Article

மனிதன்-வனவிலங்குகள் மோதலுக்கான காரணங்களும் தீர்வுகளும் – ந.ஜெகதீசன்மனித இனம் தோன்றியதிலிருந்தே மனிதனுக்கும் வன விலங்குகளுக்கும் மோதல் ஏற்பட்டு விட்டன. காடுகளில் வசித்த கற்கால மனிதன் உணவிற்காகவும் தன்னை பாதுகாத்துக் கொள்ளவும் விலங்குகளுடன் மோத தொடங்கினான். இதே காரணங்களுக்காகவே விலங்குகளும் மனிதனுடன் மோதின. மனிதன் காடுகளை விட்டு வெளியேற இந்த மோதல் போக்கும் ஒரு முக்கியமான காரணமாக இருந்தது. காட்டைவிட்டு வெளியேறி நிலத்தில் விவசாயம் செய்ய தொடங்கினான். தனது உணவிற்காக ஆடு மாடு கோழிகளை பழகி வளர்க்கத் தொடங்கினான். மனிதன் விலங்குகள் உடனான மோதல் மருத நிலத்தில் குறைந்துவிட்டது. வேட்டையாட காட்டிற்கு சென்று விட்டு மீண்டும் தன் இருப்பிடத்திற்கு திரும்புவது பாதுகாப்பாக அவனுக்கு இருந்தது. மலைகளில் வசித்தவர்கள் கூட்டம் கூட்டமாக ஓரிடத்தில் தங்கி தங்களை தாக்கவரும் விலங்குகளை கூட்டாக தாக்கி தங்களை தற்காத்துக் கொண்டனர்.

விலங்குகளுக்கு தேவையான உணவும் நீரும் காடுகளில் போதுமான அளவு கிடைத்ததாலும் தங்களை தற்காத்துக்கொள்ள மறைவிடங்கள் சிறப்பாக இருந்ததாலும் விலங்குகள் காடுகளிலேயே தங்கின.

நாகரீக வளர்ச்சி

மருதநிலத்து மனிதன் படிப்படியாக உணவுப்பொருட்களை சேமித்து வைக்க பழகிக் கொண்டான். வறட்சி காலத்திற்கு தேவையான உணவை பருவகாலத்தில் விளைவிக்க பழகிக் கொண்டான். இந்த உணவை சேமித்து வைக்கும் பழக்கம் தான் காடுகளை அழித்து விளை நிலங்களை உருவாக்க அடித்தளமிட்டது எனலாம். மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு வளர்ச்சி அடைந்தானோ அவ்வளவுக்கவ்வளவு காடுகளின் பரப்பளவு சுருங்கி விட்டது. இவற்றைப் பற்றிய விழிப்புணர்வு மனிதனுக்கு ஏற்பட்டிருக்கும் தற்காலத்தில் கூட காடுகள் அழிப்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தற்போது விவசாயத்திற்கு மட்டுமல்லாமல் தன் மற்ற தேவைகளை பூர்த்தி செய்யவும் கனிம வளங்களுக்காகவும் காடுகளையும் மலைகளையும் அழிக்கத் தொடங்கி விட்டான். நாகரீகம் என்ற பெயரால் மனிதன் வளர்ச்சி அடைந்தான். விலங்குகள் வீழ்ச்சி அடைந்தன.

உணவுச் சங்கிலி

இந்த உலகில் வாழும் எல்லா உயிரினங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஒன்றின் இழப்பு இன்னொன்றுக்கு உணவு என்பது இயற்கை விதி. உணவுச்சங்கிலி இவ்வாறுதான் எல்லா உயிரினங்களையும் இணைக்கிறது. மனிதன் இதை உடைக்க முனைகிறான். இயற்கை கோட்பாட்டை தகர்க்கும் போது மோதல் ஏற்படுவது இயல்பு. இந்த மோதலை தடுக்க இயற்கையின் கோட்பாடுகளை தழுவிய முடிவுகளை மனிதன் எடுத்தாக வேண்டிய கட்டாய சூழலில் இருக்கிறான். இதுவே மனித விலங்குகளின் மோதலை தடுக்கும் வழி என்பதை விட தவிர்க்கும் வழி என்பதே பொருத்தமாக இருக்கும்.

