Book Review

நூல் அறிமுகம்: காலத்தைக் கடந்து ஒரு பயணம் – ப.க. புகழ்ச்செல்வி.  

Spread the love
கண்களை கொஞ்சம் மூடிக்கொள்ளுங்கள் நாம் பின்னோக்கி பயணிக்கப் போகிறோம் என்று துவங்குகிறது அந்தப் புத்தகம் அப்படி எங்குதான் நம்மை அழைத்துச் செல்லப் போகிறார்கள் என்று பயணிக்கத் துவங்கினால், தெற்கு ஈராக், பல்கேரியா, சிந்து, ஆதிச்சநல்லூர், ஓடை என்று உலகை ஒரு சுற்று சுற்றி  கீழடியில் முடிவடைகிறது அந்தப் பயணம். அடடா, எத்தணை படிவங்கள், பொற்களஞ்சியங்கள், கதைகள் மற்றும் தொல்லியல் தொன்மங்கள்.
நிற்க. “தொல்லியலா? நான் ஏதோ டைம் ட்ராவல், அலாவுதீன் கம்பளம், மந்திர மாயாஜால பயணமென்றல்லவா நினைத்தேன்”, என்று நீங்கள் நினைப்பது எனக்கும் தெரிகிறது.
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய், என்று நாம் கேள்விபட்டு இருப்போம். அப்படியாக நம் (மனித) குல வரலாறு மற்றும் நம்மின் வளர்ச்சியென அனைத்தையும் சான்றோடு நிரூபிக்கும் துறைகளில் ஒன்று தான் தொல்லியல். நம் வாழ்வில் நாம் பெரிதும் கண்டுக்கொள்ளாத ஓர் அறிவியல் இது.
“அட அதுவெல்லாம் சரிதான். ஆனால், நான் ஏன் இந்த புத்தகத்தைப் படிக்க வேண்டும்?” என்று உங்களுக்குள் எழும் வினாவிற்கான விடையைத் தரும் முயற்சிதான் இந்த நூல் அறிமுகம்.
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு research - YouTube
*வியப்பூட்டும் தகவல்கள்*
தொல்லியல் ஆய்வாளர்/ ஆர்வலர் அன்றி பிறருக்கு தெரியாத வியப்பூட்டும் பல தரவுகளை உள்ளடக்கிய புத்தகம் தான் எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ் எழுதியுள்ள “ஆதிச்சநல்லூர் ,முதல் கீழடி வரை”  எனும் இந்நூல்.  3,500 ஆண்டுகள் முன்பு நறுமண தைலம் பயன்படுத்திய எகிப்திய பெண் ஃபாரோ ஹட்வெய்சுட், 2000 ஆண்டுகள் முன்பு 7 தங்கப்பட்டைகளில் பொறிக்கப்பட்ட கோதை என்பவளின் பெயர். பொது ஆண்டுக்கு முன் (கி.மு.) 3700 இல் கட்டப்பட்ட கப்பல் துறைமுகம் என்று பல அறிய மற்றும் வியப்பூட்டும் தரவுகள் இதில் உள்ளது.
தன்னை தொல்லியல் ஆர்வலராக அறிமுகம் செய்துக் கொள்ளும் எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ் பல வினாக்களை நம்முன் எழுப்பி அதற்கான  விடைகளையும் தந்திருக்கிறார். பலகாலமாக நிகழும் சர்ச்சையான சிந்து சமவெளி நாகரிகமா அல்லது தென் இந்திய நாகரிகமா எது முந்தையது என்னும் வினாவிற்கு  “தென்னிந்திய தொல்குடியின் மூத்தோரே சிந்துசமவெளி நிறுவியவர்கள்” என்கிறார் நிவேதிதா.
அதேபோல், அத்திரம்பாக்கம் மற்றும் குடியம் பகுதிகளில் கிடைத்த பழங்கால கருவிகளைச் சுட்டிக்காட்டி “ஆப்பிரிக்காவில் இருந்து 60,000 ஆண்டுகள் முன்னால் ஹோமோ சேப்பியன் என்ற நம் நேரடி முன்னோர் இங்கு வந்தனர் என்றால், குடியம் பகுதியில் கிடைத்த ஆயுதங்கள் அதற்கு இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே செய்த மனித இனம் வேறு என்பது புலனாகிறது, அல்லவா?” என்று ஓர் வினாவை எழுப்புகிறார்.
*நாகரீகங்களின் தொட்டில்*
