Monday, June 1, 2020
Book Review

காங்கிரீட் காடுகள் – அப்டன் சிங்களர் | தமிழில் : க.சுப்பாராவ் | மதிப்புரை சு.பொ.அகத்தியலிங்கம்.

187views
Spread the love

மோடியும் ,டிரம்பும் ஏன் அப்படி நடந்து கொண்டார்கள் ? உணவோ ,மருந்தோ எதுவாயினும் ’’லாபம் ,லாபம்’’ என்பது மட்டுமே முதலாளித்துவத்தின் ஒரே குறி . வெட்கம் ,மானம் எல்லாம் அப்புறம் . தேசபக்தி ,மனிதாபிமானம் ,சட்டத்தின் ஆட்சி எதுவுமே அவர்களுக்குப் பிடிக்காதவை . கொரானா காட்டும் ஸ்கேன் ரிப்போர்ட் அதுவே . இதை நாவலில் சொன்னால் எப்படி இருக்கும் . சொல்லி இருக்கிறார் அப்டன் சிங்ளர் . ஊரடங்கி கிடக்கும் இவ்வேளையில் அடங்கா கோவத்தோடு அலைபாயும் மனதுக்கு இந்நாவல் பிடிக்கும் . கோவத்தை செலுத்த வேண்டிய திசை புலப்படும்.

Upton sinclair and critics of the jungle

எழுத்தாளர் அப்டன் சிங்களர்

352 பக்கங்களில் காங்கிரீட் காடுகள் ,ஆசிரியர் : அப்டன் சிங்களர் ,
தமிழில் : க . சுப்பாராவ் ,வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,

இந்நூல் குறித்து மூன்றாண்டுகளுக்கு முன் எழுதியதை மீள்பதிவு செய்கிறேன் , காலத்தின் தேவை கருதி……

குற்றப்பத்திரிகையான நாவல்

“உன்னை வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனம் உன்னிடம் பொய் சொல்லி இருக்கிறது . ஒட்டு மொத்த நாட்டிற்கும் பொய் சொல்லியுள்ளது .மேலிருந்து கீழ் வரை ஒரு பிரமாண்டமான பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை.” ஒரு நிறுவனம் மட்டுமல்ல .ஒவ்வொரு நிறுவனமும் அப்படியே .ஆட்சியும் அதிகார அமைப்பும் அதனை நிலை நிறுத்தவே ! இதுதான் நாவலின் மைய இழை .

லித்துவேனியாவிலிருந்து அமெரிக்காவுக்கு பிழைப்பு தேடி வந்த யூர்க்கிஸ், அவன் காதல் மனைவி ஓனா , அவளது சிற்றன்னை அவரது பிள்ளைகள் இவர்களைச் சுற்றி கதைநகரும். ஆனால் இவர்களின் சொந்த வாழ்வும்அமெரிக்காவில் இறைச்சித் தொழிற்சாலையில் மனிதத்தன்மையற்ற கொடும் சுரண்டலும் பின்னிப் பிணைந்திருக்கும். எப்படி எல்லாம் மனிதர்கள் ஏமாற்றப்படுகிறார்கள் ;அரசியலும் அதிகாரமும் எப்படி வளைக்கப்படுகிறது என்பதை கறுப்பு வெள்ளையாய் படம் பிடிக்கிறது இந்நாவல் .

“நா இன்னும் கடுமையாக வேலை பார்க்கிறேன்” ன்னு ஒவ்வொரு முறையும் சொல்லுகிற – அப்படியே செய்கிற -உழைப்பைத் தவிர வேறேதும் தெரியாத – நேர்மையான ஒரு அப்பிராணி யூர்க்கிஸ் வாழ்க்கைப் போராட்டத்தில் எப்படி முரடனாகிறான் – மனைவி மக்களை இழக்கிறான் – திருடனாகிறான் – அரசியல் சூதாடிகளின் கைத்தடி ஆகிறான்– பெண்கள் எப்படி விபச்சாரி ஆக்கப்படுகிறார்கள் – எல்லாம் உள்ளது உள்ளபடி சொல்லுகிறது இந்நாவல் .

