இது எங்கள் வகுப்பறை!

0


அது ஒரு ஆங்கில வழிக் கல்விதரும் பள்ளி. அந்தப் பள்ளியில் எல்லோரும் ஆங்கிலத்திலேயே பேச வேண்டும். இந்த சூழலில் ஜானு என்றொரு குட்டிப் பாப்பா முதல்நாள் பள்ளிக்கு வரவில்லை. அடுத்தநாள் பயந்து கொண்டே பள்ளிக்குச் செல்கிறாள். அவளது ஆசிரியை, “Why you did not come to school yesterday?” என இங்கிலீஷ்ல கேட்டாங்களாம். ஏற்கனவே பயந்து போன ஜானு பாப்பா, “Miss, I come to tomorrow my sister marriage” என தப்புத் தப்பான ஆங்கிலத்தில் பதில் சொல்ல, அவளது miss அடித்து விடுகிறார். வருத்தமுடன் ஜானு பாப்பா வீட்டுக்குச் செல்கிறாள். அங்கு அவளது அம்மா அவளை எவ்வளவோ வற்புறுத்தியும் பதில் சொல்லாமல் உறங்கி விடுகிறாள். உறக்கத்தில் ஜானு பாப்பாவின் கனவில் ஒரு தேவதை வந்து “ஏன் பாப்பா அழுதுகிட்டிருக்க?” என கேட்டதாம். அதற்கு ஜானு பாப்பா தேவதையிடம், “நான் தப்பா இஙகிலீஷ் பேசினதால டீச்சர் அடிச்சாங்க” என சொல்கிறாள். உடனே தேவதை ஜானுவிடம் உனக்கு ஒரு கதை சொல்கிறேன், கவனமாக கேளு. அப்புறம் உனக்கு இங்கிலீஷ் பேசுறது ஈசியா ஆகிடும் என அவளை மடியில் போட்டுக்கொண்டு கதை சொல்ல ஆரம்பித்ததாம்.
“ஒரு ஊருல TENSE அப்படின்னு ஒரு அம்மா இருந்தாங்களாம். அவங்களுக்கு மூணு பெண் குழந்தைகளாம். முதல் குழந்தை பேரு Past tense. இரண்டாவது குழந்தை பேரு Present tense. மூன்றாவது குழந்தை பேரு Future tense. அந்த மூனு பேரும் சூப்பரா கதை சொல்வாங்களாம். Past tense நடந்து முடிஞ்ச கதையை மட்டும்தான் சொல்வாளாம். இரண்டாவது பெண் Present tense நடந்துகிட்டிருக்கிற விஷயத்தை மட்டும்தான் சொல்வாளாம். மூன்றாவது பெண் Future tense நடக்கப் போறதை மட்டும்தான் சொல்வாளாம். மூணு பேரும் வளர்ந்து பெரியவங்களானதும் அம்மா tense முதல் பெண் past tenseக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்களாம். அவளுக்கு ஒரே டெலிவரில நாலு குழந்தை பொறந்துச்சாம். அந்த குழந்தைகளுக்கு simple past, past continuous , past perfect, past perfect continuous அப்படினு.பேர் வச்சாங்களாம். அதேபோல Present tense க்கும் கல்யாணம் செய்தாங்களாம். அவளுக்கும் ஒரே டெலிவரில நாலு குழந்தைங்க பொறந்தாங்களாம்.. அவங்களுக்கு Simple present, present continuous, present perfect, present perfect continuous அப்படினு பேர் வச்சாங்களாம் என கதை நீண்டு Future tense க்கும் திருமணமாகி simple future, Future continuous, future perfect, Future perfect continuous என நான்கு குழந்தைகள் பிறப்பதாக தேவதை ஜானு பாப்பாவிடம் கதை சொல்லி முடிக்கிறது”

இப்போது மனதைத் தொட்டு சொல்லுங்கள், உண்மையில் tense என்பதை இதைவிட எளிமையாக கதை மூலம் யாரால் சொல்லிப் புரிய வைக்க முடியும். இந்தக் கதை திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சன்னதி உதவிபெறும் நடுநிலைப்பள்ளியின் ஐந்தாம் வகுப்பு ஆசிரியை சகோதரி திருமதி.வே.சசிகலா உதயகுமார் எழுதியுள்ள “இது எங்கள் வகுப்பறை” என்னும் நூலில் உள்ளது.