கீழடி அகழ்வாராய்ச்சி பணியில் ...
கீழடியில் நடைபெற்ற அகழாய்வின் மூலமாக ஈர்க்கப்பட்ட பலருள் ஒருவரான எழுத்தாளர், இந்த புத்தகத்தில் தமிழக தொல்லியல் தடங்களையும், அங்கு கிடைத்த தரவுகளை மட்டும் சுட்டிக்காட்டவில்லை. அதற்கு இணையாக உலக அளவில் நிகழ்ந்த ஆய்வுகள் மேலும் அங்கு கிட்டிய தரவுகளையும் இணைத்து உள்ளார். பல இடங்களில் சங்க கால பாடல்களையும் இதற்கு சான்றாக எடுத்துரைத்துள்ளார்.
அக்காலத்தில் கண்ணாடியை எவ்வாறு சுத்தம் செய்தனர் என்பதை நம்முன் காட்சியாக்கி காட்ட பரிபாடலில் இடம் பெற்ற ஒரு பாடலை எடுத்துரைக்கிறார். அகழாய்வுகள், அதன் தரவுகள், அதற்கு இணையான பாடல்களைத் தாண்டி அவற்றை அகழ மற்றும் அதன் காலத்தைக் கண்டறிய பயன்படுத்திய பல முறைகள் மற்றும் கருவிகளை எளிமையாகப் புரியும் வகையில் உரைத்திருக்கிறார் எழுத்தாளர். மேலும் அக்காலத்திற்கே நாம் சென்றார் போல் உணர வைக்ககூடிய அளவில் லோத்தல் கப்பல் துறைமுக மற்றும் “லேண்ட் ஆஃப் பன்ட்” என்று தேய்ர் அல் பாஹ்ரி கோயிலில் வரையப்பட்ட படம் போன்றவைகளை இணைத்துள்ளார்.
அகழாய்வு தரவுகளை எளிமையாக அளித்த எழுத்தாளர் அதை மறுஆய்வு செய்வதற்கான வழியையும் எளிமையாக்கி இருக்கலாம். எடுத்துக்காட்டாக, கொடுக்கப்பட்ட தரவுகளுக்கு கீழேயே அவை எங்கு இருந்து பெறப்பட்டவை என்பதை பதிவிட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும். மேலும் மனித குல தொட்டில் ஆப்பிரிக்கா மட்டும்தானா என்னும் சர்ச்சை நிகழும் இந்த சூழலில் 145 ஆவது பக்கத்தில் பதிவிடப்பட்ட அட்டவணை எங்கு இருந்து பெறப்பட்டது என்பதையும் 149 ஆவது பக்கத்தில் ஹோமினிட்டுகள் பற்றி விளக்கமளிக்கும்போது குறிப்பிட்டு இருக்கலாம். இவ்வாறு செய்திருந்தால் தொல்லியல் சார்ந்து மேலும் ஆராய்ச்சி செய்ய எண்ணுவோருக்கு உதவியாக இருந்திருக்கும்.
பதினாறு தமிழக தொல்லியல் தடங்களை இருபது அத்தியாங்களில் தந்து இருக்கிறார் எழுத்தாளர். உலகின் முதல் ஆடை, சதுரங்க காய்கள், யானைதந்த சீப்பு, கண்ணாடி, அச்சூலியன் கற்கோடரி, ஓல்துவான் கருவிகள், நீத்தார் மேடு, மனிதனுக்கும் நாய்களுக்கும் இடையான உறவு, 6000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வர்க்க பாகுபாடு போன்ற பல தரவுகளை இந்த நூல் உள்ளடக்கியுள்ளது. முன்னுரையில் தொல்லியலாளர் நா. மார்க்சிய காந்தி குறிப்பிட்டது போல தொல்லியல் ஆர்வத்தை தூண்டுகிறது மேலும் தொல்லியல் சார்ந்து நம்மை நகர்த்துகிறது. விடைகளற்ற வினாக்கள் எங்குமில்லை. இந்த நூலின் மூலம் எழுந்த பல  வினாக்களுக்கான விடைகளைத் தேடிச் செல்வோம். வாருங்கள் கொஞ்சம்  காலத்தைக் கடந்து பயணிப்போம்!
புத்தகத்தின் பெயர் –  ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை 
எழுத்தாளர் – நிவேதிதா லூயிஸ் 
பதிப்பகம் – கிழக்குப் பதிப்பகம் 
முதல் பதிப்பு – டிசம்பர், 2019
விலை – 225 -/
ப.க. புகழ்ச்செல்வி.  
இந்திய மாணவர் சங்கம் 

Leave a Response

Top Reviews

Video Widget

gallery