Web Series

வகுப்பறைகள்: மாத்தியோசி – 2 | விஸ்நாதன் ஆனந்த் –தின் வகுப்பறை | ஆயிஷா.இரா. நடராசன்

 

2004 ம் வருடம் லண்டனில் நடந்த ஒரு வர்த்தகர் தலைமை பயிற்சியின்போது அமெரிக்க பிசினஸ் குரு (இன்று அப்படி சொல்வதுதான் பாஷன்) டாம் பீட்டர்ஸ் இங்கிலாந்தின் டாப் வர்த்தக குழும தலைவர்களிடம் மூன்று கருத்துக்களை முன்வைத்தார். மூன்றுமே ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை.

  1. பள்ளியில் முதல் மதிப்பெண் அல்லது உயர் கிரேடு வாங்கிய யாரையும் வேலைக்கு வைக்காதீர்கள்.
  2. பள்ளிக்கூடத்தில் உயர்  மதிப்பெண் பெற ஒருவர் விதிகளின்படி நடந்திருக்கவேண்டும்… பிசினஸ் என்பது விதிகளை மீறுவது குறித்தது அல்லது அதை புதிதாக உருவாக்குவது சம்பந்தப்பட்டது.
  3. பள்ளி கல்லூரி வரை கோல்டு மெடல் வாங்கிய ஒரு ஆள் உங்கள் கம்பெனியில் இருந்தால் அவரை சாதாரண டைப்பிஸ்ட் அந்தஸ்த்தில் வைக்கவும். இன்று இந்த கார்பரேட் முதல் ஐ.ஏ.எஸ் வரை இந்த முதல் ரேங்க் வகையறாவின் நிஜமான நிலை இதுதான்.

நமக்கு பள்ளிக்கல்வி பற்றி சொல்லப்படுவதிலேயே  பெரியப் பொய் முதல்-ரேங்க வாங்கினால் பெரிய வேலைக் கிடைக்கும் என்பது. ஒரு வகுப்பறையின் முதல் பெஞ்ச் மாணவர்களை கடந்து நேசம் கொள்ள முடியாத ஆசிரியர்கள் எத்தனைப்பேர். பெடகாக் (Pedagogue) என்றால் இன்று உள்ள  அர்த்தத்தில் கல்விமுறை என்பது பொருள் ஆனால் இந்தச் சொல் எங்கிருந்து வந்தது எனத் தேடினால் ரோமாபுரியில் ஒரு காலத்தில் குழந்தைகளை பத்திரமாக ஒரு இடத்திலிருந்து  பள்ளிக்கு அழைத்து செல்ல உடன் செல்லும் அடிமைகள் பெடகாக்(Pedagogues) என அழைக்கப்பட்டனர். அடிமை தனத்திற்கும் பள்ளிக்குமான தொடர்பு இந்தச் சொல் இவ்வளவு ஏன்? டீச் (Teach) எனும் பாடம் நடத்துதல் என்பதை குறிக்கும் சொல். கிரேக்கத்தில் இருந்துவந்தது. டீச் என்பது கி.பி 1300கள் வரை அரசில் ஒரு சலுகை பெறும் டோக்கன் வில்லைகளை குறித்தது. பண்டைய கிரேக்கத்தில் ஆட்காட்டி விரலுக்கு டீச்சர் என்று பெயர். டீச்சர் என்போர் அரசு சலுகைபெற்று பண்டைய பல்கலை கழகத்தில் கல்வி கற்ற எல்லாரையும் குறிப்பதாகவும் இருந்தது.

இன்று பள்ளிக்கல்வி என்பது ஒருவரது வாழ்க்கையில் 14 வருடங்களை முழுமையாக முழுங்கி விடும் ,ஒன்றாக இருக்கிறது. சராசரி வாழ்நாளில் கால்பங்கு இது. அதன் கெடுபிடிகள் ஆபத்தானவையாக உள்ளன. அதன் அன்றாட செயல்முறை – டீயூஷன், வீட்டுப்பாடம், அது இது என்று குழந்தைகளை எப்போதும் ‘கட்டிப்போடும்’ தன்மை மிக்கது. வீதிகளில் மரங்களில் தோட்டம் தோப்புகளில் குழந்தைகள் மாலையில் கூட விளையாடாததற்கு இந்த டீயூஷன்  கலாச்சாரமே முக்கிய காரணம். இன்று கரோனா விடுமுறை நம்மை தாயகட்டத்திற்காவது திரும்ப வைத்துள்ளது. 

