Article

கட்டுரை: நெஞ்சு பொறுக்குதில்லையே..! – கிருத்திகா பிரபா

Spread the loveசாம்தீஷ் பாட்டியா, இந்திய சமூகத்தின் அனைத்து வாய்ப்புகளும் வசதிகளும் கிடைக்கப்பெற்ற ஒரு இளைஞன். ScoopWhoop unscripted  என்ற YouTube channel-லில் தனது பதிவுகளை வெளியிட்டு வருபவர். அதில் ஒரு பதிவில் அவர், மும்பை நகரின் பாதாள சாக்கடைகளிலும், கழிவுநீர் கால்வாய்களிலும் இறங்கி சுத்தப்படுத்தும் துப்புரவு தொழிலாளர்களின் பணியின் தன்மையை, அதன் அபாயகர சூழலை, காட்சிப்படுத்தியுள்ளார்.

பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் போது விஷவாயுவால் மரணித்தவர்களைப் பற்றி பலமுறை செய்தித்தாள்களில் வாசித்திருப்பினும், அதனை கடந்தும், எளிதாக மறந்தும் போய்விடுகிறோம். அரசும் அப்போதைக்கு நிவாரணம் என சிறு தொகையை அக்குடும்பத்திற்கு அளித்து அதனை கடந்துவிடுகிறது. அப்படி கடக்க முடியாமல் தவிக்க வைக்கின்றன இந்த வலையொளிப் பதிவின் காட்சிகள். சாம்தீஷ் காட்சிப் படுத்தியதுடன் நின்றுவிடவில்லை, அவர்களை பேட்டியெடுத்தவாறே, அவரும் அவர்களுடன் கழிவுநீர் கால்வாயில் இறங்கி, சுத்தப்படுத்தும் வேலையை செய்கிறார்.

உச்ச நீதிமன்றம் 2013-ல் manual scavenging-க்கு தடை விதித்து தீர்ப்பு வழங்கிய பிறகும் பல மாநிலங்களில் இந்த கொடுமை இன்றும் தொடர்கிறது என்பதையும், அவ்வாறு பணிகளில் ஈடுபடுபவர்கள் அனைவருக்கும் தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் அரசால் வழங்கப்படாமல் உள்ள அவலத்தையும், இது பற்றி பேசுவதை கூட தட்டிக்கழிக்கும் அரசு இயந்திரத்தை குறித்தும், வலையொளிப்பதிவு பேசுகிறது.

Manual Scavenging in India: Issues and way forward

ரோட்டில் நாம் செல்லும் போது, டிராபிக் காரணமாக சில சமயங்களில் ஏதேனும் ஒரு குப்பை லாரியின் பின்னாலேயே சிறிது நேரம் செல்ல வேண்டி வருகையில், அந்த மாசு காற்றை சுவாசிக்க முடியாமல் திணறி, அந்த வண்டியை எப்படியாவது தாண்டி சென்று, அந்த மூச்சு முட்டும் நிலையிலிருந்து விடுதலை பெற்ற அனுபவம் அனேகமாக எல்லோருக்கும்  இருக்கும்! அந்த ஓரிரெண்டு நிமிடங்கள் கூட அந்த மாசு காற்றை நம்மால் சகித்துக் கொள்ள முடிவதில்லை! ஆனால், நகரின் அத்தனை கழிவுகளும், பிளாஸ்டிக்குப்பைகளும், மருத்துவக் கழிவுகளும் சங்கமிக்கும் கால்வாயில், கையுறைகளோ, காலுறைகளோ, முக கவசமோ ஏதுமின்றி இறங்கி, அந்த நாற்றமெடுக்கும், அருவெருப்பூட்டும் நச்சு சூழலில் பணியாற்றும் மனிதர்களைப் பற்றி நாம் என்றாவது நினைத்து பார்த்தது உண்டா? அந்தப் பணி செய்பவர்கள் அனைவரும் தலித் மக்கள்! அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள் என்பதை மறந்து, அதனை சுத்தம் செய்யும் வேலையை அவர்கள் தான் செய்ய வேண்டும் என விதித்தது யார்? இந்த கேள்விக்கான விடையின் தேடல் முடிவடையும் இடமாக இருப்பது, சாதிய படிநிலை!

வேலையின் அடிப்படையில் இருந்த வர்ண பிரிவுகளை, பிறப்பின் அடிப்படையில், சாதிய படிநிலையாக மாற்றியது மனுதர்மம்! ஒரு சாதியில் பிறந்துவிட்டதனாலேயே, அந்த சாதிக்கென ஒதுக்கப்பட்ட தொழிலைதான் ஒருவர் செய்யவேண்டும் என்பது எத்துனை பாரபட்சமான அணுகுமுறை! அநியாயமான இந்த சாதி பிரிவினையை உயர்த்தி பிடிப்பது எப்படி தர்மமாக இருக்க முடியும்?  இந்த அதர்மத்தை செயல்படுத்தும் கருவிகளில் ஒன்றாக அரசு இயந்திரமே இருப்பது அதனினும் கொடுமை! இனம், மதம், சாதி, பாலினம், பிறப்பு என எதன் அடிப்படையிலும், அரசு யாரிடத்தும் பாரபட்சம் பார்க்காது என்கிற அரசியலமைப்பின் வாக்குறுதியை மீறி, அரசே வர்ணாசிரம கோட்பாட்டை நிலைப்படுத்தும் செயல் இல்லையா இது?

