Article

பன்முகத் திறன் கொண்ட பண்பட்ட தலைவர் தோழர் கே.வி. – ஜி.ராமகிருஷ்ணன்

Spread the love

 

பல ஆண்டுகாலமாக தோழர் கே. வரதராசனோடு இணைந்து பழகிப் பணியாற்றியவன் என்கிற முறையில் அவர் இப்போது நம்முடன் இல்லை  என்பதை ஏற்க மனம் மறுக்கிறது. தோழர் கே. வரதராசன், தோழர். ஏ. கே. பத்மநாபன், தோழர். டி லட்சுமணன் ஆகிய மூவரும் 1986 ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்வுசெய்யப்பட்டார்கள். அதன் பிறகு தோழர் கே.வி மாநில அளவிலான பல கூட்டங்களுக்கும், இயக்கங்களுக்கும் சென்றார். ஒன்றுபட்ட தென்னார்க்காடு மாவட்டத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு மற்றும் மாவட்டக் குழு கூட்டங்களுக்கு அன்றைய கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஏ. நல்லசிவனுடன், தோழர் கே. வரதராசனும் கலந்து கொண்டிருக்கிறார். இத்தகைய சூழலில்தான் தோழர் கே.வியுடன் என்னைப் போன்றோருக்கு நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு கிடைத்தது.

மாவட்டங்களில் கட்சியிலும், அரங்கங்களிலும் தோழர்களுக்கிடையில் கட்சியின் அமைப்புச் சட்டக் கோட் பாட்டின்படி இணக்கத்தையும், கூட்டுத் தலைமையையும் உருவாக்கிட முயற்சி செய்தவர் தோழர். கே. வி. இறுக்க மான சூழலையும் கலகலப்பாக்கி கடினமான பிரச்சனைக ளுக்கும் எளிதாகத் தீர்வுகாண வழிகாட்டுவார்.  கட்சித் தோழர்கள் மற்றும் முழுநேர ஊழியர்களின் நலனிலும், அவர்களுடைய கட்சி மற்றும் குடும்ப வாழ்க்கை யைப் பாதுகாப்பதிலும் தோழர் கே.வி நெகிழ்வான அணுகுமுறையை கையாள்வார். ஒரு தோழர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேரிடும்போது, அவர் செய்த தவறை திருத்திக்கொண்டு பணியாற்றுவதற்கான வாய்ப்பை உருவாக்குவதாக அந்த நடவடிக்கை இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவார் தோழர் கே.வி.

1978 ஆம் ஆண்டு தோழர் பி.ராமச்சந்திரன் அவர்களைத் தொடர்ந்து கட்சியின் ஒன்றுபட்ட திருச்சி மாவட்டச் செயலாளராக தோழர் கே. வரதராசன் தேர்வுசெய்யப்பட்டு, 1986 வரை பொறுப்பில் இருந்தார்.  அவர் மாவட்டச் செயலாளராக பணியாற்றிய காலத்தில் தோழர்கள் ஆர்.உமாநாத், பி.ராமச்சந்திரன், பாப்பா உமாநாத், கே.அனந்தநம்பியார், டி.கே.ரங்கராஜன் போன்ற தலைவர்கள் திருச்சியில் இருந்துகொண்டு அகில இந்திய, மாநில பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

புதிய முயற்சி…

மாவட்டச் செயலாளராக பணியாற்றிய காலத்தில் ஒன்றுபட்ட திருச்சி மாவட்டத்தில் கட்சி மற்றும் வெகுஜன அரங்குகளின் வளர்ச்சியில் தோழர் கே.வி.க்கு முக்கியமான பங்கு உண்டு. தேசிய அளவிலும், மாநில அளவிலும் ஏற்பட்டு வரும் அரசியல் சமூக வளர்ச்சிப் போக்குக்கு ஏற்ப தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் திறன்கொண்டவர். அத்தோடு, மாநிலத்தில் பல தளங்களில் பல புதிய மேடைகளை உருவாக்கிட முயற்சி எடுத்தவர். ஆந்திராவில் தீண்டாமை ஒழிப்புக்காக இயக்கம் நடத்திட 1997 ஆம் ஆண்டு ஒரு மேடை உருவாக்கப்பட்டது. அந்த அனுபவத்தில் தமிழகத்திலும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியை உருவாக்குவதில் தோழர். கே. வரதராசன் முக்கியப் பங்காற்றினார்.

