நேர்காணல்

சிந்தனையும் பொருளும் : டேவிட் அட்டென்பரோ – ரிச்சர்டு டாக்கின்ஸ் உரையாடல் (தமிழில் : செ.கா)

(இந்த சந்திப்பு 2010 தி கார்டியன் இதழில் வெளியானது.இதில் குறிப்பிட்டுள்ள காலவிவரங்களை 2010 உடன் பொருத்திப்பார்த்துக் கொள்ளவும்)

டேவிட் அட்டென்பரோ மற்றும் ரிச்சர்டு டாக்கின்ஸ்

உயிர்களுக்கு இடையேயான ஒற்றுமை, நெறிமுறைகள்,ஆற்றல், ஹாண்டல் இசை ,பனிச்சறுக்கு வாகனத்தில் பயணம் செய்வதைப் போன்ற இயல்பான தருணங்கள் குறித்து இங்கிலாந்தின் புகழ்பெற்ற இரண்டு ஆளுமைகளை இயல்பாக பேசவைத்தோம்.

(டேவிட் அட்டன்பரோ ரிச்சர்டு டாக்கின்சுடனான சந்திப்பு. பட உதவி : அலெஸ்டைர் தெய்ன் – தி கார்டியனுக்காக)

சர்.டேவிட் அட்டென்பரோ 84 வயது நிரம்பிய இயற்கையியலாளர் மற்றும் ஒளிபரப்பாளர்.1952ல் BBCல் சேர்வதற்கு முன்பே கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் புவியியல் மற்றும் விலங்கியல் படித்தார்.பிறகு BBC உடனான பயணத்தில் ,தன்னுடைய உலகப் புகழ்பெற்ற Life On Earth (1979) , The Living Planet (1984) இயற்கை ஆவணப்படங்களி பணியாற்றினார். நேர்காணலின் போது Life எனும் ஆவணப் படத் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டு இருந்தார்.

ரிச்சர்டு டாக்கின்ஸ் (69 வயது) , ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து அங்கேயே ஆசிரியராகப் பணியாற்றி பின் அதே நிறுவனத்திலேயே “பொதுமக்களுக்கான அறிவியலின் புரிதல்கள்” என்பதற்கான ஒரு தனித்துறை உருவானபோதிருந்து அதன் முதல் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். அடிப்படையில் பரிணாமவியல் உயிரியலாளர் , The Selfish Gene (1976), The God Delusion (2006), The Greatest Show On Earth (2009) உள்ளிட்ட 10 பிரபலமான அறிவியல் நூல்களை எழுதி உள்ளார்.தற்பொழுது The Magic Of Reality என்னும் குழந்தைகளுக்கான அறிவியல் நூல் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்.

நீங்கள் இயங்குகின்ற அறிவியல் தளத்தில் , அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் எனக் கருதக் கூடிய அம்சம் எது?

அட்டன்பரோ: உயிர்களுக்கு இடையேயான ஒற்றுமை

டாக்கின்ஸ் : உயிர்களுக்கு இடையேயான ஒற்றுமை என்பது நாம் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் ஒரு பொது மூதாதையிடம் இருந்து “பரிணாமம்” எனும் நிகழ்வுப்போக்கின் மூலமாக வந்தவை எனக் கருதலாம். நம்ப முடியாத இந்த நிகழ்வு இந்தப் புவிக் கோளத்தில் எந்தவித சிந்தனையுமில்லாது தானே நடந்தேறியது. மிகவும் வியப்பானது. ஒரே உயிர்க்கோளத்தின் அதி சிக்கல் தன்மையுடைய இந்த நிகழ்வுப்போக்கை  உணரக்கூடிய ஒரே உயிரினம் நாம்தான் என்பதும் வியப்புக்குறிய செய்தி.

உங்களுடைய ஆகச் சிறந்த சிந்தனை எப்பொழுது எங்கு உதித்தது?