அரசமைப்பு சட்டத்தையும், உச்சநீதி மன்ற உத்தரவையும் மீறி, 2013 முதல் ஜனவரி,2020 வரையிலான 7 ஆண்டுகளில், 62,904 பேர் மாநில அரசுகளால் இந்த பணியில் ஈடுபடுத்தப் பட்டிருப்பதாக, 18 மாநிலங்களில் எடுக்கப்பட்ட தேசிய கணக்கெடுப்பு அறிக்கை தெரிவிக்கிறது. பாதாள சாக்கடையில் இறங்கி, விஷவாயு தாக்கி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை, 2015ல் 57, 2016ல் 48, 2017ல் 93, 2018ல் 68, 2019ல் 110 என அதிகரித்துக் கொண்டே வருகிறது. அவ்வாறு இறந்தவர்களின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக  ரூ.10 லட்சம் வழங்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் வழிகாட்டியுள்ள போதும், பல சமயங்களில் அது முழுமையாக வழங்கப்படுவதில்லை என்பதே களம் சொல்லுகின்ற உண்மை நிலை!

53,000 manual scavengers in 12 states, four-fold rise from last official count | India News,The Indian Express

இந்த பணியில் உள்ளவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் உடல்ரீதியானவை மட்டுமல்ல, சமூகரீதியானவை கூட!  கழிவுநீர் கால்வாயில் இறங்கியும், மூழ்கியும் சுத்தம் செய்வதால், தோல் நோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு ஆளாவதோடு, அந்த அருவெருக்கத்தக்க சூழலை மறக்க குடிபோதையை நாடுவதால், அது தொடர்பான உடல் உபாதைகளும் வந்து சேர்கின்றன. மேலும் கிடைத்த கூலியில் பெரும் பகுதி குடிப்பதற்கு போன பிறகு, எஞ்சியதே குடும்பத்திற்கு வருகிறது. வாழ்வை நடத்திட இந்த தொகை  போதாததால்,  பிள்ளையையும் வேலைக்கு அனுப்பி, குடும்ப வருமானத்தை உயர்த்த முனைகையில், பிள்ளைகளின் கல்வி வாய்ப்பு குறைவதோடு, அவர்களும் அதே வேலைக்கு செல்லும் கொடுமையும் நேர்கிறது. இந்த நச்சு சுழலில் பல ஆண்டுகளாக உழன்று கொண்டு இருப்பவர்களை கரையேற்ற வேண்டிய மாநில அரசுகளே இந்தப் பணிகளில் அவர்களை தொடர்ந்து ஈடுபடுத்தி வருகின்றன என்பது தான் வெட்ககேடு!

Manual scavenging-க்கு தடை விதித்த போதே, அந்த தொழிலாளர்களுக்கு ஒருமுறை நிவாரண தொகையாக ரூ.40,000-மும், மாற்று வேலைக்கான உதவியும், அவர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையும் அந்தந்த மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்பதையும், உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது. ஆனால், இவ்வுதவிகளை பெறுவதற்கு, அந்த பணியிலிருந்து தன்னை விடுவிக்குமாறு அத்தொழிலாளர்கள் மாநில அரசிடம் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கப்படும் கோரிக்கைகளை அரசு அதிகாரிகள் ஏற்காமல் நிராகரித்து விடுவதே இந்த அவல நிலை நீடிப்பதற்கும், விஷவாயு மரணங்கள் தொடர்வதற்கும் முக்கிய காரணியாக உள்ளது.

தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட இன்றைய சூழலிலும், இந்த பணிகளை செய்ய இயந்திரங்களை உருவாக்கவும், பயன்படுத்தவும் அரசுகள் முனைப்பு காட்டாமல் இருப்பது,  அவற்றின் அக்கறை இன்மையையும், மெத்தனத்தையுமே பிரதிபலிக்கிறது.

இந்த கொரோனா காலத்தில் சோப் போட்டு கைகளை சுத்தமாக கழுவுங்கள் என அரசு சொல்லிக் கொண்டே இருக்கிறது; ஆனால், எத்தனை சோப் போட்டு கழுவினாலும், அந்த கழிவுகளின் நாற்றத்தையும், அசூயையும் அந்த வேலையை செய்பவர்களின் மனதிலிருந்தும், வாழ்விலிருந்தும் போக்கிவிட முடியுமா என்பதுதான் அரசிடம் நாம் கேட்க விரும்பும் கேள்வி!

நன்றி

கிருத்திகா பிரபா, சேலம்.4 Comments

 1. அள்ளுவதும் அதே கை தின்னுவதும் அதே கை. உலகிலேயே அதிக சம்பளம் வாங்குறவன் செய்ற வேலை கூட இவ்வளவு கடினம் இல்லை. இதில் அவ்வப்போது விஷ வாயு தாக்கி பலி வேற.. சாதிய ரீதியான இந்த தொழிலுக்கு மட்டும் தான் நாட்டுல போட்டி இல்லை.

  கட்டுரையாளர் ஆழ்ந்து சிந்தித்து தகவல்களை திரட்டி எழுதியுள்ளார். வாழ்த்துகள்

 2. மு.பரமதயாளன்,
  பாண்டிச்சேரி.
  9944176293

  சிறப்பான பதிவு, எதார்த்தமான உண்மைகளை எத்தனை முறை
  காட்சிபடுத்தினாலும், படித்தாலும்,சொன்னாலும் அவர்களின் நிலை என்னவோ அப்படியே தான் உள்ளது.
  உடலாலும் மனதாலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பது அவர்கள் மட்டுமே. பதிவை படித்து விட்டு பரிதாபத்துடன் கடந்து செல்பவர்கள் தான் அதிகம்.
  நம் அனைவரிடமும் மாற்றம் வேண்டும். மாற்றம் மட்டுமே ஒரே தீர்வு.

 3. அருமையான கட்டுரை பதிவு
  பட்ட காலிலேயே படும் கெட்ட குடியே கெடும் என்ற சொல்லுக்கு ஏற்ப இந்த சமூகத்தின் சட்ட அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Response