Article

நெருக்கடியிலிருக்கும் வலுவற்ற கூட்டமைப்பு – சி.பி.சந்திரசேகர் (தமிழில்:அறிவுக்கடல்)

Spread the love

கொரோனா தொற்றிற்கெதிராக இந்திய அரசு மேற்கொண்ட பொறுத்தமற்ற நடவடிக்கைகளால் பாதிப்புக்கு உள்ளாயிருப்பவற்றில், இந்தியாவின் மத்திய, மாநில அரசுகளுக்கிடையே நிலவும் பலவீனமான பொருளாதார ஒத்துழைப்பும் அடங்கும். இந்தக் கொள்ளை நோயால் ஏற்பட்டிருக்கிற பாதிப்புகளிலிருந்து மக்களின் வாழ்வையும், உடல் நலத்தையும் பாதுகாக்கிற கடமை, மாநில அரசுகளிடம் விடப்பட்டது என்பது வெளிப்படையாகத் தெரிவதுடன், அது தவிர்க்க முடியாததும்கூட. லாக் டவுனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்வதற்காக, லாக் டவுனை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா எத்தனித்துக்கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில், சமூகப் பரவலைத் தடுப்பதற்கும், கையாளுவதற்கும் உள்ளாட்சிகள் தயாராக இருப்பதே, கொரோனாவை வெல்வதற்கான அடிப்படை நடவடிக்கையாக இருக்க முடியும் என்று, உலக சுகாதார அமைப்பு உருவாக்கியுள்ள, கொரோனா சிறப்புக் குழுவின் டேவிட் நபாரோ கூறியிருக்கிறார். மாநில அரசுகளும், அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்ட நிர்வாக அமைப்புகளும் மட்டும்தான் இந்தச் சூழ்நிலையைக் கையாள முடியும்.

ஆனாலும், கொரோனாவுக்கு எதிரான போரில் தானே முன்னின்று போராடுவதுபோல மத்திய அரசு காட்டிக்கொள்கிறது. இதற்கு அடிப்படையாக இரண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதலாவதாக, இந்தப் போரை வழிநடத்துவதாகத் தானே கூறிக்கொண்டு, தொற்றை பேரிடராக அறிவித்ததுடன், பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் விதிகளையும் நடைமுறைப்படுத்தியது. அதன் அடிப்படையில் அனைவரும் பின்பற்றவேண்டிய கட்டுப்பாடுகளை அறிவித்தது. அவற்றை மீண்டும் மீண்டும் மாற்றியமைத்தது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி நடக்காத மாநிலங்களைக் கண்காணிக்க மத்தியக் குழுக்களை அனுப்பி, அதிகாரம் தன்னிடம்தான் இருக்கிறது என்று காட்டியது. இரண்டாவதாக, எவ்விதத் திட்டமிடலும் இன்றி, மோசமாக பாதித்த பகுதிகள், பாதிப்பில்லாத பகுதிகள் என்ற வேறுபாடின்றி, அனைத்துப் பகுதிகளுக்கும் ஒரே மாதிரியான ஊரடங்கை அறிவித்தது. இது பொருளாதாரத்திற்கு மட்டுமின்றி, பரம ஏழைகள், குறிப்பாக புலம் பெயர் தொழிலாளர்களின் வாழ்க்கை, வாழ்வாதாரங்கள் அனைத்திற்கும் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது.

இந்த நடவடிக்கைகள் தேவையா, சரியா என்ற விவாதங்கள் ஒருபுறம் இருக்கட்டும். ஒரு நெருக்கடியின்போது, அதிகாரங்களைத் தன்னிடம் மையப்படுத்திக்கொள்ள விரும்புகிற அரசிற்கு, பொறுப்புகளை ஏற்கிற கடமையும் உள்ளது. அதில் முக்கியமானது, மத்திய அரசின் பட்ஜெட்டிலிருந்து கூடுதல் செலவுகளைச் செய்வதும், மாநிலங்களுக்குத் தேவையான நிதியினை வழங்குவதுமாகும். கொரோனா உருவாக்கியுள்ள நெருக்கடியை மாநில அரசுகள்தான் நேரடியாகச் சந்தித்துக்கொண்டிருக்கிற நிலையில், அதனால் அவற்றின் செலவுகள் ஒருபுறம் அதிகரிக்க, வருவாய்  மறுபுறம் சரிந்துகொண்டிருக்கிறது. பெரும்பாலான மாநிலங்கள், கூடுதல் நிதி வேண்டுமென்று மத்திய அரசிடம் கோரியுள்ளன.

