Article

மீண்டுமொரு நோபல் சர்ச்சை – எழுத்தாளர். அண்டனூர் சுரா

 

1937 ஆம் ஆண்டு முதல் 1948 ஆம் ஆண்டு வரை, அமைதிக்கான நோபல் பரிசுக்கு மகாத்மா காந்தியின் பெயர் ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்டது. 1943 க்கும் பிந்தைய ஆண்டுகளில், அவரது பெயரை நோபல் கமிட்டியின் பெரும்பான்மையோர் முன்மொழியவும், வழிமொழியவும் செய்தார்கள். ஆனால், 1942 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 9 ஆம் நாள், வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது, அவர் கையாண்ட ஒரு வாசகம், அறவழிப்போராட்ட வீரராகப் பார்க்கப்பட்டுவந்த காந்திஜியை நேர் முரணாக நிறுத்தியது. அவ்வாசகம், ‘ செய் அல்லது செத்துமடி’. பெருந்திரள் மக்களை வழிநடத்தும் எந்தவொரு தலைவருக்கும், வார்த்தைப் பிரயோகம் எந்தளவுக்கு முக்கியம், என்பதற்கு ஓர் உதாரணம், காந்திஜியின் அந்த வாசகம்.

Why Bapu did not receive Nobel Prize | India News - Times of India

2020 ஆண்டு தொடக்கம் முதலே, கொரோனா உலக நாடுகளின் நுரையீரலில் தாண்டவமாடி வருகிறது. அந்நோயின் தோன்றுவாய் சீனா என்றாலும், அந்நோய் உச்சம் தொட்டது அமெரிக்காவில்தான். அமெரிக்காவின் அதிபர் என்பவர், உலகின் அதிகாரமிக்கவர், என்பதாகவே பார்க்கப்பட்டு வருகிறது. அதாவது ‘பெரிய அண்ணன்’. அத்தகையவரின் வார்த்தைப் பிரயோகம், எத்தகையதாக இருந்திருக்க வேண்டும்? கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்க முதல் இடத்தை நோக்கி முன்னேறுகையில், அதிபர் டொனால்ட் ட்ரெம்ப், இந்தியாவிடம் குளோரோகுயின் மாத்திரைகள் கேட்டார். இந்தியக் காப்புரிமை அடிப்படையில், அம்மாத்திரையை அனுப்பிவைக்க, இந்தியா சுணக்கம் காட்டியது. ட்ரெம்ப், இந்தியாவிற்கு எதிராக மிகக் கடுமையான சொல்லாடலைப் பயன்படுத்தினார். ‘அம்மாத்திரையை அனுப்பிவைக்க மறுத்தால், இந்தியா மிகக் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’. மனிதாபிமானம் அடிப்படையில், இந்தியா அம்மாத்திரையை அனுப்பி வைத்தது.

ஒரு நட்பு நாட்டின் மீது அறவழி வார்த்தைகளைப் பயன்படுத்தத் தெரியாத ஒருவர், எப்படி உலக அமைதி விரும்பியாக இருக்க முடியும்? ‘ அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரெம்ப், 2021 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பெறக்கூடிய நபராக இருப்பார்’ என நார்வே நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டியன் டைபிரிங்க் கிஜேடி, தெரிவித்துள்ள கருத்தால், நோபல் கமிட்டி மீண்டுமொரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. ‘ ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இஸ்ரேல் இவ்விரு நாடுகளுக்கிடையே அமைதி ஒப்பந்தத்தின் மூலம், மத்திய கிழக்கு ஆசியாவில் அமைதியை ஏற்படுத்தியமைக்காக, இவ்விருது ட்ரெம்ப்க்கு வழங்கப்பட வாய்ப்பு உண்டு’ என்பது அவரது அனுமானம் அல்லது விருப்பம்.

