நான் அமெரிக்காவுக்கு அஞ்சவில்லை! – ஸ்டீபன் ஹாக்கிங் நேர்காணல்

0
சந்திப்பு: கிளாடியா ட்ரெய்ஃபஸ்
தமிழில்: ஆயிஷா இரா.நடராசன்

ஸ்டீபன் ஹாக்கிங் 21ம் நூற்றாண்டின் ஐன்ஸ்டீன் என வர்ணிக்கப்படும் வானியல் விஞ்ஞானி. தனது 21வது வயதில் ஏ.எல்.எஸ். (Amyotrophic Lateral selerosis) எனும் நரம்பு இறுக்கி நோயால் அவதியுற்றார். பொதுவாக ஏ.எல்.எஸ். யாரையும் நான்கைந்து வருடங்களில் கண்டிப்பாகக் கொன்றுவிடும். ஆனால் ஹாக்கிங்ஸ் அந்த உடல் உபாதையோடு போராடி வாழ்ந்து இன்று எழுபது வயதை எட்டியுள்ளார்.
1960களில் சர் ரோஜர் பென்ரோசோடு இணைந்து கருந்துளைகளின் (Blackholes) பண்புகள் குறித்து கணித நிரூபணங்களை வழங்கினார். 1973ல் குவாண்ட இயந்திரவியலில் Quantum mechanics ஐன்ஸ்டீனின் பொது சார்பியலை இணைத்தார். கருந்துளை என்பது முற்றிலும் கருத்ததல்ல என்றும் அவற்றிலிருந்து கதிர்வீச்சு கசிவதோடு அவையும் வெடித்துச் சிதறி மறையும் தன்மை கொண்டன என்பதை நிரூபித்து இயற்பியலில் பெருத்த சர்ச்சையைக் கிளப்பினார். இழை கோட்பாட்டை (String theory) பின் தொடர்ந்து அதில் முக்கிய பங்களிப்புகள் வழங்கிய ஹாக்கிங்ஸ் அனைத்தையும் குறித்த கோட்பாட்டை (The theory of everything) வழங்கமுயன்று வருகிறார்.
தற்போது தனது 70 வது வயதில் ஏ.எல்.எஸ். நோயால் பாதிக்கப்பட்டு ஏறத்தாழ உலகிலேயே நீண்ட ஆயுள் பெற்ற சாதனையாளராய், உடல் ஒத்துழைப்பு முற்றிலும் இழந்து தனது கன்னத்தை சட்டைக் காலரோடு அழுத்தி அழுத்தி அங்கே பொருத்தப்பட்டுள்ள பித்தான்களை இயக்கி ஒரு கணினி குரல் கருவி வழியே உரையாடுகிறார். கண்ணாடியில் ஒரு மின்னணு சென்சார் உள்ளது. கன்னத்து சமிக்ஞைகளைப் பெற்று அது கணினியில் ஓடிக்கொண்டே இருக்கும் சொற்குவியலிலிருந்து அவர் தேர்வு செய்யும் சொல்லைப் பேசவைக்கிறது. கணினி (இயந்திர) குரல் உலகில் லட்சக்கணக்கான ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் விசிறிகளை சிலிர்க்க வைக்கும் அம்சம் என்பதை சொல்லத் தேவையில்லை.
பிரான்ஸ், பிஜிதீவு, ஆப்பிரிக்க – கானா என இவர் சென்று அறிவியல் சொற்பொழிவு நிகழ்த்தாத நாடு இல்லை. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பிரபஞ்சவியல் (Cosmolgy) துறையில் லூக்காசியன் பேராசிரியர் பதவி (முன்பு நியூட்டனும், ஐன்ஸ்டீனும் வகித்தது) வகித்து சென்ற ஆண்டு விருப்ப ஓய்வு பெற்று தற்போது முழுமையாக இயற்பியல் கணிதம் பக்கம் போய்விட்டார் ஹாக்கிங்.
