Book Review

புத்தக அறிமுகம்: எழுத்தாளர் புஷ்பராணியின் “அகாலம் ஈழப் போராட்ட நினைவுக் குறிப்புகள்” – கருப்பு அன்பரசன்

Spread the love
எனது அப்பா தீவிர தி.மு.க. பற்றாளர். வீட்டின் முகப்பில் இருக்கும் மிகப் பெரிய அளவிலான கலைஞர் கருணாநிதி அவர்களின் புகைப்படம் வீட்டிற்கு வரும் அனைவரையும் பேச வைக்கும்.
பள்ளி படிக்கும் காலங்களில் வீட்டிற்கு “முரசொலியும், நம் நாடும்”  வராத நாளிருக்காது.
+2 படிப்பை 1983 ல் எழுதிவிட்டு ரிசல்ட் வந்தபிறகு மேற்படிப்பிற்கு பொறியியல் கல்லூரிகளுக்கு மட்டும் விண்ணப்பம் அனுப்பி.. தமிழகத்தில் எங்கும் கிடைக்காமல் அஸ்ஸாமில் கிடைக்க.. அப்பா அனுப்ப மறுத்து, நான் ஒரு வருடம் வீட்டிலேயே இருக்க வேண்டியதாகிறது. அதுதான் என்னை தீவிரமாக தி.மு.க. அரசியலுக்குள் தள்ளியது. பல வருடங்களாக இலங்கைக்குள், தமிழீழ ஆயுதக் குழுக்களால் நடைபெற்ற போராட்டத்தின் உச்சமாக 1980களைச் சொல்லலாம்.  தமிழர்கள் , தமிழீழ போராட்டக் குழுவினர்கள் பலர் சிங்கள அரசாலும், சிங்கள இனத் தீவிரவாதிகளலும்  கொடும் தாக்குதலுக்குள்ளாக்கப் பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள்.  தமிழகத்திற்குள், தமிழ் இன உணர்வாளர்களிடையேயும்  அது பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியது.
M. Karunanidhi: A lifelong warrior for Sri Lankan Tamil cause, but ...
இளைஞர்கள் மத்தியிலும், கல்லூரி மாணவர்களிடையேயும் ஆகப் பெரிய இலங்கைத் தமிழர்கள் ஆதரவு எழுச்சியை மூட்டியது.  இலங்கைத் தமிழர்களுக்கு, ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகம் முழுவதிலும் தி.மு.க. தொடர் போராட்டங்களை அறிவித்து களம் கண்டது அக்காலத்தில். 1983ஆம் வருடத்தின் ஜுலை மாதம் 25ம் நாளில் இலங்கை வெளிக்கடை சிறைக்குள், கைது செய்து சிறைவைக்கப்பட்ட  தமிழீழ போராளிகளின் மீது சிங்கள இனவெறிக் கைதிகளை கும்பலாக ஏவிவிட்டு குட்டிமணி, ஜெகன், தங்கதுரை உள்ளிட்ட 53 தமிழர்களை கொலைசெய்து சிறைமீது ஏறி நின்று கொக்கரித்தது சிங்கள இனவாதம். தமிழகத்தின் அத்தனை கிராமத்திலும்,  கொலையாகிக் கண்கள் பிடுங்கிக் கிடந்த குட்டிமணி, ஜெகன், தங்கதுரை படங்களை ரத்தக் கலரில் சுவரொட்டிகளாக அச்சடித்து ஒட்டி  தி.மு.க. மாபெரும் தமிழகம் தழுவிய மறியல் போராட்டத்தை அறிவித்தது. திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் மறைந்த பெரியவர் எஸ்.முருகையன் அவர்கள் தலைமையில் மறியல் செய்து கைதான ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளோடு கருப்பும் கைதாகி வேலூர் தொரப்பாடி சிறைக்குள் 15 நாள் சிறை வைக்கப்பட்டேன்.
