Article

இந்தியா – சீனா எல்லை மோதலுக்கு காரணங்கள் – அண்ணா.நாகரத்தினம்

Spread the love

இந்திய – சீன எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில்  இரு நாட்டுப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் 20 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். சீனத் தரப்பில் 43 இராணுவத்தினர் இறந்திருக்கலாம் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பின்னரும் நிலைமை சீராகவில்லை.  இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.  ஒருபுறம் பேச்சுவார்த்தைக்கு இணங்குவதாக அறிவிப்பதும், மற்றொரு புறம் இராணுவ குவிப்பில் ஈடுபடுவதுமான காட்சிகள் அரங்கேறி வருகின்றன.

இந்திய – சீன எல்லைப் பகுதிகளில் உள்ள சில குறிப்பிட்ட பகுதிகளை இரு நாடுகளும் பரஸ்பரம் உரிமைக் கொண்டாடுவதும், அவற்றைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதுமான நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து வருகின்றன. லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங் பகுதி, பாங்காங் சோ ஏரி ஆகிய பகுதிகள் தற்பொது சர்ச்சைக்குரிய பகுதிகளாக மாறியுள்ளன.

இதில் கால்வான் பள்ளத்தாக்குப் பகுதி, சீன எல்லைக்கு இணையாக இருக்கும் போர்தந்திரம் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சாலையை இணைக்கிறது. மேலும் இந்தப் பகுதிதான், இந்தியாவின் வடக்கு திசையில் உள்ள முக்கிய இடங்களுக்கு இணைப்பை உருவாக்குகிறது. அதுமட்டுமல்ல கல்வான் பள்ளத்தாக்கை ஒட்டிய மலை முகட்டிலிருந்து பார்த்தால், சியாச்சின் வரையிலான இந்தியப் பகுதியை எளிதாகக் கண்காணிக்க முடியும். இந்தப் புவிசார் முக்கியத்துவத்தாலேயே 1962-ம் ஆண்டு இந்திய-சீன யுத்தமும் இந்தப் பகுதியில்தான் வெடித்தது.  இதே இடத்தில் தான் இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே ஒரு மோசமான மோதல் நடந்தது. அமைதி நிலவிய கல்வான் பள்ளத்தாக்கு இப்போது ஒரு பிரச்சனையின் மையப்புள்ளியாக மாறியுள்ளது.

சீனா அத்துமீறியதாக இந்தியாவும், இந்தியா அத்துமீறியதாக சீனாவும் மாறிமாறி குற்றம் சாட்டி வருகின்றன.  தற்போது எல்லையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு காரணம் என்று பரஸ்பரம் விமரிசனம் செய்து வருகின்றன. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லைப் பிரச்சனையின் வரலாறு ரீதியான மட்டுமல்ல மிகவும் பழமையானதும் ஆகும். என்றாலும், இன்றைய புவிஅரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் பின்னணியில் சமீபத்தில் உருவான இந்திய சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பதற்றத்திற்கு முக்கிய காரணங்கள் உள்ளன. இந்த மோதலை ஒரு தனிப்பட்ட சம்பவமாகப் பார்க்க முடியாது. இப்பிரச்சனை, பிராந்திய தன்மை வாய்ந்ததாகவும், உலக புவிசார் அரசியலோடும் தொடர்புடையதாக இருக்கின்றது.

போர்தந்திர ரீதியிலான முக்கியத்துவம்

ராணுவ வலிமையில் பிராந்திய அளவில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கும் அண்டை நாடுகள் சீனாவும், இந்தியாவும் எனக் கூறப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையில் கறாராக வரையறுக்கப்படாத  எல்லைப் பகுதியில் மோதல்களும் பூசல்களும் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றது. இத்தகைய மோதல்களுக்கான காரணங்களில் முதன்மையானது போர்தந்திர ரீதியிலானதாகும். இது உடனடியாக திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்படுவதில்லை. நீண்ட கால அடிப்படையில் திட்டமிட்டு நடத்தப்படுவதாகும். திபெத்தின் ஐந்து விரல்கள் என்பதுதான் சீனாவின் தலையாய போர்தந்திரமாகும். சீனாவைப் பொருத்தவரை, இந்த ஐந்து விரல்களில் லடாக் என்பது ஒரு விரலாகும்.  எனவே தான்  இந்தப் பகுதியை மையப்படுத்தி, சீனா சில நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகக்  கூறப்படுகிறது.

வரலாற்று ரீதியாக, 19ம் நூற்றாண்டின் பெரும் பகுதியில் மத்திய ஆசியாவை யார் கட்டுப்படுத்துவது என்பதில் அப்போதைய பிரித்தானிய பேரரசுக்கும் உருசிய பேரரசுக்கும் இடையை போட்டி இருந்தது.  குறிப்பாக, 1846 ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீர் இராஜ்யம் உருவாக்கப்பட்டதிலிருந்து மேற்குப் பகுதியில் வரையறுக்கப்பட்ட எல்லையைப் பாதுகாப்பதற்கான பிரிட்டிஷ் காலனிய அரசு முயற்சியை எடுத்தது. 1947 க்கு பின்னர் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லை பிரச்சனை இன்று வரை நீடித்து வருகின்றது.  இருநாடுகளுமே கல்வான் பள்ளத்தாக்கில் ஆதிக்கம் செலுத்துவதை மிகவும் முக்கியமாகக் கருதுவதால், அந்தப் பகுதியில் பல ஆண்டு காலமாக பிரச்சனை இருந்து வருகிறது. ஆகவே இந்தப் பகுதி ஆசிய பிராந்தியத்தில் வரலாற்று ரீதியாக போர்தந்திரம் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருந்து வருகிறது.

எல்லையில் சீனாவின் கட்டுமானங்கள்

Why are China and India fighting over an inhospitable strip of the ...

இந்திய-சீன எல்லைப் பகுதிகளில் சாலைப் போன்ற கட்டுமானங்களையும் அவற்றை பராமரிப்பதுமான நடவடிக்கைகள் எப்போதுமே அதிகமாகவும், சிறப்பாகவும் இருந்தன என்பதை பெரும்பாலான நிபுணர்களும் ஒப்புக்கொள்கின்றனர். மேலும் எல்லைப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தியதிலும் சீனா இந்தியாவை விட முன்னிலையில் உள்ளது. 1950 களில் சீனா தனது வடமேற்கு பகுதியான சிஞ்சியாங் பகுதியிலிருந்து மேற்கு திபெத்திற்கு சுமார் 1200 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை அமைத்தது. அதில் இந்தியா தனது பகுதி என உரிமைக்கோரும் அக்சாய் சின் வழியாக 179 கிலோ மீட்டர் சாலை சீனா அமைத்துள்ளது. மேலும் சீனா 1958-இல் தனது வரைபடத்தில் அக்சாய் சின் சாலை குறித்த விவரம் வெளியிட்டது. இதை இந்தியா ஏற்கவில்லை. உண்மையான கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாலங்கள் மற்றும் விமான ஓடுபாதைகள் போன்ற கட்டுமானங்களை நிர்மாணிக்கும் சீனாவின் நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக இந்தியா தனது தரப்பிற்கு சில கட்டுமானங்களை மேற்கொண்டது. எல்லைப் பகுதிகளில் இரு நாடுகளும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருவதும், அவற்றை ஒன்றை ஒன்று எதிர்ப்பதும் இருதரப்பு மோதலுக்கு வாடிக்கையான காரணமாக இருந்து வருகின்றது.

எல்லையில் இந்தியாவின் கட்டுமானங்கள்

இந்தியாவினால் லடாக் பகுதியை முழுமையாக அணுக முடியாத நிலையில் இருந்தது. எனவே ஷியோக் ஆற்றில் தார்பக் (Darbuk) லிருந்து தௌலத் பெக்கால்டி (Daulat Beg Oldie) என்ற பகுதியில் உள்ள விமான இறங்குதளம் வரை இந்தியா சாலை ஒன்றை அமைத்துள்ளது. கால்வன் ஆற்றின் மீது ஏற்கெனவே இருந்த பாலத்தை புனரமைப்பு செய்து புதுபித்துள்ளது. கால்வன் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள, 60 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம், படை வீரர்கள் நகர்வுக்கும், இராணுவத் தளவாடங்களைக் கொண்டு செல்லவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. இதனால் இந்திய ராணுவம் மிக விரைவில் எல்லைக்கோட்டுப் பகுதியைச் சென்றடைய முடியும். மேலும், இந்தச் சாலையானது, வியூக முக்கியத்துவம் வாய்ந்த 255 கிலோமீட்டர் நீள சாலை மற்றும் காரகோரம் கணவாய்க்கு தெற்குப் பகுதியில் உள்ள கடைசி ராணுவ நிலையை பாதுகாப்பதிலும், அந்த பகுதியில் இந்தியாவின் பிடியை உறுதிப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறப்படுகிறது. இவ்வாறு சாலைக் கட்டுமானம் செய்வதன் மூலம் இந்தியா தனது எல்லைப் பகுதியைப் பாதுக்காக்க முனைவதை சீனா விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதனால்தான், ‘கல்வான் பள்ளத்தாக்கு சீனாவுக்குச் சொந்தம் என்றும், இங்கு இந்தியா எல்லை தாண்டி வரக்கூடாது, சாலை போடக் கூடாது என்றும் சீனா பிரச்னை செய்வதாகக் கூறப்படுகிறது. மத்திய ஆசிய நாடுகளை சீனாவுடன் இணைக்கும் விதமாக பல சாலைக் கட்டமைப்புகளை சீனா உருவாக்கிவருகிறது. லடாக் எல்லையை இந்தியா வலுப்படுத்துவது அதற்குத் தடையாக இருப்பதாக சீனா கருதுகிறது.

