கல்வி: கடைச்சரக்கா? சிந்தனைச் செறிவுக்குதவும் கருவியா?

0

கல்வி நூல் வரிசை

புத்தகம்: பள்ளிக்கல்வி

ஒரு கல்வி அதிகாரி செயல்வழிக்கற்றல் நடைமுறைப்படுத்தப்பட்ட சமயத்தில் ஒரு கிராமப்புற பள்ளிக்குச் செல்கிறார். அங்கு குழந்தைகள் ஆர்வமாக படங்களையும், வாசிப்பு அட்டைகளையும் எடுத்துப் பயன்படுத்தத் தொடங்கியதை ஆர்வமுடன் பார்க்கிறார். அப்போது லட்டு என்ற படத்தையும், லட்டு என்கிற எழுத்து வடிவ அட்டையையும் ஒரு குழந்தை வாசித்துக்கொண்டிருக்க, அவள் அருகில் அந்த அதிகாரி சென்று அந்த அட்டையைச் சுட்டிக்காட்டி இது என்ன? என்று கேட்கிறார். லட்டு என்று எழுத்துக்கூட்டி மிக அழகாக வாசிக்கிறது அந்தக் குழந்தை. சிறிது நேரம் அந்தக் குழந்தையுடன் உரையாட விரும்பிய அதிகாரி லட்டு படத்தை குழந்தையிடம் காட்டி ‘லட்டு சாப்பிட்டிருக்கியா?’ என்று கேட்கிறார். ‘இல்லை மிஸ். நான் சாப்பிட்டதே இல்லை’ என்று அந்தக் குழந்தை சொல்ல, அதிகாரிக்கும் மற்றவர்களுக்கும் ஒரே அதிர்ச்சி. குழந்தை பார்க்காத, அவர்களுக்கு அறிமுகம் இல்லாத , ஒரு விசயத்தோடு அவர்களால் எப்படி அன்பாக உறவு கொள்ள இயலும். அன்று தனக்கு ஏற்பட்ட அந்த அனுபவம், பின்னாட்களில் பாடப்புத்தகச் செயல்பாடுகளைக் குழந்தைகள் வாழ்வியலோடு தொடர்புபடுத்தும் அறிவை தனக்குக் கொண்டு வந்தது என்கிறார் அந்த அதிகாரி. இவர் வேறு யாருமல்ல தமிழ்நாடு ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முன்னாள் இணை இயக்குநரான திருமதி.லதா ஆவார்.
இவருடன் சேர்ந்து NCERT ன் முன்னாள் இயக்குநர் பேரா.கிருஷ்ணகுமார், ஆயிஷா நடராசன், கல்வியாளர் ஐயா.ச.மாடசாமி, பேரா.நா.மணி, இந்திய மாணவர் சங்கங்களைச் சேர்ந்த ஜோ.ராஜ்மோகன், கே.எஸ்.கனகராஜ், ஆசிரியர் கூட்டணியின் டி.கண்ணன்,பொதுப்பள்ளிக்கான கூட்டமைப்பின் பிரின்ஸ் கஜேந்திர பாபு, கல்வியாளர் ஜே.கிருஷ்ணமூர்த்தி, கல்வி உளவியலாளர் சியாமளா, CEO பொன்.குமார், முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, கல்வியாளர் அருணா ரத்னம் என கல்வியியல் ஆளுமைகள் 14 பேரின் பேட்டிகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த பேட்டிகள் யாவும் 2007 முதல் 2014 வரை புத்தகம் பேசுது என்ற புத்தகங்களுக்கான மாத இதழில் வெளியானவை. கல்வியியலின் பல்வேறு பரிமாணங்களைப் பற்றிப் பேசும் இந்த நேர்காணல்கள் ஆழமும் விரிவும் கொண்டவை. இந்த நேர்காணல்கள் யாவும் மூத்த கல்வியாளர்கள் முதல் இளைய மாணவர் சங்கப் பிரதிநிதிகள் வரை முதுமையின் அனுபவ மொழியாகவும், இளமையின் துடிப்பும் நிறைந்த சரிவிகித கலவையாக உள்ளன.
நூலின் முதல் நேர்காணல் பத்தாண்டுகளுக்கு முன் வெளியான பேரா.கிருஷ்ணகுமார் அவர்களுடையது. இந்நேர்காணலின் தலைப்பே “கல்வி கடைச்சரக்கானால் சண்டையும் அமைதியின்மையுமே மிஞ்சும்” என்பதாகும். இதில் பல விஷயங்கள் பற்றிப் பேசுபவர் கல்வியின் இலக்கு பற்றிக் கூறும்போது “நவீன முற்போக்கு கல்வியியலின் பார்வையில் குழந்தைகளிடம் சுய சிந்தனை வளர விடுவதே கல்வியியலின் இலக்கு ஆகும். பேசுவதில் மன உறுதி, கவனத்தோடு மற்றவர்கள் கூறுவதைக் கேட்டு உள்வாங்குதல், சுயமாக சிந்தித்து முடிவெடுத்தல், ஆசிரியரும் மாணவரும் இணைந்து உரையாடுதல் இதுவே நவீன முற்போக்கு கல்வியின் இலட்சியம். ஆசிரியர்கள் உரை நிகழ்த்துவதால் மட்டுமே இந்த இலட்சியத்தை, இலக்கை அடைந்துவிட முடியாது. ஆகவேதான், நவீன கல்வி சிந்தனையில் கற்பித்தலுக்கும் உரை நிகழ்த்துவதற்கும் இடையில் வேறுபாட்டைக் கற்பிக்கிறோம். எல்லாவற்றையும் கூறுவது மட்டுமே கல்வியாகாது. குழந்தையோடு சேர்ந்து செயலில் ஈடுபட்டு அறிவு மற்றும் தன்னுணர்தல் முதலியவற்றை குழந்தைத் தானாகத் தன் முனைப்பாகப் பெறுவதும்தான் நவீன கல்வியின் போக்கு. குழந்தைகளை ஊக்குவித்தல், சரியான திசையைக் காட்டுதல், தேர்வான கல்விப் பொருட்களை இனம் காட்டுதல், தேடித்தருதல், சரியான ஆதார நூல்களை தேடிப்பெறுவதற்கு வழிகாட்டுதல், இடையிடையே சரியான திசையில்தான் செல்கிறோமா என நம்மைநாமே வலியுறுத்திக் கொள்ள உதவுவது ஆகியவையே ஆசிரியரின் பங்கு” என்று கல்வியின் லட்சியத்தை அழகுடன் நினைவுபடுத்துகிறார் பேரா.கிருஷ்ணகுமார். மேலும் தொடர்ந்து படித்து அறிவினை உயிர்த்துடிப்போடு வைத்துள்ள ஆசிரியரே குழந்தைகளை ஆகர்ஷிக்க முடியும். அத்தகைய ஆசிரியர்களாலேயே சாதிக்க முடியும் என்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வாசிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.