அமைதிக்கான நோபல் பரிசுக்குரிய நபரைத் தேர்வு செய்வது, நார்வே நாடாளுமன்றம். 2020 ஆம் ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசு வரும் அக்டோபர் மாதம் அறிவிக்கப்படவிருக்கிறது. இப்பரிசுக்கு, சர்வதேச ஓர் அமைப்பு அல்லது நார்வே நாடாளுமன்ற உறுப்பினரில் யாரேனும் ஒருவர், ஓர் அமைப்பின் பெயரையோ அல்லது ஒரு தனி நபரின் பெயரையோ முன்மொழியலாம், என்பது நோபல் கமிட்டியின் விதி. அப்படியாக முன்மொழியக் கடைசி தேதி பிப்ரவரி 1, 2021. அதற்கான கால அவகாசம் இன்னும் நான்கு மாதங்களுக்குமேலிருக்கையில், அடுத்த ஆண்டுக்கான பட்டியலில் இடம்பெறப் போகும் ஒருவரின் பெயரை முன்கூட்டியே பொதுவெளிக்குத் தெரிவித்திருப்பது, ஐம்பது ஆண்டுக்கால வரலாற்றில் இதுவே முதல் முறை. இதன்மூலம், நோபல் கமிட்டி தன் நெறிமுறைக் கற்பை இழந்ததுடன், தன் மீதான உலக நம்பிக்கையையும் குலைத்துக்கொண்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு, மீ டூ சமூக வலைத்தளத்தில் பெரிய அளவில் பேசுபொருளாக இருக்கையில், அதன் நீட்சி இலக்கியத் துறைக்கான நோபல் கமிட்டியை விட்டுவைப்பதாக இல்லை. ஒரு பெண் எழுத்தாளர் எழுப்பியிருந்த பாலியல் குற்றச்சாட்டின் பேரில், அவ்வாண்டு, இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவில்லை. மறுவருடம், 2019 ஆம் ஆண்டுக்குரிய பரிசுடன் சேர்த்து, முந்தைய ஆண்டுக்குரிய பரிசு அறிவிக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டுக்குரிய பரிசைப் பெற்றவர், போலந்து நாட்டைச் சேர்ந்த, ஒல்கா டோகார்ஸக் என்ற பெண் எழுத்தாளர்.

இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் விருதுகளுக்குரிய பெயர்களை ஸ்வீடன் அகாடமி தேர்வு செய்கிறது. ஆனால், அமைதிக்கான நோபல் பரிசைக்குரிய பெயர்களைத் தேர்வு செய்வது, நார்வே நாடாளுமன்றம். இவ்விருது, மற்ற விருதுகளைக் காட்டிலும் பெரும் கவனிப்புக்கும், அவ்வப்போது சர்ச்சைக்கும் உள்ளாவது உண்டு. வளரும் மற்றும் ஏழை நாடுகளின் மத்தியில், அமெரிக்காவின் விருப்பு வெறுப்பிற்கேற்ப இவ்விருது வழங்கப்படுகிறது, என்கிற குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருந்து வருகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்கா அதிருப்திக் காட்டும் எந்தவொரு நாட்டுக்கும், நபருக்கும் அவ்விருது வழங்கப்பட்டிருக்கவில்லை. அதேநேரம், அமெரிக்க அதிபர் ஒருவருக்கு அமைதிக்கான விருதை வழங்க, நோபல் கமிட்டி தயக்கம் காட்டியதில்லை.

Donald Trump says HE would have a Nobel Peace Prize 'if they gave it out fairly' | Daily Mail Online

2009 ஆம் ஆண்டு, அன்றைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர் அதிபராகப் பதவி ஏற்றது ஜனவரி 20, 2009. அதே வருடம் டிசம்பரில் அவருக்கு அவ்விருது அறிவிக்கப்பட்டது. அவர் பதவியேற்ற ஒரு வருடக் காலத்திற்குள்ளாக அறிவிக்கப்பட்ட அந்த விருது சர்ச்சைக்கு உள்ளானது. ‘ அணு ஆயுதமற்ற, உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு உத்திரவாதமளிக்கும் நபர் ’ என்பதாக நோபல் கமிட்டி, விருதுக்கான காரணத்தைச் சொன்னது. உண்மையில், அவ்விருது, ஒபாமாவிற்கு அறிவிக்கையில் அவர் ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக் போன்ற வளைகுடா மற்றும் அரபு நாடுகளில் நிறுத்தியிருந்த இராணுவத் துருப்புகளை அவர்  முழுமையாகத் திரும்பப் பெற்றிருக்கவில்லை. அதேநேரம், அவ்விருதை அவர் பெற்றுக்கொண்டதன் பிறகு, அமெரிக்காவின் பெயரால் அணு ஆயுதப் போர்களோ, ரசாயனப் போர்களோ உலகின் எந்த மூலையிலும் நடைபெற்றுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். மேலும், அதற்கு முந்தைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தொடங்கி வைத்த இஸ்லாமிய மதத்திற்கு எதிரான, வளைகுடா போரை, ஒபாமா அதன் தொடர்ச்சியாக முடுக்கவில்லை. இந்த நோபல் விருது, முந்தைய தேர்தலில் அவருக்கு இருந்த ஆதரவை விடவும், கூடுதல் வாக்குகளால் இரண்டாம் முறை அமெரிக்க அதிபராக வழிவகுத்தது.

