Article

புகழ்பெற்றவர்கள் (CELEBRITIES) – நிகழ் அய்க்கண்

 

சந்தை உலகில்,ஒரு தேசத்தின் பிரமாண்டமான அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களை நிர்மாணிப்பது என்பது வளர்ச்சிக்கு மிக அவசியம் என்றும், வறுமையை ஒழிக்க அதுவே தீர்வு என்றும் கூறி நாட்டை கடனாளியாக்குவது ஒரு பொருளாதார அடியாளின் வேலை என்றால், கார்ப்பரேட் நிறுவனங்களின் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துமாறு கோரி, மக்களைக் கடனாளியாக்குவது புகழ்பெற்றவர்களின் வேலையாக இருக்கிறது .

நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே, விளம்பரதாரர், சந்தையாளர், மற்றும் ஊடகங்களால் லாபம் கருதி வளர்த்தெடுக்கப்படுபவர்கள்தான் புகழ்பெற்றவர்கள். இவர்கள் பெரும்பாலும்  சினிமா உள்ளிட்ட ஊடகங்கள் -ஆன்மீகம் – விளையாட்டு -கார்ப்பரேட் நிறுவனங்கள்  இவற்றிலிருந்தே அதிகம்பேர் உருவாகின்றனர். 

Who Are Top 10 Most Followed Indian Celebrities On Twitter? Find Out - ODISHA BYTES

ஒவ்வொரு கார்ப்பரேட் நிறுவனங்களும்,தங்களுடைய விளம்பரங்களை வேதங்களெனக்கருதி மக்களாகிய  நுகர்வோர்,அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது மட்டுமின்றி, தன்னுணர்வின்றி பொருட்களை வாங்கவேண்டும் என எதிர்பார்த்து  புகழ்பெற்றவர்களையும் துணைக்கு அழைத்துக்கொள்கிறது. 

1990 களுக்கு முன்பான காலத்தில், புகழ் பெற்றவர்கள் பெரும்பாலும் ஜனநாயகத்தின் மாண்புகளை உயர்த்திப்பிடிப்பவர்களாக இருந்தனர். அதன் பிறகான நவதாராளமய காலத்தில், இவர்கள் பெரும்பாலும் ஜனநாயகத்திற்கு எதிராக வன்முறையை, அடையாள அடையாள அரசியலை முன்மொழிபவர்களாகியுள்ளனர். 

சந்தை உலகில், ஒரு விற்பனைக்குரிய பண்டத்தினை  மக்களிடையே எளிதில் கொண்டுசெல்ல  கார்ப்பரேட்டுகளுக்கு புகழ்பெற்றவர்கள்  மிகத்தேவையாய் இருக்கிறார்கள். இவர்கள் , விளம்பரங்களின் வழியாக,  கார்ப்பரேட் நிறுவனங்களின் பொருட்களை சந்தையில்  பிரபலப்படுத்துகின்றனர். இதன் காரணமாக, நிறுவனங்களின் லாபம் அதிகரிக்க துணை நிற்பவராகின்றனர். இப்படியாக விற்பனைக்குரிய பொருட்களை  சந்தையில் தொடர்ந்து, விளம்பரப்படுத்தும் போது, தாங்களும் சேர்ந்து மக்களிடையே பிரபலமாகி விடுவதுமுண்டு . இப்போதெல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுக்கென்று புகழ்பெற்றவர்களை விளம்பரத் தூதராகவும் நியமித்துக்கொள்வது என்பது வழக்கமாகி வருவது குறிப்பிடத்தக்கது..

கார்ப்பரேட் நிறுவனங்கள் யாவும், நுகர்வினை மக்களிடையே ஊக்குவிக்கும் பொருட்டு, ஒவ்வொரு தனிநபரின் விருப்பத்திற்கும் முக்கியத்துவம் தருவதாகக் கூறிக்கொள்கிறது. ஆனால், யதார்த்தத்தில்,அது எதுவரையில் என்றால், நுகர்வோரானவர் தனது நிறுவனப் பொருட்களையோ, அல்லது பிற நிறுவனப்பொருட்களையோ வாங்கும் சமயம் மட்டுமே. அதன் பிறகான நேரங்களில் அந்தத்தனிநபர், பொருட்படுத்தத்தக்கவர் அல்லர் எனக்கருதி கைவிட்டுவிடுகிறது.

