Web Series

எழுத்தாளர் பவா. செல்லத்துரை எழுதும் “இரட்டை கதவுகள்” (மலையாள நவீன இலக்கிய அறிமுகமும், படைப்புகளும்) -2: பால் சக்காரியா

Spread the love

 

‘யாருக்குத் தெரியும்?’ என்ற சாத்தியமற்ற ஒரு கதையின் மூலமாகத்தான்  சக்காரியா தமிழுக்கு அறிமுகமானார். இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கொல்லச் சொல்லும் ஏரோதுராஜாவின் கட்டளையை நிறைவேற்ற செல்லும் ஒரு போர் வீரனுக்கும் ஒரு வேசிக்கும் நடக்கும் தர்க்கம் மனித வாழ்வும், அதன் சாராம்சமும் பற்றியது. ஒரு குழந்தையின் வாழ்தல் இத்தனை ஆயிரம் குழந்தைகளை கொல்லும் எனில் அதை மட்டும் எதற்கு ஜீவிக்க வேண்டும்? ஒரு போர் வீரனுக்கு யாரோடு தான் பகை? அதிலும் குழந்தைகளோடு. இதெல்லாம் சக்காரியா என்ற பெயரோடு கோட்டயத்தில் பிறந்து உலகத்தில் இருக்கும் எல்லோருக்காகவும் மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் எழுதும் ஒருவனுக்கு சாத்தியமாகிறது.

Politicians torture people without shedding blood: Paul Zacharia

காந்தியை முன்வைத்து அவர் எழுதிய ‘இதுதான் என் பெயர்’ என்ற குறுநாவல் ஒரேசமயத்தில் தமிழில் சுகுமாரனும் கேவி ஜெயஸ்ரீயும் மொழிபெயர்த்தார்கள். ‘யேசுபுரம் பொது நூலகத்தை பற்றிய புகார் மனு’, ‘ரயில் கொள்ளை’, ‘இரண்டாம் குடியேற்றம்’, ‘ஒரு நாளுக்கான வேலை’, ‘நமக்கு வசித்த முந்திரி தோப்புகள்’,  ‘தேன்’ என நானறிந்து 50-க்கும் மேற்பட்ட கதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கடந்த 40 ஆண்டுகளில் சக்காரியா பெயர் இன்றி கேரள நாளிதழ்கள் அச்சேறினதில்லை என ஜெயமோகன் சொல்கிறார். அந்த அளவிற்கு சமூகத்தோடும் கேரள இந்திய அரசியலோடும் தன்னை ஒப்புக் கொடுத்தவர் சக்காரியா.

இரண்டாம் குடியேற்றம் – Vamsibooks

அவர் பெற்ற விருதுகள், நிராகரித்தவைகைகள், ஒன்றிரண்டு திரைப்படப் பங்களிப்பு என எல்லாவற்றையும் தாண்டி இந்த உலகம் முழுக்க சுற்றித்திரியும் தேசாந்திரியாகவே அவர் தன்னை மாற்றிக் கொண்டார். அதை தடுக்க முயன்ற குடும்ப அமைப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டவர் சக்காரியா.

சக்காரியாவின் ஒவ்வொரு கதை பிரசுரமாகும்போதும் அரசியல், சமூக ரீதியான பெரும் விவாத அலைகள் கேரளாவில் ஏற்படுவதுண்டு. புனைவை விட அதிகமாக உரைநடையில் கவனம் குவித்துள்ளார். காலச்சுவடு பத்திரிகையில் அவர் எழுதின ‘அரபிக் கடலோரம்’  பத்தி எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது எனவும், தமிழ் நாட்டின் மீதும் அம்மக்களின் மீதும் ஒரு பக்கத்து மாநிலத்தில் இருந்து எழுதும் எழுத்தாளனுக்கு எத்தகைய அக்கறையும் பிரியமும் இருக்கிறது என்பதை வெகு சுலபமாக அறிந்து கொள்ள முடியும்.