2020, அமெரிக்க வல்லரசுக்கான தேர்தல் ஆண்டு. கொரோனாவிலிருந்து மக்களைக் காப்பாற்றத் தவறிய ட்ரம்ப் மீதான அமெரிக்க மக்களின் கோபம் அதிகரித்துள்ளது. மனிதக் குல மேம்பாட்டால் முன்னேறிய நாடு, எனத் தனக்குத்தானே பறைசாற்றிக்கொள்ளும் அமெரிக்காவில் இனவாதமும், கறுப்பின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையும் இதற்கு முன்பு இருந்ததைவிடவும் பெரிய அளவில் தலையெடுத்துள்ளது. அமெரிக்க மின்னெசொடா மாகாணத்தில், மின்னியபொலிஸ் நகரில், ஜார்ஜ் ஃபிளாய்ட் என்கிற கருப்பின வாலிபரின் கழுத்தை, ஒரு போலீஸ்காரர் தன் முட்டியால் அழுத்திக்கொன்றதற்கு எதிரான கண்டனக் குரல் அவரிடமிருந்து பெரிய அளவில் எழவில்லை.

Junior Vikatan - 23 August 2020 - கமலா தேவி ஹாரிஸ் - இன்ஃபோகிராபிக்ஸ் | Kamala Devi Harris - info-graphics

நடக்கவிருக்கின்ற அமெரிக்கத் துணை அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும், இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸை, இனவாதம் ரீதியில் மிகக் கடுமையாகச் சாடிவரும் அவர், ஒரு பெண்ணை அமெரிக்க அதிபராகப் பார்ப்பதற்கு நான் ஆதரவு அளிக்கிறேன். அதற்கான தகுதியான நபர் கமலா ஹாரிஸ் அல்ல. என் மகள் இவான்கா என்றார். அமெரிக்காவின் முதல் பெண் அதிபர், ஒரு கறுப்பினப் பெண்ணுக்கு மாறாக, வெள்ளையின பெண்ணாக இருக்க வேண்டும், என்பது அவரது தேர்தல்கால  அறைகூவல்.

நார்வே நாடாளுமன்ற உறுப்பினரின் ‘ அடுத்த ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசுக்குரிய நபராக ட்ரெம்ப் இருப்பார்’ என்கிற அறிவிப்பு, அவரது தேர்தல் பிரச்சாரத்திற்கும், தேர்தலில் வெற்றியைப் பெறுவதற்கான உத்தியாக இருக்கலாம், என சந்தேகப்பட இடமிருக்கிறது. இதற்கு முன்பு 2018 ஆம் ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் பெயரை முன்மொழிந்தவர் இவர்தான். அக்காலகட்டத்தில், வட மற்றும் தென்கொரியா இரு நாடுகளுக்கு இடையேயான நீண்டகால போர்ப்பதற்றத்தைத் தணித்து, அமைதியை ஏற்படுத்தியமைக்காக, அவரது பெயர் முன்மொழியப்பட்டது. இவ்விரு நாடுகளின் பதற்றத்தைத் தணித்துக்கொண்டமைக்காக, அமைதிக்கான விருது கொடுக்கப்பட வேண்டியது, அவ்விரு நாடுகளின் அதிபர்களுக்குத்தானே தவிர, அமெரிக்க அதிபருக்கு அல்ல.