தனது 70வது வயது நிறைவை ஒட்டி அவர் அளித்த சமீபத்திய நேர்காணல் சயின்ஸ் டைம் இதழின் இயற்பியல் இதழாளர் கிளாடியா டிரைஃபுஸ், ஹாக்கிங்கின் மகளான வானியலாளர் லூசியா ஹாக்கிங் உதவியோடு நடத்திய விஞ்ஞான உரையாடல் இது.
கேள்வி: டாக்டர் ஹாக்கிங், உரையாடலுக்கு நேரம் ஒதுக்கியதற்கு நன்றி. முதலில் 70வயது அடைந்துவிட்ட உங்களுக்கு ஒரு பிரதான கேள்வி. ஒரு நாள் என்பது உங்களைப் பொருத்தவரை என்ன?
            ஒரு நாள் என்பது உலகில் ஏனையவர்களைத் தாண்டி எந்த சிறப்பு சலுகையும் எனக்கு வழங்க வேண்டுமென நான் கருதுபவன் கிடையாது. எல்லா உழைக்கும் மக்களையும்போல அதிகாலையில் முன்னால் எழுந்து குறைந்த பட்ச வெளி உதவியோடு எனக்கான அலுவலகம் சென்று அங்கே என் சக வானியல் தோழர்களுடன் இ.மெயில் கொண்டு உலகளாவிய அணுகுமுறைக்கு ஆளாகி எல்லாரையும் போலவே உழைக்கிறேன்.
உடல் ஊனம் காரணமாக எனக்கு வெளி உதவி தேவை என்பது வெளிப்படையானது. ஆனால் அந்த சூழலிலிருந்து என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மீண்டு வாழ்வை முழுமையாய் வாழவே முயற்சி செய்து இருக்கிறேன். உலகம் முழுதும் போயிருக்கிறேன். அன்டாடிக் முதல் பூஜ்யம்- புவி ஈர்ப்பு வரை போயிருக்கிறேன். (சிறு இடைவெளிவிட்டு சொல்கிறார்) இருக்கலாம். ஒருநாள் நான் விண்வெளிக்கும் செல்வேன்.
 
கே: விண்வெளி பற்றி பேசத்தான் வேண்டும். சமீபத்தில் உங்கள் மகள் லூசியாவும் பால் டேவிஸ்சும் (அரிசோனா பல்கலைக்கழக இயற்பியலாளர்) இணைந்து பள்ளி மாணவர் இடையே வெளிக்கிரக உயிரிகள் தொடர்பு கொண்டால் புவி குறித்து என்ன அவைகளிடம் சொல்ல விரும்புகிறீர்கள் எனக் கேட்டு பலரிடம் பெற்று அதை விண்ணோக்கி அவை ஒலியாக்கி அனுப்பி வைத்தார்கள். முன்பு ஒரு பேட்டியில் சொல்லி இருந்தீர்கள். வெளிகிரஹவாசிகளோடு தொடர்பு கொள்வது நமக்கு நல்லதல்ல என்று, இப்போது என்ன சொல்லப்போகிறீர்கள்?
              முன்பு அப்படி நான் கூறியது உண்மைதான். ஏனெனில் வெளிக்கிரஹ உயிரிகள் நம்மைவிட பன்மடங்கு உயர்நிலையில் இருக்கும் பட்சத்தில் வெறும் தொடர்பு என்பதே நமக்கு அழிவை வழங்கலாம் என்ற அர்த்தத்தில் அது சொல்லப்பட்டது. தொடர்பு கொண்ட அனுபவம் நமக்கு இழப்பாக முடிந்துவிடும் அபாயம் கொண்டது. லூசி மற்றும் டேவிஸ்ஸின், டியர் ஏலியன்ஸ் பிராஜக்ட் வெளிக்கிரஹ உயிரிகளைத் தொடர்பு கொள்வதைவிட நமது குழந்தைகளின் படைப்பாக்கத் திறனை வளர்த்தெடுப்பதை நோக்கமாகக் கொண்டது.
