Article

கருந்துளை – இரா.இரமணன்

103views
Spread the loveஇந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு ரோகர் ஆண்ட்ரியா கெஸ், ரெயின்கார்ட் கென்ஸல், ஆண்ட்ரியா கெஸ் ஆகியோருக்கு கருந்துளை தொடர்பான ஆய்வுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சில சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன.

இயற்பியலில் நோபல் பரிசு பெறும் நான்காவது பெண்மணி ஆண்ட்ரியா கெஸ் என்பது குறிப்பிடத் தகுந்தது.1901ஆம் ஆண்டிலிருந்து  2019ஆம் ஆண்டு வரை மொத்தம் 53 பெண்களே நோபல் பரிசு பெற்றுள்ளனர்.  2018ஆம் ஆண்டுக் கணக்கு படி 853 ஆண்கள் நோபல் பரிசு பெற்றுள்ளனர். அதே ஆண்டு வரை பெண்களில்  அமைதிக்காக 17, இலக்கியத்திற்காக 16, உயிரியல்/மருத்துவத்திற்காக 12, வேதியியலில் 7, இயற்பியலில் 4 பேர் மட்டுமே பெற்றுள்ளனர்.

The Black Hole of Calcutta 1756 - The Medieval Shoppe

கல்கத்தா கரும்பொந்து? 

முதலில் கருந்துளை என்ற சொல்லும் அது தொடர்பான ஆய்விற்கும் உள்ள இந்தியத் தொடர்பைப் பார்க்கலாம்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பேராசிரியர் பிலிப் டிக்கே என்பவர்தான் ஈர்ப்புவிசையினால் நட்சத்திரங்கள் சுருங்கி ஒற்றைப் பொருளாக மாறுவதற்கு ‘கருந்துளை’ என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தினார். அவரது வீட்டில் ஏதாவது ஒரு பொருள் கிடைக்காவிட்டால் அது கல்கத்தா கரும்பொந்திற்குள் மறைந்துவிட்டதா என்று கேட்பாராம். அது என்ன கல்கத்தாக் கரும்பொந்து?

1756ஆம் ஆண்டு ஜூன் 19 அன்று வங்காள நவாப், கல்கத்தாவிலுள்ள வில்லியம் கோட்டையைக் கைப்பற்றினார். இந்தப் போரில் 146 பிரிட்டிஷ் வீரர்கள் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனராம். 4 பேர் மட்டுமே தங்கக் கூடிய இரண்டு சிறிய சன்னல்கள் கொண்ட அறையில் அவர்கள் அடைத்து வைக்கப்படதால் 23 பேர் மூச்சுத் திணறி இறந்தனராம். இந்தத் தகவல் ஊதிப் பெரிதாக்கப்பட்ட புனைவு என்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்தும் பல ஆட்சேபணை சரித்திர ஆசிரியர்கள் தெரிவித்துள்ளார்கள். ஆனால் இந்த நிகழ்வை சாக்காக வைத்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பெரும் கொலைகள், கொள்ளைகள், நிலப்பறிகள் நடத்தி தங்கள் சாம்ராஜ்ஜியத்தை இந்தியாவில் ஏற்படுத்தினர். அவர்கள் ஆட்சியில் நடந்த படுகொலைகள், பெரும் அழிவை ஏற்படுத்திய பஞ்சம் ஆகியவற்றை ஆங்கிலேயர்களின் மனத்திலிருந்து மறைக்க ‘கல்கத்தா கரும்பொந்து’ (Black Hole of Calcutta )என்று பெயரிடப்பட்ட இந்த நிகழ்வு  உதவியது.

Albert einstein

இந்தியர் தொடங்கிய கருந்துளை ஆய்வு 

கருந்துளைக்கும் இந்தியாவிற்கும் உள்ள இரண்டாவது இணைப்பு சந்திரசேகர். இந்தியாவில் பிறந்து பின்னர் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற சந்திரசேகர் எனும் அறிவியலாளர் 1930 ஆண்டிலேயே கருந்துளை தொடர்பான ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். ஒரு நட்சத்திரம் சூரியனை விட 1.4 மடங்கு எடையுள்ளதாக இருந்தால், அது சுருங்கிக் கொண்டே போகும் என்பதை நிறுவினார். இன்னும் அதிக எடையுள்ள நட்சத்திரங்கள் என்ன ஆகும் என்று அவரால் கணிக்க இயலவில்லை. இன்று அதுதான் கருந்துளை என்று நிறுவப்பட்டுள்ளது. சந்திரசேகருக்கு 1983ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு அளிக்கப்பட்டது.