வட மற்றும் தென்கொரியா நாடுகளுக்கு இடையேயான பதற்றத்திற்கு நிகரானது, இஸ்ரேல் பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையேயான பதற்றம். இவ்விரு நாடுகளின் நீண்டகால பதற்றத்தைத் தணிக்க, 1994 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் தலையீட்டின் கீழ், ஓஸ்லா உடன்படிக்கை கையெழுத்தானது. வாசிங்டனில் கையெழுத்தான இந்த உடன்படிக்கை, இஸ்ரேல் அரசு மற்றும் பாலஸ்தீன விடுதலை இயக்கம் இரண்டையும் அமெரிக்கா அங்கீகரிக்கச் செய்தது. ‘மத்திய கிழக்கில் அமைதியை உருவாக்குவதற்கான முயற்சி’ என அழைக்கப்பட்ட இந்த உடன்படிக்கையில் பாலஸ்தீனம் அதிபர் முகமது அப்பாஸ் இஸ்ரேல் பிரதமர் இட்சாப் ரபீன் இருவரும் கையெழுத்திட்டார்கள். இந்த அமைதி உடன்படிக்கைக்குக் காரணமான பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத், இஸ்ரேல் பிரதமர் இட்சாப் ரபீன், இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷீமன் பெரிஸ் மூவருக்கும் 1994 ஆம் ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த அமைதி ஒப்பந்தத்திற்குக் காரணமாக இருந்தவர் அமெரிக்க அதிபர், என்ற போதிலும் அமைதிக்கான நோபல் பரிசு இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இவ்விரு நாடுகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

ட்ரம்ப், முன்னெடுத்த முயற்சியின் பேரில், இஸ்ரேல் – ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இவ்விரு நாடுகளுக்கு இடையேயான அமைதி ஒப்பந்தமும், அதன் வழியே இரு நாடுகளுக்கிடையே தொடங்கிய விமானச் சேவையும்,  அடுத்தடுத்து தொடங்கவிருக்கின்ற நீர் மேலாண்மை, நிதி மற்றும் வங்கி சேவை,..இன்னும் பிற பரிமாற்றத்தால் மத்திய கிழக்கு நாடுகளில் பூரண அமைதி நிலவ வாய்ப்புண்டு. அதேநேரம், இவ்விரு நாடுகளுக்கிடையில் பகைமுரண் என்பது கிடையாது. பாலஸ்தீனம் நாட்டிற்கு அமீரகம் அளித்துவந்த ஆதரவு பேரிலேயே இவ்விரு நாடுகளுக்கிடையில், ராஜரீதியான உறவு இல்லாது இருந்தது.

நார்வே நாடாளுமன்ற உறுப்பினர் டைபிரிங்க் கிஜேடி, ‘ நியாயமாகக் கொடுத்திருந்தால், கடந்த வருடம் ட்ரெம்ப்க்கு நோபல் பரிசு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் 2021 ஆம் ஆண்டு அந்த விருதை ட்ரம்ப் பெற வாய்ப்பிருக்கிறது’ என அவர் தேர்தல் காலத்தையொட்டி சொல்லியிருப்பதன் மூலம், 2020 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் ட்ரம்ப் பெயர் இல்லை என உறுதியாகிறது. இந்தக் கருத்து, நடப்புத் தேர்தலில் ட்ரெம்ப்க்கு ஆதரவைப் பெருக்கித்தரும் என்பதற்கு மாறாக, சரியவும் வாய்ப்புண்டு.

பத்து வருடங்களுக்கு முன்பு, பிரபல இந்திய அரசியல்வாதி ஒருவரிடம், பத்திரிகையாளர் கேட்ட ஒரு கேள்வி நினைவுக்கு வருகிறது. ‘ உங்களிடம் இவ்வளவு அதிகாரம், பணபலமிருந்தும் உயரிய விருதை உங்களால் வாங்கமுடியவில்லையே ஏன் ?’. அதே கேள்வியை டொனால்டு ட்ரெம்பிடமும் கேட்கலாம்!

அண்டனூர் சுரா 

(எழுத்தாளர் )

மகாத்மா நகர் 

கந்தர்வகோட்டை

புதுக்கோட்டை மாவட்டம்  

613301

தொடர்புக்கு – 9585657108

rajamanickam29583@gmail.com

Leave a Response