ஏற்கெனவே வெளிகிரஹவாசிகள் நம்மோடு தொடர்பு கொண்டதாகக் கருதி அதற்கு பதில் எழுத இந்த பிராஜக்ட் குழந்தைகளைக் கோருகிறது. இந்தப்போட்டி பள்ளி செல்லும் வயது குழந்தைகளிடையே, இப்புவியின் மனித வாழ்வைப் பற்றி விஞ்ஞானப் பூர்வமாக சிந்தித்து புதிய புதிய வழிகளில் வேற்றுகிரஹவாசிகளுக்கு விளக்கிட வைக்கிறது. ஏதாவது ஒரு வேற்றுகிரஹவாசி நம்மோடு தொடர்பு கொண்டால் நாம் கண்டிப்பாக அதற்கு பதில் கொடுக்கும் நிலை ஏற்படவே செய்யும்.
இளம்பிராயத்தினரிடம் இதுபோல கேட்பது இன்றைய அவசியத் தேவை என்றே எனக்குப்படுகிறது. மனித இனம், புவி மீதான அக்கறை இவற்றை கேள்வி கேட்கத்தூண்டுகிறது. நாம் யார், என்ன இதுவரை செய்துள்ளோம் என்பனவற்றை பற்றி விளக்கிட குழந்தைகளை இது தூண்டுகிறது.
கே: உங்களது பங்களிப்பான காலத்தைக் குறித்த சுருக்கமான வரலாறு (The Brief history of Time) பெரிய வெற்றி அடையும் என எதிர்பார்த்தீர்களா!
             ஆனால் நிறைய பேர் புரியவில்லை என்று சொன்னார்கள். 1988ல் அந்த நூல் வெளிவந்தபோது, 10 மில்லியன் பிரதிகள் விற்றதாகவும் அது அமெரிக்காவில் இரண்டு வருடங்கள் (Topseller) அதிக விற்பனை நூல் பட்டியலில் தொடர்ந்து இருந்ததாகவும் அறிந்து மகிழ்ச்சியாக இருப்பினும் பெருவெடி கோட்பாடு மற்றும் கருங்குழிகள் குறித்த அத்தியாயங்கள் புரியவில்லை என மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டதால் மேலும் சுருக்கமான வரலாறு என்று (Briefer history of Time) ஒரு புத்தகமும் எழுதினேன். ஆனால் முதல் புத்தகம் இத்தனை பெரிய அளவில் பேசப்படும் என நான் எதிர்பார்க்கவில்லை.
நியூட்டனின் பிரின்சிபியா புத்தகம் வந்தபோது அது இத்தனை பிரதிகள் விற்றே ஆக வேண்டும் அப்போது தான் அது வெற்றிபெற்ற புத்தகம் என்கிற நிர்பந்தமெல்லாம் இருக்கவில்லை. சந்தை, தலையீடுகள் இன்று வெற்றி என்பதைக் கருத்தாக்கத்தின் புதிய சிந்தனைப் பதிவாகப் பார்க்காமல் அதிக விற்பனை தன்மையாக பார்க்கும் அவலம் அறிவியல் சிந்தனைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஆகும். நிறையபேர் படித்து புரிந்து கொள்ளவேண்டும் எனும் நிர்பந்தம் ஐன்ஸ்டீனுக்கு கூட கிடையாது.
கே: தி கிராண்ட் டிசைன் புத்தகத்தை படைப்புஇயல் வாதிகள் (creationists) கடுமையாக எதிர்க்கிறார்களே?