மனிதர்களை எப்படி சிதைத்து சீர்குலைக்கிறது லாபவெறி கொண்ட முதலாளித்துவம் என்பதன் நேரடி சாட்சியாய் ஒவ்வொரு காட்சியும் அமைந்திருக்கிறது .சங்கம் என்கிற வார்த்தைக்கே அர்த்தம் புரியாமல் திணறிய யூர்க்கிஸ் சோஷலிஸ்ட் கட்சி ஊழியனாகிற பரிணாம வளர்ச்சி நம்முள் பெரும் கிளர்ச்சியை உருவாக்கும் . மனிதம் அடித்தட்டு மக்களிடம் தான் உயிர்துடிப்போடு ஜீவித்திருப்பதை சொல்லுவதோடு ;இன்னொரு புறம் புல்லுருவிகளும் ஒட்டுண்ணிகளும் தாங்கள் வாழ எதையும் செய்வார்களென கோனர் போன்ற கதாபாத்திரங்கள் மூலம் ஆசிரியர் காட்டுகிறார்.

Literary Criticism of The Jungle by Upton Sinclair | Study.com

இறைச்சித் தொழிற்சாலையில் லாபவெறியில் சுத்தம் , சுகாதாரம் மட்டுமா பாழாகும் ;நேர்மையும் பாழாகும். நோய் பிடித்த மாடும்பன்றியும் கூட மிச்சமீதமின்றி டப்பாக்களில் நிரப்பப்படும் . அங்கு நடக்கும் அக்கிரமங்களின் விவரிப்பை படித்தால் துரித உணவை சாப்பிட யாராலும் முடியாது.

மனச்சாட்சி உள்ளஎவரும் அங்கு உழைப்பாளிகள் நடத்தப்பட்டதை கண்டு இரத்தக் கண்ணீர் விடாமல்இருக்க முடியாது. அமெரிக்கா பணக்கார நாடான ரகசியம் இந்நாவலில் வெளிப்படுகிறது .இப்பாதையில் செல்லவே மோடி துடிக்கிறார் என்பதை இந்நாவல் நமக்கு உரக்கவே சொல்லும் !

Nokia's defunct Chennai plant set to reopen after 5 yrs, as ...

சென்னையில் நோக்கியா தொழிற்சாலையில் ஒரு விபத்து நடந்தது. ஒரு இளம் பெண் தொழிலாளியின் கூந்தல் கன்வேயர் பெல்ட்டில் சிக்கி அந்தப்பெண் பலியானாள் .பாதுகாப்பு ஏற்பாட்டை நிறுத்தி உற்பத்தி குவிக்க வேகப்படுத்தியதின் விளைவு அது. அப்போது இந்த நாவலை நான் முழுதாய்ப் படித்திருக்கவில்லை ; ஏனெனில் ஆங்கிலத்தில் நாவல் படிக்கும் பழக்கம் எனக்கு மிகமிகக் குறைவு. ஆயினும் இதன் சுருக்கத்தை தமிழில் சில கட்டுரைகளில் வாசித்திருக்கிறேன்.

முதல் நாள்தான் தோழர்வி.எம்.எஸ்ஸோடும் , ஃபிரண்ட் லைன் விஸ்வநாதனுடனும்உரையாடிய போது இந்நாவல் குறித்து பேசினோம் .இச்சூழலில் ஒரு தொலைக்காட்சியில் ஒரு விவாதத்துக்கு கூப்பிட்டார்கள் .நான் இந்நாவல் குறித்துசில விவரங்களைச் சேகரித்துக் கொண்டு போனேன் . விவாதத்தில் நோக்கியா விபத்தையும் இந்நாவலையும் ஒப்பிட்டேன்.

என் விவாதத்தில் குறுக்கிட்ட நெறியாளர் . இதனை பேசவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார் . நான் மேலும் சில வரிகள் பேசினேன் . மாலை ஒளிபரப்பானபோது இந்நாவலை ஒப்பிட்டு நான் பேசிய அனைத்தும் இடம் பெறாமல் எடிட் செய்யப்பட்டிருந்தது . ஏன் அப்படிச் செய்தார்கள் என்பதை இந்நாவலைப் படிக்கும் ஒவ்வொருவரும் உணர்வர் .