கொரோனா நெருக்கடி காலம்: நிதி ...


மிகப்பெரிய அளவில் சோதனைகள் மேற்கொள்ள, பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய, தனிமைப்படுத்த, அவர்களுக்கான கூடுதல் மருத்துவ வசதிகளை ஏற்படுத்த, அவர்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவத்துறை ஊழியர்களுக்குப் பாதுகாப்பளிக்க, வேலையிழந்தவர்கள், ஊதியம் குறைந்தவர்கள் ஆகியோருக்கு நிவாரணம் வழங்க, இந்த நெருக்கடியால் அழி;வை நோக்கிச் செல்லும் சிறு, குறு தொழில்களுக்கு ஆதரவளிக்க, வேலைவாய்ப்பை மீண்டும் உருவாக்க, லாக் டவுன் முடிவுக்கு வரும்போது தேவையை அதிகரித்து பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கச் செய்ய என்று ஏராளமான செலவுகளை மத்திய, மாநில அரசுகள் செய்யவேண்டியிருக்கிறது. நெருக்கடியின் பெரும்பாலான பகுதிகளை மாநில அரசுகளே சந்திக்க வேண்டியிருப்பதால், நிதியைத் திரட்டுவதற்கும், ஏராளமான நிதியை மாநில அரசுகளுக்கு அளிப்பதற்கும் மத்திய அரசு முக்கியத்துவம் தரவேண்டும்.

கொரோனா நெருக்கடி வருவதற்கு முன்பே, சரிவைச் சந்தித்துக்கொண்டிருந்த பொருளாதாரம், தோல்வியடைந்த ஜிஎஸ்டி ஆகியவற்றால் மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய பங்கில் ரூ.1.25 லட்சம் கோடி குறைந்துவிட்டதுடன், மாநில அரசுகளின் நேரடி வரி வருவாயும் 1.6 சதவீதம் குறைந்திருந்த பின்னணியில், மத்திய அரசின் நிதியுதவி முக்கியத்துவம் பெறுகிறது. இந்தக் காரணங்களால், பல மாநிலங்கள், பற்றாக்குறைக்கான வரம்பான 3 சதவீதத்தை ஏற்கெனவே கடந்தோ, விரைவில் கடக்கும் நிலையிலோ இருக்கின்றன. லாக் டவுன் காரணமாக ஏப்ரலில் வருவாய் குறையுமென்பதால், இந்த நிலை மேலும் சிக்கலாகும். இதைச் சரி செய்ய செலவுகளைக் குறைக்க வேண்டும். ஆனால், கூடுதல் செலவுகளைச் செய்தாக வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. ஆனால், மத்திய அரசிடமிருந்து நிதியுதவியே இல்லை எனுமளவுக்குத்தான் உதவிகள் கிடைத்துள்ளன. அதிலும் இந்திய உணவுக் கழகத்திடமிருந்து உணவு தானியங்கள் கோரிய மாநிலங்களுக்கு, சந்தை விலையில் அவை வழங்கப்பட்டது மன்னிக்க முடியாத அநீதி. அதைப் போலவே, வேலையோ, ஊதியமோ, தங்க இடமோ இல்லாமல் சொந்த ஊருக்குச் செல்ல நேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தைக்கூட மத்திய அரசு ஏற்கத் தயாராக இல்லை என்பது கொடுமை.