அதுமட்டுமின்றி, இந்தியா தனது எல்லைப் பகுதிகளில் மேலும் சில சாலைகள், பாலங்கள் போன்ற கட்டுமானப் பணிகள் துரிதப்படுத்தியது.  இதற்கும் சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. இந்தியா எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சாலைகள் அமைப்பதே, கடந்த சில ஆண்டுகளாக இந்திய எல்லைகளில் ஏற்படும் பதட்டமான சூழ்நிலைக்கு மிகப்பெரிய காரணம் என்று பாதுகாப்பு நிபுணர் அஜய் சுக்லா கூறுகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக, எல்லைகளை மேம்படுத்துவதில் இந்தியா அதிக கவனம் செலுத்தி வருகிறது என்பது தெரிய வருகின்றது.  இப்போது இந்திய எல்லைகளை மேம்படுத்தப்படுத்தி வருவதும், எல்லை பகுதிகளைச் சென்றடைவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்து வருவதும் சீனாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்துகிறது என்று  இந்திய ராணுவத்துக்கு தலைமை வகித்த முன்னாள் இந்தியத் தளபதி வி.பி.மாலிக் கூறுகிறார்.

உலக அரங்கில் சீனாவுக்கு எதிரான அணிசேர்க்கை

தற்போது அமெரிக்கா, உலக அரங்கில் சீனாவைத் தனிமைப் படுத்தும் முயற்சியில் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளது. அந்த முயற்சியில் இந்திய அரசு முழுமையாக ஒத்துழைப்பதுதான் இன்றைய  பிரச்சினையின் மையமான காரணங்களுள் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்தில், உலகிற்கே தீங்கை விளைவிக்கும் கொரோனா வைரஸ் எங்கிருந்து தொடங்கியது என்ற காரணத்தை விசாரிக்க வேண்டும் என்ற தீர்மானம், 194 உறுப்பு நாடுகளை உள்ளடக்கிய உலக சுகாதார அமைப்பில் முன்வைக்கப்பட்டது.  இந்தியாவும் இந்த முன்மொழிவுக்கு ஆதரவு தெரிவித்தது. கொரோனா வைரஸின் பிறப்பிடம் சீனா என்பதும், வைரஸ் உருவான ஆரம்ப காலகட்டத்தில் தவறான நடவடிக்கைகளை எடுத்ததால் சீனா தற்போது பல்வேறு விமர்சனங்களை எதிர்கொள்கிறது என்பதும் உண்மைதான். ஆனால், அனைத்து விமர்சனங்களையும் சீனா கடுமையாக எதிர்க்கிறது.

இந்தோ பசிபிக் கூட்டாண்மை மற்றும் Quad அமைப்பில் இந்தியா 

Video: Quad is getting prepared to take on expansionist China ...

கடந்த பத்தாண்டுகளாக சீனாவின் பொருளாதாரம் வளர்ச்சி யடைந்து வருவதை ஏற்க முடியாத அமெரிக்கா, சீனாவிற்கு எதிராகவும் சீனாவின் திட்டத்திற்கு எதிராகவும், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. அவற்றில் இந்தோ பசிபிக் கூட்டாண்மை முக்கியமானது. அமெரிக்கா தலைமையிலான இந்தோ-பசிபிக் கூட்டாண்மையில் ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. அடுத்ததாக, சீனாவைக் குறி வைத்து இந்தோ பசிபிக் பகுதியில் அதற்கு எதிராக அமெரிக்க ஏற்படுத்தியிருக்கும்  QUAD என்ற அமைப்பில் இந்தியா ஒரு உறுப்பினராக உள்ளது.  அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான ஒரு முறைசாரா அமைப்பாக இது விளங்குகிறது. இதன் மூலம் தகவல் பரிமாற்றம் மற்றும் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான இராணுவ பயிற்சிகள் ஆகியவை பராமரிக்கப்படுகின்றன. அதிகரித்து வரும் சீன பொருளாதார மற்றும் இராணுவ சக்தியின் எதிரொலியாக இந்த இராஜதந்திர மற்றும் இராணுவ ஏற்பாடுகள் பரவலாகக் கருதப்பட்டன

ஜம்மு காஷ்மீர் விவகாரம்

ஜம்மு காஷ்மீர் விவகாரம் ...

1846 ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீர் உருவாக்கப்பட்ட உடன் மேற்குப் பகுதியில் எல்லைப்பகுதிகளைப் பெறுவதற்கான பிரிட்டிஷ் காலனிய அரசு முயற்சி எடுக்கத் தொடங்கின என்பதை India-China Boundary Problem 1846-1947, என்ற நூலில் ஏ.ஜி. நூரானி எடுத்துக் காட்டுகிறார்.  காலப்போக்கில் ஒரு தன்னாட்சித் தகுதியைப் பெற்று விளங்கியது.  இறுதியாக சில சிறப்பு உரிமைகளோடு இந்தியாவோடு இணைந்தது. சமீபத்தில் காஷ்மீரில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 370-ஐ நீக்கி, லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக இந்தியா அறிவித்தது. இதன் மூலம் ஜம்மு-காஷ்மீருக்கு இருந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா முடிவுக்குக் கொண்டு வந்து, இரண்டு புதிய யூனியன் பிரதேசங்களாக மாற்றி புதிய வரைபடங்களை வெளியிட்டது. புதிய வரைபடத்தில் இந்திய பிரதேசமான லடாக்கில் அக்சய் சின் பகுதி இருப்பதாக இந்தியா குறிப்பிட்டிருந்தது. இது சீனாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாகிஸ்தான் கைவசமுள்ள காஷ்மீர், சீனா உரிமை கொண்டாடிவரும் அக்சய் சின் பகுதி உட்பட பிற பகுதிகளை விரைவில் மீட்டெடுப்போம் என்று இந்திய தலைவர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றியது சீனாவை உசுப்பி விட்டதாக கருதப்படுகிறது.  இந்தியாவின் இந்த நடவடிக்கையானது,  அமைதியான நிலைமையைச் சீர்குலைந்து போவதற்கான காரணமாக அமைந்தது என்று கூறப்படுகிறது.

எல்லைப் பகுதிகளை மீட்டெடுக்கும் இந்தியாவின்  முயற்சிகள்

ஜம்மு-காஷ்மீரின் 38 ஆயிரம் சதுர கிலோமீட்டர் அளவிலான அக்சாய் சின் பகுதியை சீனாவின் கைவசமுள்ளது. மேலும் 5 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்குப் பகுதியை பாகிஸ்தான் சீனாவிற்கு பரிசாக வழங்கியது. மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள கில்கிட்-பால்டிஸ்தான் என்ற பகுதியை, 1947-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்துக் கொண்டது. இவற்றைக் கைப்பற்ற நினைக்கும் வகையில் இந்தியா சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கில்ஜிட் பால்ட்ஸ்தான் பகுதியில் இந்தியா காட்டும் தீவிர ஆர்வம் தனது முயற்சிக்கு எதிரானது என சீனா கருதுகிறது. ஏனென்றால், சீனா அங்கு ஒரு பெரும் ராணுவத் தளத்தையும் அமைத்துக் கொண்டிருக்கிறது  இந்த கில்கிட் பால்டிஸ்தான் பகுதியில் சீன ராணுவம் தற்போது நிலைகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள ஜம்மு-காஷ்மீரின் 13,000 சதுர கிலோமீட்டர் மற்றும் சீனா ஆக்கிரமித்து வைத்துள்ள 43,000 சதுர கிலோமீட்டர் அளவிலான பகுதிகளை  பெற வேண்டும் என்பது இந்தியாவின் உறுதியான தீர்மானமாகும். இதை சீனாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்தியாவுக்கான அந்நிய நேரடி முதலீட்டுக்கான விதிகளில் மாற்றம் 

ஆரம்ப காலங்களில், இந்தியாவில் அந்நிய முதலீடு என்பது தேவையில்லாமல் இருந்த்து. ஆனால், தாராளமயக் கொள்கையை ஏற்றுக் கொண்ட பின்னர் வெளிநாட்டு முதலீடுகளுக்கு இந்தியாவை திறந்துவிட்டது. அதன் பிறகு, வெளிநாட்டு நிறுவனங்கள் பலவும் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வந்தன. இந்தியாவில் நேரடி முதலீடுகள் செய்வது, தங்கள் நிறுவனத்தின் கிளைகளைக் கொண்டுவருவது என வெவ்வேறு வகைகளில் முதலீடுகள் வந்தன.

