Book Review

கல்வி: தனிநபர் வளர்ச்சியல்ல, சமூக வளர்ச்சி – தீ.சந்துரு (இந்திய மாணவர் சங்கம்)

Spread the love
கொரோனா பெருந்தொற்றை  எதிர்கொள்ள பல நாடுகளுக்கு தனது மருத்துவர்களை அனுப்பி  கியூபா  உதவிவருகிறது. பொது சுகாதாரத்தின் அவசியத்தையும் அதன் மருத்துவ உள்கட்டமைப்பின் மூலமும் செயல்பாட்டின் மூலமும் உலகிற்கே கியூபா வழிகாட்டுகிறது. ஏகாதிபத்திய பொருளாதார வழிமுறைகளான தனியார்மய தாராளமயக் கொள்கைகளை அமலாக்கிய இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெரும் பகுதி மக்கள் கல்வி வியாபாரமயமாதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு நேர்மாறாக தனது பொதுக் கல்விமுறை மூலமும்  கியூபா உலகிற்கே வழிகாட்டுகிறது.  பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் ஒரு சிறிய நாடான கியூபா எப்படி உலகிற்கு உதாரணமானது?? குறிப்பாக கல்வியில் எப்படி சிறந்த விளங்குகிறது என்பதை குறித்து பேசுகிறது ” கியூபா: கல்விக்கு ஒரு கலங்கரை விளக்கம்” எனும் இந்நூல்.
அனைவருக்கும் எழுத்தறிவு
 