இந்த சூழல்களில் இருந்து தப்பி பள்ளி எனும் பெரு-சிறைசாலையை உடைத்து ஒரு உலக சாம்பியன் உருவாவது என்பது ரொம்ப அபூர்வம். அப்படியான நட்சத்திரங்களில் ஒன்றுதான் விஸ்வநாதன் ஆனந்த் எனும் சதுரங்க சாம்பியன்.

Vishwanathan Anand: The Tiger of Madras - Woochess-Let's chess

இந்திய அறிவு ஜீவிதத்தின் மொத்த அடையாளத்தை உலகநாடுகள் அறியவைத்த மந்திர பெயர் விஸ்வநாதன்ஆனந்த். அதாவது விஷி. 2000மாம் ஆண்டுமுதல் 2013 வரை தொடர்ந்து உலக செஸ்சாம்பியனாக இருந்து உலகசாதனை படைத்த டைகர் ஆஃப் மெட்ராஸ். அவர் செஸ் விளையாடி வெற்றிபெறாத ஒரு கம்ப்யூட்டர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. 

1988.திரில்லாக பிளஸ்டூ தேர்வு முடிவுக்காக காத்திருந்தது ஆனந்த் குடும்பம். சென்னை டான்போஸ்கோதான் அவர் படித்த பள்ளி. பள்ளி முதல்வரான பாரதியார். தொலைபேசியில் அழைத்து கொஞ்சம் நடுக்கத்தோடு முடிவுக்கு முதல்நாள் எப்படி ஆனந்த் தேர்வுகளை எழுதினார். என கவலையோடு விசாரித்தார். அதே நாளில் மாலையில் மத்திய அரசு பன்னிரெண்டாம் வகுப்பு மாணவரான ‘கிராண்ட்மாஸ்டர்’ ஆனந்திற்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கிறது. என்ன ஒரு முரண்! தன்னிச்சையாக இத்தனை உயரத்துக்கு அவரை எடுத்துச் சென்ற வகுப்பறை எது? அதன் பிரதான அம்சங்கள் என்ன?

1969ல் நம் மயிலாடுதுறையில் பிறந்த ஆனந்தின் தந்தை கிருஷ்ணமூர்த்தி தெற்கு ரயில்வேயில் பொதுமேலாளராக வேலை பார்த்தார். அம்மா சுசீலா இல்லத்தரசி. ஆனந்திற்கு ஒரு அண்ணன் (சிவக்குமார்) ஒருஅக்கா (அனுராதா) உண்டு.மன்மோகன் சிங்பிரதமராக இருந்தபோது  2010ல் இந்தியா வந்த அமெரிக்க அதிபர் பெராக்ஒபாமாவின் விருந்தில் கலந்துகொண்ட இந்தியாவின் ஒரே விளையாட்டு வீரர் ஆனந்த்தான். காரணம் ஆனந்தோடு ஒருமுறையாவது செஸ்விளையாட அதிபர் ஒபாமா தன் அவாவை தெரிவித்து இருந்தார். இப்படி யாவரையும் தன்வசப்படுத்திய நம் ஆனந்தின் முதல் வகுப்பறையை நாம் 1975ல் மணிலா (பிலிப்பைன்ஸ்)வில்சந்திக்கிறோம்.

ஆனந்தின் தந்தை கொஞ்சகாலம் டெபுடேஷனில் பிலிப்பைன்ஸ் ரயில்வேயில் ஒருவகை பயிற்சிதருவதற்கு வல்லுநராக அங்கே மாற்றப்பட்டிருந்தார். எனவே அம்மாவோடு ஆனந்த் அங்கே சென்று தங்க வேண்டியதாயிற்று.

முதல் வகுப்பறை வீடு. அம்மாதான் சகமாணவி. இருவருமே ஆன்ந்துக்கு நான்கு வயதாக ஆனதிலிருந்தே செஸ் விளையாடுவதை ஒரு பொழுதுபோக்காக்கி கொண்டார்கள். மூத்த குழந்தைகளும் சுசீலா அம்மையாரோடு செஸ் விளையாடினாலும் ஆனந்த் படுவேகம். ஒரு ஆட்டத்தை ஆறு ஏழுநிமிடங்களில் கூட முடித்துவிடுவார். அந்தகால கட்டத்தில் மணிலாவில் ஒரு மழலைப்பள்ளியில் சேர்ந்து ஆனந்த் படித்தார். அறைநாள் தான்பள்ளி. வீடு வந்ததுமே அவர் வானொலியை போட்டுவிடுவார். அதில் தினமும் மதியம் ‘1 மணிபுதிர்கள்’ என்ற நிகழ்ச்சி வரும். எப்பேர்பட்ட புதிராக இருந்தாலும் ஆனந்த் நிமிடத்தில் விடையை அடைவார்.  தொலைபேசி வழியே விடைகளை சொல்லி பரிசு பெறவும் தொடங்கினார்.