அட்டன்பரோ : எனக்கு இதில் உடன்பாடில்லை. நான் உணர்ந்த வரை , தடையற்ற சிந்தனையால் முடங்குகின்ற பொழுது உடன் உறக்கத்திற்கு சென்று விடுவேன்.பின்னர் தூங்கி எழுகின்ற பொழுது அனேக கேள்விகளுக்கு பதில் கிடைத்திருக்கும்.

டாக்கின்ஸ்: அற்புதமான நிகழ்வல்லவா?

அட்டன்பரோ: என் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் பட்சத்தில்.

டாக்கின்ஸ்: ”எனக்கு சிந்திப்பதற்கு ஒரு மணிநேர அவகாசம் தேவைப்படுகிறது” என்று கூறுபவர்கள் கூட இங்கே குறைவாகத்தான் இருக்கின்றனர்.

அட்டன்பரோ : நீங்கள் கூறியதை கணிதவியலாளர்கள் எளிதில் கூறிவிடுவார்கள்.எனக்குத் தெரிந்த கணிதத்தில் நிபுணத்துவம்பெற்ற மாமா ஒருவரிடம் அவருடைய மாணவர் பின்வரும் கேள்வியைக் கேட்டிருக்கிறார்.”நீங்கள் அதிகபட்சம் எவ்வளவு நேரம் சிந்திப்பீர்கள்? என்று. அதற்கு என் மாமா “நான்  இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் சிந்தனையில் இருக்க முயன்றிருக்கிறேன் ”என்று கூறியிருக்கிறார். அதற்கு அம்மாணவரோ , தன்னால் 90 நொடிகளைக் கூட கடக்க இயலவில்லை எனச் சொல்லியுள்ளார். சாரமான(Abstract) சிந்தனைகளுக்கு அந்த அவகாசமே அதிகம்தான் என்றும், தான் ஒரு சாரமான சிந்தனையாளர் இல்லை என்பதை அந்த மாணவரிடத்தே தெரிவித்ததாக என்னிடம் கூறியுள்ளார்.

எது உங்கள் கவனத்தை திசைதிருப்புகிறது?

டாக்கின்ஸ்: இணையம்

அட்டன்பரோ: இசைப்பணியில் ஈடுபடுவது எனது வழக்கம். ஆனால் தற்பொழுது என்னால் முடிவதில்லை.இசை முழுக் கவனத்தையும் கோருகிறது. அது எனக்கு சாத்தியப்படவில்லை.

 இந்த நூற்றாண்டின் இறுதியில் எந்த சிக்கல்களுக்கு அறிவியலாளர்கள் தீர்வைக் கண்டுபிடிப்பார்கள் என நீங்கள் கருதுகிறீர்கள்?

அட்டன்பரோ: தீங்கு விளைவிக்காத ஆற்றல் உற்பத்தி முறை. ஆனால் நாம் அந்த காலகட்டத்தில் இன்னும் கட்டுப்பாடு அற்றவர்களாக , அனைத்தையும் தகர்ப்பவர்களாகத்தான் இருப்போம் என்பதுதான் கவலையளிக்கக் கூடியதாகத் தெரிகிறது.அணு ஆற்றலை விட சூரிய ஆற்றலே விரும்பத் தக்கது.அதனை கைவசப்படுத்த முடிந்தால் ,அதனைக் கொண்டு கடல் நீரை நன்னீராக்க முடிந்தால் அது சஹாராவை மலர்ந்து செழிக்கச் செய்துவிடும்.

டாக்கின்ஸ் : என் கல்விப் புலம் சார்ந்த பொருளில் கணிப்பதென்றால் , மனிதனுடைய ஓர்மை(Human Consciousness)  என்பதில் உள்ள சிக்கல்தான் மிக்க கவனத்திற்குரிய புலமாக இருக்கும்.

விஞ்ஞானியாக வேண்டும் என நீங்கள் முடிவெடுத்த அந்த தருணத்தை தங்களால் நினைவு கூற முடிகிறதா?