இந்நாவலை முதலாளித்துவத்தின் மீதான குற்றப்பத்திரிகையாகவே அப்டன் சிங்ளர் எழுதியிருப்பார் . ஹேரியட் பீக்கர் ஸ்டோவ்வின் “ அங்கிள் டாம்” என்கிற நாவல் அடிமைமுறைக்கு எதிராக அமெரிக்க மனச்சாட்சியைத் தட்டி எழுப்பியது போல் இந்நாவல் ஒரு அசைவை உருவாக்கியது .உணவு கலப்படத்துக்கு எதிரான சட்டம் வந்தது.

சோஷலிஸ்ட் கட்சியைச் சார்ந்த அப்டன் சிங்ளர் கட்சி ஏடான “அப்பீல் டூ ரீசன்” ஏட்டில் தொடராக 1905 ல் எழுதினார் . 1906 ல் புத்தகமாக வெளிவந்தது . 1905 ல் எழுதியது 2017 ல் தமிழில் வந்தாலும் இன்றைக்கு இந்திய சூழலுக்கும் கச்சிதமாகப் பொருந்திப் போகிறது .

“ விவசாயி நிலத்தை உழுகிறான் .சுரங்கத் தொழிலாளி சுரங்கம் வெட்டுகிறான்.நெசவாளி நெய்கிறான் .இன்னொருவன் கல்லைச் செதுக்குகிறான் .புத்திசாலி மனிதன் புதியதைக் கண்டு பிடிக்கிறான் .கெட்டிக்காரன் நிர்வாகம் செய்கிறான்.

அறிவாளி படிக்கிறான்.கலைஞன் பாடல் இசைக்கிறான் .இதன் பலன் ,உடல் மற்றும் மூளை உழைப்பின் பலனாக உருவானவை அனைத்தும் ஒரு மிகப்பெரிய நதியாக மாறி அவர்கள் மடியில் பாய்கிறது.ஒட்டு மொத்த சமூகமும் அவர்கள் கைப்பிடியில் இருக்கிறது . உலகின் உழைப்பு சக்தி முழுவதும் அவர்கள் தயவை எதிர்பார்த்து நிற்கிறது.கொடூரமான ஓநாய்கள் போல ,பெரும் பசியோடு இருக்கும் வல்லூறு போல அவர்கள் இந்த சமூகத்தைக் கிழித்துத் தின்கிறார்கள்!” – இப்படி சோசலிஸ்ட் கட்சிக் கூட்டத்தில் ஆற்றும் உரை இந்நாவலில் இடம் பெற்றிருக்கும் .

சுத்த கலை இலக்கியவாதிகள் இந்த வார்த்தைகளையோ – இந்த காட்சி அமைப்பையோ கண்டு முகம் சுழிக்கலாம் .இது வெறும் பிரச்சாரம் என சுண்டு விரலால்புறந்தள்ளலாம் . ஆயினும் நம் இதயத்தின் புழுக்கமும் குமுறலும் இந்நாவலில் பொங்கி வடிவதை படிக்கிற ஒவ்வொருவரும் உணரலாம்.

Image may contain: one or more people and text

சுப்பாராவின் மொழியாக்கத்திற்கு வாழ்த்துகள்.

[ஆங்கிலத்தில் நாவலின் தலைப்பு ஜங்கிள் என்பதே இதனை கொடுவனம் என்றோ கொடிய காடு என்றோ மொழியாக்கி இருக்கலாமோ . காங்கிரிட் காடு எனும் தலைப்பும் அட்டையும் சுற்றுச்சூழல் , கட்டுமானத்தொழில் என்கிற நினைப்பை முதலில் ஏற்படுத்தி விடுகிறதே.]

புத்தகம் : காங்கிரீட் காடுகள்                                                                                                                                          ஆசிரியர் : அப்டன் சிங்களர் 
தமிழில் : க . சுப்பாராவ்                                                                                                                                              வெளியீடு : பாரதி புத்தகாலயம்                                                                                                                            பக்கங்கள் : 352                                                                                                                                                                மதிப்புரை: சு.பொ.அகத்தியலிங்கம்.

Leave a Response

Top Reviews

Video Widget

gallery