்தார்.  ஏனெனில், வழக்கு நடந்தால்கூட இதற்குத் தண்டனை குறைவாகத்தான் கிடைக்கும் என்பதுடன், முடக்கப்பட்ட முஸ்லீம்கள் இந்துக்களால் எதுவும் செய்ய முடியும் என்பதற்கான “விளம்பரமாக” வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்றும் கூறினார். முஸ்லீம்களைக் கொல்வதைக் காட்டிலும் அவர்களுக்குப் பொருளாதார ரீதியாக இழப்புகளை ஏற்படுத்துவது முக்கியம் என்று பாண்ட்யா உறுதிபடக் கூறினார்.

பாண்ட்யாவிடம் மேற்கொண்ட ரகசியப் பேட்டிகள் வெளிச்சத்திற்கு வந்தபின்னர், பாண்ட்யாவின் நிலை ஏற்றுக்கொள்ளத்தக்க முடியாததாக மாறி, அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டி வந்தது.

விசாரணை அதிகாரி ஏ.கே. மல்கோத்ராவால் வெளியிடப்பட்ட 2010 மே 17 அன்று வெளியிடப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை, “அரசாங்கம், கூருணர்வுமிக்க கலவர வழக்குகளில், வழக்குகளை அரசுத்தரப்பில் விசாரித்திட,  விசுவ இந்து பரிஷத் மற்றும் ஆர்எஸ்எஸ்-இன் கீழ் இயங்கும் வழக்குரைஞர்களை அரசு வழக்குரைஞர்களாக நியமித்தது,” என்ற உண்மையை உறுதிப்படுத்தியது.

சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவராக இருந்த ஆர்.கே. ராகவனும், “வழக்குகளை விசாரிப்பதற்காக நியமனம் செய்யப்பட்டிருந்தவர்களில் ஒருசிலர் ஆளும் கட்சியுடன் சம்பந்தப்பட்டவர்கள் அல்லது ஆளும் கட்சியின் அமைப்புகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் அல்லது அவற்றிற்கு ஆதரவானவர்கள் என்று தெரிய வந்திருக்கிறது,” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனாலும், சிறப்புப் புலனாய்வுக் குழு, முதலமைச்சர் நரேந்திர மோடி உட்பட மாநிலத்தின் உயர் செயற்பாட்டாளர்களுக்கு எதிராகப் புனையப்பட்டிருந்த சதிக் குற்றச்சாட்டைக் கைவிட்டுவிட்டது. ஏனெனில், இக்குற்றச்சாட்டை வலியுறுத்தும் அளவிற்கு அரசுத்தரப்பு சாட்சியம் போதுமான அளவிற்கு இல்லை என்று அது நம்பியது. அதன்பின்னர் இதனையும் பாஜக, மோடிக்கு வழக்கில் “சுத்தவாளி” (“clean chit”) என்று கூறப்பட்டதாகக் கூறி கொண்டாடத் துவங்கியது.

நரேந்திர மோடி – 2012 – போட்டோ: REUTERS/AMIT DAVE

இதேபாணியில் இப்போது தில்லியில் நடைபெற்றுள்ள கலவர வழக்குகளில் மத்திய அரசு சிறப்பு அரசு வழக்குரைஞர்களை நியமனம் செய்துகொண்டிருப்பதைப் பார்க்கும்போது, குஜராத் மாடல் இங்கும் தொடருமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

(கட்டுரையாளர், தில்லி அரசாங்கத்தின் உரையாடல் மற்றும் மேம்பாடு ஆணையத்தின் (Dialogue and Development Commission) முன்னாள் தலைவர்.)

நன்றி: The Wire.

Leave a Response