இலங்கைத் தமிழர்களுக்காக சிறையிலிருந்த இந்த ஒன்றை மட்டுமே எனக்கான தகுதியாக எடுத்துக் கொண்டு, தமிழீழப் போராளியாக, ஆயுதம் தாங்கிய போரட்டக் குழுவில் இலங்கைக்குள் களமாடிக் கைதான முதல் இரு பெண்களுக்குள் ஒருவராக இருந்து,  பிறகு தமிழீழ அரசியலில் இருந்து விலகி புலம்பெயர்ந்து பிரான்சில் வசிக்கும் தோழர் புஷ்பராணி அவர்கள் எழுதிய “அகாலம்” ஈழப் போராட்ட நினைவுக் குறிப்புகளை வாசித்து  தமிழகத்தில்  உணர்வு வெறியாக மாற்றிய தருணங்களிலான அரசியல் லாப நட்டக் கணக்கை யோசித்துக் கொண்டேன். ஈழத்துத் தமிழர்கள் போராட்டம் தமிழகத்திலே இருக்கக் கூடிய அரசியல் கட்சிகளால்;  தமிழர் இனவுணர்வைத்  பற்றவைத்து உணர்ச்சியை வெறியாக்கி பல உயிர்களை பலிகொண்டது எப்படி.? எரியும் நெருப்பிற்குள் தன் உடலைக் கொடுத்து எரிந்து போனாவர்கள் எத்தனை பேர் என்பதை யோசித்துப் பார்க்கிறேன்.
பிரக்ஞை | பிரக்ஞை!…நம் உள் ஒளி ...
அப்படி ஈழத் தமிழர்களுக்கா தங்களை அர்ப்பணித்து செத்து மடிந்தது எத்தனை பேர் என்பதை , இன்றைக்கு இந்தக் கட்சிகள் அந்தக் குடும்பத்தை நினைவு கூர்ந்திருக்கிறதா என்று எண்ணிப் பார்க்கிறேன். அதிகார போதையைக் குறியாகக் கொண்ட அரசியல் தலைவர்களால்  தமிழகத்தில்
தமிழ் இனத்தை, உணர்வை எப்படிப் பயன்படுத்தியது என்பதையும்; அதிகார பீடத்திற்கான வெறி ஈழத்தில் சொந்த மக்களை, சகப் போராட்டக் குழுக்களை, போராளிகளை எப்படியெல்லாம் சித்திரவதை செய்து துப்பாக்கித் தோட்டாக்களுக்கு தின்னக் கொடுத்தது என்பதை தோழர் புஷ்பராணி அவர்கள் எழுதியதோடு ஒப்பிட்டுப் பார்க்கிறேன். இரண்டும் ஒன்றாகவே தெரிகிறது எனக்கு.
இனி புஷபராணியின் அனுபவத்திலான “அகாலத்திற்குள்” நுழைவோம் நாம். யாழ்ப்பானமதின் அழகிய கடற்கரை மயிலிட்டி கிரமத்தில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட நளவர் சாதிக்குள் இருந்து புறப்பட்டு தமிழ் இனத்தின் தன்ஆட்சி, தன்உரிமைக்கான போராட்டத்திற்குள் தன்னை முழுவதுமாக ஐக்கியப்படுத்திக் கொண்டு ஆயுதப் போராட்டமே தன் இனத்திற்கான முழு விடுதலைக்கு தீர்வாகிடும் என்கிற அதீத நம்பிக்கையில் இளைஞர்கள், பெண்கள் எனப் பலரை அணி திரட்ட 1986 வரை ஈழத்திற்குள் இருந்து, பல்வேறு தமிழீழ விடுதலைக் குழுக்கள் தங்களுக்குள் நடத்திக் கொண்ட அதிகாரத்திற்கான  அழித்தொழிப்பினையும், இலங்கை அரசுக்கெதிரான போராட்ட நினைவுகளையும்,  எல்லாச் சமூகத்திலேயும்  எப்போதும் குறிவைத்து தாக்குதலுக்கும், வன்முறைக்கு ஆளாகிக் கிடக்கும் பெண் என்கிற ரெளத்திரத்தின்
மேலேறியும் பல மெய்யான உண்மைகளை பொதுச் சமூகத்தின் முன்னே விமர்சனத்திற்கு உட்படுத்தி தன்னையும் சுய விமர்சனம் செய்து  பல மெய்களை போட்டுடைத்துள்ளார். அவரின் நினைவுக் குறிப்புகளை வாசித்திடும் போதினில் நமக்குள் ஈழப் போராட்டம், போராளிகள் குறித்தான புற நிலையில் இருந்து கட்டி எழுப்பப்பட்ட புனித பிம்பங்கள் அனைத்துமே சுக்கு நூறாகி சிதறிப் போகிறது.