1989ஆம் ஆண்டு முதல் தோழர் கே.வி. மற்றும் தலைவர்களோடு இணைந்து மாநில செயற்குழுவில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாநில செயற்குழு கூட்டத்தில் தோழர் கே.வி ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை முன்வைப்பார்.  கட்சியின் மத்தியக் குழுவுக்கும், அரசியல் தலைமைக்குழுவுக்கும் தேர்வாகி, அகில இந்திய மையத்திலிருந்து செயல்படுகிறபோது, தலித் சோஷன் முக்தி மன்ச் (டி.எஸ்.எம்.எம்) என்ற மேடை உருவானபோது, அதன் ஸ்தாபகத் தலைவர்களுள் ஒருவராக தோழர் கே. வி. திகழ்ந்தார். இதனுடைய அகில இந்திய சிறப்பு மாநாடு 2006ல் தில்லியில் நடைபெற்றது. அதில் இந்த மேடை ஒரு அகில இந்திய வடிவம் பெற்றது.

புதிய மொழியை கற்றார், பேசினார்

அந்த இடமே கலகலப்பாகி விடும் ...

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளராக பல ஆண்டுகள் தோழர். கே. வரதராசன் செயல்பட்டார். விவசாயிகள் சங்கத்தின் அகில இந்தியப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று பத்தாண்டுகள் பணியாற்றியுள்ளார். கட்சியினுடைய அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் விவசாய சங்கத்தினுடைய அகில இந்தியப் பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்ட தோழர். கே. வரதராசன் அகில இந்திய மையத்தில் இருந்து செயல்பட்டார். அகில இந்திய மையத்திலிருந்து தோழர் கே.வி. பணியாற்றிய காலத்தில் அவருடைய பங்களிப்பு சிறப்பாக இருந்தது என்று தோழர் பிரகாஷ் காரத் தன்னுடைய இரங்கல் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

அகில இந்திய மையத்திலிருந்து பணியாற்றிய காரணத்தினால் வடமாநிலங்களின் பொதுக் கூட்டங்களுக்கும் பேரவை கூட்டங்களுக்கும், கமிட்டி கூட்டங்களுக்கும் செல்ல வேண்டிய தேவை இருந்தது. இந்தி மொழி தெரியாமல் செயல்பட முடியாது என்ற அடிப்படையில், சென்னையில் ஒரு இந்தி ஆசிரியரிடம் இந்தி கற்றுக்கொண்டார். அகில இந்திய அளவில் செயல்பட வேண்டிய தேவையை ஒட்டி, புதிதாக ஒரு மொழியைக் கற்றுக்கொண்டு அவர் சென்றது மட்டுமல்லாமல், வடமாநிலங்களில் நடைபெற்ற பல பொதுக்கூட்டங்களில் இந்தியில் பேசி இருக்கிறார்.

தோழர் கே.வி. உடல்நலம் பாதிக்கப்பட்டதால், கட்சியின் கடந்த அகில இந்திய மாநாட்டில் மத்தியக் குழுவில் சிறப்பு அழைப்பாளராக தேர்வுசெய்யப்பட்டார். அதற்குப் பிறகும், தமிழகத்தில் கட்சியின் மாநில மையத்தில் இருந்து செயல்பட்டு வந்தார். சமீபகாலத்தில் கரூரில் தன்னுடைய மகனோடு தங்கியிருந்த தோழர் கே. வி, உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 16ஆம் தேதி காலமானார். திருச்சியில் அவருக்கு இறுதி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