டாக்கின்ஸ் : எனது அறிவியல் பட்டப்படிப்பின் இரண்டாம் ஆண்டில்தான் உந்தப்பட்டேன். உங்களைப் போல இயற்கையை நேசிக்கும் சிறுவனாக வளரவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன்.அறிவுபூர்வமான , தத்துவரீதியிலான அளவுக்கு அதிகமான கேள்விகள்தான் என்னைப் பெரிதும் ஆர்வமூட்டின.

அட்டன்பரோ : நான் விஞ்ஞானியாக இருப்பதைவிட இயற்கையியலாளராக இருப்பதையே விரும்புகிறேன்.மிக சாதாரணமாக அமர்ந்து பூக்களையோ பூச்சிகளையோ ரசிப்பதைத்தான் நான் விரும்பினேன். மனிதர்கள்தான் ஆர்வமூட்டக்கூடியவர்கள்தான். ஆனால் யாரும் சிறுவயதில் Auntie Flo வின் உளவியல் வகுப்பை விரும்பி இருக்க வாய்ப்பு இல்லை.தட்டானின் லார்வாக்கள் எப்படி உருபெற்ற தட்டானாக மாறுகிறது என்பதைக் காணவே நம்மில் பலரும் விரும்பி இருப்போம்.

டாக்கின்ஸ் :இரண்டு தனித்தன்மைவாய்ந்த வடிவமைப்புகள் (Blueprint),இரண்டு வேறுபட்ட நிரல்கள் உள்ளே இருக்கின்றன.

அட்டன்பரோ : எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது. என்னை விட வயது மூத்த ஒருவரிடம்  இந்த கூட்டுப்புழுவிற்குள் என்ன நடக்கிறது எனக் கேட்டபொழுது , அவர் மிக சாதாரணமாக கூட்டிற்குள் கம்பளிப்பூச்சி சிதைந்து கூழாகிவிடும். பிறகு அதில் இருந்து எல்லாம் புதியதாக உருவாகிறதெனக் கூறினார்.உடனே நான் அதை உறுதியாக மறுத்தேன்.என்னால் அவரது பதிலை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.அது எப்படி படிநிலை வளர்ச்சி அடைகிறது என்பதை நம்மால் கற்பனைகூட பண்ணிப் பார்க்க இயலாது என்பதுதான் உண்மை.

உங்கள் பணிகளின் மீது பொதுவாக பலராலும் முன்வைக்கக் கூடிய தவறான கருத்து எது?

டாக்கின்ஸ் : தற்பொழுது உங்கள் ஆய்வு காம்பிரியன் மற்றும் முன் காம்பிரியக் காலகட்டத்தைச் சார்ந்த புதைபடிவுகளின் மீது நடைபெறுவதை அறிந்தேன். புதைந்த உயிரினங்கள் அனைத்தும் காலத்தால் மூத்தவை எனவும் , அவை பரிணாமத்தின் துவக்கக் காலத்திலேயே உருவானவை என்றும் , தமது உயிர்ச் செயல்பாடுகளில் அவை சிறந்தவையாக இல்லை என்பதால் அவை அழிந்து போயின என்று பலருக்கும் இருக்கக்கூடிய கருத்து சரியல்ல என்று நான் நினைக்கின்றேன்.

அட்டன்பரோ : இல்லை , அவைகள் சிறப்பானவையாகவே இருந்தபோதிலும் கூட , அப்பொழுது நிலவிய கடுமையான போட்டிகளால் அவைகள் இருந்த சூழலுக்குப் பொருந்துவதற்கான தனித்துவமான தகுதியிலாது சூழலில் இருந்து வெளியேற்றப்பட்டிருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம் என நான் கருதுகிறேன்.

