விடுதலைப் பாதையில் பகத்சிங்

0

புத்தக தேவைக்கு.

https://thamizhbooks.com/vidudhalai-padhail-bhagatsingh-katuraigal-kadidhangal-avanangal-211.html

விடுதலைப் பாதையில் பகத்சிங்
– டி.எம். ராஜாமணி

“கண்களில் எப்போதும் நிறைந்துள்ளவர்களின் கதைகளை இனி காதுகள் கேட்டுக் கொண்டே இருக்கட்டும்”

பகத்சிங் வரலாற்றின் இறுதி வரிகளில் இந்த நூல் தொகுப்பாளர் சிவவர்மா இவ்வாறு கூறியுள்ளார்.

பகத்சிங் மற்றும் அவரது தோழர்களின் வரலாற்றை இவ்வாறு கேட்பதும் சரி வாசிப்பதும் சரி ‘நாங்கள் வரலாற்று மாணவர்கள்’ என அடக்கத்துடன் கூறிய பகத்சிங்கின் தொலைநோக்கு சிந்தனைகளை, போராட்டப்பண்பாட்டை, நாம் கற்றுணரும் ஒரு காரியம் ஆகிவிடுகிறது.

இப்படிப்பட்ட ஒரு முழுமையான கற்றுணர்தலுக்கான ஒரு நூல் தொகுதியாக இந்த நூலை பாரதிபுத்தகாலயமும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் இணைந்து நமக்கு வழங்கியுள்ளது. தமிழக இளைஞர்களுக்கான ஒரு அரிய வெகுமதியாகும் இது.

ஒரு மனிதர் எப்போதும் தன்னைப் பற்றியே சிந்திப்பதிலிருந்து மாறி தன்னைச் சுற்றியுள்ளப் பிறறைப் பற்றியும் சிந்திக்கிறாரோ அப்போதே அவர் மனிதராகிறார். அதிலும் தனக்காக வாழாமல் பிறர்க்காக வாழும் பக்குவத்தை அவர் அடையும் பொழுது அவர் மாமனிதராகிவிடுகிறார். அப்படிப்பட்ட மனிதரின் வரலாறும் சிந்தனைகளுமே இந்த நூல் தொகுதியாகும்.

எல்லோரையும் போலவேதான் பகத்சிங்கும் இம்மண்ணிலே பிறந்தார். ஆனால் அச்சமயம் நாட்டிலே மூண்டெரிந்து கொண்டிருந்த சுதந்திரப் போராட்டத்தின் முன்னனியிலே அவரின் மூன்று அப்பாக்களும் இருந்தார்கள் (அப்பாவும் இரு சித்தப்பாக்களும்) சாவுக்கு அஞ்சாத மரபாக அவரின் சீக்கிய மரபிருந்தது.

“நாங்கள் அடிமைத்தனத்திற்கு அடிபணிய மாட்டோம், ஏழைகளை, வயோதிகர்களை, பெண்களை உயிருள்ளளவும் பாதுகாப்போம், எந்தவகையான ஆதிக்கமானாலும் அதனை எதிர்கொள்ள தயங்க மாட்டோம்.” என சிவப்பு வண்ணப் பொடி தூவி ஒவ்வோர் ஆண்டும் ஹோலி பண்டிகை கொண்டாடும் சீக்கிய மரபும், அதன் நேர்மையான முற்போக்கான, சுதந்திரமான வாழ்க்கை சூழலும் இயல்பாகவே பகத்சிங்கை ஒரு வீரக்களை கொண்ட சிறுவனாக, தேசபக்த எண்ணம் கொண்ட சுடராக உருவாக்கி விட்டன.

