Book Review

நூல் அறிமுகம்: ஆனி ஃபிராங்க் (ஓர் இளம்பெண்ணின் டைரிக் குறிப்புகள்) – ச.ரதிகா

 

உலகை உலுக்கிய இனப் படுகொலைகளில் ஒன்றான யூதர்கள் குறித்து நிறைய ஆவணங்கள் இருந்தாலும் அதில் முக்கியமானதாக கருதப்படுவது ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்.13 வயதான யூதச் சிறுமி எழுதிய இந்த நாட்குறிப்புகள் வரலாற்றின் முக்கிய ஆவணங்களில் ஒன்றாகும். 1942 ஜூன் 12 அன்று ஆனின் 13 வது பிறந்தநாளில் கிடைத்த பரிசுகளில் ஒன்று ஆட்டோகிராஃப் ஏடு.அதற்கு கிட்டி என்று பெயர் சூட்டி தனது நாட்குறிப்பாகப் பயன்படுத்தத் தொடங்கினாள்.முதல் 22 நாட்கள் அவர்களின் இயல்பு வாழ்க்கையை கூறும் ஆன் அதன்பிறகு 1944 ஆகஸ்ட் ஒன்று வரையிலான அவர்களின் தலைமறைவு காலத்தை பதிவு செய்துள்ளாள்.
ஹிட்லர் ஆட்சியின் போது யூதர்கள் எப்போதும் மஞ்சள் நட்சத்திர சின்னத்தை அணிந்து கொண்டிருக்க வேண்டும். மாலை 3 மணியிலிருந்து 5 மணிக்குள் மட்டுமே தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க வேண்டும்.அதுவும் யூதர்களுக்குரிய கடை என்ற பெயருள்ள கடைகளில் மட்டுமே. இரவு 8 மணிக்கு மேல் வெளியே வரக்கூடாது. சொந்த வீட்டின் முற்றத்தில் அமரக் கூடாது.நாடகம் சினிமா பார்ப்பது கண்டிக்கத் தக்கது. நீச்சல்,விளையாட்டு போட்டிகள் எதிலும் பங்கேற்கக் கூடாது. சைக்கிளைத் தள்ளிக் கொண்டு தான் செல்ல வேண்டும்.வாகனங்களை ஓட்டக்கூடாது. யூதன் கிறிஸ்தவனை சந்திப்பதற்கும் தடை. மாணவர்கள் அவர்களுக்கு உரிய தனிப்பட்ட பள்ளிகளில் மட்டுமே பயில வேண்டும் என்ற ஏராளமான கடுமையான சட்டங்கள் இருந்தன.

மறுபக்கம் இனத்தூய்மை செய்வதாக யூதர்களை மொத்தமாக முகாம்களில் அடைத்து விஷவாயு செலுத்தி கொன்று குவித்தது நாஜி இராணுவம். குழந்தைகளைக் கூட தலையை மொட்டை அடித்து நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்தது ஹிட்லரின் இராணுவம். இது போன்ற கொடுமையான சித்ரவதை முகாமில் மாட்டிக் கொள்ளாமல் தப்பிப்பதற்காக யூதக் குடும்பங்கள் ரகசிய இடங்களில் ஒளிந்து வாழ்ந்தார்கள்.ஆனி ஃபிராங்கின் குடும்பமும் இதற்கு விதிவிலக்கல்ல. ரகசியமாக ஒருவருக்கும் தெரியாமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்வது அவ்வளவு எளிதான ஒன்றல்ல என்பதையும் உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் அவர்கள் சந்தித்த அனைத்து இன்னல்களையும் மிகத்துல்லியமாக ஆனி பதிவு செய்துள்ளார். பல இடங்களில் ஒரு 13 வயது சிறுமிக்கு இத்தனை முதிர்ச்சியா என்று நம்மை வியக்க வைக்கிறார். காகிதத்திற்கு நிச்சயமாக மனிதனைவிட பொறுமை இருக்கிறது. அந்த பொறுமையை நான் பயன்படுத்தியாக வேண்டும் என்று கூறும் ஆனி மிகச்சரியாக அதை பயன்படுத்தி உள்ளார். தங்கள் தலைமறைவு வாழ்க்கையை இதுவரை என்னவெல்லாம் நிகழ்ந்திருக்கின்றன என்பதையும் இனிமேல் என்னவெல்லாம் நிகழக் கூடும் என்பதையும் சுயமாகக் கண்டடையும் ஒரு சந்தர்ப்பமாக குறிப்பிடுகிறார். ஒருபோதும் வெளியே செல்ல முடியாத அந்த வாழ்க்கை எவ்வளவு கொடூரமானது என்பதையும் எந்த நிமிடமும் தாங்கள் கண்டுபிடிக்கப் பட்டு கொல்லப்படுவோம் என்பதையும் வதை முகாம்களுக்கு இழுத்துச் செல்லப்படுவோம் என்ற நினைவும் சிறு சத்ததிற்கும் பயந்து தூங்காமல் பல இரவுகளை கழித்த ஆனின் நிலை மிகப் பரிதாபம்.