பல்லுயிர் குறித்த பார்வை

இந்த பூமி மனித இனத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல. இது அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தமானது என்பதே பல்லுயிர் கோட்பாட்டு அணுகுமுறை. தற்காலத்திய சூழலியல் ஆய்வாளர்கள் வலியுறுத்தும் முக்கிய காரணிகளில் இதுவும் ஒன்று. தேனீக்கள் மகரந்தச் சேர்க்கை செய்கின்றன. இந்த தேனீக்கள் அழிந்துவிட்டால் மகரந்தச்சேர்க்கை நடைபெறாது. மகரந்த சேர்க்கை நடைபெறாத தாவர இனங்கள் அழியத் தொடங்கிவிடும். அதனால் அந்தத் தாவரங்களை நம்பி வாழும் உயிரினங்கள் பாதிக்கப்படும். ஒரு உயிரினத்தின் அழிவு இயற்கையில் பெரும் பாதிப்பை உண்டு செய்துவிடும். தற்போது கிருஷ்ணகிரி தர்மபுரி மாவட்டங்களில் மயில்களின் எண்ணிக்கை பெருகி விட்டது. காடுகளில் உணவு கிடைக்காமல் காடுகளை ஒட்டிய விளைநிலங்களில் வந்து மனிதனின் விளைச்சலை உண்டுவிட்டு போகின்றன. இது அந்த பகுதி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தையும் கஷ்டத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த மயில்களின் எண்ணிக்கைகள் அளவற்று உயர்ந்துகொண்டே போனதற்கான காரணத்தை ஆராய்ந்தால் காடுகளில் நரிகளின் எண்ணிக்கை அற்றுப் போய் விட்டதை அறியமுடியும். நரிகள் மயில்களை வேட்டையாடி உண்பவை. நரிகள் குறைந்ததால் மயில்கள் பெருகிவிட்டன. இதேபோன்றுதான் பாம்பை கண்டால் மனிதன் அடித்துக் கொள்கிறான். பாம்புகள் குறைந்துவிட்ட இடங்களில் தான் எலிகளின் எண்ணிக்கை பெருகி பயிர்களை நாசம் செய்துவிடும். மனிதர்கள் பாம்புகளை கொல்லாமல் அவைகளிடம் இருந்து தம்மை தற்காத்துக்கொள்ள முயல வேண்டும். இந்த பல்லுயிர் நோக்குத் தன்மைதான் மனித இனம் பூமியில் நிலைத்து நிற்க துணை புரியும்.

Leopard attack | | tucson.com
மனிதன் வனவிலங்குகள் மோதலுக்கான காரணங்கள்

1. காடுகளின் பரப்பளவு குறைதல்

காடுகளை அழித்து விளைநிலங்களாக மாற்றும் போக்கு பொதுவாக உலகில் எல்லா நாடுகளிலும் இருக்கிறது. விலங்குகள் தாங்கள் வாழ்ந்த இடத்தின் பரப்பளவு குறையும் போது அவை இயல்பாகவே காடுகளை விட்டு வெளியேறத் தொடங்குகிறது. பாமாயில் எடுப்பதற்காக பனை மரங்களை நடவு செய்ய போர்னியோவின் கினாபதாங்கன் காட்டின் பெரும்பரப்பு அழிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அவ்வபோது அமேசான் காடுகளில் நடைபெறும் தீ விபத்துக்கள் கூட மனிதர்களால் ஏற்படுத்தியவை என்று சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். தமிழில் வெளியான முதல் சூழலியல் நாவலான சா. கந்தசாமி அவர்கள் எழுதிய சாயாவனம் நாவலில் வனத்தை அழித்து சக்கரை ஆலை கட்டுவார்கள். இது தமது சொந்த அனுபவம் என்று அவரே குறிப்பிடுகிறார். இந்த நிகழ்வு 1940களில் நடைபெற்றதாகும்.