1907 லே பகத்சிங் பிறக்கிறார் 1919 ஏப்ரலிலே நம் தேசத்தை உலுக்கியெடுத்த ‘ஜாலியன் வாலாபாக்’ வரலாற்றுப் படுகொலை நடந்தேறுகிறது. அங்கே 20,000 பேர் கொண்ட மக்கள் கூட்டத்தின்மேல் ஏகாதிபத்திய கொலைகாரன் ஜெனரல் டயர் நடத்திய 1650 சுற்று துப்பாக்கிசூட்டில் 1516 பேர் பிணங்களாக, படுகாயம்பட்டரத்த சாட்சிகளாக விழுந்தார்கள். அந்த வாரம்முழுக்க தேசமே அல்லோலப்படுகிறது. நமது 12 வயது மாணவர் பகத்சிங்கோ உணர்ச்சிப்பிரவாகமாக சம்பவம் நடந்த அதே கிழமையிலே ஏழு நாட்களுக்குபின் லாகூரிலிருந்து அமிர்தசரஸ் நோக்கி தன்னந்தனியாக அந்த ரத்தம் தோய்ந்த களத்தை சென்றடைகிறார். சற்று நேர தீவிரசிந்தனைக்குபின் அந்த ரத்தம் தோய்ந்த செம்மண்ணை எடுத்து தன் நெற்றி திலகமாய் இட்டப்படி சிறுது தனது பாத்திரத்திலும் எடுத்துக்கொண்டு வீடு திரும்புகிறார்.

சில தினங்கள் சென்று தன் வீட்டின் அருகில் இருந்த ராவி ஆற்றங்கரைக்குப் போய் எனது முன்னோடிகள் இந்த நாட்டின் விடுதலைக்காக இந்த தேசம் முழுவதும் சிந்திடும் ரத்தம் போலவே எனது ரத்தமும் உன் வழியே இந்த தேசம் முழுவதும் பரவட்டும் என்றபடியே தனது ரத்தத்தில் சிரிதளவை அந்த வீரர் உருவாக்குகிறார் அவரின் வீரக்குணம் உயிர்ப்பெடுக்கிறது. வீரர்கள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள் என்ற அறிஞர்மொழி பகத்சிங் வாழ்வின் ஒரு எதார்த்தமாக ஆகியது.

இவ்வாறு தமது 12 வயதிலேயே ஒரு தேசபக்த வீரச்சிறுவனாக… 14 வயதிலே ஒத்துழையாமை இயக்கத்தில் ஒரு காங்கிரஸ் தொண்டனாக… 16 வயதிலே தாய்நாட்டு விடுதலைப் போராட்டங்களில் பாடங்கள் கற்ற ஒரு வரலாற்று மாணவராக… 17 வயதிலே திருமணத்தை மறுத்து வீட்டைத் துறந்து சென்ற ஒரு முழுநேரப் பரட்சியாளராக… 19 வயதிலே நவ ஜவான் பாரத வாலிபர் சங்கச் செயலாளராக… 21 வயதிலே இந்துஸ்தான் குடியரசுப்படையின் பொறுப்பாளராக, 23 ஆம் வயதில் தன் இறுதி நிமிடம் வரை ஒரு பகுத்தறிவு மிக்க தேசப் பக்தராக, சமத்துவ சிந்தனை கொண்ட சோசலிஸ்ட்டாக, இடைவிடாத போராளியாக, படிப்பாளியாக, பேச்சாளராக, சிந்தனையாளராக இளைஞர் பகத்சிங் தன் வரலாற்றை முன்னெடுத்துச் சென்ற இந்நூல் அற்புதமாக விளக்கியுள்ளது.

மேலும் நூலில் பொதிந்துள்ள அவரின் சிந்தனைகள் மிகுந்த தீர்க்கம் கொண்டு மிளிர்கின்றன. ஆன்மீகப் பண்பாட்டிலிருந்து, பகுத்தறிவு பண்பாட்டிற்கு மீண்டு சென்ற பகத்சிங் கூறுகிறார். “நாம் முதலில் மனிதர்களாயிருந்து தான்பின்பு புரட்சியாளராக முடியும். தேவர்களாக இருந்தல்ல! தெய்வீகத்தில் அசைவோ, முன்னேற்றமோ, ஓட்டமோ இருக்காது”.

பயங்கரவாதத்திலிருந்து வெகுஜன இயக்கத்தின் திசையில் முன்சென்ற பகத்சிங் பேசுகிறார். “புரட்சியானது ரத்த வெறி கொண்ட மோதலாகத்தான் இருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. தனிநபர்களை வஞ்சம் தீர்த்துக்கொள்ள அதில் இடமில்லை. அது வெடிகுண்டுகள்,துப்பாக்கிகள் மீதான வழிபாடுமல்ல. வெளிப்படையான அநீதிகளைக் கொண்ட இச்சமூக அமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கையே புரட்சி”.