மாணவர்கள், தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள் என்று தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் இருந்த மாநிலங்களில், அதனை வெற்றிகரமாக எதிர்கொண்ட மாநிலம் கேரளா. சிறப்பாகக் கட்டமைக்கப்பட்ட அரசு மருத்துவமனைகள், நிபா வைரசை எதிர்கொண்ட அனுபவம் ஆகியவற்றால் மிகச் சிறப்பாகத் திட்டமிட்டு, கட்டுப்படுத்தும் நிலையிலிருந்தது கேரளாதான். இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்தவும், நிவாரணப் பணிகளுக்கும் ரூ.20 ஆயிரம் கோடி தேவைப்படும் என்று தொடக்கத்திலேயே அம்மாநில அரசு கணித்துவிட்டது. கேரளாவைவிட பெரிய மாநிலங்கள் பலவும், அதைவிடச் சிறிய தொகையை ஒதுக்கிவிட்டு, இன்றும் இந்த நெருக்கடியை எதிர்கொள்வதில் சிக்கலைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றன.

கொரோனா நெருக்கடி காலத்திலும் ...

மாநிலங்களின் வருவாய் குறைந்து, மத்திய அரசின் உதவியும் இல்லாத நிலையில், இந்தத் தொகைகள் மிகப்பெரிய சுமையாக மாநில அரசுகளுக்கு உள்ளன. கடந்த 2019 ஏப்ரலில் ரூ.3,500 கோடியாக இருந்த டெல்லி மாநிலத்தின் வரி வருவாய், இவ்வாண்டு வெறும் ரூ.320 கோடிதான்! அதைப்போலவே, கேரளாவின் வருவாய் ரூ.1,500 கோடியிலிருந்து, ரூ.150 கோடியாகச் சரிந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த நெருக்கடியைச் சந்திப்பதற்காகக் கடன் வாங்குவதிலும் மாநில அரசுகள் சிக்கலைச் சந்திக்கின்றன. சமமற்றதாக இருக்கிற மத்திய மாநில அரசுகளின் அதிகாரங்கள், மாநில அரசுகள் கடன் வாங்குவதற்கு, அந்த மாநிலத்தின் ஜிடிபி அளவுடன் தொடர்புடைய கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. அதையும் தாண்டி, 2020-21 நிதியாண்டு முழுவதும் வாங்க அனுமதிக்கப்பட்ட கடன்களை இப்போழுதே வாங்கலாம் என்று மாநிலங்கள் முயற்சித்தாலும், மாநில அரசுகளின் பத்திரங்களை வாங்க சந்தை தயாராக இல்லை. இதனால், உதாரணமாக கேரள அரசு வாங்கும் கடன்களின் வட்டி விகிதம் சுமார் 9 சதவீதமாக உயர்ந்துள்ளது. வருவாய்கள் சரிந்து, மத்திய அரசும் உதவத் தயாராக இல்லாமல், வட்டி விகிதங்களும் உயர்ந்துள்ள நிலை, இந்தத் தொற்றை எதிர்கொள்ள வேண்டிய நிலையிலிருக்கிற மாநில அரசுகளை நிதி நெருக்கடியில் சிக்க வைத்துள்ளது.

இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கு எளிய வழி ஒன்று உள்ளது. ரிசர்வ் வங்கி கூடுதல் நிதியை அச்சடித்து, மாநில அரசுகளின் பத்திரங்களை, சந்தையைவிடக் குறைந்த வட்டிக்கு வாங்கி உதவலாம். அல்லது, ரிசர்வ் வங்கியிடமிருந்து மத்திய அரசு கடன் பெற்று மாநில அரசுகளுக்கு வழங்குவது இன்னும் எளிதான வழியாகும். அரசின் பற்றாக்குறைச் செலவினங்களுக்கு நிதியுதவி அளிப்பதைப் பொதுவாக எதிர்க்கிற பொருளாதார நிபுணர்களேகூட, இப்போது இதுதான் ஒரே வழி என்று ஏற்கின்றனர். ஆனால், மத்திய வங்கியோ, உண்மையில் அதிகாரங்களைக் கையில் வைத்திருக்கிற மத்திய அரசோ, இந்த உண்மையை ஏற்கத் தயாராக இல்லை.

