Article

கொரொனா பேரிடர் காலத்தில் மீளுருப்பெறும் பண்பாட்டுப் பயில்வுகள் (இலங்கைத் தமிழ்ச்சமூக இன்றைய நிலவரங்களை முன்வைத்து) – த.விவேகானந்தராசா

Spread the love

 

உலகை உலுக்கும் உயிர்க்கொல்லி தொற்றுநோயான கொரொனா (கோவிட்-19) கண்ணுக்குப் புலனாகா வகையில் அதிவேகமாகப் பரவிவருகின்றது. இதன் காரணமாகச் சுகாதாரப் பேரிடர் காலமாக அறிவிக்கப்பட்டிருக்கும் இக்காலத்தில் சமூக இடைவெளி என்பது தவிர்க்கமுடியாத கட்டாய நடைமுறையாய் இருக்கிறது.சமூக இடைவெளியின் சமூகவியல் விளைவுகள் குறித்தும் அண்மைக்காலத்துள் தீவிரமான உரையாடல்கள் மேலெழுந்திருக்கின்றன. இவ்வகையில் இலங்கையில் குறிப்பாகத் தமிழ்மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் நிகழும்; உரையாடல்களையும் இக்காலத்தில் மீளுயிர்ப்புறும் பண்பாட்டுப் பயில்வுகள்; சிலதையும் இக்கட்டுரை சுருக்கமாகக் கோடிடுகின்றது.

கோவிட்-19 தொற்று, நமக்குக் கற்பித்திருக்கும் ஒருவிடயம் என்றால் அது நாம் நமது நம்பிக்கையை இழந்துவிடக்கூடாது என்பதாகும் (கெட்டிகே,ஸ்ரீ 2020). பேரனர்த்த காலத்தில் நம்பிக்கையைத் தக்கவைக்கும் நடைமுறைகள் என்பவை மரபார்ந்த சமூக வழக்காறுகள் வழியே சாத்தியமாயிருக்கிறது. அது சமூக நம்பிக்கையாக இயங்கி வந்திருக்கிறது. வழிபாட்டுச் சடங்குகள், கலைவிழாக்கள், கொண்டாட்டங்கள், விளையாட்டுக்கள் எனப் பல வெளிகளில் இவை நிகழ்ந்தேறியிருக்கின்றன. அடிப்படையில் சமூக கூட்டியக்கங்களாலேயே இவை சாத்தியமாயிருக்கின்றனஈழத்தின் போரின்போதும் போருக்குப் பின்னரான அகதிமுகாம் வாழ்வின்போதும் கூத்துக்களை ஆடினார்கள். சிதைவுண்டிருந்த தமது வாழிடங்களுக்கு மீளத்திரும்பியபோது உடன் சடங்குகளை நிகழ்த்தினார்கள் எனின், இவற்றின் தேவை என்ன? சமூக ஒன்றுகூடலும் உள ஆற்றுப்படுத்துலும் தொடர் பயணத்திற்கான உத்வேகமும் இந்நடைமுறைகளாலேயே வளர்த்தெடுக்கப்பட்டமையேயாகும்.

சமுதாயங்களை மீண்டெழ வைக்கும் பணியில் சாதகமானதும்  ஆக்கப்பூர்வமானதுமான உள்ளார்ந்த பண்பாட்டு நடவடிக்கைகளை உயிர்ப்பூட்டிப் பயன்படுத்தலாம் (தயா சோமசுந்தரம்: 2017) என்பது உளநல மருத்துவர்கள் உள்ளிட்டோரது கருத்து. இத்தகைய நடைமுறைகள் வழியேதான் பேரிடர் காலத்தில் சமூகங்கள் தமது அமைப்பாக்கத்தை தக்கவைத்தன என்பதை அறியமுடிகின்றது. எனினும் இன்று கூட்டான சமூக இயக்கம்  தடைசெய்யப்பட்டிருக்கின்றது. இது கட்டாயமான தேவையாகவும் சொல்லப்படுகிறது. கொரொனா தொற்றுநோய் மக்களை அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளில் திருப்தியடையவும் கட்டுப்பாடுகளுள் இயங்குவது கட்டாயத்தேவையெனவும் உணர்த்தியிருக்கிறது. சமூகமயமாதலுக்கான வெளிகளைத் தவிர்க்கவைத்திருக்கிறது. ஆனால் சமூக மற்றும் பண்பாட்டு ஈடுபாடுகளுக்கான ஏக்கத்தோடு, அந்நடைமுறையின் மீள் வருகையினை மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர் என்பதே உண்மை நிலவரமாகும்

