Book Review

புத்தக அறிமுகம்: பகத்சிங்கின் “நான் நாத்திகன் – ஏன்?” – *~ திவாகர். ஜெ ~*

Spread the love

 

ஒரு குழந்தை பிறந்தது முதலே கடவுள் நம்பிக்கை என்பது இயல்பாய் அதன் செல்களில் பதிந்திருக்குமா? வாய்ப்பில்லை தானே? கடவுள் குறித்த கற்பிதங்கள் எல்லாமே மனிதர்களுக்குள் வலிந்து திணிக்கப்படுபவை தான். பலர் வாழ்க்கை முழுவதுமே அவ்வாறு திணிக்கப்படும் கற்பிதங்கள் அத்தனையும் உண்மை என நம்பி அதிலேயே வாழ்ந்து முடித்தும் விடுவர்.  ஆனால், சிலர் மாத்திரமே குறிப்பிட்ட ஒரு காலத்திற்குப் பின் அவ்வித கற்பனைக் கதைகளை ஆராய்ந்து அவற்றில் கிஞ்சித்தும் பகுத்தறிவுக்கு ஏற்புடையவை ஏதுமில்லை என்பதை உணர்ந்து திருந்துவர்.

பகத்சிங் – இந்திய சுதந்திரத்தினைக் குறித்து வாசிக்கையில் தவிர்க்க இயலாத ஒரு பெயர் பகத்சிங். 24 வயதிற்குள் ஓர் இளைஞனால் தன் நாட்டின் விடுதலைக்கு அளப்பரிய பங்களிப்பினை அளிக்கவியலும் என உலகிற்கு உணர்த்திய ஒப்பற்ற போராளி. தேச நலனும், நாட்டு மக்களின் முன்னேற்றமுமே தம் உயிர் மூச்சாய் கொண்டோருக்கு இயல்பிலேயே கடவுள் எனும் குறிப்பிட்ட சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட பிம்பத்தின் மீதான நம்பிக்கை குறைவது இயற்கை தான் போலும். பகத்சிங்கும் இதற்கு விதிவிலக்கல்ல.

பகத்சிங்கைத் தூக்கிலிடுவதற்கு முன் லூகூர் சிறையிலிருந்து தன் தந்தைக்கு “நான் ஏன் கடவுள் மறுப்பு கொண்டவனாக மாறினேன்” என்பதை கடிதம் மூலம் தெரிவித்தார். அது பின்னாளில்  *”Why am I Atheist”* என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தது. தமிழில் அப்புத்தகம்  *”நான் ஏன் நாத்திகன் ஆனேன்”* என்ற பெயரில் ப. ஜீவானந்தம் என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டது.

நம் எல்லோரையும் போன்றே பகத்சிங்கும் ஆரம்பத்தில் தெய்வ நம்பிக்கை கொண்டவராகவே இருக்கிறார். அவரது அந்நம்பிக்கை தகருமிடம், கடவுளின் தேவையின்மை, கடவுளின் இருப்பு குறித்து அவர் எழுப்பும் கேள்விகளால் தன் நட்பு வட்டத்திலேயே *அகங்காரம் பிடித்தவனாய்* தன்னை அவர்கள் நினைத்தல் என பல நிகழ்வுகளை இந்நூலில் பேசுகிறார்.

நான் நாத்திகன் ஏன்? : Naan Naathikan yen (History ...

நமது கருத்துகளை வலுவாய் முன்வைப்பதற்கும், பொய்மைகளை நீக்கி உண்மையை மட்டும் உணர ஒரே வழி – கற்பது மட்டுமே. இதையே நூலில் பகத்சிங், *”கற்றுணர் – எதிராளிகளின் பலமான ஆட்சேபங்களுக்கு அச்சமின்றி ஆணித்தரமான ஆப்புகளும், கண்டனங்களும் கொடுப்பதற்காக கற்றுணர். உன்னுடைய இலட்சியம், கொள்கை இவற்றின் போக்கைப் பரிசீலனை வாதங்களால் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டுக் கற்றுணர்”* என்கிறார்.

தன்னைப் பற்றி குறிப்பிடுகையில் ஓரிடத்தில் பகத்சிங் இவ்வாறு குறிப்பிடுகிறார்: *” நான் ஒரு யதார்த்தவாதி. என்னுள் எழும் உணர்ச்சியை பகுத்தறிவின் துணையால் அடக்கியாள முயற்சித்துக் கொண்டு வருகிறேன். இந்த முடிவை அடைவதில் நான் எப்பொழுதுமே வெற்றி பெற்று வரவில்லை. ஆனால் மனிதனுடைய கடமை இடையறாது முயற்சிப்பதே”*

உண்மை. மனிதனின் இடையறாத முயற்சியே மனித குலத்தின் இத்தகு வியத்தகு முன்னேற்றங்களுக்குக் காரணமன்றோ. அதேபோல், *”முன்னேற்றத்தை நாடும் எந்த மனிதனும் பழைய மதத்தின் ஒவ்வொரு பாகத்தையும் அலசி அலசி ஆராய்ச்சி செய்து தீர வேண்டும். பழைய கொள்கைகளையும், கோட்பாடுகளையும் போட்டிக்கு அழைத்து தீர வேண்டும்”* என்றும் கூறுகிறார்.