டாக்கின்ஸ் : எனவே பரிணாம மாற்றத்தில் முன்னேற்றமான மாற்றம் நடப்பது என்பது குறுகிய கால அளவில் சரியானதாக இருக்கலாம்.பரிணாமத்தில் ஒரு இனம் கிளை பிரிந்து புதிய உயிரினம் ஒன்று தோன்றும் போது அது மேலும் ஒரு 50 லட்சம் ஆண்டுகளுக்கு அருகி ஒழியாது இருப்பதற்கான சிறப்புத் தகுதிகளைப் பெற்றதாக வடிவெடுக்கலாம்.ஆனால் 50 கோடி ஆண்டுகளுக்கு நிலைத்திருக்கும் தகுதியோடு உருவாவதில்லை.

அட்டன்பரோ : இல்லை , இந்த உயிரினங்கள் கூடுதல் தன்மையில் மேலும் மேலும் சிறப்புத் திறன் உடையவனாக மாறுகிறதே தவிர  மேம்பட்டதாக மாறுவதாகக் கூற இயலாது.

டாக்கின்ஸ் : முன்பிருந்த உயிரினங்களைக் காட்டிலும் , காமிராக் கண்களை உடைய நவீன உயிரினங்களின் பரிணாமம் என்பது மேம்பட்ட மாற்றம்தானே?

அட்டன்பரோ : உறுதியாக…ஆனாலும் தேவைகள் இருப்பதைப் பொறுத்தே அவை அந்த வடிவத்தை எட்டுகின்றன என நினைக்கிறேன். எடுத்துக்காட்டாக ஹாண்டெல் இசையை ஒரு சோப்ரானோ ( உச்சஸ்தாயில் பாடும் குரல்)அதன் ஏற்ற இறக்கங்கள்,சறுக்கல்களோடு பாடுவதை நான் கேட்கும் தருணத்தில்  ,அதனை உருவாக்குகின்றவரின் குரல்வளையில் ஏற்பட்டுள்ள பரிணாம மாற்றத்தை உயிரியல் காரணத்தோடு என்னால் தொடர்பு படுத்திப் பார்க்க முடிகிறது.அதன் இனிமையான பகுதியில் திடீரென  பாடுபவரின் குரல்வளையில் ஏற்படுகின்ற மாற்றத்தை உயிரியல் காரணத்தோடு என்னால் தொடர்பு படுத்திப் பார்க்க முடிகிறது. தகுந்த செயல்பாடுகளுக்காக இல்லாமல் குரல்வளையில் மாற்றம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இல்லை.இதற்குத் தேவைப்பட்டிருக்கக் கூடிய செயல்பாடாக நான் கருதுவது பாலினக் கவர்ச்சி.(Sexual Attraction)

டாக்கின்ஸ் : பாலியல் தேர்வு என்பது மிக முக்கியமான ஒன்று என்றாலும் அவை இன்றும் குறைத்து மதிப்பிடப்படுவதாகவே இருக்கிறது.

அட்டன்பரோ : இறக்கைகளின் செயல்பாடுகளால் இணையைக் கவர்வதற்கான செயல்பாடுகளுக்கு புகழ்பெற்றவை Petals வகைப் பறவைகள்.இவற்றை சொர்க்கத்தின் பறவைகள் என அழைக்கின்றனர். (Birds of Paradise) இவற்றில் ஆண் பறவைகள் எந்த அம்சத்தால் என்னைக் கவர்கின்றனவோ அதே அம்சத்தால் பெண் பறவைகளையும் கவர்கின்றன.

வாழும் விஞ்ஞானிகளில் யார் உங்கள் புகழுக்குரியவர். அதற்கான காரணம் ?