கொரொனா தொற்றின் சாத்தியமான தாக்கத்திலிருந்து தன்னையும் மற்றவர்களையும் பாதுகாக்க ஒரு முழுமையான சமூக விலகல் என்பது தேவையென உணரப்பட்டிருக்கிறது. எனினும் சமூக விலகல் என்பது நீண்டகாலமாகத் தாம் பழக்கப்படுத்திய நடைமுறைகளுக்கு நேர்மறையானதாகவே இருக்கிறது. இந்நிலையில்தான் இடர்பாடுகளுக்குள்ளும் சமூக கூடலுக்கான வாய்ப்புகளைத் தேடுகின்றார்கள். இந்த வாழ்க்கைத் தருணத்திற்காகக் காத்திருக்கின்றார்கள்.

Coronavirus Updates: Sri Lanka Reports First Death Due To Coronavirus

ஏனெனில் சமூக மயமாக்கல் என்பது மனித சமுதாயத்தைப் போலவே பழமையானது என்பதை அறிவோம். வாழ்வு என்பதும் அடிப்படையில் ஒரு சமூக செயற்பாடு. எனவே தனிமைச் சிறைவாசம் என்பது நமக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய தண்டனையே என்கிறார் பேரா.ஸ்ரீ கெட்டிகே. இதேவேளை இதுவரை கூட்டாக இருந்த அயலவர்களுடனும் மற்றவர்களுடனும் இன்று நெருக்கம் கொள்ள முடியாத நிலையும் ; வழமையாகக் கூடும் பொது இடங்களில் தனிமையில் கலந்துகொள்ளவேண்டியிருப்பதும் மக்களைக் கவலைக்கும் விரக்திக்கும் ஆளாக்குகிறது

எனவே தொற்றுநோயின் எந்தவொரு நீடித்தலும் வாழ்க்கைத் தரத்தில் கடுமையான விளைவை ஏற்படுத்தும் என்பது உணரப்படுகிறது. இதனால் எல்லா மட்டங்களிலும் சிக்கல்களைக் கண்டறிந்து அவற்றின் எதிர்மறையான தாக்கத்தைக் குறைப்பதற்காகச் சாத்தியங்களை விரைவாக ஆராயவேண்டி இருக்கிறது

தொற்றுநோயின் ஒரு பெரிய பாதகமான தாக்கம் பொருளாதார நடவடிக்கைகளைச் சீர்குலைப்பதாகும். இது வேலையிழப்பு உள்ளிட்ட பல வாழ்வாதாரச் சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. வருமானம் இல்லாதவர்கள் இயல்பாகவே அவநம்பிக்கை அடைய நேரிடுகிறதுஇன்னும் சிலர் திருட்டு போன்ற பொருளாதார குற்றங்களைத் தாம் விரும்பியதைப் பெறுவதற்கான ஒரு வழியாக நாடலாம். இத்தகைய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பலரின் மனதில் பாதுகாப்பின்மை உணர்வை உருவாக்க நேரிடும். இதேபோன்று மதம் என்பது பலரின் பாதுகாப்பின் வடிவம் என்பதை நாம் அறிவோம். மதத்தலங்களில் வாரத்தில் ஒருமுறையாவது மக்கள் பக்தர்களாகக் கூடுவதைக் காண்கிறோம். கடந்த இரு மாதங்களாக இந்நடைமுறைகளின் பற்றாக்குறை நிச்சயமாக மனஅழுத்தங்களையும் விளைவிக்கக்கூடியவை எனப் பேசப்படுகிறது.  