Viswanathan Anand on Twitter: "Actually I got my first invite in ...

நேரிலேயே மணிலாவில் புதிர் நிகழ்ச்சியை அவர்கள்நடத்தினார்கள். சுசீலா தன்மகன் ஆனந்தை அழைத்துசென்றார். கேட்கப்பட்ட ஒவ்வொரு புதிருக்கும் ஆனந்தே உடனுக்குடன் பதில் கொடுக்க நிகழ்ச்சி நடத்தியவர்கள் பரிசுபொருள் கபோர்டைகாட்டி (புத்தகங்கள்) எத்தனை வேண்டுமோ எடுத்துக்கொள்ளுமாறும் ஆனால் இனிவரும் புதிர்களுக்கு விடை தெரிந்தாலும் வாய்திறக்கக்கூடாது எனவும் கெஞ்சினர்!  இது ஒருபுரம். தன் தாயை விரைவில் ஆனந்த் அந்த ஆறுவயதில் ஒவ்வொரு முறை ஆடியபோதும் வெல்லத் தொடங்கினார். இது எப்படி சாத்தியம் எனவியந்த அந்த தாய் மகன் ஆனந்த் உறங்கும்போது எதேச்சையாக அவரது ரஃப்நோட்டை புரட்டியபோது மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது…… ஒவ்வொரு செஸ்ஆட்டத்திலும் தன்அம்மாவின் மூவ் (காய்நகர்த்தல்கள்) தனது மூவ் என மிகதெளிவாக அவ்வப்போது ‘நோட்ஸ்’ (குறிப்பு) எடுத்திருந்தார். அந்த ஆறுவயது மேதை. புதிர்களும் அப்படியே. தன் வென்றதைவிட தான் தோற்ற ஆட்டங்கள் பற்றிய குறிப்புகள் இரண்டு மூன்றுபக்கம் கூடநீண்டிருந்தது. குட்டிநோட்டு ஒன்றை தன்பாக்கெட்டிலேயே அவர் எப்போதும் வைத்திருப்பார்.

சென்னை திரும்பி டான்போஸ்கோ மாணவரானபின் ஆனந்த் தோற்கடிக்காத சென்னை செஸ்வீரர் இல்லை என்றாகி ஒவ்வொரு எதிராளியையும் வீழ்த்திட ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது கம்ப்யூட்டருக்கு எதிராக ஆடியும் அவர் ஜெயிக்க முடிந்தது. ‘கம்ப்யூட்டரால் நோட்ஸ்’ எடுத்து தன் ஆட்டத்தை மறுபரிசீலனை செய்யமுடியாது. என்னால் முடியுமே என்று தன் சமீபத்திய புத்தகமான ‘மையிண்டு மாஸ்டர்’ நூலில் அவர்குறிப்பிடுகிறார். ஆனந்தின் வெற்றி வகுப்பறை ‘நோட்மேக்கிங்’ வகுப்பறை ஆகும். 

டான்போஸ்கோ பள்ளியில் படித்தகாலத்தில் ஊர்உலகமெல்லாம் சுற்றி தன் செஸ் சாதனைகளை அவர் புரிந்துவந்ததால் பாடவகுப்புகள் பாதிக்கப்படுமோ என்பது அவரது தந்தையின் கவலையாக இருந்தது.  15 வயதில் சர்வதேச கிராண்டு மாஸ்டர் பட்டம் பெற்ற ஆண்டில் அவரது ஆசிரியராக இருந்த மைக்கெல்சுந்தர் பின்நாட்களில் ஒரு முக்கிய விஷயத்தை நினைவு கூர்ந்தார். ஆனந்த் பள்ளிக்கு வந்தாலும் சரிவராவிட்டாலும் சரி எப்படியோ பாடங்கள் குறித்த சுயமாக எழுதிய ‘குறிப்புகளை’ வைத்திருந்தார். இந்த குறிப்புகளை பலவிதமாக அவர் எழுதியிருப்பார். தன் குறிப்புகளை மட்டுமே கற்றறிந்து வெற்றிகரமாக தேர்வுகள் யாவற்றையும் எதிர்கொள்வார்.