கியூபா மக்களுக்கு கல்வியையும் ...
அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகம் முழுக்க உள்ள நாடுகளை தனது ஆக்டோபஸ் கரங்களால் அடக்கியாள துடிக்கிறது. அந்த வெறி கியூபாவையும் விட்டு வைக்கவில்லை.  பாடிஸ்டா எனும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கையாளின் ஆட்சியில் கியூபா இருந்தது. மக்கள் வருமையில் வாடிவதங்கியபோது கியூபாவின் மொத்த வளங்களையும் அமெரிக்க முதலாளிகள்  சுரண்டி வளர்ந்தனர். 1959 ஜனவரியில்  ஃபிடல் தலைமையில் புரட்சியின் மூலம் பாடிஸ்டா அரசு வீழ்த்தப்பட்டது. பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு நாட்டு மக்கள் அனைவருக்கும் எழுத்தறிவு வழங்குவதென்று முடிவு செய்தது. எல்லா நாடுகளிலும் இப்படி முடிவு செய்வது வழக்கம்தான் ஆனால் அதை சாதித்து காட்டியது கியூபா.
எழுத்தறிவிக்க ஒரு இயக்கத்தை உருவாக்கியதன் மூலம் ஒரே ஆண்டில் அதை செய்து முடித்ததுதான் சாதனை. அதுவும் மாணவர்களையும், இளைஞர்களையும் பயன்படுத்தி நாட்டின் எல்லாப்பகுதி மக்களிடமும் கல்வியை கொண்டு சேர்த்தது.1960 செப்டம்பரில் எழுத்தறிவு இயக்க அறிக்கை வெளியிடப்படுகிறது. அதில் “ஒரு படித்தவருக்கு, இரண்டு படிக்காதவர்” என்று கற்றுக்கொடுக்க போகிறீர்கள். இதன் மூலம் நீங்களும் கற்றுக் கொள்வீர்கள் என்றார் ஃபிடல். 1961 டிசம்பரில் இதற்கான வெற்றி விழா கொண்டாடப்பட்டது. 62 படைவீரர்கள் இந்த இயக்கத்தின்போது உயிரிழந்தனர். குறிப்பாக இயக்கத்தின்போது உள்நாட்டில் சதிகாரர்களால் கொலை செய்யப்பட்ட “பெனிட்டிஸ்” பெயரை இந்த இயக்கத்திற்கு சூட்டினார் காஸ்ட்ரோ. இந்த துவக்கம்தான் கியூப கல்வியின் வெற்றிக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருந்தது.
ஒன்பதாம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி , அதற்கு மேலும் இலவச கல்வி. ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசம், மருத்துவம்,பொறியியல் என அனைத்தும் இலவசம். 12 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர். இவை அனைத்தும் கியூபாவில் சாத்தியமாக்கப்பட்டன. உலகம் முழுவதும் கல்வியை வியாபார பொருளாக மாற்றி தனியார் கூட்டு சேர்ந்து விற்பனை செய்ய துடித்துக் கொண்டிருக்கும் சூழலில் இது எப்படி கியூப அரசால் மட்டும் முடிந்தது?. ‘கல்வி பெறுவது மக்களின் உரிமை என்றும், கல்வி கொடுப்பது அரசின் கடமை’ என்று எந்த அரசு நினைக்கிறதோ அந்த அரசால் இதை சாதிக்க முடியும். கல்வி கொடுப்பதில் தனியாருக்கு எந்த விதத்திலும் இடமில்லை என்கிற காஸ்ட்ரோவின் தீர்க்கமான முடிவு இதற்கு வலுசேர்த்தது.
வயதானவர் முதல் இளையவர்கள் வரை, கூலித் தொழிலாளர் முதல் விவசாயிகள் வரை என எப்படி அனைவருக்கும் கல்வியை கொண்டு சென்றார்கள்? என்று நாம் ஆச்சரியப்பட கூடும். தாய்மொழி வழியில் கல்வி கற்றல் என்பது இதனை எளிமைப்படுத்தி இருக்கிறது. கியூப மக்களின் தாய்மொழி ஸ்பானிய மொழியாகும். ஐந்தாம் வகுப்பு வரை ஸ்பானிய மொழி தான். ஆறாம் வகுப்பிலிருந்து கூடுதலாக ஒரு அயல் மொழியை கற்றுக் கொள்ளலாம். அமெரிக்காவின் மிக அருகில் இருந்தாலும் கியூபாவில் ஆங்கிலவழிக் கல்வியில்லை. அனைத்தும் தாய்மொழி வழிக் கல்விதான்.
மனப்பாடக் கல்வியல்ல 
The Strength of Education in Cuba - BORGEN
கியூப மக்களுக்கு பாடப் புத்தகங்களைக் கொண்டு மனப்பாடக் கல்வி கற்பிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு அரசியல், பொருளாதாரம் என அனைத்தும் கற்பிக்கப்படுகிறது. அனைத்துத் துறை சார்ந்த விஷயங்களும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. கல்வி என்பது வெறும் அறிவு சார்ந்தது அல்ல. அது பெற்ற அறிவை மற்றவருக்கு கடத்துவது. சமூகத்துக்கு பயனுள்ளதாக மாற்றுவது.எனவே, கியூப மக்கள் தாங்கள் பெற்ற கல்வியை நாட்டின் வளர்ச்சிக்காக பெரிதும் பயன்படுத்துகிறார்கள். போட்டி முறை கல்விக்கு  மாறாக, அங்கு குழுமுறை  கல்வியை கற்றுகொடுக்கிறார்கள். கல்வி என்பது தனிநபர் வளர்ச்சி அல்ல அது சமூக வளர்ச்சி என்பதை உணர்ந்து செயல்பட வைக்கிறது.
ஆசிரியர் மாணவர் உறவு என்பது ஒரு பெற்றோர் மாணவன் உறவை போன்று இருக்க வேண்டும் என்றும், ஆசிரியர்கள் மாணவர்களிடத்தில் நட்பும் அன்பும் செலுத்தவேண்டும் என்றும் ஆசிரியர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.  படிப்போடு சேர்த்து பண்பையும் கற்க வேண்டும் என்கிறது கியூபா. பாடம் படித்துவிட்டால் பண்பு வந்து விடும் என்பதில்லை. பண்பு என்பது ஒவ்வொரு தனிநபரின் நடவடிக்கை சார்ந்தது. ஆனால் கியூப கல்விமுறை ஒருவரின் பண்பை மேம்படுத்துகிறது. உதாரணத்திற்கு கியூபாவில் புத்தகம் வாசிப்பவர்களின் எண்ணிக்கை புரட்சிக்குப் பின் 100 மடங்கு உயர்ந்துள்ளது.
உலகச் சந்தையில் தற்போது மிகப்பெரிய வணிகமாக பார்க்கப்படுவது மருத்துவம். அந்த மருத்துவத்தை முறையாகவும் இலவசமாகவும் எளியவர்களுக்கு சிறந்த மருத்துவத்தை கொண்டு செல்லும் வகையில் தலைசிறந்த மருத்துவர்களை உருவாக்குகிறது கியூபா. அவர்களை உலகம் முழுவதும் சேவை செய்ய அனுப்பி வைக்கிறது . இந்த ஒரு உதாரணமே கியூபாவின் கல்வி சாதனையை விளக்கிவடப் போதுமானதாகும்.
கியூப கல்வியில் நிகழ்ந்த மாற்றங்கள் மக்கள் புரட்சிக்கு வழி வகுக்கவில்லை. புரட்சிக்குப் பின் ஃபிடல் தலைமையிலான அரசே கல்வி முறையில் இந்த மாற்றங்களை கொண்டு வந்துள்ளது என்பதை ஆசிரியர் அழுத்தமாக பதிவு செய்கிறார். “ஃபிடல் 80” விழாவையொட்டி கியூபாவின் சாதனைகளை விளக்கும் வகையில் NCBH வெளியீட்டகம் சார்பில் எட்டு நூல்கள் வெளியிடப் பட்டது. அதில் ஒரு நூலாக இந்நூல் வெளிவந்தது. நூலின் ஆசிரியர் தோழர் தியாகு எளிய மொழி நடையில், திருக்குறளின் சில குறள்களை மேற்கோளிட்டு, எண்ணிலடங்கா புள்ளி விவரங்களோடு பல நூல்களை ஆதாரமாகக் கொண்டு ஒரு சிறந்த ஆவணத்தை இந்த சிறு நூலின் மூலமாக நமக்கு வழங்கியிருக்கிறார்.
“வறுமைக் கடலில்
அறியாமை அலைகளில்
தத்தளிக்கும் கலங்கள் 
கரைசேர கியூபாவின்
வெளிச்சம் வழிகாட்டும்
நமக்கும் தான்” 
கியூபா கல்விக்கு ஒரு கலங்கரை ...
கியூபா :
கல்விக்கு ஒரு கலங்கரை விளக்கம்
ஆசிரியர்: தியாகு
பக்கங்கள் :  74
விலை: 40ரூ
NCBH வெளியீடு

Leave a Response