Web Series

சென்னையும், நானும் – 1 | வி. மீனாட்சி சுந்தரம்

Spread the love

சொர்க்கமேயானாலும் நம்மூர் போல் வருமா!

நான் சென்னையின் ஆன்ம அழகைப்பற்றி எழுதுமுன் சென்னை வாசியாவதற்கு  முன்னர்  நான் வாழ்ந்த ஊர்களின் தோற்ற அழகினை சொல்ல வேண்டும். அதென்ன? ஆன்ம அழகு, தோற்ற அழகு என  நீங்கள் வினவலாம்! சென்னையின் ஆன்மாவாக இருக்கிற மக்களில் ஒருசிலரைத் தவிர மற்றவர்கள் மிகமிக நல்லவர்கள், அழகிய மனதுடையவர்கள். சுயநலனை தேடாமல் வாழமுடியாது என்ற அசமத்துவ சந்தைமுறை சூழல் நிலவி வரும் காலகட்டத்திலும், யார் பாதித்தாலும் அவர்களது மன வேதனையைப் பகிரத் தயங்காதவர்களாகவும், பிறரோடு  ஒத்துழைப்பதில் மகிழ்ச்சியைத் தேடுபவர்களாகவும் இருப்பதை காணமுடியும். சென்னைவாசிகளை சென்னையின் ஆன்மாவாக நான் உருவகப்படுத்துகிறேன். சூழலையும் கட்டமைப்பையும் பருவ நிலை என்ற சொல்லால் குறிப்பிடுகிறேன்

சென்னை நகரின் பருவ நிலைக்கேடுகள் சூழத் தொடங்கிய காலத்தில்தான்  நான் இங்கு வாழ்ந்திட வந்தேன். இன்று சென்னை நோய்களை வணங்கும் கோவிலாகி கிடப்பதைக் காண்கிறோம்,  மேலும் நாறுகிற ஆறுகள், கால்வாய்கள், பாழடைந்த சாக்கடைக் குழாய்கள், காற்றின் தரத்தை கெடுக்கும் கார்பன் மோனாக்சைடு, நைட்டரஸ் ஆக்சைடு, சல்பர்டை ஆக்சைடு மற்றும் ரசாயன நுண்துகள்கள் கலந்த காற்றுமண்டலம். கொரானகாலத்து சாவுகளுக்கு காற்றின் தரமும் பங்களிக்கிறது என்றால் ஆண்டவர்களும் ஆளுவோரும் ஏற்கவே மாட்டார்கள்

வேளச்சேரி ஜங்ஷன் அருகே அடுக்குமாடி குடியிருப்பிலே வாழ்கிற ஒருவர் இரவு 8மணிவரை நன்றாக் பேசிக் கொண்டிருந்து தூங்கப் போனார்.  காலையில் உடல் மட்டுமே இருந்தது என்றால் அவ்வட்டார காற்று மண்டலத்திற்கும் பங்குண்டு என்பதை உறுதியாக கூறலாம். அதிலும்  இரவு எட்டுமணிக்கு மேல் பல இடங்களில் குறிப்பாக நகரங்களின் முக்கியபகுதியில் மூச்சுத் திணறலை உருவாக்கும் காற்று மண்டலமாவதை அறிய முடியும்

24 மணிநேரமும் காற்று மண்டலத்தை கண்காணிக்கும் சென்னை மாசுகட்டுப்பாட்டுவாரியம் ஏர்குவாலிட்டி இன்டெக்சின் அபாய கட்ட குறி எண் 270  தாண்டிய வட்டாரத்தை வரைபடத்தில் மஞ்சள்கொடி போட்டு காட்டுவதை காணலாம்.