സിപിഎം നേതാവ് കെ വരദരാജന്‍ അന്തരിച്ചു

தோழர் கே.வி ஐம்பதாண்டுகளுக்கு மேலாக அர்ப்பணிப்போடு கட்சிப் பணி ஆற்றியவர். அவர் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை கிருஷ்ணசாமி ஸ்ரீரங்கம் கோவிலில் 45 ரூபாய் மாத சம்பளத்துக்கு பரிசாரகராக (சமையல் பணியாளராக) பணியாற்றியவர். அவருக்கு நான்கு மகன்கள், நான்கு மகள்கள். தோழர் கே.வியின் மூத்த சகோதரர் கே. ராமசாமி ரயில்வே துறையில் பணியாற்றியவர். அடுத்த மூத்த சகோதரர் கே. லட்சுமணன் எல்.ஐ.சியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மிகச்சிறந்த எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இளைய சகோதரர் கே. அனந்தராசன் பி.எஸ்.என்.எல்லில் பணியாற்றி ஓய்வுபெற்ற பிறகு, திருச்சியில் தீக்கதிர் பதிப்பு துவங்கப்பட்ட போது அதன் பொது மேலாளராக பணியாற்றினார்.

தோழர். கே. வரதராசன் கட்டுமானப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்துவிட்டு, 1966 ஆம் ஆண்டில் பொதுப்பணித்துறையில் இளநிலைப் பொறியாளராக வேலையில் சேர்ந்து நெல்லையில் பணியாற்றினார். அப்போது கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் எஸ்.பாலவிநாயகத்துடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. தோழர். பாலவிநாயகம் யாரைச் சந்தித்தாலும் காந்தம் போல ஈர்க்கக்கூடிய திறமை வாய்ந்தவர். அதனால் தோழர். கே. வரதராசன் மார்க்சிஸ்ட் கட்சியின்பால் ஈர்க்கப்பட்டு கட்சியின் உறுப்பினர் ஆனார்.

தோழர் கே.விக்கும் அவரது சகோதரியின் மகள் சரோஜாவுக்கும் 1969 ஆம் ஆண்டு திருமணம் ஆனது. திருமணம் முடிந்து நெல்லைக்கு மீண்டும் திரும்பிச்சென்று பணியாற்றி வந்தார். அவரது மனைவியையும் நெல்லைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று, அவரது தந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் ஏற்பாடு செய்துகொண்டிருந்தனர். அந்தச் சூழலில், திடீரென்று ஒரு நாள் திருச்சி வந்திருக்கிறார் தோழர் கே.வி. ஏன் என்று அவரது தந்தை கேட்டபோது, ‘வேலையை நான் ராஜினாமா செய்துவிட்டேன்’ என்றிருக்கிறார். தோழர் கே.வியை முழுநேர ஊழியராக வரும்படி தோழர். பாலவிநாயகம் கேட்டிருக்கிறார். அவருக்கும் முழுநேர ஊழியராக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதற்கான சமயம் பார்த்துக்கொண்டிருந்தார்.

முடியாத வேலைக்கு  சான்றிதழ் தர மறுப்பு

Veteran Kisan Leader,CPI(M)'s K Varadarajan Passes Away in Karur ...

ஒரு நாள் அவருடைய உயர் அதிகாரி, ஒப்பந்த வேலை ஒன்று முடிந்தபிறகு, பணிநிறைவு சான்றிதழ் தரும்படி இவரிடம் கேட்டிருக்கிறார். இளநிலைப் பொறியாளராக வேலை செய்த தோழர் கே.வி, ‘அந்த வேலை சரியாக முடிக்கப்படவில்லை, அதில் இன்னும் பாக்கி இருக்கிறது, இந்த நிலையில் பணிநிறைவு சான்றிதழ் அளிக்க முடியாது’ என உயரதிகாரியிடம் கூறிவிட்டார். அதிகாரியோ, ‘நீ உடனடியாக கையெழுத்திட்ட அந்தச் சான்றிதழைத் தரவில்லை என்றால் உன்னைப் பணியிடை நீக்கம் செய்துவிடுவேன்’ என மிரட்டியிருக்கிறார். ‘அந்த அளவுக்கு நீங்கள் போக வேண்டிய அவசியம் இல்லை’ எனக் கூறி ராஜினாமா கடிதத்தை எழுதிக்கொடுத்துவிட்டு திருச்சிக்குத் திரும்பிவிட்டார் தோழர் கே. வி.