அரபிக் கடலோரம் | Buy Tamil & English Books Online ...

பெண்ணியம் கூட அல்ல பெண்கள் மீதும், அவர்களின் உழைப்பின் மீதும், அறிவின் மீதும், மேதமை மீதும் அவருக்குள்ள ஈடுபாடு பல கதைகளை அவர்களை பற்றி அவர் எழுதியதிலிருந்து வெளிப்படுகிறது. சற்று தேடினால் கிடைத்துவிட சாத்தியமுள்ள ‘நமக்கு வசிக்க முந்திரித் தோப்புகள்’, ‘இரண்டாம் குடியேற்றம்’ ‘தேன்’ ஆகிய கதைகளையாவது தமிழ் வாசகர்கள் வாசிக்க வேண்டும்.

இதுவரை யாரும் தன் கற்பனையால் கூட தீண்ட முடியாத கருக்களையே சக்காரியா தன் படைப்பின் ஜீவாதாரமாக எடுக்கிறார். இயேசுவை ஒரு தேவ குமாரனாக இல்லாமல் சாமானிய குழந்தையாக, தலைவாரி தன்னை அழகுபடுத்திக் கொள்ளும் இளைஞனாக, மக்தலேனா மரியாளிடம் தன் மனதைப் பறி கொடுப்பவனாக, அநீதியைக் கண்டு கொதித்து எழும் மனம் கொண்டவனாக சில சமயம் மௌனம் காத்து தன் பிதாவிடம் இரைந்து மன்றாடுபவனாக என பதிமூன்று கதைகளை அவர் எழுதியிருக்கிறார். அவை ‘யேசு கதைகள்’ என்ற பெயரில் கே.வி.ஜெயஸ்ரீயால் ‘வம்சி புக்ஸ்’ பதிப்பத்தால் புத்தகமாக்கப்பட்டுள்ளன. சாகித்ய அகாடமி அவருடைய 36 கதைகளை கே.வி.ஜெயஸ்ரீயின் மொழிபெயர்ப்பில் தனித்தொகுப்பாக கொண்டு வந்துள்ளது.

யேசு கதைகள் - நூல் அறிமுகம் | யேசு ...

இப்போது சக்காரியா தமிழ் வாசகர்களுக்கு மிக நெருக்கமானவர். பக்கத்து மாநில எல்லைகளை தன் எழுத்தைக் கொண்டு அழித்து தமிழ் நாட்டின் நிலப்பரப்பில் மட்டுமின்றி உலகில் பல மொழி பேசுபவர்களுக்கும் அவர் ஒரு ஆதர்சகர்த்தா. இன்றளவும் அரசியல் நிலைப்பாடுகளின்போது அதன் பின்விளைவுகளின்றி எதிர்வினை ஆற்றுபவர். அதனால்தான் எதிர்கொள்ளும் யாதொன்றையும் தன் சுண்டு விரலால் தட்டி விடுபவர்.

ஒரு பத்திரிக்கை பேட்டியின்போது அப்பத்திரிகையின் பெண் நிருபர் கேட்கிறார். ‘சார், எத்தனை வயதிலிருந்து குடிக்கிறது?’

‘ ஒரு வயதிலிருந்து’.

அவள் சிரிக்கிறாள். முகத்தில் இருந்து ஒரு சிறு புன்னகையும் சிந்தி விடாமல் சக்காரியா சொல்கிறார்.

‘கேரளாவில் சிறியன் கிறிஸ்தவ குடும்பங்களில் கிறிஸ்மஸ்காக கிருமங்களுக்காக ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே ஒயின் காய்ச்சுவார்கள். அம்மே என் நாக்கில் அதை தேன் போல தடவி ருசி கூட்டியவள்.’

இந்த வெளிப்படைதான் சக்காரியாவை இன்றுவரை ஒரு அசல் கலைஞனாக காலத்தின் முன் நிலைநாட்டுகிறது.

 

Top Reviews

Video Widget

gallery