முன்னர் குறிப்பிட்டபடி சமூக இடைவெளி என்பது அன்றாட வாழ்க்கையில் பழகிய நடைமுறைகளுக்கு நேர் மாறானது. பள்ளிக்குழந்தைகள், பல்கலைக்கழக மாணவர்கள் சமுகமயமாக்கற் செயற்பாட்டில் ஒரு முக்கியமான கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறார்கள். இதன்காரணமாகவே மாணவர்களைக் காலவரையறையின்றி கல்வி நிறுவனங்களிலிருந்து ஒதுக்கி வைக்க முடியாது என்பது அழுத்திக் குறிப்பிடப்படுகிறது. இதேவேளையில் பொதுச்சுகாதார கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பதைத் தவிர வேறு வழியில்லை எனவும் சொல்லப்படுகிறது. தொற்றுநோய் ஏற்பட்டதன் பின்னர் ஒருவர் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் தனிமைப்படுத்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் மிகவும் உளைச்சலைத் தரக்கூடியதாக இருப்பதைக் காண்கிறோம். மொத்தத்தில் எந்தவொரு குறைபாடும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதால் மிகுந்த கவனத்துடனேயே செயற்படவேண்டியுள்ளது.

இவ்வாறு நிலமைகள் இருக்க, கொரொனா தாக்கம் குறைந்த, கூடிய என்ற அளவீடுகளைத் தாண்டி மக்கள் மெது மெதுவாக மிகப்பரவலாக இயல்பு வாழ்க்கை போன்று இயங்க முனையும்  நிலவரங்களையும் கடந்த சில வாரங்களாகக் காணமுடிகிறது. கொரொனாவோடு வாழப் பழகிக்க வேண்டியதுதான்! இதைக் கடந்து செல்லவேண்டிய காலம் தொலைவில் இருப்பதால் இதுவே தீர்வாகும்! என்ற உரையாடல்கள் மேலெழும்பியிருக்கின்றன.

இந்நிலையில்தான் இயற்கையோடு இணைந்த, மரபார்ந்த  பயில்வுகளைத் தொடர்வதே வழி என உணரப்படுகிறது. இதுவே இன்றைய பேரிடரை எதிர்கொள்ளவும் எதிர்காலத்தில் இத்தகைய நிலமைகள் ஏற்படாமல் தடுக்கவும் தற்காக்கவுமான உபாயம் எனவும் உரையாடப்படுகின்றது. முன்னோர்கள் வாழ்ந்து கற்பித்த நடைமுறைகளைக் கைவிட்ட நிலமைகளே இன்றைய தத்தளிப்புக்கான காரணம் எனப் பரவலாக உரையாடப்படுகிறது. உள்ளுர் உற்பத்திகள், உணவு முறைகள், இயற்கைமுறை விவசாய நடைமுறைகள் வீட்டுத்தோட்டங்கள் எனச் சூழலோடு இணைந்த சுயபொருளாதார உற்பத்தி உறவுகளை வலுப்படுத்தும் தேவை உணரப்பட்டிருக்கிறது. அதற்கான முயற்சிகளிலும் பலர் ஈடுபடத் தொடங்கியிருக்கின்றனர்.