டாக்கின்ஸ்: டேவிட் அட்டன்பரோ

அட்டன்பரோ : எனக்குத் தெரியவில்லை.ஆனால் பலரும் ரிச்சர்ட் ஃபைன்மேனைக் குறிப்பிடுகின்றனர்.எளிதில் நானெல்லாம் சிந்திக்க முடியாத கருத்துக்களை உருவாக்கும் மனதுடையவராக இருக்கின்றார்.அத்தோடு அவர் சிறப்பாக பாங்கோவும் இசைக்கின்றார்.எனவே அவர் ஒரு மானுடராகவும் இருக்கின்றார். அவர் String Theory யைக் கையாள்பவராக மட்டும் இல்லை. அவர் போங்கோ இசைக் கருவியை இசைப்பதிலும் வல்லவர் என்பது எனக்கு வியப்பூட்டுவதாக உள்ளது.ஆனால் அவரது அறிவியல் எனது புரிதல் வரம்புகளுக்கு அப்பாற்பட்டது.

டாக்கின்ஸ் : மனிதர்கள் இயல்பாக உளச்சித்திரத்தின் அடிப்படையில் புரிந்துகொள்கின்றவற்றையும் கடந்து இயற்பியல் சென்றுவிட்டது.நடுத்தர வேகத்தில் இயங்குகின்ற அல்லது நடுத்தர அளவீட்டில் அளக்க முடிந்தவற்றை உணரவே நாம் நன்கு தகவமைந்திருக்கிறோம்.நடுத்தரத்திற்கும் மிகக் குறைவான அளவுகளை உடைய குவாண்டம் இயற்பியல் குறித்தோ அல்லது நமது கற்பனையையும் கடந்த பெரும் அளவுகளைப் பேசும் சார்பியல் கொள்கையைக் குறித்தோ எளிதில் அகக்கண்ணால் காண நாம் இன்னும் தகவமையவில்லை.

அட்டன்பரோ : நாம் அமர்ந்திருக்கும் இந்த இருக்கையை ஒரு இயற்பியலாளர் அதிர்வுகளால் உருவானது எனக் கூறுவார்.அவை இங்கே இல்லாமல் இருந்தாலும் கூட அல்லது நம்மால் கண்டுணர முடியாமல் இருந்தாலும் கூட. ஒரு முறை சாமுவேல் ஜான்சனிடம் பொருட்களின் இருப்பை நிரூபித்துக் காட்ட வேண்டுகோள் விடப்பட்டபொழுது அவர் என்ன செய்தார் தெரியுமா?திடீரென எழுந்து சென்று ஒரு பெரிய கல்லை எட்டி உதைத்தார். அவரோடு நானும் உடன்படுகின்றேன்.

டாக்கின்ஸ் :இந்த இருக்கை பெருமளவு வெற்றிடங்களைக் கொண்டது.நாம் அதனுள்ளே அமிழ்ந்து விடாமல் இருப்பதற்கு அதன் அதிர்வுகளும் ஆற்றல் புலங்களும்தான் காரணம்.இது நமக்கு என்றுமே புதிரானது.ஆனால் மிகவும் மனம் கவரக்கூடியது.ஏனென்றால் நாம் அதன் ஊடாக நடந்து செல்ல முடியாது என்பதுதான்.எதிர்கால அறிவியலுக்கும் இன்றைய அறிவியலுக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் வரலாம்.அப்படியான சூழலில் நாம் தெரிந்துகொள்ளாமல் இருப்பதை ஏற்றுக் கொள்கின்ற பணிவுடையவர்களாக நாம் இருக்க வேண்டும்.அதற்குப் பதிலாக அந்தத் தெரியாத வெற்றிடத்தில் நாம் பூதங்களையோ அல்லது ஆன்மாக்களையோ அற்புத சக்திகளையோ இட்டு நிரப்பிக்கொள்ளக் கூடாது.தெரியாததைத் தெரிந்து கொள்ள ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனக் கூறுவதே பொருத்தமானது.

கடவுளின் இறுப்பைமறுத்துக் கூறும் ஸ்டீபன் ஹாக்கின்சின் கடிதம் ஒன்றில் இப்படியான வரிகள் இருந்தன.

“இந்த உலகத்தின் இயக்கம் கடவுளின் மகிமையைக் கூறுவதாக இருக்கின்றன” அதைப் பார்த்தவுடன் இது என்ன பேச்சு என்று நான் யோசித்தேன்?!