தேசபக்த எண்ணங்களிலிருந்து, சோசலிச சிந்தனைகளை வந்தடைந்த பகத்சிங் கூறுகிறார். “நாங்கள் ஒரு மாற்றத்திற்காக நிற்கிறோம். இன்றுள்ள அரசியல், சமூகப், பொருளாதார அமைப்பில் ஒரு புரட்சிகர மாற்றத்திற்காக நிற்கிறோம். மனிதரை மனிதர் சுரண்டுவதை சாத்தியமற்றதாக்கி, அதன் மூலம் அனைத்து மக்களுக்கும் அனைத்து நிலைகளிலும் முழுவிடுதலையை உத்தரவாதப்படுத்திடும் ஒரு புதியதோர் சமுதாய அமைப்பை உருவாக்குவதற்காக நாங்கள் நிற்கிறோம். இன்றுள்ள சமூக அமைப்பு முழுவதும் மாற்றப்பட்டு ஒரு சோசலிச சமூக அமைப்பு நிறுவப்படவில்லை எனில் இந்த உலகம் முழுவதும் கடும் பேரழிவிற்கு உள்ளாகும் அபாயம் உள்ளது என நாங்கள் கூறுகிறோம்”.

இன்று ஏகாதிபத்தியம் உலகம் முழுவதும் இப்படிப்பட்ட பேரழிவைத் தானே ஏற்படுத்தி வருகிறது. இதனை 77 ஆண்டுகளுக்கு முன்னரே சரியாகக்குறிப்பிட்ட பகத்சிங்கின் எழுத்துக்கள் எத்தனை தீர்க்கம் மிக்கவை. ‘ஒருசரியான சிந்தனைப் போக்கே சரியான உண்மையான கணிப்புக்களை சென்றடைய முடியும்’ என்பதையல்லவா இது காட்டுகிறது.

மேலும், பகத்சிங் ஏகாதிபத்தியம் குறித்து லெனினிடமிருந்து கற்றுணர்ந்தவராயிருந்தார். ஆகவே, அதற்கு சரியான மாற்று காந்தியமல்ல, இடதுசாரி தீவிர போக்குகளுமல்ல ‘சோசலிசமே மாற்று’ என்ற முடிவிற்கு அவர் வந்தார்.

1921 இல் காந்தி, “நாம் தொழிலாளர்களை விடுதலைப் போராட்டத்தினுள் இறக்கக் கூடாது. ஆலைத் தொழிலாளர்களை அரசியல் ரீதியாகப் பயன்படுத்துவது அபாயகரமானது” என்றார். 1922 இல் பர்தேலி காங்கிரஸ் மாநாடு “விவசாயிகளையும், விடுதலைப் போராட்டத்தில் களம் இறக்குவதை தடுத்தது. காரணம் அச்சமயம் நிலப்பிரபுத்துத்தையும் உதறித்தள்ளுவதாயிருந்தது. பகத்சிங் கூறுகிறார், “நமது தலைவர்கள் விவசாயிகளிடம் சரணடைவதைவிட பிரிட்டிஷாரிடம் சரணடைவதையே தேர்வு செய்தனர்”. இப்படி காங்கிரஸ் முழு விடுதலையை நமக்கு தேடித்தராது என்ற பகத்சிங் அடுத்து, ஆயுதமேந்திய குழுக்களின் செயல்பாடுகளைப் பற்றி பேசுகையில் “நம் காலத்திய நிலைமையில் தனி நபர்களை கொலை செய்வதே புரட்சியின் நோக்கமல்ல”. “புரட்சி என்பது ரத்த வெறி கொண்ட மோதலாகத்தான் இருக்க வேண்டுமென்பதிலிலை” என்கிறார். “மனிதனை மனிதன் சுரண்டி கொள்ளையடிக்கும் நிலைமையை முடிவுக்குக் கொண்டு வந்து நம் நாட்டிற்கு சுதந்திரத்தை பெற்றுத் தருவதே புரட்சியின் நோக்கமாகும்” என்கிறார்.

இப்படி ஏகாதிபத்தியத்திற்கு ஒரு சரியான மாற்று அகிம்சை வழிமுறை காங்கிரசோ, அதிதீவிர அரசியல் அனுபவங்கள், அரசியல் வரலாறுகளிலிருந்து ஏகாதிபத்தியத்திற்கு சரியானதொரு மாற்றாக சோசலிசத்தை முன்வைத்தார் என்கிறது இந்நூல்.

