‘ரஷ்யப் புரட்சிக்குப் பின்தான் உலகு வருமானவரியை ஏற்றுக் கொண்டது’ – தாமஸ் பிக்கட்டி நேர்காணல்

0

தாமஸ் பிக்கட்டி, இன்று பொருளியல் அரங்கில் நடைபெறும் விவாதங்களைக் கூர்ந்து கவனித்து வரும் அனைவரும் அறிந்த பெயர். இதுவரை கவனிக்காதோரும் இனித் தெரிந்து கவனத்தில் கொள்ள வேண்டிய பெயர். சமீபத்தில் கிரேக்கத்தின் பொருளாதாரப் பிரச்சனைகள் குறித்த விவாதங்கள் முன்னெழுந்தபோது ஒரு தேசத்தின் அதிபருக்கு அளிப்பது போல ஐரோப்பிய ஊடகங்களால் முக்கியத்துவம் அளிக்கப்பட்டவர். இத்தனை சிறப்பும் அவருக்கு அவரது ஒரு நூலால் வந்தவை. 20 ஆம் நூற்றாண்டில் முதலாளித்துவம் (Capital in 21 st Century) எனும் அவரது நூல் மேலை உலகின் பல்கலைக் கழக வளாகங்களையும், நிதி நிறுவனங்களின் உயர் நிர்வாகக் குழுக் கூட்டங்களையும், அரசு நிறுவனங்களையும் ஒரு சூறாவளியாய்த் தாக்கியுள்ளது. நம் சமகால உலகின் ஏற்றத்தாழ்வுகளை மறுக்கவியலா தரவுகளோடும் அது ஏற்படுத்தும் அரசியல் சமூகப் பிரச்சனைகள் குறித்தும் பேசும் நூல் அது.

லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ், பாரிஸ் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் ஆகிய பொருளாதார நிறுவனங்களில் பேராசிரியராகப் பணி புரியும் தாமஸ் பிக்கட்டி, பொட்டாம்கின் ரிவியூ (Potomkin Review) எனும் இடதுசாரி இணைய இதழின் ஆசிரியர்கள் அண்டோனி டால்சிரோக்கா, கோகன் தெரிசியோக்லு ஆகியோருக்கு அளித்த நேர்காணலின் சுருக்கமான வடிவம் இங்குள்ளது. பிக்கட்டியின் நூல் விரைவில் தமிழில் பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாக வரவிருக்கிறது.

பேராசிரியர்.பிக்கட்டி அவர்களே எங்களைச் சந்திக்க ஒப்புக்கொண்டதற்கு நன்றி. பல திறனாய்வாளர்கள் உங்கள் நூலை செவ்வியல் பொருளியல் (Classical Economics) பாரம்பரிய வரிசையில் வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். வர்க்கம், மூலதனம், உழைப்பு ஆகிய அம்சங்களை உயிர்ப்பித்து பெரும் பொருளியல் கேள்விகளுக்கு விடை காண முயற்சித்ததன் காரணமாய் மார்க்ஸ் மற்றும் பிறர் உள்ளடக்கிய பாரம்பரியத்தில் உங்களையும் சேர்த்துள்ளனர். இந்த செவ்வியல் பொருளியல் பாரம்பரியத்தின் பகுதியாக உங்களைப் பார்க்கிறீர்களா?
விநியோகத்தை மீண்டும் பொருளாதார ஆய்வின் மையமாக வைக்க நான் முயற்சி செய்கிறேன். விநியோகம் பற்றிய பிரச்சனை நீண்டகாலமாக ஒதுக்கப்பட்டுவிட்டதாக நான் கருதுகிறேன். அந்த அடிப்படையில் நான் செவ்வியல் பாரம்பரிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறேன். இது தவிர, பொருளாதாரத்துக்கு வெளியே வரலாற்று ஆய்வுப் பாரம்பரியத்தையும் முன்னெடுத்துச் செல்கிறேன். எனது புத்தகம் பொருளாதாரம் பற்றிய புத்தகம் மட்டுமல்ல. வரலாறு பற்றிய புத்தகமும் ஆகும். நான் பொருளாதார நிபுணன் என்பதைவிட ஒரு சமூக விஞ்ஞானியாக என்னைப் பார்க்கிறேன்.