மனம் திறந்து சிரிக்க முடிந்தால் அது எவ்வளவு பயனுடையதாக இருக்கும். ஆனால் நாங்கள் அனைவரும் சிரிப்பதை மறந்து விட்டோம், அனைத்திலிருந்தும் இந்த உலகத்திலிருந்தே நான் தப்பிச் செல்ல விரும்புகிறேன் என்று ஆனி குறிப்பிடும் இடங்கள் துயரத்தின் சாயல்கள். இந்தப் போரால் என்ன பயன் ?ஏன் மக்கள் அமைதியாக வாழவில்லை? எதற்காக இழப்புகளையும், அழிவுகளையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள்? இந்த கேள்விகள் நியாயமானதாக இருப்பினும் இதுவரை சரியான பதிலை யாரும் சொல்லவில்லை.எதற்காக அவர்கள் பிரம்மாண்டமான விமானங்களையும் கனமான குண்டுகளையும் அதேபொழுது நொறுங்கி அழிந்த நகரங்களில் மறுவாழ்வுக்கான குடியிருப்புகளையும் உருவாக்குகின்றனர் ?ஒவ்வொரு நாளும் போருக்காக பல கோடி ரூபாய்களைச் செலவழிக்கும் இவர்கள் ஏன் மருந்துகளுக்கும் உணவுப் பொருட்களுக்கும் பணத்தை செலவழிக்காமல் இருக்கிறார்கள்? ஏன் ஏராளமான ஆட்கள் மிதமிஞ்சிய உணவுப் பொருட்களை பாழடிக்கும்போது எவ்வளவோ மக்கள் பட்டினி கிடக்கிறார்கள் ? ஏன் மக்கள் இவ்வளவு விசித்திர குணம் படைத்தவர்களாக இருக்கிறார்கள்? அரசியல்வாதிகளும் தலைவர்களும் ஏகபோக முதலாளிகளும் மட்டும்தான் போருக்கு பொறுப்பாளிகள் என்று நான் கருதவில்லை. சாமானிய மக்களுக்கும் இதில் பங்கிருக்கிறது. இல்லாவிட்டால் அவர்கள் போருக்கு எதிராக புரட்சி செய்திருப்பார்களல்லவா? அழித்தொழிப்பதற்கும் சாகடிப்பதற்கும் மனிதனுக்குள் ஒரு கொடிய மனோபாவம் இருந்து கொண்டிருக்கிறது. மனிதகுலம் முழுக்க இந்த கொடிய மனப்பான்மையில் இருந்து விடுதலையாகும் வரை நிர்மாணிக்கப் பட்டவை அனைத்தையும் அழிப்பதற்கும், அழகானவை அனைத்தையும் விகாரப் படுத்துவதற்கான இந்த மூர்க்கத்தனம் தொடர்ந்து கொண்டுதானிருக்கும். மனித குலம் மீண்டும் ஆரம்பத்திலிருந்தே தொடங்க வேண்டியிருக்கும் என்ற ஆனியின் குரல் போரினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குரலாகும்.இத்தகைய கடின சூழ்நிலையை கையாள ஆனி தேர்ந்தெடுத்த ஒரே வழிமுறை புத்தக வாசிப்பு மட்டுமே.

எல்லாவற்றையும் மறந்துவிடு. எல்லோரையும் பார்த்து சிரி” - ஆன் ஃப்ரன்க் டைரி  குறிப்புகள்! #InternationalHolocaustRemembranceDay #VikatanPhotoStory |  Anne Frank quotes from Diary of a ...

தலைமறைவு வாழ்வில் அவளை உயிர்ப்போடும் வலிமையாகவும் வைத்துக் கொள்ள புத்தகங்களே துணைபுரிகின்றன. ஒரு சாதாரண சிறுமி அசாதாரணமான சூழ்நிலையை கையாளும் விதமும் தன்னுடைய மன பயத்தை தனக்குத்தானே போக்கி தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளும் விதமும் சோர்ந்து போகும் நேரங்களில் தன்னை தானே தேற்றிக் கொள்ளும் இடங்களும் தானே சுய அலசலில் ஈடுபடுவதும் தன்னுடைய குறைகளை விவாதிப்பது என ஏராளமான வாழ்க்கைப் பாடங்களை நமக்கு கற்றுக் கொடுக்கிறாள். 👉மிக அதிகமாக என்னை விமர்சிப்பதும் வசை பாடுவதும் நானேதான்.