இலங்கையில் போர், இடப்பெயர்வு காலங்களிலும் மற்றும் பொருளாதார தடைகளின் போதும் தமிழ்ச்சமூகம் பசி பட்டினியாலோ தொற்றுநோய்களாலோ உயிரிழந்ததான சந்தர்ப்பம் இல்லை. இது எவ்வாறு சாத்தியமாகியது எனின் இயற்கையோடிணைந்த  பிழைப்புப் பொருளாதார நடைமுறைகளாலேயாகும். தமக்கு கிடைத்துள்ள சுற்றுச்சூழலை அனுசரித்து வாழும் தகவமைப்புமுறை மரபார்ந்த சமூகத்தின் அறிவு முறைமையாகவும் கருதப்படுகிறது (பக்தவத்சல பாரதி 2020:3). இவ்வறிவுமுறைமையினை இழந்து வருவதே இன்றைய சமூகம் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கான அடிப்படையாக இருக்கிறது. பரந்தளவிலான விவசாய நிலங்களையும் நீர்நிலைகளையும் வளமாக கொண்டிருக்கும் இலங்கை நாட்டில் இன்று அரிசியையும் இறக்குமதி செய்யவேண்டியிருப்பது திட்டமிட்ட நடவடிக்கைகளே எனச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் பிரதேசங்கள் தோறும் உள்ள குளங்களை புனரமைப்பதன் வழி தரிசாகக் கிடக்கும் நிலங்களை மீண்டும் விளைநிலங்களாக்கமுடியும்(கௌரீஸ்வரன்,து 2020)என்ற வேண்டுகோள்கள் உரக்கத் தொடங்கியிருக்கின்றன

COVID-19 | Sri Lanka registers over 750 coronavirus cases, most ...

இதேபோன்று கூட்டுறவுச்சங்க நடைமுறைகளை மீளக்கொண்டு வருவது குறித்துப் பேசப்படுகிறது. குறிப்பாக சமூகத்தின் அன்றாடங்காச்சிகளுக்கும் நலிவுற்ற பிரிவினருக்கும் பாரபட்சமற்ற விநியோகத்தை மேற்கொள்வதற்கு கூட்டுறவுச் சங்கங்களைப் உயிர்ப்பிக்க வேண்டும் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன. “கூட்டுறவு எனப்படுவது உள்ளுர் உற்பத்தியாளர்கள் சந்தைச் சுரண்டலுக்கு எதிராக பொருட்களை நியாய விலையில் கொள்வனவு செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் ஏற்படுத்திக்கொண்ட ஒரு கட்டமைப்பு. யுத்தகாலத்து இடப்பெயர்வுகளின்போதும் இக்கூட்டுறவுச் சங்கங்களின் பணி மகத்தானது. இதை மையப்படுத்தியே பலரது வாழ்க்கை இருந்தது. ஆனால் படிப்படியாக கூட்டுறவுச் சங்கக் கடைகளைவிட்டு விலகி பல்பொருள் அங்காடிகளை நோக்கி நகர்ந்துவிட்டனா.” (நிலாந்தன்,மா 2020) இந்நிலையில் தரமானதையும் மலிவானதையும் பெறவேண்டுமென்றால் சமூகத்தின் கூட்டுறவை வளர்த்தாக வேண்டும் என்ற கருத்துக்கள் மேலெழுந்திருக்கின்றன

இங்கு கவனிக்கவேண்டிய விடயமாக இருப்பது, சமூகஇடைவெளியின்போதே சமூக இணைவிற்கான களங்களை மீள் உயிர்ப்பிப்பதற்கான விழிப்பு ஏற்பட்டிருப்பதாகும். இவ்விழிப்பின் அவசியத்தை மேலும் விளங்கிக்கொள்ள கிழக்கிலங்கையின் இன்றைய சமூகச் செயன்முறையொன்று தக்க எடுத்துக்காட்டாகின்றது