பொருளாதாரத் துறை சில பத்து வருடஙகளாக நீங்கள் கூறியுள்ள இந்த பல்துறைக் கல்வித் திட்டங்களோ அல்லது ஆய்வுத் திட்டங்களோ இல்லாமலே இருக்கிறது. உஙளது புத்தகத்தின் வெற்றி இம்மாதிரியான முனைவுகளுக்கு ஊக்கம் அளிக்கும் என்று நினைக்கிறீர்களா?
‘நான் இதற்கு பங்களிக்க முயல்கிறேன். ஆனால் இந்த ஒரு புத்தகத்தின் மூலமாக மட்டும் இதை சாதிக்க முடியாது. சமீப காலமாக வரலாற்று ஆய்வுகள் கலாச்சார, அரசியல் வரலாறுகள் மீது மட்டும் கவனம் குவிப்பதாக இருக்கின்றன.. சமூக, பொருளாதார வரலாற்றைப் புறக்கணிப்பது சிலகாலங்களாக நடைபெறுகிறது. ஒரு சரியான அரசியல்,கலாச்சார வரலாறு மற்றும் அரசியல் கருத்துக்கள் பற்றிய வரலாறு உருவாக்க கூலிகள், விலைகள் போன்ற பொருளாதாரப் பொருண்மைகளின் பரிணாம வளர்ச்சி  பற்றியும் அறிந்திருக்கவேண்டும். ஏனென்றால், இப்படிப்பட்ட ஆய்வு தான் பொருளாதாரம், சமூக நீதி, கம்யூனிசம், முதலாளித்துவம் மற்றும் அனைத்து நிறுவனங்கள் பற்றிய  முழுமையான பிரதிபலிப்பிற்கு பங்களிப்பு செய்யும்.

இடதுசாரிகள் உங்களது புத்தகத்தின் எல்லாப் பகுதிகளுடனும் ஒத்துப்போகின்றனர். அவர்களது பிரதான முரண்பாடு புத்தகத்தின் நான்காம் பாகத்தில் உள்ள உங்களது உலக மூலதன வரி என்ற அரசியல் திட்டம் தான். அரசுக்கும் மூலதனத்துக்கும் உள்ள கள்ளக்கூட்டு இப்படிப்பட்ட உலக மூலதன வரி என்ற தீர்வை நடைமுறைப்படுத்துவதை சாத்தியமற்றதாக்கியுள்ளது என்ற இடதுசாரிகளின் விமர்சனத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? இதற்கு முன்னால் ஆழமான கட்டமைப்பு மாற்றங்கள் அவசியம் என்று நீங்கள் நினைக்கவில்லையா?
கண்டிப்பாக இதற்கு மிகப்பெரிய தயாரிப்பு வேலைகள் நடைபெறவேண்டும். கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த வருவாய்க்கு ஒப்ப ஏறுமுக வரி என்பது அமைதியான முறையில் நடைபெறவில்லை. ஐரோப்பிய நாடுகளில் வருமான வரி என்பது உயர்குடி மக்களால் முதலாம் உலகப் போருக்குப் பின்னும் போல்ஷ்விக் புரட்சிக்குப் பின்னும் தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே, இந்தப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த பெரிய போராட்டங்களும் பெரிய தயாரிப்புப் பணிகளும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். எனது புத்தகத்தில் பல்வேறு இடங்களில் நான்  இவை பற்றி குறிப்பிட்டுள்ளேன் என்பதை புத்தகத்தை படித்தவர்கள் கண்டிப்பாகப் புரிந்து கொள்வார்கள்.