          இது எதிர்பார்த்தது தான். நமது இயற்பியல் மற்றும் உயிரிகள் விதிகளை அறிவியல் தனது தொழில்நுட்பத்திற்கு உட்படுத்தி வெற்றி கண்ட இந்த நூற்றாண்டிலும் கூட புதிய கடவுள்களும் உற்பத்தி ஆகவே செய்கிறார்கள். மனித தேடல் சோதனைகளுக்கு அளவே கிடையாது. எத்தனை உக்கிரமாக அறிவியல் தன்னை முழு விஞ்ஞானவாதம் என்பது ஏதேனும் ஒரு புள்ளியில் அதே அளவீட்டு சாதனைகளுடன் முரண் வினையோடு நம்மை எதிராடவே செய்கிறது. மேலும் மேலும் உக்கிரமாக இந்த போராட்டம் தொடரும். அறிவியலை முழு புறக்கணிப்பு செய்து
விஞ்ஞானிகளை விரட்டி வேட்டையாடிய மத குருமார்கள் கையில் சிலுவைகளின் கூடவே ஐ-பாட் மின்னுகிறது. இன்றைய கடவுள் இ.கடவுள் (Today’s god is e-god) இணையதள மதமாக அது பரிமாணம் அடைகிறது.
தி கிராண்ட் டிசைன் புத்தகம் இந்தப் பிரபஞ்சம் ஒரு வடிவத்தைப் (design) பெற்றுள்ளது என்பதை நிரூபிக்கிறது. அந்த வடிவத்தை அதற்கு யாரும் தரவில்லை. ஏதுமற்ற ஒரு வெற்றிடத்திலிருந்து இயற்கையாக உருவாகி அது சுய உருவாக்கம் செய்து கொண்டது என்பதை இப்புத்தகம் நிறுவுகிறது. அதை யாராவது மறுப்பதாயின் இந்த அறிவியல் கோட்பாட்டிற்கு மாற்றாக வேறொரு கோட்பாட்டை முன் வைக்கவேண்டும். அதற்கு பதில் ஒரு கோட்பாட்டின் வெகுஜன ஆதரவு சந்தையில் அதன் ஏற்புத்திறன் என்றெல்லாம் குழப்புவது நான் பலமுறை குறிப்பிட்டதுபோல அறிவியல் தத்துவார்த்த நடைமுறைக்கு எதிரான நடவடிக்கைகளின் இன்றைய முகம். முன்பு கலீலியோவுக்கு நேர்ந்ததைப் போன்ற அதிகாரத் தலையீட்டில் இது இன்னொரு வகைப்பாடு.
டார்வினின் பரிணாமவியல் எப்படி உயிரிகளின் தோற்றம் என்பது இயற்கையாக சுயதேர்வின் அடிப்படையில் நடந்த வளர்ச்சிப் போக்கென்று சுட்டுகிறதோ அதேபோன்ற ஒன்று தான் பிரபஞ்சத்தை வடிவமைப்பதிலும் நடந்திருக்கிறது என்பதை பிரபஞ்ச சுய வடிவமைப்பு முன் வைக்கிறது. இயற்கையின் இயங்கு விதிகளைப் போலவே பிரபஞ்சவியலின் இயற்பியல்வாதிகளும் ஒன்றை ஒன்று பிணைந்து இணைந்து நடக்கும் ஒன்றாய் இன்று நிரூபணம் ஆகி வருகிறது. அதற்கான கணித முயற்சி ரொம்ப பெரிய வேலையாக இருப்பதால் இழை-கோட்பாடு போதுமானதாக இல்லை.
கே: ஹிக்ஸ் போஸான் துகளியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா… உங்களது பார்வை என்ன?
           இப்போது அப்படிச் சொல்வது, ஆரம்பநிலை ஆய்வு ஒன்றைப் பற்றி அதிகமாக பிரசங்கித்ததாகிவிடும். ஆனால் பெர்மி – ஆய்வகத்திலும், செர்னிலும் (Cern) கிடைத்திருப்பது இப்பிரபஞ்சம் குறித்த ஆய்வு வரலாற்றில் முக்கிய திருப்புமுனை என்றுதான் நானும் கருதுகிறேன். அது ஹிக்ஸ் போஸான் என்பதை துகள் வேகப்பெருக்கிகள்(accelerators) நிரூபிக்கும் பட்சத்தில் அது இப்பிரபஞ்ச அறிவியலை மேலும் சிறப்பான இடத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை.