கேரிகாஸ்பரோவ், விளாடிமிர் கிராம்னிக் உட்பட உலக செஸ் ஜாம்பவான்கள் யாவரையும் விட அதிவேகசூரர் என்று பெயர் பெற்றவர் ஆனந்த். எல்லாரும் போட்டி இல்லாத நேரத்தில் கணினிபயிற்சி எடுத்தபோது ஆனந்த்தான் உடனடியாக எடுத்த ‘நோட்ஸ்’ களில் மூழ்கிவிடுவார். அதிவேக சதுரங்கபோட்டி (World Rapid Chess Championship) குறிப்பாக 2003ம் வருட போட்டியை மறப்பது கடினம். ஆனந்த் தொடராக எட்டுவெற்றி 12 முறை ட்ரா செய்த போட்டி. அந்தப் போட்டியில் ஆனந்த் எடுத்த ‘நோட்ஸ் தமிழ், ஸ்பானிஷ், ஜெர்மன் ஆகியமொழிகளில் இருந்தது. சிறுவயதிலே மணிலாவில் ஸ்பானிஷ் மற்றும் ஜெர்மன் மொழிகளை கற்றவர் அவர்.

‘நோட்-மேக்கிங்’ வகுப்பறைகளை அறிமுகம் செய்தவர் ஜான்லோக் (John Locke)  எனும் ஆங்கிலேய கல்வியியல் தத்துவ அறிஞர். இவர் ஒரு மருத்துவஅறிஞர். தன் நோயாளிகளின் உடல்நிலை குறித்த குறிப்பேடுகளை தனித்தனியே பேணி உலகில் ‘குறிப்பேடு’ முறையை 1701ல் அறிமுகம்செய்தார். யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எடுத்து படிக்கும்படி அவை இருந்ததால் பொதுவிடநூல்கள் (Common Place- Books)  என அவற்றை அவர் அழைத்தார். பின்னாட்களில் புரிதல் கோட்பாட்டை முன்வைத்த அறிவாற்றல் உளவியல் வாதிகள் ‘குறிப்பேடு’ முறையை வகுப்பறைகளில் அங்கமாக்கினார்கள். 

How to be a global chess champion: Viswanathan Anand reflects on a ...

கார்னல் பல்கலைகழக பேராசிரியர் டாக்டர் வால்டர் பாக் (Dr. Walter Park) 1974ல் உலக வரலாற்றில் நோட்மேக்கிங்-குறிப்பெடுத்தலின் வகைகள் யாவற்றையும் தொகுத்தார். கல்வியியலில் தனது சொந்த புரிதலை மேம்படுத்திட ஒருவர் எடுத்திடும் சுய குறிப்புகள் எப்படி அமையும் என்பது 10,000 பேரிடம் ஆய்வுசெய்து எழுதும் ஒரு பக்கத்தை குறிப்பெடுப்போர் பொதுவாக மூன்றாக பிரிப்பதாக வால்டர் பாக்கின் கொள்கை விவரிக்கிறது.

  1. நூலகத்தில் புத்தகங்களை தீவிர வாசிப்பிற்கு உட்படுத்தி குறிப்பெடுப்பவர்கள் ஒரு பக்கத்தின் வலது மார்ஜினில்  தன் குறிப்புகளின் சுருக்கங்களை எழுதுகிறார்கள்.
  2. இடது மார்ஜினில் பொதுவாக சிமிக்கை – சொற்கள், பிரதான கேள்விகள், தேடல்குறிப்பான்கள், ஆகியனவற்றை பதியவும் பக்க எண்- வரி எண் என்றெழுதிடவும் பயன்படுத்துகிறார்கள். ஒரு ஆய்வுரை அல்லது விளையாட்டை குறிப்பாக பதியும் ஒருவர் இடது மார்ஜினை ஸ்கோர் அல்லது கரும்பலகை குறிப்பு என பதிவிடுகிறார்.
  3. ஒரு பக்கத்தின் கீழ்பகுதியில் அந்த பக்கத்தில் இடம் பெற்றுள்ள குறிப்பாணைகளின் சுருக்கத்தை (Summary) எழுதி வைக்கிறார்கள்.

ஜப்பான் நாட்டின் நிறுவன – கோட்பாட்டாளரான கவாரு இஷிக்காவா (Kaoru Ishikawa) 1960 களில் இஷிக்காவா குறிப்பெடுப்பு வரைபட மாதிரி என்கிற ஒன்றை நோட்மேக்கிங் வகுப்பறை தரவுகளில் இணைத்தார். இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிந்திய ஜப்பானில் கல்வித் தர மேம்பாட்டில் உதவ அந்நாட்டு போரிடும் புத்த பிட்சுவான பென்கை என்பாரின் ஏழு ஆயுதங்களை நினைவுபடுத்தும் ஏழு குறிப்பெடுப்பு படிநிலை வரைபட வியலை இஷிக்காவா வெளியிட்டார். அவற்றில் ஒன்று நடத்தை கட்டுப்பாட்டு குறிப்பெடுத்தல் முறை. இதற்கு இன்னொறு பெயர் ஷெவார்ட் குறிப்பெடுப்பு வரைபடம். அமெரிக்க இயற்பியலாளர் வால்டர் ஷெவார்ட் வழங்கிய நான்கு படிநிலைகள் அதில் உள்ளன.