ஆசிரியரை ஆசிரிய மாணவராகவும், மாணவரை மாணவ ஆசிரியராகவும் உணர வைக்கும் வகுப்பறையே ஜனநாயக வகுப்பறை என்று தன் நேர்காணலில் பதிவு செய்யும் ஆயிஷா நடராசன் அவர்கள் தனது யாருடைய வகுப்பறை நூலின் அடிப்படையிலான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
கல்வி தொடர்பான பல நூல்களை எழுதியுள்ள பேரா.ச.மாடசாமி அவர்கள் இந்த நேர்காணலில் தனது வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த நேர்காணலில் தனது கல்லூரிப்பணி, தொழிற்சங்கப் பணி, அறிவொளி இயக்கப்பணி என ஐயா அவர்கள் விளக்கும்போது இந்நேர்காணல் ஐயா அவர்களின் குறு சுயசரிதை போலுள்ளது.

பேரா.நா.மணி அவர்களின் நேர்காணல் “ பள்ளிக்கூடத் தேர்தல்” என்னும் அவரின் நூலையும், அதற்கான கள ஆய்வுகளையும் உள்ளடக்கியது. இதில் ஆசிரியர்களை மதிப்பீடு செய்ய சிறந்த நடுவர்கள் மாணவர்களே என்று நிறுவுகிறார்.

இந்திய மாணவர் சங்கத்தின் ஜோ.ராஜ்மோகன் அவர்களின் நேர்காணலானது கல்வி வணிகமாகிவரும் அவலத்தையும் , அரசுப்பள்ளிகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் , முழுமையான சமச்சீர் கல்விக்கான போராட்டத்தை வலுப்படுத்த வேண்டியதைப்பற்றிப் பேசுகிறது. இவர் குறிப்பிடும் பேரா.அமர்த்தியா சென்னின் மேற்கோளான, “அரசுப்பள்ளியில் எவ்வளவு குறைகள் இருப்பினும் அரசுப்பள்ளிகளுக்கு மாற்றாக வேறு பள்ளிகளைப் பொருத்திப் பார்க்க முடியாது” என்பது உணர்வுப்பூர்வமானது.

தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக்கொள்ளைகளைக் தடுத்து, அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வழிமுறைகளையும், தீர்வுகளையும் பற்றிப்பேசுகிறது ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் டி.கண்ணன் அவர்களின் நேர்காணல்.

அரசுப் பள்ளிகளை வலுப்படுத்துவது, பள்ளிக்கல்வியில் வணிகமயத்தைக் கட்டுப்படுத்துவது, எதிர்காலத்தில் பள்ளிக்கல்வி முழுவதும் அரசின் பொறுப்பில் அமையப் பெறுதல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவின் நேர்காணல்.

பள்ளிகளில் குறிப்பாக 7,8,9 ஆம் வகுப்பு மாணவிகள் தேவையான கழிப்பறை வசதி இல்லாததால் சந்திக்கும் உளவியல் சிக்கலைப் பற்றிப் பேசும் கல்வி உளவியல் ஆலோசகர் ப.சியாமளா அவர்களின் குறு பேட்டி மிகவும் முக்கியமானது.

“கல்வி என்பது நடுநிலையாக இருக்க முடியாது. அது வர்க்கம் சார்ந்துதான் இருக்க முடியும்… இருக்கும். கல்விப் பரிமாற்றத்தில் நீங்கள் எந்தப் பக்கம்? எல்லாவற்றையும் இழந்து தொலைந்துபோன வாழ்க்கையைத் தங்கள் உழைப்பால் தேடித்திரியும் மக்கள் பக்கமா? அல்லது பலர் வாழ்க்கையைத் தொலைக்கக் காரணமான சுரண்டுபவர்கள் பக்கமா?” என்ற பாவ்லோ பிரையரின் கருத்துக்களை தனது நேர்காணலில் மேற்கோள் காட்டுகிறார் கல்வியாளர் ஜே.கிருஷ்ணமூர்த்தி. எப்போதும் கல்வி என்பது வர்க்கம் சார்ந்துதான் இருக்க முடியும். ஆள்பவர்கள் நலன் சார்ந்தே கல்வி காலகாலமாக இருந்துள்ளது என்கிறார். மேலும் நமது வகுப்பறைகளின் அனைத்து மட்டங்களிலும் மாணவர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தி ஜனநாயக வகுப்பறைகளாக மாற வேண்டும் என்கிறார்.

வாசிப்புப் பழக்கம் எனக்கு தன்னம்பிக்கையும் வாழக்கற்றத் தருகிறது என வாசிப்பின் பெருமை சொல்லும் CEO பொன்.குமார் அவர்களின் நேர்காணல் வாசிக்க நேரம் இன்மை என்பது தவறான கருத்து, கிடைக்கும் நேரத்தில் படிக்க வேண்டும் என்கிறது.

“Teacher should be felicitator” . மாணவர்கள் கற்றுக்கொள்ளக் கூடிய விஷயங்களை கற்றுக்கொள்ள உதவுபவரே ஆசிரியர் எனச் சொல்கிறார் முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு.

தாய்மொழிக் கல்வியின் அவசியம், அரசுப்பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவம், வகுப்பறை வன்முறை, பாலியல் கல்வியின் அவசியம், சமச்சீர் கல்வி , பெண்கல்வி , கல்வி வணிகம் என பலவற்றைப் பற்றிய தெளிவான புரிதலுடன் கூடிய நேர்காணலாக உள்ளது இந்திய மாணவர் சங்கத்தின் கே.எஸ். கனகராஜ் அவர்களுடையது.

கடைசி நேர்காணல் கல்வியாளர் அருணா ரத்னம் அவர்களுடையது. ஆசிரியர்கள் மொழியை வெளிப்படுத்துவதிலும், குழந்தையின் புரிதலுக்கும் இடையே ஒரு இடைவெளி இருந்து கொண்டே இருக்கும். வர்க்கமும் ஜாதியும் எப்போதும் பிரச்சினையாக குழந்தைகளிடம் வந்து கொண்டே இருக்கும் என்னும் கருத்து முக்கியமானது.

இந்நூலிலுள்ள 14 நேர்காணல்களும் நிச்சயம் கற்றல் கற்பித்தலில் நமது புரிதலை மேம்படுத்தும்.
வாசித்துப் பாருங்கள்!
நன்றி!

புத்தகம்: பள்ளிக் கல்வி (புத்தகம் பேசுது நேர்காணல்கள் தொகுப்பு நூல்)
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை:70/-

 

  புத்தகத்தை இங்கு வாங்கலாம்

 

இவண்:
இராமமூர்த்தி நாகராஜன்.

Share.

About Author

Leave A Reply