இந்த நூலை வாசிக்கும் ஒவ்வொரு வினாடியிலும் போராட்டத்தில் பங்கேற்ற ஒருவர் எதற்காக இந்தப் போராட்டத்தை துவக்கினோமோ அதை விடுத்து வந்த திசை நோக்கியே  துப்பாக்கிகள் திரும்பி நின்றிடும் சூழலை ஆசிரியர் வெளிப்படுத்தும் போது ஈழ மண்ணில் புதைத்து வைக்கப் பட்ட கண்ணிவெடிக்குள் நம் மனதும் சிக்கியது போன்ற உணர்வு மேலோங்கி அழத் தொடங்கிடுகிறது.
அகாலம் - புஷ்பராணி - கருப்புப் ...
ஓரிடத்தில் ஆசிரியர் சொல்கிறார், “மிதவாதப் போக்கில் வெறுப்புற்ற தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தரித்த விடுதலை இயக்கங்களாகத் திரண்டபோது இயக்கங்களை ஆதரித்து தமிழ் மக்கள்
அவர்களோடு நின்றார்கள். விடுதலை இயக்கங்கள் வெகு விரைவிலேயே அதிகார மையங்களாக மாறுவார்கள் என்றும் சொந்த மக்களையே கொன்று குவிப்பார்களென்றும் அப்போது யாரும் கருதியிருக்கவில்லை. இயக்கங்களைத் தொடங்கிய போராளிகள் கூட கருதி இருக்க மாட்டார்கள்” என்று சொல்லிடும் போது அந்தச் சிலவரிகளே போதுமானதாக உள்ளுணர்வு எனக்குச் சொல்கிறது  முள்ளிவாய்க்காலில் முற்றாக நமது தமிழ் இனம் அழிந்து சாம்பல் மேடாகக் ஈழத்தில் கிடப்பதற்கு.
“அகாலத்தை” வாசிக்கும் தருவாயில் வரலாற்றில் துரோகிகளாக நிறுவப்பட்டவர்கள் விடுதலை வீரர்களாகவும், மாவீரர்களாக கொண்டாடப்படுபவர்கள் அதிகார வெறியர்களாகவும் வந்து நின்று நமது உணர்வுகளை சூடாக்கிக் கொண்டே இருப்பார்கள் இதற்காகவா இத்தனை கொடூரங்களை நிகழ்த்திப் பொதுச் சமூகத்தில்  ஈழமக்கள் விடுதலை குறித்தான லாபியை கட்டமைத்து தமிழ் நிலத்தில் மக்களற்ற, குழந்தைகளற்ற, பெண்களற்ற  ஒரு நிலத்தையடைந்து  எவரின் துப்பாக்கிக்கு தோட்டாவாக மாறிடத் துடித்தீர்கள் என்று யோசிக்கத் தோன்றும் நமக்கு.
இந்த  நூலின் ஒரு அத்தியாயத்தில் காத்திரமாக பதிவாக்கி இருப்பார். வர்கம் குறித்து போராளி அமைப்பிற்கு ஆயுதம் வாங்கிடும் தேவைக்காக புலோலி வங்கி கொள்ளையடிக்கப் படுகிறது. அதில் புஷ்பராணி, கல்யாணி உள்ளிட்ட பலர் கைதாகி யாழ் சிறையில் கொடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப் படுகிறார்கள். இவர்கள் கைதான சில மாதங்களில் கொள்ளைக்குக் காரணமான, துணைபுரிந்த அனைவரும் இலங்கை போலீசால் கைது செய்யப்பட்டு சிறைக்குள் சொல்லமுடியா கொடுமைக்கு உள்ளாக்கப் படுகிறார்கள்.  போராளி சந்திர மோகனைத் தவிர்த்து. அவரின் குடும்பம் செல்வச் செழிப்பு மிக்கக் குடும்பம்.. அவரின் குடும்பப் பணம் சிறைச்சாலை முழுவதும்  இரைந்து கிடந்தது காவல் துறை அதிகாரிகள் தொடங்கி கடை நிலைக் காவலர் வரை.
