Book Review

நூல் அறிமுகம்: ஞா.சிவகாமி அம்மாவின் அறச்சீற்றம் (சிறுகதைச்சரம்) – புதுவை யுகபாரதி

 

இற்றைநாளில் கண்ணெதிரே நடக்கின்ற கொடுமைகளைக் கண்டும் காணாதது போல் செல்வோர் சிலர்; கண்டு நமக்கென்ன என்று செல்வோர் சிலர்;  ஐயோ! இதென்னகொடுமை? இதைத் தட்டிக்கேட்க யாருமே இல்லையா? எனஉள்ளம் பதைப்போர் சிலர்; சுட்டிக்காட்டுவோர் சிலர்; தட்டிக்கேட்போர் சிலர்.

இப்படிப் பலராக இருக்கும் இக் குமுகம் சிலர் சிலராகப் பிரிந்து பிறழ்ந்து கிடக்கிறது. இந்தச் சூழலில் இல்லம் தொடங்கிப் பழகிடம்,பணியிடம் எனஎங்கும் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றகு முகக் கொடுமைகளைச் ‘சுட்டிக் காட்டுகின்ற” ஒரு படைப்பாக ‘அறச்சீற்றம்”என்னும் இந்நூல் அமைந்துள்ளது!

தமிழ் மூதாட்டிஅவ்வை, ‘அறம் செயவிரும்பு” என்று பாடினார். பெரும்பாலானோர் அறம் என்பதை ‘ஈகை” அதாவது ‘கொடுத்தல்” என்னும் பொருளில் தான் அறிந்து கொள்கிறார்கள்.

உண்மையில் அறம் என்பதுஈகை மட்டுமன்று. ஒருமாந்தன் ‘விழித்தல் முதல் உறங்கல் வரை” அல்லது ‘பிறத்தல் முதல் இறத்தல் வரை” செய்யவேண்டியகடமைகள் அனைத்துமேஅறமாகும்.

ஆம்,அன்றாடச் செயல்களை முறையாக,நெறி பிறழாமல் செய்வதே அறம். இந்தஅன்றாடச் செயல்களில் ஒன்று தான் ஈகை. இந்த ஈகையே அறமாக நின்று நிலைத்துவிட்டது.

அன்றாடச் செயல்களை விரும்பிச் செய்யவேண்டும் என்பது அவ்வையின் அவா. ஆனால்,எல்லோரும் தங்கள் கடமைகளைக் ‘கடமைக்காகவே” செய்கிறார்கள் என்பதே உண்மை.

அறம் செய்ய விரும்பிய அவ்வை, ‘ஆறுவது சினம்” என்றும் பாடுகிறார். இதற்கும் பெரும்பாலோர் ‘சினப்படல் கூடாது” என்பதாகவே பொருள் கொள்கிறார்கள்.

ஆனால், ‘ஆறுவது சினம்” என்பதற்குச் சினப்படவேண்டியவற்றுக்குச் சினப்பட வேண்டும்; அதுவும் வள்ளுவர் சொல்வதுபோல், ‘செல்லுமிடத்துச் சினப்படவேண்டும்”. பின்னர்ப் படிப்படியாகச் சினத்தைக் குறைத்துக் கொண்டு இயல்புநிலைக்கு வரவேண்டும் என்பதே இதன் பொருள். இதனைத்தான் ‘அறச்சினம்” என்று சான்றோர்கள் மொழிகிறார்கள்.

அறச்சீற்றம் என்னும் இச்சிறுதைச்சரமும் ஓர் அறச்சின நூலாகத் திகழ்கிறது. இந்நூலில் பதினைந்து (15) சிறுகதைகள் உள்ளன.

கதை தமிழர்க்கு அப்பாற்பட்டதன்று; கதைதமிழரின் குருதியில் கலந்தது; இங்கு எல்லோர்க்கும் கதைபிடிக்கும்; இங்கு எல்லோரும் கதை சொல்லிகள்தான். எனவே,தமிழில் உலகச் சிறப்புமிக்க கதைகள் வருவதில்லைஎனக் கதையாடத் தேவையில்லை.

