Book Reviewநூல் அறிமுகம்

நூல் அறிமுகம்: கல்வெட்டுக்களில் ஊடாடும் சாதியமும் சமூக நிலையும் – மு.சிவகுருநாதன் 

 

(நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட் வெளியீடாக .சிவசுப்பிரமணியன்  எழுதிய  ‘பிராமண போஜனமும் சட்டிச் சோறும்என்ற  நூல் குறித்த பதிவு.)

கல்வெட்டுகளில் என்னென்ன செய்திகள் இருக்கும்? “மன்னர்களின் பரம்பரைப் பட்டியல், அவர்கள் நிகழ்த்திய போர்கள், கட்டுவித்த கோயில்கள், அவர்களது பட்டத்தரசியர், அறச்செயல்கள் என்பனவற்றைக் கடந்து வேறுபல செய்திகளையும் கல்வெட்டுகள் உணர்த்துவதை”, (பக்.v) முன்னுரையில் ஆய்வறிஞர் ஆ. சிவசுப்பிரமணியன் குறிப்பிடுகிறார். ‘வேறுபல செய்திகள்’ என்பதை சமூக உறவுகள் என்றும் பிற்காலச் சோழர்கள் மற்றும் விஜயநகரப் பேரரசு காலத்தில் தழைத்து வளர்ந்த வைதீகம், அக்காலத்தில் நிகழ்ந்த சாதிய உருவாக்கம், சாதிகளுக்கிடையேயான முரண்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இவை பேசுவதாகவும் சொல்கிறார்.

மன்னர்களின் மெய்கீர்த்திகள் மற்றும் பெருமைகளோடும் உள்ளார்ந்து வெளிப்படும் அரசியல் மற்றும் இடைவெளிகளிலிருந்து அக்கால சமூக, பொருளாதார, அரசியல் நோக்குகளையும் நிலைமைகளையும் வெளிக்கொணரும் இவரது சமூக வரலாற்று ஆய்வுகள் பாராட்டிற்குரியன.

“இச்செய்திகள் அடங்கிய கல்வெட்டுத் தொகுதிகளை ஆர்வத்துடன் படிக்கும் வாசகன் என்ற தகுதி மட்டும் எனக்கு உண்டு. மற்றபடி, நான் ஒரு கல்வெட்டு ஆய்வாளன் அல்லன். இக்கல்வெட்டுகளைப் படிக்கும் போது, கண்ணில் பட்ட செய்திகளைத் தரவுகளாகக் கொண்டு, (…) கல்வெட்டுகளுள் புதையுண்டு கிடக்கும் சாதிய மேலாண்மை, சாதிய இழிவு, சாதிய முரண் என்ற கூறுகளை வெளிப்படுத்தும் தன்மையன; கடந்த காலத்தை வாசிப்பது என்பது நிகழ்காலச் சிக்கல்களுடன் பொருந்திப் பார்க்க வேண்டிய ஒன்று; இதனடிப்படையில் கல்வெட்டுகளை நான் பார்த்துள்ளேன்”, (பக்.v&vi) என்று தன்னிலை விளக்கமளிக்கிறார்.

சோறு அனைவருக்குமான ஒரு உணவு. ஆனால் இது அளிக்கப்படும் இடம், ஆளுக்கேற்ப மாறுபடுவதன் மூலம் அதன் சமூக நிலை உணரப்படுகிறது. சட்டிச்சோறு, வெட்டிச்சோறு இரண்டும் ஒன்றல்ல; இவற்றின் மதிப்புகளில்கூட வேறுபாடுகள் உண்டு.

எச்சோறு – கிராம ஊழியர்களுக்கு அளிக்கும் சோறு. (இரவா, பகலா என்பதில் குழப்பம், எச்சில் சோறா என்றும் தெரியவில்லை.)

புள்ளிச்சோறு – நிலவுடைமையாளர்கள் மன்னனின் ஊழியர்களுக்கு வழங்கும் சோறு.

வெட்டிச்சோறு – ஊதியமில்லாத கட்டாய வேலைக்கான சோறு.