இதைப்போல தனது பல வகுப்பறை நிகழ்வுகளை என் வகுப்பறை என்ற முகநூல் பக்கத்தில் தொடராக பதிவு செய்து வந்துள்ளார் சகோதரி சசிகலா. இதைக் கண்ணுற்ற பேரா.ச.மாடசாமி ஐயா, இப்பதிவுகளைத் தொகுத்து புத்தகமாகக் கொண்டுவர ஊக்கமும், உற்சாகமும் தந்துள்ளார். இந்நூல் ஐயா ச.மா அவர்களின் முன்னுரையுடனேயே வெளிவந்துள்ளது. தான் படித்த சன்னதி பள்ளியிலேயே ஆசிரியையாகும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் நூலாசிரியை சசிகலா அவர்கள். தான் படித்த காலத்தில் ஒவ்வொரு வகுப்பிலும் 5, 6 பிரிவுகள் இருந்த நிலை மாறி தற்போது ஒட்டுமொத்த பள்ளியிலும் மொத்தம் 90 மாணவர்கள் என்று பள்ளி சுருங்கிப் போயிருப்பதைக் கண்டு மனம் வருந்துகிறார். “ சமூக உணர்வு நிரம்பியவர்களுக்கு இந்தச் சூழல் ஒரு சவால்! வேறு சிலருக்கு – வெறும் அனுதாபம்; இன்னும் சிலருக்கு – நமக்கென்ன மனோபாவம்” என்று பேரா.ச.மா சொல்வதற்கிணங்க, சமூக உணர்வுமிக்க சகோதரி சசிகலா இச்சூழலை மாற்றுவதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்கிறார். உலகின் மிகச்சிறந்த சொல் செயல் என்பார்கள். நூலாசிரியையும் தனது உயர்ந்த எண்ணங்களை செயலாக மாற்றுகிறார். மனதில் ஏற்படும் மாற்றம், அதன் மூலம் உருவாகும் உறுதிப்பாடு, இவை எல்லாமே செயல் வடிவம் பெறும் போதுதான் முழுமை பெறும். அந்தச் செயல் வடிவத்தை நோக்கிய பயணம்தான் மிக முக்கியமான ஒன்று என குறிப்பிடுகிறார். செயல்வடிவத்திலும் தனித்தன்மையுடன் செயல்படும் நூலாசிரியை “ எனக்கான தனித்துவத்தை என் அனைத்து செயல்களிலும் செயல்படுத்த விரும்புவது என் இயல்பு” என்கிறார் தன்னம்பிக்கை வார்த்தைகளுடன்.

“ கற்றல் என்பது திணிப்பதல்ல… மலர்வது …. என்பதை ஓர் ஆசிரியர் உணரும் இடம்தான் குழந்தை மையக் கல்வியின் ஆதார சுருதியாகும்” என்று ஓரிடத்தில் குறிப்பிடும் நூலாசிரியை தனது வகுப்பறை சார்ந்த செயல்பாடுகளுக்கு அடிப்படையாக மதுரையில் நடைபெற்ற கலகலவகுப்பறை பயிற்சி முகாம் இருந்ததாக நேர்மையுடன் பதிவு செய்துள்ளார்.