2. உணவு நீர் பற்றாக்குறை

காடுகளிலும் மலைகளிலும் வாழும் விலங்குகளுக்கு உணவுக்கும் நீருக்கும் பற்றாக்குறை ஏற்படுகிறது. இலை தழைகளை உண்ணும் மான் போன்ற ஜீவன்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றன. கோடையின் கடும் வறட்சியை தாங்க முடியாமல் உணவு மற்றும் நீரை தேடி அவைகள் மனிதனின் பட்டா நிலங்களுக்கு படையெடுக்கின்றன. காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்த குரங்குகள் காட்டை ஒட்டிய கிராமங்களுக்கு குடிபெயர்கின்றன. அங்கு மனிதன் வளர்த்த தேங்காய் மரம் மற்றும் இன்ன பிற மரங்களை தமது இருப்பிடமாக மாற்றிக்கொண்டு கிடைக்கும் உணவுகளை உண்டு வாழ்கின்றன. கிராமத்தினர் அவற்றைப் பிடித்துக் கொண்டு போய் வெகு தூரத்தில் விட்டு விட்டு வந்தாலும் அவை தற்காலிகமான நடவடிக்கைகள்தான். அவை மீண்டும் திரும்பி விடுகிறது.

3. மலைகள் மற்றும் காட்டின் வளங்கள் அழிவு

மனிதன் மலைப் பிரதேசங்களை தனதாக்கிக் கொண்டான். அங்கு அளவுக்கதிகமான குடியிருப்புகளை இருக்கும் சட்டங்களையும் மீறி கட்டுகிறான். பல்லுயிர் காடுகளாக இருந்த மழைக்காடுகளை அழித்து தேயிலை காப்பி போன்ற ஒற்றை சாகுபடி தாவரங்களை நிறுவுகிறான். யானைகளின் மூதாதையர்கள் வாழ்ந்து உலவிய பகுதிகள் தற்போது எஸ்டேட்டுகளாக மாறி விட்டன. மழைக்காடுகளின் உள்ளே இயற்கையால் கட்டமைக்கப்பட்ட செடி கொடி மரங்களை அழிப்பதால் அங்கு வாழும் விலங்குகள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மனிதன் கட்டமைத்த பகுதிக்குள் வருகின்றன. நீலகிரி கோவை மாவட்டங்களில் குறிப்பாக கோத்தகிரி வால்பாறை போன்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி வாழும் மக்கள் யானைகள் தாக்கி இறந்த சம்பவம் ஏராளம்.

4. பருவநிலை மாற்றமும் வெப்பமயமாதலும்

வனவிலங்குகள் தனது இருப்பிடங்களில் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத போது அவ்விடங்களைத் தேடி அலைவது இயற்கை. இருக்கும் இடத்தில் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள இயலவில்லை. இதற்கு பருவ காலத்தில் பெய்ய வேண்டிய மழை பெய்யாததே முக்கிய காரணம். மனிதன் தனக்குத் தேவையானதை விட அளவுக்கு அதிகமாக இயற்கை வளங்களை பயன்படுத்த துவங்கி விட்டான். அவனது பெருநுகர்வு கலாச்சாரத்தால் நம் மூதாதையர்கள் கட்டிக்காத்து வந்த இயற்கைச் சமநிலை சீர்குலைந்து பருவ நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பங்குனி சித்திரையிலும் அந்த காலத்தில் மழை பொழியும். பருவநிலை மாறிவிட்டதால் ஒன்று பெய்தால் அதிகமான மழை பெய்கிறது. இல்லையென்றால் கடும் வறட்சி நிலவுகிறது. இல்லையெனில் மழை வரும் காலத்தில் மழை வராமல் காலம் மாறி மழை பொழிகிறது. இந்த பருவ நிலை மாற்றத்திற்கு வெப்பமயமாதலும் ஒரு காரணம். புவி வெப்பமயமாவதற்கு மனிதனின் நுகர்வு கலாச்சாரம் தான் முக்கிய காரணம்.

5. சுற்றுலா

காடு மலை வாசஸ்தலங்களில் மனிதன் சுற்றிப் பார்க்கச் செல்லும்போது பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குடித்துவிட்டு போடக் கூடிய கண்ணாடி பாட்டில்கள் ஆகியவை காட்டு விலங்குகளுக்கு துன்பத்தை ஏற்படுத்துகிறது. ஒரு பாட்டில் மேல் யானை கால் வைத்தால் அதன் பாதம் என்னவாகும்? அவ்வளவு பெரிய உடலை இருந்த அந்த பாதம் எப்படித் தாங்கும்? இவைகள் கூட வன விலங்குகள் மீது மனிதன் மேற்கொள்ளும் ஒரு விதமான மோதலே. வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் கட்டிடங்கள் கட்டுவதை முன்பே பார்த்தோம்.

