Article

பீகார் தேர்தல்: தேஜகூ-விற்கு ஆதரவாக வாக்கு எண்ணிக்கையில் கடைசிக் கட்டத்தில் தில்லுமுல்லு – அருண்குமார் மிஷ்ரா (தமிழில்: ச. வீரமணி)

35views
Spread the loveபீகார் தேர்தல் தொடர்பாக வாக்கு எண்ணிக்கைகள் முடிவுறும் சமயத்தில், பாஜக-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு எண்ணிக்கையில் தில்லுமுல்லுகள் செய்யப்பட்டதாக எண்ணற்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக குறைந்த வாக்குவித்தியாசம் இருந்த பத்து தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக இதுபோல் நடைபெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பிரச்சனையை மகாகத்பந்தன் கூட்டணி, தேர்தல் ஆணையத்திடம்  எழுப்பியபோது, அது தவறேதும் நடக்கவில்லை என்று மறுத்து, ஆட்சேபணைகளை ஒதுக்கித்தள்ளி இருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் தேர்தலை உன்னிப்பாகக் கவனித்து வந்த மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இவர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி அனைத்து விதங்களிலும் படுதோல்வி அடைந்திருந்ததன் காரணமாக, நிச்சயமாக அது தோற்றுவிடும் என்று முழுமையாக நம்பிக்கையுடன் இருந்தனர்.

தேஜகூட்டணி மாநிலத்தில் ஒழுங்காக ஆட்சி நடத்துவதில் பரிதாபகரமான முறையில் தோல்வி அடைந்தது மட்டுமல்ல, கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்திலும்கூட ஏழை மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்குவதிலும் படுதோல்வி அடைந்திருந்தது.

ஆரம்பத்தில் ஊடகங்கள் தேஜகூட்டணிக்கு ஆதரவாகவே கதைகளை அவிழ்த்துவிட்டிருந்தன. நிதிஷ் குமார் தொடங்கி வைத்த வளர்ச்சித் திட்டங்கள் வெற்றி பெற்றதாக பீற்றிக்கொண்டிருந்தன. எனினும், நிட்டி ஆயோக் மற்றும் தேசிய குற்றப்பதிவு பீரோ ஆகியவை வெளியிட்டிருந்த அறிக்கைகள் இக்கதைகள் அனைத்தும் தவறானவை என்பதை வெளிச்சத்திற்கக் கொண்டுவந்தன. சமூக மற்றும் பொருளாதார அட்டவணை அனைத்திலும் பீகாரின் செயல்பாடுகள் மிக மோசமாக இருந்ததாக அவை காட்டின. குறிப்பாக விவசாயம், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் இதன் செயல்பாடுகள் மிகவும் மோசமாகும். மாநிலத்தின் பல பகுதிகளில் மக்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு தவித்த காலத்தில் அவர்கள் ஆட்சியாளர்களால் மனதாபிமானமற்றமுறையில் கிஞ்சிற்றும் கண்டுகொள்ளப்படாததும், சமூக முடக்கத்தின் காரணமாக புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களுக்கும் உதவி எதுவும் செய்யாததும், மக்களிடையே தேஜகூட்டணிமீது கடும் கோபத்தை ஏற்படுத்தி இருந்தன. பொது மக்கள் மத்தியில் இவ்வாறிருந்த கோபாவேசம்தான், தேஜகூ என்னும் மதவெறி மற்றும் சந்தர்ப்பவாதக் கூட்டணிக்கு எதிராக,  ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையில் மதச்சார்பற்ற கட்சிகளுடனும், இடதுசாரிகளுடனும் இணைந்து மகாகத்பந்தன் கூட்டணியை அமைத்திட இட்டுச்சென்றது.

