Web Series

தொடர் 12: அக்ரஹாரத்தில் பூனை – திலீப் குமார் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

51views
Spread the love

குஜராத்தியைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் திலீப் குமாரின் படைப்புலகம், பெரும்பாலும் குஜராத்தி சமூகத்தையே வெளிப்படுத்தி வருகிறது. அச்சமூகத்தில் பெண்களில் நிலையை இவரது படைப்புகள் நுட்பமாக, வெளிப்படுத்துகிறது. மொழி எதுவாயிருந்தாலும் பெண்கள் நிலை என்பது “ஒரே இந்தியா” என்பதை அவை உறுதிப்படுத்துகிறது

அக்ரஹாரத்தில்  பூனை

திலீப் குமார்

“இந்த கிழட்டு முண்டைக்கு ஒரு சாவு வர மாட்டேன் என்கிறது.  இத்தோடு இது ஏழாவது தடவை” பப்லிப் பாட்டி அழுகையுடன் தாழ்ந்த குரலில் அட்சரசுத்தமான குஜராத்தியில் கறுவினாள். மருமகள் வெளியே வந்து பூனை பாலைக் குடித்துச் சென்றதை அறிந்தாள்.  “திறந்த வீட்டில் பூனை நுழைந்ததுகூடத் தெரியாமல் அப்படி என்ன செய்து கொண்டிருந்தீர்களோ?” பாட்டி மருமகளை வக்கணை செய்தாள்.“சரி பூஜைக்கு இன்னொரு கிண்ணம் பால் எடுத்து வா, நட்டூ  வந்ததும் இந்த பூனைச் சனியனுக்கு  ஏதாவது வழி செய்ய வேண்டும்” என்றாள்  பாட்டி.

ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரத்தில்  பூனைகள் நுழையாததற்குச் சூழலியல் காரணங்கள் என்பதைவிடவும் தத்துவார்த்த காரணங்கள்தான் ஏதாவது இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.  ஏனென்றால் அக்ரஹாரவாசிகளில் பெரும்பாலோர் புஷ்டி மார்க்கி வைஷ்ணவர்கள்.  தென்கலை வைஷ்ணவர்களுக்குப் பூனைகளின் மீது இருக்கக்கூடிய  அபிமானம் புஷ்டி மார்க்கிகளிடம் இருக்காது.  பாலகிருஷ்ண பிரதானமான  புஷ்டி மார்க்கத்தில் பஷு பட்சிகளிடம் அன்பு என்ற உப கோட்பாடு இருந்தாலும், பாலித்தின் பைகளையும் சினிமாப் போஸ்டர்களையும்  தின்று, கண்ட இடத்தில் சாணி போடும் மாடுகளுக்குத்தான் முக்கியத்துவம் அதிகம்.

பூஜைக்கு பீடா தயாரிக்க வெற்றிலையைக் கழுவ உள்கட்டுக்குச் சென்ற ஓரிரு நிமிடங்களில் துல்லியமாகப் பிரசன்னமாகி  தயக்கமின்றி உள்ளே புகுந்து ஒரு முழுக் கிண்ணப் பாலையும் நக்கித் தீர்த்துவிட்டு எதுவு மே நடக்காதது போல் அது திரும்பிக் கொண்டிருந்த போதுதான் முதல் முறையாக பாட்டியின் கண்ணில் பட்டது. மடிக்கோலை எடுத்துப் பூனையை நோக்கி தாறுமாறாக எறிந்தாள்.  அது லாவகமாக நகர்ந்து மறைந்தது.  

Cat in the Agraharam and Other Stories: Dilip Kumar: 9780810141551:  Amazon.com: Books

கலவரமடைந்த மாமியாரின் முகத்தைப் பார்த்ததும் ஓடி வந்த மாதூரிக்கு சிரிப்புதான் வந்தது.  “போனால் போகிறது விடுங்கள், பா வாயில்லா ஜீவன்” என்றாள். “ச்சீ வாயை மூடு, மலட்டுக் கழுதை” என்று வன்மத்துடன் இரைந்தாள். சிறுமைப்பட்டு நின்றாள் மாதூரி.  