👉என்னையும் என்னுடைய நடவடிக்கைகளையும் இன்னொருவர் செய்வதைப்போல எட்டி நின்று பார்வையிட என்னால் இயலும்.

👉ஒவ்வொரு நாள் மேற்கொள்ளும் பணியையும் எந்தவிதமான முன் முடிவுகளையும் நடுநிலையாக பார்க்கவும் எனக்குள் இருக்கும் நல்லதையும் கெட்டதையும் நகைச்சுவையுடன் அணுகவும் என்னால் இயலும்.

👉இந்த ஆத்ம உணர்வு அல்லது தன்னை பற்றிய புரிதல் விட்டுப் பிரியாத குணமாக என்னுடனே இருக்கிறது.

👉எனக்கென்று சொந்தக் கருத்துக்களும் கோட்பாடுகளும் உண்டு.

👉நான் ஒரு சுதந்திர நபர் என்பது என்னுடைய நம்பிக்கை.

👉இயற்கை நம்முடைய அனைத்து வகை துயரங்களுக்கும் தீர்வளிக்கும் என்பதை நான் திடமாக நம்புகிறேன்.

👉உறுதியான நம்பிக்கையும் நிலைகுலையாத துணிச்சலும் உடையவர்கள் ஒரு போதும் அழிய மாட்டார்கள்.

👉எந்த காரியத்தையும் ரகசியமாக செய்வதில் உண்மையில் எனக்கு உடன்பாடில்லை. ஏனென்றால் அதனால் என்னுடைய வாய்மை பாதிக்கிறது என்ற ஆனியின் ஒவ்வொரு பதிவும் நம்மை வியப்பின் உச்சத்திற்கே அழைத்துச் செல்கிறது. ஆனின் நாட்குறிப்புகள் மூலம் நிறைய புத்தகங்கள்,குடும்ப நெருக்கடிகள், தாய் மகளுக்கான பிணக்கு, தந்தையுடனான பாசம், தமக்கை உடனான நட்புறவு,பதின் வயதிற்கே உரிய காதல் உணர்ச்சிகள், அரசியல் சூழ்நிலைகள், உணவுத்தட்டுப்பாடு , அதிகார நெருக்கடி என பலவற்றை அறிந்து கொள்ள முடிகிறது. 1944 ஆகஸ்ட் 4லில் இவளுடைய தலைமறைவு வாழ்க்கை முற்றுப் பெற்று ராணுவம் இவர்களை வதை முகாமிற்கு அழைத்துச் சென்றது. ஆனின் தந்தை மட்டுமே அக்குடும்பத்தில் தப்பிப் பிழைக்கிறார். அவர் மூலமாகவே ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள் வெளியாகியது. இறந்த பிறகும் வாழ வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். அதற்கு எழுத்து மட்டுமே எனக்கு உதவ முடியும். இப்படி ஒரு ஆற்றலை எனக்கு அளித்த இறைவனுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன் ஏனென்றால் இதன் வாயிலாக நான் என்னை உயர்த்திக்கொள்ள முடியும். எழுத்து என்று ஆசீர்வாதத்தின் வாயிலாக என்னுடைய உள்ளத்தில் இருக்கும் அனைத்தையும் வெளிச்சத்திற்கு வரவழைக்க முடியும்.எழுதுவதன் வாயிலாக நான் எனது துயரங்களை உதறி எறிகிறேன். அதோடு என் உள்ளத்தில் மீண்டும் துணிவு துளிர்க்கிறது.

ஆனால் முக்கியமான கேள்வி இதுதான் என்றைக்காவது ஒருநாள் மகத்தான ஒரு படைப்பை என்னால் உருவாக்க முடியுமா என்ற ஆனின் வினாவிக்கு 60க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியுள்ள இந்த நூலே விடையாகும். டைரிக்குறிப்புகள் என்று வெறுமனே தாள்களை மட்டும் நிரப்பாமல் மனித வாழ்க்கைக்கு தேவையான வாழ்வியலையும் கற்றுக் கொடுப்பதால் தான் மறைந்து எழுபத்தைந்து ஆண்டுகள் ஆகியும் இன்றும் நீங்காமல் பலரது நெஞ்சில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

ஆனி ஃபிராங்க் : ஓர் இளம்பெண்ணின் டைரிக் குறிப்புகள்.

தமிழில்: உஷாதரன்

Leave a Response