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்.டி.எஃப்.சியின் 1.75 கோடி பங்குகளை சீனாவின் மத்திய வங்கியான மக்கள் வங்கி வாங்கியுள்ளது.  இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக இந்தியாவிற்குள் செய்யும் முதலீட்டிற்கு, அந்நிய நேரடி முதலீட்டுக்கான விதிகளை மேலும் கடுமையாக்கியுள்ளது. புதிய விதியின்படி, எந்தவொரு இந்திய நிறுவனத்திலும் பங்கேற்பதற்கு முன்பு, அரசாங்க அனுமதியைப் பெறுவது என்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சீனாவின் நேரடி முதலீட்டு முயற்சிக்கு இந்தியா  தடை விதித்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளிலேயே சீனாவுடன் தான் பெருமளவிலான வர்த்தகம் நடைபெறுவதால் இந்த மாற்றம் இரு நாட்டு வணிகத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆனால் தற்போது இந்திய நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் 10% பங்குகளை அமெரிக்க நிறுவனமான முகநூல் என்ற நிறுவனம் வாங்கியுள்ளதற்கு ஆட்சேபனை ஏதும் தெரிவிக்காமல் இருக்கின்றது.  இப்போது இந்தியா திடீரென தனது அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாலும், பாரபட்சம் காட்டும் இந்தியாவின் நடவடிக்கையினாலும் சீனாவின் வெளியுறவுக் கொள்கையில் அசெளகரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஆசிய பிராந்தியத்தில் சீனா அமுல்படுத்தி வரும் திட்டங்கள்

The Belt-and-Road initiative and the rising importance of China's ...

சீனாவின் பிரமாண்டமான சாலை இணைப்புத் திட்டம் பெல்ட் மற்றும் ரோடு (Belt and Road Initiative) ஆகும். இது ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்க நாடுகளை இணைக்கிறது. அடுத்ததாக, பாகிஸ்தானுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரம் (China Pakistan Economic Corridor) என்ற திட்டம். இந்தத் திட்டம் 2013 இல் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டம், பாகிஸ்தான் முழுவதும் கட்டுமானத்தில் உள்ள உள்கட்டமைப்பு திட்டங்களின் தொகுப்பாகும். நவீன போக்குவரத்து வலைப்பின்னல்கள், ஏராளமான எரிசக்தி திட்டங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிர்மாணிப்பதன் மூலம் பாக்கிஸ்தானுக்கு தேவையான உள்கட்டமைப்பை விரைவாக மேம்படுத்துவதையும் அதன் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.  இந்த திட்டங்கள் இந்தியாவின் நலன்களுக்கு எதிரானது என்று இந்தியா இத்திட்டங்களுக்கு உடன்படாமல் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுள்ளது.  கொரானா வைரஸ் பாதிப்பினால், சீனாவால் தற்பொது போர்தந்திரம் வாய்ந்த பல முக்கியத் திட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலையில் உள்ளது என்று தெரிகிறது.

சீனாவின் பொருளாதார வீழ்ச்சி

இன்று சீனா உலக அளவில் மிகப் பெரிய வணிகச் சந்தையைக் கொண்டுள்ள நாடு. ஆனால் கடந்த சில ஆண்டுகளக இதன் வளர்ச்சிக் குறைந்துவருகிறது.  1990-ம் ஆண்டில், சீனாவின் ஜிடிபி வளர்ச்சி வெறும் 3.90 சதவிகிதம் தான் இருந்தது. உலக வங்கி கணக்குப் படி, சீனாவின் ஜிடிபி வளர்ச்சி கடந்த 2007-ம் ஆண்டு 14.23 சதவிகிதமாக இருந்தது. ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளிலேயே சீனா சரியத் தொடங்கிவிட்டது. அடுத்த 2010-ம் ஆண்டில் சீனாவின் ஒட்டு மொத்த ஜிடிபி வளர்ச்சி 10.63 சதவிகிதம் தான். அதற்குப் பின் தொடர்ந்து இப்போது வரை சரிவு தான். 2011 – 9.55%,  2012 – 7.86%, 2013 – 7.76%, 2014 – 7.30%, 2015 – 6.90%, 2016 – 6.73%, 2017 – 6.75%, 2018 – 6.56%, 2019 – 6.15% என்ற அளவுக்கு  சீனாவின் ஜிடிபி வளர்ச்சி குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 7.6%-க்குக் கீழ்தான் இருந்தது.

இப்படி சீனா தன் 29 வருட பொருளாதார வரலாற்றில் இல்லாத அளவுக்கு சரிவில் இருக்கும் போது, கொரோனா வைரஸ் சீன பொருளாதாரத்தை வெகுவாகப் பாதிக்கத் தொடங்கியது. சீனாவுக்கு வர வேண்டிய ஏற்றுமதி வியாபாரங்கள் எல்லாம் இந்தியா, இந்தோனேசியா, வியட்நாம் போன்ற நாடுகளுக்கு கைமாறத் தொடங்கிவிட்டது.  உலக நாடுகளைப் போலவே சீனாவும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றது.  இதுவும் தற்போதைய பதட்டமான சூழ்நிலைக்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது.

அமெரிக்காவுடன் இந்தியாவின் நெருக்கம்

In Texas, Trump Hitches His Wagon to Modi's Star – Foreign Policy

சீனாவை முதன்மை எதிரியாகக் கருதி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமெரிக்காவுடன் அதிகபட்சமான நெருக்கத்தை இந்திய அரசு மேற்கொள்கிறது.  அமெரிக்காவும்  இந்தியாவுடன் ஒரு இணக்கமான உறவை உருவாக்க முயன்றது. இந்தியா தனது ஆயுதப்படைகளை நவீனமயமாக்குவதற்கும், வான் தாக்குதல்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அதன் தற்போதைய வான் பாதுகாப்பு கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கும் ஒரு ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பை அமெரிக்காவிடம் இருந்து வாங்கத் திட்டமிட்டுள்ளது.  அமெரிக்க அதிபர் டிரம்ப்  இந்தியா வருகையின் போது இந்தியாவுக்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போர் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட அதிநவீன பாதுகாப்பு உபகரணங்களை வழங்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் வழங்கினார். இந்த கொள்முதல் தொடர்பான ஒப்பந்தம் இரு நாட்டு தலைவர்களின் முன்னிலையில் கையெழுத்தானது.

இந்திய ஆளும் வர்க்கம் கடந்த பத்தாண்டுகளாக சீனாவிற்கு எதிரான அமெரிக்க இராணுவ-போர்தந்திர தாக்குதலில் இந்தியாவை ஒருங்கிணைத்து கொண்டது என்றும், சமீபத்தில் இந்தியா தனது இராணுவத் தளங்களை அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களின் வருகைக்கு திறந்துவிட்டுள்ளது என்றும்,  அமெரிக்கா மற்றும் அதன் பிரதான ஆசிய-பசிபிக் நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இருதரப்பு, முத்தரப்பு மற்றும் நாற்தரப்பு இராணுவ-பாதுகாப்பு ஒப்பந்தங்களின் மூலம் தனது உறவுகளை எப்போதும் விரிவடைய செய்யும் வலைப்பின்னலை உருவாக்கி கொண்டுள்ளது என்றும் சீனத் தரப்பில் கூறப்படுகிறது. அமெரிக்கா மற்றும் இதர இந்தோ பசிபிக் நாடுகளுடன் இராணுவக் கூட்டணியை உருவாக்கியுள்ளதைக் கண்ட சீனா கோபமடைந்துள்ளது. இது போன்ற பல விசயங்கள், இன்றைய இந்திய – சீனப் பிரச்சினையின் பின்னணியாக இருந்துவருகின்றன.

சமீபத்திய நிகழ்வுகளைக் கூர்ந்து நோக்கும்போது  உலக நாடுகளை ஆளும் ஏகாதிபத்திய சக்திகள் மற்றுமொரு போரை விரும்புகின்றனவோ என்று எண்ணத் தோன்றுகிறது. இதன் ஒரு பிரிக்க முடியாத பகுதியாக சமீபத்திய இந்திய-சீன எல்லையில் நடைபெற்ற மோதலைப் பார்க்கலாம். எக்காரணம் கொண்டும் உலகம் எதிர்நோக்கியிருக்கும் மனித குலத்திற்கு எதிரான மோசமான போரை கடுமையாக எதிர்த்தாக வேண்டும். இதை அனைத்து உழைக்கின்ற மக்கள் தடுத்து நிறுத்தியாக வேண்டும்.