ஐன்ஸ்டீனும் நோபல் பரிசும் 

ஐன்ஸ்டீன் தனது பொதுசார்புக் கோட்பாட்டை(General Theory of Relativity) 1915இல் நிறுவினார். அதற்குப் பிறகு அவர் உலகப் புகழ் பெற்ற ஆளுமை ஆனார். ஆனால் அவரது சோஷலிசம் போன்ற தீவிர கருத்துகளாலும் முதல் உலகப் போர் எதிர்ப்பினாலும் அவர் யூதர் என்பதாலும் ஜெர்மனியிலும் அறிஞர் வட்டாரத்திலும் அவருக்கு எதிரிகள் பலர் இருந்தனர். நோபல் குழு உள்ளடக்கிய இயற்பியல் கட்டுப்பெட்டிகள் இந்தக் காரணங்களுக்காக அவரை வெறுத்தனர். அவரது தேற்றங்கள் வெறும் தேற்றங்கள்தான்; அவை ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்படவில்லை என்றனர்.

கருந்துளை என்பது ஒரு விண்பொருள். மிகப் பிரம்மாண்டமான எடை கொண்ட அவைகளின் ஈர்ப்பிலிருந்து எதுவும்- ஒளி கூட – தப்பிக்க முடியாது. ஐன்ஸ்டீனின் பொதுசார்புக் கோட்பாட்டிலிருந்து கருந்துளையின் இருப்பை கணித ரீதியாக பென்ரோஸ் நிறுவினார். ஆனால் இயற்பியலாளர்களுக்கு குறிப்பாக நோபல் குழுவிற்கு இத்தகைய தேற்ற ரீதியான கணிப்பு மட்டுமே போதுமானதல்ல. அவர்களுக்கு ஒரு தேற்றத்தை நிரூபிக்க சோதனை ரீதியான ஆதாரங்கள் தேவை.

எந்தவித ஆற்றலையும் வெளிப்படுத்தாத மிகப்பெரும் எடையுடன் கூடிய ஒரு பொருள் இருப்பதை உறுதி செய்தால் அது பென்ரோஸ் கணித்த கருந்துளை இருப்பிற்கு ஆதாரமாக இருக்கும். 1919இல் ஆர்தர் எடிங்டன் என்ற ஆங்கிலேய விண்வெளியாளர் சூரிய மறைப்பின்போது அதன் அருகில் செல்லும் நட்ச்சத்திர ஒளியை கணக்கிடுவதன்மூலம் ஐன்ஸ்டீனின் கருதுகோளை நிரூபித்தார். ஐன்ஸ்டீன் இயற்பியலில் மிகப் பிரபலமானார். அப்பொழுதும் அவருக்கு நோபல் பரிசு கொடுக்கப்படவில்லை. 1920இல் மிகச் சாதரணமான ஒரு கண்டுபிடிப்புக்கும் 1921இல் யாருக்கும் பரிசு வழங்கப்படாமலும் செய்து ஐன்ஸ்டீனுக்கு பரிசு கொடுக்காமல் செய்யப்பட்டது. ஆனால் அதற்கு மேலும் அவருக்கு பரிசு வழங்காமல் வேறு ஒருவருக்கு வழங்குவது நோபல் குழுவிற்கு இயலாமல் போயிற்று. இறுதியாக 1921இல் நிறுத்தி வைக்கப்பட்ட பரிசு 1922இல் ஐன்ஸ்டீனுக்கு வழங்கப்பட்டது. அப்போது கூட அவரது சார்பு தத்துவத்திற்கு வழங்காமல் 1905இல் அவரது ஒளி தொடர்பான கண்டுபிடிப்புக்கு வழங்கினார்கள். 1905இல்தான் சார்பு தத்துவத்தையும் அவர் நிறுவினார்.

விண்வெளியில் புதிய ப்ளாக் ஹோல் - ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு அர்ப்பணித்த ரஷ்ய விஞ்ஞானிகள் - News View

ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு மரியாதை 

ஸ்டீபன் ஹாக்கிங், பென்ரோசின் கணித அடிப்படையை மேலும் வளர்த்தெடுத்து, அண்டம் ‘கால ஒருமையில்’(singularity in time) பெருவெடிப்புடன் தொடங்கியது என்று முன்மொழிந்தார். இதன்மூலம் ஹாக்கிங் பெரும் அறிவியல் ஆளுமை ஆன போதிலும் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை. கால-வெளி ஒருமைக்காக(space-time singularity) பென்ரோசுக்கு இப்போது நோபல் பரிசு வழங்கப்பட்டதை ஹாக்கிங்கிற்கு செய்யப்பட மரியாதை என்று கொள்ளலாம்.

