Book Review

நூல் அறிமுகம்: சொல்லுக்கும் – செயலுக்கும் வேறுபாடற்று வாழ்ந்த சிஎஸ்பி – சி பி கிருஷ்ணன்

Spread the love

 

சிஎஸ் பஞ்சாபகேசன் – இயக்கத்தோடு இணைந்த வாழ்க்கை என்ற நூல் சுதந்திர போராட்ட வீரர் தோழர் என் சங்கரையாவின் இளைய சகோதரரும் புகழ் வாய்ந்த எழுத்தாளருமான தோழர் என் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதி ”உழைக்கும் வர்க்கம்” பத்திரிக்கையால் வெளியிடப்பட்டது. தபால்-தந்தி உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர்களின் மகத்தான தலைவராக அரும்பணி ஆற்றியவரும் எனது தந்தையுமான சிஎஸ் பஞ்சாபகேசன் (சிஎஸ்பி) பற்றிய வாழ்க்கைக் குறிப்பை மிக எளிமையாக படிப்பவரை ஈர்க்கும் வண்ணம் 104 பக்கங்களில் வழங்கியுள்ளார் ஆசிரியர். 

வேலூர் மாவட்டம் சேத்துப்பட்டில் 1924 அக்டோபர் மாதம் 10ஆம் தேதி பிறந்த சிஎஸ்பி, 1945ஆம் வருடம் தபால்-தந்தி இலாகாவில் பணியில் சேர்ந்தார். சுதந்திர போராட்டம் உச்ச கட்டத்தில் இருந்த அந்த சமயத்தில் தேசிய இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, காங்கிரஸ் கட்சியில் ஈடுபாடு கொண்டார்.  பின்னர் படிப்படியாக தொழிற்சங்க இயக்கத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.  தபால்-தந்தி துறையில் 1954 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட NFPTE என்ற ஒன்றுபட்ட அமைப்பு நாடெங்கிலும் இருந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களிடையே மிகுந்த நம்பிக்கையையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தின. சிஎஸ்பி மற்றும் அவரது சக தோழர்கள் சம்மேளனத்தின் செயல்பாடுகளில் மிகுந்த ஆர்வம் கொண்டனர். 

1960-ஆம் ஆண்டு தபால்-தந்தி ஊழியர் சம்மேளனம் உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர்களின் போராட்டக்குழு, இரண்டாவது ஊதியக்குழுவின் பாதகமான அம்சங்களை எதிர்த்து ஜூலை 11 முதல் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. சிஎஸ்பி தலைமையில் வேலூர் மாவட்டத்தில் வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றது.  நேரு அரசு கடும் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது. நாடு முழுவதும் 17780 பேர் கைது செய்யப்பட்டனர். ஜூலை 15ஆம் தேதி சிஎஸ்பி கைது செய்யப்பட்டார். அவருடன் சேர்ந்து தபால்-தந்தி ஊழியர்கள் 30 பேர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். சிஎஸ்பியும், குற்றம் சாட்டப்பட்ட இதரர்களும் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். ஒற்றை வருமானத்தில் ஏழு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த சிஎஸ்பியின் குடும்பம் வறுமையில் வாடியது.  

மத்திய காங்கிரஸ் அரசு தபால்-தந்தி ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதை கண்டு அவருக்கு காங்கிரஸ் மீது இருந்த நம்பிக்கை தகர ஆரம்பித்தது. போராட்ட காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிதான் தானாக முன்வந்து பேருதவி புரிந்தது. அதன் தலைவர்கள் எளிமையாகவும், எல்லோரும் அணுகும் வகையிலும் இருந்தனர். மேலும் மக்கள் பிரச்சனைகளை முன் நிறுத்தி வெளிவந்த கம்யூனிஸ்ட் கட்சியின் நாளேடான ஜனசக்தியை சிஎஸ்பி தொடர்ந்து படித்து வந்ததார். அதனால் இயல்பாகவே அவருக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. அவர் 1960ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரானார். 

Image may contain: 1 person

சிஎஸ்பி சிறந்த மேடைப் பேச்சாளர். கேட்பவர்களை தன் தரப்பு வாதத்தை ஏற்கவைக்கும் திறமை படைத்தவர். அவர் தொழிற்சங்க வகுப்பெடுப்பதில் சிறந்து விளங்கியவர். ”தோழர் சிஎஸ்பி யின் பேச்சு கணீரென்ற குரலில் மிகவும் நம்பிக்கை ஊட்டுவதாகவும், தெளிவூட்டுவதாகவும் இருந்தது. என் மனதில் அவர் ஒரு  கம்பீரமான மனிதராகவே இன்றும் இடம் பெற்றுள்ளார்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்ஏ பெருமாள் கூறுகிறார்.

