Book Reviewநூல் அறிமுகம்

நூல் அறிமுகம்: மௌனியின் இருபத்தைந்தாவது கதை ‘கரசேவை’

Spread the love

இலக்கணக் கட்டுகளுக்குள் அடைபடாமல் காலந்தோறும் புதிய புதிய முகங்களைப் படைப்பாளர்களின் மனவெழுச்சி மூலம் பெற்றுப் புற உலகின் அகஉலகைக் காட்டும் அசலான இலக்கியப்படைப்புகள் சிறுகதைகள். இந்தச் சிறுகதை உலகிற்கு மேலும் ஒரு புதிய வரவாகத் தனது கரசேவைத் தொகுப்புமூலம் நம்மோடு கைகோர்த்திருக்கும் படைப்பாளர் தோழர் ப்ரதிபா ஜெயச்சந்திரன். இலக்கிய உலகில் சில சிறந்த படைப்புகளும் படைப்பாளர்களும் கவனம் பெறாமல் மறைந்துபோவதுண்டு. அல்லது அந்த நிகழ்வு வாசக கவனத்தினைப் பெறுவதற்கான சூழ்நிலை ஏற்பாடுகளின் தவறால் நிகழ்ந்துவிடுவதுண்டு. அப்படி இலக்கிய உலகில் நமது கவனத்தை வேண்டி நிற்கும் படைப்பாகக் கரசேவைத் தொகுப்பை நாம் கூறமுடியும். 2016ஆம் ஆண்டிலேயே பாரதிபுத்தகாலயத்தின் பதிப்பாக இத்தொகுப்பு வெளிவந்துள்ளது. இத்தொகுப்பிலுள்ள கதைகளை நமது வசதிகருதி கீழ்க்கண்டவாறு பகுத்துக்கொள்ளலாம்; ஆனால் இக்கதைகள் உயிர்ப்பிக்கும் உணர்வுகள் நமது சட்டகத்திற்குள் அடங்குவன அல்ல.

Image result for விளிம்புநிலை மக்களின் வாழ்வு


– விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை விளக்கும் இடைவார்ப்பட்டை சமையன், எழவு சொல்லி, முட்டாய் தாத்தா, ஒருநாள் ஆகிய கதைகள், – தலித்/கிறித்தவ வாழ்வைப் பிரதிபலிக்கும் அரவணைப்பு, பிதாகுமரன் பரிசுத்த ஆவியினாலே, சகோ டி, இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஆகிய கதைகள். – பால்விழைவு முதலான மனித மனத்தினின்று அகழ்ந்தெடுக்கப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடாய் சலிப்பு, தேறுதல், கிட்டா மனம், வெயில் காற்று என்னும் கதைகள்.
– தனித்து நின்று ஆயிரம் ஆயிரம் கேள்விகளோடு நம்மோடு உரையாடும் கரசேவை, வெய்ஜா பலகைக்குள் சிக்கிய மௌனி – என இத்தொகுப்பு பதிநான்கு கதைகளைக் கொண்டுள்ளது.
சிறுகதைகள் சிறப்பதற்கு அவற்றின் நடை பெரும்பங்குவகிக்கிறது. மொழியையும் தமிழின் சொல்வளத்தையும் சிறப்பாகக் கையாளும் இவரது திறனை தொகுப்பின் முதல் கதையிலேயே காணமுடிகிறது. மக்கள் மொழியில் இடைவார்ப்பட்டை சமையனின் சில்லறைச் சேட்டைகளை எடுத்துரைத்துக்கொண்டே வருகிறது கதை.