இந்திய சுதந்திரப்போராட்டம் சோசலிசத்தை நோக்கித் திரும்ப வேண்டும் என முதன்முதலில் முன்மொழிந்தது இந்திய அரசியலை சோசலிசத்தின் பக்கம் திருப்பிய முதல் விடுதலை வீரர் பகத்சிங்கே ஆவார். அவர் கூறுகிறார்,

“ எனது எண்ணத்தில் இந்த முறை போராட்ட களத்தினுள் உண்மையான புரட்சிகர சக்திகள் கொண்டு வரப்படவில்லை.. உண்மையான புரட்சிகர இராணுவத்தினர் கிராமங்களிலும், தொழிற்சாலைகளிலுமே உள்ளனர். விவசாயிகளும், தொழிலாளர்களுமே அவர்கள் ” என்ற பகத்சிங் அவர்களுக்கான புரட்சி பற்றி மேலும் கூறுகிறார்.

“நாம் ஒரு சோசலிசப் புரட்சியை வேண்டுகிறோம்… எந்த ஒரு புரட்சியை சாதிக்க வேண்டுமானால், (அது தேசியப்புரட்சியோ, சோசலிசப்புரட்சியோ) நீங்கள் நம்பிக்கை வைக்க வேண்டிய சக்திகள் விவசாயிகளும், தொழிலாளர்களும் மட்டுமே என்கிறார்.
அடுத்து புரட்சியை வழிநடத்தும் தலைமை பற்றிக் கூறுகிறார்.

“புரட்சியைத் திட்டமிட்டு வழிநடத்த உங்களுக்கு தேவைப்படுவது ஒரு கட்சி! அக்கட்சியானது முழுநேரப்புரட்சியாளர்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். அத்தொண்டர்கள் தெளிவாகச் சிந்திக்கக் கூடிய அறிவும், முன்முயற்சி எடுப்பதற்கான திறமையும் விரைந்து முடிவெடுக்கக் கூடிய ஆற்றலும் கொண்டவர்களாக இருக்க வேண்டும்” என்கிறார்.

அடுத்து கட்சியின் பணி எங்கிருந்து தொடங்க வேண்டும் என குறிகாட்டுகிறார்.
“வெகுஜன பிரச்சாரப் பணிகளிலிருந்து கட்சியின் வேலை துவங்க வேண்டும்”.
மேற்கண்ட பகத்சிங்கின் புரட்சிகரச் சிந்தனைகளானது, அதுவரையிலிருந்த விடுதலைப் போராட்டப் பாதையில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திவிட்டது. அது ஒரு வரலாற்றுத் திருப்பம் ஆகும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒரு தலைசிறந்த புரட்சிகர சிந்தனையாளரை வேண்டுமென்றே ‘பயங்கரவாதி’ என முத்திரையிட்டு ‘சாகும்வரை தூக்கு’ எனத் தீர்ப்பெழுதி தூக்கிலும் ஏற்றி ஒரு மணிநேரம் தூக்குக்கயிற்றிலே தொங்கவிட்டுக் கொலை செய்தது.

ஆனால், அம்மாவீரரே கூறியதுபோல், “இரண்டு நபர்களை அழிப்பதன் மூலம் இத்தேசத்தை நசுக்கி விட முடியாது” என்பது பின்னர் நிரூபணமானது.
அடுத்து 1931 லிருந்து இந்திய அரசியல் வானில் சோசலிச சிந்தனைகள் வேர்கொள்ளத் தொடங்கின. காங்கிரசுக்குள்ளேயே காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியும், வெளியே கம்யூனிஸ்ட் கட்சியும் செயல்படத் தொடங்கின. இம்மாபெரும் திருப்புமுனையின் தொடக்கமாக பகத்சிங் விளங்கினார்.

மேலும் இத்திருப்புமுனைச் சக்திகளுக்கு ஒரு பொருத்தமான முழக்கத்தையும் அவரே வழங்கினார் என்கிறது இந்நூல்.

“இன்குலாப் ஜிந்தாபாத்” என்கிற மந்திர மின்சார முழக்கமே அது.

அப்டன் சிங்ளேர் என்ற மேற்கத்திய சோசலிச எழுத்தாளர் தனது பாஸ்டன், ஆயில் என்ற இரு நாவல்களில் இச்சொல்லை முதலில் பிறப்பித்தார்.