கே: ஒரு மரியாதைக் குறைவாக இதை நான் கேட்கவில்லை. இருப்பினும் ஏ.எல்.எஸ். நோய் வாய்ப்பட்டு இத்தனை காலம் வாழ்ந்து இருப்பதை சிலர் உங்களுக்கு இருப்பது அந்த வகை நோய் அல்ல என்று கேலி பேச வைத்திருக்கிறதே. இதற்கு என்ன எதிர்வினை புரிய விரும்புகிறீர்கள்?
         எல்லாருக்கும் வரும் அதே ஏ.எல்.எஸ். நரம்பு நோயாக இது இல்லாமலும் இருக்கலாம். அதை சொல்லும் நிபுணத்துவம் எனக்கில்லை. ஆனால் இரண்டு, மூன்று வருடங்களில் என் வாழ்வு முடிந்துவிடும் என அறிவிக்கப்பட்டு அதனை எதிர்கொண்ட போதான அதே மனநிலையோடுதான் இத்தனை வருடங்களும் வாழ்ந்திருக்கிறேன். ஆனால் ஒரு வேலைக்குப் போகும் அந்த அளவு சராசரித் தனத்துடன் என்னை கவனித்துக் கொள்ள வாழ்க்கை ஆதரவு சக்திகளுடன் இருக்குமளவாவது முடித்திருக்கிறது.
என் உடல் இருக்கி நரம்பு நோய் பற்றி பெரிதாய் பேச என்னிடம் ஒன்றுமில்லை. ஆனால் அது என் மீது சுயபரிதாபம் கொள்ளக்கூடாது என எனக்கு போதித்து உள்ளது. ஏனெனில் எத்தனையோ பேர் என்னைவிட அதிக பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். உலகில் இதைவிட பெரிய பிரச்சனைகளை எதிர் கொள்பவர் உண்டு. இப்படியான உடல் இருக்கி நோய் வருவதற்கு முன்பிருந்ததைவிட இப்போது மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். அதிர்ஷ்டம் என்று ஒன்று இருக்கிறதென்றால் நான் கோட்பாட்டு இயற்பியலாளன் ஆனதை சொல்லவேண்டும். இவ்வளவு ஊனத்துடன் வேறு வேலை எதுவும் பார்க்க முடியாது.
கே: உங்களுடைய இத்தனை வருட அனுபவத்தில் சொல்லுங்கள். இதே ஏ.எல்.எஸ். நோய் பாதிப்புகண்ட மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு உங்களது ஆலோசனை என்ன?
           மன எழுச்சி விஷயத்தில் ஊனமுற்றோராக இருக்காதீர்கள். ஊனம் பற்றி அல்லாது உங்களது ஏதாவது மற்றொரு தரப்பு பற்றி எல்லாம் பேசும்படி உழையுங்கள். ஊனம் இடையீடு செய்யும் பணிகளைத் தவிர்த்து அதனால் எதுவும் செய்ய முடியாத பணிகளில் தீவிரம் காட்டும் போதுதான் அன்றாட வாழ்வு என்பதன் பெரிய பூதத்திடமிருந்து நாம் தப்ப முடியும்.
கே: பொதுவாக அரசியல் பேசுவதையோ நேரடியாக அரசியலை விமர்சனம் செய்வதையோ தவிர்க்கும் நீங்கள், அமெரிக்காவின் பொது சுகாதார விவாதத்தில் பெரிய சர்ச்சையானது எப்படி நடந்தது?
          பத்தாண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் அரசு ஊனமுற்றோருக்கான பிராந்திய சலுகைகளை மறுசீரமைப்பு செய்வதாக அறிவித்து பல உரிமைகளைப் பறித்தபோது நடந்த கவனஈர்ப்பு பிரச்சார ஊர்வலத்தில் கலந்து கொண்டேன். கலீலியோவுக்கு நேர்ந்த அவமானத்திற்காக சர்ச் மன்னிப்பு கேட்க வேண்டும் என போப்பை பணியவைத்தேன். அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்றெல்லாம் யாரும் இருக்க முடியாது.