இறுதியில் பாம்பைப் பிடிப்பதற்கு இல்லை, இல்லை அடிப்பதற்குக் கூடும் கூட்டங்களுக்கு இடையில் இடைவார்ப்பட்டையை எடுத்துக் கட்டும் சமையனின் திண்ணையில் பாம்பு இருந்ததா இல்லையா? என்ற புதிர் மனதிற்குள் நிலைக்கிறது. இல்லை என்ற முடிவு பெருத்த கள்ளச்சிரிப்பையும் நம்முள் ஏற்படுத்தி மறைகிறது. அல்லறப்புளி மக்களது வாழ்க்கையின் ஒரு பகுதியாக எழவுசொல்லி கதை. தேவர், ஆசாரி, நாடார், கோனார் வீடுகளின் பண்ணைக்காரர்களாக வாழ்கின்ற குடிகளின் வாழ்வியல்பாடும், ‘எழவு சொல்லீட்டுப் போறது ரொம்பவும் கௌருதியான வேலதான். நாலு எடத்துக்குப் போகலாம். நல்ல நாளு பொல்ல நாளு தவுத்து எழவு சொல்லீட்டுப் போறப்ப சட்ட போட்டுக்கலாம். லங்கோட அவுத்துப் போட்டுட்டு வேட்டி கட்டிக்கலாம். எழவு சொல்லிப் போறவங்கள எல்லா ஊர்லயும் நல்லா ஆவுகம் வச்சுப் பாங்க. ஆனா என்ன. ஊரு வட்டிங்களுக்கு வேற வேலயா (வெதநெல்லு, வக்ய இப்பிடி வேற எதாச்சும் இருக்கான்னு வெசாரிக்கப்) போனாக்கூட எழவு சொல்லித்தான் வந்திருக்கனோன்னு பாப்பாங்க’ (2016:67) என்ற வரிகளும் கவனிக்கத்தகுந்தவை.

Image result for தீண்டாமை

மாயத்தோற்றத்தை விரும்பும் கனவுலக வாழ்வாக எழவுசொல்ல விரும்பும் ஆதங்கம். ஆதிக்க சாதிகளின் ஏவலாளிகளாகத் தாம் வாழ்வதை எவ்விதப் பதற்றமும் இல்லாமல் எதிர்கொள்ளும் இவர்கள் இனிப்பு கொடுத்துக் கடத்தப்படும் குழந்தைகள். ஏமாற்றப்படுவதன் உள்ளர்த்தத்தை அறியாத மக்களின் இயலாமையை விளக்கும் வரிகள். முட்டாய்தாத்தாவும் ஒருநாளும் வேலாயியின் மூலம் இடைவெளியின்றி நம்மோடு பயணிக்கின்றார்கள். கள்ளழகரும் பூம்பூம் மாடும் கூட வரமறுக்கின்ற தெருக்களுக்குள் முட்டாய்தாத்தாவின் பின்னே நாமும் ஓடிப்போகிறோம். ‘ ‘ஏண்டா, ஒனக்கு எம்புட்டுக் கொழுப்பு இருந்துச்சுன்னா எங்க தெருவுல வந்து முட்டாயி விப்ப?ன்னு தாத்தாவை நெட்டித் தள்ளி விட்டான். அங்க இருந்த பொம்பளைங்களப் பாத்து ஏண்டி அவுசாரி முண்டைகளா, பறப்பெய செஞ்சு விக்கிறத திங்க வந்திட்டிங்களா? போயி வேற எதயாச்சும் தின்னுங்கடி’ன்னான்’ (2016:77) தீண்டாமையின் வலிநிறைந்த வரிகள். கடந்த காலத்தை நினைவுபடுத்தும் முட்டாய் தாத்தாவின் இனிப்பான வார்த்தைகள், காலாங்கரை ஓடை, பொட்டக்காடு, கம்மந்தட்டைப் புதர் என சலிப்புதட்டாத கதை.

கண்ணாமூச்சியும், செதுக்கு முத்தும் விளையாடித் தப்புக் கடலை பொறுக்க வந்த வேலாயியின் ஆசை நிறைவேறவேண்டுமே என்ற ஆவலோடு நாம் கதையைப் பின்தொடர்வது தன்னிச்சையாகவே நிகழ்ந்துவிடுகிறது. இறுதியில் வேலாயியின் மடியும் மனதும் போலவே வாசகமனமும் கனத்துவிடுகிறது. தனது சாதிய அடையாளத்தைவிட்டு வெளியேறுவதற்காகக் கிறித்தவத்தைத் துணையாக நாடிய உள்ளங்களின் அனுபவங்களைக் கூறுகின்றன மூன்று கதைகள். பரிசுத்த வாழ்வை வேண்டுமென்று தீர்மானித்து அதற்குள் சென்று மன உளைச்சல்களும் குற்ற உணர்வுகளும் நிறையப் பெற்றவர்களாகக் காலத்திற்குத் தன்னை ஒப்புக் கொடுத்துவிட்டு அதனைக் கடந்து செல்பவர்களும், அந்த வீரமும் இல்லாமல் அதனுள்ளேயே உழல்பவர்களும் இக்கதைகளில் உலவுகின்றர். கதை மையம் உணர்த்தும் உலகினுள் சொல்லாமல் விடப்பட்ட காரணத்தின் மிச்சசொச்சங்களை வாசகரே நிரப்பிக்கொள்ளும்படி விட்டுவிடும், விலகிவிடும் லாவகத்தைத் தோழர் இக்கதைகளில் கையாண்டுள்ளார்.