ஆனால் இடதுசாரிகளில் சிலர் உங்களது இந்த ஆலோசனை உலக சொத்து வரியை பெரிதாய்த் தூக்கிப் பிடிக்கின்றதென்றும் அதனால் வர்க்கப் போராட்டத்தை குறைத்து மதிப்பிடவும், இந்த வரியை அமலாக்கும் அரசின் பங்கைக் குறைத்து மதிப்பிடவும் உதவும் என்கின்றனர். முதலாளித்துவ அரசுகள் மூலதனத்துக்கு எதிராக இது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகள் எடுப்பது முடியுமா?
வர்க்கப்போராட்டம், அரசியல் போராட்டம் ஆகியவற்றின் குறிக்கோளுக்காக வருமான, சொத்து மீதான உலக ஏறுமுக வரியின் குறிக்கோளை எதிர்ப்பது பெரிய தவறு என்று நான் நினைக்கிறேன். முதலில், இந்த வரி சீர்திருத்தம் அமல் செய்ய மிகப்பெரிய தயாரிப்புப்பணிகள் அவசியம். கடந்த காலங்களின் அனுபவமும் இதுவே.. பெரிய புரட்சிகள் அனைத்தும் பெரிய வரி சீர்திருத்தத்தை எதிர்கொண்டன. ப்ரெஞ்சுப் புரட்சி, அமெரிக்கப் புரட்சி முதலாம் உலகப் போர், நிதி சீர்திருத்தம் முதலில் இல்லாவிட்டாலும் போல்ஷ்விக் புரட்சி ஆகியவை ஏறுமுக வரி ஆட்சியை ஒத்துக்கொண்டதோடு முதலாம் உலகப்போருக்குப் பின்னால் சமூக நல நிறுவனங்களையும் ஒத்துக் கொண்டன. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் இன்னும் இயல்பாக நடந்தன. புரட்சிகளுக்கு முன்னே, உயர்குடி மக்களும் வலதுசாரிகளும் இப்படிப்பட்ட சீர்திருத்தங்களை எதிர்த்தே வந்தனர். ஏறுமுக வரியை ஒப்புக்கொள்ள வைக்க மிகப் பெரிய போராட்டங்களையும் வன்முறை அதிர்ச்சிகளையும் சந்திக்கவேண்டியிருக்கும் என்பதையே இது காட்டுகிறது.  இடதுசாரியில் யாராவது ஏறுமுக வரி என்பது தொழில்நுட்ப விஷயம். எஙளுக்கு அதைப்பற்றி அக்கறை இல்லை. நாங்கள் புரட்சியைப் பற்றியும், மூலதன உரிமை பற்றியும் மட்டும் கவலைப்படுவோம் என்று கூறினால் அவர்கள் மிகப் பெரிய தவறு செய்கிறார்கள் என்று அர்த்தம்.
வர்க்கப் போராட்டம், ஏறுமுகவரி இரண்டையும் எதிர்க்கக் கூடாது என்பதற்கு இரண்டாவது காரணம் ஏறுமுகவரி மட்டுமே தீர்வல்ல: ஆட்சி முறையில் புதிய வடிவங்களும்  மூலதன உரிமையின் வடிவங்களும் மாறவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