நீளும் தேடல்கள் 

இயற்பியலில் உருவாக்கப்படும் தேற்றங்கள் நமது அண்டத்தை அறிந்துகொள்ள வாய்ப்புகளை உருவாக்குகின்றன. ஆனால் சோதனை நிரூபணம் இல்லாதபோது, புதிய நிகழ்வுகள் அவற்றை மறுதலித்துவிடும் என்கிற சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும். ஆகவேதான் இயற்பியலின் முக்கிய தரச் சான்றான (gold standard)  சோதனை நிரூபணங்களுக்கான தேடல்கள் நடக்கின்றன. விண்வெளி இயலில், பல கோடி ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கும் நட்சத்திரங்களைக் குறித்த சோதனை மிகவும் கடினமானது. அதனால்தான் சந்திரசேகருக்கு ஐம்பது ஆண்டுகள் கழித்தும் பென்ரோசுக்கு 55ஆண்டுகள் கழித்தும் நோபல் பரிசு வழங்கப்பட்டது. நோபல் பரிசு இறப்பிற்குப் பிறகு வழங்கப்படுவதில்லை என்பதால் பல இயற்பியலாளர்கள் பரிசு வாங்க முடிவதேயில்லை.கருந்துளையின் இறுதி நிரூபணம் 

கருந்துளைக்கான சோதனை நிரூபணத்தை கென்ஸல்லும் கெஸ்ஸும் சாதித்தார்கள். பெரும்பாலான நட்சத்திரக் கூட்டங்களைப் போல, நமது பால்வெளி மண்டலமும் அதன் நடுவில் ஒரு மாபெரும் கருந்துளையைக் கொண்டிருக்கிறது என்பதைக் கண்டறிந்தார்கள். ஆண்ட்ரியா கெஸ் குழுவினரும் கென்ஸல் குழுவினரும் கிட்டத்தட்ட ஒரு போட்டி போல இந்த ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தனர். பல விருதுகளை இணைந்து பெற்றுள்ளனர். அவர்கள் அவதானித்த நட்சத்திரமானது பால்வீதியின் மையத்தை சுற்ற 16வருடங்களே எடுத்துக்கொள்கிறது. நமது சூரியன் 200மில்லியன் வருடங்கள் எடுத்துக் கொள்கிறது. இரண்டு குழுவினரும் வெவ்வேறு தொலைநோக்கிகளை பயன்படுத்தி பல ஆண்டுகளாக சேகரித்த தரவுகளின் அடிப்படையில் கண்ட முடிவு ஒன்றே. நமது பால்மண்டலத்தின் மையத்தில் நான்கு மில்லியன் சூரிய எடையுடன் கூடிய மாபெரும் பொருள் இருக்கிறது. இது குறித்து நோபல் குழு தனது  இறுக்கமான மொழியில்

 ‘ …..மண்டலத்தின் மையத்தில் உள்ள திட்டவட்டமான பொருள் ஒரு மாபெரும் கருந்துளையுடன் ஒத்துப்போகிறது என இந்த ஆய்வுகளின் முடிவுகளை விளக்கிக் கொள்ளலாம்’ என்று கூறியது.

சுதந்திர சொர்க்க பூமி 

சந்திரசேகர் தனது நோபல் ஏற்பு உரையில் தாகூரின் 

 

‘எங்கே மனம் அச்சமின்றி உள்ளதோ 

……………………………………………………………

எங்கே சோர்வில்லா முயற்சி 

பரிபூரணத்தை நோக்கி நீள்கிறதோ

எங்கே கண்மூடிப் பழக்க புதைகுழியில் 

பகுத்தறிவு மறைந்து போகாமலிருக்கிறதோ

அந்த சுதந்திர சொர்க்க பூமி

காட்சி தருவதாக ‘

என்ற பாடலை மேற்கோள் காட்டினாராம். இன்று சூழலுக்கு அது மிகவும் பொருந்துகிறது.

***************பீபிள்ஸ் டெமாக்கரசி- பிரபிர் புர்காயஸ்தா கட்டுரையிலிருந்து  

உசாத் துணைகள் (references)

https://en.wikipedia.org/wiki/List_of_female_Nobel_laureates

https://peoplesdemocracy.in/2020/1011_pd/2020-nobel-physics-and-monster-black-hole-our-galaxy

https://bookday.co.in/nobel-prize-in-physics-2020-vijayan/Leave a Response