பப்லிப்பாட்டிக்கு அக்ரஹாரத்தில் அபார பிரக்யாதி ஏற்பட்டிருந்தது.  புஷ்டி மார்க்க நியம நிஷ்டைகள், விரதங்கள், திருமண, வளைகாப்பு, சிரார்த்த நிகழ்வுகள் குறித்த விதிகளை தலை கீழாக ஒப்பிப்பாள்.  அவள் வீட்டிற்கு மந்திரம் சொல்ல வந்திருக்கும் பிராமணர்கள் கூட பப்லிப் பாட்டியைக் கண்டால் உஷாராகவே இருப்பார்கள். ஆயின் மாட்டுப் பெண் மாதூரிக்கு கிழவி லேசுப்பட்டவள் இல்லை என்ற எண்ணமே இருந்தது.

“நட்டூ அந்த கிழட்டுப் பீடையை எப்படியாவது ஒழித்துக் கட்டு” என்று பாட்டி சொன்னாள்.  ஒரு மார்வாடி வியாபாரிக்கு 1ஆம் நம்பர் கணக்கும், 2ஆம் நம்பர் கணக்கும் எழுதும் பாட்டியின் மகன் நட்டூ வுக்கு கெட்ட பழக்கம், வம்பு தும்பு ஏதும் கிடையாது.  அன்றாடம் மாலை வீடு திரும்பியவுடன் உடை மாற்றி  ஹவேலிக்குச் சென்று எட்டு மணிக்குத்தான் திரும்புவான்.  சனிக்கிழமைகளில் இரவு பத்து மணிக்கு பஜனைக்குப் போவான்,  குஜராத்தி வருஷப் பிறப்பு அன்று மாதூரியை சினிமாவுக்கோ பீச்சுக்கோ அழைத்துச் செல்வான்.

“பூனையைக் கொல்வது பாபமில்லையா?” நடுங்கினான் நட்டூ.  “அட உப்பில்லாதவனே அந்தக் கழுதையை எங்காவது விரட்டி விட்டு வா. அதைக் கொல்வது பாபம் என்று எனக்குத் தெரியாதா?” பாட்டிக்கு நட்டூவைக் காட்டிலும் இந்தக் காரியத்திற்கு தன் தம்பி ரஞ்சித் சிங்கின் மூத்த மகன் சூரிதான் பொருத்தமானவன் என்று நினைத்தாள்.  கடவுளையும் பணக்காரர்களையும் பிடிக்காத அவன், நீதிக்குப் பின்தான் சாதி என்ற அடிப்படையில் தப்புத்தண்டாவையும் கட்டைப் பஞ்சாயத்தையும் செய்து வந்தான்.  

அடுத்த நாள் பாட்டியின் மாப்பிள்ளை கொச்சியிலிருந்து சென்னை வந்தார்,  அவர் தங்கியிருந்த ஒரு வாரமும் பூனை வீட்டுப் பக்கம் வரவில்லை,  பாட்டிகூட மாப்பிள்ளைக்கு உபசரணை செய்யும் மும்முரத்தில் அதை மறந்தாள்,  

பூனையை பிடித்தவாறே சூரி வந்தான், புதுப் பெண்போல் அவன் கையில் கூச்சத்துடன் நெளிந்து காட்டியது.  “திருவொற்றியூரிலா திருவான்மியூரிலா கொண்டு விட வேண்டும்?” என்று கேட்டான்.

பாட்டி உள்ளே சென்று மாப்பிள்ளை மறந்து விட்டுச் சென்ற பொடி டப்பியை எடுத்து வந்தாள்,  உள்ளங்கையில் பொடியை கொட்டிக் கொண்டாள்,  ரகசிய பாவத்துடன் கையசைத்துச் சூரியை அருகே வரச் சொன்னாள்.  பூனையின் மூக்கில் பொடியை வைத்து அழுத்தித் தேய்த்து விட்டாள். மின்சாரம் தாக்கியது போல் பூனை எகிறி மல்லாக்கக் கீழே விழுந்தது. சமாளித்து எழுந்து நடக்க யத்தனித்த போது கால்கள் குழைந்து விழுந்தன. எல்லோரும் சிரித்தனர்.   கலைய ஆரம்பித்தனர்.  நடுக்கூடத்தில் மாதூரி நின்று கொண்டிருந்தாள்,  பாட்டி தலைகுனிந்து அவளைக் கடந்தாள்.

மாலை பாட்டியைப் பார்க்க யாரோ வந்தார்கள். பப்லிப் பாட்டி ஆரம்பித்தாள் “புஷ்டி மார்க்கம் என்ன சொல்கிறதேன்றால்…..”

@ 1996 தினமணி பொங்கல் மலர்

பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.  

 

Leave a Response