புதியன விரும்பு

0

நூல் மதிப்புரை

-மாலன்

இப்போதெல்லாம் வீடுகளில் , குறிப்பாக நடுத்தர வர்க்கத்துக் குடும்பங்களில், அதிகம் விவாதிக்கப்படுவது அரசியல் அல்ல. அன்றாடச் செய்திகள் அல்ல.வாரப் பத்திரிகைகளில் வெளியாகும் தொடர்கதைகளோ, தொலைக்காட்சித் தொடர்களோ அல்ல. ஏன் சினிமாக்கள் கூட அதிகம் இல்லை எனச் சொல்லி விடலாம். அவர்கள் பின் எதைப் பற்றித்தான் பேசுகிறார்கள்?
இப்போதெல்லாம் +2 தேர்வுகள் முடிவுகள் வெளியாகும் போது 95% சதவீதம் மதிப்பெண் பெறும் மாணவர்கள் கூட மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பதில்லை. நிறையப் பேர் நல்ல மதிப்பெண் பெற்றிருக்கிறார்களே, கட் ஆப் எப்படி உயரும், நம் எதிர்காலம் என்னாகும் என்ற கவலையைச் சுமந்து கொண்டுதான் உலவுகிறார்கள்
இப்போதெல்லாம் பொறியியல் கலந்தாய்வுக்கு இரண்டாம் வாரம் அழைக்கப்படும் மாணவர் கூட சற்றே துவண்டுதான் நடக்கிறான். அவன் மனம் நமக்கு நல்ல கல்லூரி கிடைக்க வேண்டுமே என்று சதா பிரார்த்தித்துக் கொண்டு இருக்கிறது
மாணவர்கள் நிலை இதுவென்றால் பெற்றோர்கள் பாடு பரிதாபம். அவர்கள் மாணவர்களை விட அதிகம் பதற்றமடைகிறார்கள். அவர்கள் பள்ளி இறுதித் தேர்வுகள் எழுதிய நாள்களில் கூட இவ்வளவு படபடப்பு அடைந்திருக்க மாட்டார்கள்.
ஏன் இதெல்லாம்?
அண்மையில் தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம். பொறியியல் படிப்பு வேண்டாம், ஃபாஷன் டிசைனிங் படிக்கிறேன் என்கிறான் மகன். டெய்லர் வேலை செய்ய ஆசைப்படுகிறவனுக்கு வீட்டில் இடம் இல்லை என்கிறார் அப்பா. பையன் வீட்டை விட்டு ஓடிப் போகிறான்
மிகைதான். ஆனால் பொய் அல்ல. அதில் யதார்த்தமும் இருக்கிறது
இவை எல்லாவற்றிற்கும் காரணம் பெற்றோருக்கும் பல மாணவர்களுக்கும் (என்னை வைதாலும் பரவாயில்லை, ஆசிரியர்களுக்கும்தான்) பொறியியல் மருத்துவம் இவை தவிர ஒளிமயமான எதிர்காலத்திற்குப் பாதைகளே இல்லை என்ற எண்ணம்தான். இதற்குக் காரணம் தகவல் பற்றாக்குறை
இதைப் போக்க திரு பொன். தனசேகரன் எடுத்துள்ள பெரு முயற்சி இந்த நூல். எழுதுவதற்கு அவருக்குப் பெரும் முயற்சி தேவை இல்லை. முப்பது வருடத்திற்கும் மேலாக எழுதி எழுதித் தேர்ந்த கை அவருடையது. அதிலும் கல்வி விஷயத்தில் அவர் வல்லுநர். தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட தகவல்களைச் சொல்லுவார். முயற்சி தகவல் திரட்டுவதுதான்.திரட்டிய தகவலைச் சரி பார்த்து அப்டேட் செய்வதற்குத்தான்.
ஒரு தகப்பனின் அக்கறையோடு தகவல்கள் சேகரித்து, சரி பார்த்து உறுதி செய்து கொண்டு, எல்லாவற்றையும் எளிய நடையில் எழுதி, ஒரு இடத்தில் தொகுத்திருக்கிறார். இதனால் விரல் நுனியில் பல அரிய தகவல்கள் கிடைக்கின்றன
உதாரணமாக?
உலகப் புகழ் பெற்ற இந்திய அறிவியல் கழகத்தில் இள நிலை அறிவியல் பட்டப் படிப்பு படிக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
இந்திய விண்வெளி அறிவியல் தொழில் நுட்பக் கல்விக் கழகம் எங்கிருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
சிங்கப்பூரில் பட்டப்படிப்பு படிக்க முடியுமா?
இது போன்ற தகவல்களைத் தருவதோடு நின்று விடவில்லை. ஸ்காலர்ஷிப்களைப் பெற எப்படி விண்ணப்பிப்பது என்ற விவரங்களையும் அளிக்கிறார்/ அது மட்டுமா? சாதி சான்றிதழ் எப்படிப் பெறுவதிலிருந்து நீட் தேர்வுக்கு என்ன மாதிரி உடை அணிந்து போவது என்பது வரை சிறு சிறு ஆனால் முக்கியமான குறிப்புகளும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.
தரமான தயாரிப்பில், அதிகம் விலையில்லாமல் கிடைக்கும் இந்த நூல் மாணவர் உள்ள வீடுகளில் அவசியம் இருக்க வேண்டும். மாணவர்கள் மீது அக்கறை உள்ள ஆசிரியர்களிடம் இருக்க வேண்டும். கல்வி மூலம் எதிர்காலத்திற்கு வழிகாட்ட விரும்பும் கல்வி நிலையங்களில் இருக்க வேண்டும். நீங்கள் பதினொன்றாம், பனிரெண்டாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பினால் இதை மறந்து விடாதீர்கள்.அவர்களுக்கு இதை விடச் சிறந்த பரிசு வேறெதுவும் இல்லை. இந்த நூலினால் அவர்கள் ஒரு புதிய பாதையில் நடந்து ஒளி பொருந்திய வாழ்க்கையை அடைவார்களானால் அவர்கள் ஆயுசுக்கும் உங்களை வாழ்த்திக் கொண்டே இருப்பார்கள்!

புத்தகத்தை இங்கு வாங்கலாம்

 

 

Originally published in Puthagam Pesuthu (Jan 2018)

Share.

About Author

Leave A Reply