அமெரிக்கர்கள் தங்களைவிட மேலான சமூகம் இல்லை என மறுபடி மறுபடி தங்களுக்கு தாங்களே சொல்லிக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் எதையாவது செய்து விட்டுப்போகட்டும். அதற்காக பிரிட்டன் பொது சுகாதாரத் துறையின் நேரடி கவனிப்புக்கு ஆளாகி வாழ்ந்திருந்தால் ஸ்டீபன் ஹாக்கிங்கை பிரிட்டன் என்றைக்கோ கொன்றிருக்கும் என தரக்குறைவு செய்வதை எப்படி அனுமதிக்க முடியும்?
நான் கேம்பிரிட்ஜில்தான் வாழ்கிறேன். உலகின் உன்னத அரசு பிரித்தானிய அரசாட்சி என நான் சொல்லவில்லை. ஆனால் கடந்த ஆண்டு அமெரிக்க தகவல் தொடர்பு சாதனங்கள் வழியே இந்த வல்லரசு மேற்கண்ட நேரடி அறிவிப்பை ஏதோ பெரிய கணக்கீட்டின் முடிவுபோல அறிவித்தபோது நான் எதிர்வினை புரிய இவர்களால் (அமெரிக்கர்களால்) நிர்பந்திக்கப்பட்டேன். தவறைச் சுட்டிக்காட்டும் தார்மீகக் கடமை அது.
பிரிட்டனில்தான் நான் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறேன். அமெரிக்காவில் அல்ல. மேட் இன் யு.எஸ். (made in USA) பொருள் என் மின்னியல் நாற்காலி உட்பட) எதுவும் என்னிடம் கிடையாது.
நாற்பது வருடங்களாக பிரித்தானிய பொது சுகாதார அரசுத் துறை எனக்கு ராஜ வைத்தியம் செய்து வருகிறது. நான் அதை நேரடியாக மக்களுக்கு தெரிவிக்க விரும்பினேன். அதில் என்ன தவறு. உலக பொதுசுகாதார பாதுகாப்பே நான் கோருவது. இதை சொல்ல எனக்கு எந்த அச்சமும் கிடையாது.
கே: காலப் பயணம் அதாவது டைம் டிராவல், சில இயற்பியலாளர்கள் கோட்பாட்டு அளவிலாவது சாத்தியம் என்றே கூறுகிறார்கள். நீங்கள் வாழும் காலத்திற்குள் அது சாத்தியமானால் வாழ்வின் எந்த நாளுக்குள் மீண்டும் பயணிக்க விரும்புவீர்கள்?
           1967, என் முதல் குழந்தை ராபர்ட் பிறந்த அந்த நாள். என் மூன்று குழந்தைகளும் என் வாழ்வில் பெரிய மகிழ்ச்சியைக் கொண்டு வந்துள்ளனர். அவர்களுடனான இளம்பிராய விளையாட்டுகளில் பங்கு கொள்ள முடியாத துயரம் என் வாழ்வின் ஒரே குறையாக இருக்கிறது. ராபர்ட்டுக்கு ஒரு குழந்தை உள்ளது. கொஞ்சி விளையாட ஏதுவற்ற தாத்தாவாக வாழ்வது… குறை இல்லையா.
கே: உங்கள் மதம் என்பது?
          நாத்திகவாதம் ஒரு குற்றம்போல அணுகப்படுவது வேடிக்கையாகவே உள்ளது. சொர்க்கம் போன்றவை மிக அழகான பொய்கள் என பலமுறை நிரூபித்தாகிவிட்டது. அப்படியான அழகான பொய்களைவிட என் போன்ற அறிவியல் வாதிகளுக்கு அவலட்சணமான உண்மைகளே அதிக ஈர்ப்பை ஏற்படுத்துவதாக உள்ளன.
 
 

நன்றி : சயின்ஸ் டைம்ஸ்

 

 
Share.

About Author

Leave A Reply