Book Review

 நூல் அறிமுகம்: எழுத்தாளர் ஆ.மாதவனின் “தூவானம்” – பா.அசோக்குமார்

“வேணு”, ” நாயகம்” என்னும் இரு பிரதான கதாபாத்திரங்களை மட்டும் கொண்டு மிக நேர்த்தியாக பின்னப்பட்ட நாவலே இது.
ஒரு படைப்பின் வழியே பல்வித உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் நுணுக்கம் கைவரப்பெற்ற எழுத்தாளராக ஆ.மாதவன் திகழ்கிறார் என உறுதியாக கூறலாம்.
“நாயகம்” என்ற கதாபாத்திரத்தின் குண இயல்புகள் குறித்த தேடலாகவே இந்நாவல் பயணிப்பதாகத் தோன்றினாலும் வேணுவின் குணநலனும் விமர்ச்சனத்திற்குரியது என்று பாத்திரப் படைப்பை நிர்மாணித்து இருப்பது நாவலின் புதிய பாய்ச்சலே ஆகும்.
இரண்டு இலக்கிய ஆர்வலர்கள் வாயிலாக தமிழ் மற்றும் மலையாளத்தின் பிரபலமான, அவசியம் வாசித்தனுபவம் பெற வேண்டிய நூல்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவது சோர்வின்றி ஆர்வத்தைத் தூண்டும் உரையாடல் மூலம் நிகழ்த்திக் காட்டியவிதம் ரசனைமிக்கது.
அவர்களுக்கிடையே நடைபெறும் சம்பாஷணைகள் வாயிலாக நிகழ்கால எழுத்தாளர்கள்(1970-1980) முதல் சங்க கால இலக்கியங்கள் வரை விவாதிப்பது இலக்கியங்கள்பால் ஆர்வத்தைத் தூண்டுவதாகவே அமைந்துள்ளது எனலாம்.
பிரதாப முதலியார் சரித்திரம் முதல் ஆங்கில எழுத்தாளர்கள் மற்றும் பிறமொழி எழுத்தாளர்களின் படைப்புகள் என சகலத்தையும் இருவர் சந்தித்து பேசும் இயல்பான நிலையில் எடுத்தியம்பியவிதம் அசாத்தியமானது… அட்டகாசமானதும்கூட…
முதலாளி மற்றும் தொழிலாளி வர்க்கத்தினரிடையே எழும் புரட்சிக் காலத்தையும் எழுச்சியாக காட்சிபடுத்திய விதம் விசித்திரமானதே. இலக்கியம் வாயிலாக உதயமாகும் நட்பு இறுதிவரை உண்மை நட்பாக மிளிரவே இல்லை என்பதை அறியும்போது ஒரு வித வருத்தமே வாசகர்களுக்கு தோன்றுவது இயல்பானதே.
“நாயகம்” என்ற கதாபாத்திரத்தின் தந்தை மற்றும் மனைவியின் கதாபாத்திரம் நாவலின் மீது ஒருவித ஈர்ப்பைத் தூண்டி நாவலின் இறுதி வரை உண்மையை அறியும் ஆவலைத் தூண்டுவதாகவே அமைந்துள்ளது.
Peer Reviewed) ஆ.மாதவன் கதைகளில் பின்புலம் ...
வேணுவுக்கும் லோஜனீனுக்கும் இடையேயான உறவுமுறை நட்பாக, ஒரு தலைக் காதலாக வேணுவால் நாயகத்திடம் பகிரப்பட்டு இறுதியில் உண்மை சொரூபம் தெரிய வருவதும் நாயகத்திற்கு புத்தகங்களின் மீதான அலாதி ஈர்ப்பிற்கான மனநிலையை அறியும் போதும் இலக்கிய ஆர்வலர்கள் ஒருவித முரணைத் தோற்றுவிப்பதாகவே தோன்றுகிறது.
இறுதி வரை விறுவிறுப்பு சிறிதும் குறையாமல் நாவலை மிக நேர்த்தியாக படைத்துள்ள பாங்கு ரசிகனைக் கட்டிப் போடுவதாகவே உள்ளது. நாவலினூடே இரு சிறுகதைகளை (குறுங்கதை) இணைத்துள்ள விதம் கவர்ச்சிகரமான அசாத்திய முயற்சியே ஆகும்.
ஆண் படைப்பாளர்கள் பெண்களின் புனைப் பெயரில் எழுதுவதற்காக கூறப்படும் கருத்து கவனிக்கத்தக்கது. இந்நாவலில் நாயகத்தின் மனைவி கதாபாத்திரமே காத்திரமான படைப்பாக படைத்துள்ள விதத்திலேயே எழுத்தாளர் மிளிர்ந்துள்ளார் என பிரமிக்கிறேன்.
நாவலின் துவக்கத்திலேயே பிரதான கதாபாத்திரத்தை பேய்மழையாக சடசடவென அடிக்க வைத்து படீரென்று ஓய்வது போல்  மரணிக்கச் செய்துவிட்டு நாவலை இறுதிவரை உயிர்ப்புடன் தூவானமாக நகர்த்திய விதம் நமது மனதை ஜில்லிட வைத்து மோன மனநிலையிலேயே நிலைகொள்ளச் செய்கிறது என்பதே உண்மை.
இங்ஙனம் குறுகிய பக்கங்களில் குறைந்த கதாபாத்திரங்கள் வாயிலாக நிறைந்த இலக்கிய விவரணைகளுடன் நேர்த்தியாக பின்னப்பட்டு ஒருவித பித்த மனநிலையில் நம்மை மிதக்கச் செய்கிறது இந்த தூவானம்.
வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள். நன்றி.
“தூவானம்”
ஆ.மாதவன்
நற்றிணை பதிப்பகம்
பக்கங்கள்:112
₹.90
 பா.அசோக்குமார்
மயிலாடும்பாறை.

Leave a Response