Image result for விளிம்புநிலை மக்களின் வாழ்வு

வாழ்க்கைப் பாடுகளுக்காகத் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்ட ஒருவன் மீண்டும் அதே வாழ்க்கைப்பாடுகளுக்காக அதிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு தனது சுய அடையாளத்தை மாற்றிக்கொள்வதாக நகரும் கதை; இடையே அகமன உணர்வுள் சிலவற்றைப் பகட்டுகள் இல்லாமல் அச்சு அசலாய் படமெடுக்கும் வரிகள். ராஜா கேஸில்டா இணையரின் இடையேயான உண்மையான வாழ்க்கையைக் காட்டுகிறது அரவணைப்பு. பெண் உலகின் அந்தரங்கங்களை அழகாய்ப் புரிந்துகொண்டு ஒரு நொடியில் ஏற்படும் மனத்தடுமாற்றங்களுக்கும் தயக்கங்களுக்கும் இடம் கொடுக்காமல் வாழ்வது குடும்ப உறவுகள் சிதைந்துபோகாமல் பார்த்துக்கொள்ளும். இருவரின் அணைப்பிற்குள்ளும் அழகாக விரிகிறது அன்பு உலகம்.

‘நிச்சயமானதொரு காரணம் இருப்பினும் காரணமற்றது போன்ற வெறுமையின் இருளுக்குள் விரல்விட்டுத் துளாவி எதையோ கண்டெடுக்க முயற்சித்துத் தோல்வியுற்றுக் கொண்டிருந்தது.’ (2016:32) இப்படிக் கவித்துவ வரிகளோடு தொடர்கிறது சலிப்பு; மெலிந்த வார்த்தைகளில் புறந்தள்ள முடியாக மனித மனத்தின் பலவீனங்களை எடுத்துக்காட்டுகிறது. தோழரின் சில கதைகளைப் போலவே பல எதிர்பார்ப்புகளோடு முடியும் இக்கதையிலும் எல்லா மனித மனங்களையும் அசைத்துப்பார்க்கின்ற அடங்கமறுக்கின்ற உணர்ச்சியின் சிற்றலையும் அதன் சுவடுகளும் கரையாமல் அழியாமல் தடம் பதித்துள்ளன. அழகு எனும் கற்பிதத்தால் நிராகரிக்கப்பட்ட பெண் உடலின் பாலியல் தேடல்களை மிக எளிமையாக ஒரு பேருந்துப் பயணத்தின் மூலம் விளக்குகிறது கிட்டாமனம். காரணம் அறியமுடியாத காரணங்களால் சில வேளைகளில் மனித மனம் சந்தடியில்லாமல் சில செயல்களையும் தேவைகளையும் தவிர்த்துவிடுகின்றது. இவைதான் சிக்கல் என்று நிரூபிக்க முடியாமல் போனாலும் தவிர்த்துவிடவோ தகர்த்துவிடவோ முடியாத உணர்வுப் போராட்டங்களால் உந்தப்பட்ட இரு உடல்கள் அவற்றை எவ்வாறு கடந்துசெல்கிறது என்பதைக் கவனமாய்ப் பதிவுசெய்கிறது கதை.

பெண் மனதின் ஆசைகள் சில காரணங்களால் வெளிப்படாமல் அடைபட்டுக்கிடக்கும். அவ்வாறான ஆசையின் வெளிப்பாடாய் மகனையொத்த வயதுடைய, மகனின் நண்பனின் மீது ஏற்படும் சிறு ஈர்ப்பினை ஒருகதையில் வெளிப்படையாக நம்முன் வைக்கிறார் தோழர். குடும்பம், கற்பு, முதலான சித்தாந்தங்களால் பிணைக்கப்பட்ட பெண் மனம் பல நேரங்களில் ஆண் மனமும் கூட, கட்டுடைந்து தறிகெட்டுத்திரியும் இயல்பினதாக இருப்பதைக் கதையினுள் உணர முடியும். தேறுதல் என்ற கடிவாளம் அதனை அசாதாரணமாக நிலைகொள்ளச் செய்யமுடியும். விபரீதம் ஏற்படாமலும் அதனால் பலரின் வெறுப்பு அலகுகள் நம்மீது படிந்துவிடாமலும் பார்த்துக்கொள்ளமுடியும் என்பதை உணர்த்தி முடிகின்றது கதை.