வேலூரில் ஒரு மாநாட்டில் அவர் உரையாற்றி முடித்தவுடன் அவரது பேச்சால் ஈர்க்கப்பட்ட 500-க்கும் மேற்பட்டோர் தாங்களாகவே எழுந்து நின்று கரவொலி எழுப்பி ”சிஎஸ்பி ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்டனர். உடனே சிஎஸ்பி தலையிட்டு ”சிஎஸ்பி ஜிந்தாபாத் என்று கூறாதீர்கள் இன்குலாப் சிந்தாபாத் என்று கூறுங்கள்” என்றவுடன் அரங்கமே அதிரும் வண்ணம் அனைவரும் ”இன்குலாப் ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்டனர் என்று நினைவு கூறுகிறார் தபால்-தந்தி ஊழியர் இயக்கத் தலைவர் டிஎஸ் ராஜன்.

சுதந்திரப் போராட்ட வரலாறு, இயக்க இயல் பொருள் முதல் வாதம், வரலாற்றியல் பொருள்முதல்வாதம், அரசியல் பொருளாதாரம் போன்ற தலைப்புகளில் ஏராளமான வகுப்புகளை சிஎஸ்பி எடுத்துள்ளார். மனிதகுல வரலாற்றை சிஎஸ்பி அற்புதமாக விளக்குவார். ”மனிதக் குரங்கில் இந்து, முஸ்லிம். கிறிஸ்தவர் என்ற எந்த வேறுபாடும் இருந்ததில்லை. மனிதன் ஆன பிறகுதான் இந்த பிரிவினை ஏற்பட்டது. அடிமைச் சமுதாயத்தில் கருத்து ரீதியில் பெரும்பாலானவர்களை அடிமைப்படுத்துவதற்காகவே கடவுள், மதம் உருவாக்கப்பட்டது” என்பதை அவர் விளக்குவார். 

வகுப்பெடுக்கும் போது பல உதாரணங்களைக் கூறி கேட்பவர்களை ஈர்ப்பதில் தனித்தன்மை படைத்தவர். அக சூழ்நிலை, புற சூழ்நிலை என்பதை விளக்குவதற்காக அவர் கூறும் கோழி முட்டை உதாரணம் பிரசித்தி பெற்றது. கோழி முட்டையிலிருந்து குஞ்சு பெறவேண்டுமானால் முட்டைக்குள் மஞ்சள் கரு, வெள்ளைக் கரு ஆகியவை இருக்க வேண்டும். அதுதான் அக சூழ்நிலை. அதேசமயம் அதை அடைகாக்க தேவையான உஷ்ணமும் இருக்க வேண்டும். அது தான் புற சூழ்நிலை. இவை இரண்டும் இணைந்தால் தான் மாற்றம் ஏற்படும் என்று விளக்குவார்.

”விமர்சனம் என்று வரும்போது ஒருவரின் நல்ல விஷயங்களை முதலில் முன் வைத்துவிட்டு, பிறகு தான் அவர் மீதான விமர்சனத்தை முன் வைக்க வேண்டும். ஒருவரை விமர்சனம் செய்யும்போது பூனை தன் குட்டியை கவ்வுவது போல இருக்க வேண்டும். பூனை எலியைக் கடிப்பது போல இருக்கக் கூடாது. அந்த விமர்சனம் அவர் தன் செயலை உணர்ந்து மாற்றிக் கொள்ளும் வகையில் அமைய வேண்டும்” என்று கூறுவார். அதை நடைமுறைப்படுத்தவும் செய்வார்.

அவர் சிறந்த எழுத்தாளர். அவரின் எழுத்துக்கள் மிகவும் கூர்மையாக இருக்கும். 1980 ஆம் ஆண்டு சிஎஸ்பி பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். அதன் பிறகு தபால்-தந்தி ஊழியர்களுக்காக அவர் துவக்க-ஆசிரியராக பொறுப்பேற்று நடத்திய ”உழைக்கும் வர்க்கம்” மாத ஏட்டில் மக்கள் பிரச்சனைகளையும், தொழிலாளர் பிரச்சனைகளையும் படிப்பவர்கள் மனதில் படியும்படி எடுத்துரைப்பார்.