உலகலாவிய அளவில் கல்வியில் மிகவும் முக்கியமான புத்தகங்கள் பகல் கனவும், டோட்டோசான்- ஜன்னலில் ஒரு சிறுமியும். இந்த இரண்டிலும் வரும் ஆசிரியர்களான முறையே லக்ஷ்மிராமும், கோபயாட்சியும் குழந்தைகளின் மனங்கவர்ந்த ஆசிரியர்கள். இந்த “இது எங்கள் வகுப்பறை” புத்தகத்தைப் படித்துவிட்டு சிறிது யோசித்தால் ஆசிரியை வே.சசிகலா உதயகுமாரும் இவர்களுக்கு வெகு அருகில் இருப்பதாக உணர்கிறேன். அன்றாட வகுப்பறைச் சம்பவங்களின் தொகுப்பாக இந்நூல் இருந்தாலும் இந்த 183 பக்கங்களைப் படித்து முடிக்கும் வரை ஓரிடத்தில் கூட சலிப்பு ஏற்படவில்லை.

தான் ஏன் கற்றல் கற்பித்தலில் புதுமையை கைக்கொண்டேன் என்று கூற வருகையில், “உண்ணும் உணவு, உடுத்தும் உடை, ஏன்… வைத்திருக்கும் அலைபேசி என அனைத்திலும் புதிது புதிதான வடிவங்களிலும் வண்ணங்களிலும் சுவைகளிலும் எதிர்பார்க்கும் நாம்… கற்பித்தலில் மட்டும் ஒரே தொனி, அதே வார்த்தைகள் என எந்தவித மாற்றமும் இல்லாமல் பலகாலமாக அப்படியே இருப்பது என்பது எந்த விதத்தில் நியாயம்? இந்த முறையைத்தான் மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்ப்பதென்பது, குழந்தைகளின் மேல் செலுத்தும் உச்சபட்ச வன்முறையல்லவா?. குழந்தைகளின் உலகம் அலாதியானது. கற்றல் அவர்களிடையே இயல்பாய் நடைபெற வேண்டிய செயல் என்கிற முடிவுக்கு வந்தேன்” என்று சுயபரிசோதனை செய்து தனக்கான இடத்தை அடையாளம் காண்கிறார்.
“ வகுப்பறையின் சூழலை மாற்றி வடிவமைப்பது, அதற்கேற்ப மாணவர்களின் மனநிலையைத் தயார் செய்வது, சிறுசிறு விளையாட்டுகள், எளிமையான பயிற்சிகள் என்று ஆரம்பித்து ஒரு முழு அட்டவணையைத் தயார் செய்தேன். கொஞ்சம் கொஞ்சமாக அந்த சூழலுக்குள் என்னை உட்புகுத்திக் கொள்ள, மொட்டாயிருந்து மலர ஆரம்பிக்கும் மலரைப்போல மெல்ல மெல்ல சுய மாற்றம் என்னும் முதல் நிகழ்வு ஆரம்பித்தது” என தனது மாணவர் மைய வகுப்பறைச் செயல்பாடுகளின் துவக்கம் பற்றியும் தனது ஆயத்தம் பற்றியும் நூலாசிரியை குறிப்பிடுகிறார்.