கடவுள் நம்பிக்கை கொண்டோரிடம் வாதிடுகையில், அவர்கள் முன் வைக்கும் வாதங்களுள் சில இவை:

*உயிர்களை சிருஷ்டித்தவன் நிச்சயம் ஒருவன் இருக்க வேண்டும். அவனே இறைவன்.

*மனிதர்கள் அவரவர் செய்யும் பாவ, புண்ணியத்திற்கு ஏற்பவே மறுபிறவியில்  விலங்குகளாகவோ, பறவைகளாகவோ இன்னபிற உயிரிகளாகவோ பிறக்கிறான்.

*முப்பிறவியில் செய்த பாவத்தின் பயனாகவே இப்பிறவியில் கஷ்டங்களை அனுபவிக்கிறான்.

*தவறு செய்தவர்களுக்கு கடவுள் தண்டனை கொடுப்பான்.

இவை போல இன்னும் பல.

இதுபோன்ற இன்னும் பல்வேறு வகையான வாதங்களுக்கும் பகத்சிங் இந்நூலில் ஆழமான – அர்த்தமுள்ள விளக்கங்களைத் தெளிவாய் அளித்துள்ளார். இந்து, கிறித்துவம், முகம்மதியம் என அனைத்து மதக் கருத்துகளையும் விமர்சித்துள்ளார்.

விடுதலைக்கு வித்திட்ட நாத்திக வீர ...

உதாரணத்திற்கு சில வரிகளை மட்டும் நூலிலிருந்து மேற்கோள் காட்டுகிறேன்.

*—> அந்த முழுமுதற் கடவுள் எதற்காக உலகத்தை படைத்து, அதில் மனிதனை சிருஷ்டித்தான் என்றும், தமாஷ் பண்ணிப் பொழுது போக்கவென்றால் அவனுக்கும் நீரோவுக்கும் என்ன வித்தியாசம் என்று நான் கேட்கிறேன்.*

*—> பூர்வத்தில் பாவம் செய்ததன் பயனாக போன ஜென்மத்தில் கழுதையாக பிறந்தோமென்று உங்களை சந்தித்த மனிதர்கள் எவரேனும் கூறியதுண்டா? ஒருவரும் இல்லை. உங்களுடைய புராணங்களைப் புரட்டி உதாரணம் காட்ட புறப்பட்டு விடாதீர்கள்.  ஏனெனில் உங்கள் புராணங்களை சந்தியிலிழுக்க நான் விரும்பவில்லை.*

மற்றெல்லாவற்றையும் விட நூலின் கடைசி பத்தியில் பகத்சிங் கூறியுள்ள வரிகள் கவனிக்கத்தக்கவை.

*”ஒரு நண்பர் பிரார்த்தனை செய்யும்படி என்னை வேண்டிக் கொண்டார். நான் எனது நாத்திகத்தை பற்றி கூறினேன்.  அப்பொழுது அவர் “உனது கடைசி நாள்களில் நீ நம்பிக்கை கொள்ள ஆரம்பித்து விடுவாய்” என்றார். அவரிடம், “அன்பார்ந்த அய்யா, அப்படி நேரவே நேராது. அவ்வாறு நம்புவது, என்னை அகவுரவப்படுத்தி, அவமானப்படுத்துவதாகவே நினைப்பேன். பலவீனத்தால், சுயநல நோக்கங்களால், நான் பிரார்த்தனை செய்யப் போவதில்லை” என்று சொன்னேன். வாசகர்களே! நண்பர்களே! “இது அகங்காரமாகுமா?” அகங்காரந்தான் என்றால் நான் அப்படிப்பட்ட அகங்காரத்தையே விரும்புகிறேன். தூக்கு மேடையில் கூட ஆண்மையுள்ள மனிதனைப் போல் தலை நிமிர்ந்து நிற்கவே முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்”*

நூலை வாசித்து முடிக்கையில் ஒரு ஆராய்ச்சி நூலை வாசித்து முடித்த திருப்தி கிடைக்கிறது. பகத்சிங் எனும் ஒரு தனிமனிதன் மட்டுமல்ல, நாத்திகர் என அறியப்படும் அனைவருமே தாம் ஏன் நாத்திகரானோம் என கூறின் நிச்சயம் இந்நூலிலுள்ள கருத்துகளிலிருந்து பிறிதொரு கருத்தைக் கூறவியலாது போலும். அத்தனை செறிவு மிகுந்த கருத்துகள். வாசியுங்கள். இதுவரை புலனாகாத பல வினாக்களுக்கு விடையறிவீர்கள்.

வாசிப்பும், பகிர்வும்

 

*~ திவாகர். ஜெ ~*

கணித ஆசிரியர்

காஞ்சிபுரம்.

Noolulagam » நான் நாத்திகன் » Page 1

நூல் : நான் நாத்திகன் – ஏன்?

ஆசிரியர் : பகத்சிங்

தமிழில் : ப. ஜீவானந்தம்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்

பக்கங்கள் : 24

விலை : ₹ 5

 

Leave a Response

Top Reviews

Video Widget

gallery