அடுத்து நமது பாரதியார் மொழிப்படி, “ஆஹா வென்றெழுந்த” ரஷ்யப்புரட்சியில் இது வீறுகொண்டது.அப்புறம் நம் இந்தியாவில் ஒரு பத்திரிகை பெயரானது. அடுத்து வங்கத்தின் விவசாய தொழிலாளர் கட்சி பேரணியில் பதாகையாக வலம் வந்தது. இந்திய நாடாளுமன்றத்தில் பகத்சிங்கும், தத்தும் வீசிய வெடிகுண்டின் ஓசையை மீறிய பெரு முழக்கமாக இது எதிரொலித்து. நாடு நகரமெங்கும் பரவியது. இதைப்பற்றி பகத்சிங் வெகு அடக்கமாகச் சொன்னார் “கோடானு கோடி மக்கள் எனது இந்த கோசத்தை முழக்குவதை என்னால் கேட்க முடிகிறது. இந்த முழக்கம் சுதந்திரப் போராட்டத்தை ஊக்குவிக்கும் சக்தியாக ஏகாதிபத்திய வாதிகளை கடைசிவரை தாக்கிக் கொண்டே இருக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. எனது இவ்வளவு சின்ன வாழ்க்கைக்கு இதைவிட வேறென்ன வேண்டும்.?

இத்தகைய விடுதலைப் போராளியை சிறைச்சாலை என்ன செய்து விடும்? அங்கும் அவர் ஒரு போராளியாகவே இருந்தார். இயங்கினார். சிறைக்கைதிகளின் மனித உரிமைகளுக்காக 85 நாட்கள் ஒரு முறை 38 நாட்கள் ஒரு முறை என 113 நாட்கள் தோழர்களோடு உண்ணாவிரதமிருந்தார். 151 நூல்களை கற்றுணர்ந்தார். 6 சிறுநூல்களை எழுதி முடித்தார் என்கிறது இந்நூல்.

அவரின் முழுமை பெற்ற பகுத்தறிவு சிந்தனைகள் மார்க்சிய சிந்தனைகள் இத்தொகுப்பு மூலம் நமக்கு கிடைத்துள்ளது.

அவரின் இறுதிப்பிரகடனம் இதோ இப்படி ஒலிக்கிறது.

“தோழர்களே நாளை காலை மெழுகுவர்த்தியின் ஒளி மங்குவதைப்போல் நான் மங்கி மறைந்து விடுவேன். ஆனால் நம்முடைய நம்பிக்கைகள், குறிக்கோள்கள் இந்த உலகை பிரகாசிக்கச் செய்யும். மீண்டும் மீண்டும் பிறப்போம் எண்ணற்ற இந்த நாட்டு விரர்களின் உருவில்”.

எப்படிப்பட்ட சத்திய வாக்கு இது!

இன்று லட்சோபலட்சம் இந்திய வாலிபர்கள் ‘பகத்சிங்’ சிந்தனைகளை நெஞ்சில் தாங்கி சோசலிச பதாகையை தோளில் தாங்கி நின்று மாநிலங்களில் அரசையே கையிலெடுத்து அணிவகுத்து “ரத்த சாட்சிகளே ஜிந்தாபாத்” என்றபடி முன்னேறிக்
கொண்டுள்ளார்களே! செப்புமொழிகள் பலவாயினும் சிந்தையெல்லாம் புரட்சிக்கனல் மூண்ட பகத்சிங்குகளாக முன்னேறிக் கொண்டுள்ளார்களே! அந்த சத்திய வாக்கின் சாட்சியமல்லவா இது!

இந்த உலகிற்கு கிடைத்த மாவீரர் சேகுவேரா போல நமக்குக் கிடைத்த பகத்சிங்கை முழுமையாய் அறிமுகப்படுத்திடும் இந்த அரிய நூலை தமிழறிந்த இளைஞரெல்லாம் வாங்கிப்படியுங்கள்.

கற்றுணர்வோம்! கற்றுணர்வோம்!!

கிடைக்குமிடம் :
பாரதி புத்தகாலயம்
சென்னை

044 24332924
விலை : ரூ. 250

 

 

 

 

Share.

About Author

Leave A Reply