பிறகு வகுப்பறைச் செயல்பாடுகள் குழந்தையை மையமாக வைத்து நடைபெறுகிறது. இவை விளையாட்டு, கதை, செயல்முறைப் பயிற்சி, பாடல், நடனம் என பல வடிவங்களில் தொடர்கிறது. வகுப்பறையின் இறுக்கம் தளர்ந்து மெல்ல மெல்ல கலகலப்பு ஆட்கொள்ளத் தொடங்கியிருப்பதையும் வகுப்பறையின் நிறம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கி இருப்பதையும் உணர்கிறார் ஆசிரியை சசிகலா.
வீட்டுப்பாடம் என்பது எளிதாக கதை சொல்லல் நிகழ்வாகவும், ஐந்திணைகள் அழகிய ஓவியமாகவும் உருப்பெறுகின்றன. விடுகதை மூலமும், கதை கட்டுதல் மூலம் கற்பது என்பது எளிதாகவும் மகிழ்ச்சியாகவும் மாறுகிறது. பிழை செய்வது மனித இயல்பு, ஆனால் பிழைகள் களையப்படாவிட்டால் கல்மேல் எழுத்தாக (Fossilized Error) மனதில் ஆழப்பதிந்து திருத்த கடினமானவையாக மாறிவிடும் என்னும் ஆசிரியை சசிகலா, மாணவர் வாசிப்பதில் செய்யும் தவறுகளை சரிசெய்ய “நா” நெகிழ் பயிற்சி தருகிறார். மேலும் விளையாட்டை விரும்பும் மாணவர்களுக்காக வகுப்பறையையே கிரவுண்டாக மாற்றுகிறார். செயல்பாடுகள் மூலம் விளையாட்டாய் verb சொல்லிக் கொடுக்கிறார். சொல்மாலை கட்டுதல் என்னும் செயல்பாட்டின் மூலம் மாணவர்களின் சொல்திறன் வளர்க்கப்படுகிறது. கற்றலின் விளைவு – சமூகத்திலும் வாழ்க்கையிலும் பிரதிபலித்தலே ஆகும் என்பதை நினைவு கூறும் ஆசிரியை, கதை, விளையாட்டு, ஆடல், பாடல், எனச் செயல்பாடுகள் சென்று கொண்டிருந்தாலும் அவற்றின் வழி கற்றல் நிகழ்ந்து கொண்டிருப்பது மனதிற்கு திருப்தியானதாகவே இருந்தது என்கிறார்.

பள்ளியில் நடத்தப்படும் கதைத்திருவிழா, முட்டை ஓட்டைக் கொண்டு உருவாக்கப்படும் கோமாளி, விளையாட்டுகளை அறிதல், பல் லாங்குழி பெயர்க்காரணம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செயல்பாடு என விதவிதமான செயல்பாட்டின் மூலம் மற்ற பள்ளி மாணவ, மாணவிகளையும் தம் பள்ளி நோக்கி திருப்புவதில் வெற்றியடைந்துள்ளார். வாசிப்பை மாணவர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் எனவும், புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தை மாணவர்களிடம் உருவாக்கினால் மட்டுமே சரளமான வாசிப்பும், பிழையின்றி எழுதுதலும் சாத்தியம் என்பதை உணர்ந்து வகுப்பறை நூலகத்தை உடைந்த பெஞ்ச் பலகைகளைக் கொண்டு அமைத்து செயல்படுத்தி வெற்றி பெறுகிறார். மேலும் ஊஞ்சல் போன்ற சிறுவர் இதழ்களையும் மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வாசித்தல் திறனையும், கற்பனை செய்யும் திறனையும் வளர்க்கிறார்.

இவ்வாறு ஒவ்வொரு நாளும் புதுப்பது செயல்பாடுகள் என ஏராளமான தகவல்கள் சிறுசிறு தலைப்புகளில் கொட்டிக் கிடக்கின்றன. இதில் முக்கியமான ஒன்று “ விதை முதல் விருட்சம்” என்பது. இதில் ஒவ்வொரு மாணவனும் ஒரு குறிப்பேட்டைத் தனியே ஒதுக்கி மேலுள்ள தலைப்பை குறித்துக் கொள்ள பணிக்கப்பட்டனர். விவசாயத்தின் படி நிலைகளான மண்ணைத் தயார் செய்தல், விதைத்தல், நீர் பாய்ச்சுதல், உரமிடுதல், களை நீக்குதல், அறுவடை செய்தல் போன்றவற்றை உற்றுநோக்கி மாணவர்கள் தங்களின் குறிப்பேட்டில் பதிவு செய்தனர். இதற்காகவே இயற்கை உரம் தயாரிப்பு முறைகள் பற்றி விளக்க அத்துறையின் வல்லுநர் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டிருப்பது மிகச் சிறப்பு. இந்த இயற்கை உரங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பள்ளித்தோட்டம் பற்றிய குறிப்புகளைப் படிக்கும் போது உண்மையில் மனதுக்கு மிக நெகிழ்வாக இருக்கிறது. நாளைய நாட்டின் மன்னர்களான மாணவர்களுக்கு இயற்கையைப் புரிய வைக்கும் இச்செயல்பாடு மிகச் சிறப்பானது. ஏனெனில் இது ஒரு தொடர்ச்சியான செயல்பாடு. கண்காணிப்பிலும், நீர பாய்ச்சுதலிலும் தொடர்ச்சியின்றிப் போனால் விரும்பிய மாற்றத்தை நம்மால் அடைய முடியாது. விதை முதல் விருட்சம் வரை தொடர்ச்சியாக மாணவர்களின் உற்று நோக்கல் என்பது மிகச்சிறந்த கற்றல்பயனை அளிக்கும்.