Preventing human-wildlife conflict | WWF
மனிதன்- வனவிலங்குகள் மோதலை குறைக்க வழிகள்

1. காடுகளின் பரப்பளவை குறைக்கும் மனிதனின் நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும். மலைகளையும் குன்றுகளையும் அதை ஒட்டிய காடுகளிலும் பெருநிறுவனங்கள் தாது பொருட்கள் உள்ளிட்டவற்றை எடுப்பதை தடுக்க வேண்டும். அரசு அவற்றுக்கு அனுமதி தறுவதை நிறுத்த வேண்டும். விலங்குகளின் வாழ்விடத்தில் நமது நடமாட்டத்தை குறைத்துக்கொண்டால் அவைகள் நமது வாழ்வதற்கு வருவது குறைந்து போகும்.

2. மனிதனின் பெருநுகர்வை குறைக்கவேண்டும். காடு மலைகளிலிருந்து மனிதன் பிடுங்கிக் கொள்வதை குறைக்க வேண்டும். காடு மலை தவிர்த்து சமவெளிப் பகுதிகளில் அவன் ஏற்படுத்தும் மாற்றங்களும் சேர்ந்துதான் பருவநிலையை பாதிக்கிறது. அளவுக்கு அதிகமான வாகனங்கள், கம்பெனிகளில் இருந்து வெளியேறும் புகை, சாய தோல் தொழிற்சாலை கழிவுகள் போன்ற காரணங்களால் புவி வெப்பமயமாகிறது. இவைகள் பொருளாதார வளர்ச்சி என்று நாம் கருதினாலும் அதன் விளைவுகள் வரும் காலங்களில் கடுமையான தாக்கத்தை உண்டு பண்ணும். ஆகையால் மிகை நுகர்வை குறைக்கும் எண்ணத்தை இளம்வயதிலேயே பள்ளிப் பருவத்திலிருந்து ஏற்படுத்த வேண்டும்

3. சூழலியல் குறித்தும் வனவிலங்குகள் குறித்தும் பள்ளிப் பாடங்கள் தற்போதும் இருக்கிறது. தற்போதைய கல்வி முறையானது மனப்பாடம் செய்து அவற்றை தேர்வுகளில் கொட்டி விடுவதோடு நின்றுவிடுகிறது. கல்வியில் சூழலியல் குறித்து மாணவர்கள் மனதில் ஆழமாக பதிந்து அவனது வாழ்க்கையில் பிரதிபலிக்கும் வகையில் உளவியல் தன்மையோடு கூடிய செயல்முறை மற்றும் நேரடி உணர்தல் பாட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அனைத்து கல்லூரிகளிலும் சூழலியல் மற்றும் மிகை நுகர்வு குறித்த பாடங்கள் கட்டாயமாக்கப்பட வேண்டும். கலை-அறிவியல் தாண்டி தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் இதை செயல்படுத்த வேண்டும்.

4. மலைப்பிரதேசங்களில் அரசு மற்றும் வல்லுனர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ள அளவிற்கு மேலாக கட்டிடங்கள் கட்டப்படுவதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். விதி மீறல்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

5. குன்றுகள் மற்றும் மலைப்பிரதேசங்களில் தேயிலை காப்பி போன்ற ஒற்றைப் பயிர் சாகுபடி களை மேலும் அதிகரிக்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். படிப்படியாக இதைக்குறைத்து பல்லுயிர் தாவரங்களை வளர்க்க முயற்சிகள் எடுக்க வேண்டும்.

6. யானைகள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் காடுகளை சுற்றி அகழி வெட்டுவது நடைமுறையில் இருந்தாலும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக இருக்கிறது இவற்றை முறையாக பராமரித்து கண்காணிக்க வேண்டும்.

7. காடுகளை ஒட்டிய சமவெளிப் பகுதிகளில் ஆழமான ஆழ்துளை கிணறுகள் விவசாயிகளால் போடப்படுகிறது. காட்டை ஒட்டி உள்ள விளை நிலங்களில் ஒரு குறிப்பிட்ட அளவில்தான் ஆழ்துளை கிணறுகள் போட வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட வேண்டும். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனில் அவர்களுக்கு குறைந்த நீரில் விவசாயம் செய்யும் தொழில் நுட்பத்தை கற்று தரவேண்டும்.