திடீரென நள்ளிரவில் உங்களை விழிப்பு கொள்ளச் செய்த நிகழ்வு?

அட்டன்பரோ : மாலையில் தாமதமாக செய்யத் தொடங்கிய வேலைகள் மீதான கவலைதான் .

டாக்கின்ஸ் : எனக்கும் அதேதான்.

உங்களை அதிகம் உற்சாகம் கொள்ளச் செய்த தருணம் எது ?

அட்டன்பரோ : சிக்கலான தனித்தன்மையுடைய பவழப் பாறைகள்  உலகத்தைக் காண ஆழ்கடல் நீச்சலை மேற்கொண்டது.

டாக்கின்ஸ் :தீர்க்க முடியாத பிரச்சனைகளை அதன் இடத்திலேயே , இயல்புக்கு மாறாக வேறொரு பார்வையில் இனங்கண்டு புதிரை விடுவிப்பது போல தற்செயலாக கண்டறிந்த தீர்வுகள்.

அட்டன்பரோ : வரலாற்றில் அதிக உற்சாகம் கொள்ளச் செய்யும் அறிவு யுகத்திலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என்னுடைய வாழ்நாளிலேயே ஆழ்ந்த தன்மைஉடைய பல அறிவியல் கொள்கைகளை நாம் கண்டறிந்திருக்கிறோம். எனது புவியியல் இளநிலைப் பட்டப்படிப்பின் பொழுது எனது பேராசிரியரிடம் சென்று கண்டநகர்வுகள் குறித்து எனக்கு விளக்க முடியுமா ? எனக் கேட்டேன். அவரோ , “ நாம் தற்போது விவாதித்துக் கொண்டிருக்கும் இந்நகர்வுகள் அனைத்தும் மி.மீ அளவிலாவது காட்டக்கூடியதாக மாறும் போது பேசுகின்றேன்.அதுவரை இதெல்லாம் நிலவொளியில் பேசும் கதைகள்தான்” எனக் கூறினார். எனது காம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக படிப்பு முடிந்து 5 ஆண்டிற்குள்ளாகவே அது(கண்ட நகர்வுகள்) நிறுவப்பட்டு விட்டது. எனது சந்தேகங்கள் , பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டன. ஏன் ஆஸ்திரேலிய விலங்கினங்கள் மட்டும் வித்தியாசமாக உள்ளன என்ற ஒரு கேள்வியே எனது எல்லாவகையான புரிதலையும் மாற்றியமைத்தன. எனது  Life On Earth ஆவணப்படத்திற்காகப் பணிகளை ஆரம்பித்தபோது மிகவும் சிக்கலான உயிரினங்களில் இருந்துதான் தொடங்க வேண்டியிருந்தது. ஏனென்றால் அப்போது உயிர் முதன்முறையாக உருவாகிய உயிர்க் குழம்புச் சூழலான பெருங்கடல் பற்றி ஏதும் தெரியாது. நீங்கள் தற்பொழுது குழந்தைகளுக்கான புத்தகம் தானே எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?அதைப் பற்றி சொல்லுங்கள்.

டாக்கின்ஸ் : பொதுவாக அதிகமாக அறிவியலைப் பற்றிதான் அந்நூல் விளக்குகிறது.ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு புராண நம்பிக்கையோடே துவங்குகிறது. எடுத்துக்காட்டாக “சூரியன் “ எனும் அத்தியாயத்தை எடுத்துக் கொள்வோமே! நமக்கு தெரிந்த அஸ்டெக் நம்பிக்கை , பண்டைய எகிப்திய நம்பிக்கை , அபாரிஜினிய நம்பிக்கை, உள்ளிட்டவற்றை அதில் விளக்கியுள்ளேன். இதை நான் யதார்த்தத்தின் மாயாஜாலம் என்ற தலைப்பில் பொதுமைப்படுத்தியுள்ளேன்.இங்குதான் எனக்கு சிக்கலே வருகிறது. வெறும் மாயஜாலம் என்று கூறும்போது அது மந்திர தந்திர நிகழ்ச்சியின் மாயாஜாலமா அல்லது இந்த பேரண்டம் நமது புவியில் உயிர்கள் இருப்பது போன்ற விந்தைகளைக் குறிக்கும் மாயாஜாலமா என்ற கேள்வி வந்துவிடுகின்றது.