1982 ஜனவரி 19 ஆம் நாள் ஒரு கோடியே 20 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்ற நாடு தழுவிய மகத்தான வேலை நிறுத்தம் பற்றி எழுதும் போது “இது ஒரு அரசியல் நடவடிக்கை என்பது மத்திய அரசின் குற்றச்சாட்டு.  விலைவாசி ஏறுவதும், பஞ்சப்படியை முடக்குவதும், தொழிலாளர்கள் உரிமையை பறிப்பதும், ஆள் தூக்கிச் சட்டங்களைப் போட்டு வேலை நிறுத்தங்களை முறியடிக்க முயற்சிப்பதும் அரசியலுக்கு சம்பந்தப்பட்டவையாக இருக்கும் போது, அவற்றை எதிர்த்துப் போராடுவது அரசியலுக்கு அப்பாற்பட்டதாக எப்படி இருக்க முடியும்?” என்று கேட்பார். அத்துக் கூலிக்கு அநியாயமாக சுரண்டப்படும் ஈடி (எக்ஸ்ட்ரா டிபார்ட்மெண்ட்) ஊழியர்களின் அவல நிலையை விளக்கி தீர்வு காணும் வகையில் “சுரண்டப்படும் ஈடி ஊழியர்” என்ற நூலை எழுதினார். 

சிஎஸ்பியின் வீட்டில் அடிக்கடி கூட்டங்கள் நடக்கும். கூட்டத்திற்கு வரும் அனைவருக்கும் அவரது துணைவியாரின் வரவேற்பும், தேநீரும் நிச்சயம் உண்டு. குடும்பத்தை கவனித்து கொள்வதிலும், அவர் தன் இயக்கப் பணியை தொய்வின்றி செய்வதிலும் அவருக்கு அரும் பெரும் துணையாக நின்றவர் அவரது துணைவியார் திருபுரசுந்தரி. சிஎஸ்பி வீட்டிலும் குடும்ப ஜனநாயகத்தை கடைப்பிடிப்பவர். எல்லா முக்கிய முடிவுகளையும் வீட்டில் உள்ள அனைவரையும் கூட்டி அவர்களின் கருத்தை அறிந்தபின் கருத்தொற்றுமை மிக்க முடிவைத் தான் அவர் எடுப்பார். 

Image may contain: 1 person, smiling
சி பி கிருஷ்ணன்

”ஒரு முறை தோழர் சிஎஸ்பி அவர்களுடன் நாள் முழுவதும் ஒரு கூட்டத்தில் இருந்தேன். மறுநாள் கூட்டத்திற்கு வரும் போது அவர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். என்ன காரணம் என்று யாராலும் யூகிக்க முடியவில்லை. முதல்நாள் மாலை அவரது மகன் ரவிசங்கருக்கு தோழர் சிஎஸ்பி அவர்களின் துணைவியார் வீட்டிலேயே காதல் திருமணம் செய்து வைத்ததாக கூறியபோது அனைவரும் அசந்து போனோம்” என்று தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் தேசிய தபால் ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாபொதுச் செயலாளர் கே ராகவேந்திரன். 

“சிஎஸ்பிக்கு இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு. பாரதியின் வரிகளில் அவர் ஆழ்ந்து கிடந்தார். கர்நாடக இசைப்பிரியர். ஜேசுதாசின் பாடலை மெய் மறந்து உருகிப் போய் ரசிப்பார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க வளர்ச்சியில் ஈடுபாடும் அக்கறையும் கொண்டவர்” என்று கூறுகிறார் அவரின் நெருங்கிய தோழரான சிவகுரு. ”நினவுகள் அழிவதில்லை நாவலை நாடகமாக்க சிஎஸ்பி பெரிதும் உதவினார்” என்கிறார் எழுத்தாளர் கமலாலயன்.

1991ம் ஆண்டு அவருக்கு பக்கவாத நோய் வந்தது. ஆனாலும் ஒரு நாளைக்கு 14 மணி நேரம் பொது வேலைக்காக உழைப்பார். 

1996ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி காலையில் அவரது உடல் நிலை மோசமடையத் தொடங்கியது. தன் இறுதி நேரம் நெருங்குகிறது என்பதை உணர்ந்த சிஎஸ்பி, “மரணத்திற்குப் பின் தனது கண்களை தானம் செய்ய வேண்டும், எந்தவித மதச் சடங்குகளும் செய்யக் கூடாது. மனைவியும் இடுகாட்டுக்கு வரவேண்டும்” என்று வலியுறுத்திக் கூறினார். அன்று காலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்தில் அவர் உயிர் நீத்தார். அவரின் கடைசி விருப்பங்கள் நிறைவேற்றப் பட்டன.