புதிய செவ்வியல் பொருளியல், விநியோகம் பற்றிய கேள்விகளுக்கு பகைமை கொண்டதாக எதிர்கொள்வதாக அறியப்படுகிறது. கூலிகளை அதிகரித்தால் வேலைவாய்ப்புக்களில் பாதகமான சூழ்நிலை ஏற்படுமாதலால் விநியோகத்திற்கு பதில் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துவது நல்லது என்று  அது கூறுகிறது. விநியோகத்தை மீண்டும் முக்கியமான அம்சமாக எடுத்துக்கொள்ள  வெற்றிகரமாக நீங்கள் களத்தைத் திறந்துவிட்டது மட்டுமல்லாமல் அதை புது செவ்வியல் மொழியில் உங்களது விவாதங்களைக எடுத்துக் கூறியதால் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளீர்கள். இதுஒரு புறமிருக்க, புதிய செவ்வியல் பொருளாதாரக் கொள்கைக்கு மாற்றான பொருளியல் கொள்கை உடையவர்கள் நீங்கள் புதிய செவ்வியல் பொருளியல் கட்டமைப்பிலிருந்து வெளியே வரவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.
நான் அடிப்படையில் புதியசெவ்வியல் பொருளியல் முறையை ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் அந்தவழி உலகத்திற்கு நல்லவழி என்று சிலர் நம்பும்போது அவர்களுக்கு பதில் அளிக்கும் விதத்தில் இப்படிப்பட்ட அணுகுமுறை தேவை என்று நினைக்கிறேன். என்னுடைய புத்தகத்தின் ஒரு செய்தி என்னவென்றால் அது அப்படி நடக்காது என்பதும், அப்படி நடந்தாலும்  சூழ்நிலைகள் மோசமாகவே இருக்கும் என்பதுவும் தான்.
நான் புதிய செவ்வியல் பொருளியல் வாதிகளுக்குக் கூறிக்கொள்வதெல்லாம் இதுதான். நீங்கள் உங்கள் மாதிரியில் உறுதியுடன் இருக்க நினைத்தால் மாற்றின் நெகிழ்ச்சியில் ஒரு சிறிய மாற்றமே அதாவது ஒன்றுக்கும் கொஞ்சம் மேலாக மட்டுமே நாம் கடந்த சில வருடங்களில் நாம் கண்டதைத் தோற்றுவிக்கப் போதுமானது. ஆனால் மேலும் பல ஏற்கக்கூடிய விளக்கங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். உஙகளுக்கு என்ன புரிய வேண்டுமென்றால் உங்களது நேரடிப்போட்டியும் எளிதான அனுமானமும் தவறாகப் போகலாம். மூலதனத்தின் பங்கு உயர்ந்துகொண்டே போகலாம்.

நித்திய உற்பத்தித்திறன் வளர்ச்சியின் மூலம் எது?
புதிய  அறிவின் பெரும் குவிப்பே தான். பலர் பள்ளிக்குச் செல்கின்றனர். விஞ்ஞான அறிவு வளர்கிறது. அதனால், உற்பத்தித்திறன் வளர்ச்சி பெருகுகிறது. உயிரியல், குறைக்கடத்திகள் ஆகிய விஞ்ஞானத்துறைகளில் முன்னை விட நமக்கு அறிவு அதிகமாக இருக்கிறது. இது இன்னும் தொடரும்.

மார்க்ஸ் 19ம் நூற்றாண்டில் கணிப்புகள் செய்தார் என்றும், இன்று அறிவின் மூலம் தொடர்ச்சியான உற்பத்தித்திறன் வளர்ச்சி சாத்தியம் என்பதை அறிந்துகொண்டுள்ளோம் என்றும் கூறியுள்ளீர்கள். நீண்ட காலத்துக்கு இது தொடர் போக்காக இருக்குமா?
ஆம். கண்டுபிடிப்புக்கள் தொடர்ந்து நடக்கும் என்று நான் நினைக்கிறேன்.பூமி கோளத்தை அழித்தால் மட்டுமே இந்தக் கண்டுபிடிப்புக்களை நிறுத்த முடியும். ஆனால் மார்க்ஸ் அதை மனதில் வைத்திருக்க முடியாது. ஆற்றலை உருவாக்க நாம் தொடர்ந்து புதிய வழிகளைக் கண்டுபிடிக்கவேண்டும். இல்லாவிட்டால்,  இது முடங்கிவிடும்.  இதை நாம் செய்யமுடிந்தால் அடுத்த இரண்டு நூற்றாண்டுகளுக்காவது அறிவுத்திறன் வளர்ந்து கொண்டே போகும். தொழில்நுட்ப முன்னேற்றம் ஏன் நிற்குமென்பதற்கு காரணம் இல்லை. மக்கள் தொகையும் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

