உருவாகும் உள்ளம், வழிகூறும் மூளை

0

உருவாகும் உள்ளம், வழிகூறும் மூளை

மனிதகுல வரலாற்றில் மனிதச் சமூகத்தின் ஒட்டுமொத்தப் பார்வையையே புரட்டிப்போட்ட நிகழ்வுகள் எப்போதாவது நடக்கும். தத்துவம், சமூகம் அறிவியல் எனப் பல்வேறு தளங்களில் இதுபோன்ற புரட்சிகரமான சிந்தனை மாற்றங்களை உருவாக்கிய நிகழ்வுகளை வரலாறு பதிவு செய்துள்ளது. பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது எனச் சொன்ன கலிலியோவின் சிந்தனை, குரங்கிலிருந்துதான் மனிதன் தோன்றினான் எனச் சொன்ன டார்வினின் சிந்தனை, வர்க்க வேறுபாடுகள் பற்றிய மார்க்ஸின் சிந்தனை, ஆழ்மனம் பற்றிய ஃபிராய்டிய உளவியல் பார்வை எனப் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சிந்தனை எழுச்சிகள் நிகழ்ந்துள்ளன.

மனித மூளையின் செயல்பாடு கள் பற்றிச் சமீபக் காலத்தில் எழுந்து வரும் புதுப்புது சிந்தனைகள், அது போன்றதொரு எழுச்சி எனலாம். மூளை எவ்வாறு இயங்குகிறது என்பதை அறிவியல் வளர்ச்சியின் காரணமாகத் தற்போது அறிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக, மனம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மூளையின் செயல் பாடுகள் குறித்துப் பரவலாக ஆராயப்பட்டு, அறியப்பட்டு வருகிறது.

புகழ்பெற்ற பேருரைகள்

‘தான்’ என்ற உணர்வு எப்படி உருவாகிறது? எந்த இடத்தில் உருவாகிறது? அடுத்தவர் களது உணர்வுகளை நாம் எப்படிப் புரிந்துகொள்கிறோம்? காணும் பொருட்கள் எங்கே, எவ்வாறு அடையாளம் பெறுகின்றன? நமது எல்லா உணர்வுகளும் செயல்களும் நமது முழு கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றனவா? ஏன் ஒருசில மனநோய்களில் விசித்திரமான உணர்வுகள், மாயத்தோற்றங்கள் ஏற்படுகின்றன என்பன போன்ற கேள்விகள் அதிகம் எழுபவை. அத்துடன் கலையுணர்வு என்பது மூளையில் எவ்விதம் தோன்றுகிறது என்பன போன்ற தத்துவார்த்தமான கேள்விகளுக்கும், கடவுள் நம்பிக்கை பரவசநிலை போன்ற ஆன்மிகரீதியான கேள்விகளுக்கும் மூளையியல் சார்ந்து விடை அளிக்க முடியும் எனச் சொல்லி வருபவர் அமெரிக்காவின் மிகப் பிரபல மூளையியல் அறிஞர் டாக்டர் விலியனூர் ராமச்சந்திரன்.

‘மூளையின் மாயாஜாலங்கள்‘ (Phantoms in the brain) என்ற நூலின் மூலம் மிகப் புகழ்பெற்றவர் ராமச் சந்திரன். பி.பி.சி. வானொலி நிறுவனம் ஆண்டுதோறும் தத்துவ, அறிவியல், சமூகவியல் அறிஞர்களைக் கௌரவித்து, அவர்களது உரைகளை ஒலிபரப்பும். இந்தப் பேருரைகள் ‘டாக்டர் ரீய்த் லெக்சர்ஸ்’ என அவற்றைத் தொடங்கி வைத்தவரின் பெயரால் அழைக்கப்படுகின்றன.

2003-ம் ஆண்டு அவ்வாறு கௌர விக்கப்பட்டவர் டாக்டர் ராமச்சந்திரன். அவர் மூளை, மனம், கலை எனப் பல்வேறு தளங்களை உள்ளடக்கிய ஐந்து பேருரைகள் ஆற்றினார். அது தொகுக்கப்பட்டு ‘உருவாகும் உள்ளம்’ என்ற பெயரில் நூலாக வெளிவந்துள்ளது.