சிறந்த படைப்பென்பது மக்களுக்கானதாக இருக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் உயிர்களுக்கானதாக இருக்க வேண்டும். உயிர்களுக்காகப் படைக்கப்படும் படைப்புகளெ உயிருள்ளவையாக இருக்கும். ஞா.சிவகாமி அம்மாவின் இச்சிறுகதைச்சரம் உயிருள்ள படைப்பாக அமைந்துள்ளது. அம்மையார்க்குப் பாராட்டுக்கள்.

பாரதி தொடங்கி வைத்த சிறுகதை இலக்கியம்,புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், தி.ஜானகராமன், கு.ப.ரா., கு.அழகிரிசாமி, கி.ரா.,மௌனி, பிரபஞ்சன், அசோகமித்திரன், மா.அரங்கநாதன் போன்றோரால் போற்றிவளர்க்கப்பட்டது. இதற்கு மணிக்கொடி,எழுத்து போன்ற ஏடுகள் பெரிதும் துணை நின்றன. இந்தத் தமிழ்க்கதைமுன்னோடிகள் போட்டுள்ளகதைப் பாட்டையில் ஞா.சிவகாமி அம்மாள் நடக்கத் தொடங்கியிருக்கிறார். தொடர்ந்து பயணிப்பார் என்று அவருடையகதைகள் சொல்கின்றன.

 

இந்நூலில்,

பெற்றோர்க்குச் சோறுபோடமறுக்கின்றமகன்;
மருமகளை இழிவாகநடத்துகின்றமாமியார்;
பெண்களைநிறத்தைக்கொண்டுவிரும்புகின்றஆண்கள்;
மனைவியைக் கீழாகநடத்தும் கணவன்;
பெண் உடலியல் மாற்றங்களைஅறியாதகுடும்பத்தார்;
நகைப் பித்துக் கொண்டபெண்கள்;
தெருவோரக் கடைகள் முதல் பெருவணிகக் கடைகள் வரை ‘மாமூல்” வாங்கும் காவலர்கள்;

புகை மற்றும் குடிப்பழக்கத்திற்குஅடிமையானவர்கள்;
மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்துவோர்;
காதல் மணம்செய்துகொண்டுபெற்றோரின் கனவைத் தகர்க்கும் பிள்ளைகள்;

என்று நாம் நாள்தோறும் எதிர்கொள்கின்றகுமுகச் சிக்கல்களுக்கு ஆட்பட்டு இடறுரும் மக்களின் இன்னல்களைச் சிறுகதைகளாக்கித் தன் அறச்சினத்தை வெளிப்படுத்தியுள்ளார் நூலாசிரியர். அதனால்தான் இக்கதைகள் உணர்வோடு உலாவருகின்றன.

சிறுகதைகளுக்கு ‘நகாசுவேலைகள்” எனச் சொல்லப்படும் எள்ளல் தன்மை அதாவது வாழைப்பழத்தில் ஊசி இறக்குவது போல் சொல்லப்படும் நகைச்சுவை உணர்வு மேலும் சுவைசேர்க்கும். இந்நூலிலும், நகாசு வேலைகளை ஆசிரியர் செய்திருக்கிறார்.

அப்பன் பணத்தை உறிஞ்சத் தெரிந்த பிள்ளைகளுக்கு வேலைக்கு வந்தவுடன் பணத்தின் அருமை புரிந்து விடுகிறது;

போலீசுக்குச் செக்யூரிட்டிவேலைபார்க்கவேநேரம் இருக்காது;

கிள்ளிவளவன்களின் தொல்லைகளில் இருந்துதப்பித்தோம்;

வண்டியை இழுத்துஇழுத்துப் பார்த்தாள் தேனம்மா. நகரவேயில்லை. அரசாங்கத்திடம் கிடப்பில் இருக்கும் கனத்தகோப்புகள் போல.