 

சீனாவின் அணுகுமுறை குறித்த ஒரு திறனாய்வு

உலகமயமாக்கல் செயல்முறையானது, சீனாவை மாபெரும் பொருளாதார ரீதியாக எழுச்சிப் பெற வைத்துள்ளது.  இது ஒரு பெரிய உற்பத்தி மையமாக மாறியதை அடுத்து, கடந்த தசாப்தங்களில் அதன் நிதி மூலதனம் அதிகரித்துள்ளது. மேலும் சக்திவாய்ந்த நவீனமயமாக்கப்பட்ட இராணுவமும் கடற்படையும் உருவாக்கி வைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு சீனாவிற்கும் அமெரிக்காவிற்குமான இராணுவ ரீதியான வலிமையை ஒப்பிட்டு சில முடிவுகளை வெளியிட்டுள்ளது.  அந்த ஆய்வறிக்கையின்படி சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளைவிட அமெரிக்க ராணுவம் இன்னமும் அணுசக்தி உள்ளிட்டவற்றுடன் பல மடங்கு பலமுடன் திகழ்ந்து வருகின்றது என்று கூறுகின்றது.  மேலும் பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு, அடுத்த தலைமுறைக்கான போர் விமானங்கள் போன்ற பல்வேறு தொழில்நுட்ப சார்த்த ராணுவ கூறுகளில் அமெரிக்க இன்னமும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்றும், ஆசியாவில் இருக்கும் அதிகளவிலான நட்பு நாடுகள் மற்றும் ஐரோப்பாவில் நேட்டோ மூலமாக அமெரிக்கா ஒரு கூட்டணியைக் கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளது.

ஆனால், இதுபோன்றதொரு கட்டமைப்பை சீனா கொண்டிருக்கவில்லை. எனினும், அமெரிக்காவின் தொழில்நுட்ப முன்னெடுப்புகளை பின்னுக்கு தள்ளும் நடவடிக்கைகளை சீனா முடுக்கிவிட்டுள்ளது. சீனாவை பொறுத்தவரை ஆசிய பிராந்தியத்தில் கவனம் செலுத்துவதற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதாவது, தனது அமைவிடம் சூழ்ந்துள்ள உலகின் மிகப் பெரிய பரப்பில் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.  இந்த வகையில் ஆசிய பிராந்தியத்தின் ராணுவ வல்லரசு என்ற நிலையை சீனா அடைந்துவிட்டது என்று கூற முடியும் என்று அந்த ஆய்வறிக்கைக் கூறுகின்றது.

மேலும், அமெரிக்காவின் ராணுவ திறன்களை ஆய்வு செய்த சீனா, அதன் அடிப்படை கட்டமைப்புக்கு சவால் விடக் கூடிய வலிமைமிக்க திட்டத்தை முன்னெடுத்துள்ளது.  தனது இடத்தில் இருந்து கொண்டே நீண்ட தூரத்தில் இருக்கும் அமெரிக்க படைகளுக்கு சவால் கொடுக்கக் கூடிய உணரிகள் (சென்சார்கள்) மற்றும் நவீன ஆயுத அமைப்புகளை மேம்படுத்துவதில் சீனா அதீத கவனம் செலுத்தி வருகிறது. தொடக்கத்தில் அமெரிக்காவிற்கெதிரான சீனாவின் தற்காப்பு நடவடிக்கையாக இவற்றை கருதிய வல்லுநர்கள், தற்போது அது அமெரிக்காவின் எவ்வித ராணுவ நடவடிக்கைக்கும் பதிலடி கொடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளதாக அந்த ஆய்வறிக்கைக் தெரிவிக்கின்றது.

சீன புவி-அரசியல் முறையின்  தொலைநோக்குத் திட்டம்

மின்னம்பலம்:சீனக் கம்யூனிஸ்ட் ...

சீனாவின் புவிசார்ந்த அரசியல் திட்டம் என்பது நீண்ட கால, பன்முகத் தன்மைவாய்ந்த நெகிழ்வான புவி-சார்ந்த போர்த்தந்திரத்தைக் கொண்டுள்ளது, இது பல ஆண்டுகளாக, திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மையப்படுத்தப்பட்ட உத்தரவின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகிறது.

சீன மக்கள்  இராணுவத்தின் மீதும், தகவல் – தொழில்நுட்ப அமைப்புகளின் மீதும் சீனத் தலைமை தமது முழுக் கட்டுப்பாட்டைச் செலுத்துகிறது.  இராணுவ ஆய்வாளர்கள், தளபதிகள் முதல் கல்வியாளர்கள் வரை பலரை கொண்டு போர்தந்திரத்தை உருவாக்குகின்றனர். இதன் அடிப்படையில் கொள்கைகள் வகுப்பதையும் அவற்றை நிறைவேற்றுவதையும் அதிகார கட்டமைப்புகள் ஏற்றுள்ளன.

சீன கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைமையால் திட்டமிடவும், செயல்படுத்தவும், குடிமக்கள் மீது செல்வாக்கு செலுத்துவதற்கும் மற்றும் கொள்கை அமலாக்கம் செய்வதற்கும், பின்னர் சர்வதேச அமைப்பு மற்றும் உலகளாவிய அரசியல் பொருளாதாரத்தில் செல்வாக்கைச் செலுத்தவும் முடிகிறது. அதன் பார்வையும் நோக்கமும் மிகத் தெளிவானது, நீண்ட காலத்திற்கானது. பலதரப்பட்ட வழியில் செயல்படும் தன்மை வாய்ந்தது.

சீனாவின் புவி அரசியலின் செயல்தந்திர நடவடிக்கைகள்

பல இந்திய வீரர்களைக் கொன்று காயப்படுத்திய உண்மையான கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் சீன ஆயுதப்படைகள் நடத்திய கொடூரமான மற்றும் ஆத்திரமூட்டும் தாக்குதல் என்றும், தொடர்ச்சியான வரலாற்று சீன-இந்திய ஒப்பந்தங்களின் முழுமையான மீறலாகும் என்றும் விமரிசிக்கப்படுகிறது.   இது 1962 ஆம் ஆண்டு இந்திய மண்ணில் சீனா நடத்திய தாக்குதலின் மறுபதிப்பாகப் பார்க்கப்படுகிறது.  இது உலக நாடுகளின் மீதான நடவடிக்கைகள் நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட சீனாவின் புவி அரசியல் திட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் நடவடிக்கைகளாகும் என்று பல ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள்.

இராணுவவாதத்திற்கு மாறாக அமைதியான உயர்வு

மேற்கு நாடுகளின் இராணுவவாதத்திற்கு எதிராக, ஏகாதிபத்திய கொள்கைக்கு மாறாக சீனா அமைதியான உயர்வு பற்றி என்ற கொள்கையை முன்வைக்கிறது. ஆனால் அதன் உயர்வு சீன வணிக மற்றும் நிதி மூலதனத்தின் எழுச்சி மற்றும் உலக அரசியல் பொருளாதாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சீனா, ஆசிய மற்றும் சர்வதேச சக்தியாக உருவெடுக்கின்றது. எனவே அமெரிக்கா சீனாவை ஒரு பெரிய அச்சுறுத்தலாகக் கருதுகிறது,

மென்மையான அணுகுமுறையில் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுடன் போட்டியிட முடியாது என்று சீனா தெளிவாக உணர்ந்துள்ளது. ஆனால் நிதி மற்றும் பொருளாதாய ஆற்றல்களின் பயன்பாட்டை அவர்கள் அறிவார்கள், மேலும் பல்வேறு நிதி ஒப்பந்தங்கள், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றால் தங்கள் செல்வாக்கை அதிகரித்துள்ளனர்.

உலகின் பல பகுதிகளில் தோன்றியுள்ள போர் மேகங்கள்

Who is militarizing the South China Sea? | New Internationalist

அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா, இந்தியா மற்றும் பிற பிராந்திய சக்திகளுக்கு இடையிலான புவிசார் அரசியல் ஆசிய பிராந்தியத்தை இராணுவமயமாக்கி உள்ளது.  பல நாடுகள் ஒரு நாட்டிற்கு எதிராக மற்றொன்றை தூண்டிவிட முயற்சிக்கின்றன. அமெரிக்கா தென்சீனக் கடலில் தனது கப்பற்படை மற்றும் வான்படை கண்காணிப்பை முன்னெப்போதும் இல்லாதவகையில் தீவிரப்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, அமெரிக்கா தனது இராணுவ நிலைகளை உலகின் பல இடங்களில் நிறுத்தியுள்ளது.  ஒரு புறம் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் உடன்படிக்கையில் ஈடுபட்டுள்ளன. இது சீனாவுக்கு எதிரான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகின்றது. மற்றொரு புறம், ஜப்பனுக்கும் சீனாவிற்கும் தற்போது புதிதாக எழுந்துள்ள பிரச்சனையினால் ஜப்பான் தனது இராணுவ நடவடிக்கையை எடுக்க முனைந்து வருகின்றன. இத்தகைய நடவடிக்கைகள் யாவும் சீனாவுக்கு படிப்படியாக இராணுவமயமாக்கலுக்கு தள்ளப்படுகின்றது.