சட்டிச்சோறு – கோயில் பணியாளர்களுக்கு ஊதியமாகவும் தேசாந்திரிகள், பரதேசிகள், சிவனடியார்கள்  போன்றவர்களுக்கு கொடையாகவும் வழங்கிய சோறு. (பக்.10)

எ.சுப்பராயலு கூறுவதைப்போல கோயில் பிரசாதமாக மட்டும் சட்டிச்சோறு வழங்கப்படவில்லை. மறுமைக்குப் புண்ணியம் தேடும் முயற்சி இது. இது வெளிப்படையானது. உலோகப் பணத்தைவிட சோறு மிக மலிவானது. உணவால் ஏற்படும் மனநிறைவு வேலை வாங்குவோன், செய்வோனிடத்தில் பிணைப்பு ஏற்பட்டு எதிர்க்குரல் மட்டுப்பட்டு, சோறு அளிக்கும் நிறுவனம் அல்லது தனிமனிதனுக்கு நன்றிக்கடனாக இருக்கச் செய்யும். சோற்றைத் தாண்டி சிந்தனை செல்லாது. சோறுபோட்டு வேலை வாங்குவது நிலவுடைமைச் சமூகத்தின் சுரண்டல் முறைகளில் ஒன்று, என்று இதன் பின்னுள்ள அரசியலை வெளிப்படுத்துவதே ஆய்வறிஞர் ஆ.சிவசுவின் முதன்மைப் பணியாகும். (பக்.12) உணவிற்குப் பிறரைச் சார்ந்திருக்கும் நிலையில் நமது சமூக அமைப்பு இருந்ததையும் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.

சமஸ்: தமிழ்நாட்டில் ...
ஆ.சிவசுப்பிரமணியன்

பிராமணர் தவிர்த்த பிறகுக்கு கூலி, கொடையாக வழங்கப்பட்டவை சோறு என்பதைப் பார்த்தோம். ஆனால் பிராமணர்களுக்கு அளிக்கப்பட்ட உணவுக்கொடை பிராமண போஜனம் என்றே அழைக்கப்படும். பிராமணர்களுக்கு மன்னர்களும் மக்களும் வழங்கும் கொடைகள் இம்மைக்கும் மறுமைக்கும் உதவும் மிகப்பெரிய புண்ணியச் செயலென ‘மநு’ வரையறுக்கிறது. எனவேதான் பிரமதேயம், சதுர்வேதிமங்கள்ம், அகரம் போன்ற பிராமணக் குடியிருப்புகளும் இறையிலி நிலங்களும் அவர்களுக்குத் தானமாக்கப்பட்டன. (பக்.01&02)

பிராமண போஜனத்திற்கான கொடைகள் நிலம், பொன், பணம் ஆகிய மூன்று வடிவங்களில் வழங்கப்பட்டதும், நிலத்தில் கிடைக்கும் நெல் உணவுக்கான அரிசிக்கும் இதர செலவுகளுக்கும் பயன்பட்டது. பொன், பணம் ஆகியன வட்டிக்கு விட்டப்பட்டு கிடைக்கும் வட்டியிலிருந்து உணவு வழங்கப்பட்டுள்ளது. (பக்.02)

இருநாழி அரிசிச் சோறுடன் (ஒரு குறுணி / மரக்கால் நெல்லின் அரிசி), இனிப்பு, நெய், காய்கறி, புளிக்கறி, பொறிக்கறி, நாழி தயிர், பழங்கள், வெற்றிலை, பாக்கு எல்லாம் இந்த போஜனத்தில் அடங்கும். இந்த நெல்லை சமைப்பவர்கள், விறகு கொண்டு வருபவர்களுக்கு  குறுணி நெல் கூலியாக வழங்கப்பட்டது.

இந்த போஜனத்திற்காக குடிமக்கள், தொழிலாளர்கள் மற்றும் வணிகர்களின் உபரிப்பணம் முதலீடு செய்யப்பட்டது. இம்முதலீடு எதற்கும் பயன் தராத இயங்கா முதலீடாக (dead capital) அமைந்து சமூக வளர்ச்சிக்குத் துணை புரியாமற் போய்விட்டது. இதனை வருவாய் ஈட்டும் துறைகளில் முதலீடு செய்திருந்தால் மக்களுக்குப் பயன் கிடைத்திருக்கும். பிராமணரை மையமாகக் கொண்ட இந்த போஜன முறை மறுமை கருதி வழங்கப்பட்டதால் இம்மைக்கு உதவாமல் போய்விட்டதை, கிண்டலாகவும் வருத்தமுடனும் பதிவு செய்கிறார். (பக்.08)