மொத்தத்தில், இந்தியக் கூட்டமைப்பில் பொருத்தமற்ற விகிதத்தில் அதிகாரங்களும்-பொறுப்புகளும் வழங்கவும்-சுமத்தவும் பட்டிருப்பதை, இந்த கொரோனா நெருக்கடி தீவிரமாக்கியிருக்கிறது. பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைப்பதிலும், நடைமுறைப்படுத்துவதிலும் மாநில அரசுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பது எப்போதும் ஏற்கப்பட்டிருந்தாலும், நிதியைத் திரட்டுவதற்கான வாய்ப்புகளிலும், செலவு செய்யவேண்டிய கடமைகளிலும், மத்திய மாநில அரசுகளிடையே மிகப்பெரிய பொருத்தமற்ற நிலையே நிலவுகிறது. இந்த வித்தியாசத்தை ஈடுகட்ட, மத்திய அரசு திரட்டும் நிதியிலிருந்து மாநில அரசுகளுக்கு வழங்கவேண்டிய விகிதத்தை நிதி ஆணையங்கள்தான் முடிவு செய்கின்றன. திரும்பத்திரும்ப சுட்டிக்காட்டப்படுவதைப்போலவே, இந்தியாவின் முழுமையற்ற கூட்டாட்சி அமைப்பின் அதிகாரங்களை மையப்படுத்துதற்காக மேற்கொள்ளப்படும் பல நடவடிக்கைகளில், இரண்டு கவனிக்கத்தக்கவை. முதலாவது, மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டிய அவசியமில்லாத தொகுப்புகளில், மத்திய அரசின் வருவாய்களைப் பெருகச் செய்வது.

தமிழக ஆயர்கள்: உதவிக்கரம் ...

இரண்டாவதாக, மாநில அரசுகளின்மீது சிக்கனக் கட்டுப்பாடுகளை விதிப்பது, ஒழுங்குபடுத்துதல் என்ற பெயரில் மாநில அரசுகளின் கடன் வாங்கும் உரிமையைக் கட்டுப்படுத்துவது, சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கேற்ப, மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை நிர்ணயிப்பது உள்ளிட்டவற்றைத் திணிக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாக நிதி ஆணையத்தின் விதிகள் உருவாக்கப்படுகின்றன. உண்மையில் இது அரசமைப்புச் சட்டம் குறிப்பிடுவதற்கு முரணானது. ஏற்கெனவே உள்ள திட்டங்களை அப்படியேவோ, அல்லது அவற்றிற்குக் கூடுதலாகச் சிறிது நிதி ஒதுக்கிவிட்டோ, அவற்றை கொரோனா திட்டங்களாக அறிவித்திருப்பதன்மூலம், மத்திய அரசு தன் நேரடிக் கடமைகளிலிருந்து தவறுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. அறிவிக்கப்பட்டுள்ள தொகைகளும், இந்த நெருக்கடியைச் சந்திக்க பொதுவாகக் கணக்கிடப்பட்டுள்ளதைவிட மிகச் சிறியவை என்பதுடன், செயல்பாட்டில் எதுவுமே நடக்கவுமில்லை என்பது, மத்திய அரசு தன் பொறுப்பைத் தட்டிக் கழித்திருப்பதையே காட்டுகிறது.

அது மட்டுமின்றி, சுகாதாரத்திலும், பொருளாதாரத்திலும் இந்தத் தொற்று ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளைச் சரிசெய்து, மக்களின் வாழ்வையும், வாழ்வாதாரங்களையும் மீட்க வேண்டிய நெருக்கடியிலுள்ள மாநில அரசுகளுக்கு நியாயமாக வழங்கவேண்டிய நிதியையும் மத்திய அரசு தர மறுக்கிறது. ஏற்கெனவே வசூலிக்கப்பட்டுவிட்ட வரிகளில் மாநில அரசுகளுக்குச் சட்டப்படி தரவேண்டிய பங்கினைக்கூட மத்திய அரசு தாமதப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதனால் ஏற்படும் வருவாய்க் குறைவை ஈடுகட்டுவதற்காக, மாநில அரசுகளுக்கு முதல் 5 ஆண்டுகளுக்குத் தருவதாக ஒப்புக்கொண்ட ஈட்டுத் தொகையையும் மத்திய அரசு தருவதில்லை. அதற்குச் சொல்லும் காரணம் என்ன தெரியுமா? அவ்வாறு ஈடு செய்வதற்காக உருவாக்கப்பட்ட செஸ் மூலம் போதுமான நிதி திரட்ட முடியவில்லையாம். போதுமான நிதி திரட்ட முடியாவிட்டால், மத்திய அரசு கடன் வாங்கி மாநில அரசுகளுக்கான ஈட்டுத்தொகையை வழங்கிவிட்டு, அக்கடன் தீரும்வரை, இந்த செஸ்-சை நீட்டித்துக்கொள்ளும் என்றுதான் மாநிலங்கள் நம்பின.

மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய பற்றாக்குறை நிதியாக, 15ஆவது நிதி ஆணையம் 2020-21க்கான தன் இடைக்கால அறிக்கையில் அறிவித்துள்ள ரூ.74,340 கோடியில் வெறும் ரூ.6,195 கோடியை வழங்கிவிட்டு, அது, கொரோன நேரத்தில் கூடுதல் உதவியாக இருக்கும் என்று நிதியமைச்சகம் கூறியிருப்பது, நிச்சயமாக வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போலத்தான் இருக்கிறது. மாநில அரசுகளுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய பற்றாக்குறைக்கான உதவிக்கும், கொரோனா நெருக்கடிக்கும் எவ்விதத்திலும் தொடர்பில்லை.

Central Government, State Government and Local Government ...


மேலும், மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு, மாநில அரசுகள் செலுத்த வேண்டிய பங்கிற்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அத்தகைய பல திட்டங்களை முடிவுக்குக் கொண்டுவந்துவிடும். உண்மையில், அத்தகைய பங்கினைச் செலுத்த மாநில அரசுகளிடம் நிதியிருந்தால் மட்டுமே, மத்திய அரசின் பங்கினை விடுவிக்க வேண்டும் என்று பிற அமைச்சகங்களுக்கு, நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதாவது அவர்களுக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே, மாநில அரசுகளுக்கான நிதி ஒதுக்கப்படும்.

இந்த அனைத்தின் விளைவாக, மாநில அரசுகள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ளன. ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படாத, பெட்ரோலியம், மது ஆகியவற்றிலிருந்து வரும் மிகச்சிறிய வரி வருவாய் மட்டுமே, அவற்றிற்குக் கிடைத்து வருகிற நிலையில், தொற்றின் தாக்கம் உயர்ந்தால், அதை எதிர்கொண்டு தொடர்ந்து போராட மாநில அரசுகளால் முடியாமற்போகலாம்.

மிகப் பெரியதும், அருகாமை காலத்தில் அறிந்திராததுமான சுகாதாரம், பொருளாதாரம் ஆகிய இரு துறைகளின் நெருக்கடிக்கிடையே, மத்திய அரசால் உருவாக்கப்ட்டுள்ள இந்த நெருக்கடியின் விளைவு மூன்று தளங்களில் இருக்கலாம். முதலாவதாக, ஜிஎஸ்டியால் வருவாய் குறைந்ததோடல்லாமல், நெருக்கடி காலங்களைக் கருத்திற்கொண்டு எவ்வித உதவியும் செய்யப்படாததால், சில மாநிலங்கள் ஜிஎஸ்டியிலிருந்தே விலகிக்கொள்வது குறித்து பரிசீலிக்கலாம். இரண்டாவதாக, வலுவற்ற அதிகார மற்றும் நிதிப் பகிர்வும் தற்போது செயல்படாமலே போய்விட்ட நிலையில், அரசமைப்புச் சட்டம் உருவாக்கியுள்ள கூட்டமைப்பினை மறு பரிசீலனை செய்யலாம் அல்லது முறித்துக்கொள்ளலாம் என்று சில மாநிலங்களுக்கு அரும்பத் தொடங்கியுள்ள சிந்தனைகள் வலுப்பெறும். மூன்றாவதாக, கொரோனாவின் தாக்கத்தை இந்தியாவில் தாமதப்படுத்தியதன் மூலம் கிடைத்திருந்த சிறிய பலனிற்கும், மத்திய அரசின் நடவடிக்கைகள் பின்னடைவை ஏற்படுத்திவிட்டன.

– நன்றி: ஃப்ரண்ட்லைன்

Leave a Response

Top Reviews

Video Widget

gallery