புரியும் படியாகவே படிச்சவங்க பேசமாட்டீங்களா?

என்பவை அவற்றுள் சில. இவற்றைச் சரியான இடத்தில் ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார். இவை படிப்போரை இன்புறுத்துகின்றன. நடப்பியலை நகைத்துச் சுட்டுக்காட்டுகின்றன.

இந்நூலில், ‘வெளக்கெண்ணெய்” என்றொருகதை. அதில்,

படிக்காத மனைவி;அரசுப்பணி செய்யும் படித்த கணவன்;அமெரிக்காவில் வேலை செய்து கை நிறைய பொருளீட்டும் மெத்த படித்தமகன் ஆகியோர் கதை மாந்தர்கள்.

படிக்காத மனைவி கண்புரை நோய்க்கு ஆளாகிறாள். மருத்துவர் உடனடியான அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்கிறார். மகனிடம் பணம் கேட்கச் சொல்கிறார் கணவர்.

மகனிடம் கேட்க, ‘அப்பாவிடம் இன்சூரன்சு எடுக்கச் சொன்னேனே எடுக்கலையா?” என்று கேட்கிறான் மகன். இதைக் கணவனிடம் கூறுகிறாள். கணவனோ, ‘அடுத்தமாசம் ஜி.பி.எப். போடுவேன்.அப்ப ஆபரேசன் செஞ்சிக்கலாம்” என்கிறான். அதற்குஅந்தப் படிக்காதமனைவி,

‘என்னங்க நீங்க… கண்ணிலே சதை வளர்ந்திருக்கு,அறுத்தெறிவோம்னு டாக்டர் சொல்றாரு. நீங்க ஏதோ ஜி.பி.எப் போடனுங்கிறீங்க… அவன் ஏதோ இசூரசெஸ் எடுக்கலயான்றான். மொத்தத்தில உங்க ரெண்டுபேருகிட்டேயும் பணம் இல்லன்னுசொல்லுங்க. எதுக்கு இந்த வெளக்கெண்ணெ பேச்சு புரியும் படியாவே படிச்சவங்க பேசமாட்டீங்களா?” என்று கேட்கிறாள்.

இதுதான் ‘வெளக்கெண்ணெய்” கதையின் சுருக்கம்.

இந்தக் கதை ஒரு நேர்க்கோட்டுக் கதையாக அமைந்திருக்கிறது. தெளிவான நீரோட்டம் போல் ஆசிரியர் கதையைக் கொண்டு செல்கிறார். இயல்பான பேச்சு நடை கதைக்கு உணர்வையும் உயிரையும் கொடுத்திருக்கிறது.

இக்கதை தமிழ்க்கதை முன்னோடிகளின் கதைகளைப் போலக் குமுகச் சிக்கல்களை எள்ளல் தன்மையுடன் பேசுகிறது. வடிவத்திலும்,அவர்களுடையகதைகளோடுபொருந்துகிறது. இதுபோன்ற, பலகதைகள் இந்நூலில் இருக்கின்றன. காட்டாக, ‘ரோசம்”, ‘சில்லறை” என்னும் கதைகளைக் சுட்டலாம்.

மொத்தத்தில்,உயிருள்ளகதைகள் கொண்ட ‘அறச்சினம்” சிறுகதைச் சரத்தைமுகர்ந்துமகிழலாம். நல்லபயன்மிக்க,குமுகவளர்ச்சிக்கானகதைநூலைஅளித்தஆசிரியர்க்குப் பாராட்டுக்கள்.

புதுவை யுகபாரதி

தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர்,சாகித்தியஅகாதெமி,

79,மாரியம்மன் கோயில் தெரு,
சீவானந்தபுரம்,
புதுச்சேரி 605 008.

Leave a Response