மூதாதையர்களிடமிருந்து பெற்ற எதையும் இழக்க முடியாது

சீனா விரிவாக்கம் மற்றும் காலனித்துவத்தின் பாதையை பின்பற்றவில்லை என்றாலும், அது அதன் பிரதேசத்தின் எந்த ஒரு பகுதியையும் விட்டுக் கொடுக்காது என்று சீன அதிபர்  வலியுறுத்துகிறார். மூதாதையர்களிடமிருந்து பெற்ற எந்த அங்குல நிலப்பரப்பையும் இழக்க முடியாது, அதேபோல மற்றவர்களிடமிருந்து எதையும் நாங்கள் பெற விரும்பவில்லை என்று சீனா தனது மூதாதையர் உரிமையைக் கோருகிறது. திபெத்தின் ஐந்து விரல்கள் என்ற சீனாவின் நீண்டகாலப் போர்தந்திரத்தின்  அடிப்படையிலேயே இந்த உரிமையை சீனா கோருகின்றது என்று கூறப்படுகிறது. அன்றைய வரலாற்று சூழலில் மாவோ சேதுங் இதை முன்மொழிந்தார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இத்தகைய போர்த்தந்திரத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது.  திபெத்தை சீனாவின் வலது கை உள்ளங்கை என்று கருதுகிறது, அதன் சுற்றுப் புறத்தில் ஐந்து விரல்கள் உள்ளன: லடாக், நேபாளம், சிக்கிம், பூட்டான் மற்றும் அருணாச்சல பிரதேசம். இந்த பகுதிகளை. விடுவித்தல் சீனாவின் பொறுப்பு  என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

சீனாவை தோற்கடித்தப்பின், ஏகாதிபத்திய நாடுகள் சீனாவுக்கு துணை பகுதிகளாக இருந்த பல மாநிலங்களையும், அதன் சொந்த பிரதேசத்தின் ஒரு பகுதியையும் வலுக்கட்டாயமாக எடுத்துக் கொண்டன. கொரியா, தைவான், ரியுக்யு தீவுகள், பெஸ்கடோர்ஸ் மற்றும் போர்ட் ஆர்தர் ஆகியவற்றை ஜப்பான் கையகப்படுத்தியது; பர்மா, பூட்டான், நேபாளம் மற்றும் ஹாங்காங்கை இங்கிலாந்து கைப்பற்றியது; அன்னத்தை பிரான்ஸ் கைப்பற்றியது; போர்ச்சுகல் போன்ற ஒரு மோசமான சிறிய நாடு கூட மக்காவோவை எங்களிடமிருந்து எடுத்தது. அவளுடைய பிரதேசத்தின் ஒரு பகுதியை அவர்கள் பறித்த அதே நேரத்தில், ஏகாதிபத்தியவாதிகள் சீனாவை பெரும் இழப்பீடு வழங்க கட்டாயப்படுத்தினர். இதனால் சீனாவின் பரந்த நிலப்பிரபுத்துவ சாம்ராஜ்யத்திற்கு எதிராக கடும் எதிர்ப்புகள் ஏற்பட்டன என்று    மாவோ குறிப்பிட்டுள்ளதாக கருதப்படுகிறது.

சீனாவின் நலன்களுக்கு பொருந்தாத வரையில் எந்த சட்டங்களையோ, ஒப்பந்தங்களையோ, எல்லைகளையோ ஆகியவற்றின் மீறல்களையோ சீனா ஒப்புக் கொள்ளாது.  மேலும் சீனாவிற்கு உரிமையில்லாத பிற பிரதேசங்கள் மற்றும் கடல் பகுதிகளை சீன பிரதேசத்திற்கு சொந்தமானது என்று பாரம்பரிய உரிமையைக் கோருகின்றது. சீனா தனது நாட்டின் உரிமைகள் மற்றும் எல்லைகளை ஒரு நெளிவு சுளிவான கருத்தாக்கத்தைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் ரஷ்யா போன்ற பல நாடுகளுடன் தனது எல்லைப் பிரச்சனைகளை, சீனா தீர்த்து வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதேச உரிமையை கோரும் சீனா

Chinese white paper hails coronavirus triumphs, venerates Xi ...

தைவான் மற்றும் ஹாங்காங்காக இருந்தாலும் அல்லது திபெத் மற்றும் இந்தியா-சீனா எல்லையில் இருந்தாலும், சீன கம்யூனிஸ்டு கட்சி தனது பிரதேச உரிமையை கோருவதைக் கைவிடாது என்றும், இதேபோல் தென்சீனக் கடலிலும், மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான் மற்றும் கிர்க்ஸ்தான் இடையிலான எல்லையிலும் கூட தனது உரிமையை கைவிடாது என்றும், இது ஒரு கொள்கைரீதியான முதன்மையான நலன்கள் என்றும் சீனத்தரப்பில் வலுவாக முன்வைக்கப்படுகின்றன.  இது சில நேரங்களில் பெருமை, தேசியவாதம், பிராந்திய உரிமைகோரல்கள், மாற்றப்பட்ட வரைபடங்கள் ஆகியவற்றில் மறைக்கப்படலாம். ஆனால் கொள்கை மாறாது என்று சீனா ஆணித்தரமாக கூறுகிறது. தேசிய பாதுகாப்பு குறித்த சீன அரசாங்கத்தின் 10 வது வெள்ளை அறிக்கை (2019) அதன் முக்கிய நலன்களைப் பாதுகாப்பதற்கும், கிழக்கு சீனக் கடல், தென் சீனக் கடல் மற்றும் இந்தியாவுடனான அதன் பிரதேசங்களைப் பாதுகாப்பதற்கும் அதன் உரிமையை உறுதிப்படுத்துகிறது.

கடல் பிரதேசங்களின் மீதான விரிவாக்கம்

ஒருகாலத்தில் சீன நாட்டின் கடலோர பகுதிகளின் அருகில் வரையறை செய்யப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தனது  நடவடிக்கைகளை செயல்படுத்திக் கொண்டிருந்த மக்கள் விடுதலை கடற்படை ராணுவமான  திட்டம், தற்போது தொடர்ச்சியாக தனது செயல்பாடுகளை விரிவாக்கியுள்ளது.  இந்தியப் பெருங்கடல், ஐரோப்பிய கடல், பசிபிக் பெருங்கடல் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட கூட்டுப்பயிற்சியில் சேர்ந்தது.

சீனவின்  கடற்படை விரிவாக்கமானது ஆழ்கடல் முழுவதும் உட்பட உலகளாவிய கடற்பரப்பில் இயங்குமாறு ஒரு கடற்படையை கட்டமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும். 2015ல் வெளியான  பாதுகாப்பு அமைச்சகத்தின் வெள்ளை அறிக்கையில் சீனாவின் யுக்திகளில்  கடற்படையின்  மிகப்பெரிய  பங்கு குறித்து வலியுறுத்தப்பட்டது. அதன்பிறகு கொரிய தீபகற்பம், மத்திய தரைக் கடல், பால்டிக் கடல், பாரசீக வளைகுடா, மேற்கு பசிபிக் உள்ளிட்ட சில இடங்களுக்கு போர்கப்பல்களை அனுப்பி வைத்தது சீனா.

கடற்படை விரிவாக்கத்தின் விளைவாக இதுவரை அலாஸ்கா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றிற்கு அப்பால் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள்  காணப்பட்டிருக்கின்றன என  சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.   சீனா தனது முதல் வெளிநாட்டு கடற்படை தளத்தை ஜிபூட்டியில் செயற்படுத்தியது. அது  வெளிநாட்டில் அதன் இராணுவ நிலைப்பாட்டை விரிவுபடுத்தும் ஒரு முக்கிய அம்சம் ஆகும்.

அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் கடற்படையை நவீனமாக்கும் திட்டத்தை முடுக்கிவிட்டிருக்கிறது சீனா.  இந்த திட்டத்தில் மேம்பட்ட போர்க்கப்பல்கள், விமான கேரியர், நீர்மூழ்கி கப்பல்கள் ஆகியவற்றை உருவாக்குகிறது.  உள்நாட்டு  தயாரிப்பில் உருவான முதல் விமான கேரியரை மிகப் பிரபலமாக அறிமுகப்படுத்திய சில மாதங்களுக்கு பின்னர் கடந்த ஜுனில் நவீன போர்க்கப்பலை அறிமுகப்படுத்தியது. இவை சர்வதேச இராணுவ சக்தியாக சீனா உருவெடுப்பதை சுட்டிக்காட்டுகின்றன என குறிப்பிட்டன உள்ளூர் ஊடகங்கள்.  மேலும், ஒரே நேரத்தில் பல கடற்பகுதி களங்களில் இயங்கும் திறன் கொண்ட “நீல நீர் கடற்படை” உருவாக்க சீனாவின் திட்டத்தின் ஒரு பகுதியாக மூன்றாவது கேரியர் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் கட்டப்பட்டு வரும் சீன சாலைகள், துறைமுகங்கள், பெல்ட் மற்றும் ரோடு முன்முயற்சி போன்றவை வணிக ரீதியாக பிராந்திய அளவில் பன்மடங்கு பயன்பாட்டைக் கொண்டுள்ளன. தனது வளரும் பொருளாதார நலன்களை பாதுகாக்கவும், பெல்ட் மற்றும் சாலை திட்டத்திற்கும் ஒரு வலுவான கடற்படை தேவை என்று சீனா கூறுகிறது.