ஒவ்வொரு ரசிகரின் – பார்வையாளரின் – நுகர்வோரின் வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட புகழ்பெற்றவர்கள், உண்மையில், உங்களது உற்ற நண்பரோ, உறவினரோ அல்ல. மாறாக, உங்களை சமூக மனிதனிலிருந்து தனி மனிதனாக்கி,  அத் தனிமனிதர்களை அதீத நுகர்வுக்குள் இழுத்துச்செல்பவர்களாக இருப்பதுதான் இவர்களது வேலை. அதாவது, நுகர்வினை மக்களிடையே திணித்து, அரசியலற்ற அரசியல் தளத்திற்குள் இழுத்துச்செல்வதே’ இவர்களின் இலக்கு !

40+ Most Popular & Trending Celebrities of 2020

”மக்களின் கவனத்தை சிதறச் செய்வதற்கும், மக்களிடையே திரித்துக்கூறுவதற்கும், மக்கள் தடம் பிறழ்வதற்கும்” புகழ்பெற்றவர்களே பெரும் காரணமாகயிருக்கிறார்கள் . இக்கூற்றானது இன்றைய சூழலோடு, எந்த அளவுக்கு பொருந்திப்போகிறது என்று பார்த்தால், ஒருபக்கம் , நாட்டில் அதிகரித்துவரும் கொரோனாத்தொற்று அதன் விளைவால் ஏற்படும் மரணங்கள்,பொருளாதார ஏற்றத்தாழ்வு, மற்றும் வேலைவாய்ப்பின்மையினால் மக்கள் கடும் அவதியுறுகின்றனர். மறுபக்கம், ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி, நடிகை கங்கனா ராவத், நடிகர் சுஷானந்த் தற்கொலை மரணம் என ஊடகங்கள் உச்சத்திற்கு பரபரப்பாக்கிக்கொண்டிருக்கின்றன, இதுபோன்ற பரபரப்பிற்குப் பின்னால்,ஆட்சியாளர்-ஊடக நிறுவனங்களின் தந்திரம் மிகுந்த கூட்டுச்சதி இல்லாமல் இல்லை.

மேற்கூறிய கூற்றினைச்சற்று வேறு விதமாகக்கூறின், ”ஒரு நாட்டில், பதட்டம் அல்லது குழப்பம் நிறைந்த சூழல் நிலவும்போது, புகழ்பெற்றவர்களினது பிம்பங்கள் திரும்பத்திரும்ப காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பப்படும் போது, மக்களும், அதனால் ஈர்க்கப்பட்டு  அமைதியாகவும், செயலற்றும் இருந்து விடுகின்றனர்”. அதாவது, முக்கியத்துவமற்ற விஷயங்கள் முக்கியமானதாகவும்,முக்கியமான விஷயங்கள் முக்கியத்துவமற்றதாகவும்  ஆட்சியாளர் – ஊடகங்களால் மாற்றப்பட்டு விடுகின்றன.

புகழ்பெற்றவர்கள், நாட்டிலுள்ள வெகுமக்களை பாதிக்கக்கூடிய பொருளாதார ஏற்றத்தாழ்வு – மனித உரிமைமீறல் – சுற்றுச்சுழல் கேடுகள் -வேலைவாய்ப்பின்மை பற்றி பெரும்பாலும் வாய்திறப்பதில்லை. மாறாக, அரசின் நடவடிக்கைகளுக்கு இணங்குபவராக இருப்பது மட்டுமின்றி, மக்களிடம் ஒப்புதல் பெற்றுத்தருபவராகவும் இருக்கிறார்.

