Book Review

புத்தக அறிமுகம்: “அன்புவழி (பாரபாஸ்)” – ஆசிரியை.ஜானகி ராமராஜ்

Spread the love

‘அன்புவழி ‘ பெர் லாகர்குவிஸ்டு என்பவரால் ஸ்வீடிஷ் மொழியில் எழுதப்பட்டு தமிழில் க.நா.சு அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 1951 ஆம் ஆண்டில் இச்சிறுநாவல் நோபல் பரிசு பெற்றுள்ளது. கிறிஸ்துவ மதத்தின்ஆரம்பத்தை, ஒப்பாதவன் ஒருவன் கண்களின் மூலம் அறிமுகம் செய்துவைப்பதாக ஆசிரியர் முன்னுரையில் குறிப்பிடுகிறார். அந்த ஒப்பாதவன் தான் பாரபாஸ். தீமைகள் செய்யவே பிறந்தவன் அவன். பிறர் உணர்ச்சிகள் எதுவுமே பாதிக்காதவன் அவன். கொள்ளைக்கூட்ட தலைவன். கொடூர கொலைகள் செய்பவன். தனக்கு கடவுள் யாரும் இல்லை என கூறுபவன்.

கொள்ளையடிக்க திட்டங்கள் தீட்டுவதிலும், சண்டையிலும், தந்திரங்கள் செய்வதிலும் பாரபாஸை வீழ்த்த ஆளே கிடையாது. இவ்வாறான குணாதிசயங்களைக் கொண்ட பாரபாஸ், ஜெருசலேமில் பாஸோவர் விருந்தின் போது யாராவது ஒரு கைதியை விடுதலை செய்யவேண்டும் என்ற நியதியின் அடிப்படையில் அவன் விடுதலையாகிறான். அவனுக்கு பதில் ‘கிறிஸ்து ஏசு’ சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படுகிறார். ஏசுவின் முகத்தை பார்த்த உடனேயே அவனுக்குள் ஒருவித சலனம் ஏற்படுகிறது. பார்த்தாலே குற்றமற்றவர் என்று தெரிகிறதே இவரை தண்டித்து தன்னை ஏன் விடுதலை செய்ய வேண்டும் என்று எண்ணி தண்டனை நிறைவேற்றப்படும் கொல்கோதா மலைக்கு சிலுவை சுமந்து செல்லும் ஏசுவின் பின்னாலேயே செல்கிறான். அங்கே ஏசுவின் தாயார் கண்கலங்கி நிற்பதை பார்க்கிறான். ஏசுவின் கடைசி மூச்சு ஓயும் வரை அங்கேயே நின்று அவரின் உடலை அடக்கம் செய்யும் வரை பார்க்கிறான்.

அவரின் தாயின் கண்களில் வெளிப்படுத்த முடியாத தவிப்பை காண்கிறான். குற்ற உணர்ச்சி அவனை ஆட்கொள்கிறது. அவருக்கு தண்டனை கிடைத்ததற்கு அவன் காரணமில்லை என்றாலும் அவர் ஏன் சிலுவை சுமந்து உயிர் துறக்க வேண்டுமென்று குழப்பத்தில் தவிக்கிறான். பின் தன் கூட்டத்தார் இருக்கும் இடத்திற்கு செல்கிறான். அங்கே அவர்களுடன் முன் போல இயல்பாக இருக்க முடியவில்லை. எதிலும் பங்கு கொள்ளாமல் பித்து பிடித்தவன் போல் தனிமையில் உழல்கிறான். அவனது தனிமையும் குற்ற உணர்ச்சியும் அவ்வளவு அழகாக வருணிக்கப்பட்டுள்ளது.

அன்பு வழி (Tamil Edition) eBook: பெர் ...

இதனிடையே, ஜெருசலேம் மக்கள் சிலுவையில் அறைந்து உயிர் துறந்தவரின் புகழைப் பற்றி பேசுகிறார்கள். இவன் அவர்களிடத்தில் அவர் யார் அவரின் போதனைகள் என்ன என்பது பற்றியெல்லாம் கேட்க விழைகிறான். அவர்கள் அவரைப் பற்றி கூறிய அற்புதங்களை இவனால் நம்ப இயலவில்லை.

பிறகு கொள்ளைக் கூட்டத்திலிருந்து விலகி சுரங்கத்திற்கு அடிமையாகச் செல்கிறான். அங்கே ஸஹாக் என்பவனை சந்திக்கிறான். அவன் கடவுளின் புகழ் பாடுபவன். பிரார்த்தனையில் ஈடுபடுபவன். உலகைக் காக்க கிறிஸ்து ஏசு வருவார் என உறுதியாக நம்புகிறவன். பாரபாஸ் ஏசுவை நேரில் பார்த்திருக்கிறான் என்று அறிந்தவுடன் ஸஹாக்கிற்கு அவன் மீது பாசம் கூடுகிறது. ஒரு கட்டத்தில் ஸஹாக்கும் பாரபாஸூம் ஒரே நம்பிக்கையுடையவர்கள் என ஒரு அடிமை ஓட்டியின் மூலம் வெளியில் அறியப்பட்டு ரோமாபுரி கவர்னரின் முன் விசாரணைக்காக நிறுத்தப்படுகிறார்கள். ஸஹாக் கிறிஸ்துவே தனது கடவுள் என்கிறான், பாரபாஸ் தனக்கு கடவுள் யாரும் இல்லை எனக் கூறி தப்பித்து விடுகிறான். ஸஹாக்கிற்கு தண்டனை நிறைவேற்றப்படும் போது பாரபாஸ் கலங்குகிறான்.

அதன்பின் அரசருக்காக கடவுளைத் துறந்தவன் என்ற பிரியத்தின் பேரில் கவர்னர் வேறு தீவுக்கு செல்லும்போது பாரபாஸூம் உடன் அழைத்துச் செல்லப்படுகிறான். அங்கும் அவன் மன உளைச்சலிலேயே நாட்களைக் கழிக்கிறான். சுற்றி நடக்கும் எதுவும் வனை பாதிக்கவில்லை. அவனைப் பொறுத்த வரையில் எல்லாரும் நம்பும் கடவுளின் மகனான ஏசு ஏன் சிலுவை சுமந்து இறந்தார் என்பதும் கடவுளின் மகன் மீண்டும் உயிர்த்தெழுந்து வருவார் எனில் அது எவ்வாறு நிகழும் என்பதே. கடைசியில் அவன் ஏசுவை எவ்வாறு ஏற்கத் தொடங்கினான் என்பதும் தன்னை எவ்வாறு கிறிஸ்தவனாக அடையாளப்படுத்திக் கொண்டு உயிரைத் துறக்கிறான் என்பதுமாக நாவல் நிறைவடைகிறது.

குற்ற உணர்ச்சிக்கு ஆட்பட்ட ஒருவனின் மனநிலையை மிகத்துல்லியமாக எடுத்துரைக்கிறது நாவல்.

நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள் ...

நூல்: அன்புவழி (பாரபாஸ்)
ஆசிரியர்: க.நா.சு. (மொழிபெயர்ப்பு நாவல்)

ஆசிரியை.ஜானகி ராமராஜ், 

காஞ்சிபுரம்

Leave a Response

Top Reviews

Video Widget

gallery