காற்றில் ஆக்சிஜன் அளவு குறைந்தால் மூச்சுத் திணறலை உருவாக்கும் ஆபத்து இருப்பதாக மஞ்சள்கொடி ஏற்றி எச்சரிக்கும் மாசுகட்டுப்பாட்டுவாரியத்திற்கு, மாசைக் கட்டுப்படுத்த அதிகாரம் இல்லை என்றாலும் எச்சரிக்கும் பெருந்தன்மை உண்டு. மத்திய அரசும் சென்னை காற்றின் தரத்தை அளக்கிறது ஏன்?  அமெரிக்க தூதரகமும் அது அமைந்திருக்கும் கோபாலபுர வட்டாரத்தின் காற்றுமண்டலத்தின் தரத்தை24 மணிநேரமும் கண்காணித்து குவாலிட்டி இன்டெக்சை வெளியிடுகிறது. இவைகளில் வாகனங்கள் வெளித்தள்ளும் மணமற்ற நைட்டரஸ் ஆக்சைடு (laughing gas)  பற்றிய எச்சரிக்கை மிக முக்கியமானது. இது கலந்த காற்றை தினசரி சுவாசிப்பதால் மெதுவாக நரம்பு மண்டலம் செயலிழப்பதோடு  காலப்போக்கில் உடல் நடுக்கமும் ஞாபகமிழப்பும் ஏற்படுகிறது.

அதிசயம் என்னவெனில் சென்னையில் பருவ நிலை இவ்வளவு கேடாக இருப்பினும் நான் வந்த அன்றும் இன்றும் அதன் ஆன்மாவாக இருக்கும் மக்களின் பெருந்தன்மையால் மகிழ்வோடு வாழும்நிலை எனக்கு வாய்த்து விட்டது..மக்களின் மனதைப் போல் சென்னையின் பருவ நிலையையும் அழகாக ஆக்கிட என்னாலானதை செய்ய நான் கடமைப்பட்டவன். நம்மாலானதை செய்ய இணைவோம் என்றும் அழைக்கிறேன்.துவக்கத்தில் குறிப்பிட்டது போல் சென்னையின் ஆன்மாவை அல்லது ஆளுமையை விவரிக்கும் முன் நான் பிறந்து வாழ்ந்து கடந்து வந்த ஊர்களின் பருவ நிலையைப்பற்றி சொல்ல வேண்டும். அதில் 23 வயது வரை பெரும்பாலான ஆண்டுகள் கோவிந்தப்பேரியில் கழித்ததால் அதிலிருந்து தொடங்குகிறேன்.

குற்றாலத்திற்கும் பாபநாசத்திற்கும் இடையிலிருக்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கோவிந்தப்பேரி இருக்கிறது,  அதாவது ஊரின் மேற்கே பச்சைமாமலை. வடக்கிலும் தெற்கிலும் சுக்குநாரிபுல் மட்டுமே விளைகிற குன்றுகள். அதனையொட்டி பனைமரக்காடு ( இன்று தென்னந் தோப்புகள்) ஊரைச்சுற்றி குளங்கள்,வயல்வெளிகள்.  வடக்கே ராம நதி, தெற்கே கருணையாறு, இடையிலே கல்லாறு, இவைகளை ஆறுகள் என்பதைக் காட்டிலும்  ஓடைகள் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் கோடை காலத்திலோ மழை பொய்த்தாலோ ஆறுகள் வறண்டுவிடும். ஆனால் ஊற்றுப் பெருக்கு நீர்ப்பஞ்சத்தை தவிற்கும்.

இளைய ராஜாவின் பாடல்வரி சொர்க்கமேயானாலும் நம்மூர் போல் வருமா என்ற வாசகம் நூற்றுக்கு நூறு கோவிந்தப்பேரியின் பருவ நிலைக்கு பொருந்தும். ஆனால் அதன் ஆன்மா ஆதிக்க சக்திகளால் திணறியது.  அதே வேளையில் எங்க ஊருக்கு தனிச் சிறப்புமுண்டு.

2 Comments

Leave a Response

Top Reviews

Video Widget

gallery