எப்படிக் காண்கிறோம்?

இந்நூலில் நமது காட்சிப்புலன் களால் உலகை எவ்வாறு அறிகிறோம் என்பதை அவர் விளக்குகிறார். கண்களைத் திறந்தவுடன் நாம் காணும் காட்சிகளை நாம் அறியும் விதம், உண்மையில் வெறும் புகைப்படக் கருவியின் செயல்பாடு போன்றது அல்ல. அதைவிட மிகமிக சிக்கலானது. காட்சிப் புலன் தொடர் பாக மட்டும் முப்பதுக்கும் மேற்பட்ட இடங்கள் மூளையில் உள்ளன. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பணி.

உதாரணமாக, ஒரு பகுதி காட்சிகளில் ஏற்படும் அசைவை உணரச் செய்வது. இப்பகுதி பாதிக்கப்பட்டவர்களால் அசைவுகளைக் கணிக்க முடியாது. ரோட்டில் வரும் கார் ஒரே தொடர்ச்சி யாக இல்லாமல் தனித்தனிக் காட்சி களாகத் தெரியும். அதாவது ஒரு திரைப்படத்தின் படச்சுருள் வேகமாக ஓடும்போது நமக்குக் கதாபாத்திரங்கள் அசைவதுபோல் தோன்றுகிறது. அதுவே மிக மிக மெதுவாகச் சுற்றினால் ஒவ்வொரு ஃபிரேமாகத் தெரியும். அதுபோல் காட்சிகள் நமக்குத் தெரிந்தால் என்னாவது?

பார்வையும் உணர்ச்சியும்

நாம் காணும் ஒவ்வொரு பொருளும் நபரும், நமக்கு ஒரு உணர்வை ஏற்படுத்தும். காதலியைக் கண்டால் பரவசம், எதிரியைப் பார்த்தால் கோபம் என. இதற்குக் காரணம் காட்சிப்புலன் தொடர்பான பகுதிகள் உணர்ச்சிகள் தொடர்பான பகுதிகளோடு தொடர்புகொண்டிருப்பதே. இந்தத் தொடர்பு இழை சில பாதிப்புகளால் துண்டானால், பார்க்கும் நபர்கள் நமக்கு எந்த உணர்ச்சியையும் ஏற்படுத் தாமல் அந்நியர்கள்போல் தோன்றுவார்கள்.

இப்படிப் பாதிக்கப்பட்ட ஒருவர் தனது தாயையே அடையாளம் காண இயலாமல் போய்விட்டதை ராமச்சந்திரன் விளக்குகிறார். இதற்கு ‘ப்ரோஸோபக்னோசியா’ என்று பெயர். முன்பெல்லாம் இதுபோல் தாயையே அடையாளம் காண முடியாமல் போவதை ஃபிராய்டிய உளவியல் கோட்பாடுகளின்படி ஆழ்மனதின் சிக்கல் களே காரணம் என்று விளக்கிவந்தனர். இந்நூலில் தெரிவிக்கப்படும் சிந்தனைகள், இது போன்ற சிக்கல்களைப் பார்க்கும் கோணத் தையே மாற்றுகின்றன.

மாய உணர்வுக்கு விளக்கம்

விபத்துகளால் கைகால் இழந்தவர் களுக்கு அந்த உறுப்புகள் இருப்பது போன்ற மாய உணர்வு ஏற்படும் (ஃபேண்டம் லிம்ப்) . அவை உறுப்புகள் வேண்டும் என்ற அடிமனதின் ஆசை காரணமாக ஏற்படுகின்றன என விளக்கப்பட்டுவந்தது. உறுப்புகளை இழந்தவர்களின் மூளையில் இருக்கும் நரம்புகளில் ஏற்படும் மாறுதல்களால் மாய உணர்வுகள் ஏற்படுகின்றன என்று மேற்சொன்ன கருத்தை மறுக்கிறார் ராமச்சந்திரன்.