Impact of Celebrity Endorsement on Consumer Buying Behavior

புகழ்பெற்றவர்கள் –

 • ரசிகரின் கனவுலகில் வாழ்பவர்கள்.ரசிகர்களுக்கு தூக்கமற்ற இரவுகளை பரிசாக அளிப்பவர்கள். 
 • எந்த அளவுக்கு மக்களை கவர்கிறார்களோ அந்த அளவுக்கு அவர்களிடத்தில் செல்வாக்குடையவர்களாக திகழ்கிறார்கள்.
 • அதிக நுகர்வு – அதிகலாபம் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் வளம்பெற உதவிடுகிற அதே சமயம் ஏழைகள் மேலும் ஏழைகளாவதற்கும் காரணமாகிவிடுகின்றனர்.
 • தூரத்தில் இருக்கும் போது இவர்கள் ரசிகனுடன் நெருக்கமான தோற்றம் கொண்டவராக இருப்பர். அருகில் இருக்கும் போது மங்கலாகத்தெரிவர். 
 • மக்களுக்கு நேர்மையாக இருப்பதைவிட,  உற்பத்தி செய்யப்பட்ட பொருளுக்கு அல்லது கார்ப்பரேட்டுகளுக்கு நியாயமானவராக இருப்பர்.

இதிலிருந்து, புகழ்பெற்றவர்கள் 1. மக்களின் மனதில், உண்மையல்லாததை  உண்மைபோல சித்தரிக்கவும், 2. மக்களிடம், அதிகம்  சுரண்டுபவர்களாகவும் 3. கார்ப்பரேட் நலன் காப்பவர்களாகவும் இருக்கின்றனர் என்பதனை அறிந்துகொள்ள முடியும். 

இன்றைய ஜனநாயகத்திற்குப்பிறகான காலத்தில், வெகுஜன ஊடகங்களானது,

  • கார்ப்பரேட் நிறுவனங்களின் வசமிருப்பதால், அவைகள் யாவும், லாபத்தோடும், பொய்களோடும் நெருங்கிய தொடர்புகொண்டவையாகும். 
  • பொதுவாக, மக்களிடம் அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள்ளும்படி செய்கின்றன.
  • கருத்து நிலை சார்ந்து, மக்களுக்கு போதனையூட்டுகின்ற சாதனங்கள் யாவற்றிலும் வலிமைமிக்க சாதனமாக இருக்கின்றன.
  • மக்களின் நலன்களுக்கும் – புவிக்கோளத்தின் நலன்களுக்கும் எதிராக ஆதிக்கம் மிக்க குறுங்குழுக்களின் அரசியல் முடிவுகளுக்கு சாதகமாக, வெகு மக்களின் ஒப்புதலை உருவாக்கித்தருவனவாக இருக்கின்றன.

இதற்கு முன்னர், மக்களது உரிமை மற்றும் நலன்களுக்கு அரணாக விளங்கிய அனைத்துவகை ஊடகங்களும், சந்தைமய காலத்திற்குப்பிறகு லாபத்தை கணக்கில் கொண்டு புகழ்பெற்றவர்களை அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யும் கூடாரங்களாக மாறியுள்ளன. 

ஊடகங்களில் வெளிப்படும் புகழ்பெற்றவர்களில் சிலரின் எதிர்மறை மிகுந்த அடையாள அரசியல் போக்குகள் பொதுவெளியில் மக்களால் பெரிதும் கொண்டாடப்படுவதாக இருப்பதையும் காண முடிகிறது..

ஒரே நாடு, ஒரே தேர்தல் ! இந்திய ஜனநாயகத்துக்கு சாவுமணி ! | SATHURANGAM

நாட்டை அழிவுப்பாதையிலிருந்து மீட்டெடுக்கும் செயல்திறனுள்ள பாதுகாவலரைவிட, தொழில் ரீதியாக பிறரை மகிழ்விப்பவர்கள் மீது நன்மதிப்பு கொண்டு பின்தொடரும் தேசமிது. 

மக்களுடனான தொடர்புக்கு திரைக்கலாச்சாரமே சக்திவாய்ந்ததாக இருக்கிறது. இதுவே புகழ் பெற்றவர்களுக்கு வாய்ப்பாகிவிட்டது. இவர்கள் அறமிக்க மற்றும் பகுத்தறிவு மிகுந்த சமூகத்திற்கு  மிகவும் ஆபத்தானவர்களாக இருக்கின்றார்கள்.. 