அதே போல் கைது செய்யப்பட்ட  பத்மநாபாவும் உடனடியாக விடுதலை செய்யப் படுகிறார் சிறை அதிகாரிகளின் துணையோடு. அப்போது எழுதி இருப்பார் புஷ்பராணி “வர்க்கபேதமும், சாதி பேதமும் எப்படியெல்லாம் எங்கெல்லாம் புகுந்து எளியவரை நசுக்கி விடுகின்றன என்பதை கண்கூடாக கண்டேன்” என்று அமைப்பிற்குள்ளும் சொந்த அனுபவத்திலிருந்து.
Sooddram.com
பல நேரங்களில் முற்போக்கு பேசினாலும்
வர்க்கபேதமும், உள்ளுக்குள் கிடக்கும்
சாதி பேதமும் ஏதேனும் ஒரு வழியில்
அது வார்த்தைகளாகக் கூட பேசுபவரையும்
மீறி தெரிப்பாக வந்து விழும் இடங்களை
நாமும் பல இடங்களிள் நேரில் பார்க்கச் செய்கிறோம்.. அதுதான் சாதியின் பல நூறாண்டுகால கட்டமைப்பு. அதை ஆசிரியர் அவர்கள் சரியாக கண்டுணர்ந்து பதிவாக்கிடும் போது முன் அத்தியாயங்களில் சிறைக்குள் அவர் இறைச்சிக் கடையொன்றின் வெட்டுமரத்தில்  சிதைக்கப்பட்ட இறைச்சி துண்டாகிக் கிடந்தது போன்ற கொடூரமும்… அவரின் தாயின் அழுகையும் வந்து போகும்.
இந்த நூல் முழுவதும் தன் அரசியல் வாழ்க்கையின் தொடக்கம் முதல் காலவரிசைப்படி முக்கியமான நிகழ்வுகளையும், அரசியல் விவாதங்களையும், குடும்பத்தினரின் அர்பணிப்பு, தோழர்களூடான தோழமை, சண்டை, விவாதம், சந்தித்த, பேசிய இலங்கை தமிழர்கள் நலன் குறித்தான அரசியல் தலைவர்கள், ஆயுதப் போராட்டம் திசைமாறிய விதம்.. இவைகள் அனைத்தையும் விடுதலைப் போராட்டத்தில்  பங்கேற்ற ஒரு போராளியின் நிலையில் இருந்து தோற்றுப் போனதின் காரண காரியங்களை தன்னையும் விமர்சித்துக் கொண்டே தோற்றதற்கான விடயங்களை தேடுதலுக்கான முன்னெடுப்பே என நினைக்கிறேன் இவரின் நினைவு கூறல் பதிவுகள்.  இதில் பல இடங்களில் துயரமான, வலி மிகுந்த நினைத்தும் பார்க்க முடியாத சம்பவங்களை சொல்லி இருப்பார். வாசிக்கும் தருணங்களில் ஒரு வரியின் ஒரு வார்த்தையினை வாசிக்க மறந்தாலும் ஒரு சேதி நமக்குக் கடத்தப்படும் ஆசிரியரின் கடப்பாட்டை நாம் தொலைத்து நிற்போம்.
இந்த “அகாலம்” முன்னுரையை 5 பாகங்களாக எழுதி இருக்கும் இடதுசாரி சிந்தனையாளர் தோழர் கருணாகரன் அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் அர்த்தம் பொதிந்தவை..
“சிதைந்து போயிருக்கும் ஈழப்போராட்டம் இன்று யுத்தக் குற்றங்களுக்கான சாட்சியங்களைத் தேடிக் கொண்டிருக்கிறது. அந்த சாட்சிகளின் அடிப்படையில் அது விசாரனையைக் கோருகிறது. அந்த விசாரணை மூலம் அது தனக்கான நீதியைப் பெற முயல்கிறது” எனத் துவங்கி ” சுய விசாரணை என்பதும், சாட்சியமளித்தல் என்பதும் பொறுப்புக் கூறுதல் என்பதும் இரத்தத்தை சுத்திகரிக்கும் செயற்பாடுகளாகும்.” என்றும் இந்த நூலை வெறும் குற்றமாகப் பார்க்காமல் ஒரு மருத்துவமாகப் பார்க வேண்டும், வரலாற்றில் இருக்கும் பெருமிதப் புள்ளிகளை மட்டும் பார்க்காமல் அனைத்தையும் விஞ்ஞானபூர்வமாகவும் பார்க்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக இந்த நூல் குறித்து பேசி இது கலைக்க முடியாத துயரம், துரத்திட முடியாத அவலம், ஆனாலும் என்ன செய்வது.! இதற்குள்தானே நாம் வாழ்ந்திட வேண்டியுள்ளது..