”சிஎஸ்பி ஒரு யுகபுருஷன். சமூகக் கொடுமைகளை இதர வகுப்பினர் மத்தியில் பக்குவமாக விளக்கி அவர்களை தன்னுடைய கொள்கையின்பால் ஈர்த்தவர்” என்கிறார் வேலூர் மாவட்டம் அஞ்சல் ஓய்வு ஊழியர் சங்கத்தின் பொறுப்பாளர் சந்தானராமன். 

”அவர் சிறந்த போராளி. பாதிப்புக்களுக்கிடையேயும் போராட தயங்க மாட்டார்” என்று கூறுகிறார் சிஎஸ்பியின் சமகாலத் தோழர் வி.என்.ராகவன்.

”எளியமுறையில் சிஎஸ்பி வாழ்ந்தார். வாழ்வின் இறுதிநாள் வரை அனுபவத்திலிருந்தும், நூல்களிலிருந்தும் கற்றுக் கொள்வதை அவர் நிறுத்தவில்லை. அவர் வாழ்நாள் முழுவதும் மாணவராகவும், ஆசிரியராகவும் இருந்தார். பல தொழிலாளி வர்க்க இயக்கத் தலைவர்களை உருவாக்கினார். தலைவர்களின் தலைவராக அவர் திகழ்ந்தார். அவர் சாதி, மத, இன பேதங்களுக்கு அப்பால் ஒரு பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதியாக வாழ்ந்தார். தோழர் சிஎஸ்பியின் வாழ்க்கை புதிய தலைமுறையினருக்கு ஒரு பாட புத்தகமாக திகழ்கிறது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பிஆர் பரமேஸ்வரன் சிஎஸ்பி பற்றி கூறுகிறார்.

2020 மே 31ம் தேதி சிஎஸ்பியின் 25வது நினைவு தினம். அதை ஒட்டி மீண்டும் இந்நூலை படிக்கும்போது, “தனது சொல் படியே வாழ்ந்த, தான் கடைபிடித்ததையே பிறரிடம் பகிர்ந்து கொண்ட – சொல்லுக்கும், செயலுக்கும் வேறுபாடற்ற” மாமனிதனாக வாழ்ந்து காட்டிய என் தந்தை என் நினைவில் ஓங்கி நிற்கிறார்.

தொடர்புக்கு : cpkrishnan1959@gmail.com

2 Comments

  1. *Great* 👏👏👏
    இந்த குறிப்பிட்ட பகுதி இன்றைய தலைமுறைக்கான அரிய பாடம். சமுகம் சுமத்திய பேத அடையாளங்களை உதற வாழ்வின் இறுதி கட்டம் வரையில் போராடுவது எவ்வளவு மேன்மையானது! 🙏🙏🙏

    *1991ம் ஆண்டு அவருக்கு பக்கவாத நோய் வந்தது. ஆனாலும் ஒரு நாளைக்கு 14 மணி நேரம் பொது வேலைக்காக உழைப்பார். 1996ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி காலையில் அவரது உடல் நிலை மோசமடையத் தொடங்கியது. தன் இறுதி நேரம் நெருங்குகிறது என்பதை உணர்ந்த சிஎஸ்பி, “மரணத்திற்குப் பின் தனது கண்களை தானம் செய்ய வேண்டும், எந்தவித மதச் சடங்குகளும் செய்யக் கூடாது. மனைவியும் இடுகாட்டுக்கு வரவேண்டும்” என்று வலியுறுத்திக் கூறினார். அன்று காலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்தில் அவர் உயிர் நீத்தார். அவரின் கடைசி விருப்பங்கள் நிறைவேற்றப்பட்டன.*

  2. 1982 ஜனவரி 19 ஆம் நாள் ஒரு கோடியே 20 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்ற நாடு தழுவிய மகத்தான வேலை நிறுத்தம் பற்றி எழுதும் போது “இது ஒரு அரசியல் நடவடிக்கை என்பது மத்திய அரசின் குற்றச்சாட்டு. விலைவாசி ஏறுவதும், பஞ்சப்படியை முடக்குவதும், தொழிலாளர்கள் உரிமையை பறிப்பதும், ஆள் தூக்கிச் சட்டங்களைப் போட்டு வேலை நிறுத்தங்களை முறியடிக்க முயற்சிப்பதும் அரசியலுக்கு சம்பந்தப்பட்டவையாக இருக்கும் போது, அவற்றை எதிர்த்துப் போராடுவது அரசியலுக்கு அப்பாற்பட்டதாக எப்படி இருக்க முடியும்?” என்று கேட்பார்.

    இந்த வரிகள் அப்படியே இன்றைக்கும் பொருந்தும்.

Leave a Response

Top Reviews

Video Widget

gallery