கிழக்கிலங்கையின் தமிழ்ப்பிரதேசங்கள் சடங்கு வழிபாட்டிற்கு மிகவும் பிரசித்திபெற்ற இடங்களாகத் திகழ்கின்றன. ஆண்டுக்கொருமுறை நடைபெறுகின்ற சடங்கு வழிபாடுகள் இப்பகுதி மக்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்திருக்கின்றன. இது சடங்குக் காலம் (வைகாசி முதல் ஐப்பசி வரை சடங்குகள் தொடர்ந்திருக்கும்), இக்காலத்தில் பொதுவாக நிலவக்கூடிய வெம்மையும் அனல் காற்றும் உடல் உபாதைகளை ஏற்படுத்துவதுண்டு. இதன்காரணமாகவே இச்சடங்கு விழாக்களின் பிரதான நோக்கங்களாக மழைவேண்டுதலும் பிணிதீர்க்கப் பிரார்த்திப்பதும் காணப்படுகின்றன. இவைகளோடு சடங்குகளின் உள்ளார்ந்த சூட்சுமமாக சமூகஒருங்கிணைவு, சமூகப்பகிர்வு, சமூக மற்றும் தனிநபர் ஆற்றுப்படுத்தல், உள்ளுர் சமூக பொருளாதார கட்டமைப்பினைப் பேணல் உள்ளுர் மருத்துவ முறைகளின் தொடர்ச்சி  போன்ற பல விடயங்கள் காணப்படுகின்றன. இவைகள் காரணமாக இச்சடங்குகளை நிகழ்த்துவதென்பது தவிர்க்கமுடியாத தேவையாகவும் இருக்கிறது

மொத்தத்தில் மனிதர்கள் உடல் உள சுகாதரரத்துடன் வாழவேண்டும் எனும் நோக்குடன் இயற்கையினை மையப்படுத்தி நடாத்தப்படும் உள்ளுர்ச்சடங்குகள் பேரனர்த்தங்களிலிருந்து மீண்டெழுவதற்கான ஆத்ம பலத்தை வழங்கக்கூடியவை. எனினும் உலகளவில் மனித குலத்தை அச்சுறுத்தி நிற்கும் கோவிட் – 19 எனும் பெரும்தொற்றானது சடங்குகளின் தொடர்ச்சியை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது

இந்நிலையில் சடங்குகளின் சமகால முக்கியத்துவம் கருதி சமூகஇடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளைப் பேணியவாறு சடங்குகளை முன்னெடுக்கும் நடைமுறைகள் குறித்தும் உரையாடல்கள் நிகழ்கின்றன. மட்டக்களப்பு மூன்றாவது கண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழு இதற்கான நடைமுறைச் சாத்தியங்களை பரிந்துரைகளாக முன்வைத்திருப்பதும் கவனிக்கத்தக்கது

Sri Lanka postpones parliamentary poll for nearly 2 months due to ...

முன்னர் குறிப்பிட்டபடி காலநிலை மாற்றங்களையும் கவனத்தில் எடுத்து உடல் உள ஆற்றுப்படுத்தலுக்கான பல்வேறு செயற்பாடுகளை இச்சடங்குகள் உட்கொண்டுள்ளமை கவனத்தில் கொண்டுவரப்படுகிறது. மஞ்சள், வேம்பு, சாம்பிராணி, முகிலிகள் கொண்டு சடங்கில் தயாரிக்கப்படும்வாடைஎனப்படும் ஒருவகை மருந்து தொற்றுநீக்கியாக இருப்பது குறிப்பிடத்தக்கது (ஜெயசங்கர்,சி.,ஜோ.கருணேந்திரா மற்றும் இருவர்). இதேபோன்று சடங்கில் வழங்கப்படும்பாணக்கம்என்பது பல்வேறு பழங்கள், திரவங்கள், மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படும் உணவாக இருக்கின்றது. இவையாவும் இக்காலத்தில் வெம்மையினால் உருவாகக் கூடிய அம்மை, வாய்ப்புண் முதலான நோய்களிலிலருந்து விடுவிப்பவையாக இருக்கின்றனஊர்கள் தோறும் வீதிகளில் தெருக்களில் வீட்டுவாயில்களில் மஞ்சள் தெளிப்பது வேப்பப் பத்திர சோடனைகள் என்பனவும் பரவலாக நிகழ்கின்றன. மட்டக்களப்பு உள்ளுர் பத்ததிச் சடங்குகளில்ஊர்காவல் பண்ணுதல்என்கின்ற ஒரு நிகழ்வு முக்கியமானதாக இருப்பதும், இது ஊரை தூய்மைப்படுத்தும் ஒரு சமூகசெயற்பாடே என்பதும் குறிப்பிடத்தக்கது