இதற்கெதிராகவும் நாங்கள் இன்னும் போராட வேண்டி இருக்கிறது என்று முடித்திருப்பார். அவரின் வார்த்தைகள்தான் எத்தனை மெய்யானது, உலகம் தழுவிய அத்தனை  மக்கள் குழுவிற்கும்.. மக்கள் நலன் முன்னிறுத்தும் இடதுசாரிக் கட்சிகளிக்கும் பொதுவானதல்லவா. கடந்து வந்த பாதையில் இருக்கும் தவறுகளை சரி செய்யாமல் மக்கள் நலன் சார்ந்து இயங்குவது என்பது மருத்துவத்திற்குத் தன்னை உட்படுத்திக் கொள்ள மறுக்கும் ஒரு மனிதனின் நிலையே..  ஆபத்தானது அது. மருத்துவத்திற்கு  ஒவ்வொருவரும், ஒவ்வொரு குழுவும் உட்படுத்தி வாழ்வதுவே மக்கள் நலன் சார்ந்து இயங்குவதற்கு அடையாளமும்.. ஆகப் பெரிய வளர்ச்சியும் ஆகும்.
Commemorating the retaking of Sri Lanka's Jaffna from the LTTE ...
நிறைவாக இந்த நூல் குறித்து புஷ்பராணியின் வார்த்தைகளை சொல்லி எங்கே இருக்கிறது ஈழ விடுதலைப் போர் என்பதை உங்கள் கவனத்திற்கே விட்டு விடுகிறேன்.”மிகுந்த நம்பிக்கையுடனும் எண்ணிலடங்கா அர்ப்பணிப்புகளுடனும் தொடங்கப்பட்ட ஒரு நியாயமானப் போராட்டத்தை நாங்கள் தோற்று விட்டு நிற்கின்றோம். எங்களது நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் இன்று ஆயுதம் தரித்த இராணுவத்தினர் உலாவிக் கொண்டிருக்கிறார்கள். நாம் நேற்றிருந்த வீட்டில் இன்று புதிதாக ஒரு புத்தர் சிலையை யுத்தத்தில் வென்றவர்கள் நட்டு வைத்திருக்கிறார்கள். போராளிகளின் கல்லரைகள் உடைத்து நொறுக்கப்பட்டு அடையாளங்களற்ற கற்குவியல்களாகப்படும் காட்டு மிராண்டித்தனங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எங்களுக்கு வாக்களிக்கப்பட்ட பூமி இப்போது சாம்பல் மேடாயிருக்கிறதும்.”
வலியும் குமுறலும் துயரமும் தோய்ந்த வார்த்தைகள்.. அத்தனையும் நிஜமாக
நம் கண் முன்னே..
புஷ்பராணி வீசிய கல் கிணற்றில் என்றால், ஒரு சில வினாடிகளுக்குள் அலைகள் மறைந்து அமைதியாகி இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். எமது எண்ணத்திற்குள் வீசியதுதென்னவோ அவரின் அனுபவத்தினூடான துயர் மிகுந்த சொற்களும், வலிமிகுந்த தோழமையின்
துரோகங்களுமே.. அதில் இருந்து மீள்வோம் என்பது நம்பிக்கை என்கிற ஒற்றை வார்த்தை மட்டுமே.
மீள்வோம்.!
வாழ்த்துக்கள் புஷ்பராணி தோழர்.
“அகாலம்” கருப்புப் பிரதிகளால் நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டு வெளி வந்திருக்கிறது. பேரன்பும்.. வாழ்த்துக்களும் தோழா நீலகண்டன்.
கருப்பு அன்பரசன்
அகாலம்
ஈழப் போராட்ட நினைவுக் குறிப்புகள்
புஷ்பராணி
கருப்புப் பிரதிகள்.

Leave a Response

Top Reviews

Video Widget

gallery