கலை என்பது அறிவியலால் விளக்க முடியாததாகவே கருதப்படு கிறது. இருப்பினும் கலையின் சில அடிப்படைகளை ஏன் நமக்கு ஒரு சிற்பம் அல்லது ஓவியம் பிடிக்கிறது என்பன போல்- மூளையின் செயல் பாடுகள் மூலம் விளக்குகிறார் ராமச்சந்திரன். குறிப்பாக ஓவியங்களில் அரூபமாக, மறைமுகமாகச் சொல்லப் படுபவற்றைக் கண்டுபிடிக்கும்போது ஏற்படும் ‘ஆஹா உணர்வே’, அவற்றை ரசிக்கக் காரணம் என்கிறார். அது மட்டுமின்றிப் பரிணாம ரீதியாக மறைந் திருக்கும் விலங்கைக் கண்டு பிடிக்கும் உணர்வை ஒத்திருப்ப தால்தான், இது போன்ற புதிர்தன்மை நமக்கு ஈடுபாட்டை அளிக்கிறது என்கிறார்.

‘தான்’ என்னும் உணர்வு

நூலின் இறுதிப் பகுதி மிகச் சிக்கலான விஷயங்களைப் பற்றி அலசுகிறது. நாம் செய்யும் செயல்கள் எல்லாமே நமது முழு கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றனவா? அப்படியென் றால் ஏதோ சிந்தனை செய்தபடி கார் ஓட்டிக் கொண்டே போவது எப்படி என்பன போன்ற விஷயங்களைப் பேசுகிறது. நமது மூளையின் பல செயல்கள் அனிச்சையாக நடக்கின்றன. ‘தான்’ என்னும் சுயஉணர்வு என்றால் என்ன என்ற கேள்வி ஆன்மிக, தத்துவவாதிகள் எழுப்புவது. மூளையின் சில பகுதிகள்தான் இந்த ‘தான்’ என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. நமது கையை அசைக்கும்போது இந்த ‘தான்’ பகுதிகளும் செயல்படுவதால், நமக்கு நம் கை நமது கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தோன்றுகிறது.

உலகை மாற்றும்

சில வகை மனச்சிதைவு நோய்களில் இந்த உணர்வு பாதிக்கப்பட்டால், அவர் கள் கையை அசைத்தாலும் தாங்களாக அசைக்கவில்லை வேறு யாரோ என் கையைக் கட்டுப்படுத்து கிறார்கள் என்று சொல்வார்கள். அதேபோல் அடுத்தவர்கள் படும் வேதனைகள், வலிகளை உணரவும் மூளையில் சில பகுதிகள் உள்ளன. இது பாதிக்கப்பட்டால் அடுத்தவரது மனநிலையை உணர முடியாமல் போய்விடும்.

தத்துவம், ஆன்மிகம், சமூகம், கலாச்சாரம், உளவி யல், அறிவியல். மொழியியல், குறியீட்டியல், கலை எனப் பல்வேறு தளங்களும் இணையும் பல புள்ளிகளை மூளை இயங்கும் விதத்தின் மூலம் இணைத்து விளக்கி, ஒரு பெரும் ஓவியமாகத் தீட்டியுள்ளார் டாக்டர் வி.எஸ். ராமச்சந்திரன். ‘உருவாகும் உள்ளம்’ என்ற பெயரில் ஆயிஷா நடராசனின் மொழிபெயர்ப்பில் இந்நூல் தமிழிலும் வெளிவந்துள்ளது. முதலில் கூறியதுபோல் நம்மையும் மற்றவரையும் உலகையும் நாம் பார்க்கும் பார்வையையே மாற்றிவிடும் இந்த ‘உருவாகும் உள்ளம்’.

நன்றி

தமிழ் இந்து (08/04/2017)

புத்தகம் வாங்க.

https://thamizhbooks.com/uruvakum-ullam-vazhi-kurum-moolai.html

Share.

About Author

Leave A Reply