அவை ஷெவார்ட் சைக்கிள் என்றும் அழைக்கப்படும்.

  1. குறிப்பெடுக்கும் முறையை திட்டமிடு‘
  2. துல்லியமாக குறிப்பெடு
  3. குறிப்புகளை அலசு
  4. அவற்றின் படி செயல்படு

மைன்டு-மாஸ்டர் நூலில் ஆனந்த் சொல்வதை வைத்து பார்த்தால் மேற்கண்டபடி நிலைகளை கச்சிதமாக பயன்படுத்தியவர் அவர். அது மட்டுமல்ல.

ஆனந்த் பயன்படுத்தும் ‘நோட்மேக்கிங்’ முறைக்கு SQ3R முறை என்று பெயர். மொத்தம் ஐந்து படிநிலைகள் உண்டு முதலில் நடப்பதை முழுமையாக கணக்கிலெடுக்கவேண்டும். (Survey)  பிறகு நமக்கு தோன்றும் கேள்விகளை (Question) அடுக்கவேண்டும் . அடுத்தது வாசித்து அறிதல் (Read) மூளைக்குள் பரிசீலித்து மறுஉருவாக்கம் செய்தல்(Recite) பிறகு இறுதியாக அனைத்தையும் விமர்சித்தறியும்படி (Review) பகுப்பாய வேண்டும் இந்த படிநிலைகளில் ஆனந்த் ஒப்பிடுதல் (Relating) எனும் புதிய படிநிலையை தனது செஸ்விளையாட்டு உத்திக்காக இணைத்தார். இதனால் SQ4R  எனும் முறையாக அதை நாம் அறியமுடியும். 

2007ம்ஆண்டு மெக்ஸிகோவில் நடந்த உலக செஸ்சாம்பியன்ஷிப் போட்டிகளின்போது இறுதிகட்ட முடிவில் மேட்ச் பாயிண்ட் மற்றும் ஆட்ட ஒட்டுமொத்த வெற்றியாளர் என இரண்டையும் தட்டிச்சென்ற ஒரே வரலாற்று நாயகனாகியபோது நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ‘என் இதயமும் என்கைகளும் ஒரேமாதிரி செயல்பட்டன. எனகூறினார். இது குறித்து தன்புத்தகத்தில் குறிப்பிடும் ஆனந்ததன் ‘நோட்ஸ்’கள் வழியே தனக்குத்தானே செய்துகொண்ட சுயவிமர்சன பகுப்பாய்வு (Self Critical Analysis) தனதுகற்றலுக்குஅடிக்கோடுஇட்டதாகஎழுதுகிறார். 

‘இங்கே கவனி அங்கே என்ன கிறுக்கிகிட்டு இருக்கே’ என்று தன் மாணவர்களை ஆசிரியர்கள் மிரட்டாத வகுப்பறைகளில் மட்டுமே ‘நோட்மேக்கிங்’ சாத்தியமாகிறது. சுயமாக எதுவுமே எழுதக்கூடாதுதான் கொடுத்த கேள்விபதிலை அப்படியே தேர்வில் எழுதினால் மட்டுமே மதிப்பெண் என்கிற வகைவகுப்புகளால் எந்தபயனும் இல்லை. தனது அறிவைதானே சேகரித்து சொந்தகுறிப்புகளாக்கி அதை மறுபரிசீலனை செய்து சுயஅறிவாக அதை மாற்றும் உண்மையான ‘நோட்மேக்கிங்’ வகுப்பறைகளை நாம் சாதிப்பது எப்போது…. இன்று 102 நாடுகளில்செஸ் – வகுப்பறையின் ஒரு பகுதி… சதுரங்கத்தை உலகிற்கே வழங்கிய நம் இந்திய வகுப்பறைக்குள் அதனால் நுழைய முடியவில்லை.

•••••••••••••

தொடர் 1ஐ வாசிக்க: 

வகுப்பறைகள்: மாத்தியோசி – 1 |சுந்தர்பிச்சையின் வகுப்பறை| ஆயிஷா .இரா. நடராசன்

1 Comment

Leave a Response