போர்கள் போன்ற வெளியிலிருந்து வரும் அதிர்ச்சிகளும், முதலாளித்துவத்துக்கு உள்ளேயே இருக்கும் இயக்க விதிகள் மூலம்  தோன்றும் பெரிய நெருக்கடிகளும் இந்தப் போக்கை மாற்றி அமைக்குமா?
இரண்டுமே தத்தம் வழியில் அகக்காரணிகள் தான் என்றே நான் கருதுகிறேன்.. முதலாம் உலகப் போருக்கு முன் ஐரோப்பாவில் நிலவிய சமூகப் பதற்ற நிலைமைகளுக்கும், ஏற்றத்தாழ்வுகளுக்கும்  தேசியத்தின் பதிலாக முதலாம் உலகப் போர் மூண்டது என்று பலர் கூறுகின்றனர். நான் இதில் ஒரு வகையில் லெனினியவாதி. உள்ளுக்குள் இருக்கும் முரண்பாடுகளைத் தீர்க்க தேசியம் ஒரு வடிவம். சமூகங்கள் பொருளாதார முரண்களைத் தீர்க்க முற்படவில்லை. மாறாக, பெரிய அளவில் இருந்த சமத்துவமின்மை, சமூகப் பதற்றங்கள் அவற்றைத் தீர்க்கவே முயன்றன.

உங்களது உலக சொத்துவரித் திட்டம் தவிர, வெனிஸூலா, அர்ஜென்டைனா போன்ற தெற்கு நாடுகளில் தற்போது நிலவும் சந்தைக் கண்காணிப்பும், மூலதனக் கட்டுப்பாடும் குறித்த பரிசோதனைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
வெனிசூலா, ஜான் லுக் மெலான்சோன் (பிரெஞ்சு இடது முன்னணித் தலைவர்)  ஐக் கவர்ந்த அளவிற்கு என்னைக் கவரவில்லை. எனக்கு அவ்வளவாகத் தெரியவும் தெரியாது. வெனிசூலா, அர்ஜெண்டைனா போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளின் அனுபவங்கள் ஆதிக்கமிக்க வடக்கு நாடுகள் சொந்தமாக்கிக் கொண்டதன் கடினமான அரசியல் விளைவுகளைப் புரிய வைக்க உதவுகின்றன என்று நினைக்கிறேன். இது வெளிநாட்டு மூலதனம் பெருமளவு இருந்தால் விளையும் சிக்கலான உறவே. எப்போதுமே அசமத்துவத்தை எதிர்கொள்வது மிகவும் கடினமானது. அதைப் போல, அமைதியான முறையில்,சரியான அளவில் மறு பங்கீடு செய்வதும் கடினம். குறிப்பாக, உரிமையாளர் வெளிநாட்டில் வேறு சமூகத்தில், வேறு அரசியல் குழுவில் இருந்தால், அமைதியான, நியாயமான உடன்பாடு எட்டப்படுவது முடியாத காரியம். இது நிலைமையை சீரழிக்கும் அளவுக்குக் கொண்டு செல்லும்.

சோசலிஸ்ட் கட்சியுடன் உங்களது உறவு குறித்து
நான் என்றுமே சோசலிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இல்லை. அந்தக் கட்சிக்கு ஆலோசகரும் இல்லை. சர்கோஸி அல்லது ஒல்லாட் என்ற கேள்வி எழுந்தால் நான் சர்கோஸிக்கு எதிராகத்தான் வாக்களிப்பேன். கட்டுரைகளும் புத்தகங்களும் எழுதும் ஒரு ஆராய்ச்சியாளன். அவ்வளவுதான். ஆனால் தேர்தலை விட ஜனநாயகமும், அரசியல் ஈடுபாடும் பல அம்சங்களை உடையது. நான் புத்தகங்களை நம்புகிறேன். கருத்துக்களின் சக்தியை நம்புகிறேன். அரசியல் செய்யப் பல வழிகள் உள்ளன.

ஆன்லைனில் முன்பதிவு செய்ய: https://thamizhbooks.com/capitalism-in-21st-century-thomas-…

 

தமிழில்: கே. பாஸ்கர்

சந்திப்பு:
அண்டோனி டால்சிரோக்கா, கோகன் தெரிசியோக்லு

(Originally published in Puthagam Pesuthu August 2015 issue)

Share.

About Author

Leave A Reply