Article

கோவிட்-19-க்கு மதம் இல்லை (கொரோனா வைரஸ் தொற்றுப் பரவுவதற்கு எந்தவொரு தனி நபரையோ, நிகழ்வையோ, மதத்தையோ குறை சொல்ல முடியாது.) -ஷேக் முஜிபுர் ரஹ்மான் (தமிழில்: ச.வீரமணி)

கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் இந்தியா இப்போது உலகில்  மூன்றாவது இடத்திற்கு வந்திருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர் குறித்து முதன்முதலில் ஜனவரி 30 அன்று கேரளாவில் செய்தி வெளியான பின்னர், நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் இந்தத் தொற்று வேகமாகப் பரவியது. மும்பை மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களில் இத்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுள்ள நிலையில், இத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இரண்டாவது அடுக்கு மற்றும் மூன்றாவது அடுக்கு நகரங்களிலும் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. இவ்வாறாக இத்தொற்று நாடு முழுதும் பரவிக் கொண்டிருப்பதற்கு, தனிப்பட்ட முறையில் எந்தவொரு நபரையும், நிகழ்வையும், அல்லது மதத்தையும் குறைகூற முடியாது.

கேரளா, ஆந்திரா மற்றும் மகாராஷ்ட்ர மாநில முதலமைச்சர்கள் போன்று பல தலைவர்கள் இத்தொற்று பரவுவதற்கு எந்த மதத்தையும் குறை கூறக்கூடாது என்று வேண்டுகோள்கள் விடுத்தபோதிலும், இத்தொற்றுப் பரவத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் முஸ்லீம்களுக்கு எதிராகப் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டது. குறிப்பாக, தில்லியில் மார்ச் மாதத்தில் தப்லிகி ஜமாத் நிகழ்வைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் இவ்வாறு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அந்த சமயத்தில் முஸ்லீம்கள் அதிகம் திரண்ட முதல் பெரிய நிகழ்வு அது. இத்தொற்று பரவுவதற்கு தப்லிகி ஜமாத்தும் மற்றும் அதனை நடத்தியவர்களுக்கும் பொறுப்பு இல்லை என்று இதற்குப் பொருள் அல்ல. ஆனாலும், நாட்டில் தொற்று பல முனைகளிலிருந்தும் பரவிக்கொண்டிருக்கிறது. இவற்றையெல்லாம் அரசாங்கமும், காவல்துறையும் கண்டுகொள்ளவில்லை. மாறாக தப்லிகி ஜமாத்தில் முஸ்லீம்கள் திரண்டதை மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

மதவெறித் தீ விசிறிவிடப்படுதல்

India coronavirus: Tablighi Jamaat gives blood for plasma therapy ...

இத்தகைய பிரச்சாரம் ஆழமான முறையில் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும், வலதுசாரி இந்துக்கள் ஆட்சி செய்யும் நிலையில் முஸ்லீம்களுக்கு எதிரான மதவெறிப் பிரச்சாரம் உக்கிரம் அடைந்திருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. தப்லிகி ஜமாத் நிகழ்வினை பல முஸ்லீம் தலைவர்கள் கண்டித்துள்ளார்கள் என்பதும் உண்மை. முஸ்லீம் சமூகத்தில் உள்ள நன்கு பிரபல்யமான தொழில் அதிபர்கள் பலர், இத்தொற்றால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்காக அரசாங்கத்திற்கு நன்கொடை அளித்திருக்கிறார்கள். இத்தகைய முஸ்லீம்களின் நற்செய்கைகளை விதிவிலக்காகப் பார்க்கப்படுவது அல்லது கண்டுகொள்ளாமல் விடப்படுவது, வருத்தமளிக்கிறது. இதற்குப் பதிலாக எங்கேனும் ஒரு தனிநபர் செய்திடும் தவறுகளைச் சாக்காக வைத்து ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகத்திற்கும் எதிராகத் தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன.

ஏன் இந்த நிலை?