சோற்றைப்போலவே விளக்கிலும் வேறுபாடுகள் இருந்துள்ளது. கோயில்களில் எரிந்த நந்தா விளக்கும் பிற இடங்களில் எரியும் விளக்கும் ஒன்றல்ல. இவற்றிற்கு தொடக்கத்தில் பசு, எருமை, ஆடு இவற்றின் நெய் பயன்பட்டது. கோயிலுக்கு தானமளிக்கப்படும் இவைகளை வளர்த்து நெய் வழங்கிய இடையர்கள் விளக்குக் குடிமக்கள், திருநந்தா விளக்குக் குடிகள் என்று பெயர் பெற்றிருந்தனர்.

இந்த நந்தா விளக்கும் பண்பாட்டு ஆதிக்கத்தை வெளிப்படுத்துகிறது. வைதீக ஆதிக்கமடைந்த பின் பசு நெய்யைத் தவிர பிற புறக்கணிப்பிற்குள்ளாயின.  ஆட்டு நெய் யாரும் கேள்விப்படாத ஒன்றாக மாறிவிட்டது. கோயில்களில் கோசாலைகள் மட்டுமே உள்ளன; எருமை சாலைகள் இல்லை. எருமைப்பால், எருமை நெய் ஆகியன கோயில் சார்ந்த நிகழ்வுகளிலிருந்து விலக்கப்பட்டது. (பக்.21) இந்த வைதீகத்தடையினால் ஏற்பட்ட பசு நெய் பற்றாக்குறையினைப் போக்க தாவர எண்ணெய் பயன்படுத்தப்பட்டது. (பக்.22)

முதலாம் இராஜராஜனின் 14 ஆம் ஆட்சியாண்டின் (கி.பி.1009) கல்வெட்டின்படி, மன்னனின் மகிழ்ச்சிக்காக முத்தரையன், காரி குளிரின் வாகை என்ற வீரர்கள் மன்னன் முன்பு விற்போர் நடத்தினர். இதில் காரி குளிரின் வாகை இறந்துபடவே, அவனது உறவினர்கள் கரந்தைக் கோயிலில் நந்தா விளக்கு எரித்துள்ளனர். இது ரோமானிய ‘கிளாடியேட்டரை’ நினைவுபடுத்துவதைக் குறிப்பிடுகிறார். (பக்.23)

குந்தவை நாச்சியார்-வாழ்வும் ...

முதலாம் இராஜராஜன் ஆட்சியின்போது அவனது சகோதரி குந்தவை கருந்திட்டைக்குடி (கரந்தை) கோவிலில் நந்தா விளக்கெரிக்க விரும்பியுள்ளார். அதற்காக பிராமணரின் பிரமதேய நிலங்கள், பிற சாதியினருக்கு ஊழியம் செய்ய ஊழியத்திற்கு மாற்றாக வழங்கப்பட்ட நிலங்கள் தவிர ஏனைய நிலங்களை கட்டாயமாக வாங்க ஆணையிட்டு, சாத்தம்பி என்ற அரசதிகாரி எண்பத்து மூன்றுரையே மூன்றுமான அரைக்காணி நிலத்தை பிரமதேய சபையினர் பெயரில் வாங்கி அவர்களிடமிருந்து குந்தவைப் பிராட்டிக்கு விலைக்கு மாற்றி கோயிலுக்கு விளக்கெரிக்க கொடையாக வழங்கினார். பிராமணர்களிடம் விலைக்கு வாங்குவது புனிதம் என்ற நம்பிக்கை அல்லது மறுவிற்பனையில் ஆதாயம் பெறும் நோக்கமாக இருக்கலாம் என்ற பார்வையை வெளிப்படுத்துகிறார். மேலும் நிலங்களை கையகப்படுத்தும் இன்றைய அரசியல்வாதிகளுக்கு இராஜராஜன் முன்னோடி என்பதையும் சுட்டத் தவறவில்லை. (பக்.24)