சீனாவின் பெரும்பகுதி கடல் வணிகம் தென்சீனக் கடல் வழியாகத்தான செய்துவருகின்றது. இவற்றை தடுக்கவேண்டும் என்று அமெரிக்கவும் அதன் சார்பு நாடுகளும் விரும்புகின்றன. தென் சீனக் கடல் பகுதியிலுள்ள முதலாம் தீவு சங்கிலி என்றழைக்கப்படும் ஜப்பான், தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் அமெரிக்காவின் ஆதிக்கம் மேலோங்காமல் பார்த்துக்கொள்கிறது. மேலும், அமெரிக்காவின் ராணுவத் தளங்கள் அமைந்துள்ள குவாம் வரை விரிந்துள்ள இரண்டாவது தீவுச் சங்கிலி என்றழைக்கப்படும் பகுதியிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்த சீனா திட்டமிட்டு வருகிறது.

ஒரு சமீபத்திய அமெரிக்க காங்கிரஸின் அறிக்கை சீனாவின் “கட்டுப்படுத்தப்பட்ட ஆனால் வளர்ந்து வரும்” கடற்படை திறனை உயர்த்தி காட்டுகிறது. காலாவதியான வல்லரசு மனப்பான்மையை கொண்ட அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை, அதன் திறனைக் குறைப்பது மட்டுமின்றி, இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் மீண்டும் முழுவதுமாக கோலேச்சுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் சிரமங்களை உண்டாக்கலாம் என்று சிட்னி பல்கலைக்கழக அறிக்கை ஒன்று கூறுகிறது.

இந்தியாவைப் புரிந்துகொண்டுள்ளது

அமெரிக்கா அல்லது மேற்கத்திய நாடுகளுடன் தன்னை ஒப்பிடமுடியாது என்பதில் சீனா தெளிவாக உள்ளது. இந்தியா கொண்டிருக்கும் சட்டபூர்வமான தன்மை அல்லது கலாச்சார செல்வாக்கு, சகிப்புத்தன்மை மற்றும் பச்சாத்தாபம் ஆகியவற்றுடன் போட்டியிட முடியாது என்பதிலும் சீனா தெளிவாக உள்ளது. இந்தியாவின் உள்நாட்டு கொள்கைகள் காரணமாக பல பழைய நட்பு நாடுகளுடன் இந்திய செல்வாக்கு குறைந்து வருகிறது. மேலும் இந்தியாவில் உருவாயிருக்கும் புதிய கருத்தியல் மாற்றங்களை சீனா நன்கு அறிந்து வைத்திருக்கிறது.

பிற நாடுகளைப் பயன்படுத்திக் கொள்தல்

A new chapter in China-Nepal economic relations - Travel News Nepal

சீனா தனது முக்கிய நலன்களை உறுதிப்படுத்த சிறிய அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்க தொடர்ந்து முயன்று வருகிறது. உதாரணமாக, ஆப்கானிஸ்தானுடன் 1,300 கி.மீ எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் தஜிகிஸ்தானில் அதன் பாதுகாப்பு நலன்களை வலியுறுத்துவதன் மூலம் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. அவர்கள் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ள பாகிஸ்தானைப் பயன்படுத்துகிறார்கள். அதேபோல அவர்கள் மேற்கு ஆசியாவில் ரஷ்யாவைப் பயன்படுத்துகிறார்கள்.

ஆசிய பிராந்தியத்தில் சீனா பல நட்பு நாடுகளை உருவாக்கி வருகிறது. சமீபத்தில் நேபாளத்தின் மீது தங்கள் செல்வாக்கை பல வழிகளில் அதிகரித்துள்ளனர், அவர்களுக்கு போக்குவரத்து வழங்குவதிலிருந்து, நேபாளத்தில் உள்கட்டமைப்பு திட்டங்கள் வரை ஈடுபடுகிறார்கள். அங்குள்ள பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை சீனா செலுத்த ஒப்புக் கொண்டதால், சமீபத்தில் நேபாளம் பள்ளிகளில் மாண்டரின் கற்றுக் கொடுப்பதை ஒப்புக்கொண்டது. கலாச்சாரம் மற்றும் கோயில்களின் மென்மையான சக்திக்கு முன்  சீனா மிகப்பெரிய பொருளாதாயச் சக்தியாக நிலைப்பெற்றுள்ளது.

Reference

China’s Strategic Mind and Method – An Insight, Anuradha & Kamal chenoy

இந்தியா சீனா எல்லைச் சிக்கல் குறித்து சில முன்வைப்புகள்

1960 இல் சீனப் பிரதமர் சூ என்லாய் இந்தியாவுக்கு விஜயம் செய்தார், இதன் போது அவர் இந்தியா-சீனா உறவுகளை அச்சுறுத்தலாக இருக்கும் எல்லைப் பிரச்சினையில் ஒரு நடைமுறை சாத்தியமான ஒரு தீர்வை முன்வத்தார்.  ஒரு இறுதி தீர்வுக்கான தொகுப்பு ஒப்பந்தத்தை சீனத் தலைவர் மாவோவின் ஒப்புதலுடன் சூ என்லாய் முன் வைத்தார் என்று குல்கர்னி கூறுகிறார். அவர் முன்வைத்த ஒப்பந்தத்தின் சாரம் இதுதான்: “இன்றைய அருணாச்சல பிரதேசத்தின் மீதான இந்தியாவின் கட்டுப்பாட்டை சீனா ஏற்றுக் கொள்ளும், இதன் மூலம் இந்தியாவின் அதிகார வரம்பு மக்மஹோன் கோடு வரை உண்மையான அங்கீகாரம் இருக்கும், அதே சமயம் அக்சாய் சின் மீதான சீனாவின் கட்டுப்பாட்டை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும்.” ஆனால் நேரு இந்த ஒப்பந்தத்தை நிராகரித்தார்.

இதற்கான காரணம், நேரு அச்சத்தில் ஆழ்ந்திருந்தார் என்று குல்கர்னி கூறுகிறார். “நான் சீனாவிற்கு அக்ஸாய் சின்னை விட்டுக் கொடுத்தால், நான் இனி இந்தியாவின் பிரதமராக இருக்க மாட்டேன்,  நான் அதை செய்ய மாட்டேன்.” என்று நேரு கூறினார். இந்தியாவின் முக்கிய நீண்டகால நலனில் இத்தகைய பேரம் ஏற்றுக்கொள்ள மக்களை நம்ப வைக்கும் ஆற்றலும் தகுதியும் நேருவுக்கு இருந்தது. இருப்பினும் ஊடகங்களும் எதிர்க்கட்சித் தலைவர்களும் எந்தவொரு நிலத்தையும் சீனாவுக்கு வழங்குவதை கடுமையாக எதிர்த்தனர்.

சூ என்லாயின் சமரச அடிப்படையிலான தீர்வை நேரு ஏற்றுக் கொண்டிருந்தால், இந்தியாவும் சீனாவும் சில பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, எல்லையை நிரந்தரமாக நிர்ணயித்திருக்க முடியும். அதுமட்டுமல்ல 1962 போரையும் கூட  தடுத்திருக்க முடியும் என்று கருதப்படுகிறது.  “1960 ல் சீனா, ஒட்டுமொத்த தீர்வின் ஒரு பகுதியாக, அக்சாய் சின் தவிர்த்து ஜம்மு-காஷ்மீரின் மீதான இந்தியாவின் இறையாண்மை ஏற்றுக் கொள்ள தயாராயிருந்தது.

இந்திய – சீன முரணைத் தீர்க்க ஒரே வழி அணிசேராக் கொள்கையே

Forum For Unity: தெஹ்ரானில் நடைபெற்ற அணி ...

இந்திய – சீன எல்லையில் இப்போது நடைபெற்றுக் கொண்டுள்ள மோதல் குறித்து இந்திய அரசின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் சிலவற்றை முன்வைக்கிறார்.  இந்தியா தன் எல்லையில் சாலை இணைப்புகள் போன்ற சில கட்டுமான நடவடிக்கைகளை பிடிக்காததனால்தான் சீனா இப்போது இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது என்கிற கருத்தை இவர் மறுக்கிறார். சீனா – இந்தியா இரண்டு நாடுகளுக்குமான பிரச்சினையில் இந்த பிருமாண்ட வணிக மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் தொடர்பு கொண்ட பிரச்சினைகள் முக்கியத்துவம் வகிக்கின்றன.