அட்டன்பரோ : இல்லை, மாயாஜாலத்துக்கும் வியப்பிற்கும்(Wonder) இடையே வேறுபாடுகள் உள்ளதென நினைக்கிறேன்.உண்மையாக ஒரு செயல் நடக்க இயலாமல் இருப்பதை நடத்திக்காட்டுவதற்கே மாயாஜாலம் உதவுகிறது.தொப்பிகளில் ஒருபோதும் முயல்கள் வாழ்வதில்லை.ஆனால் அப்படிக் காட்டப்படுவது ஒரு வகையான மாயாஜாலமே!

டாக்கின்ஸ் : சரி ! ப்ரவுன் தொப்பியின் மேற்புரத்திலே நீங்கள் காண்கின்ற கறைகள் ஒருவேளை உங்களை சலிப்படையச் செய்யலாம்.ஆனாலும் அதில் ஏதேனும் ஒன்று சிறகடித்து வண்ணத்துப்பூச்சியாக உருமாறுவது உங்களுக்கு உவகையளிக்கும்தானே!

அட்டன்பரோ : ஆமாம் ! அது ஆச்சரியமானது ! மாயாஜாலம் அல்ல.

டாக்கின்ஸ் : நல்லது. என் தலைப்பினைக் கேலி செய்கிறீர்கள்.

அட்டன்பரோ: ”யதார்த்தத்தின் வியப்புகள்” எனப் பெயரிடலாம்.அது அந்த அளவிற்கு பொருந்தாமல் போகாது என நினைக்கிறேன்.

டாக்கின்ஸ் : ஆமாம் ! சிறப்பாக இருக்கிறது.

உங்களுக்குப் பிடித்த புனைவான அறிவியலாளர் யார் ?

டாக்கின்ஸ் : சர் ஆர்தர் கொனான் டாய்ல் உருவாக்கிய Professor Challenger எனும் கதாபாத்திரம். ஆனால் எளிதில் எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளக்கூடிய பாத்திரம் என்பதால் வாழ்க்கை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள முடியாது.

அட்டன்பரோ : நான் புனைவுகளைப் படிப்பதில்லை.

இன்றைய அறிவியலை சங்கடத்திற்குள் ஆட்படுத்துகின்ற அறம்சார் வினாக்களென நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?

அட்டன்பரோ : தனிமனித உயிரைப்  பாதுகாப்பாக வைத்திருக்க உங்களால் எவ்வளவு தூரம் போக முடியும்?

டாக்கின்ஸ்: ஆமாம்.மிகச் சரியான ஒன்று.

அட்டன்பரோ : நாம் NHS (தேசிய சுகாதாரத் திட்டம் – இங்கிலாந்து) உடன் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?தனிமனித உயிரின் மதிப்பை நாம் பவுண்ட்ஸ் , சில்லிங் , பென்ஸ் களாக அளவிட்டுக் கொண்டிருக்கிறோம்.குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு பல்லாயிரம் பவுண்ட்ஸ்கள் பெறுமானமுள்ள மருந்துக் குப்பியைக் கொடுத்து அவரது இறப்பை வெறும் ஆறு வாரங்கள் தள்ளிப் போடலாம்.இது போன்ற விசயத்தில் எப்படி முடிவெடுப்பது?

நன்றி : தி கார்டியன்

Courtesy : The Guardian

தமிழில் : செ.கா

Leave a Response