பிச்சமூர்த்தியின் மாயத்தச்சனைப் போல என்று ஒப்புமைகூறக்கூட, கரசேவை கதையின் சூத்திரதாரிக்குப் பெயரில்லை; பெயரை விடக் கதையின் பின்னணியில் உள்ள உணர்வும் கருவும் தானே முக்கியம். சக்தியை உருவாக்கிச் சிவனாகிப்போன அந்தக்கதாபாத்திரமே சூத்திரதாரி. உடைத்தெரிந்தவற்றை மீண்டும் உருவாக்கி சிருஷ்டியின் சிருஷ்டியாக நிலைகொள்கிறான் அவன். கதையின் இடையே நையாண்டிகளும், சமூக எள்ளலும் சுயம்சார்ந்த அவதானிப்புகளும் களையப்படவேண்டிய அழுக்குகளும் மிகுந்த சுவாரஸ்யத்தோடு கதையை நகர்த்துகின்றன. கதையப் படித்து அதன் போக்கில் ஒன்றிவிடுவதன்றி வார்த்தைகளால் விளக்கமுடியாத அகமன உணர்வுகளால் உருப்போட்டு உருவாக்கப்பட்ட சொற்சித்திரமாய்க் கரசேவை.

Image result for மௌனியின் கதை

மௌனியின் கதைகளையும் மௌனியையும் மீளநினைத்து எழுதப்பட்ட பகடியாக வெய்ஜா பலகைக்குள் சிக்கிய மௌனி . கச்சிதானந்தம், ஜம்பை, காஜா கௌதமன், ராம்கி, கிராமராஜன் என்று உருமாறிய இல்லை பெயர் மாறிய இலக்கியவாதிகளின் குறியீட்டுப் பேச்சுகளில் விமர்சனமாய்க் கரைந்துவிடும் மௌனியைப் பெரிய கோடாங்கி சுடலைக்குச் சென்று சந்திப்பதாய் ஒரு கற்பனை; விடாப்பிடியாக மௌனியின் 25ஆம் கதையை வேண்டுகிறான். சாதிய இடைவெளிகளால் சுயபிரக்ஞையோடு சில உறவுகளைத் தவறவிடுகின்ற, தவிர்த்துவிடுகின்ற மேட்டிமைவாதத்தின் படிமமாய் நிழல் மௌனம் மௌனியில் உருவெடுத்துக் கோடாங்கியிடம் கையளிக்கப்படுகிறது. புனைப்பெயரைப் பொய்யாக்கித் தன் புனைவுகள் மூலம் பேசும் மௌனி நிழல் மௌனத்திலும் மௌனமாய் நம்மோடு பேசுகிறார் தோழர் மூலமாக.

இயல்புக்கும் கற்பனைக்கும் இடையில் கருக்கொள்ளும் புனைவை, விசேஷமாக மாற்றக்கூடிய மொழியாளுமை கைவரப்பெற்றுள்ள தோழரின் பல கதைகளில் தென்மாவட்டத்தின் மொழிநடை ஆதிக்கம் கொண்டிருக்கின்றது. மொழிக்கூர்மையும் சொல்நேர்த்தியும் நிறைந்த இவரது கதைகள் சமகாலப் பிரக்ஞையோடும் இயங்குகின்றன. தேசிய நீரோட்டத்தில் தேங்கிய குட்டையாக நாற்றமெடுத்துக் கிடக்கும் சாதியக் கழிவுகள் களையப்படவேண்டும் என்கிற உள்ளுணர்வு பல கதைகளில் வெளிப்படுகிறது. எண்பதுகளிலியே படைப்புலகில் தடம்பதித்த தோழர் காலவெளிகளைப் புறந்தள்ளும் புதிய பல புனைவுகளால் நவீன தமிழ்ப் புனைவுலகை மேலும் உயிர்ப்புள்ளதாக மாற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடவேண்டும் என்ற ஆசை நமக்குண்டு.

– சுஜா சுயம்பு

Leave a Response

Top Reviews

Video Widget

gallery