ஒவ்வொரு புகழ்பெற்றவர்களும், சந்தையில் மிகவும் மதிப்பு வாய்ந்த விற்பனைக்குரிய பண்டமாக இருப்பதால், விளம்பரம் -சினிமா – அரசியல்- தேர்தல் ஆகிய யாவற்றிற்குமே எளிதில் பொருந்திவிடுகின்றனர் இதனால், மேற்கூறிய தளங்களில், களம் புகுந்து முத்திரை பதிப்பவர்களாகிவிடுகின்றனர்.

அனைத்துவகை ஊடகங்களிலும் புகழ் பெற்றவர்களைப்பற்றிய பதிவுகள் -உரையாடல்கள் -பிம்பங்கள் இல்லாமல் இருப்பதில்லை. காற்றைப்போல எங்கும் வியாபித்து இருக்கின்றார்கள். புகழ் பெற்றவர்களைப்பற்றிய ஊடகங்களில் பதிவுகள்-உரையாடல்கள்-பிம்பங்கள் ஒரே சமயத்தில், நுகர்வோராகிய மக்களுக்கு ஆழ்ந்த பாதிப்பினையும்,ஊடக நிறுவனங்களுக்கு அதிக லாபத்தையும் பெற்றுத்தருவதாக இருக்கின்றன. இதிலிருந்து, ஊடகங்களுக்கும்-புகழ்பெற்றவர்களுக்கும் இணைபிரியாத பந்தம் ஒன்று இருப்பதை விளங்கிக்கொள்ள முடியும்.  

பொருளாதாரத்தளத்தில் கார்ப்பரேட்டுகளின் விற்பனைக்குரிய பொருளினை விளம்பரங்களின் மூலம் விற்பனை செய்ய புகழ்பெற்றவர்கள் உதவுவதுபோல, புகழ்பெற்றவர்கள் அரசியலில் சேரும்போது, ஒரே சமயத்தில், அக்கட்சி சார்ந்த  தேர்தல் சின்னம் – கட்சி – வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் மூலம் உதவிடுபவராகவும் இருக்கிறார். லாப நோக்கத்துடன் இயங்கும் .ஊடகங்கள் இவற்றிற்குத் தரும் முக்கியத்துவம் புகழ்பெற்றவர்களுக்கு கூடுதல் பலமாகிவிடுகிறது. 

நவதாரளமயமும் – வலதுசாரி அடையாள அரசியலும், தனது கருத்தியலினைவேகம் மற்றும் உடனடி நுகர்வு’ எனும் அடிப்படையில் மக்களிடையே கொண்டு செல்ல ஊடகங்கள் – புகழ்பெற்றவர்கள் மீது நம்பிக்கை கொண்டு, அவ்வாறே பயன்படுத்திக்கொள்ளவும் செய்கின்றனர். தற்கால அரசியலிலும்கூட, இதேபோன்று, வேகம் மற்றும் உடனடி நுகர்வு கருதி தேர்தல் பிரச்சாரத்திற்கென ஊடகங்களையும், கணக்கற்ற புகழ்பெற்றவர்களையும் திரளாக பங்குகொள்ள வைப்பதிலிருந்து இவர்களது  வெற்றிக்கான யுக்திகளை உறுதிசெய்து கொள்ள முடியும்.

உதாரணத்திற்காக, வலதுசாரி அடையாள அரசியலை முன்னெடுக்கும் பி.ஜெ.பி யானது, அடுத்தமாதம் நடக்கப்போகிற பிகார் மாநில சட்டமன்றத்தேர்தல் பிரச்சாரத்தினை, எதிர்கொள்வதற்கென சமூக ஊடக அளவில், 9,500’ ஐ.டிசெல்’ தலைமையின் கீழ் 72,000 ’வாட்ஸ்அப்’ குழுக்களை உருவாக்கியுள்ளதிலிருந்து இவர்களது தேர்தல் கால சூழ்ச்சி பிடிபடலாம். இத்துடன், கடந்த பிப்ரவரி 2020 டெல்லியில் இவர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இஸ்லாமியருக்கெதிரான மதக்கலவரம் மற்றும் 2019 மே மாதம் நடந்த நாடாளுமன்றத்தேர்தலில் வலதுசாரி அடையாள அரசியல் வெற்றிக்கு சமூக ஊடகங்களின் அளவற்ற பங்களிப்பு பற்றிய உரையாடல்கள், தற்போது வெளிச்சத்திற்கு வந்திருப்பதை தொடர்புபடுத்திப் பார்ப்பது அவசியமாகிறது.