‘மநு’தர்மத்தை அடியொற்றிய சோழர்களின் நீதிமுறை இருந்தது. எனவே தங்களது மெய்கீர்த்திகளில் மனுநெறி தழைக்க, மனுவாறு செழிக்க தொடர்களைப் பொறித்தும் மனுநீதிச்சோழன், மனு குலதீபன் போன்ற பட்டங்களையும் விரும்பியும் ஏற்றுக்கொண்டார்கள்.  ஆதித்திய கரிகாலன் கொலையில் குற்றவாளிகளுக்கு முதலாம் இராஜராஜன் அளித்த தண்டனையே இதற்குத் தகுந்த எடுத்துக்காட்டு. பிராமணர்கள் மற்றும் வேளாளர்களை கடுமையாகத் தண்டிக்கக்கூடாது என்பதன் மறுதலையாக, கீழ்சாதிகளைத் தண்டிக்கும் முறைமைகள் நிறைய இருந்தது தெரிய வருகிறது. (பக்.27)

நைவேத்தியப் பொருள், பொன், பொன் அணிகலன், மரம், அரிசி, பூசைப்பொருள்கள் ஆகியவற்றை திருடியது, கையூட்டு பெற்று கோயில் கணக்கில் மோசடி செய்தது போன்ற குற்றங்களுக்கு பூசை செய்யும் உரிமை பறிப்பு, தண்டம், பணத்தைக் கையாளும் பணி தராமை, சொத்துகள் பறிமுதல் ஆகிய தண்டனைகள் விதிக்கபட்டுள்ளன. (பக்.33)

ஆனால் பொன் அணிகலன்களைத் திருடிய ஒரு வேலையாள் (கைக்கோளர்) ஒருவரை சிறைப்படுத்தி, கையை வெட்டி, நிலவுடைமையைப் பறித்து, ஊரைவிட்டு துரத்தியுள்ளனர். ஒரு குற்றத்திற்கு நான்கு தண்டனைகள்!  குற்றத்தின் தன்மையைக் கணக்கில் கொள்ளாமல், செய்தவனின் சாதி, பொருளியல், சமூகத் தகுதி மட்டுமே அடிப்படையாகக் கொண்டு (மநு) நீதி வழங்கப்பட்டுள்ளதை சரியாக எடுத்துக் காட்டுகிறது. (பக்.33)

கடவுள் என்ற கருத்துநிலை உருவாகி உருவம் வடிவமைக்கப்பட்ட பிறகு, படையல் வழக்கமானது. சங்க இலக்கியத்தில் முருகனுக்கு இறைச்சிப் படையலும், நடுகல் வழிபாட்டில் இறைச்சியுடன் கள்ளும் உண்டு. வைதீக மதங்களான சைவமும் வைணவமும் இறைச்சி, கள் போன்றவற்றை விலக்கி புதிய படையல் பொருள்கள் வரையறுத்தன. சமைக்கப்பட்ட உணவுப்பொருளே படையலாக இருந்தாலும் வழிபடுவோர் சமைத்து எடுத்துவர அனுமதிக்கப்படவில்லை.  கோயிலில் உணவளிப்பதும் படையல் செய்வதும் (திரு) மடைப்பள்ளியின் ஏகபோகத்திற்கு வந்தது. இவற்றையும் வைதீகம் தனது அதிகார எல்லைக்குள் வைத்துக்கொண்டது. (பக்.36)

திருமடைப்பள்ளியின் பணியாளர்கள் அடுவான், அடுவார், அடுமடையர், மடையர், மடையாள் என்றும் சமையற் பெண்கள்  மடைப்பள்ளிப் பெண்டாட்டி என்றும் வழங்கப்பட்டார். விறகு கொண்டு வருவோர் விறகிடுவான் என்றும் தண்ணீர் கொண்டு வருபவர்  நீர் அட்டுவான் என்றும் அழைக்கப்பட்டனர். உணவுண்ட இலையை எடுக்கும் ஆண் எச்சிலெடுப்பான் என்றும், பெண் எச்சிலெடுப்பாள் என்றும் அழைக்கப்பட்டனர். கழுவுதல், சுத்தம் செய்தல் போன்ற பணிகளில் பெண்கள் ஈடுபடுத்தப் பட்டனர். (பக்.37&38) இங்கும் ஆதிக்க, சாதியப் படிநிலைகள் இருப்பதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை.

பனையும் வேம்பும் சங்க இலக்கியத்தில் சுட்டப்படும் மரங்கள். பனையிலிருந்து கிடைக்கும் கள் எப்படி கடவுள் படையலிலிருந்து விலக்கப்பட்டதோ, அதைப்போல 14 ஆம் நூற்றாண்டு வரை பயன்பட்ட,  பனை வெல்லமாக கருப்புக்கட்டி (கருப்பட்டி) இன்று சைவ, வைணவ மடைப்பள்ளிகளில் அனுமதிக்கப் படுவதில்லை.