மகாகத்பந்தன் கூட்டணி, மதவெறி தேஜகூட்டணிணின் தேர்தல் பிரச்சாரத்திற்கு முற்றிலும் மாறுபட்ட நிலையில், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் பெண்கள், தலித்துகள் மற்றும் சமூகத்தின் விளிம்புநிலை மக்கள் மீது ஏவப்படும் அட்டூழியங்கள் அதிகரித்துக்கொண்டிருப்பது ஆகியவற்றை முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டது. பத்து லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்குவோம் என்று அளித்திட்ட உறுதிமொழி, இளைஞர்களை அவர்களின் சாதி வித்தியாசங்களுக்கு அப்பாற்பட்டு கவ்விப்பிடித்தது. இது குறிப்பிடத்தக்க வளர்ச்சிப் போக்காகும்.

ஆயினும், தேஜஸ்வி யாதவும், குறிப்பாக இடதுசாரிகளும் முன்வைத்த தேர்தல் பிரச்சாரம் என்ன தவறிழைத்தது? எப்படி அது தோற்றுப்போனது? பல்வேறுதரப்பு அரசியல் நோக்கர்களும் இது குறித்து விவாதிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இது தொடர்பாக ஏற்கனவே எண்ணற்ற கட்டுரைகள் பல நாளிதழ்களில் வெளியாகி இருக்கின்றன.இந்தத் தேர்தல் குறித்து பாதுகாப்பான முறையில் கூறப்படக்கூடிய முதலாவது விஷயம், மக்கள் மத்தியில் மாற்றத்திற்காக பொதுவான விருப்பம் இருந்ததைக் காண முடிந்தது. மேலெழுந்தவாரியாக வாக்காளர்கள் தங்கள் சாதிப் பிடிப்பை விட்டொழித்துவிட்டனர் என்றபோதிலும், அடிமட்டநிலையில் மக்கள் சாதி அடிப்படையில் ஆதரவாகவும், எதிராகவும் அணிதிரட்டப்பட்டனர்.

மகாகத்பந்தன் கூட்டணியில் ஒரு நல்ல அம்சம் போட்டியிட்ட அனைத்துக் கூட்டணிக் கட்சியினருக்கும் இடையே முழுமையான அளவில் நல்ல புரிந்துணர்வு இருந்ததைக் காணமுடிந்தது. அது தேர்தல் பிரச்சாரத்தின்போதும் நன்கு பிரதிபலித்தது. ஆனாலும் இதில் பலவீனமாக இருந்த அம்சம், காங்கிரஸ் கட்சிக்கு 70 இடங்கள் அளிக்கப்பட்டிருந்து, அது வெறும் 19 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்த நிலை ஏற்பட்டிருந்ததாகும். இடதுசாரிக்கட்சிகளுக்கு 29 இடங்கள் அளிக்கப்பட்டு, அவை அதில் 16இல் வென்றிருந்தன. காங்கிரஸ் போட்டியிட்ட இடங்களில் அக்கட்சிக்கு ஸ்தாபனக் கட்டமைப்பே கிடையாது. தேர்தல் பிரச்சாரத்தின்போதும், வாக்குச்சாவடிகளை நிர்வகிப்பதற்கும், வாக்காளர்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துவருவதற்கும்,  காங்கிரஸ் கட்சியானது ஆர்ஜேடி மற்றும் இடதுசாரிக் கட்சி முன்னணி ஊழியர்களையே பெரிதும் சார்ந்திருக்க வேண்டியிருந்தது.  காங்கிரஸ் கட்சியின் மோசமான செயல்பாடே, தேஜகூ வெற்றிக்குக் காரணமாகும்.

இந்தத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் முக்கியமான பங்களிப்பினைச் செய்திருக்கின்றன. இவற்றை ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் சாராம்சங்களைப் பார்த்தால் நன்கு தெரியும். இடதுசாரிக் கட்சிகள் தங்கள் போராட்டங்களின்போது எழுப்பிய அனைத்துப் பிரச்சனைகளும் அவர்களின் தேர்தல் அறிக்கைகளில் இடம் பெற்றிருந்தன.