8. கோடை காலங்களில் விலங்குகளுக்கு நீர் தான் முக்கியமான பிரச்சனை. காடுகளிலுள்ள குட்டைகளிலும் நீர்த்தேக்கங்களும் நீர் வற்றி விட்டால் காடுகளில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள செயற்கை தொட்டிகளில் நீர் நிரப்பும் நடைமுறை தற்போது இருக்கிறது. ஆனால் இது முழுமையாக செயல்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு மக்களிடையே நிலவுகிறது. அரசு இதற்காக கூடுதல் நிதி ஒதுக்கி அந்த நிதி முழுவதும் இதற்காக பயன்படுத்தப்படுகிறதா என்று தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். ஒதுக்கப்படும் நிதி முறையாக செயல்படுத்தப்பட்டால் இரவில் காட்டு ஜீவன்கள் காட்டைவிட்டு வெளிவராது என்பது கிராமவாசிகளின் கருத்து.

9. சுமார் 8 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்புடைய இந்திய காடுகளை பாதுகாக்க பராமரிக்க தற்போது இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைவு. இருக்கும் சட்டதிட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்த பணியாளர்கள் எண்ணிக்கையை கூட்ட வேண்டும்.

10. வன விவசாயிகள் தங்கள் பயிர்களை பாதுகாக்க பயிர்களை சுற்றி மின்வேலி அமைத்தல், கள்ளத்துப்பாக்கி பயன்பாடு, வாய்வேட்டு வைத்தல் போன்ற செயல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறுகிறது. மான் மற்றும் பன்றிகளை குறிவைத்து மேற்கண்ட சட்டத்துக்குப் புறம்பான செயல்கள் நடைபெறுகிறது. விவசாயிகளின் நிலையும் பரிதாபத்திற்கு உரியது தான். தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்த உழைப்பை காட்டு ஜீவன்கள் தின்று விடுகிறது என்ற ஆதங்கமே அவர்களை தவறு செய்யத் தூண்டுகிறது. காட்டு ஜீவன்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தை அறிமுகப் படுத்தலாம். முறையாக ஆய்வு செய்து அவர்களுக்கு இழப்பீடு வழங்கலாம்.

தமது இருப்பிடங்களை விட்டு வனவிலங்குகள் வெளியேறி மனித இருப்பிடங்களை நோக்கி வருவதே மனிதன் வனவிலங்குகளுக்கிடையே மோதலுக்கான முக்கிய காரணம். இந்த மோதல்களை கூர்ந்து ஆழ்ந்து நோக்கினால் மனிதனின் பெருநுகர்வும் பருவகால மாற்றமும் மறை காரணிகளாக தொக்கி நிற்பதை உணர முடியும். இவை பொதுமக்களுக்கு உணர்த்தப்பட வேண்டும். மக்கள் உணர வேண்டும். அரசும் நெருக்கடியான இந்த நிலையை உணர்ந்து சமரசமின்றி பிரச்சனைகளுக்கான தீர்வுகளை அமல்படுத்த முனைய வேண்டும்.

ந.ஜெகதீசன்
பூவிருந்தவல்லி.
jaga.chennai@gmail.com.

7 Comments

  1. அனைவரும் படித்து செயல்படுத்த வேண்டிய கட்டுரை . பெருநுகர்வு கலாச்சாரம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. அருமை.

  2. தற்கால சூழலுக்கு தேவையான சிறப்பான கட்டுரை.விரிவான எளிமையான எழுத்துநடை.வாழ்த்துகள் தோழர் ந.ஜெகதீசன்

    1. அருமையான கட்டுரை, வாழ்த்துக்கள் தோழர்

  3. சூழலியல் சார்ந்த கட்டுரை அருமை தோழர். மனித இனம் மற்றும் வன விலங்கு மோதல் தீர்வு என விரிவான கட்டுரை தொகுப்பு. வாழ்த்துகள் தோழர்

  4. சிறப்பன உள்ளடக்கம். காலத்திற்கு தேவையான கட்டுரை… வாழ்த்துகள் தோழர்….

Leave a Response