உலக் நாடுகளுடனான உறவுக்கு இந்தியாவின் அடிப்படையாக உள்ளது அதன் “அணிசேரா கொள்கை” தான். அதிலிருந்து கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் நாம் நிறையப் பிறழ்ந்து வந்துள்லோம். அதை நாம் தொடரக் கூடாது. 1962 போரில் நாம் மிகப் பெரிய இழப்புகளைச் சந்தித்து விட்டோம்.

தொடர்ந்து நமது அணிசேராக் கொள்கையைப் பின்பற்றுவதும், இந்திய – சீன எல்லைப் பிரச்சினைகளில் மன்மோகன்சிங் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான 2005ம் ஆண்டு ஒப்பந்தத்தைப் பின்பற்றுவதுமே இன்றைய சூழலில் நமக்கு நல்லது என அவர் வற்புறுத்துகிறார்.

ஒப்பந்தங்களுக்கு இரு நாடுகளும்  உடன்படவேண்டும்

திபெத்தை கைப்பற்றுவதன் மூலம் சீனா உண்மையிலேயே இந்தியாவின் அண்டை நாடாக மாறி 69 ஆண்டுகள் ஆகின்றது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டு நாடுகளும் மோதல் போக்கிற்கு ஆளாகியுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம் செழித்து வளர்ந்தது. ஆனால் ஆசிய ஜாம்பவான்களான இரண்டு நாடுகளுக்கும் மோதல்கள் உருவாகி  பிராந்தியத்தில் அமைதியின்மை உருவாகின்றது. பதட்டம் அதிகரிப்பதைத் தவிர்க்க, இரு தரப்பினரும் “உண்மையான கட்டுப்பாட்டு கோட்டில் உடன்பட வேண்டும்

இரு நாடுகளுக்கும் பொறுப்பு உண்டு

Ladakh Clashes: 'Indian Troops Crossed LAC in Galwan Valley Again ...

ஆயினும், மனிதகுலத்தின் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டிருக்கும் இரண்டு வளர்ந்துவரும் அணுசக்தி சக்திகள் தமக்கு இடையிலான பிரச்சினைகளை சரிசெய்வதற்கான பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும். எல்லைக்கோடு குறித்த முறையான உடன்படிக்கைக்கு வருவதற்கான முயற்சியில் இறங்க வேண்டும். இரு தரப்பினரும் குறைந்த பட்சம் வரைபடங்களை முன்வைக்க வேண்டும் என்று இந்தியா முன்னர் பரிந்துரைத்தது. சீனா, தன்னை மிகவும் புத்திசாலித்தனமான வீரராக நினைத்துக்கொண்டு, எப்போதும் அதைச் செய்ய மறுத்துவருகிறது.  அவ்வாறு இருக்கும்போது இந்தியாவின் எந்த ஒரு நடவடிக்கையும் சீனாவுக்கு தவறாக புரிதலை உருவாக்குகிறது.

விளையாடுவதற்கான நேரம் இதுவன்று. சீனா இப்போது வலுவாக இருக்கிறது, ஆனால் இந்தியாவின் மீது ஏற்படுத்தும் எந்த ஒரு நிர்பந்தமும், அது விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும் வழிகளைக் கண்டுபிடிக்கும்.

போரை தவிர்ப்பது இரு நாட்டு மக்களுக்கும் நல்லது

இந்திய பொருளாதாரம் ஏற்கனவே நலிவடைந்துள்ளது. கொரானாவால் நாட்டின் பொருளாதாரம் மேலும் மோசமான நிலையில் இருக்கின்றது.  வேலை யில்லாத் திண்டாட்டமும் பொருளாதார முடக்கமும் மக்களின் வாழ்வாதாரங்கள் வெகுவாக பாதித்துள்ளன. சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளில் சீனா அத்துமீறுவதையும் இராணுவத்தை குவிப்பதையும் தவிர்க்கவேண்டும். 1962 போரில் இந்தியா இழந்தவை அதிகம். இம்மாதிரியான நெருக்கடிகளில் ஒரு சிறிய பிசகு கூட மிகப் பெரிய அழிவுகளை ஏற்படுத்திவிடும்.

இன்றைய பதட்டமான சூழலில் இந்தியா சமீபத்தில் ரஷ்யாவிடமிருந்து போர் விமானங்களை வாங்க முடிவெடுத்துள்ளது. அமெரிக்காவும் இந்தியா- சீன பிரச்சனையில் தலையிட ஆர்வம் காட்டிவருகின்றது.  இவையெல்லாம் இன்றைய நிலைமையை மேலும் சிக்கலாக்கவும் மோசமான விளைவுகளுக்கு இட்டுச் செல்லவும் வழி வகுக்கும்.

References

How to end the perilous Indo-Chinese border spat, economist.com

Remaining non – aligned is good advise, The Hindu

இந்தியாவின் மீது அமெரிக்காவின் நிர்ப்பந்தங்கள்

இந்தியாவின் ஆரம்ப காலக் கோட்பாடு,  அணிசேரா கொள்கையாகும்.  அணிசேரா இயக்கத்தை உருவாக்கிய நாடுகளில் முதன்மையாuhன ஒன்றாக இருந்தது.  இருந்தாலும், பனிப்போரின் பொழுது சோவியத் ஒன்றியத்துடன் இந்தியா,நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது. இது அமெரிக்க ஐக்கிய நாட்டினுடனான உறவில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது.  1991-இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பிறகு இந்தியா, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளினுடனான தனது வெளியுறவுக் கொள்கைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தது. இதன் காரணமாக இந்திய வர்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம் ஆகியவை மேம்படத் தொடங்கியது.

2008 ஆண்டில் 66 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் இருந்த அமெரிக்கா – இந்தியா வர்த்தகம், 2018ல் 142 பில்லியன் டாலர்கள் அளவுக்கு உயர்ந்தது. இந்தியாவின் ஜிடிபி ஆண்டுக்கு 7 – 8 சதவீதம் என்ற அளவில் வளர்ந்த போது, இரு நாடுகளுக்கும் இடையில் உறவுகள் பலப்படுத்தப்பட்ட நிலையில் வர்த்தகம் உயர்ந்தது. ஆனால் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் கணிசமாகக் குறைந்த நிலையில் டிரம்ப் எடுத்த பொருளாதார நடவடிக்கை ஆகிய காரணங்களால் இரு நாடுகளுக்கும் இடையில் உறவுகள் மேம்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைத்தது.

இருந்த போதிலும், இந்தியா பெருமளவில் ஆயுதங்களும் இறக்குமதி செய்கிறது. இந்த உறவுகளில் பாதுகாப்புத் துறை வர்த்தகம் நல்ல வாய்ப்புள்ள துறையாக இருக்கிறது. கடந்த தசாப்தத்தில் இந்தியா – அமெரிக்கா பாதுகாப்புத் துறை வர்த்தகம் பெருமளவு உயர்ந்திருக்கிறது. 2008ல் ஏறத்தாழ எதுவுமே இல்லை என்ற நிலையில் இருந்து 2019ல் 15 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான அளவை எட்டியுள்ளது.

இந்திய சீன எல்லைப் பிரச்சனை உக்கிரமடைந்துவரும் நிலையில் அமெரிக்கா இந்தியாவை பணியவைக்க சில ராஜதந்திர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.  இந்தியாவிற்கு வர்த்தக ரீதியான சில சலுகைகள் வழங்குவதாகக் கூறிவருகின்றது.  பொதுமைப்படுத்தப்பட்ட அமைப்பு முன்னுரிமை (GSP) என்ற திட்டத்தில் இந்தியாவை மீண்டும் சேர்த்துக் கொள்ள விருப்பதாக அமெரிக்கா கூறியிருக்கிறது

பொதுமைப்படுத்தப்பட்ட அமைப்பு முன்னுரிமை (GSP)

GSP வரிச் சலுகை இந்த ஆண்டுடன் ...

பொதுமைப்படுத்தப்பட்ட அமைப்பு முன்னுரிமை என்பது இது மிகப்பெரிய மற்றும் பழமையான அமெரிக்காவின் வர்த்தக விருப்பத் திட்டமாகும். இதன் மூலம் உலகின் ஏழ்மையான நாடுகளில் பலவற்றிற்கு வர்த்தகத்தை தங்கள் பொருளாதாரங்களை வளர்க்கவும் வறுமையிலிருந்து வெளியேறவும் வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறப்படுகிறது. 1974 ஆம் ஆண்டின் வர்த்தகச் சட்டத்தின்படி இறக்குமதிக்கான வரிகளை நீக்குவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.   இத்திட்டத்தின் கீழ், அமெரிக்க சந்தைகளில் சில இந்திய ஏற்றுமதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது..  இதன் மூலம் இந்தியாவிற்கு கிடைக்கும் லாபம் சுமார் 200 மில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது. ஜவுளி முதல் பொறியியல் பொருட்கள் வரையிலான 5,111 இந்திய தயாரிப்புகள் இத்திட்டத்தின்கீழ் வருகின்றன.