WIN TV

இன்றைய நிலையில், இந்தியாவில், ’முகநூலில்’ கிட்டத்தட்ட 33 கோடிப்பேர் இருக்கின்றனர்.’வாட்ஸ் அப்’பில் 40 கோடிப்பேர் இருக்கின்றனர். இதனைவிடுத்து ’ட்விட்டர்’,இ’ன்ஸ்டாகிராம்’ உள்ளிட்ட எண்ணற்ற தகவல் சேவை நிறுவனங்கள் களத்தில் உள்ளன. ஊடகங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, சமூகப்பரப்பில், புகழ் பெற்றவர்களின் கருத்துக்களும், பிம்பங்களும் திரும்பத்திரும்ப பார்வையாளர்களைச்சுற்றி வட்டமிட்டுக்கொண்டே இருக்கின்றன. 

சமூக ஊடகங்களில் தங்களை இணைத்துக்கொள்பவர்கள் பலரும்  ஒரே வகைப்பட்ட  கருத்து , பிம்பம், மாதிரிகளைத்தான்  முதலில் தேடுகின்றனர். இவ்வாறு தேடும் போது  தங்களுக்கு விருப்பங்கொண்ட அடையாளங்கள் யாவும் அவர்களுடன் ஒட்டிக்கொள்கின்றன. இதுவே அடையாள அரசியலுக்கான வித்தாகி விடுகிறது. 

சமூக  ஊடகங்களில் புகழ்பெற்றவர்களுடன் ரசிகர்கள் இணைந்திடும் போது அவர்களுடைய பதிவுகளுக்கு ’லைக்’ செய்கின்றனர்.அவர்களை பின் தொடரவும் செய்கின்றனர். நாளடைவில்  அவர்கள் கூறுவதை கேள்வியின்றி உள்வாங்கிக்கொள்ளவும் பழக்கப்பட்டு விடுகின்றனர்.

ஜனநாயகத்திற்கு பிறகான காலத்தில், ஊடகங்கள் – புகழ்பெற்றவர்கள் – தேர்தல் யாவுமே ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்பு கொண்டது மட்டுமின்றி, இவை மூன்றும் சேர்ந்து நவதாராளமய- வலதுசாரி அடையாள அரசியலுக்கு கம்பளம் விரிப்பதாக இருக்கிறது., இதனால், வாழ்வாதாரத்திற்காக ஏங்கும் எளிய மக்களும், வேலைவாய்ப்பிற்காக ஏங்கும் இளைஞர்களும், சித்திரவதைக்குள்ளாகும் மதச்சிறுபான்மையினர்களும் கடும் துயரத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது.

 ஒவ்வொரு தனிமனிதனும் அனைத்து சமூக மக்களுடன் நல்லெண்ணத்தை வளர்த்துக்கொள்வது நல்லிணக்கத்திற்கு அவசியமாகிறது. அதேபோல, புகழ்பெற்றவர்களும் அனைத்து மக்களின் நல்லெண்ணத்தைப் பெற்றவர்களாக இருக்க வேண்டும் புகழ்பெற்றவர்களுக்கென தனிப்பட்ட கருத்துக்கள் உண்டு என்பதனை மறுப்பதற்கில்லை. ஆனால், இவர்கள் மக்களிடம் செல்வாக்கு செலுத்துபவர்களாகவும் இருப்பதை கவனத்தில் கொள்வது அவசியம். புகழ்பெற்றவர்கள் வலதுசாரி அடையாள அரசியலை முன்னிறுத்தி சமூகத்தை பிளவு படுத்தாமல், பொதுத்தன்மையை வலியுறுத்துபவராக இருப்பது மட்டுமின்றி.` தேச ஒற்றுமைக்கு முன்மாதிரியாகத் திகழவும் வேண்டும்.

Leave a Response