‘உனக்குத் திருமணமாகியிருக்கிறது, வேலையை ராஜினாமா செய்துவிட்டாய், எப்படி குடும்பத்தைப் பாதுகாக்கப்போகிறாய்’ என அவருடைய தந்தை கேட்ட போது, தோழர் கே.வி கட்சி வேலை பார்த்துக்கொண்டே ஓர் அச்சகத்தைத் தொடங்கி நடத்துகிறேன். அதில் வரும் வருமானத்தைக் கொண்டு குடும்பத்தைப் பாதுகாப்பேன் என்று கூறியிருக்கிறார். அந்த அச்சகத்தில் பெருமளவு வருமானம் கிடையாது. இருந்தாலும், கட்சிப்பணியை பார்த்துக்கொண்டே அச்சகத்தையும் கொஞ்ச காலம் கவனித்துக்கொண்டிருந்தார்.

1971 ஆம் ஆண்டு, நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தோழர். கே. அனந்த நம்பியார் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அந்த தொகுதிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு தோழர் கே.வரதராசன் பொறுப்பாளராக இருந்து தேர்தல் பணியாற்றி இருக்கிறார். அதே ஆண்டில் கட்சியினுடைய முழு நேர ஊழியராக கே.வி. மாறினார்.

கே.வி. பரந்த வாசிப்பனுபவம் உள்ளவர். ஏராளமான நூல்களைப் படிப்பார். மாநிலம் முழுவதும் கட்சிக் கல்வி வகுப்பு எடுப்பதில் முக்கியப் பங்காற்றினார். தத்துவம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் ஆழமாக கவனம் செலுத்துவார், ஆய்வு செய்வார். ‘இந்தியத் தத்துவ தரிசனம்’ என்ற நூலையும் எழுதியிருக்கிறார்.  தோழர் கே. வரதராசன் அரசுப் பொறியாளராக இருந்தபோது, கட்சி உறுப்பினரானது அவருடைய வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்தது. மூன்றாண்டு கள் மட்டுமே அரசுப் பணியில் இருந்த தோழர் கே. வி. எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஒரு முழுநேர ஊழி யராக பொறுப்பேற்றது அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனை. ஒரு கம்யூனிஸ்ட் தன்னுடைய எதிர் காலத்தை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று எடுக்கக்கூடிய மிக முக்கியமான முடிவு இது.

குடும்பத்தினரை  கட்சிக்கு ஈர்த்தவர்

கலகக்காரர் – இந்திய கம்யூனிஸ்ட் ...

அவருடைய முடிவுக்கு அவருடைய குடும்பமும் உறுதுணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அவசரநிலைக்காலத்தில் தோழர் கே.வி. தலைமறைவாக இருந்து இயக்கப்பணியாற்றினார். இவரை தீவிரமாகத் தேடி வந்த போலீசார், உடனடியாக சரணடைய வேண்டும். இல்லையென்றால் அவருடைய வீட்டை ஜப்தி செய்து விடுவோம் என்று வீட்டுக்கதவில் நோட்டீஸ் ஒட்டியதோடு ஊர் முழுவதும் தண்டோரா போட்டார்கள். எனினும் அவரோ, அவருடைய குடும்பத்தினரோ அஞ்சவில்லை.

தோழர் கே. வி தன்னுடைய குடும்பத்தில் பலரையும் மார்க்சிஸ்ட் கட்சியின்பால் ஈர்த்து, அவர்களைக் கட்சியில் சேர்த்தார். அவருடைய மூத்த சகோதரர் கே. லட்சுமணன் தோழர் கே.வி கட்சியில் சேர்வதற்கு முன்னதாகவே எல்.ஐ.சி ஊழியராக சேர்ந்து கட்சி உறுப்பினரானவர். அவருடைய இளைய சகோதரர் அனந்தராஜன் தொலை பேசித் துறையில் பணியாற்றுகிறபோது, அவரும் கட்சி உறுப்பினராவதற்கு தோழர் கே.விதான் தூண்டு கோலாக இருந்தார். தோழர் கே.வியின் மனைவி சரோஜா அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் பணியாற்றியவர். அவருடைய மூத்த சகோதரரின் மருமகன் சம்பத் பி.ஹெச்.ஈ.எல்லில் பணியாற்றுகிறபோது, சி.ஐ.டி.யு சங்கத்தின் பொதுச்செயலாளராக செயல்பட்டவர். ஓய்வு பெற்ற பிறகு அவர் தற்போது கட்சியின் திருச்சிப் புறநகர் மாவட்டக்குழு உறுப்பினராக இயங்கி வருகிறார்.