இதன் காரணமாக இப்பிரச்சனைகள் குறித்து பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும்கூட பேச வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. எனினும் தேர்தல் நெருங்கிய சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடி தன் மதவெறி நஞ்சை, மாநிலத்தின் எல்லைப்புற தொகுதிகளான கிஷன்கஞ்ச், அராரியா, கட்டிஹார், பூர்னியா முதலிய தொகுதிகளில் – முஸ்லீம்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் – மிக மூர்க்கத்தனமாக விதைத்தார். ஏஐஎம்ஐஎம் கட்சியும் மக்கள் மத்தியில் மதவெறி நஞ்சை விதைப்பதன் மூலம் பாஜக-விற்கு உதவியதுடன், தன்தரப்பில் ஐந்து இடங்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மகாகத்பந்தன் கூட்டணி வெற்றியை சேதப்படுத்தி, அது ஆட்சியமைக்க முடியாது செய்துவிட்டது.

பாஜக கூட்டணிக்கு எதிராகப் போராடுவதற்கு வேறுசில சமூகக் காரணிகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இப்போதும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிலும், தலித்துகளிலுழம் பெரும்பாலானவர்கள் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக மற்றும் இதர சாதி அடிப்படையிலான அமைப்புகளின் செல்வாக்கின் கீழ் இருக்கின்றனர். இடதுசாரிக் கட்சிகளால் மட்டுமே இவர்களை மகாகத்பந்தன் கூட்டணிப் பக்கம் கொண்டுவர முடியும்.

இப்போது தேஜகூ அநேகமாக ஆட்சி அமைப்பதும் நிதிஷ் குமார் முதல்வராகப் பதவியேற்பதும் நிச்சயமாகிவிட்டது. இடதுசாரிக் கட்சிகள் தன்னுடைய வலுவான 16 உறுப்பினர்கள் மூலம் தேர்தல் பிரச்சாரத்தின்போது எழுப்பிய மக்கள் பிரச்சனைகள் அனைத்தையும் சட்டமன்றத்தில் எழுப்பிட வேண்டியிருக்கும். அவற்றின் அடிப்படையில் சட்டமன்றத்திற்கு வெளியே மக்களை அணிதிரட்டி இயக்கங்களை நடத்திடும். இவற்றை புதிய தேஜகூ அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

மேலும் வரவிருக்கும் காலங்களில் இடதுசாரிக் கட்சிகள், மாநிலத்தில் இயங்கும் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகள் அனைத்தையும் மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளின் அடிப்படையில் அணிதிரட்டிட முன்னணிப் பங்கினை வகிக்க வேண்டும். அவற்றின் மூலம் பாஜக மற்றும் அதன் கூட்டணிகளின் மதவெறி மற்றும் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை முறியடித்திட வேண்டும்.

Patna: CPI - M releases election manifesto for Bihar Assembly elections #Gallery - Social News XYZ

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடு

இந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நான்கு இடங்களில் போட்டியிட்டு இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி, ஐக்கிய ஜனதா தள வேட்பாளரை ஓரிடத்திலும், சுயேச்சை வேட்பாளரை பிபுடீபுர் தொகுதியிலும் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளது. அடுத்த இரு தொகுதிகளிலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

நான்கு தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:

மஞ்சி தொகுதி – டாக்டர் சத்யேந்திர யாதவ் –

பெற்ற வாக்குகள்: 58863 + 461 = 59324 (37.56 %)

பிபுடிபூர் தொகுதி – அஜய் குமார் –

பெற்ற வாக்குகள்: 73,580 + 242 = 73,822 (45 %)

மடிஹானி தொகுதி – ராஜேந்திர பிரசாத் சிங் –

பெற்ற வாக்குகள்: 59,875 + 724 = 60,599 (29.27 %)

பிப்ரா தொகுதி – ராஜ் மங்கல் பிரசாத் –

பெற்ற வாக்குகள்: 79,753 + 657 = 80,410 (40.10 %)

(People’s Democracy, 15.11.2020)

தமிழில்: ச. வீரமணி

Leave a Response