இத்தகைய முக்கியத்துவங்கள் காரணமாகவே இச்சடங்குகளை உரிய சமூகக் கட்டுப்பாடுகளுடன் நிகழ்த்துதல் என்பது முக்கியமானதாக சொல்லப்படுகிறது. கொரொனா தொற்றிலிருந்து  விடுவிக்கும்  மாற்று நடவடிக்கைகளில் ஒன்றாகவும் இது வலியுறுத்தப்படுகிறது. மொத்தத்தில் கொரொனா தொற்று நம்மில் சுமத்தியிருக்கும் சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பதும் கட்டாய கடமையாகின்றது. அதேவேளை இதன் சமூகவியல் விளைவுகளையும் கவனித்தாக வேண்டியிருக்கிறது. மேலாக இத்தகைய பேரனர்த்தங்களிலிருந்து தற்காத்துக் கொள்ளும் பொருட்டு இயற்கையோடு இணைந்த உள்ளுர்ப் பண்பாட்டு நடைமுறைகளை பயில்வது அவசியமாயிருக்கிறது. இவ் அவசியம் உணரப்பட்டதன் வெளிப்பாடாகவே இலங்கையில் இடம்பெற்று வரும் அண்மைய உரையாடல்களும் செயற்பாடுகளும் இருக்கின்றன

கொரொனா பேரனர்த்தம் தந்திருக்கும் தனித்திருக்கும் காலம் மறக்கப்பட்ட மரபார்ந்த வாழ்வியல் நடைமுறைகளை மீள் உயிர்ப்புறச் செய்யவதற்கான உத்வேகங்களைக்  கொடுத்துள்ளமையானது முக்கியமான விடயமாகிறது.  

எங்களின் அறிவில் எங்களின் திறனில்

தங்கி நிற்போம் நாங்கள்

எங்களின் நிலத்தில் எங்களின் விதைப்பில்

விளைவித்தே வாழ்வோம்

கட்டுப்படுத்தும் வாழ்க்கை முறைகளை

நீக்கி எழுந்திடுவோம்

சூழலிலிணைந்து வாழும் வழிகளை

மீளவும் ஆக்கிடுவோம் ( பாடலாக்கம்சி.ஜெயசங்கர்)

 

சான்றாதாரங்கள்:

  1. கௌரீஸ்வரன்,து.2020.கொரொனா பேரனர்த்தமும் கிழக்கிலங்கையின் விவசாய அபிவிருத்தியும். gowrieeswaran.blogspot.com.2020/05/blog.post.html.
  2. பக்தவத்சல பாரதி.2020. சங்ககால உணவு. புதுச்சேரி: கல்லளை.
  3. நிலாந்தன்,பா.2020.சங்கக் கடையைத் திரும்பிபு; பார்க்கவைத்த வைரஸ். www.nilanthan.com/4475
  4. ஜெயசங்கர்.சி, ஜோ.கருணேந்திரா, து.கௌரீஸ்வரன், மற்றும் கி.கலைமகள். 2020. கொரொனா பேரனர்த்தக் காலத்தில் பாதுகாப்பு வழிமுறைகளை பேணியவாறு பத்ததிச் சடங்குகளை நடத்துவதற்கான சாத்தியப்பாடுகள் பற்றிய ஆலோசனைகளும் அபிப்பிராயங்களும். மூன்றாவது கண் நண்பர்கள் குழு.
  5. Hettige,Sri (Interviewed by Jeyawardane,Ishara)2020.Sociological effects of social distancing. Daily news- E PAPER
  6. Somasundarm, Daya.2017.Using cultural heritage practices for post-war recovery in Sri Lanka. Abstracts (IC-SVIAS),Batticaloa: SVIAS, EUSL.

 

த.விவேகானந்தராசா,மட்டக்களப்பு,இலங்கை. 

9159287259, rajahvive@gmail.com

Leave a Response

Top Reviews

Video Widget

gallery