இவ்வாறு பலப்பல செயல்பாடுகள் மூலம் குழந்தை மைய வகுப்பறையை வெற்றிகரமாக கட்டி எழுப்பிய ஆசிரியை சசிகலா அவர்களின் அனுபவப் பகிர்வே இந்நூல். எங்கேயோ ஜப்பானில் கோபயாட்சியையும், குஜராத்தில் லக்ஷ்மிராமையும் டோட்டோசான் மற்றும் பகல்கனவு நூல்களின் வழியே கண்டு மயங்கிக் கிடந்த என்னை, தனது வகுப்பறைச் செயல்பாடுகளை “இது எங்கள் வகுப்பறை” என்னும் நூல் தொகுப்பின் வழியாக அறிமுகப்படுத்தும்போது நம் அருகிலும் ஒருவர் உள்ளதைக் கண்டு என் மனம் மகிழ்வுறுகிறது. ஒரு உளவியல் நிகழ்வாக உள்ளாடை அணிந்து பள்ளிக்கு வராத ஒன்றாம் வகுப்பு மாணவியை, உள்ளாடை அணிந்த பொம்மையின் மூலம் எளிதாக புரியவைத்து அச்சிறுமியை உள்ளாடை அணிய பழக்குவது அருமை. சிறுசிறு தலைப்புகளின் கீழ் ஏராளமான செயல்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் சிலவற்றை மட்டுமே இப்பதிவில் தந்துள்ளேன். நிறைய செயல்பாடுகளை இந்நூலிலிருந்து பெற்று நாம் நமது வகுப்பறைகளில் செயல்படுத்திப் பார்க்கலாம். உதாரணமாக tense என்பதை விளக்கும் இப்பதிவின் ஆரம்பத்தில் உள்ள கதையை நான் இதற்கு முன் கேட்டதே இல்லை . Tense என்ற பெரிய கடலை, சங்கில் வைத்து குழந்தைக்குப் புகட்டுவதுபோல மிக எளிதாக சொல்லப்பட்டுள்ள இந்தக் கதையை வகுப்பில் குழந்தைகளிடம் சொல்லும்போது பசுமரத்தாணிபோல அவர்கள் மனதில் பதியும் என்பதை யாராலும் மறுக்க முடியுமா?
மிக எளிய நடை… சொல்லப்பட்டுள்ள விஷயங்களும் மிக எளிமையானவை.
ஆனால் நாம் பல நேரங்களில் கவனிக்க மறந்த விஷயங்கள். இதனை இந்நூல் நினைவுபடுத்துகிறது. நம்மை இடற வைப்பது பெரிய பாறைக்கற்களல்ல, சிறு கற்களே… படித்துப் பாருங்கள்…. பிடித்துப் போகும்….
நன்றி!
புத்தகம்: இது எங்கள் வகுப்பறை
ஆசிரியர்: வே.சசிகலா உதயகுமார்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்

 

இவண்:
இராமமூர்த்தி நாகராஜன்

Source:  Ramamurthy Nagarajan’s Facebook

புத்தகத்தை இங்கு வாங்கலாம்

 

 

Share.

About Author

Leave A Reply