கே. வி. தன்னுடைய சகோதரிகளுடைய பிள்ளைக ளையும் கட்சியில் சேர வைத்திருக்கிறார். அவருடைய மகன் பாஸ்கரன் தற்போது கரூரில் ஒரு தனியார் நிறுவ னத்தில் பணியாற்றி வருகிறார். அவரும் கட்சி உறுப்பி னர். கே.வி. தன்னுடைய மகளுக்கு காதல் திருமணம் செய்து வைத்தார். தோழர் கே.வி தன்னுடைய குடும்பத்தினரோடு நல்ல உறவோடும், தோழமையோடும் வாழ்ந்தவர். குடும்பத்தினரிடம் அவர் கரடுமுரடான அணுகுமுறையைக் கடைப்பிடித்திருந்தால், கட்சியில் அவர்கள் சேர்ந்திருக்க மாட்டார்கள்.  குடும்பத்தினரோடு எப்படி உறவு பாராட்ட வேண்டும் என்பதை தோழர் கே.வியின் வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

தோழர் கே.வி. பன்முகத் திறமை கொண்டவராக திகழ்ந்தார். கட்சி உருவாக்கிய இசைப் பேழைகளை தயா ரிக்கும் பொறுப்பை ஏற்றதோடு அவரும் பாடல்கள் எழுதி கொடுத்துள்ளார்.

நினைவுகூரப்படும் பணி

Revealing media for hashtag #aiks , showing saved images & videos ...

ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து, அரசுப் பொறியா ளராக வேலைகிடைத்தும் அதை உதறித் தள்ளிவிட்டு முழுநேர ஊழியராகப் பொறுப்பேற்று, வட்டச் செயலாள ராக, பிறகு மாவட்டச் செயலாளராக, பிறகு மாநிலச் செயற்குழு  உறுப்பினராக, அடுத்தது விவசாய சங்கத்தின் அகில இந்தியப் பொதுச் செயலாளராக, கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக படிப்படியாக உயர்ந்து பணியாற்றியவர் தோழர் கே.வி.

கே.வியினுடைய வாழ்க்கையும் அவருடைய பணியும் இன்றைய தலைமுறைக்கு பாடமாக அமையும். தோழர் கே.வியினுடைய இறுதிநிகழ்ச்சியில் தோழர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, பி.சண்முகம் ஆகியோ ருடன் நானும் சென்று அஞ்சலி செலுத்தினோம். கட்சியின் மாவட்டத் தலைவர்களும், தோழர்களும் கலந்து கொண்டார்கள்.

தோழர் கே.வியோடு வேலை செய்த, அவரோடு போராட்டத்தில் கலந்துகொண்டு, அவரை நேசித்த மாநிலம் முழுவதும் உள்ள கட்சித் தோழர்கள், ஆதரவாளர்கள் தோழர் கே.வியின் இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாத சூழ்நிலை. கொரோனா நோய்த்தொற்று மற்றும் ஊரடங்கால் தோழர்கள் பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டது. இந்த சூழல் எங்கள் மனதை உறுத்திக் கொண்டே இருக்கிறது. ஆயினும் மாநிலம் முழுவதும் அவருடைய உருவப்படத்தை வைத்து தோழர்கள் அஞ்சலி செலுத்தி னர். மாவட்டங்களில் படத்திறப்பு நிகழ்ச்சியும் நடந்தன.

கிராமப்புற உழைக்கும் மக்களை திரட்டுவதிலும், தமிழகத்திலும், அகில இந்திய அளவிலும் பாட்டாளி மக்களை திரட்டுவதிலும் அவர் ஆற்றிய பணி என்றென்றும் நினைவுகூரப்படும். இந்த இக்கட்டான நேரத்தில் உழைக்கும் மக்களை திரட்டி போராட்டக்களத்தில் நிறுத்துவதே அவருக்கு சரியான அஞ்சலியாக அமையும்.

G.RAMAKRISHNAN | Cpim tamil nadu state secretary g.Ramakrish ...

கட்டுரையாளர் : அரசியல் தலைமைக்குழு
உறுப்பினர், சிபிஐ(எம்)

நன்றி தீக்கதிர் 

Leave a Response

Top Reviews

Video Widget

gallery