இதற்கு முக்கிய காரணம், 1980களில் பிற்பகுதியிலிருந்தே நாட்டில் முஸ்லீம்களுக்கு எதிராக மதவெறித் தீ விசிறி விடத் தொடங்கப்பட்டுவிட்டது. மேலும், சமீப ஆண்டுகளில் வலதுசாரி  இந்துக்கள் அமைப்புகளின் பிரச்சார எந்திரம் மிகவும் வலுவாகவும், அதி நவீன அடிப்படைகளிலும் இயங்கிக்கொண்டிருக்கின்றன. முஸ்லீம்களுக்கு எதிரான அவதூறுகள் உண்மை போல மிகவும் சாதுர்யமான விதத்தில் இவற்றின் மூலமாக அவிழ்த்துவிடப்படுகின்றன. 1930களில் ஐரோப்பாவில் யூதர்கள் எப்படிக் குறி வைத்துத் தாக்கப்பட்டார்களோ அதேபோன்றே இன்றைய தினம் இந்தியாவில் முஸ்லீம்கள், மதவெறியர்களால் குறிவைத்துத் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 2020 தில்லிக் கலவரங்களும் அதற்கு முன் நடைபெற்று வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களும் ஆட்சியாளர்களால் எப்படிக் கையாளப்படுகிறது என்பதைப் பார்த்தோம். “கலவரத்தில் ஈடுபடுபவர்களை அவர்கள் அணிந்திருக்கும் உடைகளிலிருந்தே அடையாளம் காண முடியும்,” என்று ஆட்சியாளர்கள் கூறியதை நாம் கேட்டோம்.

Indian hospital shuns Muslims as coronavirus spurs discrimination ...

“பசுப் பாதுகாப்புக்கு” குழுவினரால் முஸ்லீம்கள் அடித்துக் கொல்லப்படுவதிலிருந்து, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் வரை, முஸ்லீம்களில் சில பிரிவினருக்கும் இந்திய அரசுக்கும் இடையே, குறிப்பாகப் போலீசுக்கும் இடையே, பெருமளவில் நம்பிக்கைப் பற்றாக்குறை ஏற்படுவதற்கான ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக, சில தப்லிகி ஜமாத் உறுப்பினர்கள் ஆட்சியாளர்களுடன் தவறான முறையில் ஒத்துழைக்க  மறுத்தபோது இதனைப் பார்க்க முடிந்தது. இதன் காரணமாக, ஆட்சியாளர்கள் தப்லிகி ஜமாத்தில் கலந்துகொண்ட அனைவரும் தங்களைத் தாங்களே அடையாளம் காட்ட வேண்டும் என்றும் அப்போதுதான் அவர்களைத் தனிமைப்படுத்த முடியும் என்று கூறியதிலிருந்து அவர்களின் மறைமுக நிகழ்ச்சிநிரலைப் புரிந்துகொள்ள முடிந்தது.

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் இதர மதத்தைச் சேர்ந்தவர்களைப் போலவே முஸ்லீம்களும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

பிற்படுத்தப்பட்ட இனம்

UP hospital asks Muslims to come only if Covid-19 negative, faces FIR

இந்திய முஸ்லீம்கள், இந்தியாவில் உள்ள பெரிய அளவிலான மதச் சிறுபான்மையினராக மட்டுமல்ல, நவீன உலகத்தில் மிகவும் வறிய நிலையில் உள்ளவர்களாகவும் இருந்து வருகின்றனர்- இப்போதும் அவர்கள் கல்வியில் பின்தங்கிய நிலையிலேயே இருந்து வருகிறார்கள். இத்தகைய அவர்களின் பிற்பட்ட நிலை என்றென்றும் தொடர்ந்திருக்கக்கூடிய விதத்திலேயே இந்திய அரசு தன் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த சமூகத்திலிருந்து பல்வேறு துறைகளில் பெயர் சொல்லக்கூடிய விதத்தில், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், எம்.எப். உசேன், பிஸ்மில்லா கான், சானியா மிர்சா போன்று பலர் வந்திருக்கிறார்கள். தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களும் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களே. ஆனால் அவர்கள் மட்டுமே இஸ்லாமின் பிரதிநிதிகள் அல்ல. இன்றைய தினம், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பது தொடர்கிறது. எனவே இதற்குக் காரணம், முஸ்லீம்கள் என்று கூறி அவர்களைத் தனிமைப்படுத்துவதற்கு முன்பு, இதற்கெதிரான நடவடிக்கைகள் புறநிலை எதார்த்த நிலையை ஒட்டி, நியாயமானவைகளாக இருந்திட வேண்டும்.

(கட்டுரையாளர், புதுதில்லி, ஜமியா மிலியா

மத்தியப் பல்கலைக் கழகத்தில் ஆசிரியர்)

நன்றி: The Hindu, 9-7-2020

Leave a Response