பஞ்சாமிர்தம் என்ற பழக்கலவையில் பேரிச்சை, ஆப்பிள் சேர்கிறது; சர்க்கரைப் பொங்கலில் முந்திரி, உலர் திராட்சையும் புளியோதரையில் நிலக்கடலையும் இடம்பெறுகின்றன. பாரசீக ரோஜா மலரிலிருந்து எடுக்கப்படும் பன்னீர் கடவுளை நீராட்டும் பொருள். ஆனால் பனை மரத்தின் கருப்பட்டிக்கு ஏன் அனுமதி இல்லை? என்ற கேள்விக்கு புராணக்கதைகள் புனையப்பட்டதும், அடித்தட்டு மக்கள் மீதான சாதிய ஒடுக்குமுறையின் ஓரங்கமாகவே கருத வேண்டியுள்ளது. (பக்.36-44, திருமடைப்பள்ளியும் கருப்புக்கட்டியும்)

What is the difference between Brahman, Kshatriya, Vaishya, and Shudra?

 

 

தொல்காப்பியம் வடமொழி நூல்களின் வருண வேறுபாடுகளை (பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர்) அப்படியே ஏற்காமல் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என நான்கு பிரிவுகள் இடம் பெறுகின்றன. (பக்.45) இது ஒன்றும் புரட்சிகரமானதல்ல என்பதை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் வேண்டியதில்லை.

இன்றுபோல் ஒரு குறிப்பிட்ட சாதியைக் குறிக்கும் சொல்லாக வேளாளர் என்ற சொல் தொடக்கத்தில் வழக்கிலில்லை. (பக்.45) பதவிப்பெயராகவும், மன்னர்களால் வழங்கப்பட்ட பட்டங்களாகவும் இருந்த ‘முதலி’, பிள்ளை என்பன, பிற்காலத்தில் தங்களுக்குள்ளான அகமணமுறை மூலம் தனித்த சாதியாக தங்களை உருமாற்றிக் கொண்டுள்ளதும், மேலும் தொழில், சமயம், வாழும் பகுதியை முன்னொட்டாகக் கொண்டு சாதியாகத் திரண்டதும் (பக்.50), சொல்லப்படுகிறது. இருப்பினும்  இது அதிகாரப் படிநிலையில் உச்சத்தில் இருந்த அடுக்கிற்கே சாத்தியமானதையும் நாம் மனங்கொள்ள வேண்டும்.

எட்டுக் கட்டுரைகளும் சிறியவை. ஒன்பதாவது கட்டுரையான, ‘கல்வெட்டுகளில் காப்புரை’ மட்டும் பெரியது (26 பக்கங்கள்). காப்புரை ‘ரட்சை’ என்று சமஸ்கிருதத்திலும் ஓம்படைக்கிளவி என்று தமிழிலும் வழங்கப்பெறும்.

பல்லவர் ஆட்சியில் நிலவுடைமைச் சமூக வளர்ச்சியோடு பிராமணிய சமயத்தின் செல்வாக்கும் அதிகரித்தது. இதைக் பாதுகாக்க மறுமை, இனபம், நரகம் என மிரட்டும் தொனியில் காப்புரைகள் உருவாக்கப்பட்டன. இதன் நீட்சியாகவும் போதாமையினாலும் சோழர் காலத்தில் புனிதம், தீட்டு என்ற கருத்துகளைக் கொண்ட காப்புரைகள் உருவானதை எடுத்துரைக்கிறார். (பக்.53)

ஆசை காட்டுவன, அச்சுறுத்துவன, ஆசையும் அச்சுறுத்தலும் இணைந்தவை, பழிச்சொற்கள், இழிச்சொற்கள் கொண்டவை என நான்கு வகையான காப்புரைகளை (ஓம்படைக்கிளவிகள்) ஆராயப்படுகின்றன. அரசபடையிலும் அரச பதவிகளிலும் வணிகர்களாகவும் இருந்த இஸ்லாமியர்களின் சமயத்தைப் பற்றிய காப்புரைகளும் உண்டு. (பக்.71)

