Article

பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச. வீரமணி)

81views
Spread the loveபீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், பாஜக-ஐக்கிய ஜனதா தளக் கூட்டணிக்கு மிகக்குறுகிய வித்தியாசத்துடன் ஆதரவாகச் சென்றிருக்கிறது. அது 125 இடங்களையும், மகாகத்பந்தன் கூட்டணி 110 இடங்களையும் வென்றிருக்கின்றன. எனினும், இரு கூட்டணிகளுக்கும் இடையே வாக்குச் சதவீதத்தில் வித்தியாசம் வெறும் 0.2 சதவீதம் மட்டுமேயாகும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி, தேர்தலில் வெற்றியைப் பெற்றிருந்தபோதிலும், அது தன்னுடைய பக்கம் கணிசமான அளவிற்குப் பின்னடைவுகளையும் பெற்றிருக்கிறது. 2019 மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடும்போது, பாஜக தலைமையிலான கூட்டணி அப்போது பெற்ற வாக்கு சதவீதத்திலிருந்து 12.4 சதவீதம் இப்போது இடம்பெயர்ந்திருக்கிறது. நிதிஷ் குமார் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் உள்ள கோபாவேசம் மற்றும் அதிருப்தியானது ஐக்கிய ஜனதா தளத்திற்கு இந்தத் தேர்தலில் வெறும் 43 இடங்களை மட்டுமே அளித்துள்ளது. இது சென்ற தேர்தலில் 71 இடங்களைப் பெற்றிருந்தது. மகாகத்பந்தன் கூட்டணியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதலமைச்சரானபின், 2017இல் நிதிஷ் குமார் பாஜக முகாமிற்குத் தாவியதை மக்களால் எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவ்வாறு கடைந்தெடுத்த சந்தர்ப்பவாசத்தை அவர் பயன்படுத்தியதற்காக இப்போது மக்களால் அவருக்கு மரண அடி அளிக்கப்பட்டிருக்கிறது.

தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி சார்பாக மேற்கொள்ளப்பட்ட தேர்தல் பிரச்சாரம், இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதைப் பார்த்தோம். அவர் இளைஞர்களுக்கான வேலைகள் மற்றும் பொருளாதார நீதி ஆகியவற்றின் மீது கவனத்தைச் செலுத்தி பிரச்சாரத்தை மேற்கொண்டார். இக்கூட்டணியில் இடதுசாரிகளும் பங்கெடுத்துக்கொண்டது, வேலைகள், சமூக முடக்கத்தால் ஏற்பட்ட பொருளாதாரத்தின் மீதான நெருக்கடிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பரிதாப நிலை, விவசாயிகளின் பிரச்சனைகள் மற்றும் உழைக்கும் மக்களின் உரிமைகள் மீதான தேர்தல் பிரச்சாரத்திற்கு ஓர் உந்துதலையும் உத்தரவாதத்தையும் அளித்தது.

Important Links – ECZIEA

இடதுசாரிக் கட்சிகள் 16 இடங்களில் வெற்றி பெற்றிருப்பது நல்ல செயல்பாடாகும். இதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) 16 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தலா இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இவை, மக்கள், தங்கள் வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதையே காட்டுகிறது.

வழக்கம்போல, பாஜக இந்துத்துவா நிகழ்ச்சிநிரலைப் பயன்படுத்தியது. அதாவது 370ஆவது பிரிவை ரத்து செய்தது, ராமர் கோவில், ஊடுருவலாளர்களை வெளியேற்றுவோம் போன்றவற்றையே பிரச்சாரம் செய்தது. நரேந்திர மோடி, இவர்கள்தான் மக்கள்தான் ஜெய் ஸ்ரீராம் முழக்கத்தை எதிர்ப்பவர்கள் என்றே பிரகடனம் செய்தார். இந்தத் தேர்தலில் பாஜக தன் இடங்களை மேம்படுத்திக்கொண்டு, 74 இடங்களை வென்றிருப்பதிலிருந்து, மதவெறி அரசியல் சாதி அரசியலுடன் இணைந்து ஒரு வலுவான செல்வாக்கைச் செலுத்தி இருக்கிறது என்ற எச்சரிக்கை செய்தியையும் அளித்திருக்கிறது.

எதிர்காலத்தில் முறையான படிப்பினைகளைப் பெறுவதற்கு, தேர்தல் முடிவுகள் குறித்து ஓர் ஆழமானஆய்வு மேற்கொள்ளப்படுவது அவசியம் என்று கூறும் அதே சமயத்தில், முக்கியமான ஒரு பெரிய அம்சம் என்னவென்றால் இந்துத்துவா-எதேச்சாதிகார ஆபத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒரு விரிவான எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை அவசியம் என்பதாகும். மகாகத்பந்தன் அளித்திட்ட நல்லதொரு போராட்டம் இதனை நன்கு பிரதிபலிக்கிறது.

இத்தகைய தேர்தல் உடன்பாடுகள் காணும்போது, இதில் அங்கம் வகிப்போர் தங்கள் சக்தி மற்றும் செல்வாக்கிற்கு அதிகமாக இடங்களைக் கோராமல் இருக்க வேண்டும் என்கிற உண்மையையும் இத்தேர்தல் முடிவுகள் பிரதிபலித்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி 70 இடங்களில் போட்டியிட்டது என்பது கூட்டணியின் பலவீனமாக மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் போட்டியிட்ட இடங்களில் 19 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்திருக்கிறது.பீகார் தேர்தல், இவ்வாறு, அதாவது, ஒரு வலுவான தேர்தல் கூட்டணி, மக்களுக்குப் பொருத்தமான பிரச்சனைகளை எடுத்துக்கொள்ளுதல், மக்கள் ஆதரவு கொள்கைகள் சிலவற்றை முன்வைத்தல், அறைகூவல் விடுவதற்கான திறமை மற்றும் இளைஞர்களை எழுச்சிகொள்ளச் செய்தமை முதலான சில ஆக்கபூர்வமான அம்சங்களைக் காட்டி இருக்கின்றன. இவற்றை நாடு முழுவதற்கும் வரவிருக்கும் காலங்களில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

(நவம்பர் 11, 2020)


Leave a Response