GSP சலுகையை அமெரிக்க நிறுத்தி வைத்தது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது நிர்வாகம் இந்தியாவில் இருந்து முன்னுரிமை வர்த்தக நிலையை திரும்பப் பெற விரும்புகிறது என்று கூறியுள்ளது.  கட்டணத்தைக் குறைப்பதன் மூலம் இந்தியா அதிக அளவில் அமெரிக்க விவசாய இறக்குமதியைச் செய்வதற்காக அமெரிக்காவிற்கு கணிசமான வர்த்தக தொகுப்பை வழங்க திட்டமிட்டுள்ளது. ஆனால் அது இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. எவ்வாறாயினும், இந்தியாவுக்கு வழங்கப்பட்ட ஜி.எஸ்.பி சலுகைகளை மறுஆய்வு செய்ய இந்திய அரசு, அமெரிக்காவை நம்ப வைக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இது இந்தியாவிற்கு பெரும் பாதிப்பை உருவாக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், மருத்துவ சாதனங்களின் விலையை மூடிமறைத்தது மற்றும் அமெரிக்க நிறுவனங்களுக்கு சில பொருட்களின் மீதான கட்டணத்தை கடுமையான உயர்த்தியது ஆகிய காரணங்களைக் காட்டி அமெரிக்கா, இந்தியாவிற்கு எதிராக அதுவரை அளித்து வந்த இந்த வர்த்தக சலுகையை நிறுத்திவிட்டது. இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு எதிரான அமெரிக்காவின் எதிர்வினையாக பல வல்லுநர்கள் இதைப் பார்க்கின்றனர்.

அமெரிக்காவிலிருந்து அதிகமான கச்சா எண்ணெய் மற்றும் விமானங்களை இந்தியா வாங்க வேண்டும் என்றும், அதே வேளையில் அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை கவலைகளை நிவர்த்தி செய்யும் என்றும் கூறப்படுகிறது.

GSP சலுகையை மீண்டும் திருப்பி அளிக்கப்படலாம்

அமெரிக்கா இதற்காக தற்போது இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது. இது குறித்து வெளியான செய்தியில், அமெரிக்கா ‘நாங்கள் தொடர்ந்து இந்தியாவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். அவர்களின் ஜிஎஸ்பியை நாங்கள் திரும்ப எடுத்துக் கொண்டோம். அதனை திரும்ப கொடுக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்’ என்று கூறுகிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இந்திய பொருளாதாரத்திற்கு சாதகமான நிலைமையை உருவாக்கும் என இந்தியா நம்புகிறது. எனவே  இந்தியா அமெரிக்காவுடன் நெருக்கமாக இருக்கபதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்த நிபந்தனை

மோடிஜி உடன் டூ விட்ட ட்ரம்ப் ...

GSP ரத்து செய்யப்பட்டால் இந்தியா பெரும் சலுகைகளை இழந்ததோடு, பல இழப்புகளையும் சந்தித்தது எனலாம். இந்தியாவுக்கு இழந்த சலுகை மீண்டும் கிடைக்க வேண்டுமானால், அமெரிக்காவின் விவசாய பொருட்களை கூடுதலாக இறக்குமதி செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்திருப்பதாக. ஜிஎஸ்பியை ரத்து செய்த நேரத்திலேயே பல செய்திகள் வெளியாகின.

இந்தியா ஏற்கனவே அமெரிக்காவிடம் இருந்து பல பொருட்களை இறக்குமதி செய்து வரும் நிலையில், கூடுதலாக சுமார் 6 பில்லியன் டாலர் மதிப்புள்ள, அமெரிக்க விவசாய பொருட்களை இறக்குமதி செய்தால், வர்த்தக முன்னுரிமை பட்டியலில் இந்தியாவைப் மீண்டும் இணைத்துக் கொள்வதாக அமெரிக்கா தெரிவித்ததாக முன்னர் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA )

அமெரிக்காவுடன் ஆஸ்திரேலியா போன்ற 20 நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டுள்ள நாடுகளில் வர்த்தக தடைகளை குறைப்பதற்கும், இறக்குமதி ஒதுக்கீடுகள் மற்றும் கட்டணங்களை குறைப்பதற்கும், ஒருவருக்கொருவர் பொருட்கள் மற்றும் சேவைகளின் வர்த்தகத்தை அதிகரிப்பதற்கும் குறைந்தது இரண்டு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு அடங்கும்.

அமெரிக்கா தற்போது இந்தியாவுடம் மிகப்பெரிய பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. எப்போது வேண்டுமானாலும் இந்தியா  சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்குள் (Free Trade Agreement) செல்லலாம் என்ற உத்திரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

Expanding Your Free Trade Agreement Solutions - Supply Chain 24/7

இந்தியா மிகவும் விரும்பப்படும் தேசமில்லை (MNF)

மிகவும் விரும்பப்படும் தேசம் என்ற தகுதியுள்ள நாட்டிற்கு என்று ஒரு கட்டண முறை விதிக்கப்படுகிறது. அதாவது ஒரு நாடு மற்றொரு நாட்டில் விதிக்கும் மிகக் குறைந்த கட்டணமாகும். இது மிகவும் விரும்பப்படும் தேசம் என்ற தகுதியைக் கொண்ட ஒரு நாட்டிலிருந்து இறக்குமதி செய்ய குறைந்த கட்டணத்தை வசூலிக்கிறது. பருப்பு வகைகளின் மிகப்பெரிய நுகர்வோர் மற்றும் மொன்டோனா விவசாயிகளுக்கு இந்தியா ஒரு முக்கியமான சந்தை என்பது குறிப்பிடத்தக்கது.  ஆனால், அமெரிக்கா பருப்பு வகைகளுக்கு இந்திய சந்தையில் அதிக கட்டணங்கள் செலுத்தவேண்டும். இது நியாயமற்ற ஒரு முறையாகும்.

சீனாவுக்கு எதிராக இந்தியாவைப் பயன்படுத்துகிறது

இந்திய –சீன எல்லைப் பதற்றம் குறித்து அமெரிக்காவின் டிரம்ப் அரசு புதன்கிழமை அன்று தெரிவிக்கப்பட்ட கருத்தில், “இந்தியா-சீனா இடையே நடைபெற்று வரும் பிரச்னைகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றோம். இருதரப்புக்கும் இடையே சமரசம் செய்யும் திட்டம் ஏதும்  இல்லை” என்று கூறப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, சீனாவின் முன்னணி ஆங்கில நாளிதழான குளோபல் டைம்ஸ் என்ற செய்தித்தாளில் இந்திய-சீன விவகாரம் குறித்து கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.  அக்கட்டுரையில்,  “அமெரிக்கா புதுடெல்லியை  ஈர்த்து, அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் பின்னால் இந்தியா இருக்கிறது என்ற ஒரு மாயையை உருவாக்க விரும்புகிறது. அமெரிக்காவின் தந்திரமான செஸ் விளையாட்டில் இந்தியாவுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், சீனாவை அமெரிக்கா எந்த அளவுக்கு அச்சுறுத்தலாக கருதுகிறது என்பது புரிகிறது” என்று கூறி உள்ளது.

அதுமட்டுமின்றி, அமெரிக்காவின் தூண்டுதலுக்கு இந்தியா ஆளாகி உள்ளது. அந்த தூண்டுதல் மற்றும் ஊக்கத்தின் விளைவாக சீனாவுடன் மோதலை தூண்டுவது பகுத்தறிவற்றது என்றும் அந்த நாளிதழ் கூறி உள்ளது. இந்தியா மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகிறது என்று நேர்மையற்ற வகையில் அமெரிக்கா கூறியதை மறந்துவிடக் கூடாது. இந்தியாவை ஊக்குவிக்க சாத்தியமான ஒவ்வொரு வழியையும் அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ளும். அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் நடைபெறும் காய்நகர்த்தல்கள் அவர்கள் எண்ணியதுபோல நடக்காது” என்றும் அந்தக் கட்டுரை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டைக் குறைக்க வேண்டும்

இந்நிலையில் இந்தியா இப்படி சீனாவுக்கு எதிரான அமெரிக்க நிலைபாட்டில் இப்படி முழுமையாக இந்தியா ஆதரவளிக்க வேண்டியதில்லை என்பது இந்திய அரசின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனின் கருத்தாக இக் கட்டுரையில் முன் வைக்கப்படுகிறது.  சமீபத்தில் Global Times இதழ் தனது தலையங்கம் ஒன்றில், “சீனா காட்டும் நட்புறவுக் கொள்கையை இந்தியா அதற்குச் சமமாக நட்புறவுடன் அணுகவில்லை எனவும் அமெரிக்காவால் இந்தியா முட்டாளாக்கப்படக் கூடாது” எனவும் அறிவுரைத்துள்ளதையும் எம்.கே.நாராயணன் வலியுறுத்து குறிப்பிடத்தக்கது.

 

Reference

As Trump withdraws GSP status, India puts ‘favourable’ trade package for US on hold, theprint.in

Leave a Response

Top Reviews

Video Widget

gallery