புண்ணியத் தலங்கள், புண்ணியத் தீர்த்தங்கள், மறுமை வாழ்வு (நரகம், சொர்க்கம்) ஆகியவற்றால் ஆசை காட்டியதும் அச்சுறுத்தியதும் பிராமணர்கள், பசுக்கள் பேண வேண்டியதும் வேள்விகள் மூலம் அவர்கள் வளம் பெறத்தேவையான கருத்துகளும் இதன் மூலம் பரப்பப்பட்டன. உழைக்கும் மக்களை இழிவுபடுத்தும் நிலையை இவை காட்டுகின்றன. ராஜ துரோகி, இனத் துரோகி, சைவத் துரோகி, குருத் துரோகி போன்ற அடையாளங்களுக்கு மக்கள் அஞ்சியுள்ளனர். தகாப்புணர்ச்சி (Incest) தொடர்பாக, சமூகத்தில் நிலவிய அருவருப்புணர்வைப் பயன்படுத்தி கொடைச் சொத்துகளைப் பாதுகாக்க முனைந்துள்ளனர். சாதியச் செருக்கு, தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்பட்ட ஆணுடன் பெண்களை இணைத்துக் காப்புரை உருவாக்குவது பெண்கள் மீதான அக்காலப் பார்வையைத் தருகிறது. பாலியல் வசைகள் அக்காலப் பண்பாட்டு விழுமியங்களை வெளிப்படுத்துகிறது, என விரிவான ஆய்வு முடிவுகளை வெளிப்படுத்துகிறார். (பக்..74&75) நிலங்களை ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தவர்கள் அரசியல் பலத்தை மட்டுமின்றி ஆன்மீக துணையாலும் காப்பற்ற முனைந்ததை, காலவரிசைப்படுத்தி தொகுத்தால் ஒவ்வொரு காலத்திலும் ஆதிக்க சக்திகள் பயன்படுத்திய ஆன்ம விலங்குகளை அறியலாம் என்கிறார். (பக்.76)

பிராமண போஜனமும் சட்டிச் சோறும் ...

பிற்காலச் சோழர் காலத்தில் ‘துரோகி’ என்னும் சொல், ராஜ துரோகி, இனத் துரோகி, நாட்டுத் துரோகி, சைவத் துரோகி, குருத் துரோகி  எனும் கூட்டுச் சொற்களாக ‘ஓம்படைக் கிளவி’ப் பகுதிகளில் இடம் பெறுவதும், ‘அந்தணன் தலையாக பள்ளன் கடையாக’ என்று குடுமியான்மலை கல்வெட்டு சொல்வதைப்போல, சாதி மற்றும் சாதிக்குழுக்களின் படிநிலைகளையும் ஒன்றையொன்று எதிர்த்தெழுந்த ஆதிக்கப் போட்டிகளை புதிய வகை  ‘ஓம்படைக் கிளவி’கள் வெளிப்படுத்துகின்றன, என நொபொரு கராஷிமா ஆய்வு எடுத்துக்காட்டுவதையும் இங்கு குறிப்பிடலாம். (தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும் பொ.ஆ. 800-1500 – நொபரு கராஷிமா, எ.சுப்பராயலு, என்.சி.பி.ஹச். வெளியீடு)

கல்வெட்டுகள் என்பன மன்னர்களை மட்டுமல்ல; மக்கள் சமூகத்தையும் காட்டும் காலக் கண்ணாடி என்பதை உணர்த்துவதில் இந்நூல் முழு வெற்றி பெறுகிறது. அரசர்கள், போர்கள் பற்றிய வரலாறுகளைவிட இம்மாதிரியான மக்கள் வரலாறுகளை படைப்பதற்கான திசைகாட்டியாகவும் இவ்வாய்வுகள் அமையும் என்பதில் அய்யமில்லை.

நூல் விவரங்கள்:

 பிராமண போஜனமும் சட்டிச் சோறும் (இடைக்காலத் தமிழகத்தில் வைதீகமும் சாதி உருவாக்கமும்)

. சிவசுப்பிரமணியன்

 முதல் பதிப்பு: டிசம்பர் 2017

இரண்டாம் பதிப்பு: ஜூலை 2018

பக்கங்கள்: 86

விலை: 75

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட் (NCBH),

41, பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர்,

சென்னை – 600098.

 044-26258410, 26251968, 26359906, 48601884

மின்னஞ்சல்: info@ncbh.in

Leave a Response